முகப்பு

27 December 2015

கும்பகோணம் வராகப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

26.10.2015 அன்று கும்பகோணத்தில் பல கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றன. அக்கோயில்களில் மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி காணும் சைவக்கோயில்களான அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், பாணபுரீஸ்வரர், கம்பட்ட விஸ்வநாதர் கோயில்களுக்கும், காவிரியில் தீர்த்தவாரி காணும் வைணவக்கோயில்களில் ஒன்றான வராகப்பெருமாள் கோயிலுக்கும் சென்றோம். இப்பதிவின் வழியாக கம்பட்ட வராகப்பெருமாள் கோயிலுக்குச் செல்வோம், வாருங்கள்.
கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் வடக்குவீதி வழியாகச் சென்று கும்பேஸ்வரர் திருமஞ்சனவீதி வழியாக காவிரியாற்றை நோக்கிச் செல்லும் பாதையில் இக்கோயில் அமைந்துள்ளது. சக்கரபாணி கோயிலுக்குத் தென்மேற்கே அமைந்துள்ள இக்கோயிலின் அருகே வராகக்குளம் உள்ளது. பல ஆண்டுகளாக மண் மேடாகக் காணப்பட்ட இக்குளம் தற்போது மகாமகத்தை முன்னிட்டு தூர்வாரப்பட்டுவருகிறது. இக்கோயிலுக்கு அருகே கரும்பாயிரம் விநாயகர் கோயில் உள்ளது.கோயிலின் முகப்பில் ஆதிவராகப்பெருமாள் தேவியருடன் காணப்படும் சுதைச்சிற்பம் அழகாக அமைக்கப்பட்டுள்ளது. 
மகாமகத்தின்போது தீர்த்தவாரி காணுகின்ற ஐந்து வைணவக் கோயில்களில் இக்கோயிலும் இராஜகோபாலஸ்வாமி கோயிலுமே சிறிய கோயில்களாகும். முகப்பைக் கடந்து உள்ளே வரும்போது அழகான கொடிமரம் காணப்படுகிறது. அடுத்து அமைந்துள்ள மண்டபத்தினை அடுத்து கருவறையில் மூலவர் வராகப்பெருமாள் காணப்படுகிறார். வராகத்தின் (பன்றி) முகத்தோடு விளங்குவதால் இவர் வராகப்பெருமாள் என்றழைக்கப்படுகிறார். 
திருச்சுற்றில் சுற்றிவரும்போது அழகான சிறிய விமானத்தினை கருவறையின்மீதாகக் காணமுடியும்.  


ஒரு சமயம் ஒரு அசுரன் பூமியைக் கவர்ந்து கொண்டு பாதாளத்தில் ஒளிந்துகொண்டதாகவும், வானவர்கள் திருமாலிடம் இதுபற்றி முறையிட திருமால் வராக உருவெடுத்து பாதாளத்தில் புகுந்து அவருடன் போரிட்டு ஒரு கொம்பினால் அவனையும் அவனுடைய சுற்றத்தாரையும் அழித்ததாகவும் மற்றொரு கொம்பினால் பூமியைத் தாங்கிகொண்டு மேலே வந்து பூமியை முன்போல நிலைபெறச் செய்ததாகவும் கூறுகின்றனர். இதனை வெளிப்படுத்தும் நிலையில் பெருமாள் பூமிதேமியை தமது இடது மடியில் வீற்றிருக்கும் நிலையில் காணப்படுகின்றார்.

இக்கோயிலின் நடை காலை 7.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும் பின்னர் தொடர்ந்து மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும். மகாமகத்திற்கு முன்னரோ மகாமகத்தின்போதோ வாய்ப்பான நாளில் இக்கோயிலுக்குச் செல்வோம். மகாமகத்தின்போது தீர்த்தவாரி காணும் ஐந்து வைணவக் கோயில்களில் இதுவரை மூன்று கோயிலுக்கு சென்று வந்துள்ள நிலையில் தொடர்ந்து ராஜகோபாலஸ்வாமி கோயிலுக்கும், சக்கரபாணி கோயிலுக்கும் விரைவில் செல்வோம். 


