7 ஜனவரி 2018 நாளிட்ட தி இந்து இதழில் வெளியான என் கட்டுரையினைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவ்விதழுக்கு நன்றியுடன்.
2017ன் சிறந்த சொல்
பா.ஜம்புலிங்கம்
ஒவ்வோர் ஆண்டும் சிறந்த சொல்லாக முன்னணி ஆங்கில அகராதிகளால் ஒரு சொல் கடந்த சுமார் 10 ஆண்டுகளாகத் தெரிவுசெய்யப்பட்டு வருகிறது. அவ்வகையில், 2016-ன் சிறந்த சொற்களாக முறையே ‘போஸ்ட்-ட்ரூத்’ (ஆக்ஸ்போர்டு அகராதி), ‘பிரெக்ஸிட்’ (காலின்ஸ் அகராதி), சர்ரியல் (மெரியம் வெப்ஸ்டர் அகராதி) தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. ‘போஸ்ட்-ட்ரூத்’ எனும் வார்த்தைக்கு இணையாக, தமிழில் ‘உண்மை கடந்த’ எனும் வார்த்தையை ‘தி இந்து’ நாளிதழ் கடந்த ஆண்டு உருவாக்கியது. 2013-ன் சிறந்த சொல்லாக ‘செல்ஃபி’ ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியால் தேர்ந்தெடுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
ஒவ்வோர் ஆண்டும் சிறந்த சொல்லாக முன்னணி ஆங்கில அகராதிகளால் ஒரு சொல் கடந்த சுமார் 10 ஆண்டுகளாகத் தெரிவுசெய்யப்பட்டு வருகிறது. அவ்வகையில், 2016-ன் சிறந்த சொற்களாக முறையே ‘போஸ்ட்-ட்ரூத்’ (ஆக்ஸ்போர்டு அகராதி), ‘பிரெக்ஸிட்’ (காலின்ஸ் அகராதி), சர்ரியல் (மெரியம் வெப்ஸ்டர் அகராதி) தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. ‘போஸ்ட்-ட்ரூத்’ எனும் வார்த்தைக்கு இணையாக, தமிழில் ‘உண்மை கடந்த’ எனும் வார்த்தையை ‘தி இந்து’ நாளிதழ் கடந்த ஆண்டு உருவாக்கியது. 2013-ன் சிறந்த சொல்லாக ‘செல்ஃபி’ ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியால் தேர்ந்தெடுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
2017-ன் சிறந்த சொற்களாகத்
தேர்ந்தெடுக்கப்பட்டவை: ‘யூத்க்வேக்’ (youthquake) - ஆக்ஸ்போர்டு அகராதி, ‘ஃபேக் நியூஸ்’
(fake news) -காலின்ஸ் அகராதி, ‘ஃபெமினிசம்’ (feminism) -மெரியம் வெப்ஸ்டர் அகராதி.
இந்தச் சொற்களைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்களையும் அந்த அகராதிகள் விவாதிக்கின்றன.
ஆக்ஸ்போர்டு
அகராதி
2004 முதல் அந்தந்த ஆண்டின்
சிறந்த சொல்லாக, பண்பாட்டு முக்கியத்துவம் பெறும் வகையில் அமைகின்ற, ஒரு சொல்லைத் தெரிவுசெய்கிறது
ஆக்ஸ்போர்டு அகராதி. 2017-ல் பண்பாடு, மனநிலை, முன்முடிபு போன்றவற்றை எதிரொலிக்கும்
விதமாக ஆக்ஸ்போர்டு அகராதி கருதிய சொல் ‘யூத்க்வேக்’ என்பதாகும். இந்தச் சொல்லின் பெயர்ச்சொல்
‘இளைஞர்களின் நடவடிக்கைகளாலோ தாக்கத்தாலோ வெளிப்படுகின்ற ஒரு குறிப்பிடத்தக்க பண்பாட்டு,
அரசியல் அல்லது சமூக மாற்றம்’ என்ற பொருளைக் கொண்டு அமைகின்றது. 2016-ல் தெரிவுசெய்யப்பட்ட
சொல்லுடன் ஒப்புநோக்கும்போது 2017-ன் தெரிவுசெய்யப்பட்ட ‘யூத்க்வேக்’ என்ற சொல் ஐந்து
மடங்கு அதிகம் பயன்படுத்தப் பட்டுள்ளது.
