ஓவியர் ப.தங்கம் (9159582467) அவர்கள் கல்கியின் பொன்னியின் செல்வன் என்ற தலைப்பில் சித்திரக்கதையைப் படைத்துள்ளார். முதல் பகுதியாக உருப்பெற்றுள்ள இந்நூல் மூலமாக நாம் நேசித்த கல்கியின் கதாபாத்திரங்களை நம் முன் ஓவியங்களாகக் கொண்டுவந்துவிடுகிறார் நூலாசிரியர். இந்நூலானது பொன்னியின் செல்வன் புதினத்தின் ஆடித்திருநாள், ஆழ்வார்க்கடியான் நம்பி, விண்ணகரக்கோயில், கடம்பூர் மாளிகை, குரவைக்கூத்து, நடுநிசிக்கூட்டம், சிரிப்பும் கொதிப்பும், பல்லக்கில் யார்?, வழிநடைப்பேச்சு, குடந்தை ஜோதிடர், திடும் பிரவேசம் என்ற 11 அத்தியாயங்களில் முக்கியமான நிகழ்வுகளைக் கொண்டு அமைந்துள்ளது. இவர், 2001இல் ஆரம்பித்த தங்கப்பதுமை இதழின் மேலட்டை இளவரசி குந்தவையை நமக்கு அறிமுகப்படுத்தும் முயற்சியைக் கொண்டு அமைந்ததாகும்.
ஆடித்திங்கள் பதினெட்டாம் நாள் அன்று கதையின் நாயகனான வந்தியத்தேவன் வீரநாராயண ஏரியை ரசித்துக்கொண்டு குதிரையில் வரும் காட்சியில் சித்திரக்கதை தொடங்குகிறது. குடந்தையில் ஜோசியர் வீட்டில் வானதி ஜோசியரிடம் குந்தவைக்கு வரப்போகும் மணமகனைப் பற்றி ஆவலாகக் கேட்டுக் கொண்டிக்கும் நேரத்தில் வந்தியத்தேவன் குதிரையில் அங்கு வந்து ஜோசியரைப் பார்க்க முயல ஜோசியரின் சீடன் அவனைத் தடுக்கிறான். அதையும் மீறி வந்தியத்தேவன் உள்ளே நுழைந்ததும் அங்கே குந்தவையைப் பார்க்கிறான். அத்துடன் சித்திரக்கதையின் முதற்பகுதி நிறைவுறுகிறது.
கல்கி எழுத்தில் வடித்ததை சித்திரத்தில் கொண்டுவருவது என்பது மிகவும் சிரமமான காரியமாகும். இருந்தாலும் அதனை ஒரு சவாலாக ஏற்று நூலாசிரியர் கதையின் நிகழ்வுகளை மனதில் உள்வாங்கிக்கொண்டு எந்த அளவு சுருக்கமுடியுமோ அந்த அளவிற்குச் சுருக்கி அதே சமயம் நிகழ்வுகளின் நேர்த்தி குறையாமல் நமக்கு அளித்துள்ள விதம் பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளது. அவ்வாறான ஓவியங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.
இவ்வாறாகப் பல இடங்களில் தனது சித்திரங்கள் மூலமாக, கல்கி நம்மை அழைத்துச்சென்ற இடங்களுக்கு அழைத்துச்செல்வதோடு, பொன்னியின் செல்வனின் கதாபாத்திரங்களையும் நமக்கு மிகவும் அணுக்கமாகக் கொண்டுவருகிறார் நூலாசிரியர். ஒவ்வொரு கதாபாத்திரமும் வெளிப்படுத்தும் எண்ண உணர்வுகள் மிகவும் அனாயாசமாக ஓவியமாக நூலாசிரியரால் வடிக்கப்பட்டுள்ளது. அவ்வாறாக உணர்வினை சித்திரங்களாகக் கொண்ட இடங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.
