முகப்பு

28 December 2014

துளிர் விடும் விதைகள் : வி.கிரேஸ் பிரதிபா

மதுரையில் நடந்த வலைப்பதிவர்களின் விழாவில் சந்தித்த நண்பர்களில் ஒருவர் வி.கிரேஸ் பிரதிபா. அவருடைய வலைப்பூவினை நான் வாசித்த போதிலும் மதுரையில் நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. விழாவின்போது வெளியிடப்பட்ட நூல்களில் அவருடைய கவிதை நூலும் ஒன்று. அவர் தந்து சில நாள்களில் படித்து முடித்தபோதிலும் அதைப் பற்றிப் பகிர்ந்து கொள்ள தற்போதுதான் வாய்ப்பு கிடைத்தது. கடந்த வாரம் ஜி.எம்.பி. ஐயாவின் சிறுகதைகளைப்  படித்த நாம் இந்த வாரம்  கவிதைகளைப் படிப்போம்.



துளிர் விடும் விதைகள் என்று தலைப்பு அமைந்துள்ள போதிலும் கவிதையில் காணலாகும் கருத்துக்கள் பல விருட்சங்களாகக் காணப்படுகின்றன. கவிதைகளைவிட சிறுகதைகளின்பால் எனக்கு அதிகம் ஈடுபாடு உண்டு. ஆனால் இவரது கவிதைகளைப் படித்தவுடன் கவிதைகளின் மேலான ஈடுபாடு அதிகமாகிவிட்டது.

"பணி சார்ந்தும் மொழி
வேறாய் இருக்கலாம்
படிக்கும் நூற்கள் 
பன்மொழியினவாய் இருக்கலாம்.
ஆயினும்
இன்னுயிர்த் தமிழினும் இனியது உண்டோ?"

பிற மொழி குறித்து பெருமை பேசிக்கொள்பவர்கள் சற்று ஆழமாக இக்கவிதையை வாசிக்கவேண்டும். தாய்மொழியின் இனிமையை ரசிக்க இதைவிட சிறந்த சொற்கள் உண்டா என்பது வியப்பே.

"இலக்கியம் படித்தால் அன்றோ,
மருத்துவமும் விண்வெளியும்
பாட்டில் ஒளிந்திருப்பது தெரியும்?"

ஈராயிரமாண்டுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இலக்கியம் இருக்க, அதைவிடுத்து தமிழில் இவ்வாறான சொல்லடைவு இல்லை, பயன்பாடு இல்லை, சொற்கள் இல்லை என்று கூறி பம்மாத்தாகப் பேசித்திரிபவர்க்கு இக்கவிதை ஒரு பாடம்.


"ஆறுகளும் காணாமல் போனால்
ஆழியும் என்ன ஆகுமோ?
வானம் எங்கிருந்து முகருமோ?
உயிர்கள் எங்ஙனம் தழைக்குமோ"

இயற்கை வளங்கள் பல நிலைகளில் வீணடிக்கப்படுவதை வேதனையோடு பகிர்ந்துகொள்கிறார் இக்கவிதையில். கவிஞருடைய சமூகப்பிரக்ஞையினை இக்கவிதையில் காணமுடிகிறது.

"புதிதல்ல என்றாலும்
உன் ஓசை கேட்டவுடன்
துள்ளும் என் உள்ளம்"

நன்கு லயித்து எழுதப்பட்ட வரிகள். இவ்வாறான எண்ணங்களைப் பலர் வாழ்வில் அனுபவித்திருப்பர். ஒவ்வொருவரும் தத்தம் துணைக்காக எழுதப்பட்டதைப் போல உணர்வர். என் உள்ளம் இவ்வாறாகத் துள்ளியுள்ளதை நான் அறிவேன்.

"வன்முறையும் வன்கொடுமையும்
வற்றிட வையகத்து வாழ்வோரெல்லாம்
வளமாய் வாழும் நாளே திருநாள்"

நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் காணப்படுகின்ற அதிர்ச்சி தருகின்ற சில நிகழ்வுகள் நம்மை வேதனைப்பட வைக்கின்றன. உண்மையில் அவ்வாறான செய்திகள் வராத, நடக்காத நாளே நல்ல நாள் என்ற இவருடைய ஆதங்கத்தை நம்மிடம் வெளிப்படுத்துவது அவருடைய மனதின் பாரத்தை குறைக்க மட்டுமல்ல, நம்முடைய எதிர்பார்ப்பை வெளிப்படுத்தவும்தான்.
 
"நானாக நான் இருத்தல் எப்பொழுது?
நானாக நான் இருத்தல் பிழையா?"

நம்மில் பலர் செய்யும் தவறுகளை மிகவும் அழகாக இக்கவிதையில் கொணர்ந்துள்ளார் ஆசிரியர். ஒப்புமை காட்டியே நாம் பழக்கப்பட்டுவிட்டோம். இத் தவறினை குறிப்பிட்ட காலம் வரை நானும் செய்துள்ளேன். ஒருகாலகட்டத்தில் திருத்திக்கொண்டேன். மிக இயல்பான எண்ணத்தை நச்சென்று கூறிய விதம் அருமை.

   
தந்தை, தாய், கணவன், நட்பு, இயற்கை, கலைகள், சமூகம், தாய்மை என்ற பல பொருண்மைகளில் வித்தியாசமான கோணங்களில் அவர் எழுதியுள்ள கவிதைகள் படிப்பவர் மனதில் நன்கு பதிந்துவிடும். இந்த கவிதை நூலை வாங்கி, கவிதைகளை வாசிப்போமே?

துளிர்விடும் விதைகள், வி. கிரேஸ் பிரதிபா, அகரம், மனை எண்.1, நிர்மலா நகர், தஞ்சாவூர் 613 007, தொலைபேசி 04362-239289, 104 பக்கங்கள், ரூ.100

20 December 2014

வாழ்வின் விளிம்பில் : G.M. பாலசுப்ரமணியம்

மதுரையில் நடந்த வலைப்பதிவர்களின் சந்திப்பில் நண்பர்களின் நூல்கள் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. அப்போது வலைப்பதிவர்களை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்த ஆண்டு புதுக்கோட்டையில் நிகழவுள்ள வலைப்பதிவர்களின் சந்திப்பில் மேலும் பல புதியவர்களைச் சந்திப்போம். சந்திப்பின்போது  பெற்ற அனுபவத்தில் ஒன்று அவர்களைச் சந்தித்ததும், அவர்களுடைய நூல்களைப் படித்ததும் ஆகும். மதுரை விழாவில் மூத்த வலைப்பதிவர்களில் ஒருவரான ஜி.எம்.பாலசுப்ரமணியம் ஐயா அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.அவருடைய நூலை அவர் தந்தபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.  


அவருடைய வாழ்வின் விளிம்பில் 16 சிறுகதைகளைக் கொண்ட அருமையான நூல். இதனை நூல் என்பதைவிட வாழ்க்கைப் பதிவு என்று கூறலாம். மிகவும் இயல்பாக அவர் எழுதியுள்ள விதம் படிப்பவர்களை மிகவும் ஈர்க்கச் செய்யும். நகாசு இல்லாமல் நறுக்காகவும் உள்ளன இவரது எழுத்துக்கள். 

"அப்பா, உங்கள் வாழ்க்கையில் என்னவோ நடந்திருக்கிறது. சொந்தங்கள் எல்லாம் நம்மை ஒரு மாதிரி பார்க்கிறார்கள். நீங்களும் எதையோ மறைக்கறாப்போலத் தோன்றுகிறது. என்னவென்று சொல்லலாமில்லையா, நானும் வளர்ந்துவிட்டேன் இல்லையா." (ப.126) என்ற வரிகளைப் படிக்கும்போது ஏதோ நம் வீட்டில் நம் மகள் நேரில் நம்மைப் பார்த்துக் கேட்பதைப் போலத் தோன்றும். இதுவரை நாம் நம் மகளிடம் சொல்லாமல் விட்டுவிட்டோமே என்று உணரும் அளவு ஒரு குற்ற உணர்வு படிக்கும் வாசகர் மனதில் எழுகிறது. இதுதான் அவருடைய வெற்றி எனலாம். இவ்வாறான, அன்றாட வாழ்வில் காணலாகும் நிகழ்வுகளை அவர் நம்முடன் பகிர்ந்துள்ளார்.

கதை கதையாக இருந்துவிட்டால் அதில் விறுவிறுப்பு ஏது? அவ்வாறே வாழ்க்கை வாழ்க்கையாக அமைந்துவிட்டாலும்தான். ஏற்றஇறக்கங்கள், இன்ப துன்பங்கள் என்ற நிலைகளில் நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் நிகழ்வுகள் என்பது எண்ணிலடங்கா. சில நிகழ்வுகள் நம்மை அதிகம் பாதிக்கும். சில நிகழ்வுகள் எவ்வித தாக்கத்தையும் உண்டாக்காது. என்ற நிலையில் அவருடைய சிறுகதைகள் உள்ளன.

