முகப்பு

27 May 2017

திருவீழிமிழலை வீழிநாதர் கோயில்

26 பிப்ரவரி 2017 அன்று குடும்பத்துடன் கோயில் உலா சென்றதைப் பற்றி முந்தைய பதிவில் விவாதித்தோம். அக்கோயில்களில் கட்டடக்கலை நுணுக்கத்தில் சிறப்பு பெற்ற கோயிலான திருவீழிமிழலை வீழிநாதர் கோயிலைப் பற்றி இப்பதிவில் காண்போம்.

கட்டடக்கலைஞர்கள் கோயில்கள் கட்டும்போது திருவலஞ்சுழியிலுள்ள பலகணி, ஆவுடையார்கோயிலிலுள்ள கொடுங்கை, திருவீழிமிழலையிலுள்ள வவ்வால் நத்தி மண்டபம் போன்ற பாணியினைத் தவிர பிற அமைப்பில் கட்டுவதாகக் கூறுவார்களாம். அத்தகைய சிறப்பு பெற்ற கோயில்களில் திருவலஞ்சுழியிலுள்ள கோயிலைப் பற்றியும் பலகணியைப் பற்றியும் முன்னர் நாம் பார்த்துவிட்டோம். இப்போது திருவீழிமிழலைக் கோயிலையும், அங்குள்ள வவ்வால் நத்தி மண்டபத்தையும் காண்போம், வாருங்கள்.

தேவார மூவரால் பாடப்பெற்ற பெருமையுடைய இக்கோயில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் வீழிநாதர், இறைவி சுந்தரகுசாம்பிகை. வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது ராஜ கோபுரம் உள்ளது. ராஜ கோபுரம் வெளியே தெரியாதவாறு நடைபாதைக் கூரை அமைத்துள்ளனர். அதையடுத்து கொடி மரம், நந்தி, பலிபீடம் ஆகியவை உள்ளன. அதனைக் கடந்து உள்ளே செல்லும்போது உயர்ந்த தளத்தில் கருவறை உள்ளது. கருவறைக்கு முன்பாக உள்ள முன் மண்டபம் தாராசுரம் ஐராவதேசுவரர் கோயிலை நமக்கு நினைவூட்டும். கோயில் விமானத்தை விண்ணிழி விமானம் என்கின்றனர். 

கருவறையில் உள்ள மூலவரை வணங்கும்போது அவருக்குப் பின்புறம் திருமணக்கோலத்தில் இறைவனும் இறைவியும் உள்ளதை காணமுடிந்தது. இவ்வாறாக மூலவருக்குப் பின்புறம் இறைவனையும், இறைவியையும் நல்லூரிலும், வேதாரண்யத்திலும் பார்த்த நினைவு. திருச்சுற்று வழியாக சுற்றிவரும்போது இடப்புறத்தில் அம்மன் சன்னதி உள்ளது. அம்மன் சன்னதியின் முன்புறம் நந்தியும், பலிபீடமும் உள்ளன.






அம்மன் சன்னதியைச் சுற்றிவிட்டு வெளியே திருச்சுற்று வழியாக வரும்போது ராஜ கோபுரத்தினை அடுத்து, (கோயிலுக்கு உள்ளே வரும்போது கோயிலின் இடப்புறத்தில் ராஜ கோபுரத்தின் முன்பாக) மிகவும் புகழ் பெற்ற வவ்வால் நத்தி மண்டபம் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டு அதிசயங்களில் ஒன்றான, கட்டடக்கலைக்குப் புகழ் பெற்ற மண்டபமாகும்.




இம்மண்டபம் 175 அடி நீளமும் 75 அடி அகலமும் கொண்டுள்ளதாகவும், நடுப்பகுதி வவ்வால் நெற்றி அமைப்பில் உள்ளதாகவும் தெரிவித்தனர். நடுப்பகுதியில் தூண்கள் காணப்படவில்லை. மண்டபத்தின் உள்ளே சென்று பார்க்கும்போது அதன் பிரமிப்பை நாம் உணர முடியும். வாய்ப்பு கிடைக்கும்போது நம் பெருமையினையும், கட்டடக்கலை நுட்பத்தையும் வரலாற்றுக்கு அறிவிக்கின்ற இந்த மண்டபம் அமைந்துள்ள இக்கோயிலுக்குச் செல்வோம்.