பிரிட்டனில் ஜூன் 2017-ல்
தேர்தல் உச்சகட்டத்தில் இருந்தபோது ‘யூத்க்வேக்’ சொல் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் வாக்களித்ததன் காரணமாக தொழிலாளர் கட்சியின் வாக்கு சதவீதம்
அதிகரித்தது. இளைஞர்களின் அந்த எழுச்சியான ‘யூத்க்வேக்’கே இதற்குக் காரணம் என்பதை உணர்த்தியது.
2017 செப்டம்பரில் ரஷ்ய அரசியல்வாதியான நிகிடா இசாவ் தொலைக்காட்சியில் டொனால்ட் ட்ரம்பை
எதிர்கொள்வதாக மிரட்டியபோது, இச்சொல்லின் பயன்பாடு சூடுபிடித்தது.
செப்டம்பர் 2017-ல் இச்சொல்
இரண்டாவது முறையாக அதிகபட்சமாகப் பயன்படுத்தப்பட்டதை நியூசிலாந்தில் உணர முடிந்தது.
இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் அரசியலில் ஆர்வம் காட்டினர். அதனை அரசியல்வாதிகளும் ஊடகங்களும்
பயன்படுத்திக் கொண்டனர்.
‘யூத்க்வேக்’ சொல் இதற்கு
முன்னரே பயன்பாட்டில் உள்ளது. உலகம் முழுவதும் பிரிட்டிஷ் இளைஞர்கள் பேஷனையும் இசையையும்
மாற்றிக்கொண்டு வருவதைக் குறிக்கும் வகையில் 1960-களில் ‘வோக்’ இதழின் ஆசிரியர் டயானா
ப்ரீலேண்ட் இந்தச் சொல்லை முதன்முதலாக உருவாக்கினார். 1965-ல் போருக்கான பிந்தைய மாற்றத்தின்போது
‘வோக்’ ஆசிரியர் அவ்வாண்டை ‘யூத்க்வேக்’ என்று குறிப்பிட்டு, ஜனவரி மாதம் வெளியான தலையங்கத்தில்,
“அதிகம் கனவு காண்பவர்கள். அதிகம் செயல்பாட்டாளர்கள். இதோ இங்கே. இப்போதே. யூத்க்வேக்
1965” என்று எழுதியிருந்தார்.
2017-ல் பல சொற்கள் விவாதிக்கப்பட்டாலும்
ஒன்பது சொற்களே இறுதிச்சுற்றில் இடம்பெற்றதாகவும், இறுதியில், அவற்றில் ‘யூத்க்வேக்’
என்ற சொல் இந்த ஆண்டின் சிறந்த சொல்லாகத் தெரிவுசெய்யப்பட்டதாகவும், ஆக்ஸ்போர்டு அகராதியினர்
தெரிவித்துள்ளனர். பொதுவாக, இவ்வாறாகப் புதிய சொல் தெரிவுசெய்யப்படும்போது, பின்னர்
ஆக்ஸ்போர்டு அகராதியில் சேர்க்கப்படும். ஆனால் ‘யூத்க்வேக்’ என்ற சொல் முன்னரே அந்த
அகராதியில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காலின்ஸ்
அகராதி
2017-ன் பிரபலமான சொல்லாக
‘ஃபேக் நியூஸ்’ என்பதை காலின்ஸ் அகராதி தெரிவுசெய்துள்ளது. 2017-ல் இந்தச் சொல்லின்
பயன்பாடு 365% அதிகரித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் இச்சொல் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது.