"ரங்கசாமிக்கு சாவைக் கண்டு பயம் கிடையாது. சாவது என்பது என்ன...? நிரந்தரத் தூக்கம்...அவ்வளவுதானே. ஆனால், சாவின் முழு வீச்சையும் அதை எதிர்கொள்பவன் எப்படித் தாங்குகிறான்...- யாருக்குத் தெரியும்? செத்தவர் அனுபவங்களைச் சொல்ல முடியுமா?.... " (ப.7) என்ற வரிகளில் கதாபாத்திரத்தின் மூலமாக மரணத்தை எதிர்கொள்ள உள்ளவர் கொள்ளும் மன நிலையை நம் முன் கொணர்கிறார்.

"பகுத்தறிவு என்று பேசினாலேயே அது கடவுள் மறுப்பைக் குறிப்பதுதான் என்ற எண்ணமே மேலோங்கி இருக்கும் இடத்தில் சில நம்பிக்கை சார்ந்த விஷயங்களில், அது எவ்வளவுதான் கூடுதல் புரிதலும், நட்பும் இருக்கும் நண்பனிடம்கூட விவாதிக்க முடிவதில்லை....." (ப.25) இது கதாபாத்திரத்திற்கும் மட்டுமல்ல நமக்கும் முற்றிலுமாகப் பொருந்துவன.  அன்றாடம் நாம் எதிர்கொள்வன.

"எனக்கு அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. நன்றாக இருந்த காலத்தில் யாரையும் மதிக்காமல் இருந்துவிட்டு, இல்லாதபோது யாரும் கவனிப்பதில்லையே என்று கவலை கொள்வதில் எந்தப் பலனும் இல்லை...." (ப.33) என்ற வரிகள் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் படிப்பதை நினைவூட்டுகின்றன.  காலங்கடந்து சிந்திக்கப்படுபவையால் எந்த பயனும் இல்லை என்பதை இவ்வரிகளில் அனாயசமாக எடுத்துரைக்கிறார்.  

"அவள் ஏன் அழவேண்டும்? அழுகை என்பதே ஒரு வடிகால்தானே. அழட்டும் நன்றாக அழட்டும். ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ. எல்லோருக்கும் தெரிந்ததுதானே. மனித உணர்வுகளுக்கு அழுகையும் அதன் பின் வரும் மறதியும் வரம்தானே. இருந்தாலும் ஏறத்தாழ 50 வருட தாம்பத்திய வாழ்வில் கைகோத்துக் கூடவே வந்தவர் திடீரென்று இல்லை என்றாகிவிட்டால்....எத்தனை எத்தனை நினைவுகள். எத்தனை எத்தனை கனவுகள். ஒன்றன் பின் ஒன்றாய் அணிவகுத்து வருகிறதே...." (ப.115). ஏக்கம், வருத்தம், சோகம் என்ற பல்வேறு வகையான மன உணர்வுகளைப் பதியும் ஆசிரியர், படிப்பவர் மனத்தை நெருடுவதைப் போல சொற்றொடர்களைக் கையாண்டுள்ள விதம் நம்முடைய பாட்டியின் மடியில் நாம் படுத்துக்கொண்டிருக்கும்போது நமக்கு ஆதரவாக நம்மை வருடுவதைப் போல மனதுக்கு சுகமாக உள்ளது.   

அந்தந்த இடத்திற்கேற்ற வழக்குச்சொற்களை பயன்படுத்தும்போது அடைப்புக்குறிக்குள்ளோ, வெளியிலோ ஆசிரியர் தந்துள்ளவிதம் பாராட்டத்தக்கது. 
"அவர்களுக்கு அடுத்த நிலையிலுள்ள நாயர் மேனோன் குடும்பங்களில் சம்பந்தம் (தொடுப்பு) வைத்துக்கொள்வார்கள். அது அனுமதிக்கப்பட்ட ஒரு வழக்கம்......" (ப.69)
"ஏஏஏய்ய்ய், அதெல்லாம் பதுவில்லை (வழக்கமில்லை). அவர் நம் வீட்டில் சம்பந்தம் வைப்பதே பெருமை அல்லவா?......" (ப.72)

இந்த அருமையான நூலை, வாழ்க்கையின் யதார்த்தங்களைப் புரிந்துகொள்வதற்காக வாசிக்க அழைக்கிறேன். வாசிப்போம். வாருங்கள்.

வாழ்வின் விளிம்பில்  (சிறுகதைகள்), G.M. பாலசுப்ரமணியம், மணிமேகலைப் பிரசுரம், 7 (ப.எண்.4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை 600 017, தொலைபேசி 24342926, 24346082

14 December 2014

நாலாயிர திவ்யப் பிரபந்தம் : அமலனாதிபிரான், கண்ணிநுண் சிறுத்தாம்பு

 தொண்டரடிப்பொடியாழ்வார்  அருளிய திருமாலை மற்றும் திருப்பள்ளியெழுச்சியைத் தொடர்ந்து திருப்பாணாழ்வார் அருளிய அமலனாதிபிரான் (10 பாடல்கள்) மற்றும் மதுரகவியாழ்வார் அருளிய கண்ணிநுண் சிறுத்தாம்பு (11 பாடல்கள்) ஆகிய இருவருடைய பாசுரங்களையும் அண்மையில் நிறைவு செய்தேன். இவ்விரு ஆழ்வார்களுடைய வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகவும், அவருடைய பாடல்களில் சிலவற்றைப் பொருளுடனும் வாசிப்போம்.

அமலனாதிபிரான்
பாணர் குலத்தில் அவதரித்த திருப்பாணாழ்வார் ஒரு நாள் கண்ணை மூடிக்கொண்டு பாடும்போது, பெருமாளுக்குத் திருமஞ்சன தீர்த்தம் கொண்டுவர அங்குவந்த லோகசாரங்க மகாமுனிவர் இவரைக்கண்டு தூரப்போ என்று சொல்ல, கானத்திலாழ்ந்த இவருக்கு அச்சொல் காதில் விழவில்லை.  முனிவர் ஒரு கல்லை எடுத்து எறிய, அம்முகத்தில் பட்ட அடி நெஞ்சில் பட்டது. உறக்கம் இன்றி இருந்த முனிவர் கனவில் காட்சியளித்த அரங்கன் நமக்கு அந்தரங்கனான பாண் பெருமாளை நீர் தாழ்வாக நினையாமல் உன் தோளிலே ஏற்றிக்கொண்டு  நம்மிடம் அழைத்துவாரும் என்று கூற, அவரும் அவ்வாறே செய்தார். ஆழ்வாரும் கண்களாரக் கண்டு  திருவடி முதல் திருமுடி வரை அனுபவித்து  அமலனாதிபிரான் என்ற திவ்யப்பிரபந்தத்தில் 10 பாடல்களைப் பாடினார்.
பாரம் ஆய பழவினை பற்று அறுத்து என்னைத் தன்
வாரம் ஆக்கி வைத்தான்; வைத்தது அன்றி என்னுள் புகுந்தான்;
கோர மாதவம் செய்தனன் கொல்?
அறியேன் அரங்கத்து அம்மான் திரு
ஆர மார்வு அது, அன்றோ அடியேனை ஆட்கொண்டதே.
(எண்.931)
 
மிகவும் பொறுக்கமுடியாத சுமையாகிற அனாதையான பாவங்களின் தொடர்பைத் தொலைத்து அதனால் பாவம் நீங்கப் பெற்ற அடியேனைத் தன்னிடத்தில் அன்புடையவனாகப் பண்ணிவைத்தான் ஸ்ரீரங்கநாதன். இவ்வாறு செய்ததும் அல்லாமல் என் மனத்திலும் நுழைந்துவிட்டான். இப்படிப்பட்ட பாக்கியத்தைப் பெறுவதற்கு உறுப்பாக நான் உக்கிரமானதொரு தவத்தை முற்பிறவியில் செய்திருப்பேனோ என்னவோ? அறிகினேன் இல்லை. ஸ்ரீரங்கநாதனுடைய பிராட்டியும், முத்தாரத்தையும் உடையதான அத்திருமார்பு அன்றோ அடியவனான என்னை  அடிமைப்படுத்திக் கொண்டது.

கையின் ஆர் சுரி சங்கு அனலாழியர் நீள் வரை போல்
மெய்யனார் துளப விரையார் கமழ் நீள் முடி எம்
ஐயனார் அணி அரங்கனார் அரவின் அணைமிசை மேய மாயனார்
செய்ய வாய், ஐயோ! என்னைச் சிந்தைக் கவர்ந்ததுவே! 
(எண்.933)
 
திருவரங்கன் தனது திருக்கைகளில் சுழியை உடைய சங்கையும், தீ வீசுகின்ற திருவாழியையும் ஏந்தி நிற்கின்றான். அவனுடைய திருமேனி பெரியதொரு மலை போன்றது. அவன் திருத்துழாய்ப் பரிமளம் வீசும் திருமுடியை உடையவன். எனக்கு சுவாமி. அரங்கத்தில் பள்ளி கொண்டிருப்பவன். திருவனந்தானாகிய திருப்பள்ளியின் மீது சாய்ந்து கிடக்கின்றான். ஆச்சரிய பூதனான அவனது சிவந்த திருப்பவளவாய் பெண்களுடைய சிவந்த அதரத்திலே ஈடுபட்டிருந்த என் மனத்தைப் தன் பக்கலிலே இழுத்துக் கொண்டது. 
 


