முகப்பு

27 October 2015

கும்பகோணம் அபிமுகேஸ்வரர் கோயில்

26.10.2015 அன்று கும்பகோணத்தில் பல கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றன. அக்கோயில்களில் அபிமுகேஸ்வரர்,  பாணபுரீஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், கம்பட்ட விஸ்வநாதர் (மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி காணும் சைவக்கோயில்கள்), வராகப்பெருமாள் (காவிரியில் தீர்த்தவாரி காணும் வைணவக்கோயில்களில் ஒன்று), திரௌபதியம்மன், வரசித்தி விநாயகர், பகவத் விநாயகர், யானையடி அய்யனார் கோயில்களுக்குச் சென்றோம். 14 கோயில்களில் கும்பாபிஷேகம் ஆகும் நிலையில் ஒன்பது கோயிலுக்குச் சென்றோம். முதன்முதலாக நாங்கள் சென்ற அபிமுகேஸ்வரர் கோயிலுக்குச் செல்வோம், வாருங்கள்.

முன்பொரு காலத்தில் சிவன் வேட உருவம் தாங்கி அமுதக்கலசத்தை உடைத்துச் சிதைத்தபோது அதிலிருந்து ஒரு தேங்காய் விழுந்த இடத்தில் ஒரு தென்னை மரம் தோன்றியதாகவும் அதனடியில் ஒரு சிவலிங்கம் தோன்றியதாகவும் அதனால் இத்தலம் நாளிக்கேச்சரம் என்று கூறப்படுவதாகவும் தலவரலாறு கூறுகிறது. ஆதலால் இறைவனை நாளிக்கேசன் என்றும் அழைக்கின்றனர். 

மகாமகக்குளத்தின் கீழ்க்கரையில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு காசி விசுவநாதர் கோயில் வழியாகச் சென்றோம். மகாமகக்குளக்கரையில் ஆங்காங்கு பக்தர்கள் வந்துகொண்டிருந்தார்கள். 





கோயிலின் அருகே இருந்தும், மகாமகக்குளக்கரையியிருந்தும், கும்பாபிஷேகத்தைக் காண ராஜகோபுரம் தமக்குத் தெளிவாகத் தெரியும்படி நின்றுகொண்டிருந்தனர்.  ராஜகோபுரத்தைக் கண்டு தரிசனம் செய்தோம். 

ராஜ கோபுர வாயில் வழியாக கோயிலுக்குள் சென்றோம். கொடிக்கம்பத்தைக் கடந்து உள்ளே சென்று மூலவர் அபிமுகேசரைக் கண்டோம். 

பிறகு அங்கிருந்து யாகசாலைக்குச் சென்றோம். கும்பாபிஷேகத்திற்காக சிறப்பு பூஜைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. 




யாகசாலை பூஜையைப் பார்த்துவிட்டு கருவறைத் திருச்சுற்றில் வரும்போது மந்திரங்கள் ஓதிக்கொண்டிருப்பதைக் கண்டோம். 

கருவறை விமானத்தைப் பார்த்துவிட்டு அங்கிருந்து அம்மன் சன்னதிக்குச் சென்றோம். இறைவி அமுதவல்லியைக்கண்டோம். பின்னர் கோயிலுக்கு வெளியே வந்தோம். முன்னரை விட கூட்டம் அதிகமாகவே கோயிலுக்கு அருகே மகாமகக்குளக்கரையின் படிக்கட்டின் ராஜகோபுரம் தெரியும் வகையில்  அமர்ந்தோம். குளத்தைச் சுற்றி அனைத்துத் திசைகளிலிருந்தும் கும்பாபிஷேகத்தைக் காண பக்தர்கள் காத்திருப்பதைக் கண்டோம். 

சிறுவர்கள் மகாமகக்குளத்தில் நீச்சலடித்துக்கொண்டிருப்பதைக் கண்டோம். அனைவருடைய கண்களும் ராஜகோபுரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது குளிக்கும் சிறுவர்களோ கையில் பெரிய குச்சியை வைத்துக்கொண்டு போட்டி போட்டுக்கொண்டு மண்டபத்திலிருந்து குதித்து மகிழ்ச்சியோடு விளையாடிக் கொண்டிருந்தார்கள். 



