முகப்பு

04 June 2016

கும்பகோணம் சப்தஸ்தானம் : தாராசுரம் ஆத்மநாதசுவாமி கோயில்

திருவையாற்றில் நடைபெறும் சப்தஸ்தான விழாவைப் பற்றி கேள்விப்பட்டுள்ளோம். கும்பகோணத்திலும் இவ்வாறான சப்தஸ்தான விழா நடைபெறுகிறது. திருவையாறு, கும்பகோணம், சக்கராப்பள்ளி, மயிலாடுதுறை, கரந்தை, நாகபட்டினம், திருநல்லூர், திருநீலக்குடி, திருக்கஞ்சனூர் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெறுகிறது. தஞ்சாவூர் சப்தஸ்தானம் சில ஆண்டுகளாக நடைபெறவில்லை. கும்பகோணத்தில் சப்தஸ்தான விழா அண்மையில் நடைபெற்றது.  400 ஆண்டுகளுக்கு முன்பு நாயக்கர் காலம் முதல் இந்தப் பல்லக்கு உற்சவம் நடைபெற்று வருவதாகக் கூறுகின்றனர். கும்பகோணம் சப்தஸ்தானப் பல்லக்கின் வெள்ளோட்டம் பிப்ரவரி 2016இல் நடைபெற்றது. தொடர்ந்து ஏழூர்ப் பல்லக்குத் திருவிழா ஏப்ரல் 2016இல் நடைபெற்றது. 

கும்பகோணத்தில் இவ்விழாவோடு தொடர்புடைய சப்தஸ்தானத் தலங்கள் பின்வருவன ஆகும். 
 இக்கோயில்களில் கும்பேஸ்வரர் கோயில், அமிர்தகலசநாதர் கோயில், கபர்தீஸ்வரர் கோயில், கோடீஸ்வரர் கோயில் ஆகிய நான்கு கோயில்களுக்கு அண்மையில் நடைபெற்ற மகாமகத்தின்போதும், பிற கோயில் உலாக்களின்போதும் சென்றுள்ளேன். சுவாமிமலை சுந்தரேஸ்வரர் கோயில் என்பது சுவாமிமலை முருகன் கோயிலைத்தான் குறிக்கிறது என்று தெரிவித்தனர். கும்பகோணம் சப்தஸ்தானத்தில் உள்ள இதுவரை நான் பார்க்காத தாராசுரம் ஆத்மநாதசுவாமி கோயிலுக்கும், மேலக்காவேரி கைலாசநாதர் கோயிலுக்கும் செல்லும் வாய்ப்பினை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.  

 அந்த வாய்ப்பு 26 மே 2016 அன்று கிடைத்தது. தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயில் சிற்பக்கலைக்குப் புகழ் பெற்ற கோயிலாகும். அக்கோயில் உலகப்புகழ் பெற்றதாகும். தாராசுரத்தில் ஆத்மநாதசுவாமி கோயில் எங்கிருக்கிறது என்று விசாரித்தேன். தாராசுரத்தில் உள்ள நண்பர்களே பலர் அவ்வாறாக எந்தக்கோயிலும் இல்லை என்று கூறினர். தாராசுரம் நண்பர் திரு நாகராஜனுடன் அக்கோயிலைப் பார்க்கச் சென்றேன். தாராசுரத்தில் இருந்த மற்றொரு நண்பர் சந்திரசேகர் தாராசுரம் கம்மாளத் தெருவில் காமாட்சியம்மன் கோயில் என்ற ஒரு கோயில் உள்ளது என்றும். அங்கு அண்மையில் ஏதோ விழா நடைபெற்றதாகவும் கூறினார். கோயிலைப் பற்றி விசாரித்துக்கொண்டே சென்றபோது ஒரு பெரியவர் அக்கோயில் சிவன் கோயில்தான் என்றும் காமாட்சியம்மன் கோயில் என்று சொன்னால்தான் தெரியும் என்றும் கூறினார். அவர்கள் சொன்ன அடையாளத்தை வைத்துக்கொண்டு கோயிலுக்குச் சென்றோம். 