 


மதுரகவியாழ்வார் 

ஆழ்வார் திருநகரிக்கு அருகிலுள்ள திருக்கோளூர் என்னும் திவ்யதேசத்தில் பிராமண குலத்தில் பிறந்த இவர் அனைத்துக்கலைகளையும் கற்று மதுரகவி என்னும் பெயர் பெற்றார். ஒரு நாள் திருக்கோளூர் பெருமானைத் திசை நோக்கித் தொழக் கருதித் தெற்குத் திக்கில் கண் செலுத்தியபோது பேரொளி இவர் கண்ணுக்குப் புலப்பட, அது எங்கிருந்து வருகிறது என்று அறிந்து ஆராய்ந்த அளவில் திருப்புளி ஆழ்வார் அடியில்  விளங்கிய நம்மாழ்வாரைக் கண்டு அவருக்குக் கைங்கர்யம் செய்தார். அவருக்காகத் தான் பாடிய கண்ணிநுண் சிறுத்தாம்பு என்ற பிரபந்தத்தையும், பிற பிரபந்தங்களையும் இசையோடு பாடிப் பரப்பினார்.


கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டு உண்ணப்
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்,
அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே. 
(எண்.937)

உடம்பிலே உறுத்தும்படி பல முடிகளை உடையதாய், உடம்பிலே அழுந்தும்படி நுட்பமாய், காட்டப் போதாதபடி சிறிதாயிருக்கிற கயிற்றினால் யசோதைப் பிராட்டித் தன்னைக் கட்டும்படி பண்ணுவித்துக்கொண்ட பெரிய ஆச்சர்ய சக்தியை உடையவன். எனக்குச் சுவாமியான எம்பெருமானை விட்டு ஆழ்வானை அணுகி அடைந்து, தெற்குத் திசையிலுள்ள ஆழ்வார் என்று அவரது திருநாமத்தைச் சொன்னால் மிக இனிமைதாய் இருக்கும். என் ஒருவனுடைய நாவுக்கே அமுதம் ஊறும்.


அன்பன் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே.
(எண்.947)

அடியாரிடம் அன்பு பூண்ட எம்பெருமானை அடைந்த எல்லா பாகவதர் பக்கலிலும் பக்தியுடையவரான நம்மாழ்வார் விஷயத்திலே பக்தனாயிருந்து கொண்டு மதுரகவி அருள் செய்த இந்தத் திவ்வியப் பிரபந்தத்தைத் தங்களுக்குத் தஞ்சமாக நினைத்திருப்பவர்களுக்கு இடம் பரமபதம்.

நாலாயிர திவ்யப் பிரபந்தம், மூலமும் தெளிவுரையும், முதல் தொகுதி, உரையாசிரியர் முனைவர் இரா.வ.கமலக்கண்ணன், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2011, (நான்கு தொகுதிகள்) ரூ.1200, தொலைபேசி: 9941863542, 9094963125, 9380630192, 28144995, 28140347, 43502995

இதுவரை நாம் நிறைவு செய்த பிரபந்தங்கள்
 பெரியாழ்வார் திருமொழி

07 December 2014

அலகாபாத் முதல் ரிஷிகேஷ் வரை : ஜ. பாக்கியவதி

அண்மையில் நாங்கள் சென்ற தலப்பயணம் தொடர்பாக என் மனைவி திருமதி பாக்கியவதி எழுதியுள்ள கட்டுரை இன்றைய தினமணி இதழில் கொண்டாட்டம் பகுதியில் வெளியாகியுள்ளது. இக்கட்டுரையைப் பகிர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். இதனை வெளியிட்ட தினமணி இதழுக்கு நன்றி. 


காசி மற்றும் பிற தலங்களுக்குக் புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக தஞ்சையிலிருந்து ரயிலில் கிளம்பினோம்.

 8.10.2014 அன்று விடியற்காலை அலகாபாத் வந்து, திரிவேணி சங்கமத்தில் நீராடச் சென்றோம். கங்கா, யமுனா மற்றும் கண்ணுக்குத் தெரியாத சரஸ்வதி சங்கமிக்கும் இடத்திற்குப் படகில் சென்று புனித நீராடிவிட்டுத் திரும்பினோம். மூன்று ஆறுகளும் சேரும் அவ்விடத்திலிருந்து சூரிய உதயம் பார்த்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. தொடர்ந்து ஆனந்த பவனம்.

 கயா: 9.10.2014 காலை கயா வந்தடைந்தோம். காலையில் விஷ்ணுதத் கோயில் சென்றோம். அங்கு ஒரு நபருக்கு ரூ.270 வீதம் எங்கள் குழுவில் பலர் இறந்தவர்களுக்குத் திதி கொடுத்தனர். தொடர்ந்து மங்களகெüரி கோயிலுக்கும் சக்திபீடத்திற்கும் சென்றோம்.

 புத்தகயா: மதியம் புத்தகயா. அங்கிருந்த புத்தர் கோயிலான மகாபோதி கோயில் சென்றோம். அழகான புத்தரைப் பார்த்தோம். கோயில் வளாகத்தில் புத்தர் ஞானம் பெற்றதாகக் கூறப்படும் புகழ் பெற்ற போதி மரத்தினைப் பார்த்தோம். மரத்தின் அருகில் யாரும் செல்லாமல் இருப்பதற்காக மரத்தைச் சுற்றிலும் பாதுகாப்புச் சுவர் இருந்தது. போதி மரத்தருகே புகைப்படம் எடுத்துக் கொண்டோம். கோயிலைச் சுற்றியும் காணப்பட்ட அமைதியான சூழல் மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்தது. தொடர்ந்து தாய்லாந்து புத்தர் கோயிலைப் பார்த்தோம். அதற்குப் பின்னர் அமர்ந்த நிலையில் பார்க்க கம்பீரமாக இருந்த புத்தர் சிலையில் என்னவொரு சோகம்?

 காசி: 10.10.2014 காலை நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்த காசி மண்ணில் காலடி வைத்தோம். கங்கையில் நாங்கள் இருவரும், எங்கள் குழுவினருடன் புனித நீராடினோம். காலையில் காமகோடீஸ்வரர் கோயிலுக்குச் சென்றோம். பின்னர் கேதாரநாதர் கோயிலுக்குச் சென்றோம். இக்கோயிலின் பின்புறம் கங்கை ஓடுவதைப் பார்க்க அழகாக இருந்தது. அடுத்தபடியாக காசி விசுவநாதர் கோயிலுக்கு நுழைவாயிலின் வழியாகச் சென்றோம். கூட்டம் அதிகமாக இருந்தது. பலத்த பாதுகாப்பு இடப்பட்டிருந்தது. நாங்கள் அனைவரும் சோதனையிடப்பட்டே அனுப்பப்பட்டோம். பேனா, கேமரா, செல்பேசி என எதையும் வைத்துக் கொள்ள அனுமதியில்லை. வலப்புறத்தில் அமைந்துள்ள அன்னபூரணி அம்மன் கோயிலுக்குச் சென்றோம். தங்க அன்னபூரணியைக் கண்குளிரக் கண்டோம். அவர் அருகில் வெள்ளியால் ஆன சிவனை பிச்சாண்டவர் கோலத்தில் கண்டோம். அன்னபூரணி சிவனுக்கு அன்னம் இடுவதாக வரலாறு கூறினர். வரிசையில் தொடர்ந்து சென்று காசி விசுவநாதர் கோயிலை அடைந்தோம். கோயிலுக்குள் போகும்போது பக்தர்கள் பூ, பால், நீர் போன்ற ஏதாவது ஒன்றைக் கொண்டு செல்வதைக் காணமுடிந்தது. அதை வைத்து அவர்களே லிங்கத் திருமேனிக்கு அபிஷேகம் செய்கிறார்கள். நம்மூர் கோயில்களில் கருவறைக்குள் பக்தர்களை அனுமதிப்பதில்லை. இங்கு அவரவர் செய்வதால் இறைவனையே நேரில் சென்று அடைந்தது போன்ற ஓர் பேரின்பத்தை பக்தர்கள் மனதார  அடைகிறார்கள்.

