25 March 2017

மனதில் நிற்கும் பேட்டைத்தெரு பள்ளி (1972-1975)

கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பினை (1971-72) நிறைவு செய்து தேர்வு முடிவினை எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரம். விளையாடிக் கொண்டும், அனாவசியமாக பொழுதுபோக்கிக் கொண்டும் இருக்கக்கூடாது என்று கூறிய என் தாத்தா விடுமுறை நாள்களில் அவருக்குத் தெரிந்த பைண்டிங் ஆபீசில் வேலைக்குப் போகக் கூறினார். முதன்முதலாக அப்போதுதான் வேலைக்குப் போகிறேன். தாள் கட்டுகளை அடுக்குதல், கோடு போட்ட தாள்களை கணக்குப் பதிவேட்டுக்குரியவை, பிற பதிவேட்டுக்குரியவை, மூலை வெட்டப்படவேண்டியவை, காலிகோ ஒட்டப்படவேண்டியவை என்று ரகம் வாரியாகப் பிரிக்கக் கூறினர். பெரும்பாலும் கணக்குப்பதிவேடுகள் (Account ledgers) அங்கு கோடு அச்சேற்றம் செய்யப்பட்டு, நூற்கட்டு செய்யப்படும். காலையிலும், மாலையிலும் அனைவருக்கும் தேநீர் வாங்கித்தருவதும் என் வேலையில் அடங்கும். தேநீர்க்கடையில் சென்று அவர்கள் கொடுக்கும் தூக்கில் ஐந்து அல்லது ஆறு தேநீர்க் குடுவைகளில் எடுத்துக் கொண்டு சென்று தருவது வேலையாக இருந்தது. சில சமயங்களில் வெட்டிய அல்லது கோடு போட்ட தாளை தலையில் வைத்துக்கொண்டு போய் அந்தந்த கடையில் கொடுக்கவேண்டும். முதலில் இதுபோன்ற வேலைகளைப் பார்ப்பதில் அவமானமாகவும், வெட்கமாகவும் இருந்தது. உழைத்தால்தான் முன்னுக்கு வரமுடியும் என்ற என் தாத்தாவின் கூற்றுப்படி அனைத்தையும் முகம் சுளிக்காமல் செய்தேன். 

பள்ளியா, பைண்டிங் ஆபீசா?
தேர்வு முடிவு வந்து மேற்கொண்டு பள்ளியில் சேர்ப்பதா அப்படியே வேலையிலே தொடர்வதா என்று பேச்சு வந்தது. நான் படிக்க ஆசைப்படுவதாக வலியுறுத்துக்கூறவே, பள்ளியைத் தேடும் படலம் ஆரம்பமானது. வற்புறுத்திக் கூறாமலிருந்தால் பைண்டிங் ஆபிசிலேயே தொடர்ந்து வேலை பார்த்திருப்பேன்.

நகராட்சி உயர்நிலைப்பள்ளி (1972-75)
கும்பகோணத்தில் உள்ள பள்ளிகளில் ஒவ்வொன்றாக ஆராய்ந்து கடைசியில் வீட்டின் அருகே இருக்கின்ற பேட்டைத்தெருப் பள்ளி என்று கூறப்படுகின்ற நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் சேர்த்தனர். ஓரளவு கண்டிப்பிற்கும், படிப்பிற்கும் அப்போது அப்பள்ளி பேசப்பட்ட நிலையிலும், வீட்டிற்கு அருகில் இருப்பதாலும் அங்கு சேர்த்தனர். ஆசிரியர்கள் அனைவரும் எங்களை நல்வழிப்படுத்தினர். ஓவிய வகுப்பு, விளையாட்டு என்பனவும் உண்டு. 
புகைப்படம் நவம்பர் 2017

