முகப்பு

21 July 2023

தஞ்சாவூர் புத்தகத் திருவிழா 2023: சிறைவாசிகளுக்கு புத்தக தானம்

தஞ்சாவூரில் நடைபெற்று வருகின்ற புத்தகக் கண்காட்சி 2023இல் தஞ்சாவூர் மாவட்டம், கிளைச்சிறைகள், தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை சார்பாக சிறைவாசிகளுக்கு புத்தக தானம் செய்வீர் என்ற வேண்டுகோளுடன்  ஓர் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. 

சிறைக்கைதிகளுக்குத் தானம் என்ற சொற்றொடரைப் படித்தபோது, தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்வு நினைவிற்கு வந்தது. தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பதிப்புத்துறையில்  1980களின் இடையில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்தேன். பதிப்புத்துறை மற்றும் அச்சகம் தொடர்பான அலுவலகப்பணிகளை பார்த்துவந்தேன். செய்தி மலர்கள், காலாண்டிதழ்கள், நூல்கள், ஆசிரியருக்கான படிகள் போன்றவற்றை அனுப்பும் பணிகளையும் அப்போது பார்த்தேன். 

அப்போது வேலூர் சிறைச்சாலையிலிருந்து ஆயுள் தண்டனைக் கைதி ஒருவர் தான் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் வெளியீடுகளைப் படிக்க விரும்புவதாகக் கூறி கடிதம் அனுப்பியிருந்தார். அவருடைய ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் கண்டு நாங்கள் வியந்தோம். அக்கடிதத்தை அப்போதைய துணைவேந்தர் முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம் அவர்களுக்கு அனுப்பி அதுதொடர்பாக இசைவு கேட்டபோது, அவர், கைதியின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ஒவ்வொரு மாதமும் வெளியாகும் செய்தி மலரை அனுப்பிவைக்கும்படி ஆணையிட்டார். அவருடைய முகவரி அன்பளிப்பு இதழ்கள் அனுப்பும் பட்டியலில் சேர்க்கப்பட்டு, கைதி எண், ஆயுள் கைதி, மத்திய சிறைச்சாலை, வேலூர் என்ற முகவரிக்கு இதழ் அனுப்பப்பட்டது. முகவரியில் அவர் பெயர் இருந்ததாக நினைவில்லை.  

சிறைக்கைதிகளுக்குத் தானம், கூண்டுக்குள் வானம் என்ற சொற்றொடருடன் புத்தகத் திருவிழாவினையொட்டி அமைந்த விளம்பரத்தைப் பார்த்ததும், எனக்கு 1980களின் இடையில் ஆயுள் கைதிக்கு தமிழ்ப் பல்கலைக்கழக இதழ்களை அனுப்பியது நினைவிற்கு வந்தது. நூல் வாசிப்பு என்பதானது மனதைப் பக்குவப்படுத்தும், நெறிப்படுத்தும். இத்திட்டத்தின்கீழ் 100 நூல்களுக்குக் குறையாமல் வழங்கத் திட்டமிட்டேன். என் குடும்பத்தாரும் என் முயற்சிக்கு ஊக்கம் தந்தனர்.  

எங்கள் இல்ல நூலகத்திலிருந்து 250 நூல்களை சிறைவாசிகளுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளேன். வழங்கியுள்ள நூல்களின் பட்டியலிட்டு நூல்களுடன் தந்தேன். இந்நூல்கள் இலக்கியம், ஆன்மீகம், தன்னம்பிக்கை, தலைவர்களின் சுயசரிதை, வரலாறு, பொது அறிவு, அறிவியல், நீதிநெறி உள்ளிட்ட பல பொருண்மைகளில்  அமையும். தந்த நூல்களுக்கு அவ்வப்போது உரிய ஒப்புகையை துறையினர் தந்தனர்.

தமிழ்நாடு சிறைகள் மற்றும்  சீர்திருத்தப்பணிகள் துறையின் இந்த முயற்சியானது மிகவும் போற்றத்தக்கதாகும். நம்மால் இயன்றவரை இதற்கு நாம் கைகொடுப்போம்.  

19.7.2023 காலை 50 நூல்களை அரங்கப்பொறுப்பாளர் திரு வி.தீனதயாளன் அவர்களிடம் வழங்கல்

19.7.2023 மாலை 100 நூல்களை அரங்கப்பொறுப்பாளர் திரு வி.தீனதயாளன் அவர்களிடம் வழங்கல்


21.7.2023இல் 70 நூல்களை வழங்கல் (23.7.2023இல் 50 நூல்கள் வழங்கப்பட்டன). 


21.7.2023இல் 70 நூல்கள் வழங்கியதற்கான பாராட்டும் ஒப்புகையும்


23 ஜூன் 2023இல் மேம்படுத்தப்பட்டது.  

5 comments:

  1. வாழ்த்துகளும், பாராட்டுகளும்

    ReplyDelete
  2. தங்களின் பணி மிகவும் பாராட்டத்தக்கது. வாழ்க வளமுடனும் நலமுடனும்

    ReplyDelete
  3. மிக மிக அருமையான விஷயம். உங்கள் பணி மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. வாழ்த்துகளும் பாராட்டுகளும்!.

    கீதா

    ReplyDelete
  4. தங்களது கொடை மிகவும் பாராட்டத் தக்கது...

    வளங்கொண்டு வாழ்க ..

    ReplyDelete