 கங்கை: மாலை கங்கையாற்றில் படகிலிருந்தபடியே 64 கங்கைக்கரைகளில் மன்மந்திர் காட், அகில்பாய் காட், முன்ஷி காட், நாரதர் காட், மணிகர்ணீஸ்வரர் காட், அரிச்சந்திரா காட் உள்ளிட்ட சில கரைகளைப் பார்த்தோம். இவற்றில் மணிகர்ணீஸ்வரர் காட் மற்றும் அரிச்சந்திரா காட் என்ற இரு இடங்களிலும் சடலங்கள் எரியூட்டப்படுவதைக் கண்டோம். சடலங்கள் எரியும்போது எவ்வித துர்நாற்றமும் வீசாது என்று கூறினர். அதை நேரிலும் உணர்ந்தோம். அடுத்த இரு நாள்கள் காசியிலுள்ள பிற முக்கியமான கோயில்களுக்குச் சென்றோம். காசிப் பயண நிறைவாக இந்தியாவின் புகழ் பெற்ற காசி இந்து பல்கலைக்கழகம் சென்றோம். பல்கலைக் கழக வளாகத்தில் இருந்த காசிவிசுவநாதர் கோயிலுக்குச் சென்று அவரை  வணங்கினோம்.

 மிர்சாபூர்: 13.10.2014 அன்று மிர்சாபூரிலுள்ள முதல் சக்தி பீடம் என அழைக்கப்படும் பிந்திவாசினி கோயில் சென்றோம். அம்மனின் பல் விழுந்த வகையில் அவ்விடம் முக்கியத்துவம் பெற்றதாகக் கூறினர். மதியம் சீதாமடி சென்றோம். ரம்மியமான சூழலில் சுவரில் சீதையின் சிற்பத்தைக் காணமுடிந்தது.

 ஹரித்வார்: 14.10.2014 அன்று புறப்பட்டு 15.10.2014 அன்று ஹரித்வார் வந்தடைந்தோம். அங்கு காயத்ரி யாகசாலை, ஆனந்தமாயி ஆசிரமம், சீதளமாதா கோயில், சிவசக்தி பீடம், லட்சுமிநாராயணா கோயில், தட்சேஸ்வர மகாதேவ் கோயில், தட்சண் யாககுண்டம், வைஷ்ணவதேவி எனப்படும் மாதாலால் தேவி கோயில், பூமாநிகேதன் கோயில், படிக லிங்கம், ருட்திராட்ச மரம், மரண பயம் நீக்குபவர் எனப்படும் மிருத்துஞ்சேஸ்வரர் கோயில் ஆகிய இடங்களுக்குச் சென்றோம். ஒரு நாள் முழுவதும் பல கோயில்களைக் காணும் வாய்ப்பைப் பெற்றோம். வைஷ்ணவதேவி எனப்படும் மாதாலால் தேவி கோயில் மற்றும் பூமாநிகேதன் கோயில் இருந்த இடத்தில் ஒரே தெருவில் அதிக எண்ணிக்கையிலான கோயில் களைக் காணமுடிந்தது.

 ரிஷிகேஷ்: 6.10.2014 அன்று ரிஷிகேஷுக்கு ரோப் காரில் சென்றோம். ராவணனைக் கொன்ற தோஷம் நீங்கிய லட்சுமண் கோயில், லட்சுமணன் ஜுலா எனப்படும் பெரிய தொங்கு பாலம், பத்ரிநாத் கோயில், பெரிய லிங்க பானத்தைக் கொண்ட அகிலேஸ்வர் கோயில், துர்கா கோயில், திரயம்பகேஸ்வரர் கோயில், ராமன் ஜுலா எனப்படும் மற்றொரு பெரிய தொங்கு பாலம், பத்ரி நாராயணன் என்கிற சத்ருகனன் கோயில் ஆகியவற்றுக்குச் சென்றோம். இவை அனைத்தும் ரிஷிகேஷில் மலைமீது இருந்தன. அனைத்துக் கோயில்களையும் பார்த்துவிட்டு ஹரித்வார் திரும்பினோம்.

இவ்வளவு கோயில்களைப் பார்த்த எங்களுக்கு நம்மூர்க் கோயில்களைப் பார்த்ததுபோன்ற உணர்வு இல்லை. இங்கே எல்லா சுவாமிகளும் மார்பிளில் இருக்கின்றன. நந்தி, லிங்கம் ஒழுங்கின்றி பக்கம் மாறி பல இடங்களில் இருந்தன. விபூதியோ, குங்குமமோ தரப்படவில்லை. காசியிலும் பிற இடங்களிலும் ஜிலேபி சூடாகப் போட்டுத் தருவது அப்பகுதியின் சிறப்பாக இருந்தது. இரு நாள்கள்கூட தாங்காது என்று கூறினர். அடுப்பிலிருந்து அவ்வப்போது போட்டு எடுத்து சாப்பிடும்போது மிகவும் ருசியாக இருந்தது. இங்கே பெரும்பாலும் கடுகு எண்ணெயில்தான் சமையல். நாங்கள் தங்கியிருந்த பகுதிகளில் சத்திரத்தில் தமிழக உணவு வகைகளை உண்ணும் வாய்ப்பு கிடைத்தது. மக்களின் வித்தியாசமான பழக்க வழக்கங்களையும், ஆடை அணியும் முறைகளையும் காணமுடிந்தது. காசியில் தினமணி வாங்கிப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ் செய்தித்தாளைப் பார்க்க எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. எங்களது இந்த அனுபவம் வாழ்நாளில் மறக்கமுடியாததாக அமைந்தது.  - ஜ.பாக்கியவதி
---------------------------------------------------------------------------------------------------
 கட்டுரையை தினமணி இதழில் பின்வரும் இணைப்பில் காணலாம்.
அலகாபாத் முதல் ரிஷிகேஷ் வரை, தினமணி, கொண்டாட்டம், 7.12.2014 
---------------------------------------------------------------------------------------------------

29 November 2014

கோயில் உலா : நவம்பர் 2014

8.11.2014 அன்று தஞ்சாவூர் சைவசித்தாந்த ஆய்வு மைய நிறுவனர் முனைவர் வீ.ஜெயபால் அவர்களுடன் தலப்பயணம் சென்றோம். இப்பயணத்தில் கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருஆலம்பொழில், திருக்காட்டுப்பள்ளி, திருப்பேர்நகர், திருவானைக்காவல், திருச்சி, திருவெறும்பியூர் ஆகிய இடங்களுக்குச் சென்றோம். இவற்றில்  திருஆலம்பொழில், திருக்காட்டுப்பள்ளி, திருப்பேர்நகர் மூன்று கோயில்கள் தற்போது முதல் முறையாக நான் செல்கிறேன். பிற கோயில்களுக்கு முன்னர் பல முறை சென்றுள்ளேன். 


1)கண்டியூர்(பிரம்மசிரகண்டீஸ்வரர்/மங்களாம்பிகை/அப்பர் பாடல்)
தேவாரப்பாடல் பெற்ற சோழ நாட்டுத் தென்கரைத்தலம். தஞ்சை திருவையாறு சாலையில் உள்ளது. இக்கோயிலில் பிற்காலத்தில் வைக்கப்பட்ட பிரம்மா, சரஸ்வதியை திருச்சுற்றில் காணலாம். சப்தஸ்தானத் தலங்களில் இதுவும் ஒன்று.

கண்டியூர் இராஜகோபுரம்


கண்டியூர் விமானம்


2)திருப்பூந்துருத்தி(புஷ்பவனேஸ்வரர்/சௌந்தரநாயகி/அப்பர் பாடல்)
தேவாரப்பாடல் பெற்ற சோழ நாட்டு தென்கரைத்தலம். கண்டியூரிலிருந்து திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் சாலையில், கண்டியூரை அடுத்து உள்ளது.  இத்தலத்தில் நந்தி விலகிய நிலையில் உள்ளது. அப்பர் உழவாரத் தொண்டு செய்த தலம் என்று எண்ணி, காலால் மிதிக்க அஞ்சி வெளியில் நின்ற ஞானசம்பந்தருக்கு, இறைவன் நந்தியை விலகச் செய்து காட்சி தந்ததாகக் கூறுவர். சப்தஸ்தானத் தலங்களில் இதுவும் ஒன்று.
திருப்பூந்துருத்தி இராஜகோபுரம்

திருப்பூந்துருத்தி விலகிய நிலையில் நந்தி 




3)திருஆலம்பொழில்(வடமுலேஸ்வரர்/ஞானாம்பிகை/அப்பர் பாடல்)
தேவாரப்பாடல் பெற்ற சோழ நாட்டு தென்கரைத்தலம். கண்டியூரிலிருந்து திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் சாலையில், மேலத்திருப்பூந்துருத்தியை அடுத்து உள்ளது.  திருவையாற்றிலிருந்து பூதலூர் வழியாகத் திருச்சி செல்லும் பேருந்தில் வந்தால் இத்தலத்தில் இறங்கலாம்.பல நாள்களாக நான் பார்க்க ஆசைப்பட்ட கோயில். தற்போதுதான் என் விருப்பம் நிறைவேறியது. கோயிலில் தற்போது திருப்பணி நடைபெற்றுவருகிறது. பிரகாரத்தில் ஐந்து லிங்க பானங்கள் உள்ளன.





