முகப்பு

31 October 2017

திரு கோ.சு.சாமிநாத செட்டியார் (GSS) நூற்றாண்டு மலர் : தொகுப்பு சீ.தயாளன்-சி.கோடிலிங்கம்

திரு கோ.சு.சாமிநாத செட்டியார் அவர்களின் நூற்றாண்டு விழா நினைவாக 29 அக்டோபர் 2017 அன்று திருப்பனந்தாள் காசி மடத்து அதிபர் கயிலை மாமுனிவர் ஸ்ரீஸ்ரீ காசிவாசி முத்துகுமாரசாமித் தம்பிரான் சுவாமிகளால் அவர்களால் வெளியிடப்பட  நூற்றாண்டு விழா மலரின்  (தொகுப்பு : சீ.தயாளன், சி.கோடிலிங்கம், சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம், கும்பகோணம், 2017முதல் படியை பெறும் பேற்றினைப் பெற்றேன். 
நன்றி : தினமணி, 30 அக்டோபர் 2017 
இம்மலரில் கோ.நடராச செட்டியார் (மூவெழுத்தாலான மூலவர்), சி.கோடிலிங்கம் (நாம் கண்ட வள்ளல்), ருக்குமணி இரத்தினசபாபதி (மறைந்தும் மலர்ந்தான் குழந்தை சாமிநாதன்), குமரகுரு கோமளவல்லி (தர்மமும் தமிழ்க்கடவுளும்), பி.சோமலிங்கம் (அய்யா அவர்களைப் போற்றுவோம்), சீ.தயாளன் (தயாளன் கண்ட தருமராசா), விமலா தயாளன் (பரிவு, பாசம், பண்பு சார்ந்த பல்கலைக்கழகம்), சீனிவாசன் (உள்ளம் குளிர்ந்தேன்), கோ.மாறன் (என் வாழ்விற்கு வழிகாட்டி), சுந்தரேசன் (தடுத்தாட்கொண்டார்), பா.ஜம்புலிங்கம் (மாமனிதரின் வான்புகழ்),கன்னையன் (அறச்சாலையின் வழியே ஒரு தவப்பயணம்), இராமசேஷன் (மணிவிழா நாயகர்), கோ.பார்த்தசாரதி (நான் கண்ட சாமிநாதப் பெருவளளல்), எம்.அப்துல் ஹமீது (அவர் ஆசி என்றும் உண்டு), கோவிந்தராசன் (நன்னகர் கண்ட நயனுடைச் செல்வர்), மா.வைத்தியலிங்கம் (ஜி.எஸ்.எஸ்.அண்ணன்), சென்னையில் ஜி.எஸ்.ஸும் நூலகத்தவமும்) ஆகியோரின் கட்டுரைகளும், சாமிநாதன் அமிர்தவல்லி (ஜி.எஸ்.எஸ்.என்கிற மூன்றெழுத்தின் பெருமை), தெய்வத்தமிழ் மன்றம் (அண்ணலே வாழி), பால.இராசு (வள்ளல் பெருந்தகைக்கு நூற்றாண்டு விழா), கோ.பரிதி (ஜி.எஸ்.எஸ்.என்னும் சகாப்தம்), அரு.காந்தி (வழங்குவதை வாழ்வாக்கிக் கொண்ட வள்ளல்), மேகலா (ஓங்கிய ஒளியின் உத்தமர்), குரு. செயலட்சுமி (நாளும் அவரைப் பாடுவோம்) ஆகியோரின் கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. சாமிநாத செட்டியாரின் (1917-1997) வாழ்க்கை வரலாற்றை சற்றே சுருக்கமாகப் பார்ப்போம்.
  • பெற்றோர் சி.சுப்பராய செட்டியார்-கோமளத்தம்மாள்
  • கல்வி : நேட்டிவ் உயர்நிலைப்பள்ளி
  • நிர்வாக அறங்காவலர் : ஆதிகும்பேசுவரர் கோயில்
  • கும்பாபிஷேகக்குழுத்தலைவர் : காசி விசுவநாதர் கோயில்
  • குழு உறுப்பினர் : கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில்
  • உறுப்பினர் : கும்பகோணம் நகர்மன்றம்
  • நிருவாகக்குழு உறுப்பினர் : நேடிவ் உயர்நிலைப்பள்ளி
  • நிருவாகக்குழு இயக்குநர் : குடந்தை நில அடைமான வங்கி, சிட்டி யூனியன் வங்கி
  • நிறுவனர் வள்ளலார் மாணவர் இல்லம் 
  • நிறுவனர் : சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் 
  • தினமும் கும்பேஸ்வரர் கோயில் மாலை வழிபாடு செய்யும் கொண்டவர்
  • காசி, ராமேஸ்வரம்,கண்டி, கதிர்காமம் மற்றும் பல சிவத்தலங்களையும், வைணவ திவ்ய தேசங்களையும் வழிபட்டவர்
  • ஈகை, அன்பு, வள்ளல் தன்மை, பரிவு போன்ற அருங்குணங்களைக் கொண்டவர்
  • எப்பொழுதும் திருநீற்றுடன் காணப்படுபவர்
  • இல்லையென்று வருவோர்க்கு தன்னாலான உதவிகளைச் செய்தவர்
  • பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தந்து குடும்பங்களில் விளக்கேற்றியவர்
இந்நூற்றாண்டு மலரில் நூலகத்துடனான என்னுடைய சுமார் 40 ஆண்டு கால அனுபவம் குறித்து மாமனிதரின் வான்புகழ் என்ற தலைப்பில் நான் எழுதியுள்ள கட்டுரை வெளியாகியுள்ளது. 
மலரின் முகப்பு