புகைப்படம் நவம்பர் 2017
ஆசிரியர்கள்
9ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை வகுப்பு ஆசிரியர், பாட ஆசிரியர் என்று பல ஆசிரியர்களைக் காண முடிந்தது. ஆர்.டி. என்கிற திரு துரைக்கண்ணு (தலைமையாசிரியர்), திரு ஏ.செல்லப்பா, பி.கே. என்கிற திரு பி.கல்யாணசுந்தரம் (வகுப்பு ஆசிரியர்கள்) திரு தண்டபாணி தேசிகர், திரு தட்சிணாமூர்த்தி, திரு சோமா, கே.ஜி.என்கிற கி.ஞானசுந்தரம் (தமிழ் ஆசிரியர்கள்), திரு கிருபாமூர்த்தி, திரு கருப்பையன், திரு ச.கல்யாணசுந்தரம் (விளையாட்டு ஆசிரியர்கள்), திருமதி மல்லிகா, திரு எஸ்.சம்பந்தம், சி.கே. என்கிற திரு சி.கிருட்டிணமூர்த்தி (பிற பாடங்களுக்கான ஆசிரியர்கள்) என்று ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக ஆசிரியர் வகுப்பெடுத்தது வித்தியாசமாக இருந்தது.

படிப்பும், விளையாட்டும்
வீட்டுப்பாடங்களை அவ்வப்போது முடிக்காவிட்டால் திட்டுவார்கள். திட்டுக்குப் பயந்து முடித்துவிடுவோம். சில சமயங்களில் ஏமாற்றுவதும் உண்டு. மாணவர்கள் ஏதாவது தவறு செய்துவிட்டால் செய்தி தலைமையாசிரியருக்குச் சென்றுவிடும். அவர் வருவதைக் கண்டாலே எங்களுக்கு நடுக்கம் வந்துவிடும்.  தவறு செய்த மாணவர்களின் பெயரைக் குறிப்பிடாமல் அங்கு நடந்த தவறைப் பற்றிக் கூறிவிட்டு, எச்சரித்துவிட்டுச் செல்வார். விளையாட்டுப் போட்டிகளில் எதுவும் ஆர்வம் இல்லாத நிலையில் உயரத்தாண்டல், நீளத்தாண்டல் போன்ற அடிப்படையானவற்றில்கூட ஈடுபாடு இல்லாத நிலையில் அதற்காக குறைந்த அளவு ஒன்றினைக் குறித்துக்கொள்வார்கள். கொஞ்சமாவது விளையாட்டில் ஆர்வம் செலுத்து என்பார் ஆசிரியர். 

ஒலிபெருக்கியில் கேமரா?
நாங்கள் எட்டாவது படிக்கும்போது ஒவ்வொரு அறையிலும் முதன்முதலாக ஒலிபெருக்கி வைத்தார்கள். அவ்வாறு வைக்கும்போது எங்களிடம் அந்த ஒலிபெருக்கியில் ஒரு கேமரா இருப்பதாகவும் வகுப்பில் நடப்பது அனைத்தையும் தலைமையாசிரியர் அவரது அறையில் இருந்து கவனித்துக்கொண்டே இருப்பார் என்றும் பயமுறுத்திவிட்டனர். அதை நாங்கள் நம்பி ஒலிபெருக்கியை நோக்கி இருக்கும் நிலையில் பவ்வியமாக நடந்துகொள்வதையும், ஒலிபெருக்கி கண்ணுக்குப் படாத இடங்களில் குறும்புகளைச் செய்ய ஆரம்பித்தோம்.

மயில் ஓவியம்
எங்கள் ஓவிய ஆசிரியர் வரைந்த படங்களில் எங்களுக்குப் பிடித்தது மயில். மிக அழகாக எளிதாக அனைவரும் வரையும் படி அவர் வரைந்து காட்டுவார். 

நான்மாடக்கூடல்
தமிழ் ஆசிரியர் நான்மாடக்கூடல் எனப்படும் மதுரையைப் பற்றிப் பேசும் போது மாடங்கள் நிறைந்த ஊர் என்றவாறு பொருள்கொள்ளும் வகையில் பின்வருமாறு பேசினார். ஒவ்வொரு சொற்றொடருக்கும் அவர் கூறிய விளக்கம் தமிழின்பால் எங்களை ஈர்த்தது.
 • நான்மாடக்கூடலில் நிற்கிறேன்
 • நான் மாடக்கூடலில் நிற்கிறேன்
 • நான்மாடக் கூடலில் நிற்கிறேன்
ராஜ நாகம்
பள்ளியில் நிகழ்ச்சிகள் நடக்கும்போது மாணவர்கள், அப்போது ஸ்ரீகாந்த் நடித்து வெளிவந்த ராஜநாகம் திரைப்படத்தில் வருகின்ற மாணவன் நினைத்தால் நடத்திக் காட்டுவான் என்ற பாடலை அதிக சத்தத்தில் வைத்து, ஆசிரியர்களை கோபப்படும்படி செய்வர். 