அதன் அடிப்படையில் இச்சொல் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. செய்திகளைத் தருவதுபோலவே பொய்யான
தகவல்களைத் தருவது ‘ஃபேக் நியூஸ்’ என்பதாகும். அடுத்த ஆண்டு வெளிவரவுள்ள காலின்ஸ் அகராதியில்
‘ ஃபேக் நியூஸ்’ என்ற சொல்லும், அதற்கான விளக்கமும் இடம்பெறும் என்று காலின்ஸ் அகராதியினர்
தெரிவித்துள்ளனர்.
மெரியம்
வெப்ஸ்டர் அகராதி
2003 முதல் மெரியம் வெப்ஸ்டர்
அகராதி ஆண்டின் சிறந்த சொல்லாக ஒரு சொல்லைத் தெரிவுசெய்கிறது. இந்த ஆண்டு ‘ஃபெமினிசம்’
(Feminism) என்ற சொல்லைத் தெரிவுசெய்துள்ளது. 2017-ல் அதிகம் பயன்படுத்தப்பட்ட சொல்
இது. பல நிகழ்வுகள் இத்துடன் தொடர்புடையனவாக உள்ளன. பலர் இச்சொல்லை அதிகம் விரும்புகின்றனர்.
ஜனவரி 2017-ல் வாஷிங்டனில் நடைபெற்ற மகளிர் அணிவகுப்பு செய்திகளைத் தொடர்ந்து இச்சொல்
பிரபலமானது. இதுதொடர்பான அணிவகுப்புகள் அமெரிக்காவிலும் அணிவகுப்புகள் உலகளவிலும் நடத்தப்பட்டபோது
இச்சொல் பிரபலமானது. ஏற்பட்டாளர்களும், கலந்துகொண்டோரும் பெண்ணியத்தின் முக்கியத்துவத்தை
உணர்ந்ததைப் பற்றியும், பெண்ணியம் என்பதானது அந்த அணிவகுப்பில் ஏற்படுத்திய தாக்கத்தைப்
பற்றியும் தொடர் விவாதங்கள் நடைபெற்றன. ‘மீ டூ (#MeToo movement)’ என்ற இயக்கம் விறுவிறுப்பாகக்
காணப்படும் இந்த ஆண்டின் சிறந்த சொல்லாக ‘ஃபெமினிசம்’ தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது
குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு அகராதியும் தத்தம்
நிலைப்படி ஒரு சொல்லைப் புதிய சொல்லாகத் தேர்ந்தெடுத்து, அதற்கான காரணங்களை முன்வைக்கின்றன.
அரசியல், சமூகப் பண்பாட்டு நிகழ்வுகளின் அடிப்படையிலும், பயன்பாட்டு நிலையிலும் இவ்வாறாக
சொற்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களில் ‘யூத்க்வேக்’
மற்றும் ‘ஃபேக் நியூஸ்’ அந்தந்த இடத்தைச் சார்ந்துள்ள நிலையிலும் அரசியலில் தாக்கத்தை
ஏற்படுத்திய நிலையிலும் அமைகின்றன. ஆனால் ‘ஃபெமினிசம்’ என்பது பொதுவில் அமைந்துள்ளதைக்
காண முடிகிறது. ‘டைம்’ இதழ் தன் முகப்பட்டையில் இந்த ஆண்டு சிறந்த நபராக ‘மீ டூ’ இயக்கம்
இடம்பெற்று சிறப்பிடத்தைப் பெற்றுள்ளது. அந்த வகையில் இந்த மூன்று அகராதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
சொற்களில் ஃபெமினிசம் முக்கியமான இடத்தைப் பெறுகிறது என்று கொள்ளலாம்.
ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில்
செப்டம்பர் 2017 பதிப்பில் தமிழ்ச் சொற்களான அப்பா, அண்ணா உள்ளிட்ட சொற்களுடன் தமிழ்,
தெலுங்கு, இந்தி, வங்காளம், குஜராத்தி உள்ளிட்ட இந்திய மொழிகளின் 70 சொற்கள் இடம்பெற்றுள்ளன.
