10 March 2017

மனதில் நிற்கும் திருமஞ்சனவீதி பள்ளி (1963-1972)

ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு முக்கிய தாக்கத்தை உண்டாக்குவது அவர்கள் படித்த ஆரம்பப்பள்ளிக்கூடமும், அங்கு பெறப்பட்ட அனுபவங்களும். கும்பகோணத்தில் நான் படித்த (சற்றொப்ப 1964-72) கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி ஆரம்பப் பள்ளி எனக்கும் நண்பர்களுக்கும் போதி மரமாகும். அங்கு நாங்கள் கற்றுக்கொண்ட கல்வி என்பதானது இன்றளவும் எங்கள் வாழ்க்கைக்கு பெரிய அளவில் உதவுகின்றது.

நேரந்தவறாமை, உண்மை பேசுதல், அனாவசிய விஷயங்களில் தலையிடாமை, பெரியவர்களை மதித்தல், அன்றைய பணிகளை அவ்வப்போது முடித்தல், திட்டமிடல் உள்ளிட்ட என்னுடைய தற்போதைய பல பழக்கங்களுக்கு அடித்தளம் நான் படித்த ஆரம்பப்பள்ளியே.   

நாங்கள் படித்த காலத்தில் திருமஞ்சன வீதி பள்ளி கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதியில் 16கட்டு மாரியம்மன் கோயில் எதிரிலும், சாத்தாரத்தெருவில் கிருஷ்ணன் கோயில் அருகிலும் செயல்பட்டு வந்தது. முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை சாத்தாரத்தெருவிலும், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை திருமஞ்சன வீதியிலும் இயங்கி வந்தன.

1964வாக்கில் நான் முதல் வகுப்பில் சேர்ந்திருப்பேன் என நினைக்கிறேன். பெரும்பாலும் எங்களின் ஆசிரியர்கள் அனைவருமே மிகவும் ஈடுபாட்டோடு வகுப்பினை நடத்தினார்கள். அப்போதைய ஆசிரியர்களுக்கு இலக்கு மாணவர்களின் நலன் மட்டுமே.  ஆசிரியரின் பெயரைவிட நாங்கள் வைத்த பெயரோ, பட்டப்பெயரோதான் எங்களுக்கு இன்னும் நினைவில் உள்ளது. சிண்டு வாத்தியார் (முதல் வகுப்பு), கண்ணாடி டீச்சர் (2ஆம் வகுப்பு), கண்ணாடி வாத்தியார் (3ஆம் வகுப்பு திரு ராஜகோபால்), ஒல்லி வாத்தியார் (4ஆம் வகுப்பு திரு தண்டபாணி), செவிட்டு வாத்தியார் (5ஆம் வகுப்பு திரு காளமேகம்), வெற்றிலை சீவல் வாத்தியார் (6ஆம் வகுப்பு திரு கண்ணப்பன்), இன்னொரு குடுமி வாத்தியார் (7ஆம் வகுப்பு திரு தியாகராஜன்), ஒன்றரை கண்ணு வாத்தியார் (8ஆம் வகுப்பு திரு கே.ஆர்.கே) என்று அனைவரும் என்றும் எங்கள் மனதில் இடம் பெற்றவர்கள் ஆவார்கள். 

பள்ளி என்றாலே பயம் தான்
பள்ளிக்குச் செல்வதென்றால் எனக்கு முற்றிலும் பிடிக்காது. வீட்டிலிருந்து பள்ளிக்கு நெருங்க நெருங்க என்னை அறியாமல் ஏதோ ஒரு பயம் வரும். வாசலருகே வந்ததும் இன்னும் அதிகமாகும். பள்ளிக்குப் போக மறுத்தால் எங்கள் தாத்தா விறகுக்கட்டையை எடுத்துக்கொண்டு மிரட்டுவார். (எங்கள் வீட்டின் எதிரில் விறகுக்கடை இருந்தது) பயந்துகொண்டு சென்றுவிடுவேன். மணியடிப்பதற்குள் வகுப்பிற்குள் வந்துவிடவேண்டும். இல்லாவிட்டால் ஆசிரியரிடம் திட்டு வாங்கவேண்டும். அதற்காக முன்கூட்டியே வகுப்பிற்கு வந்துவிடுவோம். வந்தபின் வகுப்பை சுத்தம் செய்வோம். தோட்டத்தில் உள்ள இலைகளைப் பொறுக்கிக் குப்பையில் போடுவோம். கையில் விளக்குமாற்றுக்குச்சியை வைத்துக்கொண்டு ஒவ்வொரு இலையாகக் கொத்திக் கொத்தி எடுப்போம். யார் அதிகமாக எடுக்கிறார்கள் என்று எங்களுக்குள் போட்டி வைத்துக்கொள்வோம். 