--------------------------------------------------------------------------------------------
மகாமகத்தின்போது காவேரி சக்கரப்படித்துறையில் தீர்த்தவாரி  அளிக்கும் வைணவக்கோயில்கள்
    --------------------------------------------------------------------------------------------
    நன்றி : மகாமகப்பெருவிழா 2004, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, தமிழ்நாடு அரசு 

    18 December 2015

    சிகரம் தீட்டிய சித்திரங்கள் : கே.பாலசந்தர்

    என் அபிமான இயக்குநர் பாலசந்தரைப் பற்றிய எனது கட்டுரை அவரது முதலாண்டு நினைவையொட்டி (டிசம்பர் 23), இன்றைய தி இந்து நாளிதழில் வெளியாகியுள்ளது. அக்கட்டுரையைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவ்விதழுக்கு நன்றியுடன்.





    கே.பி.முத்திரை என்பது என்ன? மரபுகளை மீறுவதுதான் கே.பி.முத்திரையா என்ற கேள்விக்கு பதிலளித்தார் இயக்குநர் சிகரம். "கே.பி.என்றால் மரபு மீறல்கள் வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.  யாருமே எடுத்துத்துணியாத பல கதைகளை எடுத்து இயக்கியிருக்கிறேன். அபூர்வ ராகங்கள், அவள் ஒரு தொடர்கதை போன்றவை அந்த ரகம்தான்" என்று கூறியிருந்தார். 

    திருவள்ளுவரின் அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு என்ற திருக்குறள் திரையில் தோன்றுவது முதல் அந்தப் படத்தின் இறுதிக்காட்சி, இறுதி பிரேமில் காணப்படும் சில  சொற்றொடர்கள் வரை விடாமல் பார்த்து ரசிக்கும் ரசிகர்களில் நானும் ஒருவன். 

    இவருக்கு முன்னும் பின்னும் பல இயக்குநர்கள் வந்துபோனபோதிலும் இவரது வரவும் விட்டுச்சென்ற பதிவும் வித்தியாசமானவை. அனைத்து தரப்பினரையும், அனைத்து வயதினரையும் கவர்ந்திழுக்கும் பாணி இவரது இயக்கத்தில் காணப்படும். சமுதாயப் பிரச்சினைகளை முன்னுக்கு வைத்து அதனை அலசி ஆராய்ந்து, சில நிலைகளில் தீர்வுகளையும் தந்துள்ள இவரது சித்தரிப்புகளுக்குச் சில சலசலப்புகள் வந்தாலும், எதிர்த்தவர்களில் பலரே பின்னாளில் அவரது படங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். 




    இலக்கை அடைந்த பயணி
    நாடகத்துறையில் நுழைந்து மேஜர் சந்திரகாந்த், நீர்க்குமிழி உள்ளிட்ட பல நாடங்களை உருவாக்கி நடுத்தர மக்களின் வாழ்க்கைச் சிக்கல்களைத் தனது நாடகங்களிலேயே பேசத் தொடங்கிவிட்ட கே.பி., மேடையிலிருந்து இடம் பெயர்ந்து திரைக்கும் நடுத்தர வர்க்கத்தின் வாழ்வை எடுத்துச் சென்றார். கதையின் கரு,  திரைக்கதையின் தெளிவு, உரையாடலின் கூர்மை, நடிகர் தேர்வு, இக்கம், காட்சிப்பின்னணி, தொழில்நுட்பம், உத்தி என்று ஒவ்வொன்றுக்கும் கதையோடும் சம காலத்தோடும் ஐக்கியம் ஏற்படுத்தி, நெடுந்தூரப் பயணத்தில் தன் இலக்கை அடைந்தவெற்றிகரமான திரைப்பயணி இயக்குநர் சிகரம்.

    தமிழ்த்திரைப்படவுலகில் உள்ள நட்சத்திரங்களில் பலர் இவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்களே. ஒரே படத்தில் அதிகமான எண்ணிக்கையில் புதுமுகங்கள் என்ற நிலையில் (அவள் ஒரு தொடர்கதை) அவர் அறிமுகப்படுத்திய  அறிமுகங்களில் பலர் பின்னால் நன்கு பரிணமித்தவர்கள். சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் மிக துணிவோடு ஒரு நடிகையை (பிரமிளா, அரங்கேற்றம்) அறிமுகப்படுத்தி இன்றளவும் பேசப்படும் அளவு செய்தவர். நடிகை ஆலம் (மன்மத லீலை) கதாநாயகியாக முற்றிலும் மாறுபட்ட பாத்திரத்தில் நடிக்கும்படி செய்தவர். இவருடைய படத்தில் நடிக்கும் எந்த ஒரு நடிகரும் நம்மை ஈர்த்துவிடுவார்கள். தப்புத்தாளங்கள் படத்தில் தடம் மாறிய பாத்திரங்களாக கதாநாயகனும், கதாநாயகியும் நடித்ததை ஈடுசெய்யும் வகையில் அந்தக் கதாநாயகிக்கு  முழுக்க முழுக்க புதிய பரிமாணம் கொடுத்தார் நூல் வேலி திரைப்படத்தில். இருமல் தாத்தா என்ற ஒரு கதாபாத்திரத்தை (எதிர்நீச்சல்) கடைசி வரை படத்தில் காண்பிக்காமலேயே இருப்பார். ஆனால் அந்த பாத்திரம் அத்திரைப்படத்தில் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கும். 