திருஆலம்பொழில் இராஜகோபுரம் 

திருஆலம்பொழில் பிரகாரம்
4)திருக்காட்டுப்பள்ளி(அக்னீஸ்வரர்/சௌந்தரநாயகி/ஞானசம்பந்தர்,அப்பர் பாடல்)
மேலைத்திருக்காட்டுப்பள்ளி என்றழைக்கப்படும் தேவாரப்பாடல் பெற்ற சோழ நாட்டு தென்கரைத்தலம். திருச்சி, தஞ்சையிலிருந்தும், கண்டியூர், திருவையாறு, கல்லணை முதலிய இடங்களிலிருந்தும் இத்தலத்திற்குப் பேருந்துகள் உள்ளன. கோயிலின் கருவறை சற்று தாழ்வான நிலையில் உள்ளது. திருக்காட்டுப்பள்ளியில் குடமுருட்டி ஆறு பிரிகிறது.

திருக்காட்டுப்பள்ளி இராஜகோபுரம்
 திருக்காட்டுப்பள்ளி கருவறை

5)திருப்பேர் நகர் (அப்பாலரெங்கநாதன்/கமலவல்லித்தாயார்/நம்மாழ்வார்)
தேவாரப்பாடல் பெற்ற சோழ நாட்டு தென்கரைத்தலங்களைப் பார்த்து வந்துகொண்டிருந்தபோது, மங்களாசாசனம் செய்யப்பெற்ற கோவிலடி எனப்படும் திருப்பேர் நகர் சென்றோம். திருச்சியிலிருந்து 15 மைல் தொலைவில் இத்தலம் உள்ளது. மற்றொரு திவ்யதேசமான அன்பில் என்னுமிடத்திலிருந்து கொள்ளிட நதியின் மறுகரையைச் சேர்ந்தால் இத்தலத்தை அடையலாம். கோயிலில் தற்போது திருப்பணி நடைபெற்றுவருவதால் மூலவரைப் பார்க்கமுடியவில்லை.

அப்பாலரெங்கநாதர் கோயில், திருப்பேர் நகர் 
அப்பாலரெங்கநாதர் கோயில், திருப்பேர் நகர்

6)திருவானைக்காவல்(ஜம்புகேஸ்வரர்/அகிலாண்டேஸ்வரி/மூவர் பாடல்)
திருஆனைக்கா என்றழைக்கப்படும் தேவாரப்பாடல் பெற்ற சோழ நாட்டு வடகரைத்தலம். திருச்சிக்கு அருகில் உள்ளது. பஞ்சபூதங்களுள் நீர்த்தலமாக விளங்குகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வரும்போது கருவறையில் உள்ள லிங்கத்திருமேனி தண்ணீர் சூழப் பார்த்துள்ளேன். தற்போது அவ்வாறு இல்லை. கருவறை சற்றுத் தாழ்ந்த நிலையில் உள்ளது.


திருவானைக்காவல் இராஜகோபுரம்
திருவானைக்காவல் நாலுக்கால் மண்டபம்
7)திருச்சிராப்பள்ளி(தாயுமானவர்/மட்டுவார்குழலி/ஞானசம்பந்தர்,அப்பர் பாடல்)
சிராப்பள்ளி என்றழைக்கப்படும் தேவாரப்பாடல் பெற்ற சோழ நாட்டு தென்கரைத்தலம். திருச்சி நகரின் நடுவில் உள்ள மலைக்கோட்டையில் இக்கோயில் உள்ளது. மலையடிவாரத்திலிருந்து 258 படிகளைக் கடந்தபின் கோயிலை அடையலாம். வலப்புறம் உச்சிப்பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதை உள்ளது. அப்பாதையில் சென்று உச்சிப்பிள்ளையாரை வணங்கினோம். மலையிலிருந்து நகரைப் பார்க்க மிகவும் அற்புதமாக இருந்தது.
திருச்சி தாயுமானவர் கோயில்
8)திருவெறும்பூர்(எறும்பீஸ்வரர்/நறுங்குழல்நாயகி/அப்பர்)
திருஎறும்பியூர் என்றழைக்கப்படும் தேவாரப்பாடல் பெற்ற சோழ நாட்டு தென்கரைத்தலம். திருச்சி தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் உள்ளது. இக்கோயில் மலை மீது உள்ளது.  கிழக்கு நோக்கிய வாயில் வழியாக 125 படிகள் சென்றால் மேலே கிழக்கு நோக்கிய சன்னதியைக் காணலாம். எங்களது பயணத்தின் நிறைவாக இக்கோயில் அமைந்தது. 
துணை நின்றவை
திருமுறைத்தலங்கள், பு.மா.ஜெயசெந்தில்நாதன், வர்த்தமானன் பதிப்பகம், 21, ராமகிருஷ்ணா தெரு, தியாகராய நகர், சென்னை 6/00 017, தொலைபேசி  28144995, 28140347,43502995


108 வைணவ திவ்யதேச வரலாறு, ஆ.எதிராஜன், ஸ்ரீவைணவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், 85/1, கோட்டையூர் சாலை, செக்காலை, காரைக்குடி, தொலைபேசி  425929 


நன்றி : இத்தலச்சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்து எங்களை அழைத்துச் சென்ற முனைவர் வீ.ஜெயபால்  மற்றும் குழுவினர், புகைப்படம் எடுக்க உதவிய திரு வேதாராமன்  ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி.
நன்றி : இத்தலச்சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்து எங்களை அழைத்துச் சென்ற முனைவர் வீ.ஜெயபால்  மற்றும் குழுவினர், புகைப்படம் எடுக்க உதவிய திரு வேதாராமன்  ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி.

22 November 2014

தஞ்சைப் பெரிய கோயில் சோழர் கால ஓவியங்கள் : தமிழ்ப்பல்கலைக்கழகம்

தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்த காலகட்டத்தில் பல்கலைக்கழகக் கல்வெட்டுத்துறையில் நடைபெற்ற சிந்து வெளி எழுத்துக் கருத்தரங்கு (Indus Script Seminar) என்ற   ஒரு கருத்தரங்கு மறக்கமுடியாத இரு நிகழ்வுகளை எனக்குத் தந்தது. ஒன்று மகிழ்ச்சி. மற்றொன்று கசப்பு.

முதலில் மகிழ்ச்சியைத் தந்த அனுபவம். அப்போதைய பதிவாளர் என்னை அழைத்து வரலாற்றறிஞர் ஐயா ஐராவதம் மகாதேவன் அவர்களிடம் அறிமுகப்படுத்தி மூன்று நாள்களுக்கு நடைபெறவுள்ள கருத்தரங்கிற்குரிய  ஏற்பாடுகளைச் செய்யும்படிக் கூறினார். அப்போது கருத்தரங்கு, பேராளர்கள், அறிஞர்கள், கட்டுரை வாசிப்பு, கடவுச்சீட்டு போன்றவை பற்றி எனக்கு என்னவென்றே தெரியாது. உள்நாட்டு, வெளிநாட்டு அறிஞர்கள் (30 பேர் என நினைக்கிறேன்) கலந்துகொண்ட கருத்தரங்கில் அரங்க அமைப்பு முதல் அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ளும் பொறுப்பில் என் உடன் பணியாற்றியவர் திரு மகேந்திரராவ். கருத்தரங்கின் ஓர் அங்கமாக அறிஞர்கள் பெரிய கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அப்போது அவர்களுடன் நானும் சென்றேன். முதன்முதலாக தஞ்சாவூர் பெரிய கோயில் விமானத்தின் உள்ளே காணப்படும் ஓவியங்களைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. தொடர்ந்து பல முறை அந்த ஓவியங்களைப் பார்த்துள்ளேன். கருத்தரங்கிற்கு லண்டனிலிருந்து வந்திருந்த அறிஞர் கீனியர் வில்சன் என்பவருடைய கடவுச்சீட்டை அலுவலக நண்பர் இடம் மாற்றிவைத்துவிட்டு அதனை நாங்கள் தேடிக் கண்டுபிடிப்பதற்குள் பட்ட மன உளைச்சல் ஒரு கசப்பான அனுபவம். கடவுச்சீட்டு கிடைத்தபின் தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு சிறப்பாக நிறைவு செய்தோம். நிறைவு நாளன்று  அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்களும் பதிவாளர் அவர்களும் எங்களை அதிகம் பாராட்டினர்.  பெரிய கோயில் ஓவியங்களைக் காண அரிய வாய்ப்பு கொடுத்ததே இந்த கருத்தரங்குதான்.


 ஆயிரம் ஆண்டு கால வரலாற்றைக் கூறும் அந்த ஓவியங்கள் தஞ்சைப் பெரிய கோயில் சோழர் கால ஓவியங்கள் என்ற தலைப்பில் நூலாக தமிழ்ப்பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அரிய ஓவியங்களைப் பற்றிய செய்திகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்கின்றேன்.

முன்னுரையில் துணைவேந்தர்
".......தஞ்சைப் பெரிய கோயிலின் சோழர் கால ஓவியங்கள் 1931ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கோவிந்தசாமி அவர்களால் கண்டறியப்பட்டிருந்தும் முழுமையாக நூல்  வடிவில்முதன்முறையாக ஆய்வாளர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் அளிக்கும் பெருமையினைத் தமிழ்ப்பல்கலைக்கழகம் பெறுகிறது....."