காலை உணவு
மூன்றாம் வகுப்பு படிக்கும்போது ஒரு முறை பள்ளிக்குச் செல்லமாட்டேன் என்று அழுதுகொண்டு வீட்டில் விரட்ட பள்ளிக்கு சாப்பிடாமல் வந்துவிட்டேன். எங்கள் ஆத்தா ஒரு கிண்ணத்தில் உணவு வைத்துக்கொண்டு வைத்துக்கொண்டு பள்ளிக்கு வந்துவிட்டார்கள். சாப்பிடாமல் வந்துவிட்டான் என்று அவர்கள் கூறவே வகுப்பு ஆசிரியர் பெரிய வாத்தியார் (தலைமை ஆசிரியர் திரு ராஜகோபால்) அறைக்கு மற்றொரு மாணவரோடு அனுப்பிவைத்துவிட்டார். நடுங்கிக்கொண்டே வாசலில் நின்றேன், ஆத்தாவுடன். பெரிய வாத்தியார் எங்கள் ஆத்தாவிடம் இவ்வாறு சாப்பிடாமல் அனுப்பாதீர்கள் என்று கூறி அவர் அறையிலேயே சாப்பிடச்சொன்னார். அவரது அறையில் எங்கள் ஆத்தா எனக்கு ஊட்டிவிட்டார்கள். அவர் சென்றதும், வயதானவர்களை அலையவிடக்கூடாது என்றும், உடலை கவனித்துக்கொள்வது அவசியம் என்றும் பெரிய வாத்தியார் திட்டிக்கொண்டே கூறிய அறிவுரையை மறக்கமுடியாது.  

வியாச நோட்
நான்காவது படிக்கும்போது ஒரு முறை வீட்டில் வியாச (கட்டுரை நோட்டை வியாச நோட் என்போம்) நோட்டை வைத்துவிட்டு வந்தேன். அவ்வகுப்பிற்கு இரு வாயில்கள். இரண்டாவது வாயிலில் என்னை கொக்கு போடச் சொன்னார் ஆசிரியர். எவ்வளவு நேரம் நின்றேன் என எனக்குத் தெரியாது. மற்றொரு வாசல் வழியாக வந்த என் தந்தையார் நான் சாதாரணமாக நிற்பதாக நினைத்துக்கொண்டு வெளியே நிற்காதே என்று என் ஆசிரியர் முன்பாகச் சொல்ல, அந்தப் பய செஞ்ச தப்புக்கு நாந்தான் நிக்கவச்சேன் என்றாரே பார்க்கலாம். நாம் செய்த தப்பு வீட்டிற்கும் தெரிந்துவிட்டதே என்ற அவமான உணர்வு ஏற்பட்டது. தவறுகள் குறையவும் நம்மை திருத்திக்கொள்ளவும் அதிகமான வாய்ப்புகள் இப்பள்ளியில் தரப்பட்டன. 

முருகா நான் பாஸ் ஆகணும்
முழு ஆண்டு தேர்வுக்கான பரீட்சை அட்டையில் முருகன் படத்தை ஒட்டி அதன் நான்கு பக்கங்களிலும் முருகா நான் பாஸ் ஆகணும் என்று எழுதி வைத்திருந்தேன். அதனைப் பார்த்த வகுப்பாசிரியர் முருகன் பாஸ் போட மாட்டார், நீ தான் நன்கு படித்து எழுதவேண்டும் என்றார். பக்தி இருக்கலாம், ஆனால் பரீட்சை அட்டையில் அது கூடாது என்றார் அன்பாக.  

இங்க் மாத்திரை
ஐந்தாம் வகுப்பில் இங்க் மாத்திரை அனுபவம் மறக்க முடியாதது. பல மாணவர்கள் இங்க் போடாமல் வந்து ஆசிரியரை ஏமாற்றுவது வாடிக்கை. அதைத் தடுப்பதற்காக வகுப்பு ஆசிரியர் அனைவரிடமும் காசுகளைப் பெற்று ஒரு மாணவனை அனுப்பி ஐந்து அல்லது பத்து இங்க் மாத்திரைகளை வாங்கி வரச் சொல்வார். கும்பேஸ்வரர் வடக்கு வீதியில் உள்ள கல்யாண்ராம் சாயச்சாலையில் ஒரு மாத்திரை இரண்டு காசு என்ற நிலையில் தேவையானதை அவன் வாங்கி வருவான். அதனை நீரில் கரைத்து ஒரு பாட்டிலில் வைக்கச் சொல்வார். அந்த வகுப்பு மாணவர்கள் மட்டும் தேவைப்படும்போது இங்க் ஊற்றிக்கொள்ளலாம்.

