முகப்பு

07 April 2018

காக்கப்படவேண்டிய கலைப்பெட்டகம் : கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி (1)

ஒருவருடைய வாழ்வில் மறக்கமுடியாத காலங்களில் ஒன்று கல்லூரிக் காலமாகும். என் கல்லூரிக்காலம் 1975-79 ஆகும். கல்லூரியில் நான் சேர்ந்த சூழலைப் பற்றி மனதில் நிற்கும் கும்பகோணம் கல்லூரி என்ற தலைப்பில் பகிர்ந்திருந்தேன். 

9 ஏப்ரல் 2017 அன்று, அக்கல்லூரியில் சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறையில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் என் நண்பர் முனைவர் மணிவண்ணன் அவர்களின் துணையுடனும், தொடர்ந்து என் மனைவியுடனும் கல்லூரியின் வளாகத்தைச் சுற்றி வந்தேன். தற்போது பல கட்டடங்கள் களையிழந்து நிற்பதைப் பற்றி நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டேன்.  நண்பர் திரு கரந்தை ஜெயக்குமார் 21 ஏப்ரல் 2017 அன்று அங்கு சென்று வந்து தன் அனுபவத்தை மேதையின் வகுப்பறையில் என்ற தலைப்பில் அவருடைய தளத்தில் பகிர்ந்திருந்தார். சுமார் 40 ஆண்டு காலத்தில் கல்லூரி பல மாற்றங்களைக் கண்டுள்ளது. காக்கப்படவேண்டிய, போற்றப்படவேண்டிய கலைப்பெட்டகத்தைக் காண வாருங்கள், செல்வோம்.

நாங்கள் படித்த காலகட்டத்தில் கல்லூரியின் நுழைவாயில் சிறியதாக இருந்தது. தற்போது அகலமான நுழைவாயில் உள்ளது. அதனைக்கடந்து உள்ளே செல்லும்போது அழகான சித்திர வேலைப்பாடுகள் சுவற்றில் காணப்பட்டன. அடுத்து, புதிதாக கட்டப்பட்ட பாலம் அமைந்துள்ளது. நாங்கள் படித்துக் கொண்டிருந்தபோது இருந்த பாலத்தைவிட இது சற்று பெரிதாக இருந்தது. செல்வோம்.
நுழைவாயில்

