03 August 2019

நாலாயிர திவ்யப் பிரபந்தம் : பெரிய திருவந்தாதி : நம்மாழ்வார் (2585-2671)

இத்தளத்தில் இது 301ஆவது பதிவு. 
என் எழுத்திற்குத் துணை நிற்கும் நண்பர்கள் 
அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

நம்மாழ்வார் அருளிய பெரிய திருவந்தாதியினை (2585-2671) அண்மையில் நிறைவு செய்தேன். அவற்றில் சில பாடல்களைப் பொருளுடன் காண்போம். 



அருகும் சுவடும் தெரிவு உணரோம்; அன்பே
பெருகும் மிக; இது என்? பேசீர் - பருகலாம்
பண்புடையீர்! பார் அளந்தீர்! பாவியெம்கண் காண்பு அரிய
நுண்பு உடையீர்! நும்மை, நுமக்கு. (2592)
வாயாரப் புகழ்ந்து கூறிப் பருகும்படியான திருக்குணங்கள் பெற்றவரே! பூமியெல்லாம் அளந்தவரே! பாவிகளான எங்களுடைய கண்களாலே காண முடியாத திருவடிவத்தைப் பெற்றவரே! உன்னை அணுகுவதையும், அதற்கான வழியையும் நாங்கள் பகுத்து அறியவில்லை. எனினும் கண்டவர்க்கு ஏற்படும் அன்பு போலே உம்மைக் காணாத எமக்கும் உம்மிடத்திலே அன்பு பெருகுகிறதே? இப்படி உம்மிடம் எமக்கு ஆசை வளர்வதற்கு என்ன காரணம் என்று நீரே சொல்ல வேண்டும்.

பார்த்து ஓர் எதிரிதா, நெஞ்சே! படு துயரம்
பேர்த்து ஓதப்பீடு அழிவு ஆம் பேச்சு இல்லை; - ஆர்த்துஓதம்
தம் மேனி தாள் தடவ, தாம் கிடந்து, தம்முடைய
செம் மேனிக் கண்வளர்வார் சீர். (2599)
ஓ மனமே! பெருமான் திருப்பாற் கடலில் பள்ளி கொண்டபடி திருக்கண் வளருகிறான். அக்கடல் ஆரவாரம் செய்தவாறு தன் அலைகளாகிய கைகளால் பகவானுடைய திருமேனியையும் திருவடிகளையும் வருடுகிறது. அவனோ தன் சிவந்த திருக்கண்களை மூடியவாறு படுத்திருக்கிறான். அப்பெருமானின் திருக்குணங்களை நாம் பேசுவதால் கொடிய துக்கங்கள் நீங்கிவிடுகின்றன. அதனால் அவன் பெருமைக்குக் குறைவு உண்டாவதில்லை. இதனை நீ உன் கண்முன்னே உள்ளதாகவே கண்டு அறிவாயாக.

ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை
ஆராய்ந்து, அது திருத்தல் ஆவதே? - சீர் ஆர்
மனத்தலை வன்துன்பத்த மாற்றினேன் வானோர்
இனத் தலைவன் கண்ணனால், யான்.  (2609)
யாராவது எதையாவது செய்து கொள்ளட்டும். அகன்ற இந்த உலகத்தை ஆராய்ந்து இங்குள்ளோர் செய்யும் காரியங்களை நம்மால் திருத்த முடியுமோ? என்னைப் பொறுத்த வரையில் என் மனக் கஷ்டங்களைத் தீர்த்துக் காப்பாற்றுபவன் நித்திய சூரிகளுக்கும் தலைவனான கண்ணபிரானே ஆவான். அவனாலேயே என் வலிய துன்பங்களை அகற்றிக் கொண்டேன்.

பேர்ந்து ஒன்று நோக்காது, பின் நிற்பாய், நில்லாப்பாய்
ஈன் துழாய் மாயனையே; என் நெஞ்சே - பேர்ந்து எங்கும்
தொல்லை மா வெம் நரகில் சேராமல் காப்பதற்கு
இல்லை காண் மற்றோர் இறை. (2644)
எனது மனமே! வேறொன்றையும் எண்ணாமல் இனிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ள எம்பெருமானை நினைந்து இரு. அதைவிட்டுவிட்டு வேறெதையும் கவனிக்காதே. முடியாது என்றால் அவனை விட்டு வேறு வழியில்லை.அவனைப் பற்றாது ஒழிந்தால் நீ ஒழிந்து போ. நான் சொல்வதைச் சொல்கிறேன். பழமையாய் பெரிதாய்ப் பரந்துள்ள கொடிய நரகத்திலே சேராதபடி நம்மைக் காப்பதற்கு எம்பெருமானைத் தவிர வேறொரு சுவாமியில்லை. எந்த இடத்திலும் தேடினாலும் அந்த இடத்தில் வேறு யாருமில்லை.