ஓடி ஒளிதல்
பயந்துகொண்டு பள்ளிக்குப் போகாமல் எங்காவது ஒளிந்துகொள்வது என் வழக்கம். அவ்வாறு ஒளிந்துகொள்ளும்போது பள்ளியில் இருந்து என்னைத் தேடிக்கொண்டு சில மாணவர்கள் வருவார்கள். அவர்கள் ஆசிரியரால் எங்களை (பிள்ளை பிடிப்பது போல) பிடித்துச் செல்வதற்காக அனுப்பப்பட்டவர்கள். நான் வழக்கமாகக் கொல்லைப்புறத்திலோ, மாடியிலோ சென்று ஒளிந்துகொள்வேன். அப்போது அவர்கள் சுற்றிவளைத்து இழுத்துக்கொண்டு போய் ஆசிரியர் முன் விட்டு விடுவார்கள். கிட்டத்தட்ட ஐந்தாம் வகுப்பு படிக்கும் வரை நான் இவ்வாறு ஈடுபட்டு வந்துள்ளேன்.

அப்பாவிற்கு வேலையில்லை
ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது நடைபெற்ற நினைவு என் வாழ்வில் என்றும் மறக்கமுடியாது. எங்களின் தாத்தா செல்லமாக வளர்த்ததன் காரணமாக எங்கள் அப்பா நிரந்தரமாக வேலைக்குச் செல்லாமல் இருந்தார். வகுப்பாசிரியர் ஆங்கில வகுப்பில் What is your father? என்ற கேள்விக்கு பதில் கூறும்படி சொன்னார். My father is a clerk, My father is a petty shop owner, என்று நண்பர்கள், சொல்லிக்கொண்டே வந்தார்கள். நான் எழுந்து நின்று My father is....is....is என்று அப்படியே நின்றுவிட்டேன். ஆசிரியர் அருகில் வந்தார்.  பதில் சொல்லும்படி கூறவே, அழுதுகொண்டே என் அப்பாவிற்கு வேலையில்லை, அதற்கு எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை என்று அழ ஆரம்பித்தேன். அதற்கு அவர் My father has no job என்று கூறவேண்டும் என்று சொல்லிவிட்டு, என்னை வாஞ்சையோடு தடவிக்கொடுத்துவிட்டு, நீ நல்ல வேலைக்குச் செல்லவேண்டும், செல்வாய் என்று கூறி பேச்சை மாற்றினார். மனதின் பாரம் குறைந்தது.

நம்பர் கிளாஸ்
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு வாரமும் முதல் நாள் நம்பர் கிளாஸ் வைப்பார்கள். பள்ளி மைதானத்தில் அந்தந்த வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் வரிசையாக நிற்போம். கேட்கும் கேள்விக்கு சரியாக பதில் கூறுபவர்கள் வரிசையில் முதலில் வந்துவிடுவர். இல்லாதவர்கள் பின்னுக்குத் தள்ளப்படுவர். எவ்வளவு பின் தள்ளிப்போகிறோமோ அந்த அளவிற்கு அடி விழும். அடியிலிருந்து தப்பவும் முன்னுள்ள எண்ணில் வரவேண்டும் என்பதற்காகப் படிக்க ஆரம்பித்தோம்.

வாக்கிங் ஸ்டிக்
வகுப்பு ஆசிரியர் வேறொருவர் இருந்தாலும், எட்டாம் வகுப்பிற்கு தலைமையாசிரியரே ஒரு வகுப்பு எடுக்க வருவார். சில சமயங்களில் உதவித்தலைமையாசிரியர் (திரு வரதாச்சாரியார்) வருவார். வகுப்பறையில் அவருடைய இருக்கைக்குப் பின்னால் ஒரு கம்பு வாக்கிங் ஸ்டிக் போல இருக்கும். அதனை நாங்கள் காசு சேர்த்து அவருக்கு வாங்கித்தர வேண்டும். முன்பக்கம் வளைந்து, வயதானவர்கள் ஊன்றிச்செல்லும் குச்சிதான் அது. எங்களை அடிப்பதற்கு அந்தக்குச்சிதான்.

