முகப்பு

28 March 2020

தமிழகத்தின் முன்னணி நூலகங்கள் : முனைவர் கே.செந்தில்நாயகம், முனைவர் எஸ்.ஏ.சம்பத்குமார்

கும்பகோணம் மருதம் கலை இலக்கிய ஆய்வு மையம் 16.2.2020இல் நடத்திய பன்னாட்டுக்கருத்தரங்கில் நூலை வெளியிட்டு, கருத்தரங்கில் கலந்துகொண்ட ஆய்வாளர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் வாய்ப்பினைப் பெற்றேன். மருதம் அமைப்பிற்கும், நூலாசிரியர்களுக்கும் நன்றி.



மருதம் கலை இலக்கிய ஆய்வு மையம் நடத்தும் “சமய இலக்கியங்களில் வாழ்வியல் நெறிகள்” என்ற கருத்தரங்கில் கலந்துகொள்ள வாய்ப்பளித்த  பொறுப்பாளர்களுக்கு என் நன்றி. ஐந்திணைகளில் ஒன்றான மருதத்தின் பெயரைக் கொண்டு அமைந்துள்ள இந்த மையம் கல்வி முன்னேற்றத்திற்காகவும், சமுதாய மேம்பாட்டிற்காகவும் அரிய பணிகளைச் செய்து வருவதோடு பேராசிரியர் பெருந்தகை, ஆசிரியர் பெருந்தகை என்ற விருதுகளையும் வழங்கிவருகிறது. அவ்வப்போது கருத்தரங்குகளை நடத்தி பதிவுகளை ஆவணப்படுத்தும் வகையில் 2019இல் “சோழ மண்டலப் படைப்பாளர்கள்” என்ற நூலினை வெளியிட்டுள்ளது.

தற்போது “சமய இலக்கியங்களில் வாழ்வியல் நெறிகள்” என்ற தலைப்பில் பன்னாட்டுக்கருத்தரங்கினை நடத்தி கட்டுரைகளைத் தொகுப்பாக வெளியிடுகிறது. முனைவர் கே.செந்தில்நாயகம், முனைவர் எஸ்.ஏ.சம்பத்குமார் இணைந்து எழுதியுள்ள “தமிழகத்தின் முன்னணி நூலகங்கள்” (Pioneering Libraries in Tamil Nadu) என்ற ஆங்கில நூலையும் வெளியிடுகிறது. இந்நூலைப் பற்றிய கருத்துகளைப் பகிர்வதில் மகிழ்கிறேன். 



அச்சு உலகைத் தாண்டி நூல்கள் மின்னூல் வடிவம் பெற்று வருகின்ற இந்த காலகட்டத்தில் அச்சு வடிவில் வெளியாகின்ற நூல்களைப் படிப்போரும் இருந்துவருவதைக் காணமுடிகிறது. இச்சூழலில் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இந்த நூல் வெளியாவது இத்துறை சார்ந்தோருக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் ஐயமில்லை. இந்நூல் தமிழகத்தில் உள்ள குறிப்பிடத்தக்க  நூலகங்களைப் பற்றிய பறவைப்பார்வையைக் கொண்டு அமைந்துள்ளது. கோயில் நூலகங்கள், ஆதீன மற்றும் மடத்தின் நூலகங்கள்,  மைய மற்றும் மாநில அரசின் நூலகங்கள், தனியார் நூலகங்கள் ஆகியவை அடங்கும். நூலகத்தில் உள்ள நூல்கள், இதழ்கள், மைக்ரோபிலிம், டிஜிட்டல் வடிவம், பிரெய்லி, குறுந்தகடுகளின் எண்ணிக்கை, நூல்களின் பொருண்மை, வாசகர்களுக்கான வசதி, உறுப்பினர் ஆவதற்கான முறை, நூலகத்தின் பணி நேரம் போன்ற விவரங்கள் திரட்டித் தரப்பட்டுள்ளன. நூல்கள் மட்டுமன்றி செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், கையெழுத்துப்படிகள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றைப் பற்றிய விவரங்களும், நூலகத்தின் தொடக்கம், வளர்ச்சி நிலை, நூலகம் மென்மேலும் வளர்வதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் என்ற வகையிலான விவரங்களும் இந்நூலில் உள்ளன. ஆங்காங்கே வாசிப்பு மற்றும் நூலகத்தின் முக்கியத்துவம் குறித்த ஆன்றோர்களின் மேற்கோள்கள் பெட்டிச்செய்திகளாகத் தரப்பட்டுள்ளன. சில நூலகங்களின் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. குறிப்பிட்ட நூலகத்தின் பொதுக்கூறுகளும், சிறப்புக்கூறுகளும் பொருத்தமான இடங்களில் உள்ளன.