மலரின் பின்னட்டை
மாமனிதரின் வான்புகழ் 
என்னுடைய பள்ளிக்காலத்தில் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தை வாசித்துக் காட்டும்படிக் கூறுவார் எங்கள் தாத்தா. கும்பகோணத்தில் சம்பிரதி வைத்தியநாதய்யர் அக்கிரகாரத்தில் இருந்த எங்கள் வீட்டில் நாங்கள் அவர் முன்பு அமர்ந்து நூலின் சில பத்திகளைப் படிப்போம். அடுத்த நாள் தொடர்வோம். நூற்கட்டு செய்யப்பட்ட அந்தப் புதினம் ஐந்து தொகுப்புகளாக இருந்தது. படிக்கப் படிக்க பொன்னியின் செல்வன் மீது ஆர்வம் ஏற்பட்டது. அந்த ஆர்வமே என்னை சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையத்திற்கு இட்டுச் சென்றதோடு அந்நூலகத்தின் திரு சுவாமிநாத செட்டியார் அவர்களின் அருமை பெருமைகளைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பினைத் தந்தது.

பள்ளிக்காலம்
தொடர்ந்து பேட்டைத்தெருவிலுள்ள அறிஞர் அண்ணா அரசு உயர்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை படித்தபோது (1972-75) சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையத்தைப் பற்றி அறிந்தேன். பிறகு ஒரு நாள் தனியாகச் சென்று அந்நூலகம் இருக்கும் இடத்தை அறிந்து அங்கு செல்ல ஆரம்பித்தேன். முதன்முதலாக அங்கு சென்றபோது ஐயாவைச் சந்தித்தேன். பள்ளி மாணவன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு என் தாத்தாவைப் பற்றியும், வாசிப்பு ஆர்வத்தைப் பற்றியும் கூறினேன். அவர் நூலகத்தின் நடைமுறையை எடுத்துக் கூறினார். முதன்முதலாக அங்கு நான் படிக்க ஆரம்பித்தது வரலாற்றுப் புதினங்களே.  தொடர்ந்து பள்ளியில் உடன் படித்த நண்பர்களை அழைத்துச் சென்றேன்.  பள்ளி விடுமுறை நாள்களில் எங்களுக்கு அடைக்கலம் தந்தது சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையமே. நாங்கள் அனைவரும் மாறி மாறி போட்டி போட்டுக் கொண்டு நூல்களை வாசிக்க ஆரம்பித்தோம். அதிகமான பக்கங்களை யார் படிக்கின்றார்கள் என்று எங்களுக்குள் போட்டி வைத்துக் கொள்வோம். தொடர்ந்து நாங்கள் படித்த நூல்களைப் பற்றி விவாதிப்போம். ஒரு நூலை வாசித்து முடிக்கும்போது அடுத்து வாசிக்க வேண்டிய நூல் குறித்து ஐயாவிடம் விவாதிப்போம். தொடர்ந்து அதனைப் படிப்போம். நாங்கள் வாசிக்கும் நூல்களைப் பற்றி அறிந்த அவர் எங்களின் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டிவிட்டார்.  அடுத்தடுத்து விடுபாடின்றி நாங்கள் பல நூல்களைப் படிக்க அவருடைய அந்த கவனிப்பு எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது.  

கல்லூரிக்காலம்
கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில்  புகுமுக வகுப்பும் (1975-76), இளங்களை பொருளாதாரமும்(1976-79) படித்தபோதும் தொடர்ந்து நூலகத்திற்குச் சென்றேன். அக்காலகட்டத்திலும் அவருடைய ஆலோசனைகள் எனக்கு பேருதவியாக இருந்தது.  வரலாற்றுப் புதினங்கள் தவிர இலக்கியம், வரலாறு என்ற நூல்களை அவரிடம் கேட்டுத் தெரிவு செய்து வாசிக்க ஆரம்பித்தேன். அவர் கூறிய கருத்துகள் என்னுடைய வாசிப்பின் வேகத்தை அதிகரிக்க உதவின.    

பணிக்காலம்
        1979இல் கல்லூரிப் படிப்பு நிறைவு செய்த பின்னர் பணி நிமித்தமாக சென்னை, கோயம்புத்தூர், தஞ்சாவூர் ஆகிய இடங்களுக்குச் சென்றேன். பணிக்காலத்தில் விடுமுறையில் கும்பகோணம் வரும்போது நூலகத்திற்கு வருவதை வழக்கமாகக் கொண்டேன். முன்பு வந்து வாசித்ததுபோல அதிக நேரம் கிடைக்கவில்லை. இருந்தாலும் நூலகத்திற்கு வரும் வழக்கத்தினை விட்டுவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். பணிச் சூழல் காரணமாக பணியில் சேர்ந்த செய்தியை ஐயாவிடம் தாமதமாகத் தெரிவிக்கும் நிலை ஏற்பட்டது. நூலகத்திற்கு வருவது குறைந்துவிட்டதே என்று அவரிடம் ஆதங்கப்பட்டுக் கொண்டேன். அப்போது அவர், நேரமிருக்கும்போது வரும்படி அறிவுரை கூறினார்.


