முகப்பு

13 April 2019

திரு சிலம்பொலி செல்லப்பன் (1929-2019)

தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பொறுப்பாகவும், பதிப்புத்துறை இயக்குநர் பொறுப்பாகவும் திரு சு.செல்லப்பன் அவர்கள் இருந்த காலகட்டத்தில், 16 ஆகஸ்டு 1982இல் பணியில் சேர்ந்தேன். பணியில் சேர்ந்தபோது ஆங்கிலத்தட்டச்சு உயர்நிலை, தமிழ்த்தட்டச்சு உயர்நிலை, ஆங்கிலச்சுருக்கெழுத்து கீழ்நிலை ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருந்தேன். நாடறிந்த தமிழறிஞரான அவரிடம் சுருக்கெழுத்துத்தட்டச்சராகப் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாததாகும். பதிவாளர் பிரிவில் வேலை பார்த்த எனக்கு பதிப்புத்துறையின் பொறுப்புகளையும் தந்தார். முதல் துணைவேந்தர் முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம் அவர்களின் காலம் என்ற நிலையில் மூவர் செய்யவேண்டிய பணிகளை ஒருவரே அப்போது செய்வோம். அன்பு, நட்பு, பரிவு என்று பணியாளர்களிடம் மிகவும் அணுக்கமாகப் பழகுவார். தட்டிக்கொடுத்து வேலை வாங்குவார். "ஜம்புலிங்கம் தட்டச்சு செய்தால் அதில் தட்டச்சுப்பிழையே இருக்காது" என்பார். என் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துப் பணியையும், ஆங்கிலக் கடித வரைவுகளையும் வெகுவாகப் பாராட்டியவர்.


 

தமிழ்ப்பல்கலைக்கழக அரண்மனை வளாகம் 

தமிழே அவருடைய பேச்சாகவும், மூச்சாகவும் இருந்தது. பணிக்காலத்தில் நடந்த சில நிகழ்வுகள் இன்றும் நினைவில் உள்ளன. கட்டுரைகள், அணிந்துரைகளை அவர் பக்கத்தில் அமர்ந்துகொண்டு சொல்லச்சொல்ல, அதற்கு ஈடாகத் தட்டச்சு செய்வேன். அப்போது கடைபிடித்த நுணுக்கங்கள் பலவாயினும் சிலவற்றைக் காண்போம். 
  • அவர் சொல்வதில் விடுபான்றி, அதே சமயம் மறுபடியும் கேட்காமல் (ஒரே முறை கேட்பதை உள்வாங்கி) தட்டச்சிடுவேன்.
  • தட்டச்சு செய்துகொண்டிருக்கும்போதே ஒற்றை மேற்கோள், இரட்டை மேற்கோள் போன்றவற்றையும் விடுபாடின்றி செய்வேன். 
  • தடித்த எழுத்தில் சொல் அமைய வேண்டும் நிலையில் தட்டச்சுப்பொறியில் அவ்வசதி இல்லாத நிலையில் அடிக்கோடிடுவேன். 
  • உரைநடைப்பகுதியின் இடையே கவிதையோ, செய்யுளோ வரும்போது அதனை வேறுபடுத்திக்காட்ட உள்ளே தள்ளி தட்டச்சிடுவேன். 
  • என்னைப்போல அப்போது என்னைப்போல அவ்வாறு தட்டச்சு செய்தவர்கள் அப்போது திரு நடராஜன், திரு உதயகுமார், செல்வி விமலா கிறிஸ்டபெல் ஆகியோர். 
பணியில் சேர்ந்த சில நாள்களில் சிந்துவெளிக்கருத்தரங்கு நடத்தும் முழுப்பொறுப்பினையும் தந்ததோடு, பணி நிறைவுற்றதும், கருத்தரங்கப்பொறுப்பாளர் வரலாற்றறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் முன்பாக அதிகம் புகழ்ந்து கூறினார்.

ஆரம்ப காலத்தில் தமிழிலும், ஆங்கிலத்திலும் மாறி மாறி சுற்றறிக்கைகள் அனுப்புவோம். அவ்வகையில் நான் பணியில் சேர்ந்த இரண்டாவது வாரத்தில் ஆங்கிலத்தில் ஒரு சுற்றறிக்கையின் வரைவினைத் தயாரிக்கும் பொறுப்பில் பிறருடன் நானும் இணைந்திருந்தேன். அது பணியில் சேர்ந்தவர்களுக்கான பணிப்பங்கீடு தொடர்பான கடிதமாகும். அந்தப் பட்டியலில், பதிவாளரின் தட்டச்சுச்சுருக்கெழுத்தராக,  என் பெயரே முதலிடத்தில் இருந்ததை பெருமையாக நினைவுகூர்கிறேன். உயர் அலுவலர்களோ, ஆசிரியர்களோ இல்லாத நிலையில் அவர்களின்கீழ் பணியாற்றுகின்ற சுருக்கெழுத்தர்கள், செயலாளர்கள் போல அந்தந்தப் பிரிவினை கட்டுப்பாடாக வைத்திக்கவேண்டும் என்ற பொருளில் அப்போது சுருக்கெழுத்துத்தட்டச்சர்களாக இருந்த எங்களுக்கு அனுப்பப்பட்ட அக்கடிதத்தில் கையெழுத்திட்டபின் இவ்வாறான ஒரு கடிதம் ஆங்கிலத்தில் உள்ளதே, இனி இதுபோன்ற கடிதங்கள் தமிழில்தான்இருக்கவேண்டும் என்று எங்களையெல்லாம் அழைத்துக்கூறியது இன்னும் நினைவில் உள்ளது