புதிய பாலத்தின் முன்பாக பழைய நினைவுகளுடன்
நாங்கள் படிக்கும் காலத்தில் ஆற்றில் கரை புரள தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும். தற்போது நான் சென்றது கோடைக்காலமாதலால் ஆங்காங்கே தண்ணீர் காணப்பட்டது. புகுமுக வகுப்பு சேர்ந்துவிட்டு மகிழ்ச்சியில் வந்தது, கும்பகோணம் நண்பர்களுடன் கும்மாளமிட்டுக்கொண்டே சென்றது, கல்லூரி தேர்தலின்போது நண்பர் ஜனத்தீன்ராஜுக்காக பாலத்தின் இரு பக்கங்களிலும் நின்றுகொண்டு ஆதரவு திரட்டியது போன்ற பல நிகழ்வுகள் நினைவிற்கு வந்தன.  கும்பகோணத்தில் மகளிருக்கான கல்லூரி (Government College (Women) அரசலாற்றங்கரையையொட்டி இருந்தபோதிலும், நாங்கள் இங்கு சேர்ந்த காலகட்டத்தில்தான் முதல் முதலாக மாணவிகள் சில வகுப்புகளில் சேர்க்கப்பட்டனர்.   
பாலத்தின் இடது புறத்தில் காவிரியின் தோற்றம்
பாலத்தின் அடுத்த பக்கத்தை நெருங்கும்போது கல்லூரிக்கு அடையாளமான மணிக்கூண்டு (clock tower அல்ல bell tower) கண்ணுக்கு அருகில் வர ஆரம்பித்தது. 
பாலத்தின் மறு முனையில் உள்ள நுழைவாயில்
புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி), கும்பகோணம் என்ற பெயர் எழுதப்பட்டிருந்த வளைவிற்கு இடப்புறம் நாங்கள் படித்த பொருளாதார வகுப்புகளின் அறைகள் உள்ளன. தற்போது அப்பகுதிக்குச் செல்ல முடியாதபடி சிமெண்ட் சுவரால் அடைக்கப்பட்டிருந்தது.  அழகான ஜன்னல் அமைப்பு, அதற்கு மேல் காற்றோட்டத்திற்கான அமைப்பு, மூன்று புறமும் கட்டுமானப்பகுதியைத் தாங்குமளவு அமைக்கப்பட்டுள்ள மர அமைப்புகள் வகுப்பறைக்கு அழகைத் தந்துகொண்டிருந்தன. தற்போது பொலிவிழந்த நிலையில் அதனைப் பார்க்கும்போது வேதனையாக இருந்தது. இந்த வகுப்பறையின் எதிரே காவிரி ஆற்றங்கரையின்  படித்துறையைக் காணலாம். தற்போது இவ்வழி அடைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான படித்துறைகள் கல்லூரி வளாகத்தை ஒட்டி மூன்று இடங்களில் காணப்படும்.  
நாங்கள் படித்த இளங்கலை பொருளாதார வகுப்பு அறை 
(இதன் வாயில் எதிரே படித்துறை உள்ளது) 
இடது புறம் வகுப்பறையைப் பார்க்க முடியாத நிலையில், வலது புறம் நோக்கி நடக்க ஆரம்பித்தோம். அங்கு ஆங்கிலேய கலைப்பாணியையும் நம் கலைப்பாணியையும் நினைவுபடுத்துகின்ற அமைப்பிலான மணிக்கூண்டு, அதனுடன் கூடிய தளம் உள்ளது. சற்று கூர்ந்து கவனித்தால் கோயிலின் முக மண்டபத்தில் இருக்கின்றோமோ என்று எண்ணத்தோன்றும். 
அந்த இடத்திற்கு நேராகப் போவதற்கு எத்தனிக்கும்போதுதான் அந்தப் பாதையில் சிறிது தூரத்திற்கு சுவர் எழுப்பப்பட்டிருப்பதைக் காணமுடிந்தது. கல்லூரி நாள்களில் இந்த பாதையில் நாங்கள் ஒவ்வொரு தூணாக நின்று பார்த்துக் கொண்டும் ரசித்துக்கொண்டும் நடந்து வந்த நாள்கள் நினைவிற்கு வந்தன. அங்குதான் புவியியல் வகுப்பிற்கான ஆசிரியர் அறை இருந்தது. ஒவ்வொரு தூணிலும் நான்கு புறமும் சிற்பங்களைக் காணமுடியும். தூண்களில் மட்டுமன்றி மேற்கூரையைத் தாங்க அமைக்கப்பட்டுள்ள மரங்களிலும் சிற்பங்கள் உள்ளன. 

இந்த சிற்பங்கள் புள்ளமங்கை ஆலந்துறையார் கோயிலிலும்கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலிலும் உள்ள கற்சிற்பங்களை போல நேர்த்தியாக, அதே சமயத்தில் மரத்தில் வடிவமைக்கப்பட்டவை. இக்கட்டடத்தைக் கட்டும்போது கோயில் கட்டுமானத்தின் தாக்கமும் அப்போதைய கட்டடக்கலை வல்லுநர்களுக்குத் தோன்றியிருக்கலாம் என்று எண்ணத்தோன்றியது. தற்போது பாதி இடம் சிமெண்டால் அடைக்கப்பட்ட நிலையில் கீழே இருந்து அனைத்தையும் ரசிக்கும் நிலை ஏற்பட்டது. மீதியுள்ள தூரத்தில் நடந்து செல்லும்போது கோயிலின் திருச்சுற்றில் சுற்றி வருவது போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டது. கட்டடத்தின் மேல் பகுதியைத் தாங்கும் அமைப்பில் குறுக்காக சிறிய அளவிலான மர உத்திரங்கள் காணப்பட்டன.  எப்போது வேண்டுமானாலும் விழுந்துவிடுமோ என்று எண்ணுமளவு அந்த கட்டடப்பகுதி காணப்பட்டது.   