அவ்வகராதியில் சேர்க்கப்பட்டுள்ள இந்த 70 சொற்களும் இந்திய வரலாற்றினை மட்டுமின்றி,
இந்தியாவில் ஆங்கில மொழியில் பல வகையான பண்பாட்டு, மொழியியல் தாக்கங்களையும் வெளிப்படுத்துகின்றன
என்றும், அவை இந்தியாவில் ஆங்கில மொழியை வடிவமைக்கவும் மாற்றவும் உதவுகின்றன என்றும்
அந்நிறுவனம் கூறியுள்ளது.
அந்தந்த ஆண்டின் சிறந்த
தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடிக்க கல்வி நிலையங்களோ, தமிழ் ஊடகமோ ஒரு முயற்சியினை மேற்கொண்டால்,
அந்த ஆண்டில் தமிழ்நாட்டின் சமூக, அரசியல், பண்பாட்டு நிலையில் அந்தச் சொல் மூலமாக
ஏற்படுத்திய தாக்கத்தினை அறியவும், ஒரு சுய மதிப்பீடு செய்துகொள்ளவும் உதவியாக அமையும்!
- பா. ஜம்புலிங்கம், முனைவர்,
உதவிப் பதிவாளர் (ஓய்வு), தமிழ்ப் பல்கலைக்கழகம்.
உதவிப் பதிவாளர் (ஓய்வு), தமிழ்ப் பல்கலைக்கழகம்.
சிறந்த பதிவு!
ReplyDeleteஅறிவார்ந்த பல விஷயங்களை தங்களின் பதிவுகள் மூலம் தொடர்ந்து தெரிந்து கொள்ள முடிகிறது.
இந்து இதழில் தங்களின் கட்டுரை வெளியானதற்கு இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!!
மின்னஞ்சல் மூலமாக (sv.venu@gmail.com)
ReplyDeleteவித்தியாசமான கட்டுரை...வாழ்த்துக்கள்.எஸ் வி வி
மின்னஞ்சல் மூலமாக (subrabharathi@gmail.com)
ReplyDeletecongrats.
subrabharathi manian
தங்களது கருத்தினை முன் மொழிகிறேன்...ஒவ்வொரு கணமும் ஒரு புதிய சொல் பிறக்கிறது அதே வேளையில் போதிய வரவேற்பு, பயன்பாடு இல்லாததால் மறையவும் செய்கிறது. மொழிக்கு, அறிவுக்கு எல்லை ஏது. தமிழுக்கு புதுமுகமும், பாதையும் காட்ட முயலும் தங்களது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா.
ReplyDelete-மும்பை இரா. சரவணன்
'சிறந்த சொல்' என்ற வார்த்தை சொற்களிலும் ஏதோ மேல்--கீழ் உணர்வைத் தோற்றுவிக்கிற மாதிரி இல்லை?..
ReplyDelete'சிறந்த சொல்' என்பதற்கு பதில் பிரலமான சொல் என்று இருந்திருக்கலாம்.
** பிரபலமான சொல் என்று திருத்தி வாசிக்க வேண்டுகிறேன்.
ReplyDeleteநான் காலின்ஸ் அகராதி தான் வைத்திருக்கிறேன். இதில் ஆங்கிலத்தில் உள்ள பல சொற்களுக்கு அர்த்தமே காண முடியாமல் அவை விடுபட்டிருக்கும்.
ReplyDeleteஅரிய தகவல்.. தெரிந்து கொண்டேன்..
ReplyDeleteவாழ்க நலம்..
முனைவருக்கு வாழ்த்துகள் தொடரட்டும் தங்களது அரும்பணி
ReplyDeleteவாழ்த்துகள். நல்ல பல தகவல்கள் தெரிந்து கொள்ள முடிகிறது.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
ReplyDeleteதி.இந்து இதழில் தங்களின் கட்டுரை வெளியானது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி. தங்களின் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்.