கோயில் நூலகங்களாக தற்போது இயங்கி வருகின்ற 1878இல் வெளியான ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்னம் உள்ளிட்ட அரிய நூல்களைக்கொண்ட திருவரங்கம் கோயில் நூலகம்;  சிதம்பரம் கோயிலில் உள்ள பாண்டியர் கல்வெட்டினையும், திருநெல்வேலி மாவட்ட சேரன்மாதேவியில் உள்ள கல்வெட்டினையும் அடிப்படையாகக் கொண்டமைந்த, 13ஆம் நூற்றாண்டில் சிதம்பரம் கோயிலில் சுப்ரமணியர் சன்னதிக்கு வடபுறம் இருந்த சரஸ்வதி பண்டாரம்;

சுவடிகள் நூலகங்களாக காலின் மெக்கன்சி, லேடன், சி.பி.பிரௌன் உள்ளிட்டோரின் சுவடிகளைப் பாதுகாப்பதோடு கோயில் சுவர்கள் மற்றும் தூண்களில் உள்ள கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளின் படிகளைப் பாதுகாத்து, வெளியிட முயற்சி மேற்கொள்ளும் அரசினர் கீழ்த்திசைச்சுவடிகள் நூலகம்; சாமிநாதையர் சேகரித்த நூல்கள், அவர் தம் கைப்பட எழுதிய கடிதங்கள், நாட்குறிப்புகள், மற்றும் பதிப்பிற்காகக் காத்திருக்கின்ற கையெழுத்துப்படிகளைக் கொண்ட டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூலகம்; சுவடிகள், நூல்கள், ஓவியங்கள், வரைபடங்கள் பாதுகாப்பு. சுவடிகள் நூலாக்கும் முயற்சியினை மேற்கொண்டுள்ள தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகம்;

மடங்கள் மற்றும் ஆதீனங்களின் நூலகங்களாக தம்பிரானின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவிய செப்பேடு உள்ளிட்ட, 14ஆம் நூற்றாண்டு கால செப்பேடுகள், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை படியெடுத்த காசி ரகசியத்தின் கையெழுத்துப்படி உள்ளிட்ட  ஓலைச்சுவடிகளைக் கொண்ட திருவாவடுதுறை ஆதீனம்; நூல்கள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், பல தமிழறிஞர்களின் கையெழுத்துப்படிகளைக் கொண்டு, ஆவணங்களைப் பாதுகாப்பவதோடு ஞானசம்பந்தம் இதழை வெளியிடும் தருமபுரம் ஆதீனம்;  நூல்கள், ஓலைச்சுவடிகள், 1654-1827 காலச் செப்பேடுகளைப் பாதுகாப்பதோடு, குமரகுருபரர் இதழை வெளியிடும் திருப்பனந்தாள் காசி மடம்

அரசு மற்றும் தனியார்  நூலகங்களாக ஆங்கில, பிரெஞ்சு செவ்வியல் நூல் முதல் பதிப்புகளைக் கொண்ட சென்னை இலக்கியக் கழகம்; இந்தியாவில் ஆங்கிலேயர்கள் நடத்திய போர்களைப் பற்றிய 1861 நூல், அகழாய்வு அறிக்கைகளைக் கொண்ட இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறை நூலகம்; இந்தியாவில் அதிக எண்ணிகையில் பௌத்த இலக்கிய சேகரிப்புகளைக் கொண்ட அடையாறு நூலகம் மற்றும் ஆய்வு மையம்; 1553ஆம் ஆண்டைச் சேர்ந்த நூல் முதல் பல அரிய நூல்களுடன், சென்னைவாசிகளை உறுப்பினர்களாகக் கொண்ட வார நாட்களில் 9.00- 7.30 வரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் 9.30-6.00 வரையும் இயங்கி, ஆண்டுக்கு மூன்று  தேசிய விடுமுறைகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட விழா நாள்களைக் கொண்ட கன்னிமாரா நூலகம்; ஆரம்ப காலத்தில் அரசு வெளியீடுகள், அறிக்கைகள், சில நூல்கள்.  நூலகத்தந்தை எஸ்.ஆர்.ரங்கநாதன் மாதம் ரூ.250 ஊதியத்தில் 1924இல் பணியில் சேர்ந்த பெருமையைக் கொண்ட, அவரால் நூலகப்பகுப்பில் அகரவரிசைக்குப் பதிலாக பொருண்மைக்கு ஏற்றவாறு புதிய உத்தியான கோலன் பகுப்பினைக் கொண்ட சென்னைப்பல்கலைக்கழக நூலகம்; ஆவணங்களின் படிகளை வழங்குதல். தனியாருக்குத் தேவைப்படும் முன்னோரின் பிறப்பு, இறப்பு, திருமணம், தேசியம் உள்ளிட்ட ஆவண படிகளைத் தேடி வழங்குவதோடு  ஆவணங்களைக் காத்து வரும்  தமிழ்நாடு ஆவணக்காப்பகம்;  ஆங்கில மொழி கற்பிப்பதோடு, தற்காலிக ஆங்கில இலக்கியம் தொடர்பாக காலாண்டிதழ் வெளியிட்டு வரும் பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம்; ஆசியாவின் இரண்டாவது பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகம்; காப்புரிமை தொடர்பான ஆவணங்களைக் கொண்டுள்ளதோடு, தகவல் மையமாகச் செயல்பட்டுவருகின்ற காப்புரிமை அலுவலக நூலகம் (பேடண்ட் ஆபீஸ் லைப்ரரி); ரோஜா முத்தையாவின் சேகரிப்புகள் உள்ளிட்ட நூல்களைக் கொண்டு,  ஆவணக்காப்பகமாக இயங்கிவருகிற ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் ஆகிய நூலகங்களைப் பற்றி இந்நூலில் விவாதிக்கப்பட்டுள்ளது.