ராஜகோபுரத்திற்கு மேலே சூரியன் அழகாக ஒளிவீசிக்கொண்டிருக்க கும்பாபிஷேக  நிகழ்வுகள் தொடர்ந்தன. சிறிது நேரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது. இறைவன் திருநாமத்தை உச்சரித்தோம். சிறிது நேரம் கோயிலில் இருந்துவிட்டு அங்கிருந்து மன நிறைவோடு கிளம்பினோம். கும்பகோணத்தில் இதே நாளில் கும்பாபிஷேகம் கண்ட பிற கோயில்களுக்கு தொடர்ந்து செல்வோம்.
--------------------------------------------------------------------------------------------------
மகாமகத்தில் தீர்த்தவாரி கொடுக்கும் சைவக்கோயில்கள்
  • காசி விஸ்வநாதர் கோயில் (நவகன்னியர் அருள்பாலிக்கும் இடம்)
  • கும்பேஸ்வரர் கோயில் (அமிர்தகலசத்திலிருந்து குடமூக்கு தங்கிய இடம்)
  • நாகேஸ்வரர் கோயில் (வில்வம் விழுந்த இடம்)
  • சோமேஸ்வரர் கோயில் (உறி விழுந்த இடம்)
  • கோடீஸ்வரர் கோயில், கொட்டையூர் (அமிர்தத் துளிகள் விழுந்த இடம்)
  • காளஹஸ்தீஸ்வரர் கோயில் (சந்தனம் விழுந்த இடம்)
  • கௌதமேஸ்வரர் கோயில் (பூணூல் விழுந்த இடம்)
  • அமிர்தகலசநாதர் கோயில், சாக்கோட்டை (கலச நடுப்பாகம் விழுந்த இடம்)
  • பாணபுரீஸ்வரர் கோயில் (வேடுவ உருவில் சிவன், பாணம் எய்த இடம்)
  • அபிமுகேஸ்வரர் கோயில் (தேங்காய் விழுந்த இடம்)
  • கம்பட்ட விஸ்வநாதர் கோயில் (புஷ்பங்கள் விழுந்த இடம்)
  • ஏகாம்பரேஸ்வரர் கோயில் (மற்ற உதிரி பாகங்கள் விழுந்த இடம்)
--------------------------------------------------------------------------------------------------
துணை நின்றவை
மகாமகப்பெருவிழா 2004 கும்பகோணம், இந்து சமய அறநிலையத்துறை,தமிழ்நாடு அரசு

24 October 2015

கோயில் உலா : செப்டம்பர் 2015

26.9.2015 அன்று குடும்பத்துடன் கும்பகோணத்திற்கு அருகேயுள்ள கொட்டையூர் கோட்டீஸ்வரர் கோயில், இன்னம்பர் எழுத்தறிநாதர் கோயில், திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வர கோயில், விஜயமங்கை விஜயநாதேஸ்வரர் கோயில், திருவைகாவூர் வில்வவனநாதர் கோயில்,  திருச்சத்திமுற்றம் சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில், பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில் (தேவாரப்பாடல் பெற்ற கோயில்கள்), பழையாறை சோமநாதசுவாமி கோயில், நாதன்கோயில் என அழைக்கப்படும் நந்திபுர விண்ணகரம், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் ஆகிய கோயில்களுக்குச் சென்றோம். இவற்றில் ஏரகரம் ஆதிசுவாமிநாதசுவாமி கோயிலை இப்போதுதான் முதன்முதலாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பிற கோயில்களுக்கு முன்னரே சென்றுள்ளேன். வாருங்கள் கோயில்களுக்குச் செல்வோம். 

கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில்
தஞ்சாவூரிலிருந்து காலை கிளம்பி 6.30 மணி வாக்கில் கும்பகோணம் சென்றடைந்தோம். மகாமகத் தீர்த்தவாரி கோயில்களில் ஒன்றான கும்பேஸ்வரர் கோயிலிலிருந்து எங்களது பயணம் துவக்கமானது. கும்பேஸ்வரரையும் மங்களாம்பிகையையும் தரிசித்துவிட்டுக் கிளம்பினோம். குடமுழுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னரே நிறைவுற்ற நிலையில் மகாமகத்திற்காக திருப்பணி நடைபெற்றுவருவதைக் கண்டோம்.


கும்பேஸ்வரர் கோயில், திருப்பணிக்குத் தயாராகும் குளம்
கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில்
அங்கிருந்து கும்பகோணம்-சுவாமிமலை சாலையிலுள்ள கொட்டையூர் கோடீஸ்வரர் கோயிலுக்குச் சென்றோம். இக்கோயிலிலும் மகாமகத்திற்காக திருப்பணி நடைபெற்று வருகிறது. மகாமகத்தீர்த்தவாரி கோயில்களில் இக்கோயிலும் ஒன்று. இறைவனையும், இறைவி பந்தாடு நாயகியையும் பார்த்துவிட்டு கோயிலை வலம் வந்தோம்.


இன்னம்பர் எழுத்தறிநாதர் கோயில்
அடுத்த மிக அருகில் உள்ள இன்னம்பர் எழுத்தறிநாதர் கோயில் சென்றோம். மூலவர் சன்னதிக்கு இடப்புறமாக பூங்கொம்பு நாயகி, நித்தியகல்யாணி என்ற இரு அம்மன் சன்னதிகளை கண்டோம். வித்தியாசமான முறையில் அமைந்திருத்த மூலவர் விமானத்தை பார்த்தோம்.   

இன்னம்பர் எழுத்தறிநாதர் கோயிலும் விமானமும்
திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயில்
அங்கிருந்து திருப்புறம்பியம் கோயில் சென்றோம். மூலவர் சன்னதிக்கு இடப்புறமாக குஹாம்பிகை சன்னதியும், அடுத்து கரும்படு சொல்லியம்மை சன்னதியும் உள்ளன. தட்சிணாமூர்த்தி அமர்ந்துள்ள தளத்திற்கு மேல் தளத்தில் சட்டநாதர் சன்னதி உள்ளது. இக்கோயிலின் கருவறை கோஷ்டத்தில் புள்ளமங்கை கோயிலில் உள்ளது போன்று மிகச் சிறிய அளவிலான சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோயில் பற்றி பிறிதொரு பதிவில் விரிவாகப் பார்ப்போம்.


திருப்புறம்பியம் கோயிலும், சிற்பமும்
விஜயமங்கை விஜயநாதேஸ்வரர் கோயில்
திருப்புறம்பியம் கோயில் தரிசனம் நிறைவுற்ற பின் விஜயமங்கை விஜயநாதேஸ்வரர் கோயில் சென்றோம். இறைவனையும் இறைவி மங்கைநாயகியையும் தரிசனம் செய்தோம். 

விஜயமங்கை கோயிலும், கருவறையுடன் கூடிய விமானமும்
திருவைகாவூர் வில்வவனநாதர் கோயில்
அடுத்த கோயில் சுவாமிமலைக்கு அருகே அமைந்துள்ள திருவைகாவூர் வில்வவனநாதர் கோயில். வேறு எந்தத் தலத்திலும் காணாத வகையில் இங்குள்ள நந்தி அனைத்து இடத்திலும் நம்மை எதிர்கொண்டழைக்கும் (கிழக்கு நோக்கி) காட்சியைக் காணலாம்.