புகுமுக புவியியல் வகுப்பிற்கான ஆசிரியர் அறை இருந்த பகுதி

தூண்களின் நான்கு புறமும் சிற்பங்கள்




மேற்கூரையைத் தாங்கும் (இரு தூண்களுக்கிடையே அதன் மேல் பகுதியில்) மரத்திலும் சிற்ப வேலைப்பாடுகள்

ஒவ்வொன்றாக ரசித்துக்கொண்டே மணிக்கூண்டை நெருங்கியபோது மணிக்கூண்டு அமைந்துள்ள கட்டுமானப்பகுதியில் உள்ள அழகான சிற்பங்களும், மரத்தாலான தூண்களும் பொலிவிழந்த நிலையில் இருந்ததைக் காணமுடிந்தது.  

மணிக்கூண்டின் அடிவாரப்பகுதியின் வழியாக அலுவலகத்திற்குச் செல்வதற்கு முன்பாக என்னையும் அறியாமல் வலது புறம் சென்றேன். வேலைப்பாடான தூண்கள் நிறைவடைகின்ற அந்தப் பகுதியில் நாங்கள் புகுமுக வகுப்பு படித்தபோது மொழிப்பாடத்திற்கான இருந்த வகுப்பறையாகும். ஜன்னல்கள் பராமரிப்பின்றி, வகுப்பறை பயன்பாடின்றி இருந்ததைக் காணமுடிந்தது. இந்த வகுப்பறையிலிருந்து அடுத்தடுத்து உள்ள மூன்று வகுப்பறைகளும் உள்ளேயிருந்தே செல்லும் வகையில், சுற்று வட்ட வடிவில் மிகவும் அழகாக அமைக்கப்பட்டிருக்கும். அவ்வாறே இந்த வகுப்பறைகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட நுழைவாயில்கள் உண்டு.   

கடைசி தூணுக்கு அருகே தெரிவது 
நாங்கள் புகுமுக வகுப்பின்போது மொழிப்பாடம் படித்த வகுப்பறை
புகுமுக வகுப்பில் நாங்கள் படித்த வகுப்பறை தற்போது பயன்படுத்தப்படா நிலையில் இருந்ததை ஏக்கமாக கண்டு சற்று அங்கு நின்றேன். நின்றபோது, படிக்கும் காலத்தில் இடைவேளையில் வகுப்பறையில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு வகுப்பறையில் எதிரில் உள்ள படித்துறையில் நின்று டிபன் பாக்சைக் கழுவிய நாள்கள் நினைவிற்கு வந்தன. ஒரு முறை கை நழுவி டிபன் பாக்ஸ் மூடியுடன் மிதந்து செல்ல, நாங்கள் கரையோரமாக ஓடிக் கொண்டே வர அருகே நீந்திக் கொண்டிருந்த சிறுவர்கள் எங்களுக்கு அதனை எடுத்துக் கொடுத்தது இப்போது நினைவிற்கு வந்தது. 

அதிகம் ஆக்கிரமித்த நினைவுகளுடன் மணிக்கூண்டு அமைந்துள்ள பகுதியின் கீழ்த்தளம் வழியாக உள்ளே சென்றோம். கோயில் மணி போல அமைந்துள்ள அந்த மணியை அடிப்பதற்கான கயிறு கீழே வரை காணப்படும். நாங்கள் படித்த காலத்தில் மணியடிக்கும் பணியில் இருந்தவரை முழியன் என்போம். அவர் சற்று பெரிய விழிகளுடன் காணப்படுவார். மாணவர்கள் போராட்டம் செய்யும்போது அவரை அங்கிருந்து அகற்றிவிட்டோ, ஏமாற்றிவிட்டோ மாணவர்கள் கயிறை இழுத்து மணியை அடிப்பர். கல்லூரி முடிந்துவிட்டது என்றோ வகுப்புகள் ஒத்திவைக்கப்படுகின்றன என்றோ தெரிவிக்கவும், மாணவர்களை ஒரே இடத்தில் ஒன்று சேர்க்கவும் இந்த உத்தியை அப்போது பயன்படுத்தினர். அனைத்து மாணவர்களும் அலுவலகத்திற்கு முன்பாக ஒன்று சேர்ந்துவிடுவர்.
மணிக்கூண்டு அமைந்துள்ள பகுதியின் தரை தளம்
மணிக்கூண்டுக்கு செல்வதற்கான மாடிப்படிகள்
மணிக்கூண்டின் கீழ் பகுதியில் சிறிது நேரம் நின்றபோது படித்த காலத்தில் அடித்த மணியோசை கேட்பதைப் போல இருந்தது. 