நூலகங்களுக்கு இந்நூலாசிரியர்கள் நேரில் சென்று உரிய தகவல்களைத் திரட்டியும், பிற ஆதாரங்களைத் தொகுத்தும் அளித்துள்ள விதம் போற்றத்தக்க வகையில் அமைந்துள்ளது. பொதுமக்களுக்கும், ஆய்வாளர்களுக்கும், அறிஞர்களுக்கும், நூலகத்துறையினருக்கும் பயன்படும் வகையில்  மிகவும் நுணுக்கமான தகவல்களைக் கொண்டு அமைந்த இந்நூல் ஒவ்வொரு நூலகத்திலும் இடம் பெறவேண்டிய நூலாகும். பெருமுயற்சி மேற்கொண்டு அருமையான நூலை போதிய தரவுகளைத் திரட்டித் தந்துள்ள ஆசிரியர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். 

"சமய இலக்கியங்களில் வாழ்வியல் நெறிகள்" என்ற தலைப்பில் இதே நாளில் வெளியான கருத்தரங்கத் தொகுப்பினைப் பற்றிப் பிறிதொரு பதிவில் விவாதிப்போம்.  
நூல் : Pioneering Libraries in Tamil Nadu
ஆசிரியர்கள் : Dr K.Senthilnayagam (96987 64708, senthilavcauto@gmail.com)
Dr S.A.Sambathkumar (94436 77943, saskumar59@gmail.com)
பதிப்பகம் : Nakshatra Pathipagam, Kumbakonam
பதிப்பாண்டு : November 2019
விலை : Rs.100


மருதம் கலை இலக்கிய ஆய்வு மையம் நடத்தவுள்ள சித்திரைப்பெருவிழாவிற்கான பன்னாட்டுக் கவியரங்க அழைப்பிதழ். கவிதைகள் 30 ஏப்ரல் 2020க்குள் அனுப்பப்படவேண்டும். பிற விவரங்கள் அழைப்பிதழில் உள்ளன. ஆர்வம் உள்ளோர் கலந்துகொள்ள வேண்டுகிறேன். 


21 March 2020

ஏடகம் வரலாற்று உலா : 7 டிசம்பர் 2019

தஞ்சாவூரைத் தலைமையகமாகக் கொண்டு பல்துறைகளில் சாதனைகளைப் பதித்து வருகின்ற ஏடகம் மேற்கொண்டு வரும் அரிய பணிகளில் ஒன்று வளரும் இளைஞர்கள், மாணவர்களிடையே வரலாற்று ஆய்வுத்தேடலைப் பற்றிய எண்ணங்களை உருவாக்குவதும், பொதுமக்களிடையே வரலாற்று உணர்வினை மேம்படுத்துவதும், இத்தகைய விழிப்புணர்வினை உண்டாக்க தொல்லியல் தடம் தேடிச் செல்வதும் ஆகும். அவ்வகையில் 7 டிசம்பர் 2019 அன்று வரலாற்று உலா சிவகங்கை மற்றும் காரைக்குடி பகுதிகளுக்குச் சென்றோம். அப்போது கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டினைப் பற்றி முன்பொரு பதிவில் கண்டோம். அங்கு உலா சென்ற அனுபவத்தை இப்பதிவில் காண்போம்.


தஞ்சாவூரில் தெற்கு வீதியில் உள்ள ஏடகம் அலுவலகத்திற்கு அருகில் இருந்து எங்களது பயணம் ஆரம்பமானது. அங்கிருந்து கானாடுகாத்தான் அரண்மனையை நோக்கிச் சென்றோம். 


கானாடுகாத்தான் அரண்மனை, காரைக்குடி வட்டம், சிவகங்கை மாவட்டம்
தமிழ்நாட்டில் காரைக்குடி, பள்ளத்தூா், ஆத்தங்குடி மற்றும் கோதமங்களம் போன்ற பகுதிகளில் செட்டிநாடு வீடுகள் உள்ளன. அந்த வீடுகளை அரண்மனைகள் என்று கூறலாம். மிகுந்த வேலைப்பாட்டிற்கும், இறக்குமதி செய்யப்பட்ட உயா் வகை மரங்கள் மற்றும் கண்ணாடி வேலைப்பாடுகளுக்கும் அவை புகழ் பெற்றவையாகும். அவ்வகையில் முதலில் கானாடுகாத்தான் அரண்மனைக்குச் சென்றோம்.  கண்களுக்கு விருந்தாக, ஒரு பிரம்மாண்டத்தை அங்கு கண்டோம். அழகான நுழைவாயில். கடந்து உள்ளே சென்றதும் மேலே இரு புறமும் திண்ணைகள். உள்ளே பெரிய அறைகள், தாழ்வாரங்கள், முற்றங்கள், ஜன்னல்கள், பெரிய கதவுகள், தூண்கள், தரை, கூரை, மாடி என்று ஒவ்வொன்றும் வியப்பை உண்டாக்கின. அனைத்திலும் அழகான, நுணுக்கமான வேலைப்பாடுகளைக் காணமுடிந்தது. வெளிச்சமும், காற்றோற்றமும், தண்ணீர் வடிகால் அமைப்பும் இந்த அரண்மனையின் சிறப்புக்கூறுகளாகும். ஆளுயர கண்ணாடிகள், யானைத் தந்தங்கள், சிற்பங்கள், இயற்கை வண்ணங்களைக் கொண்ட ஓவியங்கள் ஒவ்வொன்றும் பிரமிப்பை ஊட்டுவனவாக உள்ளன. நூற்றாண்டை நெருங்கும் நிலையிலும் அந்த அரண்மனை மெருகு குலையாமல் இருப்பதைக் காணமுடிந்தது. அடுத்தபடியாக ஆத்தங்குடி அரண்மனைக்குச் சென்றோம்.      

