முகப்பு

02 February 2019

கோடியக்கரை : "அழகான பிரதேசம்"

"கோடிக்கரையை நான் இதுவரையில் பார்த்ததில்லை. அந்தப் பிரதேசம் மிக அழகாயிருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இச்சந்தர்ப்பத்தில் அதையும் பார்த்துவிடலாம்" என்று நந்தினி ஆசைப்பட்டதைப் போல கோடியக்கரை மீது அனைவருக்கும் ஆசை வருவது இயல்பே. அண்மையில் கோடியக்கரைக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. கோடியக்கரையைப் பற்றிய ஒரு பறவைப்பார்வையைக் காண்பதற்கு முன்பாக கோடியக்கரை பற்றி கல்கி பொன்னியின் செல்வனில் கூறுவதைப் பார்ப்போம்.  பின் கோடியக்கரை செல்வோம், வாருங்கள்.

“கோடிக்கரையிலிருந்து காவேரிப்பூம்பட்டினம் வரையில் சோழ நாட்டுக் கடற்கரையோரங்களில் வாயு பகவானின் லீலை செய்த வேலைகளை நன்கு பார்க்கும்படியிருந்தது. எத்தனையோ மரங்கள் வேரோடு பெயர்ந்தும், கிளைகள் முறிந்தும் கிடந்தன. வீடுகளின் கூரைகளைச் சுழிக்காற்று அப்படியே தூக்கி எடுத்துக்கொண்டு போய்த் தூர தூரங்களில் தூள் தூளாக்கி எறிந்து விட்டிருந்தது. குடிசைகள் குட்டிச் சுவர்களாயிருந்தன. கோடிக்கரைப் பகுதியில் எங்கே பார்த்தாலும் வெள்ளக் காடாயிருந்தது. கடல் பொங்கி வந்து பூமிக்குள் புகுந்து விட்டதோ என்று தோன்றியது. ஆனால் பூமிக்கும் கடலுக்கும் மத்தியில் இருந்த வெண்மணல் பிரதேசம் அந்தக் கொள்கையைப் பொய்ப்படுத்தியது. அந்த வெண்மணல் பிரதேசத்தில் ஆங்காங்குப் புதைசேறு இருந்த இடங்களில் மட்டும் இப்போது அதிகமாகத் தண்ணீர் தேங்கியிருந்தது. அப்படிப்பட்ட இடங்களில் இப்போது மனிதனோ மிருகமோ இறங்கி விட்டால், உயிரோடு சமாதிதான்! யானைகளைக் கூட அப்புதை சேற்றுக் குழிகள் இப்போது விழுங்கி ஏப்பம் விட்டு விடும்!... சுழிக்காற்று அடித்த இரண்டு நாளைக்குப் பிறகு கோடிக்கரைக்குப் பெரிய பழுவேட்டரையரும் அவருடைய பரிவாரங்களும் வந்து சேர்ந்தார்கள்.”
 






 
கோடியக்கரை வன உயிரனச் சரணாலயம், (Point Calimere Wildlife and Bird Sanctuary) நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடற்கரையையொட்டி,   நாகப்பட்டினத்தில் இருந்து 60 கி.மீ தொலைவிலும், தஞ்சாவூரிலிருந்து 110 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள சரணாலயமாகும்.

17.26 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள இந்தச் சரணாலயத்தில் பல வகையான 100க்கும் மேற்பட்ட அரிய பறவை இனங்களும், கலைமான், நரி, புள்ளி மான், காட்டுப்பன்றி, முயல், காட்டுக் குதிரைகள், ஆமை, குரங்கு போன்ற விலங்குகளும் காணப்படுகின்றன. அண்டார்டிக்கா பகுதியில் இருந்தும் பறவைகள் இங்கு வருவதாகக் கூறுகின்றனர். இங்குள்ள காடுகள் வெப்பமண்டல உலர் பசுமைமாறா காடுகள் என்ற வகையினைச் சார்ந்தவையாகும். 150 வகையான தாவர வகைகளையும் இங்கு காணலாம். இங்கு 1000 ஆண்டுகள் பழைமையான சோழர் காலத்துக் கலங்கரை விளக்கம் ஒன்று சிதைந்த நிலையில் உள்ளது.

