முகப்பு

25 November 2017

கும்பகோணத்தில் ஓர் அறிவுத் திருக்கோயில் : முனைவர் ச.அ.சம்பத்குமார்

கும்பகோணம்சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலைய நிறுவனரின் நூற்றாண்டு விழாவின் ஒரு முக்கிய நிகழ்வாக நண்பர் முனைவர் ச.அ.சம்பத்குமார் (அலைபேசி 9443677943) எழுதிய கும்பகோணத்தில் ஓர் அறிவுத்திருக்கோயில் என்ற நூலைக் குறிப்பிடலாம். நூலாசிரியரை நான் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் நன்கறிவேன். இந்நூலகத்தைப் பற்றிய அவரது தேடல் தற்போது நூல் வடிவம் பெற்றுள்ளது.  அறிவுத் திருக்கோயில் என்று அவர் குறிப்பிடுவது சிவகுருநாதன் செந்தமிழ் நூலகத்தையாகும். இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கியது எனக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. நூலையும், வாழ்த்துரையையும் வாசிக்க அழைக்கிறேன். 



நூலக நிறுவனர் திரு சாமிநாத செட்டியார் அவர்களை, திருப்பனந்தாள் கல்லூரியில் தான் நூலகராகப் பணி ஏற்றது முதல் அறிந்ததாகவும், அவ்வப்போது இந்நூலகத்திற்கு வருகை தருவதாகவும், தமிழ் நூல்களைப் பற்றியும் நூலகத்தைப் பற்றியும் அவர் எடுத்துரைத்ததாகவும், அவர் கூறிய பல கருத்துகள் தன் நூலகப் பணிக்கு பயன்படும் வகையில் அமைந்திருந்ததாகவும் கூறும் நூலாசிரியர், நிறுவனரின் நூற்றாண்டில் இதனை எழுதுவதற்கு வாய்ப்பு கிடைத்ததைப் பெரும் பேறாகக் கருதுவதாகக் குறிப்பிடுகிறார்.

இந்நூலகம் தொடர்பாக வெளிவந்துள்ள பிற நூல்களை நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
  •   ஜி.எஸ்.சுவாமிநாத செட்டியார், சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் ஓர் அறிமுகம், நூல் நிலைய 13ஆவது ஆண்டு விழா அறிக்கை, சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம், கும்பகோணம், 23.5.1971
  •       ஜி.எஸ்.சுவாமிநாத செட்டியார், சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம், வெள்ளி விழா அறிக்கை, 1.7.1979
  •  சி.கோடிலிங்கம், இரா.குருநாதன், ஆயிரம் பிறை கண்ட அண்ணல் கோபு.சு.சுவாமிநாத செட்டியார் அவர்களின் விழா மலர், சிதம்பரநாதர் பேரவை, 29, நாணயக்காரத் தெரு, கும்பகோணம், 23.6.1997
  •        விழிகள் நடராஜன், சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் பொன் விழா ஆண்டு (1959-2009) தகவல் களஞ்சியம், விழிகள் பதிப்பகம், சென்னை, 27.2.2010
  •       இரா.குருநாதன், கே.சுவாமிநாதன், சில நினைவலைகள், நூற்றாண்டு தொடக்கம், 23.5.2016
முன்னுரை, நூலகத்தின் வகைகள், தனியார் பொது நூலகங்கள், சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையத் தோற்றம், சிவகுருநாதன் செட்டியார் அவர்கள் வாழ்க்கை வரலாறு, சுவாமிநாத செட்டியார் அவர்கள் வாழ்க்கை வரலாறு, சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் உருவாதல், ஆரம்ப கால நன்கொடையாளர்கள், பதிவேட்டுப் பட்டியல்கள், நூல் நிலையத்தில் புத்தகங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ள முறைகள், நூல் நிலைய விதி முறைகள், நூலகப் பராமரிப்பு, நூலகர்கள், எதிர்காலத் திட்டங்கள், நிர்வாகக்குழு, நூல் நிலையத்தில் நடைபெற்ற முக்கிய விழாக்கள், நிறுவனர் நூற்றாண்டு விழாத் தொடக்கம், நூலகத்தைப் பயன்படுத்திய சான்றோர்கள், நூலாலயம் கண்டு பாராட்டிய பெருமக்கள், நூல்கள் வெளியீடு, நூலகக்காவியம் என்ற தலைப்புகளைக் கொண்டு இந்நூல் அமைந்துள்ளது. நூலகங்களைப் பற்றிய பொதுப் பார்வையிலும், சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையத்தைப் பற்றிய சிறப்புப் பார்வையிலும் அறிந்துகொள்ள இந்நூல் உதவுகிறது.   


தலைப்பு : கும்பகோணத்தில் ஓர் அறிவுத் திருக்கோயில்
ஆசிரியர் : முனைவர் ச.அ.சம்பத்குமார் (மின்னஞ்சல்: saskumar59@gmail.com)
பதிப்பம் : நட்சத்திரா பதிப்பகம், OA2, சென்னை சாலை, வேதபவனம் தெரு, கும்பகோணம் 612 002
ஆண்டு  : 25.10.2017
விலை  : ரூ.50


இந்நூலில் வெளியாகியுள்ள என்னுடைய வாழ்த்துரை 




தேவாரப்பாடல் பெற்ற கோயில்களையும், மங்களாசாசனம் பெற்ற கோயில்களையும், சமணக் கோயில்களையும், பௌத்த சமயம் இருந்ததற்கான சான்றையும் கோயில்களின் நகரம் கும்பகோணம் கொண்டுள்ளது. 12 ஆண்டுக்கொரு முறை நடைபெறுகின்ற மகாமகம் அனைவரும் அறிந்த பெரிய திருவிழா ஆகும். கல்வி, வணிகம், கலை போன்ற நிலைகளில் முன்னிலையாக உள்ள நகரங்களில் இந்நகரும் ஒன்றாகும். இந்நகருக்கு மேலும் பெருமை சேர்க்கின்ற இடமாக சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் அமைந்துள்ளது. இந்நூலகத்தைப் பற்றி கும்பகோணத்தில் ஓர் அறிவுத் திருக்கோயில் என்னும் நூலை முனைவர் ச.அ.சம்பத்குமார் எழுதியுள்ளார். இந்நூலகத்தின் நிறுவனர் திரு கோ.சு.சாமிநாத செட்டியார் அவர்களின் நூற்றாண்டு விழா நினைவாக இந்நூல் வெளியிடப்படுவது பாராட்டத்தக்கதாகும்.