ராஜராஜ சோழன் மீசை
நாங்கள் படித்துக்கொண்டிருக்கும்போது ராஜராஜசோழன் திரைப்படம் வெளியானது. ஆசிரியர் பி.கே., ராஜராஜ சோழனைப்போல மீசையை சில நாள் வைத்திருந்தார். சிவாஜி கணேசனின் நடிப்பைப் பற்றி வகுப்பில் அவர் பேசியது இன்னும் நினைவிலிருக்கிறது.

உடன் பயின்றவர்கள்
தயாளன் (சாரங்கபாணி தெற்கு வீதி), இளஞ்சேரன் (மாணவர் விடுதி), செல்வம், ராஜு (பழைய அரண்மனைத்தெரு), சண்முகசுந்தரம் (அண்ணாலக்ரகாரம்), மனோகரன், குமாரராஜா (தாராசுரம்), பாலகிருஷ்ணன் (மல்லுக செட்டித்தெரு), ஜான்முகமது (மணிக்காரத்தெரு), பாஸ்கர் (கவரத்தெரு), அன்பழகன், ராதாகிருஷ்ணன் (தோப்புத்தெரு) உள்ளிட்ட பல நண்பர்கள் எங்களோடு படித்தவர்கள் ஆவர்.

பள்ளியின் பெயர் மாற்றம்
பள்ளியில் சேர்ந்தபோது இருந்த பெயர் (Municipal High School) மாற்றம் படித்து முடித்து வெளியே வரும்போது (Arignar Anna Govt High School) அறிஞர் அண்ணா அரசு உயர்நிலைப்பள்ளி என்ற பெயரைப் பெற்றிருந்தது. 

கருப்புப்புள்ளி
அப்போதைய ஏதாவது தப்பு செய்தால் நடத்தைச் சான்றிதழில் கருப்புப்புள்ளி வைத்துவிடுவோம், உங்களால் வேறு பள்ளிக்குப் போய் படிக்க முடியாது, வேலைக்கும் போகமுடியாது என்பார். அவருடைய சத்தத்திற்கும் மிரட்டலுக்கும் பயந்து படிக்க ஆரம்பிப்போம். அவருடைய மிரட்டல் எங்களை நாங்களே திருத்திக்கொள்ள மிகவும் உதவியது. அவர் அவ்வாறு யாருக்கும் வைக்கவில்லை என்பதை பின்னர்தான் அறிந்தோம்.
   
தேர்வு எண் 132430
என்னுடைய SSLC தேர்வெண் 132430 ஆகும். முதன்முதலில் நான் மனனம் செய்து வைத்த எண் இது. தேர்வு முடிவு நாளிதழில் வருவதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். தேர்வு முடிவினை செய்தித்தாளில் எதிர்பார்ப்பது என்பது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. முடிவு வெளியான நாளன்று எங்கள் தெருவான சம்பிரதி வைத்தியநாதய்யர் அக்கிரகாரத்திலிருந்து கிளம்பி (தற்போது கே.ஜி.கே. தெரு) கும்பேஸ்வரர் கோயில் மேல வீதியும், வடக்கு வீதியும், சிங்காரம் செட்டித்தெருவும் சந்திக்கும் இடத்தில் நண்பர்களோடு காத்திருந்தோம். பேப்பர்காரப் பையனிடம் பேப்பரை அவசியமாக வாங்கி ஒவ்வொருவராக அவசரம் அவசரமாக படபடப்புடன் பார்த்தோம். அனைவருமே வெற்றி பெற்றோம் என்பது ஒரு மகிழ்ச்சியான செய்தியாக இருந்தது. அவரவர்கள் வீட்டில் சென்று அனைவரிடமும் செய்தியைப் பகிர்ந்துகொண்டோம்.