சிறந்த புவியலாளரும், வானவியலாளருமான தாலமி 1968க்கு முன் இதனைப் பற்றிப் பேசியுள்ளார். 
போர்த்துக்கீசிய வணிகர்கள் நாகப்பட்டினத்தில் தம் வணிகத்தை ஆரம்பித்த காலகட்டமான 16ஆம் நூற்றாண்டின் இடையில் கோடியக்கரை என்ற சொல் பயன்பாட்டிற்கு வந்ததாகும்.
1892க்கு முன்பாக கோடியக்கரையைச் சுற்றியுள்ள காடுகள் வருவாய்த்துறை மற்றும் கோயில் டிரஸ்டிகளால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. வன நிர்வாகம் தொடர்பாக செயல்பாடுகள் 1892இல் ஆரம்பித்தன. அப்பகுதியில் இருந்த சன்யாசி முனிவர் கோயிலுக்கு அருகிலிருந்த இடம் ஆங்கிலேயர்களால் வேட்டையாடும் தளமாகப் பயன்படுத்தப்பட்டது.
1911இல் அப்பகுதி திருச்சி தஞ்சாவூர் வனப்பிரிவு கட்டுப்பாட்டின்கீழ் வந்தது.  1922இல் சென்னை அரசின் மன்னார்குடி வருவாய்த்துறை அலுவலர் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
1938இல் கோடியக்கரை விரிவாக்கப்பகுதிகள் தற்போதுள்ள பகுதிகளோடு இணைக்கப்பட்டன.
1950இல் இதன் கட்டுப்பாடு திருச்சிராப்பள்ளி வனப் பிரிவின்கீழும், 1957இல் தஞ்சாவூர் பிரிவின் கீழும், 1965இல் சென்னை மாநில வனத்துறை அலுவலர் அலுவலகத்தின் கட்டுபாட்டிலும் வந்தது.
1962இல் பறவையியலாளர் சலீம் அலி இப்பகுதியின் முக்கியத்துவத்தினை வெளியுலகிற்கு எடுத்துரைத்தார்.
1967இல் காப்பகம் அமைக்கப்பட்டு, தஞ்சாவூர் வனப்பிரிவின் கட்டுப்பாட்டிலும், தொடர்ந்து 1986இல் நாகப்பட்டினம் வனப்பிரிவின் கட்டுப்பாட்டிலும் செயல்பட ஆரம்பித்தது.
வேதாரண்யத்திலிருந்து உப்பினை ஏற்றுமதி செய்ய 1936இல் ரயில்வே லைன் அமைக்கப்பட்டது. 1988இல் ரயில் சர்வீஸ் நிறுத்தப்பட்டு, 1995இல் தண்டவாளங்கள் அகற்றப்பட்டன.  இரண்டாம் உலகப்போரின்போது ராடார் ஸ்டேஷன் அமைக்கப்பட்டது.
1991 முதல் ஒவ்வோராண்டும் வன விலங்குகளின் கணக்கெடுப்பு நடைபெற்றது.
1959 முதல் பம்பாய் இயற்கை வரலாற்று அமைப்பு (The Bombay Natural History Society) பறவைகளின் வருகை குறித்து ஆய்வு நடத்தி வருகிறது.
9 மார்ச் 1998இல் 45 மீ. (148 அடி) உயரமுள்ள புதிய கலங்கரை விளக்கம் கோடியக்கரை கடற்கரை அருகே அமைக்கப்பட்டது.
வேகமாக வருகின்ற வாகனங்களால் விலங்குகள் கொல்லப்படுவதைத் தடுக்க 1999இல் வேதாரண்யம் கோடியக்கரை சாலையில் அதிகமான வேகத்தடுப்பான்கள் அமைக்கப்பட்டன.
26 டிசம்பர் 2004 சுனாமியின்போது 3 மீ (10 அடி) உயர கடலலைகள் கடற்கரையைத் தாக்கின. அப்பகுதி முழுவதும் கடலால் சூழப்பட்டிருந்தது. சரணாலயம் பெரிய பாதிப்பின்றி இதனை எதிர்கொண்டபோதும், பெரிய அலைகளால் 5525 பேர் நாகப்பட்டின மாவட்டத்தின் பகுதிகளில் இறந்தனர்.

