09 October 2017

என்றென்றும் நாயகன் சே குவாரா : லாரன்ஸ் பிளைர், டான் காலின்ஸ்

பொலிவியாவில் சேகுவாராவின் மரணத்திற்கு 50 வருடங்களுக்குப் பின்னரும் இன்னும் சர்ச்சையிலேயே அவருடைய மரபுப்பண்பு  : 
லாரன்ஸ் பிளைர், டான் காலின்ஸ், கார்டியன்
கட்டுரையின் சுருக்கமான என் மொழிபெயர்ப்பு
இன்றைய தி இந்து நாளிதழில், அவ்விதழுக்கு நன்றியுடன்

நவம்பர் 1966, நடுத்தர வயதுடைய, உருகுவே நாட்டைச்சேர்ந்த வணிகரான அடோல்போ மேனா கான்சாலெஸ்  பொலிவியாவிலுள்ள லா பாஸ் என்னுமிடத்திற்குச் செல்கிறார். பனிசூழ்ந்த உயர்ந்த இல்லுமானி மலையை ரசித்துக்கொண்டிருக்கும்படி அதன் எதிரே அமைந்துள்ள ஒரு விடுதியில் தங்குகிறார். கண்ணாடியில் தன்னைத்தானே புகைப்படம் எடுத்துக்கொள்கிறார், சற்று பருத்த உடம்பு, வழுக்கைத்தலை, வாயில் எரிந்துகொண்டிருக்கும் சுருட்டுடன். உண்மையில் அவர் அர்ஜன்டைனாவில் பிறந்த புரட்சிக்காரரான, கியூபாவில் அமெரிக்க ஆதரவுடன் நடைபெற்ற புரட்சியை ஒடுக்கிய, ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து அமெரிக்காவிற்கு தன் செய்தியை விடுத்த, மார்க்சீயக் கோட்பாடுகளைப் பற்றியும் கொரில்லா போர்முறையைப் பற்றியும்  எழுதிய, உலகெங்கிலும் சோசலிசத்தைப் பரப்ப விரும்பிய சே குவாரேவே தவிர, வேறு யாருமல்ல. 
சே குவாரா உயிருடன் உள்ள கடைசி புகைப்படம்,
அவர் கொல்லப்படும் சில வாரங்களுக்கு முன் எடுத்தது (வலது புறம் அமர்ந்த நிலையில்)

11 மாதங்கள் கழித்து. அவருடைய மற்றொரு உருவம் கொண்ட புகைப்படம் உலகமெங்கும் அனைவராலும் பார்க்கப்படுகிறது. ஒரு படுக்கையில், உயிரற்ற அவரது உடல், தலை முடி கலைந்த நிலையில், கண்கள் முழுமையாகத் திறந்த நிலையில். அமெரிக்க உளவுத்துறை அவரது மரணத்தை அறிவிக்கிறது. அழுக்காகவும், ரத்தமாகவும் இருந்த அவரது உடலை சுத்தம் செய்ய உதவிய செவிலியரான சுசானா ஒசிநாகா கூறுகிறார் : “அவர்கள், அவரைப் பார்க்க இயேசுவைப் போல இருப்பதாகக் கூறினர்,” ”மக்கள் அவரை இன்னும் புனித எர்னெஸ்டோ என்று கருதி வழிபடுகிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள் அவர் இன்னும் அதிசயங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார் என்று”. அடுத்த திங்கள்கிழமை, 9 அக்டோபர் 2017, அவர் கொலை செய்யப்பட்ட 50ஆம் ஆண்டு. இதனை நினைவுகூறும் வகையில்  ஈவோ பொலிவிய அதிபரான மொரேல்ஸ், ஏகாதிபத்திய எதிர்ப்புக்கான குரலை எழுப்புவது உள்ளிட்ட  பல நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளார்.

1965இல் காங்கோவின் தோற்றுப்போன பயணத்திற்குப் பின் சே பொலிவியாவை தன் போராட்டக் களமாகக் கொள்கிறார்.   1960களில் எதனையும் சாதிக்கலாம் என்ற சூழல் அமைந்திருந்தது. இருந்தபோதிலும் சேயும் அவரது 47 பேர் கொண்ட படையும் நான்சாகுவா பகுதிக்கு வந்தபின் அனைத்தும் எதிர்பார்த்ததற்கு மாற்றாக அமைந்தது. அவர்களுக்கு கியூபாவுடனான ரேடியோ இணைப்பு கிடைக்கவில்லை. தேவைப்படுகின்ற பொருள்களின் வரத்து குறைந்தது. அனைவரும் நோயினாலும், கொடிய பூச்சிகளாலும் பாதிக்கப்பட்டனர்.