இக்கோயிலுக்கும், புகழ் பெற்ற வவ்வால் நத்தி மண்டபத்திற்கும் சென்ற நினைவாக நாங்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். 





24 May 2017

கோயில் உலா : 26 பிப்ரவரி 2017

26 பிப்ரவரி 2017 அன்று குடும்பத்துடன் கோயில் உலா செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது நாச்சியார்கோயில், திருச்சேறை, நாலூர் மயானம், கூகூர், திருவீழிமிழலை, துக்காச்சி உள்ளிட்ட பல கோயில்களுக்குச் சென்றோம். 

நாச்சியார்கோயில்
கும்பகோணம் குடவாசல் சாலையில் 10 கிமீ தொலைவில் அமைந்துள்ள அழகான மாடக்கோயில். உயர்ந்த தளத்தில் மூலவர் சன்னதி உள்ளது. மூலவர் சன்னதிக்கு இடதுபுறம் உள்ள கல் கருடரைச் சிறப்பாகக் கூறுகின்றனர். முன் மண்டபம் பெரிய தூண்களைக் கொண்டு அமைந்துள்ளது.
நாச்சியார் கோயில் ராஜகோபுரம்

நாச்சியார் கோயில் பெரிய தூண்களைக் கொண்ட மண்டபம்
திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோயில்
சாரபரமேஸ்வரர், ஞானாம்பாள்
ஞானசம்பந்தர், அப்பர்
கும்பகோணம் வட்டத்தில் நாச்சியார்கோயில் குடவாசலுக்கு இடையே இக்கோயில் அமைந்துள்ளது. 
திருப்பணி நடைபெற்று வருகின்ற
திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோயில்
நாலூர் மயானம் பலாசவனேஸ்வரர் கோயில்
பலாசவநாதர், பெரியநாயகி
கும்பகோணம்-குடவாசல் சாலையில் திருச்சேறையை அடுத்துள்ளது.
மாடக்கோயில் (இக்கோயிலையும் நாலூர் கோயிலையும் மாற்றி மாற்றி பலர் எழுதுகின்றனர். நேரமின்மையால் இக்கோயிலுக்கு அருகேயுள்ள நாலூர் கோயிலுக்குச் செல்ல இயலாமல் போனது) 

கஜபிருஷ்ட வடிவில் அமைந்துள்ள
நாலூர் மயானம் பலாசவனேஸ்வரர் கோயில்
 கூகூர் ஆம்பரவனேஸ்வரர் கோயில்
ஆம்பரவனேஸ்வரர், மங்களாம்பிகை
(கோயிலைப் பற்றிய குறிப்பில் பாடல் பெற்ற தலம் என்று குறிப்பிட்டுள்ளது. பாடல் பெற்ற தலமா என்பது உறுதி செய்யப்படவேண்டும்.) கும்பகோணம் வட்டத்தில் உள்ள இவ்வூர் திருநல்ல கூரூர் என்றும் அழைக்கப்படுகிறது. (திருச்சி மாவட்டத்தில் கூகூர் என்ற பெயரில் இன்னொரு ஊர் உள்ளது.)
அண்மையில் குடமுழுக்கு கண்ட
கூகூர் ஆம்பரவனேஸ்வரர் கோயில் ராஜகோபுரம்