பாலசந்தரின் பாதிப்பு
பள்ளிக்காலத்தில்தான் முதன்முதலாக இயக்குநர் கே.பாலசந்தரின் படங்களின்மீதான ஆர்வம் ஆரம்பித்தது. அதற்குக் காரணம் அப்போது குடும்பம் இருந்த சூழல். பள்ளிப்பருவம் ஒரு விளையாட்டுப் பருவமாக இருந்தாலும்கூட வீட்டுச் சூழலானது எங்களது மகிழ்ச்சியை அதிகம் குறைத்துவிட்டது. ஒரு குடும்பத்தை கட்டிக்காத்து நடத்துவது என்பதை எங்கள் தாத்தா மேற்கொண்டதால், வீட்டுச்செலவுகளை கணக்கிட்டு மேற்கொண்டபோது வீட்டு நிலையை அறிந்தேன். குடும்பத்தைக் காப்பாற்ற கதாநாயகி படும் சிரமத்தை அரங்கேற்றம் (1973) திரைப்படத்தில் பார்த்தேன். தொடர்ந்து சற்றொப்ப அதே வகையிலான கதையைக் கொண்ட அவள் ஒரு தொடர்கதை (1974) குடும்பத்தின் மீதான பொறுப்பை நான் உணர ஒரு தூண்டுகோலாக அமைந்தது. வாழ்க்கையில் நான் கால் ஊன்றவும், தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும் உதவியவை இந்த இரு திரைப்படங்களுமே. நம்மைப் படிக்க வைக்க வீட்டார் படும் சிரமத்திற்கு முடிவு ஏற்படவேண்டும் என்று என் மனம் சிந்திக்க ஆரம்பித்தது. விளையாட்டுப் பருவமாக இருந்த நிலையிலும் வீட்டுச்சூழலும் வளர்க்கப்பட்ட நிலையும் அவ்வாறான எண்ணத்தை மனதில் விதைத்துவிட்டது. 

எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றபோது இருந்த நிலையே 11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றபின்னரும் இருந்தது. மற்ற நண்பர்களுக்கெல்லாம் தேர்வு முடிவு மகிழ்ச்சியாக அமைய என்னைப் பொறுத்தவரை மேற்கொண்டு படிப்பா, வேலையா என்ற நிலையில்  மனதில் குழப்பம் தோன்ற ஆரம்பித்தது. படிப்பைத் தொடர முடியும் நிலையில் குடும்பம் உள்ளதா? வேலைக்குப் போய்த்தான் ஆகவேண்டுமா? என்ற மாறுபட்ட எண்ணங்களில் படிப்புக்கனவுகள் சிறிது சிறிதாக மறைய ஆரம்பித்தன. 

நன்றி
இக்கட்டுரை எழுதும்போது பல நண்பர்களின் பெயரை நினைவூட்டிய நண்பர் திரு தயாளன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.  
மனதில் நிற்கும் திருமஞ்சன வீதி பள்ளி 

3 பிப்ரவரி 2018இல் மேம்படுத்தப்பட்டது.

16 comments:

 1. அருனையான நினைவோட்டங்கள் முதலில் ஒலிபெருக்கிலில் கேமரா என்றதும் சற்று குழம்பித்தான் போனேன் பொய்களும் சில நன்மைகளுக்கே... தொடர்கிறேன்

  ReplyDelete
 2. பழைய நினைவுகளில் ஆழ்ந்து எங்களையும் அந்தக் காலத்துக்கு அழைத்துச் சென்று விட்டீர்கள். அனுபவங்களால், உழைப்பால் உயர்ந்தவர் நீங்கள்.

  ReplyDelete
 3. அருமையான கட்டுரை.
  பள்ளியனுபவம், தாத்தாவின் கட்டளைப்படி வேலை பார்த்தது, பொறுப்புகளை உணர்தல் என்று நிறைய செய்திகள் இளைய தலைமுறைகளுக்கு இருக்கிறது.