அக்டோபர் 2017இல் நூலகம் சென்றபோது
ஆய்வுக்காலம்  
1993இல் பௌத்தம் தொடர்பாக  ஆய்வு மேற்கொள்ளத் தொடங்கிய முதல்  இங்கு சென்று பல நூல்களைப் படித்துக் குறிப்பு எடுத்துள்ளேன்.  புதினம் என்ற நிலையிலிருந்து மாறி ஆய்வு தொடர்பாக நூல்களைப் படிக்க ஆரம்பித்தபோது அவருடன் ஆய்வினைப் பற்றி பல முறை விவாதித்துள்ளேன். என் ஆய்வு தொடர்பாக நான் படித்தவற்றில் பூர்வாச்சாரியார்கள் அருளிய ஆறாயிரப்படி பன்னீராயிரப்படி குருபரம்பரப்ரபாவம் (பூமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1928), தமிழர் மதம் (மறைமலையடிகள், திருமகள் அச்சுக்கூடம், பல்லாவரம், 1941), தென்னிந்திய சிற்ப வடிவங்கள் (க.நவரத்தினம், சுன்னாகம் திருமகள் அழுத்தகம், யாழ்ப்பாணம், 1941), புத்த சரித்திரம், பௌத்த தருமம், பௌத்த சங்கம் (உவேசா, கபீர் அச்சுக்கூடம், சென்னை, 1945), பிற்காலச்சோழர் சரித்திரம் (சதாசிவப்பண்டாரத்தார், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1951), முதற்குலோத்துங்கசோழன் (சதாசிவப் பண்டாரத்தார், பாரி நிலையம், 1955), பூம்புகார் (புலவர் ப.திருநாவுக்கரசு, அஸோஸியேஷன் பப்ளிசிங் ஹவுஸ், சென்னை, 1957), தமிழக வரலாறு (அ.மு.பரமசிவானந்தம், தமிழ்க்கலை பதிப்பகம், சென்னை, 1958) உள்ளிட்ட பல நூல்கள் அடங்கும். 
பள்ளிக்காலம் தொடங்கி இன்று வரை இந்நூலகத்துடன் தொடர்பு கொண்டுள்ளதை நினைக்கும்போது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. 1995இலும், 2015இலும் பார்வையாளர் குறிப்பேட்டில் நூலகத்தைப் பற்றிய எனது கருத்தை பதியும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டிய, ஐயாவினால் நன்கு பேணி பாதுகாக்கப்பட்ட இந்நூலகத்தைப் பற்றி, 2016இல் மகாமகம் மலரில் எழுத வாய்ப்பு கிடைத்தது. அப்போது நூலகத்திற்கு வந்து குறிப்புகள் எடுத்தபோதுதான்  இந்நூலகம் உருவான வரலாற்றை அறிந்தேன். அதனை என் கட்டுரையில் பதிவு செய்தேன்.

நூலகம் உருவான வரலாறு
“1947ஆம் ஆண்டில் கும்பேஸ்வரர் கோயிலில் அறங்காவலராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது தேர்த்திருவிழா ஏற்பாட்டிற்காக ஜி.எஸ்.சுவாமிநாத செட்டியார்  தருமபுரம் ஆதீனத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கேயிருந்த ஞானசம்பந்தம் நூல் நிலையம் அமைக்கப்பட்டிருக்கும் முறை அவரைக் கவர்ந்துவிட்டது.  அப்போது அவருடைய மனதில் அவருடைய தந்தையின் தந்தை கோபு சிவகுருநாதன் செட்டியார் எம்.ஏ., பி.எல்., பெயரில் நூல் நிலையம் அமைக்கும் எண்ணம் உருவானது.  அவர் பெயரில் சில ஆண்டுகள் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கியுள்ளார்.  அவ்வாறு பயின்ற பலர் நல்ல நிலையில் வாழ்வதை அறிந்த  அவர் நூல் நிலையம் ஒன்றும் அவர் பெயரில் அமைத்தால் அனைவரும் பயனடைவர் என்று எண்ணினார். இந்நூலகம் உருவாவதற்கு அடிப்படை இதுவேயாகும்.”

இந்நூலகத்தின் பெருமையை அனைவரும் அறியவேண்டும் என்ற அவாவின் காரணமாக நூலகத்திற்குச் சென்று நூலகம் பற்றிய செய்திகளைத் திரட்டி தமிழ் விக்கிபீடியாவிலும், ஆங்கில விக்கிபீடியாவிலும் பதிவுகள் தொடங்கி உரிய புகைப்படங்களை இணைத்தேன். கும்பகோணத்தில் அரை நூற்றாண்டிற்கும் மேலாக நகர மக்களின் வாசிப்புத்தேவையைப் பூர்த்தி செய்துவரும் இந்நூலகத்தினைப் போற்றும் இந்நேரத்தில் திரு சுவாமிநாத செட்டியார் அவர்களின் ஈடுபாட்டையும், ஆர்வத்தையும், மனித நேயத்தையும், வாசகர்களோடு அவர் பழகும் பாங்கினையும் நினைவுகூர்கிறேன். தமிழைப் போலவே அம்மாமனிதரின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும். 


முன்னர் நாம் வாசித்த இந்நூலகம் தொடர்பான பதிவுகள்  







விழா அழைப்பிதழ்


28 October 2017

கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (மூன்றாம் பகுதி) : ப.தங்கம்

கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதையின் மூன்றாம் பகுதியுடன் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் சித்திர வடிவம் நிறைவு பெறுகிறது. அண்மையில் மூன்றாம் பகுதியை ஓவியர் ப.தங்கம் (9159582467) அவர்கள் அனுப்பிவைத்திருந்தார். அந்நூலை, அவருடைய ஓவியங்களுடன் ரசித்துக்கொண்டே படிப்போம், வாருங்கள்.
கல்கியின் பொன்னியின் செல்வன் முதல் பாகம்
இந்த மூன்று பகுதிகளில் ஓவியர் தங்கம் அவர்களில் கைவண்ணத்தால்
ஓவிய வடிவம் பெற்றுள்ளது

கல்கியின் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் 
நிறைவுப்பகுதியான மூன்றாம் பகுதியின் முகப்பட்டை

