12 January 2019

நாலாயிர திவ்யப் பிரபந்தம் : நான்முகன் திருவந்தாதி : திருமழிசையாழ்வார்

திருமழிசையாழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதியை (2382-2477) அண்மையில் நிறைவு செய்தேன். அவற்றில் சில பாடல்களைப் பொருளுடன் காண்போம். 



இன்று ஆக, நாளையே ஆக, இனிச் சிறிது
நின்று ஆக, நின் அருள் என்பாலதே ; நன்றாக
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் ; நாராயணனே!
நீ என்னை அன்றி இலை. (2388)
நாராயணனே! இன்றைக்காகவும், நாளைக்காகவும், இன்னம் சிறிது காலம் கழித்தாகவும் (என்றைக்கானாலும்) உன்னுடைய அருள் என்மீது ஏறிப்பாய்ந்தே தீரக்கடவது ஆம். நிச்சயமாக நான் உன்னை ஒழியப் புகலில்லாதவன் காண். நீயும் என்னைத் தவிர வேறொரு அடியனை உடையை அல்லை காண்.

ஆல நிழற்கீழ் அறநெறியை நால்வர்க்கு
மேலை யுகத்து உரைத்தான் மெய்த் தவத்தோன் - ஞாலம்
அளந்தானை, ஆழிக் கிடந்தானை, ஆல்மேல்
வளர்ந்தானைத் தான் வணங்குமாறு. (2398)
மெய்யான தவ நெறியையுடையவனான சிவன், உலகளந்தவனும், பாற்கடல் பள்ளிகொண்டவனும், ஆலிலைமேல் வளர்ந்தவனுமான பெருமானைத் தான் வழிபடும் நெறியாகிய நல்வழியை முன் யுகத்திலே ஓரால மரத்தின் நிழலிலே நான்கு முனிவர்களுக்கு உபதேசித்தான்.

கதைப் பொருள் தான் கண்ணன் திரு வயிற்றின் உள்ள 
உதைப்பளவு போதுபோக்கு இன்றி - வதைப் பொருள்தான்
வாய்ந்த குணத்துப் படாதது ; அடைமினோ
ஆய்ந்த குணத்தான் அடி. (2413)
உலகத்தில் விவரிக்கப்படுகின்ற பொருள்கள் யாவும் ஒரு நிமிட காலமும் ஓயாமல் எப்போதும் எம்பெருமானுடைய சங்கல்பத்தினால் பயனை அடைந்துள்ளன. (அப்படிப்பட்ட பெருமானுடைய) திருக்கலியாண குணங்களில் ஈடுபடாத பொருள் பயனற்றதே ஆகும். ஆகையால் சிறந்த திருக்குணங்களை உடைய அப்பெருமானின் திருவடிகளைப் பணியுங்கள்.

பதிப் பகைஞர்க்கு ஆற்றாது, பாய் திரை நீர்ப் பாழி,
மதித்து அடைந்த வாள் அரவம் - தன்னை - மதித்து அவன் தன்
வல் ஆகத்து ஏற்றிய மா மேனி மாயவனை
அல்லாது, ஒன்று ஏத்தாது, என் நா. (2455)
பகையான பெரிய திருவடிக்கு அஞ்சிக கடல் போலக் குளிர்ந்த திருப்படுக்கையைப் புகலிடமாக நம்பி வந்து பற்றிய பாம்பாகிய சுமுகனை ஆதரித்து அந்தக் கருடனுடைய வலிய உடலிலே ஏறவிட்டவனும், சிறந்த திவ்விய மங்கள விக்கிரகத்தை (திருமேனி) உடையவனுமான எம்பெருமானைத் தவிர வேறொன்றை எனது நாவானது தோத்திரம் செய்யாது.

இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் ; 
இனி அறிந்தேன் எம் பெருமான்! உன்னை  -  இனியறிந்தேன்
காரணன் நீ ; கற்றவை நீ ; கற்பவை நீ ; நல் கிரிசை
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான். (2477)
எம்பெருமானே! உன்னைச் சிவனுக்கும் பிரமனுக்கும் தெய்வமாக இப்போது திடமாகத் தெரிந்துகொண்டேன். எல்லா உலகங்களுக்கும் காரணபூதன் நீ! இதற்கு முன்பு அறியப்பட்ட பொருள்களெல்லாம் நீ! (என்கிற இதனையும்) இனி அறிந்தேன். கரரணமற்ற முறையில் பாதுகாப்பதையே நல்ல தொழிலாக உடையவனான நாராயணன் நீ என்பதை நான் நான்றாகத் தெரிந்துகொண்டேன்.


நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் : தொகுதி 3
உரையாசிரியர் :  முனைவர் இரா.வ.கமலக்கண்ணன்
வர்த்தமானன் பதிப்பகம், 21, இராமகிருஷ்ணா தெரு, தியாகராய நகர், 
சென்னை 600 017, முதற்பதிப்பு 2011
தொலைபேசி : 99418 63542, 90949 63125, 93806 30192, 2814 4995, 2814 0347,

10 comments:

  1. விளக்கவுரையோடு தந்தது படிப்பதற்கு ரசனையாக இருந்தது.

    ReplyDelete
  2. சிறப்பாக இருக்கிறது...ஐயா

    கீதா

    ReplyDelete
  3. சிறப்பான பாடல்கள். பொருள் உடன் படிக்க ஆனந்தம். பகிர்வுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  4. அருமை அய்யா தொடர்கிறேன்

    ReplyDelete
  5. அளப்பரிய தொண்டு! சிறக்க வாழ்த்துகள்.

    ReplyDelete

  6. உள்ளம் உயர்வுறும்
    உன்னதமிகு பொரூளழகை

    எண்ணத்தில் ஏற்றினீர்
    எழில் விளக்காக ஏந்தலே! -புதுவை இரா.வேலு

    ReplyDelete
  7. மிக நன்றி முனைவர் ஐயா. இன்றைய பொழுது நன்றே விடிந்தது.

    ReplyDelete
  8. எனக்கு பழங்கால தமிழ் இலக்கியங்களைப் பற்றி கேட்கும் போது வாசிக்கும் போது இதுஎப்படி இந்த தலைமுறை மக்களிடம் போய்ச் சேரும்? என்ற கேள்வி தான் தோன்றிக் கொண்டே இருக்கின்றது. 1990 க்குப் பிறகு பிறந்தவர்கள் இன்றைய ஆங்கில வழி பள்ளிக்கூட ஆசிரியர்கள். அவர்களுக்கு வெளியுலக அனுபவம் முழுமையாக தெரிந்தவர்கள் இது போன்ற இலக்கிய சுவை அறிந்தவர்கள் என்பதைப் பார்த்தால் நூறில் பத்துப் பேர்கள் தேறுவார்களா? என்பதே சந்தேகம் தான். வாழ்க்கை வட்டத்தில் மீண்டும் இது போன்ற காவியங்கள் எழுச்சிப் பெறும் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  9. அருமையாக உள்ளது.

    ReplyDelete