திருவைகாவூர் வில்வவனநாதர் கோயில் (நம்மை எதிர்கொண்டழைக்கும் நந்தி)
ஏரகரம் கந்தநாதசுவாமி கோயில்
அங்கிருந்து ஏரகரம் சுவாமிநாதசுவாமி கோயில் சென்றோம். சுவாமிமலைக்கு முந்தைய கோயில் என்ற சிறப்பினைக் கொண்ட கோயில். ஆதிகந்தநாதசுவாமி கோயில் என்றழைக்கப்படுகிறது. கருவறையில் லிங்கத்திருமேனி உள்ளது. மூலவர் சன்னதிக்குப் பின்புறம் ஆதிகந்தநாதசுவாமி சன்னதி உள்ளது. இச்சன்னதியில் சுப்பிரமணியர் நின்ற நிலையில் ராஜகோலத்தில் உள்ளார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டோம். 
ஏரகரம் கந்தநாதசுவாமி கோயில் முகப்பு

சூன் 2015 பயணத்தின்போது சென்ற திருச்சத்திமுற்றம் முல்லைவனநாதர் கோயில், பட்டீஸ்வரர் தேனுபுரீஸ்வரர் கோயில், பழையாறை சோமநாதர் கோயில், நந்திபுரவிண்ணகரம் எனப்படும் நாதன்கோயில் ஆகிய கோயில்களுக்குச் சென்றோம். இக்கோயிலின் மண்டபத்தில் கருவறையின் வலப்புறம் சக்தி தழுவிய உடையார் என்ற சன்னதி உள்ளது. இது பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதாக இருக்கலாம். சக்தி முற்றம் (சக்தி உறையும் இடம்) என்பதை இறைவி, இறைவனுக்கு முத்தம் தருவாகக் கூறுவதைக் கண்டோம்.
திருச்சத்திமுற்றம் முல்லைவனநாதர் கோயில் மூலவர் விமானம்
அடுத்து அருகில் உள்ள, நந்தி விலகிய தலமான தேனுபுரீஸ்வரர் கோயில் சென்றோம். அக்கோயிலின் இடப்புறம் ஞானாம்பிகை சன்னதி உள்ளது. அம்மன் சன்னதி முன் மண்டபத்தில் உள்ள தூண்கள் வேலைப்பாடு உடையவனவாக உள்ளன. தேனுபுரீஸ்வரரையும், அம்மனையும்  தரிசித்துவிட்டு துர்க்கையம்மன் சன்னதி சென்றோம். 

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில் நுழைவாயில்
அங்கிருந்து போகும் வழியில் முழையூர் தர்மபுரீஸ்வரர் கோயிலைப் பார்த்தோம். மாடக்கோயில் வடிவில் அழகாக இருந்தது. அதற்கடுத்து பார்சுவநாதசுவாமி உள்ளது. தொடர்ந்து பழையாறை சோமநாதசுவாமி கோயில் சென்றோம். எத்தனை முறை சென்றாலும் பார்க்கத் தூண்டும் கோயில். தற்போது திருப்பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. குதிரை தேரை இழுத்துச்செல்லும் வடிவில் உள்ள மண்டபம் அருமையாக உள்ளது. இவ்வறான சிற்பத்தை கும்பகோணம் சார்ங்கபாணி கோயில், கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில்களில் காணமுடியும்.  
பழையாறை சோமநாதசுவாமி கோயில் வெளிச்சுற்று
தேரை இழுத்துச்செல்லும் குதிரை
அதற்கடுத்து நந்திபுர விண்ணகரம் எனப்படும் நாதன்கோயில் சென்றோம். ஆறு விண்ணகரங்களில் ஒன்றான இக்கோலத்தில் மூலவர் அமர்ந்த கோலத்தில் இரு தேவியருடன் உள்ளார்.
நந்திபுரவிண்ணகரம் எனப்படும் நாதன்கோயில்
தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில்
நிறைவாக தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் சென்றோம். கோயிலின் முன்பு சற்றே ஓய்வெடுத்தோம். சிறிது நேரத்தில் மேகமூட்டத்துடன் மழை வருவது போன்ற நிலை ஏற்பட்டது. கோயிலுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த எங்களது பேரனை ஒரு புகைப்படம் எடுத்துவிட்டுக் கிளம்பினோம், பல கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்த மன நிறைவுடன். 