பின் அட்டையில் நந்தினி (ஓவியம் சந்திரோயம்)
அவர் தீட்டிய கல்கியின் பொன்னியின் செல்வன்  சித்திரக்கதையின் முதல் இரண்டு பகுதிகளை முன்னர் படித்துள்ளோம். அவற்றைப் போலவே மூன்றாம் பகுதியும் மிகவும் விறுவிறுப்பாகவும், சித்திரங்களைப் பார்த்துக் கொண்டே கதையை புரியும்படி வாசிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.  மூன்றாம் பகுதி (பக்.227-326 வரை) நிலவறையில் தொடங்கி (அத்தியாயம் 41), நட்புக்கு அழகா, பழையாறை, எல்லாம் அவன் வேலை, குற்றம் செய்த ஒற்றன், மக்களின் முணுமுணுப்பு, ஈசான சிவ பட்டர், நீர்ச் சுழலும் விழிச் சுழலும், விந்தையிலும் விந்தை, பராந்தகர் ஆதுர சாலை, மாமல்லபுரம், கிழவன் கல்யாணம், மலையமான் ஆவேசம், நஞ்சினும் கொடியாள், நந்தினியின் காதலன், அந்தப்புர சம்பவம், மாய மோகினி (அத்தியாயம் 57) வரையுள்ளவற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளைத் தெரிவு செய்து  தொடர்பு விடுபாடின்றி சித்திரங்களை வரைந்து நம்மை கல்கியுடன் அழைத்துச் செல்கிறார் திரு தங்கம்.

மூத்த பத்திரிக்கையாளரும் ராணி வார இதழின் முன்னாள் ஆசிரியருமான திரு அ.சா.சாமி, "ஓவியர் தங்கம் என் மாணவர். மாணவர் படைப்புக்கு ஆசிரியர் அணிந்துரை அளிப்பது சங்க மரபு. அந்த வழக்கம் இன்றும் நீடிப்பதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி" என்று பாராட்டி எழுதியுள்ளார். 

அவருடைய ஓவியங்கள் நம்மை நிகழ்வுகள் நடைபெறுகின்ற இடத்திற்குச் சென்றுவிடுவதோடு, அந்தந்த பாத்திரங்களுடனும் நாம் மிகவும் நெருக்கமாக இருக்கும் அளவிற்கு அமைந்துள்ளன. முந்தைய பகுதியில் காணப்படுவதைப் போலவே பாத்திரங்களையும், நிகழ்வுகளையும் தத்ரூபமாக நம் முன் கொண்டுவருகிறார் சித்திரக்கதையின் ஆசிரியரான தங்கம் அவர்கள். மூன்றாம் பகுதியில் இடம் பெற்றுள்ளவற்றில் சில ஓவியங்களைக் காண்போம்.  இதில் மூன்றாம் பகுதி நிறைவு பெறுவதையும், நான்காம் பகுதி ஆரம்பிக்கப்படவுள்ளதையும்கூட சித்திரமாகத் தீட்டியுள்ளார். 





 








கதாபாத்திரங்களின் உணர்வுகளை தம் ஓவியங்களில் வெளிப்படுத்தும்போது உரிய சொற்றொடர்களைத் தெரிவு செய்து சிறப்பாகத் தருகிறார் நூலாசிரியர். கதையும், சித்திரமும், நிகழ்விடமும் பின்னிப்பிணைந்துள்ள விதம் சிறப்பாக உள்ளது.
  • பழுவேட்டரையர் காவலனுக்கு சமிஞ்கை செய்யும்போது காணப்படும் வஞ்சகம் (ப.232)
  • பின்னால் நின்று முதுகிலே குத்தும் ஆப்தசினேகிதன் அல்லவா நீ என்று கந்தமாறன் கேட்கும்போது வந்தியத்தேவன் அடையும் வேதனை (ப.235)
  • கைவிளக்கு வெளிச்சத்திலும் சேந்தன் அமுதனுக்கு மூலிகை வைத்தியம் பார்க்கும்போது அமுதனின் அன்னையின் முகத்தில் வெளிப்படும் பரிவு (ப.240)
  • பழையாறையை நகரைப் பார்க்கும்போது வந்தியத்தேவன் வெளிப்படுத்தும் பிரமிப்பு (ப.244)
  • மதுராந்தகனின் ரகசியப் பயணத்தை ஆழ்வார்க்கடியான் மூலமாக அறிந்த செம்பியன்மாதேவி உணரும் குற்ற உணர்வு (ப.250)
  • வந்தியதேவனைப் பற்றி ஆழ்வார்க்கடியான் ஏதாவது கூறமாட்டாரா என்ற குந்தவையின் ஏக்கம் (ப.261)
  • ஈழ நாட்டில் உள்ள அருள்மொழிவர்மருக்கான ஓலையை குந்தவை வந்தியத்தேவனிடம் தந்தபோது அவனிடம் தோன்றிய மெய் சிலிர்ப்பு (ப.286)
  • ஆதித்த கரிகாலன், நண்பர் பார்த்திபேந்திரனிடம் வெளிப்படுத்தும் மனம் திறந்த பேச்சு (ப.292)
  • வீரபாண்டியனுக்கு நந்தினி தண்ணீர் கொடுத்தபோது அவள் முகத்தில் காணப்பட்ட பரிவு (ப.306)
  • கோடியக்கரையில் பெயருக்குத் தகுந்தாற்போல பூங்குழலி, தன் கூந்தலில் தாழம்பூவின் இதழைக் கொண்டு வெளிப்படுத்தும் அழகு, அலை கடலும் ஓந்திருக்க பாடலைப் பாடும் பாங்கு (ப.326)

நூலாசிரியரின் அயரா உழைப்பும், தொடர்ந்த முயற்சியுமே பொன்னியின் செல்வனின் முதல் பாகம் நிறைவு பெறக் காரணமாக அமைந்துள்ளது. அவருடைய ஓவியங்களின் அழகை நாம் அறிவோம். தொடர்ந்து நான்காம் பகுதி விரைவில் வெளிவரவுள்ளதாக இந்நூலில் கூறியுள்ளார். அந்த பகுதியைக் காணும் நாளுக்காகக் காத்திருப்போம். திரு தங்கம் அவர்களின் முயற்சி தொடர மனம் நிறைந்த வாழ்த்துகள். 