சோழர்கால ஓவியப் பகுதிகள்
"கோயில் விமானத்தின் தென் பகுதியில் உள்ள ஏணியில் ஏறித் திருச்சுற்றுப் பாதை வழியாக வடக்குப் பக்கம் சென்றால் இப்பாதையின் இரு பக்கங்களிலும் உள்ள இரு சுவர்களின் உட்புறப் பகுதிகளில் ஓவியங்கள் இருப்பதைக் காணலாம். இச்சுவர்களில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சோழர் கால ஓவியப் பகுதிகளை ஒன்பது பெரும் பகுதிகளாகப் பிரித்துக் காணலாம்". தெற்கு உட்சுவரின் தெற்கு நோக்கிய ஓவியம்,  மேற்கு உட்சுவரின் மேற்கு நோக்கிய ஓவியம், வடமேற்கு உட்சுவரின் வடக்கு மற்றும் மேற்கு நோக்கிய ஓவியம், வடக்கு உட்சுவரின் வடக்கு நோக்கிய ஓவியம், வடக்கு உட்சுவரின் தெற்கு நோக்கிய ஓவியம்,   வடமேற்கு வெளிச்சுவரின் தெற்கு மற்றும் கிழக்கு நோக்கிய ஓவியம், மேற்கு உட்சுவரின் கிழக்கு நோக்கிய ஓவியம், பிற ஓவியம் என்ற நிலைகளில் ஓவியங்களின் அமைவிடம் சிறப்பாகக் குறிக்கப்பட்டு ஓவியங்களின் புகைப்படங்களும், ஓவியங்களைப் பற்றிய செய்திகளும், ஓவியங்களின் கோட்டுருவங்களும் பார்ப்பவர் மனதில் பதியும் வகையில் சிறப்பாகத் தரப்பட்டுள்ளன.

ஓவியங்களும் விளக்கமும்
நூலிலுள்ள ஓவியங்களைப் பார்த்துக் கொண்டே அதனருகில் தரப்பட்டுள்ள செய்திளைப் படிக்கும்போது நேரில் சென்றால்கூட இந்தஅளவுக் கண்டு புரிந்துகொள்ளமுடியுமா என்ற ஓர் ஐயம் ஏற்படும். பாமரர் வரை அறிஞர் வரை அனைவரும் மனதிலும் எளிதில் மனதில் பதியும் வகையில் படங்களும், விளக்கங்களும் அமைந்துள்ளன. சில ஓவியங்களுக்கான விளக்கங்களைப் பார்ப்போம்.

மேற்கு உட்சுவரின் மேற்கு நோக்கிய ஓவியம் (ஒன்று)
"........இவ்வோவியம் சுந்தரரின் கதையை விளக்குகின்ற ஓவியமாகும். சுந்தரர் மண்ணுலகில் சடையனார் இசைஞானியாருக்கு மகனாகத் திருநாவலூரில் பிறக்கின்றார். உரிய வயதில் அவருக்குத் திருமண ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இத்திருமண நிகழ்ச்சி இவ்வோவியத்தில் மிக எழிலாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது......".

மேற்கு உட்சுவரின் மேற்கு நோக்கிய ஓவியம் (இரண்டு)
"....இப்பகுதியில் தீட்டப்பட்ட ஓவியம் தில்லையில் ஆடல்வல்லானை மாமன்னன் இராசராசனும் அவரது மனைவியர்களும் வழிபடும் காட்சித்தொகுதியாகும். இராசராசன் காலத்தில் தில்லைக் கோபுரங்கள கேரள அமைப்பில் அமைக்கப்பட்டிருந்தன. தட்டோடுகள் வேயப்பட்டு இவை காட்சியளிக்கின்றன...."

"....பொன்னம்பலத்தில் திருநடனம் புரியும் ஆடல்வல்லான் தூக்கிய திருவடியுடன் ஒரு காலினை முயலகன்ம் மீது இருத்தி, முகத்தில் புன்னகை தவழத் திருநடனம் புரிகின்றார். வெண்மை நிறத்தில் காட்டப்பட்டுள்ள இவரது மேனி புலித்தோல்ஆடையால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஆடும் நிலையைக் காட்ட இறைவனின் முடிக்கற்றைகள் இரு பக்கங்களிலும் விரிந்தும் சுருண்டும் செல்கின்றன. இதனைக் கருமை நிறத்தில் ஓவியர் காட்டியுள்ளார். உள்ளே மகரந்தத்தை உடைய தண்டுகளுடன் ஊமத்தம்பூ தலையின் இடப்பக்கம் நேர்த்தியாகக் காட்டப்பட்டுள்ளது. வலப்பக்கத் தலைமுடி பாரத்தில் கங்கை அமர்ந்துள்ளாள்...."

வடமேற்கு வெளிச்சுவரின் தெற்கு மற்றும் கிழக்கு நோக்கிய ஓவியம்
 "....இவை சிவன்-பார்வதி திருமணக் கோலமான கல்யாணசுந்தரமூர்த்தியின் ஓவியங்களாகும். திருமணக் கோலத்தில் சிவனும் பார்வதியும் நின்றிருக்கத் திருமணத்தைத் திருமால் நடத்தி வைக்கிறார். பொன்னாலான பாத்திரத்திலிருந்து நீர் தெளித்துக் கன்னியாதானத் திருமணத்தை நடத்தி வைக்கின்றார். சிவன் உருவம் சிவப்பு நிறத்தில் இங்கு வரையப்பட்டுள்ளது. முழுவதும் அழிந்த நிலையில் இவரது உருவம் காணப்படுகிறது....."

தஞ்சாவூர் பெரிய கோயில் ஓவியங்களை நேரில் காணும் வாய்ப்பு பெறாதவர்கள் இந்நூலிலுள்ள ஓவியங்களைப் பார்த்தால் அக்குறை நீங்கப் பெறுவர். ஓவியங்களுக்கான விளக்கங்கள் படிப்பவர்களுக்கு மேலும் பல தெளிவுகளைத் தரும். மிகவும் சிறப்பாக முழுக்க முழுக்க ஆர்ட் தாளில் அமைந்துள்ள 156 பக்கங்கள் கொண்ட இந்நூல் மிகச் சிறந்த வரலாற்று ஆவணம். இந்நூலை வாங்கிப் படிப்போமே, ஓவியங்களை ரசிப்போமே.

தஞ்சைப் பெரிய கோயில் சோழர் கால ஓவியங்கள்
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், முதற்பதிப்பு செப்டம்பர் 2010, ரூ.500

16 November 2014

கனவில் வந்த காந்தி (3)



நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அண்மையில் மதுரையில் நடைபெற்ற வலைப்பதிவர் திருவிழாவில் இவருடைய அறிமுகம் கிடைத்தது. பழகுவதற்கு இனியவர். அவருடைய பதிவுகள் வித்தியாசமானவையாக இருக்கும். கனவில் வந்த காந்தியைக் கண்டு தன் பாணியில் மறுமொழி கூறியுள்ள அவர் நம்மிடம் அதே வினாக்களைத் தொடுத்துள்ளார்.  10 நண்பர்களுக்கு அனுப்பி கருத்தினைக் கேட்டுள்ள அவருக்கு முதலில் என்னுடைய கருத்துக்களை இதோ கூறுகிறேன். கேள்விகளுக்கு மறுமொழி கூறுமுன் வலையுலகப் பதிவர்களுக்கும் நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள். அன்புகூர்ந்து காந்தியின் சுயசரிதையைப் (My experiments with truth) படியுங்கள். அது நமக்கு ஒரு பாடம்.இதோ கில்லர்ஜி வழியாக காந்தியடிகளுக்கு மறுமொழி கூறுவோம்.

01.   நீ மறு பிறவியில் எங்கு பிறக்க வேண்டும் என்று நினைக்கிறாய்?
நான் பிறந்தது கும்பகோணத்தில். அங்கேயே பிறக்க வேண்டும் என்பது என் ஆசை.

02.   ஒரு வேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்துவிட்டால்?
அவ்வாறான எண்ணமோ சிந்தனையோ சிறிதுகூட எனக்கு இல்லை.

03. இதற்கு வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்தால்? என்ன செய்வாய்?
அவ்வாறான நிலை எழ வாய்ப்பு இல்லை.

04.   முதியோர்களுக்கு என்று ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றாயா?
இறுதிக்காலத்தில் அவர்கள் மன நிறைவோடு இருக்கும் வகையில் ஆன்மீக நூல்களை வழங்க ஏற்பாடு செய்தல், மன நிம்மதிக்காக வழிபாட்டுத் தலங்களுக்கு அழைத்துச் செல்லுதல், அவர்களுடன் அனைத்து வயதினரும் அளவளாவ நடவடிக்கை மேற்கொள்ளல்.

05.   அரசியல்வாதிகளுக்கு என்று புதிய திட்டம் ஏதாவது?
முடிந்தவரை படித்தவர்களே அரசியலில் முக்கியப் பொறுப்புக்கு வரவேண்டும் என சட்டம் இயற்றுவேன்.