    நடிகர்களை மட்டுமே அவர் கதாபாத்திரங்களாக அறிமுகப்படுத்தவில்லை. "என்னை பாலசந்தர் இந்த படத்துல அறிமுகப்படுத்தியிருக்கார்" என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் பேசும் பொம்மை (அவர்கள்), டைட்டில் போடும் போது அருவியைக் காண்பித்து, இவர்களுடன் இந்த மலையருவி என்ற டைட்டிலுடன் காட்டப்படும் அருவியும் இந்தக் கதையிலி ஒரு முக்கிய கதாபாத்திரம் (அச்சமில்லை அச்சமில்லை) என்று டைட்டில் போட்டு உணர்த்துவார். கதையையொட்டி இயற்கையையும் வாழ்விடங்களையும் தெரிவு செய்து காட்சியில் கொண்டுவருவதில் அவரது கற்பனை வளம் வியக்கத்தக்கது. நாடகத்திலிருந்து வந்திருந்தாலும் காட்சிமொழியிலும் அதிக கவனத்தை அவர்காட்டியுள்ளார்.

    பெண்மையின் வலியைப் பேசியவர் 
    நடிகைகளை காட்சிப்பொருள் போல வைத்து படங்கள் வெளியான  நிலையை மாற்றி நடிகைகளுக்கு முக்கியமான பாத்திரங்களைக் கொடுத்து பெண்ணின் பெருமையைப் பேசவைத்த முதல் இயக்குநர். பெண்களை மையமாக வைத்து இவர் திரைப்படங்கள் எடுத்த அளவு வேறு யாரும் எடுத்திருக்க வாய்ப்பில்லை. பெண்ணினத்தையும், பெண்ணியத்தையும் நேசித்த இயக்குநர் என்ற வகையில் திரை வரலாற்றில் கே.பி. தனித்து நிற்கிறார். 

    குடும்ப முன்னேற்றத்திற்காக தன்னையே மெழுகுவர்த்தியாக ஆக்கிக்கொண்டு முன்னணியில் நிற்கும் லலிதா (அரங்கேற்றம்) கதாபாத்திரத்துடன் வேறு எந்த  கதாபாத்திரத்தையும் ஒப்பிடமுடியாது. குடும்பத்தில் உடன் பிறந்தவர்கள் கண்ட கனவுகளை நினைவாக்கி தன்னையே தரும் ஒரு பெண்ணின் மன நிலையை வடிப்பது என்பது சாதாரணமானதல்ல. அம்பாளாக சிவராத்திரியன்று வேடமிட்டு வரும் கதையின் நாயகி கடைசி காட்சியில் கிட்டத்தட்ட பைத்தியமாக மாறுவதைப் பார்த்த ரசிகர்கள் ஏதோ தம் வீட்டுப் பெண்ணுக்கு ஏதோ நேர்ந்துவிட்டதைப் போன்ற உணர்வைப் பெற்றனர். அந்தக் காலகட்டத்தில் மிகவும் புரட்சிகரமாகப் பேசப்பட்ட அரங்கேற்றம் அவருடைய படைப்பில் ஒரு மைல்கல். 

    கவிதா (அவள் ஒரு தொடர்கதை), லலிதாவிற்கு சளைத்தவல்ல. ஓடிப்போன அப்பா, விதவைத் தங்கை, ஒன்றுக்கும் பயனில்லா அண்ணன், எதுவும் சொல்ல முடியாமல் தவிக்கும் அம்மா என்ற சூழலில் குடும்ப பாரத்தை முற்றிலுமாக சுமந்து கடைசி வரை அவ்வாறே தன் நிலையிலிருந்து மாறாமல் இருக்கும் கவிதாவை பார்க்கும்போது நாம் நம் அடுத்த வீட்டில் உள்ள, நம் குடும்பத்தில் உள்ள பெண்ணைப் பார்ப்பது போல இருக்கும். 