மேலும் பயனுள்ள.தகவல்களை அறிய தந்தமைக்கு மிக்க நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாழ்த்துகள் ஐயா! பல அறிவு பூர்வமான தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது தங்கள் பதிவுகளில் இருந்து. இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் சொற்களில் சர்ரியல் ஃபேக்ன்யூஸ் போன்ற சொற்கள் பரிச்சயமானவை என்றாலும் பல சொற்கள் பரிச்சயமில்லை. குறித்துக் கொண்டோம்...மிக்க நன்றி ஐயா!
ReplyDeleteவாழ்த்துகள்.
ReplyDeleteஇப்படி ஒரு விஷயம் இருப்பதே இந்தப் பதிவால்தான் அறிந்து கொண்டேன் தங்களது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் .
ReplyDeleteநானும் செய்தித்தாளில் இந்தக் கட்டுரையை வாசித்தேன். வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துகள்! பணி தொடர வேண்டுகிறேன்
ReplyDeleteவாழ்த்துக்கள். அகராதிகள் பற்றிய செய்திகளை அறிந்து மகிழ்ந்தேன. தொடர்ந்து தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
ReplyDeleteஅரிய தகவல். அறிந்து கொண்டேன். தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteஐயா! கட்டுரை படித்தேன். இதே போல் ஒவ்வோர் ஆண்டும் சிறந்த தமிழ்ச் சொல்லையும் அடையாளம் காணத் தாங்கள் ஆவல் தெரிவித்திருந்ததையும் கண்டேன்.
ReplyDeleteதமிழ்ப் பற்றுள்ள ஒவ்வொருவரின் இயல்பான மன எழுச்சியையே தாங்கள் பதிவு செய்திருக்கிறீர்கள். அதற்காக முதலில் நன்றி!
ஆனால் அதே நேரம், தமிழில் இப்படிப் புதுப் புதுச் சொற்கள் எங்கே பிறக்கின்றன? தமிழில் புதுச் சொற்களைப் படைக்கும் ஆர்வம் பலருக்கும் இருந்தாலும் அவையெல்லாம் ஆங்கிலச் சொற்களுக்கு இணை காணும் முயற்சிகளாகவே இருக்கின்றன. தவிர, ஏற்கெனவே ஒரு பொருளுக்குத் தமிழில் சொல் இருப்பதைக் கூட அறியாமல் புதுச் சொல் உருவாக்கும் ஆர்வக் கோளாறுகள் வேறு. எல்லாவற்றையும் விட, புதிய புதிய சொற்கள் ஒரு மொழியில் உருவாக வேண்டுமானால் அந்த அளவுக்கு அம்மொழியில் புலமையும் பயன்பாடும் இருக்க வேண்டும். அதுவும் இங்கே குறைவு. துறை சார்ந்த நூல்களையோ ஆராய்ச்சிகளையோ இதழ்களையோ படிக்காமல் வெறும் சமூக ஊடகக் கருத்துக்களையே நம்பி உழலுபவர்களாகவே, அதைப் படிப்பதையே படிக்கும் பழக்கம் எனக் கருதுபவர்களாகவே இன்றைய தமிழர்கள் இருக்கையில் ஆங்கிலம் போல் ஆண்டுதோறும் புதுச் சொல் காண்பது எப்படி?...
மின்னஞ்சல் வழியாக (janakiraja81@gmail.com)
ReplyDeleteஐயா,
வணக்கம். தி இந்து தமிழ் நாளிதழில் தங்களின் சிறப்பானதும் செறிவானதுமான ”2017-ன் சிறந்த சொல்” கட்டுரையினைப் படித்தேன்.
