அண்மையில் கும்பகோணத்திற்குச் சென்றபோது அந்நாள் நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது சுமார் 50 ஆண்டுகளுக்கு முந்தைய, கல்லூரிக்கால நினைவுகளை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்த இனிமையான நினைவுகளைத் தேடிச் சற்றே பின்னோக்கிச் செல்வோமா?
இளங்கலை (1976-79) படிக்கும்போது கல்லூரிக்கு எடுத்துச்சென்ற கோப்பு அட்டை |
கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி ஆரம்பப்பள்ளியில் முதல் வகுப்பு தொடங்கி கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரியில் புகுமுக வகுப்பு (P.U.C.,) வரை தமிழ் வழியிலேயே (Tamil medium) படித்தேன். புகுமுக வகுப்பில் தேர்ச்சி பெற்றபின்னர் இளங்கலைக்கு (B.A.,) விண்ணப்பிக்க வேண்டிய நேரம். அப்போது நண்பர்கள் இளங்கலை வகுப்பினை ஆங்கில வழி படித்தால்தான் வேலை எளிதாகக் கிடைக்கும் என்றனர். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே இந்தியும், தட்டச்சும், சுருக்கெழுத்தும் கற்க ஆரம்பித்தேன்.
ஆங்கிலவழிப் படிக்கவேண்டும் என்ற எண்ணம் வருவதற்கு கீழ்க்கண்டவை உள்ளிட்ட பல காரணங்கள் இருந்தன.
- படித்துமுடித்தபின் வேலைக்கு விண்ணப்பிக்கவேண்டும் என்ற ஆர்வம்.
- வேலைக்கான விண்ணப்பத்தையே ஆங்கிலத்தில்தான் அனுப்பவேண்டும் என்ற நிலை.
- வேலையில் சேர்ந்தே ஆகவேண்டிய கட்டாயம்.
- வேலை பெறும் அளவிற்கு தகுதியை உயர்த்திக்கொள்ளல்.
- ஆங்கில வழியில் படிப்பது சிரமம் என்று நண்பர்கள் கூறிய சவாலை ஏற்றல்.
- படித்த படிப்பிற்கு உள்ளூரில் வேலை கிடைக்குமா என்ற ஐயம்.
- 1974இல் தொடங்கிய தட்டச்சு, அனுபவம், தி இந்து (ஆங்கிலம்) வாசிப்பனுபவம்.
தி இந்து ஆங்கில நாளிதழை வாசிக்க ஆரம்பித்த அக்காலகட்டத்தில் முதலில் எளிதாக உள்ளவற்றைப் படித்துவிட்டு, பின்னர் சற்று சிரமமானவற்றைப் படிப்பேன். அதே உத்தியைக் கொண்டு பாடங்களைப் படித்தேன். நான் எடுத்த நூல்களில் எனக்குத் தெரிந்த எளிய வார்த்தைகளைக் கொண்ட பாடங்களை முதலில் படிக்க ஆரம்பித்து, பின்னர் மற்றவற்றைத் தொடர்ந்தேன். சில சமயங்களில் ஆசிரியர் கூறுகின்ற, அப்போதுதான் முதன்முதலாக அறிந்த, ஆங்கிலச்சொற்களைக் குறித்துக்கொண்டேன். இந்த முறை மூலமாக ஒவ்வொரு நாளும் புதிய சொற்களையும், அவற்றுக்கான பொருளையும் அறிய ஆரம்பித்தேன். பாடங்களில் வரும் சில சொற்கள் (fiscal, inflation, budget, poverty line) தி இந்து நாளிதழில் இருப்பதைக் கண்டு வியந்தேன். பொருளாதாரம் தொடர்பான பல சொற்களை நாளிதழ் மூலமாக அறிந்தேன். படிக்கின்ற பாடத்தில் அவை வரும்போது மிகவும் வியந்துபோவேன். ஆங்கில மொழி மீதான பயம் நீங்க ஆரம்பித்தது.
முதலாண்டில் தமிழ், ஆங்கிலத்துடன் ஒரு துணைப்பாடமாக இந்திய வரலாறு ஆங்கிலத்தில் எழுதவேண்டியிருந்தது. அதனை ஆங்கிலத்தில் எப்படியும் எழுத முடிவெடுத்தேன். முதன்முதலாக மொழியல்லாத ஒரு பாடத்தில் ஆங்கிலத்தில் எழுதுவது அப்போதுதான். அதில் தேர்ச்சி பெற்ற துணிவு அடுத்தடுத்த ஆண்டுகளில் அவ்வாறே எழுதவும், வெற்றி பெறவும் உதவின. புகுமுக வகுப்பில் மூன்றாம் வகுப்பில் வெற்றி பெற்றதைப்போலவே பட்டப்படிப்பிலும் மூன்றாம் வகுப்பில் வெற்றி பெற்றேன்.
இவ்வாறாக மூன்றாண்டுகளை நிறைவு செய்தேன். தமிழ்வழிப் பயின்ற மாணவர்களுடன் தொடர்பு வைத்திருந்ததால் அந்தந்த பாடத்திற்குரியனவற்றில் பயன்படுத்தப்படுகின்ற தமிழ் சொற்களையும் எளிமையாக அறியமுடிந்தது. தமிழ்வழிப் படித்திருந்தால் இன்னும் அதிகமாக மதிப்பெண் எடுத்திருக்கலாமோ என்ற ஓர் எண்ணம் இருந்துகொண்டேயிருந்தது.