கல்கியின் பொன்னியின் செல்வன், சித்திரக்கதை, மூன்றாம் பகுதி
சித்திரம் :  ப.தங்கம்
பதிப்பகம் : தங்கப்பதுமை பதிப்பகம், ஞானம் நகர் ஆறாவது தெரு மெயின் ரோடு,
மாரியம்மன் கோயில் அஞ்சல், தஞ்சாவூர் 613 501
கைபேசி :  9159582467
விலை : ரூ.200
ஆண்டு : செப்டம்பர் 2017  

இதுவரை நாம் வாசித்த ஓவியர் தங்கம் தொடர்பான பதிவுகள்:

25 October 2017

தேனுகா : மூன்றாமாண்டு நினைவு

தேனுகா. பெயரை உச்சரிக்கும்போதே கலையியலும், ரசனையும்தான் நம் நினைவிற்கு வரும். அவருடைய மூன்றாமாண்டு நினைவு நாள் கும்பகோணம் காந்தியடிகள் நற்பணிக்கழகத்தில் 24 அக்டோபர் 2017 அன்று நடைபெற்றது. 







(இடமிருந்து வலமாக) கு.பாலசுப்பிரமணியன், 
அ.மார்க்ஸ், இராம குருநாதன், எஸ்.பி.இராமன், வித்யா சங்கர் ஸ்தபதி





காந்தியடிகள் நற்பணிக்கழக அமைப்பாளர் திரு கு.பாலசுப்பிரமணியன் தலைமையேற்க திரு வித்யா சங்கர் ஸ்தபதி, திரு எஸ்.பி.இராமன் (ஸ்டேட் வங்கி ஊழியர் சங்கம்), பேராசிரியர் திரு இராம. குருநாதன், பேராசிரியர் திரு அ.மார்க்ஸ் (சமூகப்போராளி), திரு எம்.எஸ்.பாலு (மேழி இலக்கிய சங்கமம்), கவிஞர் ஆடலரசு, திரு தேவ ரசிகன் உள்ளிட்ட நண்பர்கள் நினைவுப் பொழிவாற்றினர். கழக ஆசிரியர் திரு செல்வம் நன்றி கூறினார். முன்னதாக தேனுகா நினைவாக நடைபெற்ற ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

நண்பர்கள் பொழிவில் தேனுகாவின் பன்முகப்பரிமாணங்களை அறியமுடிந்தது. வங்கிப்பணியாற்றும்போது அவருக்கிருந்த சமூகப் பிரக்ஞை, மனித நேயம், ஒரு கலைஞனாக பழமையும், புதுமையையும் அவர் பாராட்டிய விதம், நண்பர்களிடம் பழகும் பாங்கு, ஓவியம், சிற்பம் உள்ளிட்ட கூறுகளில் அவருடைய ஈடுபாடு  போன்ற அவருடைய குணங்களை நண்பர்கள் எடுத்துக் கூறினர்.  அவர் விட்டுச்சென்ற இடத்தை நிரப்ப யாருமேயில்லை என்பது அவர்களுடைய பேச்சில் உணரப்பட்டது. பலர் உணர்ச்சிபூர்வமாகப் பேசியபோது அவர்மீது அவர்கள் வைத்திருந்த அன்பை உணரமுடிந்தது. அவர் நண்பர்களுடன் விவாதிக்கும் இடங்களான மகாமகக்குள மேல் கரை, காந்தி பார்க், காந்தியடிகள் நற்பணிக்கழக அலுவலகம், வித்யா சங்கர் ஸ்தபதி உள்ளிட்ட பெரியோர்களின் இல்லம் ஆகிய இடங்களில் அதிக நேரங்களில் நண்பர்கள் அவரோடு விவாதத்தில் ஈடுபட்டதைக் கூறினர். தன் கருத்தில் அவர் உறுதியாக இருந்ததையும், மாற்றுக்கருத்தை மனமுவந்து ஏற்றுக்கொண்டதையும் முன்வைத்தனர். 

பார்வையாளனாகச் சென்ற எனக்கு அமைப்பாளர் பேச வாய்ப்பளித்தார். என் ஆய்வுக்கு தேனுகா தூண்டுகோலாக இருந்தது, என் கண்டுபிடிப்புகளைப் பாராட்டியது குறித்து எடுத்துப் பேசினேன். அவருடைய நூல்களைப் பற்றிய மதிப்பீடுகளையும், அவரது புகழ் பெற்ற நாற்காலியையும், அவரைப் பற்றிய பேட்டிகளையும் அவ்வப்போது நாளிதழ்களில் பார்த்துத் தொலைபேசியில் நான் அவரோடு பகிர்ந்துகொண்டதை நினைவுகூர்ந்தேன்.

