03 August 2015

திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் கோயில்

கும்பகோணம் தஞ்சாவூர் சாலையில் திருவலஞ்சுழி என்னும் சிற்றூரில் அமைந்துள்ள கபர்தீஸ்வரர் கோயில் என்றும் வலஞ்சுழிநாதர் கோயில் என்றும் அழைக்கப்படுகின்ற, தேவாரப்பாடல் பெற்ற, சிவன் கோயில் வளாகத்தில் வெள்ளை விநாயகர் கோயில் உள்ளது. சிவன் கோயிலின் முதன்மை கோபுரத்தைக் கடந்து உள்ளே போகும்போது கோயிலின் வலப்புறம் பைரவர் சன்னதியும், இடப்புறம் ஜடாதீர்த்தமும் ஜடா தீர்த்த விநாயகர் சன்னதியும் உள்ளதைக் காணமுடியும். தொடர்ந்து பலிபீடம், மூஞ்சுறு, கொடி மரம் உள்ளன. அதற்கடுத்து வெள்ளை விநாயகர் சன்னதி உள்ளது.  கருவறையில் விநாயகர் உள்ளார். அவர் கடல் நுரையால் ஆனவர் என்று கூறப்படுகிறது. 


அழகான வேலைப்பாடுகளைக் கொண்ட தூண் மண்டபமும் கருவறையும் காண்போரைக் கவரும் வகையில் அமைந்துள்ளன. தூண்களின் அமைப்பு வித்தியாசமாகக் காணப்படுகிறது.

 

தூண்களைக் கடந்து உள்ளே போகும்போது கருங்கல்லால் ஆன வேலைப்பாடுடன் கூடிய உயரமான விளக்குகள் காணப்படுகின்றன.


புகழ்பெற்ற திருவலஞ்சுழி கருங்கல் பலகணி இங்கே உள்ளது. கோஷ்டங்களில் காணப்படும் கருங்கல்லால் ஆன சன்னல்களும் பார்ப்பவர் மனதை ஈர்க்கும் வகையில் உள்ளன. அக்காலத்தில் கட்டிட வல்லுநர்கள் கோயில்களைக் கட்டும்போது திருவலஞ்சுழி பலகணி, ஆவுடையார் கோயில் கொடுங்கை, திருவீழிமிழலை வௌவால் நத்தி மண்டபம் ஆகியவை போன்ற பணிகளைத் தவிர்த்து பிற பணிகளை மேற்கொள்ளமுடியும் என்று கூறுவார்களாம். இவ்வாறாக நிபந்தனை விதிக்கும் அளவு மிகவும் நுட்பமான வேலைப்பாடுகளைக் கொண்டு அவை அமைந்துள்ளதை நேரில் கண்டால்தான் உணரமுடியும். கருங்கல்லால் ஆன பலகணி எனப்படுகின்ற சன்னல் வழியாகவோ,  வலது புறம் வழியாகச் சென்று  சன்னதிக்குள்ளிருந்தோ விநாயகரை தரிசிக்கலாம்.
சன்னதி தேர் வடிவில் அமைந்துள்ளது. தேர்ச்சக்கரம் சற்றே புதைந்த நிலையில் காணப்படுகிறது. அந்த வாயிலின் மேலே விதானத்தில் கருங்கல்லால் ஆன வேலைப்பாடு அழகாக உள்ளது. வலப்புறமாகச் சென்றால் கருவறையை அடையலாம். அங்கு விநாயகர் காணப்படுகிறார். இவ்விநாயகரைப் பற்றி பலவாறாக பெருமையாக பேசப்படுகிறது. இந்திரன் அனைத்து  தெய்வங்களையும் வணங்கிவிட்டு, விநாயகரை வணங்க மறந்ததாகவும், அதன் காரணமாக நேரடியாக திருவலஞ்சுழி வந்து அங்குள்ள கடல் நுரையால் ஆன  வெள்ளை விநாயகரை, விநாயகர் சதுர்த்தி தினத்தில் வழிபட்டதாகக் கூறுகின்றனர். மகாவிஷ்ணுவும் மார்கழி மாத சஷ்டி திதியில் இங்கு வெள்ளை விநாயகரை நேரில்  வழிபட்டதாகவும் கூறுகின்றனர்.

சென்ற வழியாகவே வரும் நிலையில் கோஷ்டங்களில் அழகான சிற்பங்களைக் காணமுடியும். 


சுற்றிவரும்போது வேலைப்பாடுடன் கூடிய கொடுங்கையைக் காணமுடியும். ஆவுடையார்கோயில் கொடுங்கையை நினைவூட்டுமளவு அக்கொடுங்கை அமைந்துள்ளது.