கல்லூரியில் படித்த காலகட்டத்தில் குடும்பத்தின் இயல்பு நிலை அதிகம் பாதிக்கப்பட்டது. முதலாண்டில் மாமாவும் (அப்பாவின் தங்கையின் கணவர்), இரண்டாம் ஆண்டில் தாத்தாவும் (அப்பாவின் அப்பா), மூன்றாம் ஆண்டில் அப்பாவும் இயற்கையெய்தனர். இடி மேல் இடி. எங்கள் தாத்தாவுக்கு (அவர் கணக்குப்பிள்ளையாக வேலை பார்த்த அவருடைய மைத்துனரின்) கடையிலிருந்து வந்துகொண்டிருந்த உதவிப்பணம் நின்றது. நாங்கள் அனைவரும் அனாதையானது போல் உணர்ந்தோம். வீடு மட்டுமே சொத்து. மற்றபடி வருமானம் எதுவுமில்லை. எங்கள் அம்மா வீட்டில் மேலும் சில பகுதிகளை வாடகைக்குவிட்டு அதில் வரும் வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்த வேண்டிய சூழல்.
இவ்வாறான சூழலில் நான் பல இடங்களுக்கு வேலைக்கு விண்ணப்பித்துக்கொண்டிருந்தேன். என் தந்தை இறந்தபோது வந்திருந்த எங்கள் சிறிய தாத்தாவின் மருமகன் என் கல்வித்தகுதிகளைக் கேட்டபின் சென்னையில் விடுப்புப்பணியிடத்தில் (leave vacancy) நான் பணியில் சேர உதவினார். இளங்கலை தேர்வு முடிவு எதிர்பார்த்த நிலையில் ஆங்கிலத்தட்டச்சு உயர்நிலை, தமிழ்த் தட்டச்சு உயர்நிலை, ஆங்கிலச்சுருக்கெழுத்து கீழ்நிலை, இந்தி பிராத்மிக் தேர்ச்சி ஆகியவையே எனக்கு அப்போது வேலை கிடைக்க உதவியது. இளங்கலை மட்டுமே படித்திருந்தால் நான் அதிகம் சிரமப்படவேண்டியிருந்திருக்கும். நான் சேர்ந்த நிறுவனத்தில் இந்தியும் ஆங்கிலமும் மட்டுமே பயன்படுத்தப்பட்டதால், நான் அப்போது பெற்றிருந்த பிற தகுதிகள் அங்கு நான் சிறப்பாகப் பணியாற்ற உதவியதை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்.
இக்காலகட்டத்தில்தான் ஏதோ ஒரு பாடப்பிரிவிற்காக முதன்முதலில் மாணவிகள் இக்கல்லூரியில் சேர்ந்தனர்.
வகுப்பு நண்பர் ஜெனத்தீன்ராஜ், மாணவர் தலைவராகப் போட்டியிட்டபோது அவருக்கு வாக்குக் கேட்டோம்.
முதலாண்டில் ஒரு ஆசிரியை (Fiscal Economics) ஆறு வகுப்புகள் மட்டும் எடுத்தார். மற்றபடி அனைவரும் ஆசிரியர்களே.
ப்ளானிங் பார்ம் (Planning Forum) என்ற அமைப்பில் நானும் நண்பர் சந்திரசேகரும் போட்டியிட்டு இருவரும் ஒரே எண்ணிக்கையிலான வாக்கினைப் பெற குலுக்கல் முறையில் அவர் தலைவராகவும், நான் துணைத்தலைவராகவும் செயல்பட்டோம். இத்தேர்தலுக்கான நோட்டீசை நாங்கள் இருவருமே சென்று தனித்தனியாக அச்சடிக்கக் கேட்டு, கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதியில் இருந்த கலாநிதி பிரஸில் தந்தோம்.
சம்பிரதி வைத்தியநாதன்தெருவிலிருந்த எங்கள் வீட்டிலிருந்து கல்லூரிக்கு நடந்தே சென்றேன். சைக்கிள், ரேடியோ போன்றவை எங்களுக்கு மிகவும் தூரம்.
இளங்கலை வணிகம் படித்த நண்பர் திரு கே.எஸ்.சந்தானகிருஷ்ணனின் நட்பு கிடைத்தது இக்காலகட்டத்தில்தான்.
அரங்கேற்றம், அவள் ஒரு தொடங்கதை, அபூர்வ ராகங்கள் படங்களில் ஆரம்பித்த பாலசந்தர் திரைப்படங்களின் மீதான ஈர்ப்பு தொடர்ந்து இன்னும் அதிகமானது.
அதற்கெல்லாம் மேலாக என் வாழ்வில் இக்காலகட்டம் போதிய கல்வித்தகுதி, துணைத்தகுதி, தன் காலில் நிற்றல், யாரையும் சாரா பண்பு, போன்ற பல அனுபவங்களைத் தந்தது.
தொடர்புடைய பதிவுகள்
அரசினர் கலைக்கல்லூரி : புகுமுக வகுப்பு 1975-76
மனதில் நிற்கும் கும்பகோணம் கல்லூரி (1975-79)
நான் எழுதிய நூலை நான் படித்த கல்லூரி நூலகத்திற்கு வழங்கிய இனிமையான தருணங்கள்.
13 மார்ச் 2023இல் கல்லூரி முதல்வர் நா.தனராஜன் அவர்களிடம் சோழ நாட்டில் பௌத்தம் நூலினை வழங்கல் |
5 ஜனவரி 2025இல், கல்லூரி முதல்வர் அ.மாதவி அவர்களிடம் சோழ நாட்டில் பௌத்தம் ஆங்கிலப்பதிப்பினை வழங்கல், உடன் நண்பர் ராஜசேகரன்
|
இனிமையான நினைவுகள்.
ReplyDeleteபழைய நினைவலைகள் நன்று.
ReplyDeleteYou are great I am also an old student Govt College Kumbakonam 1966 to 1969
ReplyDelete