தண்டனைகள்
கொக்கு போடல், பிரம்படி, நம்பர் கிளாசில் கடைசியாகப் போகப் போக அடி, காதினைத் திருகுதல்,  போன்ற தண்டனைகளுடன் நாங்கள் பார்த்த தண்டனைகளில் ஒன்று விலங்குக்கட்டை. சிறிய கட்டை இரும்புச்சங்கிலியால் இணைக்கப்பட்டிருக்கும். அதிகமாக தவறு செய்தவர்கள், கட்டுப்படுத்த முடியாதவர்களை விலங்குக்கட்டையில் உள்ள சங்கிலியைக் கொண்டு காலில் கட்டி விடுவார்கள். தவறு செய்தவன் அந்த விலங்குக்கட்டையைத் தூக்கிக்கொண்டே செல்லவேண்டும். 

அழகிய கையெழுத்து
இப்பள்ளியில்  படித்த அனைவரும் சேர்த்த சொத்துகளில் ஒன்று அழகான கையெழுத்து. பள்ளியில் கொடுக்கும் பயிற்சியின் காரணமாக அனைவருமே அழகாக, ஒரே மாதிரியாக எழுதும் திறனை வளர்த்துக்கொண்டோம். எங்களின் கையெழுத்தை வைத்தே திருமஞ்சனவீதியில் படித்த பிள்ளையா என்று கேட்பார்கள்.

மனப்பாடம், ஒப்புவிப்பு
மனப்பாடம் செய்வதில் எங்களுக்கு நிகர் நாங்களே. அந்த அளவிற்கு நாங்கள் எங்கள் ஆசிரியர்களால் பழக்கப்படுத்தப்பட்டோம். அவ்வாறே வீட்டிலும் பாடங்களை சத்தம் போட்டுப் படிப்போம். ஓர் கா கா, பத்திக்கா ரெண்டரை, நூத்துக்கா இருபத்தஞ்சு (1 x 1/4 =  1/4, 10 x 1/4 =  2 1/2, 100 x 1/4 =  25) என்று தொடங்கி விடுபாடே இன்றி ஒப்பிப்போம்.  கால் வாய்ப்பாடு, அரை வாய்ப்பாடு, முக்கால் வாய்ப்பாடு என்ற நிலையில் மிகவும் வேகமாக ஒப்பிப்போம். அவ்வாறே 60 ஆண்டுகளையும் பிரபவ, விபவ, சுக்ல, பிரமாதூத, பிரசோற்பத்தி, ஆங்கிரச, ஸ்ரீமுக, பவ, யுவ.... என்று தொடங்கி  இடைவெளியின்றி ஒப்பிப்போம். ஒப்பிக்கும்போது சிலர் மோட்டுவளையைப் பார்ப்போம், சிலர் கண்களை மூடிக்கொள்வோம். சிலர் ஒரே இடத்தையே கவனித்துக்கொண்டு சிந்தனையோடு ஒப்பிப்போம்.

ல, ள, ழ உச்சரிப்பு
எந்த ஊரில், எந்த நாட்டில் எங்கு சென்றாலும் எங்களின் ல, ள, ழ உச்சரிப்பை வைத்து எங்கள் பள்ளியின் பெயரைக் கூறிவிடுவார்கள். அந்த அளவிற்கு நாக்கானது அன்னத்தைத் தொடல், நாக்கு மடக்குதல், நடுத்தொண்டையில் தொடல் என்ற அளவிற்குப் பயிற்சி பெற்றோம். 

கை கட்டுதல்
பள்ளியில் படிக்கும் காலத்தில் ஆசிரியர் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்லும்போதோ, பிற நிலைகளிலோ கைகட்டிக் கொண்டே இருக்கவேண்டும். (விவேகானந்தர் கையைக் கட்டிக் கொண்டு நிற்கின்ற படம் நினைவிற்கு வருகிறதா, அவரைப்போல, ஆனால் சற்று பயந்த நிலையில் மரியாதையோடு). பள்ளிப் படிப்பு முடிந்து வெளியில் சென்றபின்னர்கூட அவ்வப்போது திருமஞ்சன வீதி ஆசிரியர்களைப் பார்க்கும்போது எங்களையும் அறியாமல் கையைக் கட்டிக் கொண்டு மரியாதை செலுத்துவோம்.  

தலைமுறை
எங்களில் பெரும்பாலான குடும்பத்தில் அண்ணன், அக்கா, தம்பி, தங்கை என்று வரிசையாக தொடர்ந்து ஒரே ஆசிரியர்களிடம் படித்துள்ள அனுபவத்தைத் தந்தது இப்பள்ளி. தலைமுறைகளை இணைத்த பள்ளி என்று கூட நாங்கள் கூறுவோம். ஆசிரியர்களும் மாறமாட்டார்கள். அந்தந்த வகுப்பிற்கு ஒரே ஆசிரியர்.  