தான் பணியாற்றிய துறை சார்ந்த நிலையில் சிவகுருநாதன் செந்தமிழ் நூலகத்தைப் பற்றிய வரலாற்றை அதன் தொடக்கம் முதலாக அவர் தொகுத்தளித்துள்ள விதம் சிறப்பாக அமைந்துள்ளது. முடிந்த வரையில் தரவுகளைத் திரட்டி உரிய தலைப்புகளைத் தந்துள்ளார். நூலகத்தின் வரலாற்றை மிகவும் நுணுக்கமாக எடுத்துள்ள விதம் பாராட்டத்தக்கதாகும். அவருடைய முயற்சியினை நூலை வாசிக்கும்போது நன்கு உணர முடியும். 

இந்நூலகத்தைப் பற்றி தமிழ் விக்கிபீடியாவிலும், ஆங்கில விக்கிபீடியாவிலும், என்னுடைய வலைப்பூவிலும் நான் பதிவு செய்தபோது இந்நூலகத்தைப் பற்றிய ஒரு நூல் முழுமையாக வரவேண்டும் என்று ஆர்வம் கொண்டிருந்தேன். அது இந்நூலாசிரியரின் மூலமாக நிறைவேறியதை எண்ணி உவகையடைகின்றேன். நூலகம் கண்டு பாராட்டிய பெருமக்கள் என்ற தலைப்பில் உள்ள பதிவில் என் பெயரும் கருத்தும் இடம்பெற்றுள்ளது. 40 ஆண்டுக்கும் மேலான வாசகன் என்ற நிலையில், அந்நூலகத்துடனான என் தொடர்பினை நினைத்து மகிழ்ச்சியடைகின்றேன். இந்நூலகத்திற்கு அனைவரும் சென்று வாசிக்கும் அவாவினைத் தூண்டும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது. இந்த அரிய படைப்பினைத் தந்தமைக்கு நூலாசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.                         

19 November 2017

இந்திரா காந்தி நூற்றாண்டு : 10 வயது மகளுக்கு அப்பாவின் கடிதங்கள்

நேரு, தன் மகள் இந்திரா காந்திக்கு எழுதிய  Letters from a Father to His Daughter நூலிலிருந்து சில கடிதங்களை மொழிபெயர்த்து எழுதிய கட்டுரை 
பத்திரிக்கை.காம். இதழில் வெளியாகியுள்ளது. 
அதனை வெளியிட்ட அவ்விதழுக்கு நன்றி. 
அதன் மேம்படுத்தப்பட் வடிவைப் பகிர்வதில் மகிழ்கிறேன். 
இந்திரா காந்தி நூற்றாண்டு நினைவு (19.11.1917-19.11.2017)


இன்றிலிருந்து சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பாக ஜவஹர்லால் நேரு தன் மகள் இந்திரா காந்திக்கு  எழுதிய கடிதங்கள் Letters from a Father to His Daughter என்ற நூலில் இடம்பெற்றுள்ளன. அக்கடிதங்கள் இயற்கையைப் பற்றிய நூல், ஆரம்ப கால வரலாறு எழுதப்பட்ட முறை, பூமி உருவாதல், முதன்முதலாக உயிருள்ளனவற்றின் தோற்றம், மிருகங்களின் வருகை, மனிதனின் வருகை, ஆரம்ப கால மனிதர்கள், பல வகையான இனங்களின் அமைப்பு, மனித இனத்தில் மொழிகளும் இனங்களும், மொழிகளுக்கிடையேயான உறவு, நாகரிகம் என்றால் என்ன?, சமயம் எவ்வாறு உருவானது? ஆரம்ப கால நாகரிகம், கடற்பயணங்கள், ஆரியர்களின் வருகை, இராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட 30 தலைப்புகளில் அமைந்துள்ளன. 

நவம்பர் 1929இல் இந்நூலுக்கான முன்னுரையில் நேரு, “இந்த கடிதங்கள் எல்லாம் என் மகள் இந்திராவுக்கு 1928 கோடையில் அவர் இமயலையில் முசௌரியில் இருந்தபோது எழுதப்பட்டவையாகும். இக்கடிதங்கள் 10 வயது பெண்ணான அவருக்கு எழுதப்பட்ட தனிமுறைக் கடிதங்களாகும். இக்கடிதங்களில் உள்ள முக்கியத்துவத்தைக் கண்ட என் நண்பர்கள் இது பலருக்கும் சென்றடையவேண்டும் என்று விரும்பினர். மற்ற பையன்களோ, பெண்களோ இதனைப் பாராட்டுவார்களா என்று எனக்குத் தெரியாது. இருந்தாலும் இந்தக் கடிதங்கள் போகப்போக நாம் வாழும் இந்த உலகத்தைப் பெரிய குடும்பத்தினைக் கொண்ட நாடுகளாக நினைத்துப் பார்க்க வைக்கும்…… “  என்று குறிப்பிடுகிறார். அவர் தன் மகளுக்கு எழுதிய கடிதங்களிலிருந்து சிலவற்றைப் பார்ப்போம்.

நாம ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கும்போது நீ ஏதாவது கேள்வி கேட்டுக்கிட்டே இருப்பே. நான் பதில் சொல்ல முயற்சிப்பேன். இப்ப நீ முசௌரியில இருக்கே. நான் அலகாபாத்துல இருக்கேன். நாம முன்னமாதிரி ரொம்ப பேச முடியாது. அதனாலே நான் நம்மளோட பூமியைப் பத்தியும், பெரிய, சின்ன நாடுகளைப் பத்தியும், உனக்கு அப்பப்ப கடிதம் எழுதுவேன். நீ கொஞ்சம் ஆங்கிலேயர் வரலாறு படிச்சிருக்கே. அதே மாதிரி இந்திய வரலாறும் படிச்சிருக்கே. இங்கிலாந்து ஒரு குட்டித் தீவு. பெரிசா இருந்தால்கூட இந்தியா இந்த பூமியில ஒரு பகுதின்னு சொல்லலாம்.  (ப.1)