- பழுவேட்டரையர் யானை மீது வரும் காட்சியைப் படைக்கும்போது அங்கு ஒலிக்கும் முரசுச்சத்தம் நமக்குக் கேட்பதைப் போன்ற உணர்வு (ப.15)
- வந்தியத்தேவனின் குதிரை மிரண்டு ஓடும்போது அதனைப் பார்த்து மக்கள் ஓடும்போது அவர்களின் முகத்தில் காணப்படும் மிரட்சி (ப.20)
- பலத்த காவலை மீறி கடம்பூர் மாளிகைக்குள் செல்ல முயற்சித்தபோது வீரர்களை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் கந்தமாறனின் பெயரைச் சொன்னதும் அவ்வீரர்கள் பின்வாங்கும்போது வெளிப்படுத்தும் எச்சரிக்கை உணர்வு (ப.32)
- கந்தமாறன் தன் அன்னையிடம் வந்தியத்தேவனை அறிமுகப்படுத்தும்போது, அங்கு இருந்த பெண்கள் கூட்டத்தில் பழுவேட்டரையருடன் பல்லக்கில் வந்த பெண்ணைத் தேடும் ஆர்வம் (ப.40)
- குரவைக்கூத்தும், வெறியாட்டமும் முடிந்தபின்னர் சிற்றசர்களும் அதிகாரிகளும் வேஷம் போட்டவனைப் பற்றிப் பேசிக்கொண்டே வந்தபோது அவர்கள் மனதில் தோன்றிய பதட்டம் (ப.53)
- விருந்துக்கு வந்தவர்களிடையே நள்ளிரவில் பழுவேட்டரையர், சுந்தரசோழரின் உடல்நிலையை மாலை நேரம் வானில் தோன்றும் வால் நட்சத்திரத்தோடு ஒப்பிட்டுப் பேசும்போதும் ஆதித்த கரிகாலருக்கு தம் யோசனை கேட்கப்படாமல் இளவரசுப்பட்டம் சூட்டப்பட்டது குறித்துப் பேசும்போதும் வெளிப்படும் வேதனை (ப.65)
- சுந்தரசோழரின் குமாரர்களான ஆதித்த கரிகாலரும், அருள்மொழியும் பட்டத்திற்கு வருவது நியாயமில்லை என்று கூறி மதுராந்தகருக்குத்தான் பட்டம் உரியது என்று பழுவேட்டரையர் கூறும்போது அடைந்த மனக்கொதிப்பு (ப.75)
- தஞ்சாவூரில் உடல்நலமில்லாமல் இருக்கும் தன் மாமனைப் பார்க்க வந்தியத்தேவன் கிளம்பும்போது கந்தமாறனும் உடன் வந்து அவனை கொள்ளிட நதிக்கரையில் கொண்டுவந்துவிடும்போது இருவர் முகத்திலும் காணப்படும் நட்பின் ஆழம் (ப.82)
- ஆழ்வார்க்கடியானுடன் பேசக்கூடிய வாய்ப்பினைப் பெற்ற வந்தியத்தேவன், அவர் மூலமாக அவருடைய தங்கையாகப் பாவிக்கும் நந்தினியைப் பற்றித் தெரிந்துகொண்டதும் வந்தியத்தேவனின் மனம் உருகிய நிலை (ப.94)
- குந்தவையும் வானதியும் குடந்தை ஜோதிடரைக் காண்பதற்காக வரும்போது அதற்கான காரணத்தை வானதி கேட்க, குந்தவை வெளிப்படுத்தும்போது பொறுப்புணர்வு (98)
- அக்காவை (குந்தவை) மணக்கும் வீரர் எப்போது வருவார் என ஜோசியரிடம் கேட்கும்போது வானதி முகத்தில் தோன்றும் பரிகாசம் (108)
- அதே சமயம் அங்கு குதிரையில் வந்த வந்தியத்தேவன் ஜோசியருடைய சீடன் தடுத்ததையும் மீறி உள்ளே சென்றபோது குந்தவையின் முகத்தைப் பார்த்து தன் கண்களால் வெளிப்படுத்தும் உணர்வு (110)
மன வெளிப்பாட்டு உணர்வுகளுடன் காட்சி அமைப்பு, இயற்கைச்சூழல், சமூக நிலை என்ற பன்முகநோக்கில் அனைத்தையும் சித்திரங்களாக அழகாகத் தீட்டியுள்ளார். வீர நாராயண ஏரிக்கரைக் காட்சி, கோட்டை அமைப்பு, குரவைக்கூத்து நடைபெறும் மேடை, கோட்டை, பல்லக்கு, படகு, போர்க்கருவிகள் பயன்பாடு, அக்கால மன்னர்கள், இளவரசர்கள், மந்திரிகள், மக்களின் ஆடை அணிகலன்கள், அணியும் முறை, குடந்தை ஜோதிடரின் இல்ல அமைப்பு என்ற ஒவ்வொரு நிலையிலும் முழுக்கவனம் செலுத்தியுள்ள விதம் பாராட்டத்தக்கது.