சே பொலிவியாவில் இருப்பதை மோப்பம் பிடித்துவிட்டது அமெரிக்கா. அவருடைய படையிலிருந்த வீரர்களில் பாதிக்கு மேற்பட்டோர்  கொல்லப்பட்டனர். மற்றவர்கள் தம் முயற்சியில் முயன்று தோற்றனர். ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட சே, ஒரு கழுதை மீது பயணித்து லா ஹிகேரா என்ற கிராமத்தை அடைந்தார்.  அப்பகுதியில் இருந்த ஒரு விவசாயி அவர்களுக்கு இந்த செய்தியைத் தெரிவித்துவிட்டார். துப்பாக்கிச்சண்டைக்குப் பிறகு ஒரு குண்டு சே ஒரு பெட்டியில் வைத்திருந்த சிறு துப்பாக்கிகளை அழித்தது. காயப்பட்ட சே, 28 வயதான கேரி பிராடோ என்ற அமெரிக்க படைத்தளபதியால் பயிற்சி பெற்ற படையிடம் சரணடைந்தார்.

 சேகுவாராவைப் பிடித்த காரி பிராடோ 

 “சுடாதீர்கள், நான்தான் சே. நான் உயிருடன் இருந்தால் உங்களுக்கு இன்னும் பயனாக இருக்கும்,” என்று சே கூறியதாகச் சொல்லப்படுகிறது.  

கார்டியன் இதழுக்கு அளித்த பேட்டியில் பிராடோ அப்போது நடந்ததை நினைவுகூர்ந்தார். “அவர் அழுக்காகவும், களைத்துப் போயும் இருந்ததைக் கண்டு நான் பரிதாபப்பட்டேன்,” என்றார் பிராடோ. “அவர் ஒரு ஹீரோ என்று உங்களால் நினைத்துப் பார்க்கமுடியாது, எவ்விதத்திலும்.”

சேயையும், அவரது தோழர்களையும் லா ஹிகேராவில் இருந்த ஒரு பள்ளி வீட்டிற்கு அழைத்துச்சென்று தனித்தனி அறைகளில் அடைத்தனர்.  பிராடோ அப்போது சேயுடன் பேசியதாகவும், அவருக்காக உணவு, காபி, சுருட்டுகளைக் கொண்டு வந்து தந்ததாகவும் கூறினார். “நாங்கள் அவரை மிகவும் மரியாதையுடன் நடத்தினோம். வீரர்கள் கொல்லப்பட்ட போதிலும்கூட அவர் மீது எங்களுக்குக் கோபமில்லை,” என்றார் அவர்.

என்னை என்ன செய்யப்போகின்றீர்கள் என்று சே கேட்டபோது பிராடோ சேயிடம் சாந்தா குருஸ் என்னுமிடத்தில்  நீதிமன்றத் தீர்ப்புக்கு அவர்  உட்படுத்தப்படுவார் என்றும் கூறினார். “அதைக் கேட்ட அவர் நீதிமன்றத்தில் தனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணினார்,” என்றார் பிராடோ. ஆனால் விசாரணை நடைபெறவில்லை. அடுத்த நாளே பிராடோவுக்கு அவரைத் தீர்த்துக்கட்டும்படி ஆணை வந்துவிட்டது.

அந்த பொறுப்பினை 27 வயதான  ராணுவ சார்ஜென்டான மாரி டெரான் தானே முன்வந்து ஏற்றுக்கொண்டார். மெசின் துப்பாக்கியினைக் கொண்டு இரண்டே சூட்டில் சேயின் வாழ்க்கையை அவர் முடித்தார். பின்னர் அவரது உடலை அருகிலிருந்த வாலேகிராண்டே என்னுமிடத்திற்கு ஹெலிகாப்டரில் எடுத்துச் சென்றனர். தொடர்ந்து உலக ஊடகங்களுக்கு முன்பாக கைகளற்ற அவருடைய உடல் காட்சிப்படுத்தப்பட்டது. அவருடைய தோழர்கள் அடையாளமிடப்படாத கல்லறைகளில் புதைக்கப்பட்டனர். சுமார் 30 வருடங்கள் அவர்களைப் பற்றி எவ்வித விவரமும் அறிவிக்கப்படவில்லை.

செயின் கொலையில் தனக்கு எவ்வித பங்கும் இல்லை என்ற பிராடோ, அவ்வாறான நடத்தைகள் அக்காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டன என்றார்.