    மரணத்தை முன்கூட்டி அறிந்த கதையின் நாயகன் வாழ்வினை நேசிக்கும், வாழத்துடிக்கும் தம் ஆவலை வெளிப்படுத்தும் காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா, அதிலும் பாதி பஞ்சருடா (நீர்க்குமிழி) என்ற ஏக்கமான சொற்கள், நல்ல நிலையில் வாழ்ந்த கணவன் அரசியல்வாதியாக மாறி கெட்டுப் போன நிலையில் அவனைக் கொல்லும் மனைவியின் மன நிலை (அச்சமில்லை, அச்சமில்லை), சமுதாயச் சூழலில் தவறான வாழ்க்கைக்குத் தள்ளப்பட்ட கதாநாயகனும் நாயகியும் திருந்தி வாழ விரும்பும்போது அதே சமுதாயம் மறுபடியும் அவர்களை அந்த பழைய நிலைக்கு இழுத்துச் செல்லும் அவல நிலை (தப்புத்தாளங்கள்), அதிகமான கனவுகளுடன் வேலை தேடி அலைந்து கடைசியில் கிடைத்த வேலையைத் தெரிவு செய்துகொள்ளும் இளைஞனின் மனப்பாங்கு (வறுமையின் நிறம் சிகப்பு) என கே.பி. திரையில் தீட்டியச்சென்ற சித்திரங்கள் தனித்துவம் மிக்கவை.

    திரைச் சிற்பி
    மன உணர்வுகளைக் கற்பனை மூலமாகவும், கதாபாத்திரங்கள் மூலமாகவும் எடுத்துவைப்பதில் அவருக்கு நிகர் அவரே. பொய், ரெட்டச்சுழி, உத்தமவில்லன் உட்பட சில படங்களில் நடித்தபோதிலும் நடிப்பைவிட இயக்கத்தை அதிகம் நேசித்த கே.பி. பச்சைக் களிமண்ணாகத் தன்னிடம் வந்த பலரை புகழ்பெற்ற கலைஞர்களாக மாற்றிக் காட்டிய திரைச்சிற்பி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.




    இந்து நாளிதழில் வெளியான கட்டுரையை தி இந்து நாளிதழில் பின்வரும் இணைப்பில் காணலாம்.
    சிகரம் தீட்டிய சித்திரங்கள்

    16 December 2015

    சோமேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

    பிப்ரவரி 2016இல் மகாமகம் நடைபெறவுள்ள நிலையில் மகாமகத்தின்போது தீர்த்தவாரி காணும் 12 சைவக் கோயில்களில் இதுவரை எட்டு கோயில்களுக்குச் சென்றுள்ளோம். இப்போது ஒன்பதாவது கோயிலுக்குச் செல்வோம்.

    பிற கோயில்களுக்குச் சென்றதைப் போலவே இக்கோயிலுக்கும் குடமுழுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நவம்பர் 2, 2015 அன்று நடைபெற்ற இக்கோயிலின் குடமுழுக்கினைக் காணச் சென்றேன். தஞ்சாவூரிலிருந்து பேருந்தில் கும்பகோணம் சென்றேன். மொட்டை கோபுரத்தில் இறங்கி அங்கிருந்து நடந்து சோமேஸ்வரர் கோயிலுக்குச் சென்றேன். பொற்றாமரைக் குளத்தைக் கடந்து சென்றபோது மக்கள் கூட்டம் கூட்டமாகக் குடமுழுக்கினைக் காணச் சென்றதைக் காணமுடிந்தது.   

    வேகமாகப் போய்க் கொண்டிருக்கும்போது எதிரில் உள்ள கடைகளில் இருந்து ஒருவர் எங்களது கடை மாடியில் ஏறிப்பாருங்கள், நன்றாகத் தெரியும் என்றழைக்கவே அவரது கடையில் ஏறி மாடியில் சென்று பார்த்தேன்.  