பெருமுயற்சியில் ஈடுபட்டுள்ள நூலாசிரியரைப் பாராட்டுவோம். அவர் தீட்டியுள்ள இந்நூலை வாங்கிப் பார்ப்போம், ரசிப்போம், படிப்போம், ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் செல்வோம், நம் மண்ணின் பல்லாண்டு பெருமையினை முன்னோக்கி எடுத்துச்செல்வோம், வாருங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத்தரப்பினரையும் கவர்ந்திருக்கும் வகையில் அமைந்துள்ளது இந்நூலின் தனிச்சிறப்பு. நூலை மிகவும் சிறப்பாக அச்சிட்டுத் தந்த முல்லைபாரதிக்கு சிறப்பு பாராட்டுகள்.
-------------------------------------------------------------------------------
நூலின் வெளியீட்டு விழா 24 சூலை 2016 அழைப்பிதழ்
நூலின் வெளியீட்டு விழா 24 சூலை 2016 அழைப்பிதழ்
-------------------------------------------------------------------------------
கல்கியின் பொன்னியின் செல்வன், சித்திரக்கதை, முதல் பகுதி
சித்திரம் : ப.தங்கம்
பதிப்பகம் : தங்கப்பதுமை பதிப்பகம், ஞானம் நகர் ஆறாவது தெரு மெயின் ரோடு,
மாரியம்மன் கோயில் அஞ்சல், தஞ்சாவூர் 613 501
கைபேசி : 9159582467
விலை : ரூ.200
விலை : ரூ.200
ஆண்டு : 2016
மிகச் சிறந்த பணி..
ReplyDeleteசின்னஞ்சிறார் தம் மனதில் எளிதாய் பதிவதற்கு சித்திரக் கதைத் தொகுப்பு பேருதவியாக இருக்கும்..
விழா நிகழ்வுகளுடன் புத்தகத்தை அறிமுகம் விதம் அருமை..
வாழ்க நலம்!..
விரிவான முழுமையான விமர்சனம் நன்று விழா நிகழ்வுகளையும் தந்த முனைவருக்கு நன்றி
ReplyDeleteத.ம. 1
How to get copies of the book
ReplyDeleteHi, we can buy it online:
Deletehttp://ocomics.com/books/comics/tamil/ponniyin-selvan/
தங்களின் தகவலுக்கு மனமார்ந்த நன்றி.
Deleteஅருமையான நூல் அறிமுகம்! குழந்தைகள் மட்டும் அன்றி பெரியோரும் வாசிக்க சுவாரஸ்யமாக அமையும் என்று தோன்றுகிறது! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஇப்புத்தகத்தை இணையம் மூலம் வாங்க இயலுமா ?
ReplyDeletehttp://ocomics.com/books/comics/tamil/ponniyin-selvan/
Deleteஆஹா சித்திரக் கதையாகவா.... புத்தகம் எப்படி கிடைக்கும்? இணையம் மூலம் வாங்க வசதி உண்டா?
ReplyDeletehttp://ocomics.com/books/comics/tamil/ponniyin-selvan/
DeleteYou can purchase the book.
DeletePlease contact the Cell No.9159582467
அடடே....