கொல்லப்பட்ட அடுத்த நாள் சேகுவாராவின் உடல்
பொலிவியாவில் வல்லேகிராண்டே என்னுமிடத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருத்தல்


 

“அவர் கொல்லப்பட்டது கண்டிக்கத்ததக்கதே. ஆனால் அப்போது நடந்தனவற்றை நினைத்துப் பார்க்கவேண்டும்…..அக்காலகட்டத்தில் அது நியாயப்படுத்தப்பட்டது,“ என்றார் அவர். சேயின் தோழர்கள் துப்பாக்கிக்குண்டுகளால் சுடப்பட்ட இடத்தில் சுவடுகள் உள்ளன. சே அடைக்கலம் புகுந்த பாறாங்கல்லில் இப்போது ஓவியங்கள் வரைந்து வைக்கப்பட்டுள்ளன.  

அதிகமாக வளர்ந்துள்ள பசுமையான செடிகளுக்கிடையே விவசாயக் கருவிகள் துருப்பிடித்த நிலையில் உள்ளன. சே தன்னுடைய நாட்குறிப்பில் குறிப்பிட்டுள்ள, ஒரு வயதான மூதாட்டியின் அழிந்த நிலையிலான குடிசை, பொலிவியாவின் சென்ட்ரல் பேங்கில் தற்போது பாதுகாக்கப்படுகிறது. 75 குடும்பத்தார் வசித்து வந்த இந்த கிராமத்தில் தற்போது கிட்டத்தட்ட 15 குடும்பத்தார் வசித்து வருகின்றனர். 

“எங்களிடம், அவர்கள் பெண்களைக் கற்பழிப்பார்கள், குழந்தைகளைத் திருடுவார்கள், அனைத்து முதியவர்ளையும் கொன்றுவிடுவார்கள் என்று எங்களிடம் கூறப்பட்டது.” என்று 1967இல் 15 வயதான, புதிதாகத் திருமணமான கிரெசென்சியா சாராட்டே நினைவுகூறுகிறார்.

அக்காலத்தில் விரோதமான உணர்வு பரவியிருந்த போதிலும்கூட, 50 வருடங்களுக்கு முன்பாக சே அங்கு இருந்ததால் லா ஹிகேரா என்ற அவ்விடத்திற்கு புதிய வாழ்க்கைக் கிடைத்தது. அரை டஜன் உணவு விடுதிகள் அக்கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டன. “சே மட்டும் இங்கு வந்திருக்காவிட்டால், எங்களுக்கு வேலை கிடைத்திருக்காது,” என்கிறார் சே கொலை செய்யப்பட்ட இடமான, தற்போது புதுப்பிக்கப்பட்ட பள்ளிவீட்டின் பொறுப்பாளர்களில் ஒருவர். 

உள்ளே எங்கு பார்த்தாலும் உலகெங்கிலுமிருந்து வரும் யாத்ரீகர்கள் எழுதி வைத்துள்ள அஞ்சலிகள் காணப்படுகின்றன.  சேயின் உடல் கிடத்தப்பட்டிருந்த இடத்திற்கும், அவரும் அவருடைய தோழர்களும் புகைப்பட்ட இடங்களுக்கும் சுற்றுலா வழிகாட்டிகள் பயணிகளை அழைத்துச் சென்று வருகின்றனர்.

லா ஹிகேரா மற்றும் வல்லேகிராண்டேக்கு 9 அக்டோபர் 2017 அன்று 10,000க்கும் மேற்பட்டோர் வந்து பார்வையிடுவார்கள் என்றும் அவர்களில் சமூக ஆர்வலர்கள், உள்ளூர் தலைவர்கள், கியூப அலுவலர்கள், சேயின் குழந்தைகள் உள்ளிட்டோர் அடங்குவர் என்றும் கூறப்படுகிறது.  

பொலிவியாவிலுள்ள வல்லேகிராண்டேயில் சேகுவாராவின் நினைவுச்சின்னம்
பயன்படுத்தப்படாத விமான ஓடுதளம் விழாக்காலக் கொண்டாட்டமாக அமைக்கப்படுகிறது. புதிதாக கட்டப்பட்ட சே குவாரா பண்பாட்டு மையம் புதுப்பொலிவு பெறுகிறது. கியூப மருத்துவரும், செவிலியரும் சே தொடர்பான நினைவுச்சின்னங்களில்  புதிதாக வண்ணம் பூசிக்கொண்டிருக்கின்றனர். ஊரே விழாக்கோலம் பெறுகிறது.