கூகூர் ஆம்பரவனேஸ்வரர் கோயிலின் விமானம்
புகைப்படம் எடுப்பவர் எங்கள் இளைய மகன் திரு ஜ.சிவருகு
திருவீழிமிழலை திருவீழிநாதர் கோயில்
திருவீழிநாதர், அழகுமுலையம்மை
ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர்
மயிலாடுதுறை-திருவாரூர் இருப்புப்பாதையில் பேரளத்தையடுத்துள்ள பூந்தோட்டத்திலிருந்து 10 கிமீ தொலைவிலுள்ளது.   திருவாரூர், கும்பகோணம், பேரளம், ஆடுதுறை, பூந்தோட்டம் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்தில் செல்லலாம். 
புகழ் பெற்ற வவ்வால் நத்தி மண்டபம்
புகழ் பெற்ற வவ்வால் நத்தி மண்டபத்தில்
எங்கள் பேரன் தமிழழகன் உடன்
துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயில்
ஆபத்சகாயேஸ்வரர், சௌந்தரநாயகி
கும்பகோணத்திலிருந்து நாச்சியார் கோயில் வழியாக செல்லும்போது அரசலாற்றங்கரை வடக்கே உள்ளது. 
பெரிய தூண்களைக் கொண்ட நாச்சியார் கோயிலும், மாடக்கோயில் அமைப்பில் உள்ள நாலூர் மயானம் கோயிலும், வவ்வால் நத்தி மண்டபத்திற்காகப் பெயர் பெற்ற திருவீழிமிழலைக் கோயிலும், கட்டட அமைப்பில் தனி இடம் பெற்ற துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலும் பார்க்க வேண்டிய கோயில்களில் முக்கியமானவையாகும். 

நாலூர் மயானம் பற்றி என் மனைவி திருமதி பாக்கியவதி எழுதிய கட்டுரை தினமணி இதழில் வெளியாகியுள்ளது. அதன் மேம்படுத்தப்பட்ட வடிவத்தினை அவரது தளத்தில் திருநாலூர் மயானம் என்ற தலைப்பில் காணலாம். திருவீழிமிழலை மற்றும் துக்காச்சி பற்றி தனியாக விரைவில் பதிவுகள் எழுதவுள்ளேன்.


25 மே 2017 மாலை மேம்படுத்தப்பட்டது.

16 May 2017

விதானத்துச் சித்திரம் : ரவிசுப்பிரமணியன்

கும்பகோணம் நண்பர் திரு ரவிசுப்பிரமணியன் (அலைபேசி : 9940045557) அவர்களிடமிருந்து அவருடைய கவிதைத் தொகுப்பான விதானத்துச் சித்திரம் என்ற நூலை இன்று பெற்றேன். 28 ஏப்ரல் 2017இல் நான் பணி நிறைவு பெற்றபோது அன்பளிப்பாக வந்த சுமார் 50 நூல்களில் 15 நூல்களைப் படித்து முடித்துள்ள நிலையில் அவருடைய கவிதைத் தொகுப்பு உடன் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது.

இருவரும் கும்பகோணம் என்ற காரணமோ, கோயில்கள் என்ற நிலையிலான ஈடுபாடோ, கலையியல் ரசனையோ, அழகியல் ஈர்ப்போ ஏதோ ஒன்று என்னை இக்கவிதை நூலை உடனே வாசிக்க வைத்துவிட்டது. 

நூலின் மேலட்டையைப் பார்த்ததும் பட்டீஸ்வரத்திலோ, திருவலஞ்சுழியிலோ, கோனேரிராஜபுரத்திலோ விதானத்தில் உள்ள, நான் பார்த்த ஓவியங்களில் ஒன்று இதுவென்று நான் நினைத்திருந்தேன். ஆனால் முழுக்க முழுக்க வித்தியாசமான பின்னணியில் உரிய விளக்கத்தோடும், குறியீட்டோடும் அந்த ஓவியம் இத்தொகுப்பிற்கு முத்தாய்ப்பாக உள்ளது.  அட்டை ஓவியத்திற்கான குறிப்பு நமக்கு ஒரு தெளிவினைத் தருகிறது. (ப.80) 

அவ்வாறே தமிழகத்தில் கூத்து, நடனம், நாடகம் என்று பல மரபு நிகழ்த்துக்கலைகள் வெறும் கேளிக்கைகளாக மட்டுமின்றி, ஒரு வழிபாட்டுச் சடங்காகவும் காலம் காலமாக நடத்தப்பட்டு வருவதைக் குறிப்பிடும் ஆசிரியர் அவை போன்ற சிலவற்றைச் சித்தரிக்கும் படங்களைக் கோட்டோவியங்களாகத் தந்துள்ளார். (ப.82) 

