முகப்பு

16 February 2019

நாலாயிர திவ்யப் பிரபந்தம் : திருவிருத்தம் : நம்மாழ்வார்

நம்மாழ்வார் அருளிய திருவிருத்தத்தினை (2478-2577) அண்மையில் நிறைவு செய்தேன். அவற்றில் சில பாடல்களைப் பொருளுடன் காண்போம். 



பொய்ந் நின்ற ஞானமும், பொல்லா ஒழுக்கும், அழுக்கு உடம்பும்
இந் நின்ற நீர்மை இனி யாம் உறவாமை உயிர் அளிப்பான்,
எந் நின்ற யோனியுமாய், பிறந்தாய்! இமையோர் தலைவா!
மெய் நின்று கேட்டருளாய், அடியேன் செய்யும் விண்ணப்பமே. (2478)
எல்லா உயிர்களையும் பாதுகாப்பதற்காகப் பலவகைப்பட்ட பிறப்புகளையும் உடையவனாய் திரு அவதரித்தவனே! தேவர்களுக்குத் தலைவனே! பொய்ம்மை நிலைபெற்ற அறிவுடம, தீய நடத்தையும் அசுத்தங்களோடு கூடிய உடலும் (ஆகிய இவற்றோடு) இவ்வண்ணமான இயல்பை (பிறப்புத் துன்பத்தை) இனிமேல் நாங்கள் அடையாதபடி உனது அடியவனாகிய நான் சொல்லும் உண்மையான விண்ணப்பத்தை நின்று நீ கேட்டருள வேண்டும்.

மேகங்களே! உரையீர் - திருமால் திருமேனி ஒக்கும்
யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர்? உயிர் அளிப்பான்
மேகங்கள் எல்லாம் திரிந்து, நல் நீர்கள் சுமந்து ;  நும் தம்
ஆகங்கள் நோவ வருந்தும் தவமாம் அருள் பெற்றதே? (2509)
மேகங்களே! திருமகள் கணவனான பெருமானது திருமேனியை ஒக்கும் படியான உபாயங்களை நீங்கள் எவ்விதத்தில் அடைந்தீர்கள்? அது பற்றிச் சொல்லுங்கள். உலகத்து உயிர்களைப் பாதுகாக்கும் பொருட்டு நீங்கள் நல்ல தண்ணீரைச் சுமக்கிறீர்கள். பெரிய வானங்களிலெல்லாம் திரிந்து உங்களுடய உடம்பு நோகும்படி வருத்தித் தவம் செய்தீர்களோ? ஆதனால் அப்பெருமானது அருளை நீங்கள் பெற்றீர்களோ?

மெல்லியல் ஆக்கைக் கிருமி, குருவில் மிளிர் தந்து ஆங்கே
செல்லிய செல்கைத்து :  உலகை என் காணும்? என்னாலும் தன்னைச்
சொல்லிய சூழல் திருமால் -  அவன் கவியாது கற்றேன்;
பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோ உண்டு, பண்டு பண்டே. (2525)
மென்மையான உடலை உடைய புழுவானது புண்ணிலே வெளிப்பட்டு, அவ்விடத்திலேயே நடமாடும்படியான இயல்பை உடையது. அது உலக இயல்பை, நடத்தையை எங்ஙனம் அறியும்? (அறியமாட்டாது. அதுபோல) என்னைக் கொண்டு பெருமானான தன்னைப் பாடுவித்த சூழ்ச்சியை உடைய திருமகள் கேள்வனுடைய புகழுரையை நான் யாதென்று அறிவேன்? பல்லியின் சொல்லையும் (பின் நிகழ்ச்சியை முன்குறிக்கும்) சொல்லாகக் கொள்வது மிகப் பழைய காலம் தொடங்கி நடந்து வருவதன்றோ?