ஆங்காங்கு சிலகோயில்களில் நாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களில் சில, இதோ.
கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில் வாயிலில்

திருப்புறம்பியம் கோயிலை சுற்றிவரும்போது


திருப்புறம்பியம் கோயிலில் சிற்பத்தைக் காட்டும் எங்கள் பேரன் தமிழழகன்
தாராசுரம் ஐராவதஸ்வரர் கோயில் முன்பாக
தாராசுரம் ஐராவதஸ்வரர் கோயில் முன்பாக

நன்றி

கோயில் உலா : குடந்தை கோயில்கள் என்ற தலைப்பில் பத்திரிக்கை.காம் இணைய இதழில் வெளியான எனது கட்டுரையின் மேம்படுத்தப்பட்ட வடிவம். இக்கட்டுரையை வெளியிட்ட பத்திரிக்கை.காம் இதழுக்கு நன்றி.

22 October 2015

சாக்கோட்டை அமிர்தகலசநாதர் கோயில் கும்பாபிஷேகம்


சாக்கோட்டை அமிர்தகலசநாதர் கோயிலின் கும்பாபிஷேகம் காண்பதற்காக இன்று (22.10.2015) சாக்கோட்டை சென்றேன். திரும்பும்போது இதே நாளில் கும்பாபிஷேகம் ஆன ஏகாம்பரேஸ்வரர் கோயில் (பழைய பேருந்து நிலையம் அருகில்), சித்திவிநாயகர் கோயில் (மணிக்கூண்டு அருகில்), ஆஞ்சநேயர்கோயில் (பெரிய கடைத்தெரு), வரசித்திவிநாயகர் கோயில் (கும்பகோணம் அரசு மருத்துவமனை அருகில்) ஆகிய கோயில்களுக்குச் சென்றேன். நான் சென்ற கோயில்களுக்கு உங்களையும் அழைக்கிறேன்.

அமிர்தகலசநாதர் கோயிலும், ஏகாம்பரேஸ்வரர் கோயிலும் மகாமகத் தீர்த்தவாரி கோயில்களாகும்.

சாக்கோட்டை அமிர்தகலசநாதர் கோயில் கும்பகோணம்-மன்னார்குடி சாலையில் சாலையில் கும்பகோணம் நகரிலிருந்து 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. சுந்தரரால் பாடல் பெற்ற இத்தலத்தில் உள்ள இறைவன் அமிர்தகலசநாதர், இறைவி அமிர்தவல்லிநாயகி. ஊழிக்காலத்தில் உயிர்களை உள்ளடக்கிய அமிர்தகலசம் இத்திருத்தலத்தில் தங்கியதால் திருக்கலயநல்லூர் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலை கோட்டைச் சிவன் கோயிலை என்றும் வழங்குகின்றனர்.  சாக்கியர்கள் எனப்படும் பௌத்தர்கள் வாழ்ந்ததால் சாக்கியர் கோட்டை என்று அழைக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர். கோட்டை சிவன் கோயில் என்றே உள்ளூரில் இக்கோயிலை அழைக்கின்றனர். கோயிலுக்குச் செல்லும் வழியில் அழகாகக் கோலமிட்டிருந்தனர். கும்பாபிஷேக நிகழ்வுகளை முழுமையாகப் பார்த்துவிட்டு, கும்பகோணம் திரும்பினேன்.













  
  
அடுத்து கும்பகோணத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு கண்டேன். இது பற்றி தனியாக ஒரு பதிவில் காண்போம். 
ஏகாம்பரேஸ்வரர் கோயில்
அங்கிருந்து பிற கோயில்களைப் பார்த்துவிட்டு மன நிறைவோடு தஞ்சாவூர் திரும்பினேன்.   
பெரிய கடைத்தெரு ஆஞ்சநேயர் கோயில்
சித்திவிநாயகர் கோயில் (மணிக்கூண்டு அருகில்)
  -------------------------------------------------------
------------------------------------------------------  
துணை நின்றவை
மகாமகப் பெருவிழா 2004, கும்பகோணம், இந்து சமய அறநிலையத்துறை, தமிழ்நாடு அரசு, 2004
திருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், இந்து சமய அறநிலையத்துறை, தமிழ்நாடு அரசு, 2014