அவரைப் பற்றி கழகம் இதழில் தேனுகாவும் நானும் என்ற தலைப்பில் திரு பாலசுப்பிரமணியன் கூறுகிறார் : 
"தேனுகாவின் வாழ்க்கையில் கடைசி பத்தாண்டில் வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் எங்களது சந்திப்பு நடந்துகொண்டே இருந்தது. கடைசி ஐந்தாண்டில் கிட்டத்தட்ட தினந்தோறும் சந்தித்தோம். சில சமயம் ஒரே நாளில் இரு முறையும் சந்தித்ததுண்டு. அப்படித்தான் எங்களது கடைசி சந்திப்பும் நிகழ்ந்தது.....22ஆம் தேதி தீபாவளி 24ஆம் தேதி கீழ்வேளூர் வரை போகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றவரின் மரணச் செய்தியை 24ஆம் தேதி இரவு 11.00 மணிக்கு ஸ்தபதியின் மகன் திரு ரவிசங்கர் கூற கேட்டபோது என்னுள் ஏற்பட்ட அதிர்வுகளைப் பதிவு செய்வது கடினம். என் மகள் என் மனைவியிடம், அப்பா இதை எப்படி தாங்கிக் கொள்ளப் போகிறார்கள் என்று கேட்டதாக என் மனைவி கூறினார். தாங்க முடியவில்லைதான். என்ன செய்வது? வேறு வழியில்லை. தேனுகா இல்லாத உலகத்தை ஏற்று வாழ வேண்டியதுதான். இன்றுகூட இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில்கூட எனக்கு தேனுகா படியேறி கழகத்திற்குள் வருவது போன்ற பிரமை ஏற்படுகிறது. இந்த பிரமை இருக்கும் வரை தேனுகா என்னுள் வாழ்ந்து கொண்டிருப்பார், மனிதனாக."

அனைவருடைய வாழ்விலும் இத்தகைய ஒரு தாக்கத்தினை தேனுகா ஏற்படுத்தியுள்ளார் என்பதே உண்மை. அவருடைய நினைவினைப் போற்றும் வகையில் அறக்கட்டளை ஒன்று துவங்குவது, துறை சார்ந்த அறிஞர்களைக் கொண்டு சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்துவது என்பன போன்ற கருத்துகள் விவாதிக்கப்பட்டன. அதை செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார் திரு பாலசுப்பிரமணியன் நெகிழ்ச்சியுடன். 

காந்தியடிகள் நற்பணிக்கழகம் வெளியிடும் கழகம் இதழ் தேனுகா நினைவு நாள் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. தொடர்புக்கு : காந்தியடிகள் நற்பணிக்கழகம், 16சி, காலசந்தி கட்டளைத்தெரு, கும்பகோணம் 612 001, மின்னஞ்சல்: gnk.kumbakonam@gmail.com அலைபேசி : 09952793520


தோற்றம் பின்னுள்ள உண்மைகள் என்ற தேனுகாவின் நூலைப் பற்றிய என் பதிவு



தேனுகாவைப் பற்றி விக்கிபீடியாவில் நான் ஆரம்பித்த பதிவு


21 October 2017

சே குவாராவின் இறுதி நிமிடங்கள் : கிளையர் பூபையர், கார்டியன்

சேகுவாரா தன்னுடைய இறுதி நாள்களையும், நிமிடங்களையும் கழித்த இடங்களுக்கு கிளையர் பூபையர் என்பவர்  பயணித்து எழுதியுள்ள, கார்டியன் இதழில் வெளியான,  அனுபவக்கட்டுரையின் மொழிபெயர்ப்பு வடிவம் 
பத்திரிக்கை.காம் இதழில் (சே குவாராவின் 50 ஆவது நினைவு தினமான 9 அக்டோபர் 2017இல் வெளியானது).  
அதன் மேம்படுத்தப்படுத்தப்பட்ட வடிவத்தைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவ்விதழுக்கு நன்றியுடன்.


--------------------------------
தென் பொலிவியா. வெள்ளையடிக்கப்பட்ட வீடுகள், புனிதத்தலமாக மாறிய பள்ளி வகுப்பு. இந்த பள்ளி வகுப்பில்தான் உலகின் மிகப்புகழ் பெற்ற புரட்சிக்காரரான எர்னெஸ்டோ சே குவாரா 50 ஆண்டுகளுக்கு முன் இதே அக்டோபர் மாதத்தில் கொல்லப்பட்டார்.

அப்போது 39 வயதான, அந்த அர்ஜென்டைனா நாட்டுப் புரட்சிக்காரர் 9 அக்டோபர் 1967இல் கொல்லப்பட்ட அந்த அறை தற்போது படங்களாலும், கொடிகளாலும், செய்திகளாலும், கொடிகளாலும், வாகன உரிமங்களாலும் அஞ்சலி செலுத்த வருகின்ற பார்வையாளர்களால் நிரப்பப்பட்டுள்ளது.

உலகின் பல பகுதிகளிலிருந்து லா ஹிகேரா என்ற அந்த கிராமத்திற்கு வருவோர் அதனை ஒரு யாத்திரைத் தலமாகக் கருதுகிறார்கள். (லா ஹிகேரா அருங்காட்சியகம், 8.00 மணி முதல் நடுப்பகல், மதியம் 2.00 முதல் 6.00 வரை, கட்டணம் 1 பவுண்டு).

பொலிவியப் படையினரால் சேகுவாரா பிடிக்கப்பட்ட இடத்திற்கு ரோலி கலார்சா மெனீசீஸ் என்ற பெயருடைய வழிகாட்டியுடன் நான் கிளம்பினேன். ரோலியின் தந்தை ஒரு செவிலியர் ஆவார். அவர் சமைபடா என்னுமிடத்தில் சேகுவாராவின் ஆஸ்துமாவிற்காக மருந்து கிடைக்க உதவியவர்.