கோயிலின் வாசலில் பந்தல்போடப்பட்டு பிரிக்கப்படும் நிலையில் இருந்தது. விசாரித்தபோது அண்மையில் நடைபெற்ற சப்தஸ்தான விழாவிற்காக போடப்பட்ட பந்தல் என்று கூறினர். கோயிலின் நுழைவாயிலில் ஆவுடையார் கோயில் காமாட்சி அம்மன் ஆலயம் என்ற பெயர்ப்பலகையைக் கண்டோம். 
நுழைவாயில்
அருகில் சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த ஓர் அறிவிப்பினைக் கண்டோம். அந்த அறிவிப்பில் 24.1.2016 காலை மீனாட்சி என்கிற சிவசக்தி அம்பாள் உடனுறை ஆவுடைநாதர் மற்றும் காமாட்சியம்மன் கோயில் விமானங்களுக்கான திருப்பணி தொடங்கப்படுவது பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. அதே வளாகத்தில் இரு கோயில்கள் இருப்பதை அறிந்து உள்ளே சென்றோம். இக்கோயிலுக்கு வந்ததும் பட்டீஸ்வரம் கோயில் நினைவிற்கு வந்தது. பட்டீஸ்வரத்தில் ஒரே வளாகத்தில் தேனுபுரீஸ்வரர் கோயிலும், துர்க்கையம்மன் கோயிலும் அமைந்துள்ளன. முதன்மைக்கோயில் தேனுபுரீஸ்வரர் கோயில் என்றாலும் துர்க்கையம்மன் கோயில் என்றால்தான் பலருக்குத் தெரியும்.

காமாட்சியம்மன் விமானம்
கருவறையில் காமாட்சி அம்மனைக் கண்டோம். கருவறையின் எதிரே பலிபீடம், நந்தியைக் காணமுடிந்தது. கருவறை வாயிலின் இரு புறமும் துவாரபாலகிகள் காணப்பட்டனர். கருவறை திருச்சுற்றினைச் சுற்றிவந்தோம்.  விமானம் திருப்பணிக்கான ஆயத்த நிலையில் இருப்பதைக் கண்டோம்.  

காமாட்சி அம்மன் சன்னதியின் இடப்புறமாக சற்றொப்ப ஒரு முழு கோயிலாக அதே வளாகத்தில் சிவன் கோயிலைக் காணமுடிந்தது. வாயிலின் இரு புறமும் விநாயகரும், வள்ளிதெய்வானையுடன் கூடிய முருகன் காணப்பட்டனர். வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது பலிபீடம், நந்தியைக் காணமுடிந்தது. கருவறை  வாயிலின் இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். கருவறையில் லிங்கத்திருமேனியாக ஆவுடைநாதரைக் கண்டோம். (இவரை ஆத்மநாதசுவாமி என்றும் அழைக்கின்றனர்) மூலவர் சன்னதியின் வலப்புறம் அம்மன் சன்னதியைக் கண்டோம்.  மூலவர் சன்னதியில் உள்ளதைப் போலவே அம்மன் சன்னதியின் எதிர் புறம் பலிபீடம், நந்தியைக் கண்டோம். திருச்சுற்றில் வரும்போது மூலவர் விமானம் மற்றும் அம்மன் விமானம் திருப்பணிக்கான ஆயத்த நிலையில் இருப்பதைக் கண்டோம்.  கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அடிமுடிகாணா அண்ணல், பிரம்மா, துர்க்கை இருந்தனர். திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், லிங்க பானம், பைரவர் உள்ளிட்ட சிற்பங்கள் இருந்தன. அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி இருந்தது. இறைவன் இறைவி சன்னதிகள் உள்ள முன் மண்டபத்தில் நவக்கிரக சன்னதி உள்ளது. பைரவர், விநாயகர், நாகம் உள்ளிட்ட பல சிற்பங்களை அங்கு காணமுடிந்தது.
அடுத்தடுத்து உள்ள ஆத்மநாதசுவாமி, மீனாட்சியம்மன் விமானங்கள் 
(சிறிதாக உள்ளது சண்டிகேஸ்வரர் சன்னதி)

மூலவர் விமானம்
   
ஒரே வளாகத்தில் இரு கோயில்கள்
(இடது சிவன் கோயில் நுழைவாயில்)
முன் மண்டபத்தில் நவக்கிரக சன்னதி உள்ளது. பைரவர், விநாயகர், நாகம் உள்ளிட்ட பல சிற்பங்களை அங்கு காணமுடிந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் சப்தஸ்தான விழா நடைபெற்றதாகவும் அப்போது சப்தஸ்தான பல்லக்கு இக்கோயிலுக்கு வந்ததாகவும் கூறினர். 

காமாட்சி அம்மனையும், இறைவனையும், இறைவியையும் வணங்கிவிட்டு வெளியே வந்து இரு கோயில்களின் வாயில்களும் தெரியும் வகையில் இருந்த அமைப்பினைக் கண்டு புகைப்படம் எடுத்தோம். பின்னர் அங்கிருந்து மன நிறைவோடு கிளம்பினோம். வாய்ப்பு கிடைக்கும்போது கும்பகோணம் சப்தஸ்தான கோயில்களில் நாம் இதுவரை அறிந்திராத மேலக்காவேரி கைலாசநாதர் கோயிலுக்குச் செல்வோம்.