இப்பல்லாம் வரலாற்றைப் பத்தி நீ புத்தகங்கள்ல படிக்கிறே. ஆனா மனுஷன் பொறக்குறதுக்கு முன்னாடி கண்டிப்பா புத்தகமெல்லாம் இருந்திருக்காது. அப்படீங்கும்போது அப்ப என்ன நடந்துச்சுன்னு இப்ப எப்புடி சொல்ல முடியுது? சும்மா உட்காந்துகிட்டு நாம எல்லாத்தையும் கற்பனையில பாத்துட முடியாது. நாம எதெல்லாம் ஆசைப்படுறமோ அதையல்லாம் கற்பனையில பாக்கலாம். எப்படி? குட்டிக் குட்டிக் கதை மூலமா. அது எல்லாமே உண்மையா இருக்காது. அந்த காலத்துல புத்தகமெல்லாம் இல்லைன்னாகூட புத்தகம் மாதிரி நமக்கு சிலது உதவியா இருந்துச்சு. புத்தகம் செய்யறதை அது செஞ்சுச்சு. குன்று, மலை, கடல், நட்சத்திரங்கள், ஆறுகள், பாலைவனங்கள், மிருகங்களின் எச்சங்களைல்லாம் நாம இப்ப பாக்கிறோம். இவையெல்லாம்தான் நமக்கு புத்தகம் மாதிரி. ஏன்னா இதுமூலமாத்தான் நாம நம்ம பூமியோட உண்மையான கதையைத் தெரிஞ்சுக்க வாய்ப்பு கிடைச்சுருக்கு. (ப.3)

இயற்கைங்கிற இந்த புத்தகத்திலேர்ந்து நாம ரொம்ப நாளைக்கு முன்னாடி நடந்ததை நினைச்சுப் பாக்கலாம். அப்ப நம்மளோட பூமிலே மனுஷங்க கிடையாது, மிருகங்க கிடையாது.  கொஞ்சம் கொஞ்சமா மிருகம் வர்றதைப் பாக்கிறோம்.  அப்புறம் ரொம்ப மிருகங்களைப் பத்தித் தெரிஞ்சுக்குறோம். அப்புறம் ஆம்பள, பொம்பள எல்லாம் வர ஆரம்பிச்சுடுராங்க.  அவங்கள்ளெல்லாம் இப்ப இருக்குற ஆம்பள, பொம்பள மாதிரி இல்லே.  மிருகங்கள்லேர்ந்து கொஞ்சம் வித்தியாசமாத் தெரிஞ்சாங்க. அவ்ளோதான். அனுபவம் வரவர அவங்க யோசிக்க ஆரம்பிச்சாங்க. கொஞ்சம் கொஞ்சமா மிருகங்கள்லேர்ந்து வேறுபட ஆரம்பிச்சாங்க…..நீ பாத்துருப்பே. பெரிய உருவமா இருக்குற யானை மேலே சின்னதா ஒரு மனுசன் உட்கார்ந்துருப்பான். அவன் சொல்றதை அந்த யானை கேட்கும். உனக்குத் தெரியும் யானை பெரிசா இருக்கும். பலமா இருக்கும். ஆனா அதுல உட்காந்திருப்பவனோ அவ்ளோ பலமானவனா இருக்கமாட்டான்.  அவனால யோசிக்க முடியும். யோசிக்க முடியும்கிறதால அவன் மாஸ்டர். யானை அவன்கிட்ட வேலைக்காரன் மாதிரி நடந்துக்கும். மனுஷன் வளர வளர புத்தியும் வளர ஆரம்பிச்சுச்சு.  நெருப்பை கண்டுபிடிச்சான், நிலத்தை உழ, தனக்கான உணவை அறுவடை செய்ய, கட்டிக்க ஆடை நெய்ய, வாழ்றதுக்கு வீடு கட்ட தெரிஞ்சுக்கிட்டான். முன்ன அலைஞ்சு திரிஞ்சுகிட்டிருந்த மனுஷன் சின்னதா கொட்டாய் போட்டு தங்க ஆரம்பிச்சான். அருகே இருக்கிற நிலத்துல முதல்ல எதை விதைக்கிறதுன்னு தெரியல. அரிசி கிடையாது, இப்ப ரொட்டி தயாரிக்கிறாங்களே அந்த கோதுமை அப்ப கிடையாது. காய்கறி கிடையாது. இப்ப நாம சாப்பிடுறதெல்லாம் அப்ப இல்ல. சில விதைகள், பழங்கள்தான். அப்புறம் அவங்க கொன்ன மிருகங்கல சாப்பிட ஆரம்பிச்சாங்க.  (ப.9)    

நகரங்கள் வளர வளர கொஞ்சம் கொஞ்சமா பல கலைகளை கத்துக்க ஆரம்பிச்சான். எழுத கத்துகிட்டான். ஆரம்பத்துல பேப்பர் கிடையாது. போஜ்பத்ரா மரத்தோட பட்டை, ஓலையில எழுத ஆரம்பிச்சான். இப்பகூட நீ சில லைப்ரரில அந்த காலத்துல ஓலைச்சுவடில எழுதுன முழு புத்தகத்தைப் பாக்கலாம். அப்புறம் பேப்பர் வந்துச்சு. எழுத ஈசியா இருந்துச்சு. அச்சடிக்க பிரஸ் இல்ல. அதனால புத்தகத்தை ஆயிரக்கணக்குல அச்சடிக்க முடியல. முதல்ல ஒரு தடவை எழுதுவாங்க. அப்புறம் அதை கையால் மறுபடி பாத்து எழுதி  காப்பி எடுப்பாங்க…..நகரங்கள்ளெல்லாம் வளர வளர நாடுகள் உருவாக ஆரம்பிச்சுச்சு. (ப.10)

உனக்குத் தெரியும் பூமி சூரியனை சுத்தி வருது. சந்திரன் பூமியை சுத்தி வருது. பூமியைப் போலவே இன்னம் பல கோள்கள் சூரியனை சுத்தி வருது. ..ராத்திரில ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள நீ ஆகாயத்துல பாக்குற. கிரகங்களையும் நட்சத்திரங்களையும் உன்னால வேறுபடுத்திப் பார்க்கமுடியுமா? சில நட்சத்திரங்கள்தான் கிரகங்களா இருக்கு. அதையெல்லாம் நட்சத்திரங்கள்னு சொல்லமுடியாது. நட்சத்திரத்தோடு ஒத்துப் பாத்தோம்னா கிரகங்கள் துளியோண்டா இருக்கும். குட்டிப்பாப்பா மாதிரி இருக்குற சந்திரன் பார்க்க ஏன் பெரிசா தெரியுது? அது நமக்கு ரொம்ப நெருக்கமா இருப்பதால்தான். நட்சத்திரங்கள்ளெல்லாம் சிமிட்டும். கிரகங்கள் சிமிட்டாது. ஏன்னா கிரகங்களுக்கு நம்ம சூரியன்கிட்டேயிருந்து ஒளி கிடைக்குது…..(14)