ஆத்தங்குடி அரண்மனை, காரைக்குடி வட்டம், சிவகங்கை மாவட்டம்






இதுவும் சற்றொப்ப அதன் வடிவிலேயே உள்ளது. நுழைவாயில் தொடங்கி ஒவ்வொரு அமைப்பையும் ரசித்துக்கொண்டே சென்றோம்.   இந்த அரண்மனை சிறிய நுழைவாயிலைக் கொண்டு அமைந்துள்ளது. உள்ளே படிகளில் ஏறும்போது இரு பக்கங்களிலும் முற்றம் போன்ற அமைப்பு உள்ளது. அடுத்து இரு புறங்களிலும் பெரிய திண்ணைகள் காணப்படுகின்றன. தேக்கு மரத்தால் ஆன பெரிய கதவுகள் உள்ளன. கதவுகளில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த கதவுகளைக் கடந்து உள்ளே சென்றதும் அரண்மனையில் உள்ள தோற்றத்தைத் தருகின்ற பெரிய செவ்வக வடிவிலான அறை அமைந்துள்ளது. அதன் கோயிலின் அமைப்பைப் போன்ற கட்டுமானங்கள் காணப்படுகின்றன. மேல் கூரையில் ரசாயனக் கலவையைக் கொண்டு தீட்டப்பட்ட ஓவியங்கள் காணப்படுகின்றன. உள் பகுதியில் செல்லும்போது அங்கே நடுவில் முற்றம் போன்ற அமைப்பு உள்ளது. அதனைச்சுற்றி அமைந்துள்ள கூடத்தின் வலது மற்றும் இடது புறங்களில் பல சிறிய அறைகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு அறைக்கும் இடையே ஜன்னல்கள் காணப்படுகின்றன. ஜன்னல்களின் மேல் பகுதியில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. அடுத்த நிலையைத் தாண்டிச் செல்லும்போது அடுத்தள்ள தளத்திலும் இவ்வாறான அமைப்புகள் காணப்படுகின்றன. சுவற்றிலும், கூரையிலும், ஜன்னல்களிலும் பலவித ஓவியங்கள் உள்ளன. அடுத்தபடியாக எங்கள் பயணம் ஆத்தங்குடியில் உள்ள சிவன் கோயிலை நோக்கி அமைந்தது.

ஆத்தங்குடி மீனாட்சிசுந்தரேசுவரர் கோயில், காரைக்குடி வட்டம், சிவகங்கை மாவட்டம்

கோயிலுக்கு எதிரில் குளம் உள்ளது. ராஜ கோபுரத்தின் வலது புறத்தில் கணபதி சன்னதியும், இடது புறத்தில் தெண்டாயுதபாணி சன்னதியும் உள்ளன. ராஜ கோபுரத்தை அடுத்த உள்ளே செல்லும்போது அடுத்த நுழைவாயில் உள்ளது.  உள்ளே செல்லும்போது கொடி மரம், பலி பீடம், நந்தி ஆகியவை உள்ளன. அடுத்து தெற்கு நோக்கிய நிலையில் மீனாட்சி அம்மன் சன்னதி உள்ளது. சன்னதிக்கு முன்பாக துவாரபாலகிகள் உள்ளனர். அடுத்து பைரவர் சன்னதி உள்ளது. கருவறைக்கு செல்லும் முன்பாக வாயிலின் வலது புறத்தில் விநாயகர், இடது புறத்தில் முருகன் உள்ளனர். இரு புறங்களிலும் துவாரபாலகர்கள் உள்ளனர். திருச்சுற்றில் சூரியன், கணபதி, சோமாஸ்கந்தர், 63 நாயன்மார்கள் உள்ளிட்டோர், விஸ்வேசர் விசாலாட்சி, வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகம் (முன்பாக மயில், வேல்),  மலைமகள், திருமகள், கலைமகள், ஆகியோர் உள்ளனர். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார் ஆகியோர் உள்ளனர். செல்லும்வழியில் சொக்கலிங்கம்புதூர் என்னுமிடத்தில் ஆத்தங்குடி கற்கள் தயாரிக்கும் இடத்திற்குச் சென்றோம்.