பகல் இரா என்பதுவும் பாவியாது, எம்மை
இகல் செய்து இர பொழுதும் ஆள்வர்; தகவாத்
தொழும்பர் இவர்; சீர்க்கும் துணை இலர் என்று ஓரார்,
செழும்பரவை மேயார், தெரிந்து. (2665)
பெருமான் என்னிடத்தே கொண்டுள்ள அருள்தான் என்னே! அடியேனை ஆள்வதில் எப்போதும் விருப்பம் கொண்டுள்ளான். அழகிய திருப்பாற்கடலிலே பள்ளி கொண்டுள்ள பெருமான், இவர் சிறியர், நம் அருளுக்கு ஏற்றவராகார்; குணானுபவத்திற்கு நல்ல துணை இல்லாதவர் என்றெல்லாம் பார்ப்பதே இல்லை. இவ்வாறு என்னை நோக்காமல் என்னையும் ஒரு பொருட்டாகக் கொண்டு பகல் இரவு என்கிற வேறுபாடுகள் கூட இல்லால் எப்போதும் என்னை ஆட்கொண்டுவிட்டான்.

நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் : தொகுதி 3
உரையாசிரியர் :  முனைவர் இரா.வ.கமலக்கண்ணன்
வர்த்தமானன் பதிப்பகம், 21, இராமகிருஷ்ணா தெரு, தியாகராய நகர், 
சென்னை 600 017, முதற்பதிப்பு 2011
தொலைபேசி : 99418 63542, 90949 63125, 93806 30192, 2814 4995, 2814 0347,
43502995

இதற்கு முன்னர் நாம் வாசித்தது: நம்மாழ்வார் அருளிய திருவாசிரியம்

7 ஆகஸ்டு 2019 அன்று மேம்படுத்தப்பட்டது.

18 comments:

  1. படித்து மகிழ்ந்தேன்.

    ReplyDelete
  2. இன்னும் பலநூறு பதிவுகள் இடுவதற்கு
    அன்னைத் தமிழ் துணையிருப்பாளாக!...

    ReplyDelete
  3. விளக்கம் மிகவும் அருமை ஐயா...

    ReplyDelete
  4. தங்களது வாசிப்பு அனுபவம் எங்களுக்கும் பலன் தருகிறது.
    வாழ்க வளர்க...

    ReplyDelete
  5. பாடலும், விளக்கமும் மிக அருமை.வாசித்து மகிழ்ந்தேன்.
    நற்பணி தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. ப்ரபந்தப் பாடல்களை அர்த்தத்தோடு ரசித்தேன்

    பகலிரா - //இகல் செய்து இர பொழுதும் ஆள்வர்// - "இகல் செய்து இரு பொழுதும் ஆள்வர்" என்று வரவேண்டும். இரு பொழுது - பகலும் இரவும்.

    ReplyDelete
  7. தட்டச்சுப்பிழை. பொறுத்துக்கொள்ளவேண்டுகிறேன். இர என்பதை இரு என்று வாசிக்கவேண்டுகிறேன்.

    ReplyDelete
  8. வணக்கம் சகோதரரே

    நாலாயிர திவ்யப் பிரபந்தம் பாடல்கள் அருமை. பாடல்களுக்கு பொருளுணர்ந்து கொண்டேன். தங்களது அரும்பணிகள் மகிழ்ச்சி தருகிறது. 301 ஆவது பதிவுக்கும் வாழ்த்துக்கள். மேலும், மேலும் பல நூறு பதிவுகள் தங்கள் வலைப்பூவில் மலர்ந்திட மனமாற இறைவனை பிரார்த்தித்து கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  9. பகவான் புகழ் ஓதும் தங்களுக்கு அவன்
    துணை நின்று பல நூறாண்டுகள் வாழ பிரார்த்திக்கிறேன்.வாழ்க

    ReplyDelete
  10. 2592 உங்களால் எழுச்சி பெற்று ஹிந்தி மொழியாக்கம்.நான் நாலாயிரதிவ்ய ப்ரபந்தம் படிக்க தூண்டுகோலாக தங்கள் பதிவு.
    हे भगवान!
    आपके सद्गुणों से प्रभावित हम।
    आपका यशोगान गा रहे हैं।
    एक ही कमल चरण में
    सारी पृथ्वी नाप डाली।
    आपके सुंदर रूप के दर्शन अपूर्व ।
    आपके समीप आने का मार्ग भी न जाना।
    आपपर हमारीश्रद्धा प्रेम कैसे जागे।
    आप खुद पहचानकर अनुग्रह कीजिए।

    ReplyDelete
  11. உங்கள் வழி நானும் படித்து அறிந்தேன்... மகிழ்ந்தேன்.

    நன்றி முனைவர் ஐயா.

    ReplyDelete
  12. நற்பணி தொடர வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. பாடல்களும் விளக்கமும் நன்று ஐயா.

    கீதா

    ReplyDelete
  14. தங்களது பதிவு, பலரும் வாசிக்க வேண்டிய சிறப்புப் பதிவு.
    தெளிவான விளக்கம் நிறைவைத் தருகிறது

    ReplyDelete
  15. "இல்லை காண் மற்றோர் இறை" என்ற சொற்றொடர் என் மனதிற்கு மிகவும் இனிமையானது. விளக்கத்தோடு படிக்கையில் இன்பம் மேலும் விரிகின்றது.

    ReplyDelete
  16. பதிவினை படிக்கும் போது எனக்கு தமிழில் பட்டம் பெற வேண்டுமென ஆர்வம் ஏற்படுகிறது ஐயா

    ReplyDelete
  17. தங்களின் வாசிப்பு அனுபவம் போற்றுதலுக்கு உரியது

    ReplyDelete
  18. அருமையான அழகான பதிவு. வாழ்த்துக்கள்

    ReplyDelete