ஆரம்பத்துல மக்கள் பெரிய ஆறுங்களுக்குப் பக்கத்துல குடி போக ஆரம்பிச்சாங்க. ஏன்னா ஆத்துக்குப் பக்கத்துல இருக்குற நிலம் செழிப்பா இருக்கும். அதுல விவசாயம் பண்ணலாம் இல்லயா?.....இந்தியால முதல்ல குடி புகுந்த மக்கள் சிந்து கங்கை நதிங்களுக்குப் பக்கத்துல குடியிருக்க ஆரம்பிச்சாங்க. மெசபெடோமியாவில தைகிரிஸ், யூபிரைடைஸ் நதிக்கரைங்கள்ல. எகிப்துல நைல் நதிகிட்ட. அதே மாதிரி சீனால. (53)

இந்தியால முதல்ல வந்த இனம் திராவிட இனம்தான். அப்புறம் ஆரியர்கள் வந்தாங்க. கிழக்கே மங்கோலியர்கள் வந்தாங்க. இப்பகூட தென்னிந்தியாவில இருக்கிறதுல பெரும்பாலானவங்க திராவிடர்களின் வழித்தோன்றல்கள்தான்.  அவங்க வட இந்தியர்களைவிட கொஞ்சம் கருப்பா இருப்பாங்க. ஏன்னா திராவிடர்கள்தான் ரொம்ப நாளுக்கு முன்னாலேயிருந்து இந்தியால இருக்காங்க.  திராவிடர்கள் பல துறையில முன்னாடி இருக்காங்க. அவுங்களுக்குன்னு சொந்த மொழிகள் இருக்கு.   (54)

ஆயிரம் வருஷத்துக்கப்புறம் பல மொழிகள்ல ஒரே மாதிரியான வார்த்தைகள் இருந்திருக்கு. எப்படின்னா அப்ப இந்த எல்லா மொழியும் ஒண்ணா இருந்துச்சு. பிரெஞ்சுலயும் இங்கிலீஷ்லயும் பொதுவான வார்த்தைங்க ரொம்ப இருக்கு. (59)

எல்லா நாட்டு மக்களும் தாந்தான் சிறந்தவங்கன்னும் புத்திசாலிங்கன்னும் நெனச்சுக்கிட்டிருக்காங்க. வெள்ளைக்காரன் தானும், தன்னோட நாடும் சிறந்ததுன்னு நினைக்கிறான். பிரெஞ்சுக்காரனும் அப்படியே நினைக்கிறான். அதே மாதிரிதான் ஜெர்மனியானும் இத்தாலியனும் நினைக்கிறாங்க. பெரும்பாலான இந்தியர்கள்கூட பல வழிகள்ல இந்தியாதான் பெரிய நாடுன்னு நினைக்கிறாங்க. இதெல்லாம் தற்பெருமைன்னுகூட சொல்லலாம். எல்லாம் தான்தான் பெரியவன், தன்னோட நாடுதான் பெரிசுன்னு நெனைக்கிறாங்க. தனி நபர்ன்னாலும், நாடுன்னாலும் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும். எங்கெல்லாம் நல்லது இருக்கோ அதை எடுத்துக்குவோம். எங்கெல்லாம் கெட்டது இருக்கோ அதை நீக்க முயற்சிப்போம். (ப.61)

முதல்ல பூமில மனுஷன் மிருகம் மாதிரி இருந்தான்னு முன்னாடி எழுதுன கடிதத்துல சொல்லியிருக்கேன். வருஷம் ஆக ஆக அவன் வளர ஆரம்பிச்சான். முதல்ல வேட்டையாட ஆரம்பிச்சான். அப்புறம் பாதுகாப்புக்காக கூட்டம் கூட்டமாக ஒரு இடத்திலேர்ந்து இன்னோரு இடத்திற்குப் போக ஆரம்பிச்சான். மத்த மிருகங்கக்கிட்டேயிருந்தும், மத்த மனுசங்கட்டேயிருந்தும் தன்னைக் காப்பாத்திக்க இதுமாதிரி இருக்க ஆரம்பிச்சான். மிருகங்ககூட கூட்டமாத்தான் போகும். ஆடு, மான், ஏன் யானைங்ககூட கூட்டமாத்தான் திரியுமாம். சில மிருகங்க தூங்கிக்கிட்டிருக்கும்போது மத்தது அதுங்களை கவனிச்சுக்குமாம். (ப.68)

ஒரு காலத்துல மனுசனுக்கு விவசாயம்னா என்னான்னே தெரியாது. அதை அவன் புரிஞ்சுக்க ரொம்ப வருஷமாயிருக்கு. அப்புறம்தான் விதையை விதைக்கக் கத்துக்கிட்டான். விவசாயத்தைப் பத்தித் தெரிஞ்சுக்கிட்டப்புறம் அவனுக்கு ஆகாரம் சுலபமாக கிடைச்சுது. அப்புறம் வேட்டையாடுறது குறைஞ்சுடுச்சி. விவசாயத்துல ஈடுபடறதுக்கு முன்னாடி எல்லா ஆம்பளைங்களும் வேட்டைக்காரங்களா இருந்தாங்க. ஆம்பளைங்களால அதை மட்டுமே செய்ய முடிஞ்சுது.  பொம்பளைங்க புள்ளைங்களப் பாத்துக்கிட்டாங்க, பழங்களை சேகரிக்க ஆரம்பிச்சாங்க. விவசாயத்தைப் பத்தித் தெரிஞ்சுக்கிட்டோன்ன அவங்களோட வாழ்க்கைல முன்னேற்றம் வந்துச்சு. பொம்பளைங்க கால்நடைங்கள கவனிக்க ஆரம்பிச்சாங்க. பால் கறக்க ஆரம்பிச்சாங்க. சில ஆம்பளைங்க ஒரு வகையான வேலையையும் மற்ற ஆம்பளைங்க இன்னொரு வகையான வேலையையும் செய்ய ஆரம்பிச்சாங்க. (ப.75)