சொக்கலிங்கம்புதூர், காரைக்குடி வட்டம்
அரண்மனையில் பதிக்கப்பட்ட கற்களைப் பற்றிப் பேசும்போது அங்கிருந்தோர் அக்கற்களில் ஒருவகையான கற்கள் அப்பகுதியைச் சேர்ந்த ஆத்தங்குடியில் தயாரிக்கப்படுவதாகக் கூறினர். எங்களின் அடுத்த இலக்கு அந்தக் கற்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம். நாங்கள் சென்ற பகுதியில் அக்கற்களைத் தயாரிக்கின்ற நிறுவனம் இருக்கும் இடத்தை அறிந்து அங்கு சென்றோம். இவ்வகையான கற்கள் சிமெண்ட், மணல், ஸிந்தட்டிக் ஆஃஸைடு போன்றவை கொண்ட செய்யப்படுகின்றன. சதுரக் கண்ணாடி ஒன்றின்மீது இரும்பால் செய்யப்பட்ட ஒரு கூட்டினை வைத்து அதில் தேவைப்படுகின்ற திரவ வடிவிலான வண்ணங்களை குறிப்பிட்ட இடைவெளியில் ஊற்றுகின்றனர். அதன் மேல் மணலைப் பொடியாகத் தூவி அனைத்து இடத்திற்கும் பரவும் வகையில் சலித்து, பின்னர் கலவையை இட்டு அதனைப் புரட்டிக் காண்பிக்கும்போது கண்ணாடி வழியாக அந்த டிசைன் தெரிகிறது. பின்பு அதனை நன்கு நீரில் ஊறவைத்து தேவைப்படும் நிலையில் கற்களை, கண்ணாடியிலிருந்து பிரிக்கின்றனர். இவ்வாறாக கல் முழு வடிவம் பெறுகிறது. வடிவமைத்து, பின் வெயிலில் காய வைக்கின்றனர். அக்கற்களில் உள்ள வேலைப்பாடுகள் அழகினைத் தருகின்றன. நாங்கள் இன்று பார்த்த இரு அரண்மனைகளிலும் இவை போன்ற கற்களைக் கண்டோம்.  ஆத்தங்குடி பகுதியில் உள்ளோர் தம் வீடுகளை மென்மேலும் அழகூட்ட இவ்வகைக் கற்களைப் பயன்படுத்துகின்றனர்.

மருதுபாண்டியர் கோட்டை, அரண்மனை சிறுவயல், காரைக்குடி வட்டம்



அடுத்து காளையார்கோயில் நோக்கி பயணத்தைத் தொடர்ந்தபோது செல்லும் வழியில் மருதுபாண்டியர் கோட்டை இருப்பதை அறிந்தோம்.  அரண்மனை சிறுவயல் என்ற இடத்தில் உள்ள அந்த அரண்மனை தற்போது தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் சீரமைக்கப்பட்டு வருவதைக் கண்டோம்.  கி.பி.18ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் மருது சகோதரர்கள் இந்த ஊரில் இருந்த அரண்மனையில் தங்கி ஆங்கிலேயருடன் போர் புரிந்ததாகவும், அதன் நினைவாக அந்த அரண்மனை மருதுபாண்டியரின் கோட்டை என்றழைக்கப்படுவதாகவும் அறிந்தோம். அக்காலக் கட்டுமானத்தில் பயன்படுத்திய கற்கள், அதன் அமைப்பு, தடிமன் போன்றவை அவை கோட்டைக்கே உரியவை என்பதை உணர்த்தின.

மருதுபாண்டியர் நினைவிடம்


மருது பாண்டியர் என்றழைக்கப்படுகின்ற மருது சகோதரர்கள் விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 17ஆம் நூற்றாண்டு இறுதிக்காலத்தில் ஆயுதம் தாங்கிப் போராடினர். ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற நிலையில் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள். காளையார்கோயில் இவர்களது களமாக அமைந்தது. கிழக்கிந்தியக் கம்பெனியாரால் 1801இல் இருவரும் தூக்கில் இடப்பட்டனர். அவர்களின் நினைவாலத்திற்குச் சென்றபோது அவர்களின் வீரத்தையும், தைரியத்தையும் அறிந்தோம். எங்கள் பயணத்தில் மறக்கமுடியாத இடமாக இவ்விடம் அமைந்தது.

சொர்ணகாளீஸ்வரர் கோயில், காளையார் கோயில் சிவகங்கை  மாவட்டம்



பொதுவாக ஒரு கோயிலில் ஒரு மூலவரும், அம்பாளும் இருப்பர். ஆனால் இக்கோயில் சற்றே வித்தியாசமானதாகும். இக்கோயிலில் சொர்ணகாளீஸ்வரர்-சொர்ணவல்லி, சோமேஸ்வரர்-சுந்தராம்பிகை, சுந்தரேஸ்வரர்-மீனாட்சி ஆகிய மூன்று இறைவன் சன்னதிகளைக் கொண்டு அமைந்துள்ள கோயிலாகும். ஞானசம்பந்தர் மற்றும் சுந்தரரால் பாடப்பெற்ற பெருமையுடையது இக்கோயில். சோமேஸ்வரர் சன்னதிக்கு எதிரே அமைந்துள்ள பெரிய கோபுரத்தில் நின்று பார்த்தால் மதுரைக் கோயிலின் கோபுரம் தெரியும் என்று கூறினர்.

திருக்கோஷ்டியூர் சௌம்ய நாராயணப்பெருமாள் கோயில், திருப்பத்தூர் வட்டம், சிவகங்கை மாவட்டம்