அது அந்தக்காலம்
இவையனைத்தும் சுமார் 40-50 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தவை. தண்டனை, பள்ளி போன்றவற்றை வைத்து இந்நிலையை இப்பள்ளியோடு மட்டுமல்ல, வேறு எந்த பள்ளியோடும் ஒப்புநோக்கவே கூடாது. முடியாது. எந்த அளவிற்கு கண்டிப்பு இருந்ததோ அதைவிட அதிகமான கரிசனம் காட்டியவர்கள் எங்கள் திருமஞ்சனவீதி பள்ளியின் ஆசிரியர்கள். வீட்டில் பெற்றோர் கவனிப்பதைவிட நம்மை ஆழ்ந்து கவனிப்பர். நம் நடவடிக்கைகள் அவர்களால் உற்றுநோக்கப்படும். ஏதாவது குறை இருப்பின் பெற்றோரை வரச்சொல்லி அவர்களிடம் எடுத்துரைத்து எங்களை நல்ல வழியில் செல்லும்படி அறிவுறுத்துவர். அந்த கண்ணோட்டத்தில் பார்க்கும்போது எங்களுக்கு மற்றொரு பெற்றோராகவே ஆசிரியர்கள் இருந்தார்கள் என்பதை அங்கு படித்த அனைவரும் முழுமையாக ஏற்போம்.  
  
உடன் படித்த நண்பர்கள் மோகன், சுரேஷ்தாஸ், ரேவதி, பிருந்தா, நிர்மலா (சிங்காரம் செட்டித்தெரு), மதியழகன், ராஜசேகரன், (பேட்டை, 16கட்டு), திருமலை (மதகடித்தெரு), ஓமலிங்கம் (மௌனசாமி மடத்துத்தெரு), விட்டல்ராவ் (கும்பேஸ்வரர் மேல வீதி) போன்றோர் மிக அருகிலுள்ள தெருக்களிலே இருந்தனர். மேல் வகுப்பிற்குச் செல்லச் செல்ல விளையாட்டுகளும், குறும்புகளும் ஓரளவு குறைய ஆரம்பித்து படிப்பின்மீதான ஆர்வம் அதிகமானது. 

இன்றும் கும்பகோணம் சம்பிரதி வைத்தியநாதய்யர் அக்கிரகாரத்தில் எங்களின் வீடு, தாத்தா விரட்டல், நண்பர்கள் பிடித்துத்தரல் போன்றவை மலரும் நினைவுகளாக உள்ளன. பள்ளிப்படிப்பு முடிந்து பல வருடங்கள் ஆனபோதிலும் அந்தப் பள்ளி ஆசிரியர்களைப் பார்க்கும்போது எங்களையும் அறியாமல் எங்களின் இரு கைகளையும் கைகட்டிக்கொள்வோம். ஏனென்றால் பள்ளியில் படிக்கும்போது ஆசிரியரைக் கண்டால் கைகட்டி மரியாதை செலுத்தவேண்டும் என்பது அப்போதைய நடைமுறை.  என் நண்பர்களில் பெரும்பாலானோர் நல்ல நிலையில், பணியில் தற்போது இருக்கின்றார்கள். எங்களை நெறிப்படுத்திய, நாங்கள் ஆரம்பத்தில் படித்த, திருமஞ்சனவீதி பள்ளியின் ஆசிரியப்பெருமக்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். ஒட்டுமொத்தத்தில் எங்களுக்கு ஒரு போதி மரமாகவே ஆனது நாங்கள் படித்த திருமஞ்சனவீதி ஆரம்பப்பள்ளி.     

திருமஞ்சன வீதி வழியாக போகும்போதெல்லாம் அக்கால நினைவுகள் வந்துவிடும். இப்போது அப்பள்ளி இன்னும் ஒரே வளாகத்தில் திருமஞ்சன வீதியில் இயங்கிவருகிறது. வாய்ப்பு கிடைக்கும்போது உள்ளே போய் பார்க்க ஆசையாக உள்ளது.  அந்த நல்வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன். அக்கால திருமஞ்சன வீதி பள்ளியும், உடன் படித்த நண்பர்களும் என்றும் என் இதயத்தில்.    

23 comments:

 1. தங்களது நினைவலைகள் பிரமிக்க வைக்கின்றது //அன்றைய ஆசிரியர்களுக்கு மாணவர் நலன் ஒன்றே குறிக்கோள்// உண்மை

  ReplyDelete
 2. பள்ளி நாட்களை மறக்க முடியுமா....? ஆனால் இவ்வளவு விசயத்தையும் மறக்காமல் உள்ளது வியப்பை தருகிறது ஐயா...

  வாசிக்க வாசிக்க எனது பள்ளி நாட்களும் ஞாபகம் வந்தது...