06.   மதிப்பெண் தவறென, மேல்நீதி மன்றங்களுக்குப் போனால்?
நீதிமன்ற உத்தரவுக்குக் கட்டுப்படுவேன்.

07.   விஞ்ஞானிகளுக்கென்று ஏதும் இருக்கிறதா?
நமது நாட்டை முன்னுக்கு எடுத்துச் செல்லும் பொறுப்புள்ளவர்களில் அவர்களும் அடங்குவர். எனவே, அவர்கள் மென்மேலும் சாதிக்க உரிய வசதிகள் செய்து தரப்படும்.


08.   இதை உங்களுக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்கள் செய்வார்களா?
பின்வருபவர்கள் செய்வார்கள் என்று உறுதியாக எடுத்துக்கூற முடியாது. இருப்பினும் அதன் முக்கியத்துவம் பற்றி ஆட்சியாளர்களிடம் எடுத்துக்கூறப்படும்.


09.   மற்ற நாடுகளில் இல்லாத ஏதாவது புதுமையாக?
அனைவரும் படிப்பறிவு பெற வேண்டிய நிலை.

10.எல்லாமே சரியாக சொல்வது போல் இருக்கு. ஆனால் நீ மானிடனாய் பிறந்து நிறைய பாவங்களை செய்து விட்டாய். உனக்கு மீண்டும் மானிடப் பிறவி கொடுக்க முடியாது. ஆகவே வேறு என்ன பிறவி வேண்டுமென இறைவன் கேட்டால்?
இந்த பிறவியில் அனுபவித்ததே போதும். அடுத்த பிறவி வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்வேன்.
பிற நண்பர்கள் இதனைத் தொடர அன்போடு அழைக்கிறேன்.

1.அரும்புகள் மலரட்டும் திரு பாண்டியன்

2.ஊமைக்கனவுகள்

3.திரு மோகன்ராஜ்

4.திரு புதுவை வேலு

5.திரு சிவக்குமாரன் சிவக்குமாரன் கவிதைகள்

6.திரு கவியாழி 
http://kaviyazhi.blogspot.com/

7.ராஜராஜேஸ்வரி
http://jaghamani.blogspot.com/ 

8.திரு எஸ்.ரமணி தீதும் நன்றும் பிறர் தர வாரா
9.திரு .ஜி.எம்.பாலசுப்ரமணியன்

10.இனியா


 

14 November 2014

தஞ்சாவூர் (கி.பி.600-1850) : குடவாயில் பாலசுப்ரமணியன்


தஞ்சாவூரின் வரலாற்றினைப் பற்றிய ஒரு முழுமையான நூல் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் தஞ்சாவூர். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த இந்நூலைப் பல முறை வாசித்துள்ள போதிலும் ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் புதிதாகப் படிப்பதைப் போல் நான் உணர்கிறேன். அந்நூலைப் பற்றிய எனது வாசிப்பை உங்களோடு பகிர்வதில் மகிழ்கின்றேன்.


மூன்று பகுதிகளைக் கொண்ட இந்நூலின் முதல் பகுதியில் தஞ்சை என்னும் திருவூர், ஆழ்வார்கள் பார்வையில் தஞ்சை, முத்தரையர்களின் தலைநகரம் தஞ்சையே, சோழநாட்டுத் தலைநகரங்கள், விஜயாலய சோழன் கைப்பற்றிய தஞ்சை நகரம், தஞ்சை நிசும்பசூதனி, சோழர் காலத் தஞ்சாவூர், தஞ்சையில் சோழர் அரண்மனையும் பிற இடங்களும், கருவூர்த் தேவர் கண்ட தஞ்சை, தஞ்சாவூர் பெருவழிகள், தஞ்சாவூர் நகரின் பேரழிவு, தஞ்சையிலிருந்த சோழர் கால மருத்துவமனை, இராஜராஜனின் அரண்மனை இருந்த இடம் எது?, கல்வெட்டில் தஞ்சை நகரமும் மும்முடிச்சோழன் திருமதிலும், சோழர் காலத் தஞ்சாவூர் புதிய முடிவு, பாண்டியர் ஆட்சியில் தஞ்சாவூர், தஞ்சைத் திருக்கோயில்கள் (பல்லவ, சோழ, பாண்டிய காலம் வரை), விஜயநகரப் பேரரசின் காலத்தில் தஞ்சை, மராட்டியர் ஆட்சியில் தஞ்சாவூர் ஆங்கிலேயர் ஆட்சியில் தஞ்சை என்ற 20 தலைப்பிலான கட்டுரைகளும், இரண்டாம் பகுதியில் தஞ்சை இராஜராஜேச்சரம் பற்றிய பதிவும், மூன்றாம் பகுதியில் தஞ்சை நாயக்கர் காலக்கோட்டையும் அரண்மனையும் மற்றும் தஞ்சை மராட்டியர் கோட்டையும் அரண்மனையும் என்ற தலைப்பிலான கட்டுரைகளும் அமைந்துள்ளன. 

'தஞ்சை என்ற பெயர்க்குறிப்பை முதன்முதலாக அழகு தமிழில் நமக்குக் காட்டுபவர் திருநாவுக்கரசர் என்னும் அப்பர் அடிகளே. இவர் சிவாலயங்கள் இருந்த ஊர்களுள் ஒன்றாகத் தஞ்சையைக் குறிப்பிடுகிறார்.'  (ப.1)

'.......தஞ்சை பூமால் ராவுத்தன் கோயில் தெரு வட பத்ரகாளியோ தமிழகத்தில் வேறு எங்கும் காண முடியாத புதுமையான வடிவில் திகழ்கிறாள். இதனை ஒத்ததொரு வடிவம் தமிழகத்தில் வேறு எங்கும் கிடையாது.....' (ப.24)

'தஞ்சாவூர் நகரைத் தொலைவிலுள்ள நகரங்களோடு இணைக்கும் பல வழிகள் இருந்துள்ளன. அவற்றுள் மூன்று பெருவழிகள் பற்றிய குறிப்புகள் கல்வெட்டுகள் வாயிலாகக் கிடைக்கின்றன.' (ப.55)

'வெண்ணாற்றங்கரை என்னும் பகுதிக்கு முதலாம் குலோத்துங்கன் காலத்தில்தான் இப்பெயர் ஏற்பட்டுள்ளது. அதற்கு முன்பு எவ்வாறு வழங்கியதென அறியமுடியவில்லை....' (ப.78)

'.......இராசராசன் எழுப்பிய கோயிலுக்குக் கொல்லிமலையிலிருந்தும், நர்மதையாற்றங்கரையிலிருந்தும் கற்களைக் கொணர்ந்தான் எனக் கூறுவர். இதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. தஞ்சைக்குத் தென் மேற்கே புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குன்னாண்டார் கோயில் பகுதியில் இருந்த குன்றுகளின் கருங்கற்களையே இங்கு பயன்படுத்தி இருக்க வேண்டும்....' (ப.188) 

'...அரண்மனை ஓவியக்கூடத்தில் சித்திரங்களைக் கண்டுகளித்த இம்மன்னன் பெருங்கோயிலையும் சித்திரக்கோயிலாகவே படைக்கச் செய்தான். அவன் காலத்தில் அடியிலிருந்து முடி வரை இங்கே ஓவியங்களாகவே  இருந்திருக்க வேண்டும்....' (ப.239)

'நாயக்கர் காலத் தஞ்சாவூர்க் கோட்டையினுள் அரண்மனையோடு இணைந்து மிகச் சில வீதிகளும், கோயில்களும் மட்டுமே திகழ்ந்தன.  ஆனால் பிற்காலத்தில் கணக்கற்ற சந்துகளும் கோயில்களும் தோன்றி நகரின் அழகைக் குறைத்துவிட்டன.....' (ப.317)

'....இந்த அரண்மனையில் திகழ்ந்த ஒரே வாயில் தெற்கு வாயிலாகும். தற்போதைய சரஸ்வதி மகால் நூலகத்திற்கு நேர் பின்புறம் உயர்ந்த கோபுரத்துடன் அடைக்கப்பெற்ற வாயிலோடு திகழும் கட்டடமே தெற்கு வாயிலாகும். இது மிகச் சிறந்த கலைநயம் வாய்ந்ததாகும். இதன் கட்டுமான அமைதி ஹம்பியில் காணப்பெறும் கமல மஹால் என்னும் தாமரை மகாலின் வடிவமைப்பையே ஒத்து காணப்படுகிறது......' (ப.330)

'சர்ஜா மாடி சரபோஜி மன்னரால் எடுக்கப்பெற்றதாகும். மராட்டியர்களால் கட்டப்பெற்ற மிக உயரமான அரண்மனைக் கட்டடம் இதுவேயாகும். ஐந்து மாடிகள் கொண்ட இக்கட்டிடம் ஆங்கிலேயர்களின் தொழில்நுட்ப அறிவோடு, முகலாய கட்டடக்கலையின் சில அம்சங்களும் பெற்றுத் திகழ்கின்றது. ஒவ்வொரு மாடியிலும் பிதுக்கம் பெற்ற பால்கனி அமைப்போடு கூடிய பலகணிகள் உள்ளன......' (ப.353)