நான் எழுதுற கடிதம்லாம் உனக்கு ரொம்ப குழப்பத்தை உண்டாக்குமோன்னு நான் நினைக்கிறேன். நாம வாழ்ற வாழ்க்கையே குழப்பமானது. அந்தக் காலத்துல வாழ்க்கை எளிமையா இருந்துச்சு. இப்பெல்லாம் குழப்பம் வந்ததுக்கப்புறம் நாம நேரத்தைப் பத்திப் பேச ஆரம்பிச்சுடுறோம். பொறுமையா நாம யோசிச்சுப் பாத்தாலோ, வாழ்க்கைலேயும் சமுதாயத்திலேயும் நடக்கிற மாற்றத்தை நாம புரிஞ்சுக்க ஆரம்பிச்சாலோ எல்லாம் எளிதாயிடும். இத நாம முயற்சி பண்ணாட்டி நம்மள சுத்தி என்ன நடக்குதுன்னு புரிஞ்சுக்கவேமுடியாது. காட்டில காணாமல்போன குழந்தையைப் போல நம்ம நிலை ஆயிடும். அதுக்காகத்தான் நான் அந்த காட்டுப்பகுதியிலிருந்து வெளியே கொண்டு வர முயற்சி பண்றேன். அப்ப நாம புதுசா வழி கண்டுபிடிச்சிடலாம். (ப.82)

கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிச்சதா சொல்றாங்க. அது உனக்குத் தெரியும். அதுனால கொலம்பஸ் கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடி அமெரிக்கா இல்லைன்னு சொல்லமுடியாது. கொலம்பஸ் கண்டுபிடிச்சு சொல்ற வரைக்கும் ஐரோப்பியர்களுக்கு அதைப் பத்தித் தெரியலை. கொலம்பஸ் அங்கே போறதுக்கு ரொம்ப நாளுக்கு முன்னாடியே மக்கள் அங்க இருந்திருக்காங்க. அவங்களுக்குன்னு ஒரு நாகரிகம் இருந்துச்சு. (ப.96) 

இந்தியாவுல பெரும்பாலான நகரங்கள் சிந்து, கங்கா, யமுனா போன்ற பெரிய ஆத்துக்கிட்ட இருந்துச்சு. தண்ணீர் தேவையா இருந்ததால மக்கள் நதியையே நம்பி இருந்தாங்க. நதி மக்களுக்கு உணவையும் தந்துச்சு. அதுனால அதையெல்லாம் புனிதமா நெனச்சாங்க. எகிப்துல நைல் நதியை நைல் அப்பான்னு சொல்வாங்க. இந்தியாவில கங்கையை கங்காம்மான்னு சொல்றோம்.  (ப.100)

நான் உனக்கு ரொம்ப கடிதம் எழுதிட்டேன். இது 24ஆவது கடிதம். இவ்ளோத்லயும் நாம நமக்கு தெரியாத பழங்காலத்தைப் பத்தியே பேசிக்கிட்டிருந்தோம். இதை வரலாறுன்னு சொல்லமுடியாது. இதை வரலாற்றோட ஆரம்பம்னோ உதயம்னோ சொல்லலாம். போகப்போக நாம நமக்கு அதிகமாத் தெரிஞ்ச வரலாற்றுக் காலம்னு சொல்லப்படுற பிற்காலத்தைப் பத்தி யோசிப்போம். (ப.129)

இக்கடிதங்களைப் படிக்கும்போது மாணவராக உணர்வோம். ஆசிரியர் தன் மாணவனுக்குச் சொல்வதைப் போல அவை அமைந்துள்ளன. பாட்டி கதை சொல்லும்போது கேட்கின்ற ஆர்வம், இதனைப் படிக்கும்போது நமக்கு வந்துவிடும். இளம் வயதில் இவ்வாறாக அவர் படிக்க ஆரம்பித்ததே பிற்காலத்தில் ஒரு மிகச் சிறந்த தலைவியாக உருவாகக் காரணமாக அமைந்தது எனலாம்.  

நன்றி:
Letters from a Father to His Daughter, Jawaharlal Nehru, Puffin Books, Penguin Books India 2004

இந்திரா காந்தியைப் பற்றி பிற இதழ்களில் எழுதிய கடிதங்கள்
இந்திரா காந்தியைப் பற்றி புபுல் ஜயாகர் எழுதிய நூலின் மதிப்புரை இந்தியா டுடே இதழில் வெளிவந்தபோது அதைப் பற்றி கடிதம். அப்போது குமார் என்ற பெயரிலும் வாசகர் கடிதங்கள் எழுதினேன். (அக் 21-நவ 5, 1992, இந்தியா டுடே)




1999இல் தி வீக், இந்திரா காந்தி சிறப்பிதழ் வெளியிட்டபோது அதைப் பற்றி எழுதியது.  The multifarious qualities of Indira have been fully brought out by many writers in the 40-odd pages of the special issue. The issue is a collector's item. Indira certainly left an indelible impression in the minds and hearts of millions of Indians. As the managing editor rightly said, "Like India, this was a woman who could not be captured in a single frame." P.C.Alexander and R.K.Dhawan took the readers to the very spot where Indira was, through their articles. I still possess the November 11-17 1984 issue of THE WEEK. 'Assassination and after'. History will have to wait many more generations to have another Indira. - B.Jambulingam, Thanjavur, Tamil Nadu (The Week, November 22, 1999)
இந்திரா காந்தியைப் பற்றி காத்தரின் ப்ராங்க் எழுதிய நூலின் மதிப்புரை அவுட்லுக் இதழில் 2001இல் வெளிவந்தபோது அதைப் பற்றி எழுதிய கடிதம். (On the review of the book "Indira: The Life of Indira Nehru Gandhi" by Katherine Frank, entitled 'Mrs G's string of Beaus', Spare her soul, Outlook, March 26, 2001)

 
இந்திரா காந்தி மறைந்த 25ஆம் ஆண்டில் The Hindu நாளிதழில் சிறப்புக்கட்டுரைகள் வெளிவந்தபோது அதைப் பற்றி எழுதிய கடிதம்.  (Remembering Indira, The Hindu, November 3, 2009)
----------------------------------------------------------------------------------
இந்திரா காந்தி தொடர்பான பிற பதிவுகள்
----------------------------------------------------------------------------------