ஆகஸ்டு 2014இல் சப்தஸ்தானம் என்ற தலைப்பில் தமிழ் விக்கிபீடியாவில் நான் தொடங்கிய கட்டுரையைக் காண அழைக்கிறேன். 

சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பிலான எனது முதல் வலைப்பூவில் சூன் 2016இல் வெளியான கட்டுரையைப் பின்வரும் இணைப்பில் காணலாம்.
தம்ம பதம்  : ப. ராமஸ்வாமி


15 comments:

  1. புதிய தகவல்கள்..
    அடுத்து தஞ்சைக்கு வரும்போது கண்டிப்பாக - இந்த கோயில்களுக்கு செல்ல வேண்டும் என்ற ஆவல் எழுகின்றது..

    ReplyDelete
  2. முனைவரின் தகவல் பலருக்கும் பயன் பெறும் பகிர்வுக்கு நன்றி
    தமிழ் மணண் 2

    ReplyDelete
  3. சிறப்பான தகவல்கள்....... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  4. சப்தஸ்நானம் கேள்விப்பட்டது இல்லை! ஆத்மநாத சுவாமி கோயில் தரிசனம் அருமை! தொடர்கிறோம்!

    ReplyDelete
  5. நாங்கள் சென்றபொழுது அவசரத்தில் தாராசுரம் மட்டுமே பார்த்தோம். பட்டீஸ்வரம் பார்க்க வேண்டும் என்கிற ஆசை கூட நிறைவேறவில்லை அப்போது. இந்தக் கோவில் பற்றி உங்கள் பதிவு வாயிலாகத் தெரிந்து கொண்டேன். சிறு வயதில் தஞ்சையில் வசித்த காலங்களில் ஏழூர் பல்லக்கு என்கிற வார்த்தையைக் கேட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  6. அருமையான தகவல்கள். புதியதும் கூட. குறித்து வைத்துக் கொண்டோம் ஐயா. மிக்க நன்றி பகிர்விற்கு

    ReplyDelete
  7. கும்பகோணத்தில் இருந்திருக்கிறோம். தெருவுக்கு இரண்டு கோயிலாவது இருக்கும். மிக அருமையான தகவல்களுக்கு நன்றி ஜம்பு சார் :)

    ReplyDelete
  8. நிறைய தகவல்கள் தந்தமைக்கு நன்றி.திருச்சியிலும் ஏழூர் சாமி திருவிழா உண்டு.

    ReplyDelete
    Replies
    1. ஐயா, வாய்ப்பு கிடைக்கும்போது அந்த கோயில்களைப் பற்றிய செய்திகளை அனுப்பி உதவ வேண்டுகிறேன். திருச்சி பகுதியில் கோயில் உலா சென்றபோது கேள்விப்பட்டேன். விவரங்களைத் தொகுக்க விட்டுவிட்டேன்.

      Delete
  9. அருமையான தகவல்களை அழகுறத்தந்ததற்கு அன்பு நன்றி!

    ReplyDelete
  10. தங்கள் பணி சிறக்கவும் சிறப்பான தகவல்களைத் தொடர்ந்து தரவும் வாழ்த்துகிறேன் முனைவர் ஐயா வாழ்க வளத்துடன் !
    தம +1

    ReplyDelete
  11. எப்போதோ தாராசுரம் கோவிலுக்குச் சென்ற நினைவு. அங்குதானா இசைப் படிக்கட்டுகள் இருக்கின்றன? அருமையான தகவல்கள் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஐயா, இசைப்படிக்கட்டுகள் உள்ள கோயில் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில்.

      Delete
  12. அருமையான கட்டுரை தாராசுரம் ஆத்மநாத சுவாமி கோயிலில் லிங்கம் இல்லை என்றும் இங்கு இறைவனை அருவமாக வணங்குகின்றனர் என ஒரு பழைய புத்தகத்தில் படித்துள்ளேள் ஆனால் லிங்கம் உள்ளதை தாங்கள் கண்டு எழுதியுள்ளீர்கள் நான் படித்தது தாராசுரத்தில் உள்ள வேறு கோயிலா அல்லது இதே கோயிலஅல் பிற்காலத்தில் லிங்கத்தை வைத்துவிட்டார்களா என்று புரியவில்லை

    ReplyDelete
  13. அன்பின் அய்யா,
    தாராசுரம் ஆவுடையார் கோவில் பற்றிய செய்திகள் அருமை. சென்று காண வேண்டும் என்று ஆவலை தூண்டியுள்ளது.

    ReplyDelete