லா ஹிகேராவின் வடக்கே மூன்று கிமீ தொலைவில் தொடர்ந்து கியூபிராடா டெல் சூரா பள்ளத்தாக்குப் பகுதி உள்ளது. அங்கிருந்து பனை மரங்களும், வாழை மரங்களும் நிறைந்திருந்த பகுதியின் வழியாக சுமார் ஒரு கிமீ நடந்து சென்றோம். அப்பகுதிதான் சேயின் தோழர்கள் அக்காலகட்டத்தில் ஒளிந்திருந்த இடமாகும். அங்கே ஒரு நினைவிடமும், பொலிவியப்படைகளால் பிடிக்கப்பட்டபோது காயப்பட்டிருந்த சே ஒளிந்திருந்த அத்தி மரமும் அங்கே இருந்தன. அவ்விடத்தில் ரோலி சில கோகோ இலைகளை சிதறவிட்டார். “சே குவாராவிற்கு நன்றி கூறுவதற்காக அவருடைய ஆன்மாவிற்கு நான் இந்த கோகோ இலைகளை அர்ப்பணிக்கிறேன்,” என்றார் அவர்.  “சே தனித்த குணமுடையவர்; அவருடைய முயற்சி தோல்வியே, இருந்தபோதிலும் அவர் தன் முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டார். நான் இங்கிருக்கும்போது என் மனதில் ஒரு அநீதி உணர்வு கிளர்ந்தெழுகிறது. சே குவாராவின் தோழர்களை எதிர்த்து நின்றவர்கள் 500 பேர்.”
அப்பள்ளத்தாக்கினைக் கடந்து நாங்கள் உயர்ந்த இடத்தில் 17 வீடுகள் அமைந்திருந்த இடத்திற்குச் சென்றோம். சேகுவாரா பிடிக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட பாதையிலேயே இப்போது நாங்கள் சென்றோம்.  அங்குள்ள அனைத்துக் கட்டடங்களிலும சேகுவாராவின் முகங்கள் காணப்படுகின்றன. வண்ணமடிக்கப்பட்ட அவ்விடத்தில் 70 வயதான இர்மா ரோசடா என்ற பெண்மணியை அவருடைய எஸ்ட்ரெல்லா ஸ்டோரில்  சந்தித்தேன். அமெரிக்க உளவுப்படையால் தேடப்பட்டு, அப்பள்ளியின் அறையில் ராணுவ வீரர்களின் பாதுகாப்பில் இருந்த சேகுவாராவிற்கு கடலை சூப்பினை எடுத்துச் செல்லும்படி அவர்களால் கேட்டுக்கொள்ளப்பட்டவர் இந்த இர்மா. மதியம் 1.10 மணியளவில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.  “அப்பப்பா. எனக்கு ஒரே நடுக்கமாக இருந்தது. செம்மறியாட்டினைப் போல பெரிய தாடி வைத்திருந்ததால் அவரை முழுதாகப் பார்க்க முடியவில்லை.”


1966இல் சேகுவாரா மாறுவேடத்தில் பொலிவியா வந்தபோது அங்கிருந்த ஒரு விடுதியில் அறை எண்.504இல் தங்கினார். தற்போதும்கூட விடுதியில் கேட்டால் அவர் தங்கியிருந்த அறையைக் காட்டுவார்கள். அனைவருடைய ஆதரவைப் பெறவும், போராளிகளைத் திரட்டவும் பொலிவியாவின் தென் பகுதயில் அவரும் அவருடைய கொரில்லாக்களும் அங்கு தங்கியிருந்து ஆயத்தம் ஆயினர்.

அவர் கொல்லப்பட்ட 50ஆம் ஆண்டினை ஒட்டி அதிகமான சேயின் ஆதரவாளர்கள் வருவாளர்கள் என்று அப்பகுதியிலுள்ள இரு விடுதிகள் எதிர்பார்க்கின்றன. அப்போது ககாட்சிகளும், விவாதங்களும் அங்கு நடத்தப்படவுள்ளன. அந்த இடங்களைப் பார்க்கச் செல்வோருக்கு உதவி செய்ய வழிகாட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சேகுவாராவின் உடல் லா ஹிகேராவிற்கு வடக்கே 60 கிமீ தொலைவில் உள்ள வல்லேகிராண்டேயிலுள்ள மருத்துவ மனைக்கு ஹெலிகாப்டர் வழியாக எடுத்துச்செல்லப்பட்டது. அது ஒரு சிறிய நகரம். அங்கு சேகுவாராவின் இறுதிப்பயணத் தடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.  அப்பகுதியில் சே தொடர்பான அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள மூன்று இடங்கள் பார்க்கப்பட வேண்டியனவாகும்.  அங்குள்ள மருத்துவ மனை இன்னும் செயல்பட்டுவருகிறது. ஒரு நாளைக்கு ஆறு முறை அப்பகுதிக்கு வழிகாட்டியோடு செல்லும் வகையில் வசதிகள் உள்ளன. 