கோடியக்கரை பகுதியில் அமைந்துள்ள இந்த சரணாலயத்தை பார்வையாளர்கள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பார்வையிடலாம். நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள் இப்பகுதிக்கு வர ஏற்ற மாதங்களாகும். பறவைகளைப் பார்க்க விரும்புவோர் அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரையிலும், விலங்குகளைப் பார்க்க விரும்புவோர் மார்ச் முதல் ஆகஸ்டு வரையிலும் இங்கு வரலாம்.
கோடியக்கரை கடற்கரையில் மனைவி திருமதி பாக்யவதியுடன்
சோழர் கால கலங்கரை விளக்கத்தில் ஆசிரியர் திரு சித்திரவேலுவுடன் 
கடற்கரையில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல ஆயத்தமாவது தொடங்கி, தொடர்ந்து கோடியக்கரை சரணாலயம் பயணித்தோம். அங்கிருந்த பசுமையான செடிகளும், இயற்கைச்சூழலும் மனதிற்கு நிறைவாக இருந்தது. ஆங்காங்கே பறவைகளையும், சில விலங்குகளையும் காணமுடிந்தது. தமிழகத்தில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களில் ஒன்றாக இந்த சரணாலயம் இருப்பதை அறியமுடிந்தது. 

25 comments:

  1. தலைப்பை படித்தவுடன், பொன்னியின் செல்வன் தான் உடனே ஞயாபகத்துக்கு வந்தது.
    சரணாலயம் .பற்றி கேள்விப்பட்டதில்லை. கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  2. இனிய காலை வணக்கம் ஐயா.

    பொன்னியின் செல்வன் நினைவுகளோடு ஓரு உலா. இதுவரை சென்றதில்லை. செல்லும் வாய்ப்பு வரவேண்டும் என ஆவல்.

    ReplyDelete
  3. நீங்க எழுதி இருப்பது பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம். இரண்டாம் பாகத்திலேயே கோடிக்கரையில் தானே பூங்குழலி அறிமுகம். அதில் உள்ள புதைசேறுகளைப் பற்றியும் எழுதி இருப்பீர்கள் என எதிர்பார்த்தேன். இப்போது அவை இல்லையா? அந்தப்பக்கம் பலமுறைகள் போயும் இன்னமும் கோடிக்கரையும், காவிரிப்பூம்பட்டினமும் பார்க்க முடியாமலே இருக்கிறது. குழகர் அழைத்தால் கிடைக்கும். குழகர் இன்னமும் அதே நிலையில் தான் இருக்கிறாரா?

    ReplyDelete
    Replies
    1. கோடியக்கரையில் பூங்குழலி அறிமுகம் அனைவரையும் ஈர்த்ததாயிற்றே.இருந்தாலும் நந்தினியின் பார்வையில் பகிர எனக்கு ஆசை. ஆங்காங்கு புதைசேறுகள் உள்ளன. குழகர் நன்றாக, தனிமையில் இருக்கிறார்.

      Delete
  4. சுவாரஸ்யமான தகவல்கள். பொன்னியின் செல்வன் நினைவுக்கு வருவது இயல்பு. எனக்கு "கோடிக்கரை சண்முகம்" கூட நினைவுக்கு வந்தது!!!

    ReplyDelete
  5. மிக அருமை ஐயா...படங்களும் செய்திகளும்

    எங்களுக்கும் பார்க்க வேண்டும் என்னும் ஆவல் வருகிறது ...

    ReplyDelete
  6. படங்களும் தகவல்களும் அருமை ஐயா. கோடியக்கரை என்றாலே பொன்னியின் செல்வன் நினைவில் வருவதைத் தவிர்க்க முடியாது.

    //கோடியக்கரை வன உயிரனச் சரணாலயம், (Point Calimere Wildlife and Bird Sanctuary)//

    நானும் மகனும் பாண்டியில் இருந்த போது எங்கள் திட்டத்தில் இருந்தது. திட்டமும் போட்டு இறுதியில் செல்ல முடியாமல் ஆனது.

    சுனாமியின் போது இங்குள்ள சதுப்பு நிலக்காடுகள்/அலையாத்திக் காடுகள் தடுத்தன என்பதோடு விலங்குகளும் தங்க்ளைத் தற்காத்துக் கொண்டதாக அப்போது செய்தியில் வந்தது. அருமையான இடம்...