பயணத்தின் நிறைவாக திருக்கோஷ்டியூர் சென்றோம். 108 வைணவத்தலங்களில் ஒன்று என்ற சிறப்புடைய இக்கோயிலின் அஷ்டாங்க விமானம் ஓம் நமோ நாராயணாய எனும் மூன்று சொற்களை உணர்த்தும் விதமாக மூன்று தளங்களைக் கொண்டுதுள்ளது. விமானத்தின் கீழ் தளத்தில் நர்த்தன கிருஷ்ணரும்,  முதல் தளத்தில் ஆதிசேஷன் மீது சயனகோலத்தில் சௌம்ய நாராயணரும், இரண்டாவது தளத்தில் நின்ற கோலத்தில் தேவலோகபெருமாளும், மூன்றாம் தளத்தில் அமர்ந்த கோலத்தில் வைகுண்டப்பெருமாளும் உள்ளனர். இவ்வகையில் சுவாமி நான்கு நிலைகளில் இங்கிருந்து அருள்பாலிக்கிறார். திருக்கோஷ்டியூர் நம்பியிடம் எட்டெழுத்து மந்திர உபதேசம் பெறுவதற்காக ராமானுஜர் வந்தபோது, யார் எனக் கேட்க, நான் ராமானுஜன் வந்திருக்கிறேன் எனச் சொல்ல, நம்பி உள்ளிருந்தவாறே, நான் செத்து வா என்றார். தொடர்ந்து 17 முறை இவ்வாறு அதே பதிலைச் சொல்ல, அடுத்த முறை அடியேன் வந்திருக்கிறேன் என்று சொல்ல நம்பி, அவருக்கு ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரஉபதேசம் செய்தார்.  அத்தகைய பெருமையுடைய இக்கோயிலில் திருப்பணி நடைபெறுவதால் முழுமையாகச் சுற்றுப்பார்க்க முடியவில்லை. இருந்தாலும், புகழ்பெற்ற ஒரு கோயிலுக்குச் சென்ற மன நிறைவு ஏற்பட்டது.

அங்கிருந்து மன நிறைவுடன் தஞ்சாவூர் நோக்கித் திரும்பினோம். ஒரே நாளில் எங்களை இந்த இடங்களுக்கு அழைத்துச்சென்ற ஏடகம் நிறுவனர் முனைவர் மணி.மாறன் அவர்களுக்கும், உலாவின்போது துணைநின்ற ஏடகப்பொறுப்பாளர்கள் மற்றும் நண்பர்களுக்கு நன்றியைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.

நன்றி : விக்கிப்பீடியா, நாளிதழ் செய்திகள்









நன்றி : ஏடகம் இரண்டாவது ஆண்டு மலர் 2018-19

26 டிசம்பர் 2021இல் மேம்படுத்தப்பட்டது. 




14 March 2020

நாலாயிர திவ்யப் பிரபந்தம் : சிறிய திருமடல் : திருமங்கையாழ்வார்

திருமங்கையாழ்வார் அருளிய சிறிய திருமடலை (2673) அண்மையில் நிறைவு செய்தேன். அப்பாடலில் சில அடிகளைப் பொருளுடன் காண்போம். 



கார்ஆர் வரைக் கொங்கை, கண் ஆர் கடல் உடுக்கை,
சீர் ஆர் சுடர்ச் சுட்டி செங்கலுழிப் பேர் ஆற்றுப்
பேர் ஆர மார்வின் பெருமா மழைக் கூந்தல்
நீர் ஆர வேலி நிலமங்கை என்னும் இப்
பேரோர் சொலப்பட்ட மூன்று அன்றே -- ...
மேகங்கள் படிந்த மலைகளைத் தனங்களாகவும், விரிந்த கடலை உடையாகவும், ஒளிமயமான சூரியனைத் திலகமாகவும், சிவந்து கலங்கியுள்ள பெரிய ஆறுகளை ஆரங்களாகவும் அணிந்த மார்பை உடைய, பெரிய மேகமாகிய கூந்தலை உடையவளாய், நிறைந்த நீராகிய கடலை ஆடையாக உடையவளான பூமிப்பிராட்டியை அபிமான தேவதையாக உடைய உலகத்தார் சொல்லும் புருஷார்த்தங்கள் மூன்றே. (வீடு பேற்றை மறுக்கிறார்.)

...கட்டுரையா,
நீர் ஏதும் அஞ்சேல்மின்; நும் மகளை நோய்செய்தான்
ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனை நான்;
கூர் ஆர் வேல் கண்ணீர்; உமக்கு அறியக் கூறுகெனோ?
ஆரால் இவ் வையம் அடி அளப்புண்டது தான்
ஆரால இலங்கை பொடிப் பொடியா வீழ்ந்தது; மற்று
ஆராலே கன்-மாரி காத்ததுதான்--ஆழிநீர்
ஆரால் கடைந்திடப்பட்டது;...
கட்டுவிச்சி வாய்விட்டுக் கூறியது :  நீர் சிறிதும் அஞ்சவேண்டா. உங்களது பெண்ணுக்கு இந்த நோயைச் செய்தவன் வேறு ஒருவனுமல்லன். அவனை நான் அறிந்தேன். கூர்மை மிக்க வேல் போன்ற கண்ணுடைய மங்கையரே! கேளுங்கள். நீர் அறியுமாறு சொல்கிறேன். இந்த வையகம் யாரால் அடியளக்கப்பட்டது? யாரால் இலங்கை பொடிப்பொடியாய் அழிந்தது? கல்மழை யாரால் தவிர்க்கப்பட்டது? கடல் நீர் யாரால் கடையப்பட்டது?

...மத்து ஆரப் பற்றிக்கொண்டு
ஏர் ஆர் இடைநோவ, எத்தனையோர் போதும் ஆய்,
சீர் ஆர்  தயிர்கடைந்து, வெண்ணைய் திரண்டு அதனை
வேர்ஆர் நுதல்மடவாள் வேறு ஓர் கலத்து இட்டு
நார் ஆர் உறி ஏற்றி, நன்கு அமைய வைத்து...
இவள் தயிர் கடைவதற்காக மத்தைக் கையிலே படியப் பற்றிக்கொண்ட அழகிய நுண்ணிய இடை நோவுமாறு வெகுநேரம் கடைந்தாள். அதனால் இவளது நெற்றி வியர்த்தது. இவள் கடைந்த வெண்ணெயை வேறொரு கலத்திலிட்டு நாராலான உறியில் வைத்துக் கயிற்றை உருவி வைத்தார்.