அங்கிருந்து அலுவலகப்பகுதிக்குச் செல்வதற்காக உள்ளே நடந்து சென்றபோது வலது புறத்தில் ஒரு வகுப்பறை மிகவும் பொலிவுடன் காணப்பட்டது. வரலாற்றைப் பற்றியும், கடந்து சென்ற நாட்களைப் பற்றியும், கலையழகைப் பற்றியும் சிந்தித்துக்கொண்டே சென்றபோது அந்த வகுப்பறை என் சிந்தனையை வேறு பக்கம் திருப்பியது. படித்த காலத்தில் இந்த வகுப்பறை வழியாக நாங்கள் பல முறை எங்கள் வகுப்பறைக்குச் சென்றுள்ளோம். அந்த வகுப்பறை வாயிற்கதவின்மீது அவ்வறையின் சிறப்பைப் பற்றிய குறிப்பு காணப்பட்டது. நாங்கள் படித்த காலத்தில் அதுபற்றி பேசப்படவே இல்லை. அவ்வாறான முக்கியத்துவமும் எங்களுக்குத் தெரியாது. அந்த அறையின் சிறப்பைக் காணவும், புகுமுக வகுப்பில் நாங்கள் படித்த வகுப்பறையைக் காணவும் தொடர்ந்து செல்வோம்.........

Abstract of the article in English
As an alumnus of the more than one and half century old Government College for Men (Kumbakonam) (1975-79) I feel that many of its magnificent and aesthetic structures need to be protected. (to be continued...)

20 comments:

  1. நாங்களும் கூடவே நடந்து வந்த உணர்வு வந்தது.

    ReplyDelete
  2. இனிய நினைவுகள்...

    ஆனால் இந்த கலை பொக்கிசங்களை தான் நாம் பாதுகாக்க தவறிவிடுகிறோம்...

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரரே

    தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்ததை படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. நினைவுகள் எப்போதுமே அருமை தொடருங்கள்.. தொடர்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  4. மகிழ்ச்சியும் சில இடங்களின் தங்களின் ஆதங்கமும் புரிகிறது ஐயா...

    ReplyDelete
  5. நான் படித்த அழகப்பா கலைக்கல்லூரியும் சமீபத்தில் சென்று பார்த்த போது இப்படித்தான் உள்ளது. வருத்தமாக இருந்தது.

    ReplyDelete
  6. கல்லூரி காலங்கள் நினைவு , கல்லூரி பழைய அமைப்பின் நினைவுகள் பகிர்வு அருமை.

    சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறையில் துறைத் தலைவராக என் கணவரின் மாணவர் இருவர் இருந்தார்கள் என்றும் அவர்கள் பெயர் பேரா. கனகசபை, பேரா. அன்பழகன் , இருந்தார்கள் என்றும் சொன்னார்கள்.
    கணவரின் ஆசிரியர் பேரா. ராமானுஜர் அவர்களும் அங்கு பணியாற்றியதை சொன்னார்கள்.

    விடைத்தாள் திருத்தும் பணிக்கு இந்த கல்லூரிக்கு வந்த காலங்களை சொன்னார்கள்.

    ஏ.யு.டி , ஜி.சி.டி.ஏ மாநாட்டில் கலந்து கொள்ள வருவார்கள். என்றும் கணவரின் மலரும் நினைவுகளை சொன்னார்கள்.

    படங்களைப் பார்த்து இப்படி ஆகி விட்டதே கல்லூரி என்று வருத்தப்பட்டார்கள்.

    பொக்கிஷம் பாதுகாக்கபட வேண்டும்.

    ReplyDelete
  7. தங்களது மலரும் நினைவுகளை (தாங்கள் படித்த கல்லூரி வளாக நினைவுகளை) ஒருவித நெகிழ்வோடு தங்கள் பதிவில் விவரித்து சொன்னதைப் படித்து முடித்தவுடன், எனக்குள்ளும் எனது கல்லூரிகள் கால நினைவுகள் வந்து போயின. – தொடர்கின்றேன். வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. மாற்றம் ஒன்றே மாறாதது என்பது விளங்குகிறது
    நீலகிரி வெல்லிங்டனிலும் கூனூரி லும் நாங்கள் குடியிருந்த வீட்டை காணும் போது எனக்கும் மனம் சஞ்சலப்பட்டது நினைவுக்கு வருகிறது

    ReplyDelete
  9. அந்த நாள் ஞாபகம் நெஞ்சினிலே வந்ததேன்னு பாடல் ஒலிக்காத குறைதான்.