இடம் போய் விரிந்து இவ் உலகு அளந்தான் எழில் ஆர் தண் துழாய்,
வடம் போது இனையும் மட நெஞ்சமே! நங்கள் வெள் வளைக்கே
விடம் போல் விரிதல் இது வியப்பே - வியன் தாமரையின்
தடம் போது ஒடுங்க மெல் ஆம்பல் அலர்விக்கும் வெண் திங்களே. (2553)

மடப்பக் குணமுடைய நெஞ்சமே!  எம் பெருமான் எல்லா இடங்களிலும் போய் வளர்ந்து இவ்வுலகத்தை அளந்துகொண்டவனுடைய குளிர்ந்த திருத்துழாய் மாலைக்கு நீ வருந்துகிறாய். தாமரை குவியவும் மென்மையான ஆம்பல் மலரவும் வரும் வெண்மையான சந்திரனை நம் வெளுத்த வளைகளைக் கழலச் செய்வதை நோக்கமாக உடையவன். அதற்காகவே தன் ஒளியை விஷம்போலப் பரவச் செய்கிறான். இது ஒரு ஆச்சரியமே!

ஈனச் சொல் ஆயினும் ஆக, எறி திரை வையம் முற்றும்
ஏனத்து உருவாய் இடந்த பிரான், இருங் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லா எவர்க்கும்
ஞானப் பிரானை அல்லால், இல்லை நான் கண்ட நல்லதுவே. (2576)

நான் வெளியிடுகிற பேச்சு சிலரால் பழிக்கப்படும் சொல்லாக இருந்தாலும் இருக்கட்டும். என் இதயத்தைக் கவர்ந்த பெருமானாகிய ஞானப்பிரான் பிரளய வெள்ளத்தில் ஆழ்ந்த பூமியை கோட்டால் குத்தி எடுத்து வந்தவன்...அவனே என் நாயகனாவான். கற்பக மரங்கள் பொருந்திய சொர்க்கத்தில் பொருந்திய தேவர்களுக்குத் தலைவன் அவனே. மேலும் மனிதர்களுக்கும் நரகர் முதலியவர்களுக்கும் ஞானத்தைக் கொடுக்கும சுவாமி அவனே ஆவான். அந்த எம்பெருமானே அன்றி நானறிந்த நல்ல பொருள் வேறு இல்லை.

நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் : தொகுதி 3
உரையாசிரியர் :  முனைவர் இரா.வ.கமலக்கண்ணன்
வர்த்தமானன் பதிப்பகம், 21, இராமகிருஷ்ணா தெரு, தியாகராய நகர், 
சென்னை 600 017, முதற்பதிப்பு 2011
தொலைபேசி : 99418 63542, 90949 63125, 93806 30192, 2814 4995, 2814 0347,
43502995

இதற்கு முன்னர் நாம் வாசித்தது: திருமழிசையாழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி

8 comments:

  1. அருமையான விளக்கங்கள்.

    ReplyDelete
  2. நல்லதொரு பகிர்வு, நல்லதொரு அறிமுகம்.

    ReplyDelete
  3. நல்ல பாடல்களைப் பகிரிந்துகொண்டிருக்கிறீர்கள்.

    /திருமால் திருமேனி ஒக்கும் யோகங்கள்//
    இந்த மாதிரி அழகிய வரிகளை, இடம் கருதி முனைவர் கமலக்கண்ணன் அவர்கள் புத்தகத்தில் விளக்கவில்லை. ஓரளவு பாடலுக்குப் பொருள் தெரியும்படித்தான் புத்தகம் தொகுக்கப்பட்டுள்ளது. இது ஒரு குறைதான்.

    ReplyDelete
  4. விளக்கங்கள் மிகவும் அருமை ஐயா...

    ReplyDelete
  5. நல்ல பாடல்கள். தேர்ந்தெடுத்துப் பகிர்ந்துள்ளீர்கள். எளிமையான விளக்கம்.

    ReplyDelete
  6. Dear Dr
    excellent explanations to read

    ReplyDelete
  7. நாலாயிர திவ்ய பிரபந்தம் சுருக்கி எழுதலாமோ

    ReplyDelete
  8. விளக்கம் தந்தது நன்று

    ReplyDelete