...தன் சீதைக்கு
நேர் ஆனவன் என்று ஓர் நிசாசரி--தான் வந்தாளை
கூர் ஆர்ந்த வாளால் கொடி மூக்கும் காது இரண்டும்
ஈரா விடுத்து, அவட்கு மூத்தோனை -- வெந்நகரம்
சேரா வகையே சிலை குனித்தான்; செந்துவர்  வாய்
வார் ஆர் வனமுலையாள் வைதேவி காரணமா,
ஏர் ஆர் தடந்தோள் இராவணனை -- ஈர் ஐந்து 
சீர் ஆர் சிரம் அறுத்துச் செற்று....
தனக்கு உயிராகிற பிராட்டிக்கு நேராவேன் என்று பிராட்டியைப் போல் அழகுபடுத்திக்கொண்டு வந்த சூர்ப்பணகையைக் கடிந்து, கூரான வாளினால் அவளது கொடி போன்ற மூக்கையும், காதுகளையும் அரிந்து அனுப்பினான். அவளுக்கு மூத்தோனாகியரகனிடம் போர் செய்து ஒருவன் அனுபவிக்கக்கூடிய நரக வேதனை யாவும் அந்தப் போரிலே அனுபவிக்குமாறு வில்லை வளைத்தான். அன்றியும், சிவந்த வாயும், அடர்ந்த தனமுமுடைய சீதையை மீட்பதற்காக இராவணனுடன் போர் செய்தான். அழகிய வலிய தோள்கள் வாய்ந்தவனான அவனது சிறந்த பத்து தலைகளை அறுத்து அவனை முடித்துக் களித்தவன்.


நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் : தொகுதி 3
உரையாசிரியர் :  முனைவர் இரா.வ.கமலக்கண்ணன்
வர்த்தமானன் பதிப்பகம், 21, இராமகிருஷ்ணா தெரு, தியாகராய நகர், 
சென்னை 600 017, முதற்பதிப்பு 2011
தொலைபேசி : 99418 63542, 90949 63125, 93806 30192, 2814 4995, 2814 0347,

08 March 2020

உலகின் இளம் பெண் பிரதமர் சன்னா மரின் : தினமணி

உலகின் இளம் பெண் பிரதமர் சன்னா மரின் என்ற தலைப்பில் என்னுடைய கட்டுரை தினமணி  தளத்தில் இன்று (8.3.2020) வெளியாகியுள்ளது. அதனைப் பகிர்வதில் மகிழ்கிறேன், தினமணி இதழுக்கு நன்றியுடன்.



உலகைத் தன் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்த பெண்மணியாக அண்மைக் காலமாகப் பேசப்பட்டு வருபவர், அரசியலுக்கு வந்து ஏழே ஆண்டுகளில் பின்லாந்தின் பிரதமர் ஆன,  இளம் வயதில் பெண் பிரதமர் என்ற சிறப்பைப் பெற்ற, சன்னா மரின் (34) ஆவார். இவருக்கு முன்பாக நியூசிலாந்தின் பிரதமரான ஜெசிந்தா அர்டேர்ன் குறைந்த வயதில் பிரதமர் ஆனவர்.  

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பின்லாந்தில் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைமையில் ஐந்து கட்சிக்கூட்டணி ஆட்சி நடத்தியபோது ஆண்டி ரின்னி பிரதமராக இருந்தார். அப்போதைய தபால்துறை வேலை நிறுத்தத்தை ஆண்டி ரின்னி முறையாக எதிர்கொள்ளாததால் கூட்டணிக் கட்சியினர் எதிர்ப்பைத் தெரிவிக்க, பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து, போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த அதே கட்சியைச் சேர்ந்த, சன்னா மரின் பிரதமரானார்.

பல பிரச்னைகளை பின்லாந்து எதிர்கொண்டிருந்த சூழலில் பொறுப்பில் அமர்ந்தார் சன்னா மரின்.  நிதியமைச்சரான கத்ரி குல்முனி (32) அவரைவிட இளையவர். ஐந்து கட்சிக் கூட்டணியில் இவரது கட்சியில் இடம்பெற்ற நால்வரில் ஒருவர் குல்முனி.  நால்வரில் ஒருவரே 35 வயதுக்கு மேலுள்ளவர். இந்த நியமனங்களைப் பற்றி ஓர் அரசியல் ஊடகவியலாளர், “மக்களின் தேவைக்கு எந்நேரமும் பணி செய்கின்ற இளம் வயதினர்தான் தற்போதைய தேவை என்றும், அவ்வாறு அமைபவர்கள் குறிப்பாக மிகவும் புதியவர்களாக இருப்பின் இன்னும் சிறப்பு” என்றும் கூறினார்.  