"கும்பகோணம் நாகேஸ்வரன் கோவில் எதிரே உள்ள கீழ வீதியில் பிறந்து வளர்ந்தவன் நான். என் பால்யத்தின் பெரும்பகுதி அந்தக் கோவிலிலும் அதன் திருவிழாக்களிலும் உறைந்திருக்கிறது. அவைதான் வேறு வேறு ரூபங்களில் நினைவுச் சுரங்கத்திலிருந்து படிமங்களாக மேலெழும்பி வருகின்றன....கோவிலைப் பிரார்த்தனை ஸ்தலமாக ஒற்றைப் பார்வையுடன் அணுகுபவனுக்கும் கலை கலாசாரப் பண்பாட்டுப் பின்புல நுண்ணுணர்வுகளோடு அதனை அறிய முயலும் ஒருவனுக்கும் உள்ள புரிதல் எவ்வளவு பார தூரமானது..." என்கிறார் நூலாசிரியர் தன்னுடைய முன்னுரையில்.

நான் கும்பகோணம் செல்லும்போதெல்லாம் செல்லும் கோயில்களில் ஒன்று பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் கோயில். அக்கோயிலின் கருவறையில் உள்ள துர்க்கையம்மனைக் காணும்போது மனதில் தோன்றும் எண்ண ஓட்டத்தை பின் வரும் அவருடைய கவிதையில் கண்டேன். பள்ளிக்காலம் முதல் நான் பார்த்துவரும் அந்த துர்க்கையைப் பற்றியே இவர் எழுதியிருக்கின்றாரோ என்று எண்ண வைத்தன இந்த வரிகள். அண்மையில் சென்றபோதுகூட துர்க்கையம்மன் அணிந்திருந்த சேலையின் நிறம் உட்பட பொறுமையாகக் கவனித்து, ரசித்து பிரிய மனம் இன்றித் திரும்பி வந்தேன். 

"....சன்னப் பொன்னொளி தீபம் ஒளிர
எண்ணெயில் மேனி மினுமினுங்க
கற்பூர சுகந்தம் வீச
கிளிப்பச்சை சேலையுடுத்தி
ஒளிரும் மூக்குத்தியும்
காதுக் குழைகளும் அணிந்து
கழுத்தோரம் பூச்சரங்கள் தொங்கவிட்டு
திருக்கோலம் காட்டி நிற்கும் உன் சந்நிதியில்
பனிக்கால நல் இரவில்
இசை கேட்க வந்திருந்தேன்........(இசை)

இவ்வாறே ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு பொருளைக் கொண்டும், பரந்துபட்ட உள்ளீடுகளைக் கொண்டும் அமைந்துள்ளது. மண்ணின் மணத்துடன் அவருடைய கவிதை வரிகள் இணையும் நிலையில் ஆதங்கம், மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு, ஏக்கம், வருத்தம், யதார்த்தம் என்ற பல வகையான உணர்வுகளை கவிதைகளில் காணமுடிகிறது. கவிதை வரிகளாக இல்லாமல் உணர்வுகளின் வெளிப்பாடாகவும், சில இடங்களில் கொந்தளிப்பாகவும் இருப்பதைப் படிக்கும்போது உணரமுடிகிறது. விதானத்து சித்திரத்தில் மேலும் சிலவற்றைப் பார்ப்போம்.

".....அளைதல், அணுக்கம்,
சார்தல், அவிதல்,
இயைபு, இச்சை,
மேவல், விழைவு,
வெஃகல், வேட்கையென
பிரியத்தின் பிறபெயர்களை எல்லாம்
கொல்லென்று பூத்திருக்கும்
மகிழ மரத்தின் பூக்களுக்குச்
சூட்டிக்கொண்டிருக்கிறேன்....." (மலருதிர் மகிழ மரம் நீ)

".....அவசரங்கள் மறைந்துவிட்ட
பிரஹார வெளியதிலே
ஆசுவாசக் காற்றடிக்கும்...
மதில் சுவரைப் பிறந்து நிற்கும்
ஆல மல வேர்கள் பார்க்க
மறுபடியும் மனசுக்குள் ஏதோ செய்யும்....(பிரஹார வெளி)