    கோயிலின் வளாகம் தெரிந்தது. அங்கிருந்து ஒரு புகைப்படம் எடுத்துவிட்டு, அவரிடம் நன்றிகூறிவிட்டுத் தொடர்ந்து நடந்தேன். கும்பகோணம் தஞ்சாவூர் சாலையில் உள்ள கோயிலின் வாயில் வழியாக யாரும் அனுமதிக்கப்படவில்லை. அங்கிருந்து பார்த்துவிட்டு தொடர்ந்து நடந்து  முதன்மை வாயிலுக்குச் சென்றேன்.

    ராஜகோபுரம் வாயிலாக உள்ளே சென்றேன். கொடி மரம், பலிபீடத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது யாகசாலையைப் பார்த்துவிட்டுச் சென்றேன். எங்கும் ஒரே கூட்டம். 

    குடமுழுக்கு ஏற்பாடு ஆரம்பமான நிலையில் மறுபடியும் ராஜகோபுரம் தெளிவாகத் தெரியும்படி அருகேயுள்ள காந்தி சிலையின் முன்பாக நின்றுகொண்டேன். சில நிமிடங்களில் குடமுழுக்கு நிகழ்வினை பக்தர்களுக்குத் தெரிவிக்கும்வகையில் பச்சைக்கொடி காட்ட எங்கும் சிவ சிவா என்ற ஒலி ஒலித்தது. 





    குடமுழுக்கு நிறைவுற்று தீபாராதனை காட்டப்பட்டபோது இறைவனை நினைந்து வணங்கிவிட்டு, கோயிலை நோக்கி உள்ளே சென்றேன்.  உள்ளே கட்டுக்கடங்காத கூட்டமாக இருந்த நிலையில் கொடி மரம் அருகே சிறிதுநேரம் அமர்ந்துவிட்டு பின்னர் இறைவன் சோமேசரையும், இறைவி சோமநாயகியையும் தரிசனம் செய்துவிட்டு மன நிறைவோடு வெளியே வந்தேன். 

    கும்பகோணம் தஞ்சாவூர் சாலையில் உச்சிபிள்ளையார் கோயிலுக்கு அருகே நகரின் மையப்பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது. காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 வரையிலும் இக்கோயிலின் நடை திறந்திருக்கும். மகாமகத்திற்கு முன்போ, பின்போ வாய்ப்பு கிடைக்கும் நாளில் கும்பகோணம் வாருங்கள், இக்கோயிலுக்கும் செல்லுங்கள்.   
    ---------------------------------------------------------------------------------------------------
    ---------------------------------------------------------------------------------------------------
    துணை நின்றவை
    மகாமகப்பெருவிழா 2004 கும்பகோணம், இந்து சமய அறநிலையத்துறை,தமிழ்நாடு அரசு

    10 December 2015

    கும்பேஸ்வரர் கோயில்

    கும்பகோணத்தில் மகாமகத்தின்போது தீர்த்தவாரி காணும் 12 சைவக்கோயில்களில் கும்பேஸ்வரர் கோயிலும் ஒன்றாகும். தீர்த்தவாரி கோயில்களில் இதுவரை ஏழு கோயில்களைப் பார்த்துள்ள நிலையில் அடுத்த கோயிலான கும்பேஸ்வரர் கோயிலுக்குச் செல்வோம்.

    17.10.2015 அன்று நவராத்திரியை முன்னிட்டு கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோயிலுக்கு நானும் என் மனைவியும் சென்றோம். 

    மூன்றாம் பிரகாரத்தில் வன்னி மரம், முன்பாக விநாயகர். இப்பிரகாரத்தில் கும்ப முனிவர், விநாயகர். இரண்டாம் பிரகாரம் செல்லும் முன்பாக முற்றவெளி விநாயகர், பாலதண்டாயுதபாணி சன்னதி. நுழைந்ததும் வலப்புறம் லட்சுமிநாராயணப் பெருமாள் சன்னதி. கொடி மரம், நந்தி, பலிபீடம்.  அடுத்த கோபுரம் வாயிலாகச் செல்லும்போது நிலைக்காலில் பௌத்தம் இப்பகுதியில் தழைத்திருந்தமைக்கான கல்வெட்டு. முதல் பிரகாரத்தில் அறுபத்துமூவர். தொடர்ந்து நடராஜர், விநாயகர், சுப்பிரமணியர், வீரபத்திரர் உள்ளிட்ட பலர் உள்ளனர். தென்மேற்குப் பகுதியில் வலஞ்சுழி விநாயகர், பிட்சாடனர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர். அன்னபூரணி, கஜலட்சுமி, மகாலட்சுமி,  சரசுவதி. வடக்குப் பிரகாரத்தில் மங்களாம்பிகை சன்னதி. வாயிலின் இரு புறமும் ஜெயா, விஜயா.  கோயில் வளாகத்தில் அமைந்துள்ள குளத்தின் அருகே சட்டநாதர் சன்னதி. கோயிலை வலம் வந்த நாம் நவராத்திரி கொலுவைப் பார்ப்போம்.  