மூன்று அகராதிகள் 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த சொல்லாக எதைத் தேர்ந்தேடுத்துள்ளன என்பதை மிக நேர்த்தியாகச் சுட்டிக்காட்டியுள்ளீர்கள். அதற்காக அவ்வகராதிகள் சொல்லியுள்ள காரணங்களையும் குறிப்பிட்டு கட்டுரையினைச் செறிவானதாக மாற்றியுள்ளீர்கள். வாழ்த்துகள்.
ஆக்ஸ்போர்டு, காலின்ஸ், மற்றும் மெரியம் வெப்ஸ்டார் ஆகிய அகராதிகள் முறையே youthquake, fakenews feminism ஆகிய சொற்களைத் தேர்வு செய்துள்ளதில்.... பெண்ணியம் சொல்தேர்வு அந்த ஆண்டுக்கான சரியானதாக கருதிட முடியுமா.... என்ற தயக்கம் அல்லது அறியாமை என்னுள் எழுகிறது.
காரணம் , உலக மொழிகள் பலவற்றில் பெண்ணியம் என்னும் சொல்லும், அதன் இயக்கங்களும், அமைப்புகளும் அதிகமான அளவில் விவாதிக்கப்பட்டும், முன்னெடுக்கப்பட்டும் பல ஆண்டுகள் ஆகும் நிலையில் you too movement என்னும் இயக்கத்தினை முன்வைத்து இந்த சொல் தேர்வு என்பது சரியா என்ற ஐயம் ஏற்படுகிறது. கூடுதல் தகவல்கள் அல்லது விளக்கங்கள் தேவைப்படுகின்றன.
நமது தமிழிலிலேயே பெண்ணியச் சிந்தனையின் தாக்கம் இப்போது இருப்பதை விடவும் இன்னும் வலிமையாக முன்னெடுக்கப்பட்ட காலம் 2000-2005 ஆண்டுகளிலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக, நான் கட்டுரையின் இறுதி வரியைப்படிக்கும் முன் , இதுபோன்று தமிழில் சொல்தேடல் நடவடிக்கைகள் ஏதாவது இருக்கிறதா என்று தோன்றியது. அதை கட்டுரையின் முடிபாக வைத்து புதிய சிந்தனையினைத் தேடலினை ஏற்படுத்தி உள்ளீர்கள். வாழ்த்துகள்.
தாங்கள் குறிப்பிட்டதைப்போல கல்வி நிலையங்களோ, தமிழ் ஊடகங்களோ, தமிழ் ஆய்வு நிறுவனங்களோ அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அல்லது தனிநபர் ஆளுமைகளாவது இந்நடவடிக்கையினை மேற்கொள்ள முயற்சிக்க வேண்டும். வாழ்த்துகள்.
முனைவர் ஜா.இராஜா,
உதவிப்பேராசிரியர்,
தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
மின்னஞ்சல் வழியாக(gangadharan.kk2012@gmail.com)
ReplyDeleteஐயா. படித்தேன்.
இப்படி ஒன்று இருக்கின்றது என்று இப்போது தான் தெரிந்து கொண்டேன்.
உங்கள் தமிழ் வளர்ச்சிப்பணி மென்மேலும் சிறக்கவேண்டும்.
அன்புடன்
கு.கி.கங்காதரன்
மின்னஞ்சல் வழியாக(kiculama@gmail.com)
ReplyDeleteஐயா, தாங்களின் '2017 ன் சிறந்த சொல்' கட்டுரையை தி இந்து நாளிதழில் படித்தேன்.
புதிய- தெரியவேண்டிய அருமையான செய்தி.
மு.ரஹ்மத் ரபீக்
(அரபி பேராசிரியர்)
கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலி மாவட்டம்
ஆழமான பதிவு அய்யா....
ReplyDeleteஇந்த ஆண்டிற்கு இப்போதிருந்தே சொற்களைத் தேர்ந்தெடுத்து வைப்பாம்!
ReplyDeleteஜனவரிக்கு ... ஆன்மீக அரசியல் & ஆண்டாள்
உங்கள் தமிழ் வளர்ச்சிப்பணி மென்மேலும் சிறக்கவேண்டும்.