    கீதா

    ReplyDelete
  7. வியாபார விசயமாக கோடியக்கரை வழியே செல்வதுண்டு...

    ஒருமுறை சரணாலயம் செல்ல வேண்டும்...

    ReplyDelete
  8. கோடியக்கரையை பார்க்கனும்ன்னு எனக்கும் ஆசைதான்ப்பா

    ReplyDelete
  9. நந்தினி, பூங்குழலி மீண்டும் பொன்னியின் செல்வன் ஞாபகம் வந்தது. கோடியக்கரை அற்புதமான இடம் இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டிய இடம் மற்றும் ரம்மியம்.

    ReplyDelete
  10. நினைவுகளைக் கிளறிவிட்டீர்கள்.

    ஆபீஸ் விஷயமாக வேதாரண்யம் வந்தவன், அந்த இடங்களை எல்லாம் சுற்றிப்பார்த்த நினைவலைகள். ராமர் பாதம், பொன்னியின் செல்வனில் வரும் குழகர் கோவில் (அங்கெல்லாம் போயிருந்தேன்).......

    ReplyDelete
  11. கோடியக் எக்ஸென்ட்ரிக்கான,தைரியமான பூங்குழலிதான் நினைவுக்கு வருகிறாள். அங்கு விலங்குகள் சரணாலயமும், பறவைகள் சரணாலயமும் இருப்பது உங்களால்தான் தெரிய வந்தது. நல்ல தகவல்களுகக்கு நன்றி.

    ReplyDelete
  12. அரிய தகவல்கள் தந்த முனைவர் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  13. அரிய தகவல்களுடன் புகைப்படங்கள்,
    அறுபதுகளில் சென்றிருக்கிறேன்
    மீண்டும் காணும் ஆவலைத் தூண்டியது.
    பதிவுக்கு நன்றி

    ReplyDelete
  14. வணக்கம் சகோதரரே

    அருமையான தகவல்கள். படங்கள் அழகாக இருக்கிறது. நீங்கள் சொல்வதை படிக்கும் போது அங்கெல்லாம் சென்று இயற்கை வனப்பையும், பறவைகள் சரணாலயத்தையும் கண்டு களிக்க மனது ஆசைப்படுகிறது. தங்கள் பதிவில் அழகாக படிக்க நேர்ந்தது குறித்து மகிழ்வுற்றேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  15. கோடியக்கரையா, கோடிக்கரையா-- எது சரி?..

    ReplyDelete
    Replies
    1. இரு முறைகளிலும் அழைக்கின்றார்கள்.

      Delete
  16. கோடியக்கரை என்ற தலைப்பைப் பார்த்ததும் எனக்கும் கல்கி அவர்களும் பொன்னியின் செல்வனும் (புதினமும்)
    தான் டக்கென்று நினைவுக்கு வந்தார்கள். அந்தளவுக்கு சில விஷயங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கின்றன.

    ReplyDelete
  17. வணக்கம். கல்கி அந்தக் காலத்துக் கோடியக்கரையை வர்ணித்தார்.தாங்கள் இக்காலத்துக் கோடியக்கரையை தக்க படங்களுடன் கண்முன்னர் காட்டினீர்கள்.குழகரை தரிசித்தீர்களா?

    ReplyDelete
  18. தரிசித்தேன். மறக்கமுடியாத வகையில் அமைந்த தரிசனம்.

    ReplyDelete
  19. தகவல்களும் படங்களும் அருமை. இருக்கையில் அமர்ந்துகொண்டே சுற்றுலா சென்று வந்தேன். நன்றி.

    ReplyDelete
  20. Excellent Message sir
    Very motivational write up.

    ReplyDelete
  21. நாகபட்டிணம் பகுதிக்கு நான் இன்னமும் சென்றதில்லை. செல்ல வேண்டும் என்ற எண்ணமுண்டு.

    ReplyDelete
  22. தகவல்களும் படங்களும் அருமை! நல்ல தகவல்களுகக்கு நன்றி!

    ReplyDelete
  23. நேரில் சென்று காணத் துாண்டும் பதிவு. அருமை ஐயா

    ReplyDelete