  ReplyDelete
 3. என்னவொரு சுவாரஸ்யமான நினைவுகள்.. பள்ளியை விட்டுச் சென்ற பின்னும் ஆசிரியரைப் பார்த்தால் கைகளைக் கட்டிக்கொள்ளும் பழக்கம்... இன்றளவில் நினைத்துக் கூடப் பார்க்கமுடியாதது. வித்தியாசமான தண்டனைகள். எனக்கு ஒரு வாத்தியார் செல்லாத காசு இரண்டு, மூன்று, ஐந்து என்று அபராதம் விதிப்பார்.

  ReplyDelete
 4. வணக்கம்
  ஐயா

  தடைகள் தாண்டிய வெற்றி படிதான் தங்களின் பதையும் எனது பாதையும் நினைவு படுத்தி அழகாக சொல்லியுள்ளீர்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 5. இளமைக்கால நினைவலைகள்
  அதிலும் தொடக்க கால பள்ளி நினைவலைகள்
  மறக்கவே இயலாதவை அல்லவா
  தங்களின் நினைவலைகள் காட்சிகளைக் கண் முன்னே
  கொண்டு வந்து நிறுத்துகின்றன ஐயா
  நன்றி

  ReplyDelete
 6. ஐயா, எனது மாமனார் திரு உ.கோபாலன், திருமஞ்சன வீதியில் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராக பணியாற்றி 1992 ல் ஓய்வு பெற்றார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். என் மனைவி கூட ஆரம்பக்கல்வி அங்கேதான் படித்தார்.

  என் மாமனாரை உங்களுக்கு நினைவில் உள்ளதா? அவரும் ஒல்லியாகத்தான் இருப்பார். பல் எடுப்பாக இருக்கும். அவருக்கு ஏதாவது பட்டப்பெயர் இருந்தால் சொல்லவும். என் மகனுக்கு அது ஒரு சுவாரஸ்யமான தகவலாக இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. திரு ராஜகோபாலன் (7ஆம் வகுப்பு மற்றொரு பிரிவின் ஆசிரியர்) என்பவர் இருந்தார். அவரை இந்தி வாத்தியார் என்றழைப்போம். வீட்டில் இந்தி வகுப்புகள் எடுத்தார். அவரிடம் நாங்கள் டியூசன் படித்தோம். எங்கள் தெருவிற்கு அடுத்து அமைந்துள்ள மேலமேட்டுத்தெருவில் அவருடைய வீடு இருந்தது. அவருடைய பல் எடுப்பாகத்தான் இருக்கும். அவரைக் கூறுகின்றீர்களா என்று தெரியவில்லை. வேறு யாராவது அவ்வாறாக இருந்தார்களா என யோசித்து எழுதுவேன்.

   Delete
 7. உங்கள் நினைவுகள் தற்கால பள்ளிகளோடு ஒப்பிட்டு பார்த்தால் அந்த ஆசிரியர்கள் மேல் குற்றங்கள் பதிவு செய்யலாம் ஆனால் காலம் மாறி விட்டதுஆசிரியர்களின் டெடிகேஷன் இப்போது நினைத்துப் பார்க்க முடிகிறதா?

  ReplyDelete
 8. ரசித்துப் படித்தேன். கூடவே எனது பள்ளிக்கூட நினைவுகளும் ஓடி வந்து நின்றன.

  வெளிப்படையாகவே எல்லாவற்றையும் சொல்லிய உங்கள் துணிச்சலுக்கு எனது பாராட்டுகள். பள்ளிக்குச் செல்ல பயந்த அந்த சிறுவன்தான் இன்று விக்கிபீடியாவில் விருது பெற்று இருக்கிறார் எனும்போது, பெருமையாகத்தான் இருக்கிறது.

  திருமஞ்சன வீதி பள்ளி என்பது, அந்த பள்ளி இருக்கும் வீதியின் பெயரால் வந்ததா அல்லது பள்ளிக்கு வைக்கப்பட்ட பெயரே அப்படித்தானா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

  தொடர்ந்து இதுபோன்ற அந்தக்கால நினைவுகளை எழுதுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. கும்பகோணத்தில் அந்தந்த கோயில்களின் இறைவனுக்கு திருமஞ்சனம் செய்வதற்காக புனித நீர் கொண்டுவரப்படுவதற்காக உள்ள தெருக்களை திருமஞ்சன வீதி என்றழைப்பர் என நினைக்கின்றேன். பல கோயில்களில் கும்பகோணத்தில் இவ்வாறாக திருமஞ்சன வீதிகள் உள்ளன. தெர்டர்ந்து அக்கால நினைவுகளை எழுதுவேன்.