11 November 2017

அயலக வாசிப்பு : அக்டோபர் 2017

அக்டோபர் 2017 வெளியான அயலக வாசிப்பில் ஆங் சாங் சூசியின் படம் நீக்கம் (டெலிகிராப்), தன்விவரக்குறிப்பு தயாரித்தல் (கார்டியன்), முகப்புக் கடிதம் எழுதுதல் (கார்டியன்), சே குவாரா 50ஆம் ஆண்டு நினைவு (கார்டியன், பிபிசி, அல் சசீரா), சொல்பிழை திருத்தம் (பிபிசி நியூஸ்), மடிக்கணினி நம் கையெழுத்தை ஒழித்துவிடுமா (கார்டியன்), 30 ஆண்டுக்கு முன் பாட்டிலில் அடைக்கப்பட்ட செய்தி கண்டுபிடிப்பு (இன்டிபென்டன்ட்), போலிச்செய்திகளை மாணவர்கள் எதிர்கொள்ளல் (நியூயார்க் டைம்ஸ்), தீபாவளி பற்றிய புகைப்படத்தொகுப்பு (கார்டியன்), தீபாவளி கொண்டாட்டம் (டான்), பருவ நிலை மாற்றத்திற்கான புதிய சொல், உத்தி (கார்டியன்) போன்ற செய்திகளாகும். அவற்றைச் சுருக்கமாகக் காண்போம். 
இவற்றில் பிபிசி தளத்தில் வந்த செய்தியில் பிழையை அவர்களுக்குச் சுட்டிக்காட்டி நான் எழுதிய கடிதத்தையும், அப்பிழை பின்னர் சரிசெய்யப்பட்டிருந்ததையும்  மறக்கமுடியாத அனுபவமாகக் கருதுகிறேன்.  

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகக் கல்லூரி வளாகத்தின் முதன்மை நுழைவாயிலின் அருகே1999 முதல் தொங்கிக்கொண்டிருந்த ஆங்சாங் சூகியின் (Ms Aung San Suu Kyi) படம் அவ்விடத்திலிருந்து நீக்கப்பட்டது. ரோஹிங்கியா அகதிகள் பிரச்சினையை அவர் கையாளும் விதத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது படம் அகற்றப்பட்டுள்ளது. 1967இல் புனித ஹுக் (St Hugh's) கல்லூரியில் பட்டம் பெற்ற இவர் அக்கல்லூரி்யின் முன்னாள் மாணவியாவார். சூன் 2012இல் அவருக்கு வழங்கப்பட்ட மதிப்புறு முனைவர் பட்டத்தைத் திரும்பப் பெறுவது பற்றி பரிசீலிக்கவில்லை என்று கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. (நன்றி  : டெலிகிராப்)



பணிக்கு விண்ணப்பிப்போர் கவனிக்க. உங்களுடைய தன்விவரக்குறிப்பு எளிமையாகப் படிக்கும் வகையிலும், சுருக்கமாகவும், எண் அடிப்படையில் புள்ளி விவரங்களைக் கொண்டதாக இருக்கட்டும். பணிக்கு உங்களை அமர்த்துவோர் உங்களுடைய தன்விவரக்குறிப்பினைக் கவர ஐந்து வழிகள் உள்ளன.  (நன்றி  : கார்டியன்)


பணிக்கு விண்ணப்பிப்போர் முகப்புக் கடிதத்திற்கு (cover letter) முக்கியத்தும் தர வேண்டும். அதில், உங்களை பணிக்கு அமர்த்தவுள்ள நிறுவனத்தின் தேவைகளை உங்களால் பூர்த்தி செய்யமுடியும் என்ற நம்பிக்கை வெளிப்பட வேண்டும். 'நான்' என்ற சொல்லை அதிகமாகப் பயன்படுத்தாதீர்கள். சுருக்கமான, புரிதலுள்ள முகப்புக் கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ள தன்விவரக்குறிப்பே பணிக்கு அமர்த்துவோரின் கவனத்தை ஈர்க்கும்.  (நன்றி  : கார்டியன்)


நவம்பர் 1966, நடுத்தர வயதுடைய உருகுவே நாட்டைச்சேர்ந்த வணிகரான அடோல்போ மேனா கான்சாலெஸ் (Adolfo Mena González) பொலிவியாவிலுள்ள லா பாஸ் (La Paz, Bolivia) செல்கிறார். இல்லுமானி மலையில் ஒரு விடுதில் தங்குகிறார். தன்னைத்தானே புகைப்படம் - கூடுதல் எடையுள்ள உடம்பு, வழுக்கைத்தலை, வாயில் எரிந்துகொண்டிருக்கும் சுருட்டுடன் - எடுத்துக்கொள்கிறார். உண்மையில் அவர் அர்ஜன்டைனாவில் பிறந்த புரட்சிக்காரரான, சே குவாரேவே தவிர, வேறு யாருமல்ல. 11 மாதம் கழித்து. அவருடைய மற்றொரு உருவம் கொண்ட புகைப்படம் உலகமெங்கும் காணப்பட்டது. ஒரு படுக்கையில், உயிரற்ற அவரது உடல், தலை முடி கலைந்த நிலையில், கண்கள் முழுமையாகத் திறந்த நிலையில். அமெரிக்க உளவுத்துறை அவரது மரணத்தை அறிவிக்கிறது. அழுக்காகவும், ரத்தமாகவும் இருந்த அவரது உடலை சுத்தம் செய்ய உதவிய செவிலியரான சுசானா ஒசிநாகா (Susana Osinaga, 87) : “அவர்கள், அவரைப் பார்க்க இயேசுவைப் போல இருப்பதாகக் கூறினர்,” ”மக்கள் அவரை இன்னும் புனித எர்னெஸ்டோ என்று கருதி வழிபடுகிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள் அவர் இன்னும் அதிசயங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார் என்று”. அடுத்த திங்கள்கிழமை, 9 அக்டோபர் 2017 அவர் மரணித்த 50ஆம் ஆண்டு.  (நன்றி  : கார்டியன்)


சேகுவாரா பிடிக்கப்பட்டு, கொல்லப்பட்ட 50 ஆம் ஆண்டு நினைவு நாளன்று கியூபாவிலுள் சான்டாகிளாராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அவர்களில் ஒருவர் கியூபாவின் அதிபரான ரால் காஸ்ட்ரோ. அவர் சேகுவாராவின் சமாதியில் வெள்ளை ரோஜாவை வைத்ததை பலர் வீட்டிலிருந்தபடி தொலைக்காட்சியில் பார்த்தனர். "நாங்கள் அவரை மிகவும் நெருக்கமாக வைத்துள்ளோம். எங்களுக்கு அருகிலேயே அவரை வைத்துள்ளோம்.....அவருடைய உருவத்தை எங்களுடைய மார்பிலும் இதயத்திலும் வைத்திருப்பதை பெருமையாகக் கருதுகிறோம் " என்றார் ஒருவர். சேகுவாரா இறந்ததை பீடல் காஸ்ட்ரோ கியூப மக்களுக்கு 1967இல் அறிவித்தது தொடர்பான பேச்சிலிருந்து சில வரிகள் ஒலிபரப்பப்பட்டன. அதில் அவர் கியூப குழந்தைகளிடம் "சேகுவாராவைப் போலிருங்கள்", என்று சொன்ன வரிகளும் இருந்தன.  (நன்றி  : பிபிசி)