"....மலரின் இருப்பு மணத்தைச் சொல்லுகையில்
மரத்தின் அசைவு காற்றைச் சொல்லுகையில்
பறவையின் பாடல் இசையைச் சொல்லுகையில்
வாலின் அசைவு வாஞ்சையைச் சொல்லுகையில்
சொல்லால் ஆவதென்ன சொல் அமிர்தா....(ஆவதென்ன சொல்)

"....அன்றைக்குத்தான் வந்திருக்கிறாள்
அந்த இளம் டீச்சர்
புதிதாய்ப் பள்ளிக்கு வந்த குழந்தைகளின் 
அழுகை தாளாது 
தானும் அழுகிறாள்...
இப்போது
குழந்தைகளின் எண்ணிக்கைல்
ஒன்று கூடிவிட்டது....(மற்றுமொரு அழுகை)

"....இடிபாடுகளுக்கிடையில்
சிதைந்து கிடக்கிறது
மேன்மைமிகு மகாராஜாவின் கோட்டை...
தொளதொளவென்ற ராஜ உடையை அணிந்தபடி
வளைந்த பிடியற்ற செங்கோலை ஊன்றி
அங்குமிங்கும் உலவுகிறார் மன்னர்....(மகாராஜா)

அருமையான கவிதைத் தொகுப்பை வாசிப்போம், மறைந்து கொண்டிருக்கும் கலைகளைப் பற்றிய அவருடைய ஆதங்கத்தை நாம் பகிர்வோம், வாருங்கள்.

நூல் : விதானத்துச் சித்திரம்
ஆசிரியர் : ரவிசுப்பிரமணியன் (மின்னஞ்சல் : ravisubramaniyan@gmail.com)
பதிப்பகம் : போதிவனம் பதிப்பகம், அகமது வணிக வளாகம், தரைத்தளம், 
     12/293, இராயப்பேட்டை நெடுஞ்சாலை, இராயப்பேட்டை, சென்னை 600 014
பதிப்பு : ஏப்ரல் 2017
விலை : ரூ.100

நூலாசிரியரைப் பற்றி அறிந்துகொள்ள விக்கிபீடியாவில் நான் ஆரம்பித்துள்ள அவரைப் பற்றிய பக்கத்தைக் காண அழைக்கிறேன்.

04 May 2017

பணி நிறைவு வாழ்த்தியல் விழா : நன்றி, தமிழ்ப்பல்கலைக்கழகம்

தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணி நிறைவடைந்ததையொட்டி 28.4.2017 வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணியளவில் தமிழ்ப் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்திலுள்ள பேரவைக்கூடத்தில் வாழ்த்தியல் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பல்கலைக்கழக ஆசிரியர்கள், அலுவலர்கள், ஆய்வாளர்கள், அறிஞர் பெருமக்கள், கவிஞர்கள், குடும்பத்தார், உள்ளூர் பிரமுகர்கள், ஊடக நண்பர்கள், தமிழ்ப்பல்கலைக்கழகப் பணியாளர் சங்கத்தார், கூட்டுறவு மற்றும் கடன் சங்கத்தார் உள்ளிட்ட  அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

பணி நிறைவுறுகின்ற இனிய வேளையில் எனக்கு உதவிப்பதிவாளர் பதவி உயர்வு கிடைத்ததை உங்களோடு பகிர்வதில் மனம் மகிழ்கின்றேன். அதற்காகத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு நெஞ்சம் நிறைந்த நன்றியை உரித்தாக்குகின்றேன்.

விழா சிறப்புற அமைய உதவிய அனைத்துத் துறையினருக்கும் நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதில் மகிழ்கின்றேன்.

விழா ஆரம்பிக்கும் முன்பாக மரியாதை நிமித்தம் துணைவேந்தர் அவர்களையும் பதிவாளர் அவர்களையும் சந்தித்து, குடும்பத்தை அறிமுகப்படுத்தினேன். விழாவில் கலந்துகொள்ளவும், நூல் வெளியிடவும்  இசைந்தமைக்குத் துணைவேந்தர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தேன். பதிவாளர் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தேன். 

