30 January 2016

கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில் உலா

மகாமகம் 2016: இன்னும் 15 நாள்கள்  
கும்பகோணத்தில் மகாமக விழாவிற்காக இன்னும் 15 நாள்களே உள்ள நிலையில் 12 தீர்த்தவாரி சைவக்கோயில்களில் 11 கோயில்களை நாம் பார்த்த தற்போது கொட்டையூர் கோடீஸ்வரர் கோயிலுக்குச் செல்வோம். இக்கோயிலைப் பற்றிய கட்டுரை பத்திரிக்கை.காம் இதழில் வெளிவந்துள்ளது. கட்டுரையை வெளியிட்ட பத்திரிக்கை.காம் இதழுக்குக்கு நன்றி. அக்கட்டுரையின் மேம்பட்ட வடிவத்தினைப் பகிர்வதில் மகிழ்கிறேன். இத்துடன் மகாமகத்துடன் தொடர்புடைய அனைத்து சைவ தீர்த்தவாரி கோயில்களுக்கும் நாம் சென்றுவந்துவிட்டோம்.


கும்பகோணம்-சுவாமிமலை சாலையிலுள்ள கொட்டையூரில் கோடீஸ்வரர் கோயில் உள்ளது.  மகாமகத்தின்போது மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி காண்கின்ற காசி விஸ்வநாதர் கோயில், கும்பேஸ்வரர் கோயில், நாகேஸ்வரர் கோயில், சோமேஸ்வரர் கோயில், கோடீஸ்வரர் கோயில், காளஹஸ்தீஸ்வரர் கோயில், கௌதமேஸ்வரர் கோயில், அமிர்தகலசநாதர் கோயில், பாணபுரீஸ்வரர் கோயில், அபிமுகேஸ்வரர் கோயில், கம்பட்ட விஸ்வநாதர் கோயில்,  ஏகாம்பரேஸ்வரர் கோயில் ஆகிய 12 கோயில்களில் 10 கோயில்கள் கும்பகோணம் நகரில் உள்ளன. மற்ற இரு கோயில்களான கோடீஸ்வரர் கோயில் கொட்டையூரிலும், அமிர்தகலசநாதர் கோயில் சாக்கோட்டையிலும் உள்ளன. குடமுழுக்கிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது இக்கோயிலுக்குச் சென்றோம்.



அமிர்தத்துளிகள் விழுந்த இடம் என்ற நிலையில் இவ்விடம் பெயர் பெற்றது. தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ளது. குருமணிபோல் அழகமரும் கொட்டையூரில் கோடீச்சரத்து உறையும் கோமான்தானே என்று நாவுக்கரசர் இத்தல இறைவனைப் போற்றுகின்றார்.

ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது கொடி மரம், பலிபீடம், நந்தியை ஆகியவை காணப்படுகின்றன. தொடர்ந்து காணப்படுகின்ற முன் மண்டபத்தில் வலப்புறம் நால்வரும் ஆத்ரேய மகரிஷியும் உள்ளனர். திருவலஞ்சுழியில் காவிரியில் இறங்கிய ஏரண்ட முனிவர் (ஆத்ரேய மகரிஷி) இங்கு வந்ததாகவும், ஏரண்டம் எனப்படும் கொட்டைச்செடியின்கீழிருந்து தவம் செய்ததால் அவர் அவ்வாறு பெயர் பெற்றதாகவும் கூறுவர். இடப்புறம் நடராஜர் மண்டபமும் நவக்கிரக சன்னதியும் உள்ளன. கருவறையில் லிங்கத்திருமேனியாக கோடீஸ்வரர் உள்ளார்.

ஒரு காலத்தில் இவ்வூர் ஆமணக்கங்காடாக இருந்ததாகவும், இறைவன் ஆமணக்கின் கொட்டைச் செடியின்கீழ் இருந்ததால் கொட்டையூர் என்று பெயர் பெற்றதாகக் கூறுகின்றனர். சோழ மன்னன் ஒருவனுக்கு கோடிலிங்கமாகத் தரிசனம் கொடுத்ததால் இக்கோயிலைக்கு கோடீச்சரம் என்றழைக்கின்றனர். இறைவனுக்கு கோடீஸ்வரர் என்றும், விநாயகருக்கு கோடி விநாயகர் என்றும், சுப்பிரமணியருக்கு கோடி சுப்பிரமணியர் என்றும், சண்டிகேஸ்வரருக்கு கோடி சண்டிகேஸ்வரர் என்றும் பெயர்கள் உண்டு.  