Cubans remember Che Guevara 50 years after his death (http://www.bbc.com/news/world-latin-america-41544497?SThisFB) என்ற தலைப்பில் BBC Newsஇல் நேற்று ஒரு செய்தி்க்கட்டுரை வெளியாகியிருந்தது. அதில் ஒரு சொற்றொடரில் "An except of......" என்றிருந்தது. except என்ற சொல்லுக்குப் பதிலாக excerpt என்றிருக்கவேண்டும் என்று BBC Newsக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். தற்போது அ்ந்த திருத்தம் அவர்களால் மேற்கொள்ளப்பட்டதைக் கண்டேன். ஒரு வித்தியாசமான, மறக்கமுடியாத அனுபவம். 
Before correction: "An except of Fidel Castro's speech in 1967 announcing the death of Che Guevara to the Cuban people was played in which he famously urged Cuban children "to be like Che", a slogan that endures today." 
After correction: "An excerpt of Fidel Castro's speech in 1967 announcing the death of Che Guevara to the Cuban people was played in which he famously urged Cuban children "to be like Che", a slogan that endures today." 
 (நன்றி  : பிபிசி)

சே குவாரா கொல்லப்பட்டு 50 ஆண்டுகள்......பொலிவியர்கள் நினைவுகூர்ந்தனர். ஆயிரக்கணக்கானோர் அவருக்குப் புகழஞ்சலி செலுத்தினர். 

மடிக்கணினி தேவைதான், ஆனால் கையெழுத்துப் பழக்கத்தையே அது ஒழித்துவிடும் என்ற நிலை வரும்போது சற்றே யோசிக்கவேண்டும். இப்போதைய மாணவர்கள் பெரும்பாலும் மடிக்கணினியையே சார்ந்திருப்பதால் தொடர்ந்து அவர்கள் அதன்மூலமாகவே தேர்வு எழுதும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். பின்னர் அவர்களுடைய கையெழுத்து என்னவாகும்?   (நன்றி  : கார்டியன்)


கிட்டத்தட்ட 30ஆண்டுகளுக்கு முன் ஒரு பாட்டிலில் அடைக்கப்பட்ட செய்தி அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டு, பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 26 செப்டம்பர் 1988இல் மிராண்டா சவேஸ் என்ற எட்டு வயது பெண் குழந்தை ஒரு செய்தியை எழுதி பாட்டிலுக்குள் அடைத்து கடலில் எறிகிறாள். அந்த பாட்டில் அட்லாண்டிக் கடற்கரையில் தென் பகுதியில் 90 மைல்களைத் தாண்டி ஜார்ஜியாவிலுள்ள சாபேலோ தீவினை அடைகிறது. டேவிட் லிண்டா தம்பதியினர் அதனை 2017இல் கடற்கரையில் கண்டுபிடித்து எடுக்கின்றனர். அதில் எழுதப்பட்டுள்ள செய்தியைப் பார்க்கின்றனர். சவேஸ் தன் முகவரியை அந்தத் துண்டுக் காகிதத்தில் எழுதியிருந்தபோதிலும், கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் கழித்து அந்த வீடு அம் முகவரியில் இல்லை என்பது பின்னர் தெரிய வந்தது. கடற்கரையில் தாம் கண்டுபிடித்ததை முகநூலில் பகிர்ந்துகொள்கின்றனர். அச்செய்தி முகநூலில் பரவி லிண்டா சவேஸைக் கண்டுபிடிக்க உதவியது. 1989இல் அடித்த ஹுகோ சூறாவளியையும் சமாளித்து 28 ஆண்டுகள் அந்த பாட்டில் அப்படியே இருந்தது சவேசுக்கு ஆச்சர்யத்தைத் தந்தது. சவேஸ், இந்நிகழ்வு தன் இளமைக்காலத்தை நினைவுபடுத்தியது என்றும், அக்கால பள்ளி நண்பர்கள் பலர் ஒன்றுசேர உதவியது என்றும், வாழ்க்கையின் மிக முக்கியமான மகிழ்ச்சியான தருணத்தைத் தந்தது என்றும் கூறுகிறார். 
அவரைக் கண்டுபிடிப்பதற்காக லிண்டா தன் முகநூல் பக்கத்தில் இந்த பாட்டிலைப் பற்றியும் அதிலிருந்த செய்தியைப்பற்றியும் எழுதிய பதிவு இதோ : "இன்று காலை சாபொலோ தீவில் நாங்கள் கடற்கரையை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தபோது என் கணவர் டேவிட் குறிப்பிடத்தக்கக் கண்டுபிடிப்பினைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. 29 ஆண்டுகளுக்கு முன்பாக எடிஸ்டோ என்னுமிடத்தில் தூக்கியெறியப்பட்ட பாட்டிலை அவர் இங்கு கண்டார். நகரின் பெயர் இருந்தபோதிலும்கூட தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம். ஆனால் இணைப்பினைப் பெறமுடியவில்லை. நா்ங்கள் முயற்சி செய்துகொண்டிருக்கிறோம்.கொலம்பியாவில் அவரது தொடர்பு எண்ணைப் பெறமுடிந்தவர்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்" 
 (நன்றி  : இன்டிபென்டன்ட்)

இத்தாலியில் உள்ள பள்ளிகளில் ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அவற்றில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் போலிச் செய்திகளை (fake news) அடையாளம் காணுதல் உள்ளிட்ட பல உத்திகள் அடங்கும். (நன்றி  : நியூயார்க் டைம்ஸ்)

பருவ நிலை மாற்றத்தைப் பற்றிப் பேசுவதற்கு ஒரு புதிய உத்தி CliFi – Climate fiction வாசிப்பதாகும்.  (நன்றி  : கார்டியன்)