துணைவேந்தருக்குப் பொன்னாடை அணிவித்தல்

பதிவாளருக்குப் பொன்னாடை அணிவித்தல்
துணைவேந்தர், பதிவாளர், நிதியலுவலர், துணைப்பதிவாளர் ஆகியோருடைய வாழ்த்துகளுடன் வாழ்த்தியல் விழா தொடங்கியது. நண்பர் திரு சக்தி சரவணன் விழா நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார்.  விழா நினைவாக நினைவுப்பரிசு துணைவேந்தரால் வழங்கப்பட்டது.

விழாவின் ஒரு பகுதியாக, என் மனைவி திருமதி பாக்கியவதி எழுதிய பயணக் கட்டுரைத் தொகுப்பினை  வரலாற்றறிஞர் முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்கள் வெளியிட, தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் க.பாஸ்கரன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.  



விழாற்கு வந்திருந்த அறிஞர் பெருமக்களும், நண்பர்களும், தமிழ்ப்பல்கலைக்கழக நண்பர்களும் மேடைக்கு வந்து வாழ்த்து தெரிவித்தனர். நண்பர்களின் அன்பளிப்பால் எங்களது இல்ல நூலகத்திற்கு மேலும் பல நூல்கள் இவ்விழாவின் மூலம் சேர்ந்தன. 

 









 






ஏற்புரையில், பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்த நாள் முதல் நேரந்தவறாமை, நேர்மை போன்றவற்றை கடைபிடித்துவருவதை எடுத்துக்கூறி, பல துறைகளில் நான் பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டேன். தட்டச்சும் சுருக்கெழுத்தும் வாசிப்பும் எனக்குத் துணை நின்றதை வலியுறுத்தினேன். முன்னுதாரணமாக வாழத் திட்டமிடலே அவசியம் என்பதை எடுத்துரைத்து அதற்கான பலனை உணர்ந்ததை எடுத்துக்கூறினேன். நேரத்தை முழுமையாகப் பயன்படுத்துவதன் பயன் அனைவரையும் சென்றடையும் என்பதைப் பகிர்ந்துகொண்டேன். அனைத்திற்கும் மேலாக பல பேரறிஞர்களுடன் பணியாற்றிய வாய்ப்பினையும், அரிய பணிகளை மேற்கொள்ளும் வாய்ப்பினையும் பெற்றதை நினைவுகூர்ந்தேன்.    


பல்கலைக்கழக வரலாற்றில் பணி நிறைவு விழாவின்போது நூல் வெளியிடப்பட்டதாக எனக்கு நினைவில்லை. அந்த வகையில் இவ்விழாவினை சிறப்பான விழாவாகக் கருதுகிறேன். விழாவிற்கு வந்திருந்த பல அறிஞர்களும், கவிஞர்களும், நண்பர்களும் நேரமின்மை காரணமாக மேடையில் வாழ்த்த இயலா நிலை இருந்தும் அதனை குறையாக எண்ணாமல் பெருமனதோடு நேரில் பாராட்டியது மன நிறைவைத் தந்தது. பல நண்பர்கள் அதிக எண்ணிக்கையில் நூலை அன்பளிப்பாகத் தந்தனர். தமிழ்ப்பல்கலைக்கழகம் பிரியாவிடை தர. பிரிய மனமின்றி கிளம்பினேன். தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியாற்ற கிடைத்த வாய்ப்பினை கிடைத்தற்கரிய பேறாக எண்ணி மனம் மகிழ்ந்து அந்த வளாகத்திலிருந்து குடும்பத்தினரோடு கிளம்பினேன்.   



மகளும், மருமகள்களும் அன்புடன் வரவேற்க மன நிறைவோடு இல்லம் வந்து சேர்ந்தோம். சுமார் மூன்று மகாமகங்களாக, தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஆற்றிய பணிகளும், பணியின்போது கிடைத்த அனுபவங்களும் என்றென்றும் என் மனதில் இருக்கும்.  


புகைப்படங்கள் நன்றி : விஜி போட்டோகிராபி விஜி விஸ்வா
பிறருடைய தளங்களில் என்னைப் பற்றிய பகிர்வுகள்