ReplyDeleteHappy new 2018
https://kovaikkothai.wordpress.com/
இது ஓர் அருமையான கட்டுரை. இப்படி எழுதுவதற்குத் தேடலும் நாடலும் கோடலும் அவசியம். இத் தனியார்வம் உங்களிடத்தில் தணியாத ஆர்வமாய் உள்ளது. தி இந்து இதழ் உங்களை நன்றாகப் பயன்படுத்த வேண்டும். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்.
ReplyDeleteMr K.S.Mahalingam (thro:kusamahalingam@gmail.com)
ReplyDeleteungal the indhu tamil article nanraha ullathu
by ku sa mahalingam
அருமை ஐயா
ReplyDeleteMr D.Dharan (thro: visitanand2007@gmail.com)
ReplyDeleteSo excellent effort sir ..... Congratulations
Mr Nalanthaa Jambulingam (thro' fb)
ReplyDeleteYou are a great source of vital information, that go unnoticed.
(மின்னஞ்சல் tamilthinai@gmail.com மூலமாக)
ReplyDeleteஅன்பு நண்பருக்கு, வணக்கம்.
படித்தேன். கட்டுரை படி தேன்.
வாழ்த்துகள்.
-முனைவர் தி.நெடுஞ்செழியன்
முனைவர் சு.மாதவன் (மின்னஞ்சல் வழியாக semmozhi200269@gmail.com)
ReplyDelete07.01.2018 நாளிட்ட தமிழ் இந்து நாளிதழில் முனைவர் பா.ஜம்புலிங்கம் எழுதிய "2017-ன் சிறந்த சொல்" என்னும் கட்டுரை படித்தேன். படித்தவுடன் பாரதிதான் நினைவுக்கு வந்தான். "புத்தம்புதிய கலைகள் - பஞ்ச/பூதத்தின் நுட்பங்கள் கூறும்/மெத்த வளருது மேற்கே - அந்த/மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை" என்ற பாரதியின் ஏக்கத்திற்கு
('என்றந்தப் பேதை உரைத்தான்' என்று அவனே குறிப்பிட்டபோதிலும்} விடைகிடைக்கும் நாள் என்றுதான் வரப்போகிறதோ என்றுதான் தோன்றியது.
கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளதுபோலவே ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் ஆண்டுக்காண்டு பல சொற்களைத் தங்கள் அகராதிகளில் சேர்க்கிறார்கள். ஆண்டின் சிறந்த சொல் என அறிவிக்கிறார்கள். ஆனால் இத்தகைய முயற்சி தமிழினில் மேற்கொள்ளப்படவில்லை. அரசோ,அரசுசார் நிறுவனமோ இப்படி ஒரு திட்டமிடலுக்கான கொள்கைசார்ந்த யோசனையோகூட இல்லை. அப்படியென்றால், தமிழில் புதிய சொற்களே உருவாகவில்லையா ...?!
நிறையப் படைப்பாளிகள்,எழுத்தாளர்கள் ஏராளமான புத்தம்புகிய கலைச் சொற்களைப் படைத்துக் கொண்டேதான் உள்ளனர். அவற்றைத் திரட்டித் தொகுக்கும் வகையிலான திட்டமிலும் பணியாற்றலும்தான் நம்மிடம் இல்லை. தமிழில் ஒருங்கிணைந்த அகராதி உருவாக்க முயற்சி இதுவரை நடைபெறவே இல்லை. தனிநபர், தனி நிறுவனம், பதிப்பகம் என்றவாறு அவரவர் தனி முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அகராதிகள் வருகின்றன. ஆனால், தமிழ்ச் சமூகத்தின் பொதுமையத் திரட்டாக வரவில்லை; அதற்கான முயற்சிகளும் இல்லை . சரி... இதுவரை இல்லை. இனி என்ன செய்யலாம். தமிழ்நாட்டு அரசு இந்தப் பணியைச் செய்யும் பொறுப்பைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அகராதியியல் துறையிடம் ஒப்படைக்கலாம். அங்கு தமிழில் வெளிவரும் காலமுறை இதழ்கள், நூல்கள் என எல்லாவற்றிலுமிருந்து இத்தகைய புதிய சொல்வரவுகளை வரவுவைக்க வேண்டும். பின்னர் அறிஞர்கள் கூடிக் கலந்துரையாடித் தொகுத்துப் பின்னர் ஆண்டுதோறும் தமிழ் அகராதியில் புதிய சொற்களையும் சேர்த்துப் பதிப்பிக்கவேண்டும்.