அங்கிருந்த வழிகாட்டிகளில் ஒருவரான லியோ லினோ எங்களுடன் சேர்ந்துகொண்டார். வல்லேகிராண்டே மருத்துவ மனையின் பின் பகுதியில்தான் அடையாளம் காட்டப்படுவதற்காகவும் உலக ஊடகங்களின் பார்வைக்காகவும் சேகுவாராவின் உடல் வைக்கப்பட்டிருந்தது.  அங்குள்ள சுவரிலும், கழுவுமிடத்திலும் ஓவியங்கள் எழுதப்பட்டுள்ளன. உள்ளூர் மக்கள் அங்கு மெழுகுவர்த்தியினை ஏற்றி வைப்பதாகக் கூறுகின்றனர். தம் நோய் இவ்விடத்தில் குணமடைந்துவிடுவதாக மக்கள் நம்புகின்றனர். உயிரற்ற கண்கள் அந்த அறையில் உள்ளோரைக் கவனிப்பது போல இருக்கும் நிலை சே குவாரா உயிரோடு இருப்பதைப் போன்ற அதிசயத்தை அம்மக்களிடம் ஏற்படுத்துகிறது.  அதுவே மக்களின் இதுபோன்ற நம்பிக்கைக்குக் காரணமாகும். அந்தக் காட்சியைப் புகைப்படம் எடுத்தவர் பொலிவிய புகைப்பட நிபுணர் பிரெட்டி அல்போர்ட்டா என்பவராவார். 1968இல் கலை விமர்சகர் ஜான் பெர்கரின் இதனை இத்தாலிய நாட்டு ஓவியக்கலைஞரான ஆண்டிரியா மென்டேக்னா வரைந்த மரணித்த இயேசு என்ற ஓவியத்தோடு ஒப்பிடுகிறார்.

50 வருடங்களுக்கு முன் சேகுவாரா இறந்தபோதிலும் பொலிவியாவில் தற்போது அவருடைய பெயர் புனர்வாழ்வு பெற்றுள்ளது எனலாம். அனைவருமே சேகுவாராவை கதாநாயகராகப் பார்க்காவிட்டாலும்கூட வல்லேகிராண்டேயில் ஒவ்வொரு அக்டோபர் மாதத்திலும் அவரை நினைவுகூறும் வகையில் பல நிகழ்வுகள் நடத்தப்பெறுகின்றன. இவ்வருடமும் அவ்வாறு கொண்டாடப்படுகிறது.  ஒரு நிகழ்வில் கியூபாவின் முதல் துணை ஜனாதிபதியான மீகேல் டயஸ் கேனலும் கியூபாவில் தற்போது வாழும் சேகுவாராவின் நான்கு குழந்தைகளும் கலந்துகொள்வர்.  

எங்கள் பயணத்தில் மருத்துவமனையின் முன்னாள் பிணவறையாக இருந்த இடத்திற்கு நாங்கள் நுழையும்போது ரோலி, “இங்குதான் அவர்கள் சேகுவாராவின் கைகளைத் துண்டித்தனர்” என்று முணுமுணுத்தார். கைரேகை அச்சுக்காக ஒரு மருத்துவரால் சேகுவாராவின் கைகள் வெட்டப்பட்டன. பின்னர் அவை காணாமல் போய்விட்டன. பிணவறையிலிருந்து நாங்கள் திறந்த வெளிக்கு வந்தோம். சேகுவாராவின் பொலிவியா முகாமின்போது இறந்த தோழர்களுக்காக நடப்பட்டிருந்த நினைவுக் கற்களைக் கண்டோம். 1967இல் சேகுவாராவின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில், விமான ஓடுதளத்தை அடுத்துள்ள இடத்தில் கடந்த அக்டோபரில், சேகுவாரா அருங்காட்சியம் என்ற புதிய அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.
அந்த அருங்காட்சியகத்தில் சேகுவாரா மற்றும் அவருடைய போராட்டங்களைப் பற்றிய புகைப்படங்கள், போஸ்டர்கள், ஓவியங்கள் காணப்படுகின்றன. அதற்கு அருகில் அவருடைய உடல் இருந்த இடத்தில் கட்டப்பட்ட அடையாளப்படுத்தப்படாத கல்லறையில், 1990கள் வரை தோண்டியெடுக்கப்படாத இடத்தில், நினைவுக்கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது.

ரோலியிடம் நான் சேகுவாராவின் பொலிவியச் சோதனை தோற்றதற்கான காரணத்தைக் கேட்டபோது அவர்  “உள்ளூர் மக்கள் கொரில்லாக்களுக்கு உணவு வகைகளை விற்கப் பயந்தனர்.  டாலரைக் கண்டும் அவர்கள் பயந்தனர். தவிரவும் கொரில்லா எதிர்ப்பு உத்திகளுக்காக பொலிவிய படை வீரர்களுக்குப் பயிற்சி தருவதற்காக அமெரிக்கா ரால்ப் ஷெல்ட்டன் என்ற மேஜரை அனுப்பிவைத்திருந்தது.
அவர்கள் பயிற்சி பெற்ற இரண்டு வாரத்திற்குப் பின்னர் சேகுவாரா பிடிக்கப்பட்டார். பொலிவியத் தலைவர்களிடமிருந்து சேகுவாராவைக் கொல்வதற்கான ஆணை வந்தது. அவரைக் கொல்வதற்கான குறியீடு “அப்பாவிற்கு காலை வணக்கம் சொல்” என்பதாகும்.
50 வருடங்களுக்கு முன் சே இறந்தாலும் அவருடைய இருப்பை தக்க வைத்துள்ளார் ஈவா மொரேல்ஸ். சேயின் பெயர் பொலிவியாவில் எங்கும் உச்சரிக்கப்படுகிறது. : “சே, எப்போதையும்விட இப்போது மிகவும் நெருக்கமாக இருப்பதாகவே உணரப்படுகிறார்.”

இக்கட்டுரையின் மூலக் கட்டுரை :
Revolutionary road : On the trail of Che Guevara's last days in Bolivia, Claire Boobbyer, Guardian   

சே குவாராவின் 50ஆவது நினைவு தினத்தன்று தி இந்து இதழில் வெளியான என் மொழிபெயர்ப்புக் கட்டுரை :
என்றென்றும் நாயகன் சே குவாரா, லாரன்ஸ் பிளைர், டான் காலின்ஸ், கார்டியன்