கோட்டை தொடங்கி கோயில் வரை பல நூற்றாண்டு கால தஞ்சையின் வரலாற்றினை இந்நூலின் மூலம் அறியமுடிகிறது. ஆங்காங்கே இலக்கிய, கல்வெட்டுச் சான்றுகள், உரிய புகைப்படங்கள் தரப்பட்டுள்ளன. மோடி ஆவணக் குறிப்புகள் பற்றியும் ஆங்காங்கே விவாதிக்கப்படுகின்றன. தஞ்சாவூரின் பலவகையான பெருமைகளைப் பற்றி அறிய இவ்வரிய நூலை வாசிப்போமே. குடவாயில் பாலசுப்ரமணியன் (அலைபேசி 9843666921), தஞ்சாவூர் (கி.பி.600-1850), அஞ்சனா பதிப்பகம், 6, நிர்மலா நகர், வல்லம் சாலை, தஞ்சாவூர் 613 007, 1997, ரூ.150


நாம் முன்னர் படித்த இந்நூலாசிரியரின் நூல்
தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் (இராசராசேச்சரம்)

09 November 2014

கரந்தை மாமனிதர்கள் : கரந்தை ஜெயக்குமார்


நண்பர் திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கரந்தை மாமனிதர்கள் என்னும் நூலை வெளியிடும் வாய்ப்பினை அண்மையில் பெற்றேன். வலையுலகில் அவரை அனைவரும் அறிவர். அவருக்கு எண்ணிலடங்கா ரசிகர்கள். அவருடைய எழுத்து படிப்பவரை ஈர்க்கும். அவருடைய நட்பு ஆழமானது. அவருடைய கரந்தை ஜெயக்குமார் என்ற தலைப்பிலான வலைப்பூவில் அவர் எழுதியுள்ள பன்முகக் கட்டுரைகளைக் காணலாம்.  


   
அவருடய இந்நூலில் ஐந்து கட்டுரைகள் அமைந்துள்ளன. இவை அனைத்துமே அவருடைய வலைப்பூவில் வெளியானவையாகும். தனக்கு ஏற்றமிகு வாழ்வளித்த கரந்தைக்கு தான் என்ன செய்துள்ளோம் என தனக்குத்தானே கேள்வி கேட்டுக்கொள்ளும் அவர், அதற்கான விடையாக இந்நூலை தமிழ்கூர் நல்லுலகிற்கு அளித்துள்ளார். கரந்தையைச் சேர்ந்த ஐந்து அரிய மனிதர்களை அவர் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். வலைப்பூவில் முன்னரே படித்திருந்தபோதிலும் அச்சு வடிவில் மறுபடியும் படிக்கும்போது இன்னும் அதன் முக்கியத்துவத்தை உணரமுடிகிறது.  தான் வளர்ந்த, படித்த, பணியாற்றுகின்ற கரந்தை என்று மிகவும் பெருமையோடு அவர் கூறிக்கொள்ளும்போது அவருடைய ஈடுபாட்டையும் ஆழமான உணர்வையும் புரிந்துகொள்ளமுடிகிறது. 

முதற்கட்டுரை தமிழ் மொழிக்காகவும், தமிழர்தம் முன்னேற்றத்திற்காகவும் அரும்பணியாற்றியுள்ள செந்தமிழ்ப்புலவர் தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார் அவர்களைப் பற்றியதாகும். (பக்.1-3) கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் த்லைவராக அவர் பொறுப்பில் இருந்து ஆற்றியுள்ள பணிகளை நூலாசிரியர் பட்டியலிடும் போது நமக்கு வியப்பே மேலிடுகிறது. 

நேசமே சுவாசமாய் என்ற தலைப்பிலான இரண்டாவது கட்டுரை உடல் தளர்ந்து, கால்கள் வலுவிசழந்து நடக்க இயலாத நிலையில்கூட, கரந்தைத் தமிழ்ச்சங்கத்தை விட்டு அகலாது, தனது இறுதி மூச்சு வரை நேசம் காத்த, பாசம் போற்றிய கரந்தைக் கவியரசு அரங்க வேங்கடாசலம் பிள்ளை அவர்களைப் பற்றியதாகும். (பக்.4-10). தனது வாழ்வும் சாவும் உமாமகேசுவரனார் இருந்த கரந்தையிலேயே என்பதில் இவர் உறுதியாக இருந்துள்ளதை ஆசிரியர் சிறப்புற முன் வைத்துள்ளார்.

அடுத்த கட்டுரை கண்ணகியின் அடிச்சுவட்டில் ஒரு நீண்ட பயணம் மேற்கொண்ட பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களின் இலக்கிய மற்றும் களப்பணியைப் பற்றியதாகும். (பக்.11-18) இலக்கியம், வரலாறு, களப்பணி என்ற மூன்று நிலைகளிலும் அவர் ஆற்றியுள்ள பங்களிப்பு அளவிடற்கரியதாகும். கண்ணகி பயணித்த பாதை வழியாக அவர் நடந்து சென்று வரலாறு படைத்துள்ளார். அவரைப் பின் தொடர்ந்து ஆசிரியர் அருமையான பதிவு மேற்கொண்டுள்ளார். 

நான்காவது கட்டுரை ஆங்கிலேயர் காலத்தில் பொறியியல் பட்டம் பெற்று, பொதுப்பணித்துறையில் பணியாற்றிய, சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தியாகி திரு கரந்தை காந்தி என அன்போடு அழைக்கப்படும் திரு ச.அ.சாம்பசிவம்பிள்ளை அவர்களைப் பற்றியதாகும். (பக்.19-21). நம்மை அடிமைப்படுத்தி அரசாளும் ஆங்கிலேயர்களின் கீழ் பணியாற்றும் எண்ணத்தைத் துறந்து, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் பணியில் சேர்ந்து அதனையே தன் இல்லமாகக் கொண்டவரைப் பற்றி வேட்கையுடன் எழுதியுள்ளார்.

நிறைவுக்கட்டுரை, தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு என்னும் பெயரில் ஒரு மாநாடு செயலாக்கம் பெற முழுமுதற்காரணமாய் அமைந்த சமூக சேவகர், மருத்துவமணி டாக்டர் எஸ்.தர்மாம்பாள் அவர்களைப் பற்றியதாகும். (பக்.22-26). பெண்களின் விடுதலைக்காகவும், தமிழ் மொழிக்காகவும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட அம்மையாரைப் பற்றிய வாழ்வு அனைவரும் அறியப்படவேண்டும் என்ற நன்னோக்கில் அரிதின் முயன்று விவரங்களைத் திரட்டி எழுதியுள்ளார்.

சிறிய நூல். பெரிய அறிஞர்கள். அரிய கருத்துக்கள். முக்கியமான வரலாற்றுப் பதிவுகள். இவ்வாறான சிறப்புகளைக் கொண்ட இந்நூலை வாங்கி வாசிப்போமே. 

நூலாசிரியர் : கரந்தை ஜெயக்குமார் (அலைபேசி 94434 76716)
தலைப்பு    : கரந்தை மாமனிதர்கள்
பதிப்பகம்   : பிரேமா நூலாலயம், 48ஏ, தமிழ் நகர், மூன்றாவது தெரு, 
             மருத்துவக்கல்லூரி சாலை, தஞ்சாவூர் 613 004
பதிப்பு      : அக்டோபர் 2014
விலை     : ரூ.50


இந்நூலை மதுரையில் நடைபெற்ற தமிழ் வலைப்பதிவர் திருவிழாவில் பி.எஸ்.என்.எல். தொழிற் சங்க, மதுரை மாவட்டச் செயலாளர், மனித நேயப் பண்பாளர் திரு எஸ். சூரியன் அவர்கள் அவர்கள் வெளியிட அதன் முதற்படியினைப் பெறும் பேற்றினைப் பெற்றேன். முதற்படியினை வெளியிட்ட நண்பருக்கும், முதற்படியினைப் பெறும் வாய்ப்பினை அளித்த நூலாசிரியருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன். வரலாற்றுச் சிறப்புமிக்க வலைப்பதிவர் மாநாட்டில் பல நண்பர்களை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. மதுரை மாநாடு ஒரு மறக்கமுடியாத அனுபவம்.
    
கரந்தை மாமனிதர்கள் நூல் வெளியீடு
மேடையில் நண்பர்களுடன்





கரந்தை மாமனிதர்கள் என்ற அரிய நூலை நமக்குத் தந்துள்ள நண்பர் கரந்தை ஜெயக்குமார் அவர்களும் கரந்தை மாமனிதரே. அவருடைய வாழ்க்கை வரலாற்றையும், பிற சாதனைகளையும் காண தமிழ் விக்கிபீடியாவில் கரந்தை ஜெயக்குமார் பெயரில் நான் துவங்கியுள்ள பக்கத்திற்கு அன்போடு அழைக்கிறேன்.