    நான் படிச்ச பள்ளியை பார்க்கப்போகும்போது மாற்றத்தின் வலிமையை உணர்ந்தேன்

    ReplyDelete
  10. தாங்கள் கற்ற கல்லூரியின் இனிய நினைவுகளோடு அதனுடைய நிலையையும் ஆதங்கத்துடன் சொல்லிய விதம் அருமை

    ReplyDelete
  11. இனிய நினைவுகள். "பள்ளி சென்ற காளை பாதைகளே... பாலங்கள்.. மாடங்கள் ஆஹா..." என்கிற பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன. நீங்கள் அங்கு படித்த காலப் புகைப்படம் ஒன்றையும் இணைத்திருக்கலாம்!

    ReplyDelete
    Replies
    1. // காளை பாதைகளே.. //


      கால பாதைகளே என்று படிக்கவும்.

      Delete
  12. கல்லூரிக் கால நினைவலைகள் என்றுமே இனிமையானவைதான் ஐயா

    ReplyDelete
  13. திரு Chella Balu (thro FB) முதன்முறையாக தமிழக அரசின் வரவு செலவுத் திட்டத்தில் இத்தகைய பாரம்பரிய கட்டடங்களின் பழமை சிறப்புகள் மாறாமல் புதுப்பிக்க நிதி ஒதுக்கப் பெற்றுள்ளது. தக்க வல்லுநர்கள் துணையுடன் காக்கவேண்டும்.

    ReplyDelete
  14. திரு Deenadayalan Ramasamy (thro FB) கலையழகு மிக்க கரையோர கலைக் கல்லூரி போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய கலைக் கருவூலம்.

    ReplyDelete
  15. கும்பகோணம் கல்லூரி என்றதும் எனக்கு மஹோமஹோபாத்யாய டாக்டர் உ.வே.சா அவர்கள்தான் ஞாபகத்துக்கு வந்தார்.

    ReplyDelete
  16. அழகிய கல்லூரி. உங்களுடன் நாங்களும் அங்கே சென்று பார்க்கும் உணர்வு. தொடர்கிறேன் ஐயா.

    ReplyDelete
  17. அழகிய கல்லூரி..காலத்தால் அழியாத நினைவுகள்... நாம் படித்த பழகிய இடங்களைப் பார்க்கும்போது மிகவும் கவலைதான் வரும் நெஞ்சை என்னமோ பண்ணும்.

    ReplyDelete
  18. காக்கப் படவேண்டிய கலைப் பெட்டகம் - மலரும் நினைவுகளோடு . . . அருமை

    ReplyDelete
  19. Ramachandran Guruswamy in Kumbakonam FB: 2004ல் 150 ஆண்டு கொண்டாடியிருக்கவேண்டும். 75ஆண்டுகள்நிறைவடைந்த கல்வி நிலையங்களுக்கு தபால்தலை வெளியிட்டுகௌரவப்படுத்தும் மத்திய மாநில அரசுகள் வாளாவிருந்தன. நாடாளுமன்ற சட்டசபை உறுப்பினர்கள் என்ன செய்தார்களோ ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். 2014ல் நகரமேனிலைப்பள்ளி 150 ஆண்டுநிறைவடைந்தது. பாணாதுறை 2022 நேடிவ்பள்ளி 2029. குடந்தை கேட்பாரற்றுகிடக்கிறது.ஆங்கில அரசின் முதல் குற்றவியல் நீதிமன்றம் 1807ல் குடந்தையில் தொடங்கப்பட்டு 1843ல் தஞ்சைக்குமாற்றப்பட்டது. 200வதுஆண்டுநிறைவு விழா2007ல் தஞ்சையில் கொண்டாடப்பட்டது. இதுதான்குடந்தையின் நிலை.

    ReplyDelete