  மனதில் என்றும் நிற்கும் உங்கள் பதிவு.

  ReplyDelete
 4. இளமைக்கால நினைவுகள் என்றுமே இனிமையானவை

  ReplyDelete
 5. எத்தனை அனுபவங்கள் உங்கள் பள்ளி உங்களுக்குத் தந்திருக்கிறது. அதுவும் வீட்டின் நிலை உங்கள் மேல்படிப்பு படிக்க யோசிக்க வைத்தது பற்றி படிக்கும்போது கஷ்டமாக இருந்தது.

  ReplyDelete
 6. சில பொருத்தங்கள்.. ஆச்சர்யம்..

  நானும் பைண்டிங் பட்டறைக்குச் சென்றிருக்கின்றேன்..
  பள்ளி வராண்டாவில் ஒலிபெருக்கிக்குள் கேமரா!..

  அப்போதெல்லாம் தேர்வு முடிவைத் தாங்கிவரும் செய்தித் தாளுக்காக காத்துக் கிடப்பது..

  நல்லதொரு நினைவு கூறல்..

  ReplyDelete
 7. உங்களின் அனுபவங்கள் அந்தக் காலத்துக்கே அழைத்துச் சென்றது. படங்களைக் கொண்டு காலத்தை நினைவு வைத்துக்கொள்வதும் ஒரு உத்திதான்.

  சிறிய வயதிலேயே நேரத்தை வீணாக்காது வேலை பார்க்கும்படி திருப்பிய தாத்தா Vision உள்ளவர்தான்.

  ReplyDelete
 8. 19-1-1943 திருநாளன்று நான் இந்தப் பேட்டைத் தெருவில் இருந்த --- இலக்கமிட்ட வீட்டில் தான் பிறந்திருக்கிறேன்.

  இப்பொழுதும் அந்தத் தெருவிற்கு பேட்டைத் தெரு என்று தான் பெயர் வழங்கி வருகிறதா, ஐயா?..

  ReplyDelete
  Replies
  1. ஆம், அதே பெயர் தான்

   Delete
 9. அருமையான பள்ளி நினைவுகள் சார் :)

  ReplyDelete
 10. படிக்கப் படிக்க மிகவும் சுவையாக இருந்தது. ஆசிரியர்கள் பெயர்களை எல்லாம் நினைவு கூர்ந்தமை வியப்பாக இருந்தது!

  ReplyDelete

 11. அருமையான நினைவூட்டல்
  பயனுள்ள பதிவு

  ReplyDelete
 12. முனைவர் அய்யா,

  பால்யகால நினைவுகளை அசைபோட்டுப் பார்த்தது அருமை. நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் அழிவதில்லை... இன்னும் அது தனிவதில்லை... எண்ணங்களும் மறைவதில்லை...!

  நன்றி.

  த.ம. 3

  ReplyDelete
 13. நல்ல நினைவேற்றல். இன்றைய உங்கள் வளர்ச்சியில் பள்ளிக்கால சுவடுகள் தெரிகின்றன.

  ReplyDelete
 14. உங்கள் அனுபவம் பழைய நினைவுகளை மீட்டியது. வீட்டின் சூழல் அதனால் உங்கள் படிப்பைத் தொடர்வதற்கு எழுந்த சிக்கல் எல்லாம் மனதைச் சங்கடப்படுத்தியது ஆனால் நீங்கள் உறுதியாக இருந்து உழைத்து இந்நிலையை எட்டியிருக்கிறீர்கள் என்றால் அதற்கு உங்கள் சிறுவயது அனுபவம் அதிலிருந்து நீங்கள் கற்ற பாடங்கள் இல்லையா....அருமையான வாழ்க்கை அனுபவப் பதிவு!!

  ReplyDelete
 15. ஆசரியர்களின் பெயர்களை மறக்காமல் நிணைவு கூர்ந்து பதிவிட்டது சிறப்பு..பத்தாவகுப்பில் அயந்து வருடம் சொல்லிக் கொடுத்த ஒரு ஆசிரியர் பெரும் நிணைவில் இல்லை அய்யா...

  ReplyDelete