சேயின் உடல் பகுதியை கண்டுபிடிக்க உதவிய குழுவில் ஒருவரான, உள்ளூர் வழிகாட்டியான கோன்சாலோ கஸ்மேன் கூறுகிறார். “அப்போது எனக்கு சே யாரென்று தெரியாது. கியூபாவின் விசாரணைக் குழுவினர் எங்களிடம் கூறினர், ‘இப்போது நீங்களும் வரலாற்றின் ஒரு பகுதியாக மாறிவிட்டீர்கள் என்று,’” அவர் தொடர்கிறார். “எங்களைப் பொறுத்தவரை அவர் ஒரு ஹீரோதான் “.

நன்றி : Che Guevara's legacy still contentious 50 yearsafter his death in Bolivia, Guardian [கட்டுரையாசிரியர்கள் : லாரன்ஸ் பிளைர் (லா ஹிகேரா) மற்றும் டான் காலின்ஸ் (சாந்தா க்ரூஸ்)], கார்டியன்


என்றென்றும் நாயகன் சே குவாரா, தி இந்து, 9 அக்டோபர் 2017

16 comments:

  1. நான் அறியாத வரலாற்று செய்திகளை தந்த முனைவர் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  2. முழுவரலாறும் அறிந்தேன்! த ம 3

    ReplyDelete
  3. இப்பவும் இங்கத்தைய ஸ்கூல்களில் சேகுவாரா பற்றிப் படிப்பிக்கிறார்கள்.. அவரின் வரலாறு படிச்சு எங்கள் மகனுக்கு அவரை ரொம்பப் பிடிச்சுப்போச்சாம்.. கதை கதையா சொல்கிறார் வீட்டுக்கு வந்ததும்... மீயும் த.ம-4.

    ReplyDelete
  4. சேகுவாரா பற்றி வாசித்திருக்கிறோம் ஐயா! தங்கள் மொழிபெயர்ப்பும் வாசித்து அறிந்து கொண்டோம் மிக்க நன்றி.

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  5. சே குவேராவிற்கு வீர வணக்கம்

    ReplyDelete
  6. எதிரிகளுக்கும்வீரரான சேகுவாரா உண்மையில் பெரிய புரட்சிகாரர்தான் :)

    ReplyDelete
  7. மிகப்பெரிய புரட்சியாளன் பற்றி அறியத் தந்தீர்கள் ஐயா...

    ReplyDelete
  8. சேகுவாரா ஒரு புரட்சியாளர் என்று மட்டும் நான் அறிந்திருந்தேன் ஆனால் அவரை பற்றி நான் முதன் முதலில் படித்த கட்டுரை உங்களுடையதுதான் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  9. bald head enRu kuripidapattullathu. aanal che niraiya mudiyodu katchi alikirarey..

    ReplyDelete
    Replies
    1. நவம்பர் 1966இல் அவரது தோற்றம்...In 3 November 1966, a middle-aged Uruguayan businessman named Adolfo Mena González touched down in La Paz, Bolivia... and photographed himself – overweight, balding, lit cigar in his mouth – in the mirror. (Guardian கட்டுரையிலிருந்து)

      Delete
  10. சேகுவரா ஒரு போராளின்னு மட்டுமே தெரியும். அவரை பற்றி தெரியாத பல விசயங்களை தெரிஞ்சுக்கிட்டேன். பகிர்வுக்கு நன்றிப்பா

    ReplyDelete
  11. அருமை! மொழிபெய்ர்ப்பு எனச் சொன்னால்தான் தெரியும்! அவ்வளவு தெளிவு அவ்வளவு செறிவு!

    ReplyDelete
  12. சே குவேரா பற்றிய செய்திகள் இதுவர் அறியாதது க்யூபா நாட்டு அதிபரின் நண்பர் என்றும் படித்த நினைவு நீங்களெழுதியது பத்திரிக்கையில் வந்ததற்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  13. அருமையான பகிர்வு.
    சேகுவ்ரா பற்றி மேலும் விஷ்யங்கள் தெரிந்து கொண்டேன்.
    நன்றி.

    ReplyDelete
  14. திரு ஆர். விஜயசங்கர் (மின்னஞ்சல் மூலமாக : vijayasankar.r@thehindu.co.in)
    உயர்திரு ஜம்புலிங்கம் அவர்களுக்கு,
    அருமையான மொழிபெயர்ப்பு. நற்பணியைத் தொடரவும்.
    ஆர். விஜயசங்கர்

    ReplyDelete