நான் பணியில் சேர்ந்த முதல் வாரத்தில் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் வெளிவரவுள்ள ஆங்கிலக்காலாண்டு ஆய்விதழான தமிழ் சிவிலிசேசன் தொடர்பாக வட இந்தியாவிலிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. அக்கடிதத்திற்கு உரிய மறுமொழியினை தட்டச்சிட்டுக் கொண்டுவரும்படி கூறினார். எவ்விதத் தவறுமின்றி அதனை நான் தட்டச்சிட்டு அவரிடம் கொடுத்தேன். மற்றொரு சிறப்பு இக்கடிதம் நீண்ட சொற்றொடரைக்கொண்டிருந்தது. என் நினைவிலிருந்து.... "While acknowledging with thanks the receipt of your letter cited above we wish to state that the quarterly research journal of Tamil University, Tamil Civilization, is in print and would be sent to you in due course, for which the relevant details regarding the subscription rates is enclosed for ready reference". வரைவு தட்டச்சிடாமல் நேரடியாகவே கையொப்பமிடும் அளவு இருந்ததாகக் கூறி என்னைப் பாராட்டியதோடு, பிற சக பணியாளர்களை அழைத்து ஆங்கிலக்கடிதங்கள் இவ்வாறு தட்டச்சிடப்படவேண்டும் என்றார். 

தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்வதற்கு முன்னரே பிற தனியார் நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் என் திறமைகளை வெளிப்படுத்த உதவியாக அமைந்ததோடு என்னை மென்மேலும் மேம்படுத்திக்கொள்ள உதவியாக இருந்தது. பிற்காலத்தில் நான் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டபோது ஆய்வுக்கட்டுரைகளை எழுதுவதற்கும், பிற மொழிபெயர்ப்புக்கட்டுரைகளைத் தற்போது எழுதுவதற்கும் இவரிடமும், இவரைப்போன்ற அறிஞர்களிடமும் பணியாற்றியபோது இடப்பட்ட அடித்தளமே என்பதை நன்கு உணர்கிறேன்.

என்னைப் போன்றோருக்கும் அவரின் பிரிவு ஒரு பேரிழப்பே.

12 comments:

  1. தங்களின் திறமை வியக்க வைக்கிறது ஐயா...

    வாழ்த்துகள் ஐயா...

    ReplyDelete
  2. (Lower) என்பதனை கீழ்நிலை என்று மொழி மாற்றம் செய்வதற்கு பதில் வேறு எப்படி குறிப்பிடலாம் என்று யோசனை ஓடியது.

    உழைத்தவர்களுக்குத் தான் உழைப்பின் அருமையும் அது பற்றிப் பெருமையும் கொள்ள முடியும் என்பது அடிப்படை உண்மை. மற்றவர்கள்? அதிர்ஷ்டத்தின் நிழலில் ஒதுங்கிக் கொள்வர்.

    தங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள், ஐயா.



    ReplyDelete
  3. பிரமிக்கத்தக்க விடயங்களை தந்து பலருக்கும் பயனுள்ள அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

    (1929-2019) //என்னைப் போன்றோருக்கும் அவரின் பிரிவு ஒரு பேரிழப்பே//

    ???

    ReplyDelete
  4. ஒரு உன்னதமான மனிதருடன் உங்களுக்குக் கிடைத்த அனுபவங்களை இங்கே பகிர்ந்தது சிறப்பான அஞ்சலி.

    ReplyDelete
  5. தமிழ் அறிஞர்களின் சிறப்புகள் பின்புலத்திற்குத் தள்ளப் படாமல் முன்னிலைப் படுத்தப்பட வேண்டும். அதுவே மொழி அறிஞர்களுக்கு நாம் செலுத்துகிற மரியாதையாக அமையும்.

    ReplyDelete
  6. உயரிய அறிஞருடனான அனுபவனளைப் பகிர்ந்தமை அவரைச் சிறப்பித்ததும் மிக சிறப்பான அஞ்சலி

    ReplyDelete
  7. பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய உன்னதமான நினைவுகள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. மறக்க இயலா நினைவுகள் ஐயா

    ReplyDelete
  9. நீங்கள் கொடுத்து வைத்தவர். மாமனிதருடன் இணைந்து பணியாற்ற வாய்ப்புக் கிட்டியதே. இது ஒரு வரலாற்றுப் பதிவாகும்.

    ReplyDelete
  10. பணிக்கால நினைவுகளில் திரு சிலம்பொலி செல்லப்பாவின் நினைவுகளும் நன்றாக எடுத்து காட்டப்பட்டு உள்ளது

    ReplyDelete
  11. மிக அருமையான நினைவலைகள். அன்னாரது மறைவுக்கு அஞ்சலிகள்.

    ReplyDelete
  12. என்ன தவம் செய்தீர்களோ? மகத்தான பணி.அருமையான பதிவு. நன்றி

    ReplyDelete