ReplyDeleteஅற்புதமான முயற்சி. பொன்னியின் செல்வனை சித்திரக் கதையாய் படிப்பது எவ்வளவு மனதுக்குப் பிடித்த அனுபவமாய் இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே சத்தோஷமாய் இருக்கிறது.
ReplyDeleteதிரு. தங்கம் அவர்களின் அசத்தலான ஆர்வத்துடன் கூடிய அயராத முயற்சிக்குப் பாராட்டுகள். நூலை நிச்சயம் வாங்கிப் படிப்பேன். தங்கள் அழகான அறிமுகத்திற்கு நன்றி, ஐயா!
அற்புதமான படைப்பு.அதை விமரிசனம் செய்த ஜம்புலிங்கம் ஐயா அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.சுமார் 78 வயதாகும் ஓவியர் தங்கமுத்து ஐயா அவர்கள் இந்த வயதில் தமிழுலகத்திற்கு வழங்கியிருக்கும் பொக்கிஷம் இது.
ReplyDeleteதொடர்ந்து கதை முழுவதையும் வெளியிட வேண்டுகிறேன்.
அரிய முயற்சி.பொன்னியின் செல்வன்தான் எத்தனை பர்மிமானகளைக் கொண்டிருக்கிறது. தங்கம் அவர்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDelete"பரிமாணங்களை" என்று திருத்தி வாசிக்கவும்
Delete‘பொன்னியின் செல்வனை’. சித்திரக் கதையாக படிப்பது ஏற்கனவே நாவலைப் படித்தவர்களுக்கு புது அனுபவமாக இருக்கும். தகவலுக்கு நன்றி!
ReplyDeleteவணக்கம் சகோதரரே
ReplyDeleteகல்கியின் கதைகள் என்றுமே மனதை விட்டு நீங்காது வாழ்ந்து வருபவை.அதில் பொன்னியின் செல்வனை சித்தரக் கதையாக வெளிப்படுத்தி இருக்கும் ஆசிரியருக்கும் அதை அழகாக அறிமுகபடுத்தி விமரசித்து அரிய தகவல்களை தந்த தங்களுக்கும் நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கல்கி வார இதழ்களில் வந்த ஓவியங்கள் இவருக்கு உதவி இருக்கலாம் சித்திரக் கதை ஆசிரியருக்கும் அறிமுகப்படுத்திய உங்களுக்கும் வாழ்த்துகள்
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா
உலகில் யாவரும்பேசப்படும் நூல்பற்றி சிறப்பாக சொல்லி நிகழ்வையும் படம் பிடித்து காட்டியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ஐயா,
ReplyDeleteநான் மிக விரும்பி பல முறை வாசித்த நூல்,,
சித்திரக் தையாய்,, அது பற்றிய தங்கள் அறிமுகம் அருமை அருமை,,
பாராட்டப் படவேண்டிய அரிய முயற்சி. பார்க்க ஆவலாய் உள்ளது. இந்த விவரத்தை வெளிக் கொணர்ந்த நீங்கள் பாராட்டுக்குரியவர்.
ReplyDeleteமிக அருமையான சிறப்பான பணி...
ReplyDeleteஅட!அருமையாக இருக்கிறதே...நல்ல முயற்சி. இதனைப் பகிர்ந்த தங்களுக்கும் மிக்க நன்றி ஐயா. எங்கு கிடைக்கும் என்பதைக் குறித்தும் கொண்டோம். மிக்க நன்றி.
ReplyDeleteஓவிய ஆய்வு அருமை -- உணர்ச்சிக் கூட்டல் மகிழ்ச்சி
ReplyDeleteAvailable for online purchase @ http://nammabooks.com/ponniyin-selvan-comic-Combo
ReplyDeleteவணக்கம் ஐயா, தங்கப்பதுமை பதிப்பகத்தாரை தொடர்பு கொள்ள இயலவில்லை.இப்போதைய தொடர்பு எண்ணை தர வேண்டுமென கேட்டு கொள்கிறேன்.நன்றி
ReplyDelete