கட்டுரையாளரின் விவரங்களின்படி "யூத்க்வேக்", "ஃபேக் நியூஸ்", "ஃபெமினிசம்" ஆகிய இந்த மூன்று சொற்களில் புத்தம்புதிய படைப்பாக்கச் சொல் "யூத்க்வேக்" தான் என்பது தெளிவு. ஏனெனில், மீதி இரண்டு சொற்களும் 2017க்கு முன்பே உருவான சொற்கள் என்பது எனது கருத்து. அதிலும் 25 ஆண்டுகளுக்கு முன்பே வழக்கத்திலும் புழக்கத்திலும் வந்துவிட்ட "ஃபெமினிசம்" என்ற சொல்லை 2017-ன் புதிய சொல் என்பது வேடிக்கையாக இல்லையா ...?!
நம்நாட்டிலும் இந்த " யூத்க்வேக்" நடந்ததும் 2017-ல்தான் என்பதும் மிகுந்த பொருத்தப்பாடுடையதாக உள்ளது. ஆம். "இளம் அதிர்வெழுச்சி" எனும் ஜல்லிக்கட்டுப் போராட்டத் புத்தெழுச்சி தமிழகத்தில் நடந்ததும் 2017 தானே ...! எனவே, நம்நாட்டுக்கும் பொருத்தமானதே "யூத்க்வேக்" எனும் புதிய சொல். சொல் என்பது வெறும் சொல்லல்ல; அது பண்பாட்டின் நெல்.
-முனைவர் சு.மாதவன், உதவிப் பேராசிரியர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (த), புதுக்கோட்டை -622 001. பேச : 9751 330 855
வாழ்த்துக்கள் ஐயா
ReplyDeleteவாழ்த்துகள் அய்யா. சிறப்பான செய்தி
ReplyDeleteஹிந்து நாளிதழில் உங்களது கட்டுரை வெளியானதற்குப் பாராட்டுக்கள். முனைவர் சு. மாதவன் அவர்களின் கருத்துரை வரவேற்கத்தக்கது. தமிழிலும் இப்படிச் செய்யலாம் என்ற அவரது வேண்டுகோள் செயல்படுத்தப்பட வேண்டிய ஒன்று.
ReplyDeleteவணக்கம் !
ReplyDeleteபங்கயம் பூத்துக் கங்கை
....பசுமையும் கொள்ளல் போல!
மங்கலம் பெருகி மக்கள்
....மகிழ்வினால் நிறைந்து துள்ள !
எங்கிலும் அமைதி வேண்டி
...இறைஞ்சிடும் எல்லோர் வாழ்வும்
பொங்கலாம் இந்நாள் தொட்டுப்
...பொலிவுற வாழ்த்து கின்றேன் !
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் !
Mr. Nalanthaa Jambulingam (thro fb)
ReplyDeleteYou are a great source of vital information, that go unnoticed.
வாழ்த்துகள் ஜம்புலிங்கம் ஐயா
ReplyDeleteதமிழ் இயலன்
MrP.R.Maniarasu Civil
ReplyDelete(thro' email: prmaniarasu@pacrpoly.org)
வெளிஉலகின் தலை சிறந்த செயல் சொல் தந்தை