   Delete
 9. வாசிக்க ரொம்ப நல்லா இருந்தது. அந்தமாதிரி முனைப்புள்ள மாணவர்கள் நலனில் மட்டுமே அக்கறை காட்டும் ஆசிரியர்களைப் பார்க்கமுடியாத்தற்குக் காரணம் பெற்றோர்களா அல்லது பெற்றோர்களும் மாணவர்களுமா என்றே பட்டிமன்றம் வைக்கலாம்.

  நமக்கும் என்ன என்ன தண்டனைகள் வாத்தியார்கள் வழங்கினார்கள் என்று யோசிக்கவைத்துவிட்டீர்கள்.

  ReplyDelete
 10. மாணவனின் எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடுபவர் ஆசிரியரே என்பது தெளிவாகிறது. இவ்வளவு நினைவுகளையும் கண்ணாடிபோல் சொல்ல முடிகிறதே! அந்த நினைவாற்றலின் ரகசியம் யாதோ?

  - இராய செல்லப்பா நியூஜெர்சி

  ReplyDelete
 11. தங்களின் நினைவுகளின் மீட்டல் மிக அழகிய இசையாய்...

  அது ஒரு கனாக்காலம் ஐயா... அதை எவ்வளவு சந்தோஷமாய் எழுத்தில் கொண்டு வந்திருக்கீங்க...

  அருமை.

  ReplyDelete
 12. மிக சிறப்பாக -- தொடக்கம் முதல் மிக நேர்த்தியாக வாசிப்பவர் உள்ளங்களில் ஆனந்த கண்ணீரை வரவழைத்து விடும் மகோன்னத நன்றிபாராட்டும் கட்டுரை --- இதை படிக்க உங்கள் ஆசிரியரில் பலர் இல்லாமல் இருக்கலாம் .... ஒரு மாணவனின் - அதுவும் உங்களை போன்ற சாதனை மாணவனின் இந்த நன்றி அறிதலை அவர்கள் படிக்கும் வாய்ப்பு பெற்றால் பிறவிப்பயனை அடைந்திருப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன் .....
  .
  ஒழுக்கம் என்றாலென்ன என்ற வினா சகல மட்டத்திலும் நிகழும் இன்றைய உலகில் உங்களது கட்டுரை உள்ளபடியே மெய் சிலிர்க்க வைக்கிறது .
  '' பள்ளிப்படிப்பு முடிந்து பல வருடங்கள் ஆனபோதிலும் அந்தப் பள்ளி ஆசிரியர்களைப் பார்க்கும்போது எங்களையும் அறியாமல் எங்களின் இரு கைகளையும் கைகட்டிக்கொள்வோம். ஏனென்றால் பள்ளியில் படிக்கும்போது ஆசிரியரைக் கண்டால் கைகட்டி மரியாதை செலுத்தவேண்டும் என்பது அப்போதைய நடைமுறை.'' என்று சொல்லி உள்ளீர்கள்
  --------------- இன்றைக்கு அப்படியே தலைகீழாகி போய்விட்டது .......
  தான் என்கிற அகந்தை ,ஆணவம் ,திமிர் ,தன்முனைப்பு போன்றவை இன்றைக்கு வளர்ந்து வறுகிறது .......
  '' பள்ளியின் ஆசிரியப்பெருமக்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.''
  இன்றைக்கு நன்றி பாராட்டுபவர்கள் யாரும் உள்ளனரா என்பது பெரும் வினா----------

  ''அதற்கு அவர் My father has no job என்று கூறவேண்டும் என்று சொல்லிவிட்டு, என்னை வாஞ்சையோடு தடவிக்கொடுத்துவிட்டு, நீ நல்ல வேலைக்குச் செல்லவேண்டும், செல்வாய் என்று கூறி பேச்சை மாற்றினார். மனதின் பாரம் குறைந்தது.''
  அந்த ஆசிரிய பெருமகனாரின் வாக்கிற்கிணங்க நீங்கள் செய்த பணியில் நல்ல பெயரோடு வந்திருக்கிறீர்கள் .