கோயிலின் கருவறையைச் சுற்றிவரும்போது நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, அடிமுடிகாணா அண்ணல், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகே சண்டீஸ்வரர் சன்னதி உள்ளது. 



திருச்சுற்றில் கோடி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் மற்றும் கஜலட்சுமிக்கான சன்னதிகள் உள்ளன. இக்கோயிலில் உள்ள இறைவி பந்தாடுநாயகி ஆவார். மகாமகத்திற்காக குடமுழுக்கு கண்ட கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். தற்போது இக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற்று நிறைவுற்றது.

2016 பிப்ரவரி 13 முதல் 22 வரை மகாமகப்பெருவிழா நடைபெறவுள்ள வேளையில் தீர்த்தவாரி காண்கின்ற கோயில்களுக்குச் செல்லும்போது இக்கோயிலுக்கும் செல்வோம்.
---------------------------------------------------------------------------------------------------
      ---------------------------------------------------------------------------------------------------
      துணை நின்றவை
      மகாமகப்பெருவிழா 2004 கும்பகோணம், இந்து சமய அறநிலையத்துறை,தமிழ்நாடு அரசு
      பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை

      12 comments:

      1. கோடீஸ்வரர் கோயில் பற்றிய பல செய்திகள் அறிந்தோம். மிக்க மகிழ்ச்சி.

        செட்டிநாட்டுப்பக்கம் கோட்டையூர் என்ற ஊரும் அங்கு ஒரு கோயிலும் உள்ளது. அங்கு நான் போய் வந்துள்ளேன்.

        இந்தத் தாங்கள் கூறும் ஊர்பெயர் வித்யாசமாகவும் வேடிக்கையாகவும் உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

        ReplyDelete
      2. பல கோவில்கள் பற்றிய தகவல்களை உங்கள் பதிவுகள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. இவ்வூர் பற்றி தில்லி நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்வார்......

        ReplyDelete
      3. அதிக விபரங்களும் புகைப்படங்களும் அருமை பகிர்வு தந்த முனைவருக்கு நன்றி
        தமிழ் மணம் 2

        ReplyDelete
      4. வணக்கம்
        ஐயா
        அறியாத கோவில் பற்றி புகைப்படங்களுடன் அற்புத விளக்கம் கண்டுமகிழ்ந்தேன் பத்திரிக்கை காம்மில் வந்தமைக்கு வாழ்த்துக்கள் ஐயா த.ம 3
        -நன்றி-
        -அன்புடன்-
        -ரூபன்-

        ReplyDelete
      5. படங்களும் விளக்கங்களும் மிக அருமை!
        த ம 5

        ReplyDelete
      6. விபரமும் புகைப்படங்களும் அருமை ஐயா...

        ReplyDelete
      7. கோவில்கள் பற்றி அறியதந்தமைக்கு நன்றி
        தம +1

        ReplyDelete
      8. தீர்த்தவாரிகாணும் சைவ வைணவக் கோவில்கள்பற்றி உங்கள் பதிவுகள் மூலம் தெரிந்து கொள்கிறேன் நன்றி

        ReplyDelete
      9. தொடர்ந்து உங்கள் கட்டுரைகளை வாசிக்கிறேன். கும்பகோணத்துக் காரனான எனக்கே பல செய்திகள் புதியவை. பகிர்வுக்கும் புகைப்படங்களுக்கும் நன்றி.

        ReplyDelete
      10. அய்யா வணக்கம்.
        நான் இறைநம்பிக்கை அற்றவன். எனினும் தங்களின் அன்பான அழைப்பிலும், ஆற்றல்மிக்க தமிழிலும் உள்ளம் பறிகொடுத்த உண்மை அன்பினன். ஆகலின் நமது பண்டைப் பண்பாட்டு நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியான தங்களின் கலைப்பயணத்தைத் தொடர்ந்து வருகிறேன்.
        தங்களின் கலைப்பயண வெற்றி தொடர்ந்து நடையிட வாழ்த்தி வணங்குகிறேன்.
        தங்கள் அன்பு நண்பன்,
        நா.முத்துநிலவன்,
        புதுக்கோட்டை
        http://valarumkavithai.blogspot.com/

        ReplyDelete
      11. பல கோயில்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிகின்றது ஐயா. புகைப்படங்களும் தகவலும் தெரிந்துகொண்டோம் மிக்க நன்றி ஐயா.

        ReplyDelete