    1970களின் இடையில் பள்ளிப்பருவம் தொடங்கி கல்லூரிப்பருவம் வரை கும்பகோணத்தில் நவராத்திரியின் போது நண்பர்களுடன்  கும்பகோணத்திலுள்ள கோயில்களுக்குச் செல்வது வழக்கம். பின்னர் பல முறை மகன்களுடனும், மனைவியுடனும் சென்றுள்ளேன். ஒவ்வொரு முறை செல்லும்போதும் 40 வருடங்களுக்கு முன்பாக முதன்முதலாக நண்பர்களுடன் கோயில்களைச் சுற்றி வந்தது நினைவிற்கு வரும். இம்முறையும் அப்படியே. மகாமகத்திற்காக தீர்த்தவாரி காணும் கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.







    மூலவராக கும்பேஸ்வரர் உள்ள இக்கோயிலில் உறையும் இறைவி மங்களாம்பிகை. இக்கோயில் குடமுழுக்கு 5.6.2009 அன்று நடைபெற்றுள்ள நிலையில் மகாமகத்திற்காக குடமுழுக்கு நடைபெறும் கோயில் பட்டியிலில் இக்கோயில் இடம்பெறவில்லை. ஆங்காகே சில திருப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. மகாமகத்திற்காக குடமுழுக்கு நடைபெறும் கோயில் பட்டியிலில் இக்கோயில் இடம்பெறவில்லை. ஆங்காகே சில திருப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. மின்னொளி அலங்காரத்தில் கோயில் மிக அழகாக இருந்தது. முதன்மை வாயிலைக் கடந்து கொடி மரத்தின் அருகில் நின்று வணங்கிவிட்டு உள்ளே சென்றோம். 


    வலப்புறம் தொடங்கி வரிசையாக ஆங்காங்கே ஆளுயர கொலு பொம்மைகளைக் கண்டோம். புராணக்கதைகளையும் வரலாற்று நிகழ்வுகளையும் சித்தரிக்கும் பொம்மைகள் இயற்கையாகவே  இருந்தன.




    அழகாக அமைக்கப்பட்டிருந்த  இந்திர சபையினைக் கண்டோம். இளம் வயதில் பார்த்தபோது இருந்த இன்பத்தை இப்போதும் உணர முடிந்தது.
    நவராத்திரி கொலுவைப் பார்த்துக்கொண்டுவரும்போது நெட்டியால் ஆன மகாமகக்கோயில் அமைப்பைப் பார்த்தோம். மிகவும் அழகாக இருந்தது.உள்ளே கொலுவின் அழகினைப் பார்த்துவிட்டு மூலவரையும், மங்களாம்பிகையையும் தரிசனம் செய்துவிட்டு, ராஜ கோபுரத்தினைக் கடந்து சன்னதிக்கு வந்தோம். சன்னதியில் இருந்த கடைகளில் நவராத்திரி கொலு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தோம். எத்தனை முறை பார்த்தாலும் மகிழ்ச்சியைத் தருகின்ற அந்த கொலு பொம்மைகளை பார்க்கப்பார்க்க ஆசையாக இருந்தது. கிளம்ப மனமின்றி அங்கிருந்து கிளம்பினோம்.








    அடுத்த களப்பணியின்போது எடுத்த புகைப்படங்கள் இதோ. நான்கு வாயில்களும், தூண் மண்டபமும், குளமும் இவற்றில் உள்ளன.















    ---------------------------------------------------------------------------------------------------
    ---------------------------------------------------------------------------------------------------
    துணை நின்றவை
    புலவர் கோ.மு.முத்துசாமிப்பிள்ளை,  கும்பேசுவரர் கோயிலும் மகாமகத் திருவிழாவும், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1992

    17.1.2016இல் மேம்படுத்தப்பட்டது.