  . இன்றைய ஆசிரியர் உலகம் -- தமிழக தொடக்க கல்வி துறை -- தமிழக மாணவ சமுதாயம் -- கல்வி அதிகாரிகள் -- பெற்றோர்கள் என எல்லோருக்குமான பெரும் தகவலை எளிய நடையில் காட்டி இருக்கிறீர்கள்.உண்மையில் இந்த அற்புதமான கட்டுரை பதிவு நாடெங்கும் சென்று சேர வேண்டும் .....
  ஆசிரிய பணி நான் செய்யவில்லை - கல்வி வணிகத்திலும் இல்லை -- ஒரு ஒட்டு மொத்த சமூகத்திற்குமான மிக அற்புதமான உங்களது கட்டுரைக்காக சிரம் தாழ்ந்து பணிந்து தங்களை வணங்குகிறேன் அய்யா ---- (Sridharan Appandairaj முகநூல் வழியாக)

  ReplyDelete
 13. மலரும் நினைவுகளாக எழுத்தறிவித்த இறைவர்களுக்கு ஒரு எழுத்தஞ்சலி ...என்னுடைய மாணவர் இப்பொழுது அப்பள்ளியில் கணித ஆசிரியராக உள்ளார் ..போயிட்டு வாங்க சார்...(Selvaraj Nayakkavadiyar முகநூல் வழியாக)

  ReplyDelete
 14. "திருமஞ்சன வீதி வழியாகப் போகும் போதெல்லாம்
  அக்கால நினைவுகள் வந்துவிடும். - இப்போது
  அப்பள்ளி இன்னும் ஒரே வளாகத்தில்
  திருமஞ்சன வீதியில் இயங்கிவருகிறது.
  வாய்ப்பு கிடைக்கும் போது
  உள்ளே போய் பார்க்க ஆசையாக உள்ளது." என்பதே
  தங்கள் பதிவின் சிறப்பாகும்!
  பாராட்டுகள்!

  ReplyDelete
 15. எவ்வளவு நினைவலைகள் மடிந்து மடிந்து நெஞ்சில் முட்டி மோதியிருக்கின்றன?... இவற்றை எழுதும் பொழுதே சிறு பிராயத்திற்கு மீண்டும் போய் வாழ்ந்து விட்டு வந்திருப்பீர்களே!

  ஏறத்தாழ 1948--ல் எனது ஐந்து வயதில் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டிருப்பேன். மதுரையில் ஆதிமூலம் பிள்ளை அக்கிரகாரத் தெருவில் ஆரம்பப் பள்ளி.

  நீங்களோ 1964-ல் முதல் வகுப்பு. இடைப்பட்ட இந்த 16 ஆண்டு காலத்தில் வியாச நோட், இங்க் மாத்திரை, வாய்ப்பாடு ஒப்புவித்தல், சிறு குச்சி கொண்டு பள்ளி வளாக இலைகளைக் குத்தி எடுத்து குப்பைத்தொட்டியில் போடுவது, கொக்கு போடல், பிரம்படி, காது திருகல் என்று எதுவுமே மாறாமல் ஆரம்பப் பள்ளிகளீல் தொடர்ந்த நடைமுறையாக இருந்திருப்பது கண்டு என்க்கு ஆச்சரியமான ஆச்சரியம்!

  அன்றைய ஆசிரியர்களின் ஈடுபாட்டுடன் கூடிய கல்வி கற்பித்தலை இன்றைய ஆசிரியர்களுக்கு போதிக்க
  என்ன செய்யலாம என்று யோசனை ஓடுகிறது.

  ReplyDelete
 16. ஐயா! என்ன ஒரு சுவாரஸ்யமான நினைவுகள்! பல தண்டனைகள் வியப்பாக இருக்கின்றன. குறிப்பாக விலங்கு தண்டனை...

  அன்று பள்ளிக்குச் செல்லப் பயந்த மாணவன் இன்று ஆராய்ச்சியில் ஆர்வத்துடன் ஈடுபடுவதுடன் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளாக எழுதுவது என்று ஒளிர்கிறார்! அருமையான அனுபவங்கள் ஐயா. ஆம், தொடக்கப்பள்ளிக் கல்வி அருமையாக அமைந்துவிட்டால் நல்லதே!

  தங்களுக்கு எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!

  ReplyDelete
 17. என் மனதில் நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தவற்றை பதிவு செய்திருக்கும் திரு. ஜம்புலிங்கம் அவர்களின் பள்ளி தோழன் என்பதில் பெருமை கொள்கிறேன். நன்றி ஜம்பு.(இப்பள்ளியில் என்னுடன் படித்த நண்பர்களில் ஒருவரான திரு ராஜசேகரன் Rajasekar Rajasekaran முகநூல் வழியாக)

  ReplyDelete
 18. நல்லதொரு நினைவலை

  ReplyDelete
 19. Dr U.Prabhakaran (thro email: uprabhakaran48@gmail.com)
  உங்கள் பள்ளிஅனுபவம் மனதிற்கு மட்டுமல்ல மாணவர்களுக்கும்தான் அன்பன், பிரபாகரன்

  ReplyDelete