குடும்ப சூழல் அவர் பக்குவப்படக் காரணமானது. இளம் வயதில் பிரிந்த பெற்றோர்களைக் கொண்ட அவர், தாயாரால் வளர்க்கப்பட்டார். அவரது குடும்பம் பொருளாதாரப் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 15ஆம் வயதில் பேக்கரி கடையில் பணியாற்றினார். பள்ளிக்காலத்தில் தன்னுடைய கைச்செலவிற்காக பருவ இதழ்களை விநியோகம் செய்தார். ஒரே பாலினத்தைச் சேர்ந்தவராக தன் தாயார் இருந்ததால் பல இக்கட்டான சூழல்களை எதிர்கொண்டதாகவும், தன் குடும்பத்தைப் பற்றி மனம் திறந்து யாரிடமும் பேச இயலா நிலையில் இருந்ததாகவும் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அவருக்கு முழுக்க முழுக்க ஆதரவாக இருந்தது அவருடைய தாயார் ஆவார். விரும்பியதை சாதிக்கமுடியும் என்ற ஒரு ஊக்கத்தை அவர் தன் மகளுக்குத் தந்திருந்தார். அவர்களுடைய குடும்பத்தில் உயர்நிலைப்பள்ளிப் படிப்பினை நிறைவு செய்து பல்கலைக்கழகத்திற்குச் சென்றவர் சன்னா மரின் ஆவார்.  

அவருடைய அரசியல் வளர்ச்சியானது மிகவும் குறுகிய காலத்திற்குள் அமைந்ததாகும். 20ஆம் வயதில் அரசியலில் பிரவேசித்த அவர், ஹெல்சின்கியின் வட பகுதியில் இருந்த டாம்பீயர் என்ற ஊரில் உள்ளூர் சபைக்கான தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இருந்தபோதிலும் அடுத்த ஐந்து ஆண்டிற்குள் வெற்றி பெற்றதோடு சபையின் தலைவராக 27ஆம் வயதில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  2015இல் பின்லாந்தின் முக்கிய அரசியல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரானார். முதன் முதலாக பாராளுமன்றத்தில் அடியெடுத்துவைத்தது முதல் இவர் ஒரு நம்பிக்கைக்கீற்றாகத் திகழ்ந்து வருகிறார்.

பதவியேற்றபோது, 22 மாதக்குழந்தையின் தாயாக இருந்த அவர், இப்பணிக்கு அவர் பொருத்தம்தானா என்ற வகையில் எழுப்பப்பட்ட வினாக்களைப் பற்றி கவலை கொள்ளவே இல்லை. நிர்வாகத்தில் கவனம் செலுத்துவதே தற்போதைய தேவை என்று உறுதியாகக் கூறினார். இடதுசாரிக் கொள்கையைக் கொண்டிருந்த அவர் பின்லாந்து நாடு வளம் பெற்ற நாடாக அமைய இலக்கு அமைத்தார். பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அவர், "என் வயதைப் பற்றியோ, பாலினத்தைப் பற்றியோ எனக்கு என்றும் சிந்தனை கிடையாது. அரசியலில் நான் வெற்றி பெறுவதற்குக் காரணம் மக்கள் என்மீது கொண்டுள்ள நம்பிக்கை என்பதை நான் அறிவேன்," என்று கூறினார்.

பின்லாந்தின் மூன்றாவது பெண் பிரதமரான இவர், “பின்லாந்து தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு என்று நினைக்கிறேன். அதற்காக நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். அனைவருமே எதிர்கொள்ளவேண்டிய பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய நேரம் இது. தனி நபருக்கு அல்ல” என்றார். பிரதமராக ஆக வேண்டும் என்று தான் கனவு காணவில்லை என்றும், அதனைக் கற்பனை செய்துகூட பார்க்கவில்லை என்றும், அரசியல்வாதிகளும், அரசியலும் அவரைப் பொறுத்தவரை வெகுதூரத்தில் இருந்ததாகவும் கூறினார்.

“நான் சமுதாயத்தை எப்படி நோக்குகிறேன் என்பதை நான் வளர்ந்த சூழல் தீர்மானித்தது. எதிர்காலம் நோக்கியுள்ள பெரிய பிரச்னைகளுக்கு மூத்த தலைமுறையினர் தீர்வு காணாததே நான் இப்போது அரசியல் களத்தில் இருப்பதற்குக் காரணம். நான் செயல்பட வேண்டிய உடனடித்தேவை உள்ளது. இது மற்றவருடைய பணி என்று ஒதுக்கிவிட என் மனம் ஒப்பவில்லை” என்றும், “அனைத்து மகளிருக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்கிய ஐரோப்பாவின் முதல் நாடு என்ற பெருமையுடையது பின்லாந்து” என்றும் கூறினார். 1907இல், உலகில் முதன்முதலாக பெண்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய பின்லாந்தில் தற்போது முக்கியமான பொறுப்புகளில் அதிகமான இடங்களில் பெண்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பிரதமராக இருந்தபோதிலும் சொந்த நலனில் கவனம் செலுத்துவதில் எவ்விதச் சிக்கலும் எழவில்லை என்று கூறும் அவர்,  ஒவ்வொரு வார இறுதியையும் தன் கணவருடனும், கைக்குழந்தையோடும் இனிமையாகக் கழிக்கிறார். மற்றவர்களைப் போல வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்க கடைக்குச் செல்லும் அவர் தன்னை ஒரு மிகச் சாதாரணமானவர் என்றே கூறிக்கொள்கிறார். அவ்வகையில் உலகம் அவரைத் திரும்பிப்பார்ப்பது இயல்புதான்.  

தினமணி இதழில் வாசிக்க: உலகின் இளம் பெண் பிரதமர் சன்னா மரின், தினமணி, மகளிர் தின  சிறப்புப்பக்கம், 8 மார்ச் 2020