விநாயகரை வெள்ளை விநாயகராக ஆவாகித்து வழிபடுவது ஒரு மரபாகும் என்றும், இதனைச் சுவேத விநாயகர் என்றும் வரலாற்றிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியன் தன்னுடைய தஞ்சாவூர் என்னும் நூலில் குறிப்பிடுகின்றார். மேலும் அவர் சுவேத விநாயகர் கல்பம் என்று ஒரு நூல் உள்ளதாகவும், இவ்விநாயகர் கோயில் சோழர் காலத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார். இத்தகு பெருமை மிக்க, கபர்தீஸ்வரர் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள வெள்ளை விநாயகர் கோயிலுக்கு ஒரு முறை சென்று தரிசிப்போம், வாருங்கள்.
-----------------------------------------------------------------
சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூவில் கீழ்க்கண்ட பதிவைக் காணவருக.
-----------------------------------------------------------------

26 comments:

 1. பலதடவை சென்றிருக்கின்றேன்..
  பதிவிலுள்ள படங்கள் அற்புதமான சிற்ப அலங்காரங்களை கண்முன் நிறுத்துகின்றன ..

  அங்கே வடக்குப் புறத்தில் உள்ள பழைமையான பெரிய மண்டபம் திருப்பணியின் போதும் சீரமைக்கப்படாமல் இருக்கின்றது..

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகை மகிழ்வினைத் தருகிறது. நன்றி.

   Delete
 2. பதிவும், படங்களில் தெரியும் சிற்பங்களின் நுணுக்கமும் பிரமிக்க வைக்கின்றன. நல்ல பதிவு!
  த ம 2

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   Delete
 3. வணக்கம் முனைவரே.... படங்களில் இருக்கும் தூண்களின் வேலைப்பாடுகள் அதிகம்போல் இருக்கின்றதே... பதிவுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. அழகான வேலைப்பாடுகள். பார்த்துக் கொண்டேயிருக்கலாம். நன்றி.

   Delete
 4. பலமுறை சென்று வந்த கோயில்தான் ஆனாலும்
  இதுவரை காணாத காட்சிகள்
  அறியாத செய்திகள் ஐயா
  நன்றி
  தம+1

  ReplyDelete
  Replies
  1. திருவலஞ்சுழி என்றாலே விநாயகர்கோயில்தான் என்று பலர் நினைக்கின்றனர். கபர்தீஸ்வரர் கோயில் எனப்படும் சிவன் கோயில் வளாகத்தில் இக்கோயில் உள்ளது என்பதை பல முறை சென்றபின்னரே நான் அறிந்தேன். நன்றி.

   Delete
 5. திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் பற்றிய சிறப்புகளுக்கு நன்றி ஐயா... படங்கள் அனைத்தும் அருமை...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் என்னை இன்னும் ப்ல பதிவுகளை எழுதத் தூண்டுகிறது. நன்றி.

   Delete
 6. பலமுறை உறவினர்களை அழைத்து சென்று இருக்கிறோம். அழகான கோவில்.
  படங்கள் எல்லாம் அழகு.

  ReplyDelete
  Replies
  1. பார்க்கப் பார்க்க அழகு. நன்றி.

   Delete
 7. பதிவும் படங்களும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி.

   Delete
 8. நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த கோவிலாக இருக்கிறது. கருங்கல்லினால் செய்த பலகணி தெரியாத தகவல். ஒரு முறைச் என்று வர வேண்டும். அருமையான பதிவு!

  ReplyDelete
  Replies
  1. பள்ளி நாள்கள் முதல் இக்கோயிலுக்குச் சென்றுவருகிறேன். ஆரம்பத்தில் பலகணி தெளிவாகத் தெரியும். பின்னர் நாளடைவில் இரும்பு கேட் அமைத்துவிட்டார்கள். முழுமையான அழகை ரசிக்க சிரமமாக உள்ளது.

   Delete
 9. நான் சென்றதில்லை.இப்போது சென்றது போல் ஓர் உணர்வு!
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கு நெஞ்சார்ந்த நன்றி.

   Delete
 10. வெள்ளை விநாயகர் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன்.சென்றது இல்லை.சிற்ப வேலைகள் பிரம்மிக்க வைக்கின்றன. அழகான படங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வாய்ப்பு கிடைக்கும்போது அக்கோயிலுக்குச் செல்ல வேண்டுகிறேன். நன்றி.

   Delete


 11. ஐயா வணக்கம்!

  இன்று உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.

  http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post_5.html

  ReplyDelete
  Replies
  1. எனது தளம் தங்களால் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டமையறிந்து மகிழ்ச்சி, நன்றி.

   Delete
 12. வணக்கம்
  ஐயா.

  இந்தஆலயம் பற்றி அறிய வில்லை.. தங்களின் பதிவு வழி ஆலயத்தை பற்றி அறிந்தேன் அழகிய படங்களுடன் அற்பு விளக்கம் கண்டு மகிழ்ந்தேன்


  வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் த.ம 9

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், வலைச்சர அறிமுகத்தைத் தெரியப்படுத்தியமைக்கும் நன்றி.

   Delete
 13. விநாயகர் பற்றி ய விளக்கமும் படங்களும் அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   Delete