தீபாவளி விழாவில் கொல்கத்தாவில் களத்தில் குத்துச்சண்டை வீரர்கள், நேபாளத்தில் காட்மண்டுவில் விழாவின்போது ஒரு பூசாரி பசுவிற்குக் கீழ் தவழ்ந்து செல்லல், அமிர்தரசில் வெடிக்கடையில் வெடி வாங்கும் சிறுவன், அமிர்தரஸ் தங்கக்கோயிலில் குழுமியிருக்கும் சீக்கியர், மின்னொளியில் தங்கக்கோயில், சண்டிகரில் அமைதியைக் குறிக்கும் வகையில் மின்னொளியில் உலகமும் புறாவும், ஹைதராபாத்தில் தன் வீட்டு நிலைப்படியில் விளக்கேற்றும் பெண்மணி, காஷ்மீரில் அக்னூரில் ராணுவ வீரர்கள் மத்தாப்பு கொளுத்துதல், அலகாபாத் மதன்மோகன் மாளவியா அரங்கத்தில் ஒரு சிறுவன் மெழுகுவர்த்தி ஏற்றல், எரியும் அகல் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மதன்மோகன் மாளவியா அரங்கம், கின்னஸ் சாதனை படைப்பதற்காக தீபாவளியை முன்னிட்டு அயோத்யாவில் சரயு ஆற்றங்கரையில் ஒரே இடத்தில் அகல் விளக்குகளை மக்கள் ஏற்றுதல், சமய வழிபாட்டின்போது கொழும்புவில் ஒரு பெண் விளக்கேற்றல், தீபாவளியை முன்னிட்டு கோயிலில் மக்கள் வழிபாடு, கொழும்புவில் அழகாக ஏற்றிவைக்கப்பட்ட அகல் விளக்குகள், ஆஸ்திரேலியாவிலுள்ள மின்னொளியில் சிட்னி ஆபரா போன்ற புகைப்படங்களை வெளியிட்டு தீபாவளி நிகழ்வினைப் பகிர்கிறது கார்டியன்.


இந்துக்களும் சீக்கியர்களும் பூசை செலுத்துதல், இனிப்புகளைத் தயாரித்தல், பரிசுகளை பரிமாறிக்கொள்ளல், இல்லங்களை அலங்கரித்தல், புத்தாடை அணிதல், கோலமிடுதல், வெடி வெடித்தல் போன்ற பல நிலைகளில் தீபாவளியைக் கொண்டாடினர். பாகிஸ்தானில் தீபாவளி கொண்டாட்டம், படங்களுடன் (நன்றி : டான்)

04 November 2017

நாலாயிர திவ்யப் பிரபந்தம் : பெரிய திருமொழி : திருமங்கையாழ்வார்

திருமங்கையாழ்வார் அருளிய பெரிய திருமொழியை அண்மையில் நிறைவு செய்தேன். ஆழ்வார்களில் அதிகமாக பாசுரங்கள் பாடியவர்களில் திருமங்கையாழ்வார் முக்கியமான இடத்தைப் பெறுகின்றார். பெரிய திருமொழியில் அவர் பாடியுள்ள 1084 பாடல்களில் சிலவற்றைப் பொருளுடன் காண்போம். 

முற்ற மூத்துக், கோல் துணையா முன்னடி நோக்கி வளைந்து
இற்றகால் போல் தள்ளி மெள்ள இருந்து அங்கு இளையாமுன்
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பரு முலை ஊடு, உயிரை
வற்ற வாங்கி உண்ட வாயான் வதரி வணங்குதுமே. (968)
முழுவதும் மூப்படைந்து ஊன்றுகோலை உதவியாகக் கொண்டு முன்னே வைக்க வேண்டும் அடியைத் தலைகவிழ்ந்து பார்த்து, முறிந்த கால் போலத் தடுமாறி, ஓர் இடத்தில மெதுவாக முயன்று அமர்ந்து இளைப்பு வந்து மேலிடும் காலம் வருவதற்கு முன்பே பெற்ற தாயின் வடிவு கொண்டு வந்து பூதனை என்னும் பேய்ச்சியினது பெரிய முலை வழியே அவள் உயிரை வறண்டு போகுமாறு உறிஞ்சிக் குடித்த வாயையுடைய பெருமான் எழுந்தருளியிருக்கும் திருவதரியை வணங்குவோம்.

உலவுத் திரைக் கடல் பள்ளி கொண்டு வந்து உன் அடியேன் மனம் புகுந்த அப்
புலவ! புண்ணியனே! புகுந்தாயைப் போகலொட்டேன்
நிலவு மலர்ப் புன்னை, நாழல் நீழல், தண் தாமரை மலரின்மிசை, மலி
அலவன் கண்படுக்கும் அணி ஆலி அம்மானே! (1194)
எப்போதுமுள்ள மலர்களை உடைய புன்னை மரங்கள் ஞாழல் மரங்கள் ஆகியவற்றினுடைய நிழலில் தாமரைப் பூவின் மேல் ஆண் நண்டுகள் படுத்துக் கொண்டிருக்கும் வளம் உடைய அணியாலி அம்மானே! அலை வீசும் திருப்பாற் கடலில் சயனித்திருந்து (சமயம் பார்த்து இருந்து) அங்கிருந்தும் ஓடிவந்த உனது அடியவனான  என்னுடைய மனத்திலே புகுந்த அப்படிப்பட்ட அறிஞனே! என்னுடைய புண்ணிய வடிவானவனே! என்னிடம் வந்து சேர்ந்த உன்னை, இனி வேறிடம் போக விடமாட்டேன்.

 துவரித்த உடையவர்க்கும், தூய்மை இல்லாச் சமணர்க்கும்,
அவர்கட்கு அங்கு அருள் இல்லா அருளானை,  தன் அடைந்த
எமர்கட்கும், அடியேற்கும், எம்மாற்கும், எம் அனைக்கும்
அமரர்க்கும் பிரானாரைக் கண்டது – தென் அரங்கத்தே. (1405)
காவித்துணியை உடுத்துத் திரியும் பௌத்தர்களும் தூய்மையற்ற சமணர்களுமான அவைதிகர்கள் விஷயத்தில் அருள் செய்யாதவனும், வைதிகர்களுக்கு அருள் செய்பவனும், தன்னையே அடைந்த என்னைச் சேர்ந்தவர்களுக்கும், அடியேனுக்கும், என் தகப்பனாருக்கும், என் தாய்க்கும், நித்திய சூரிகளுக்கும் சுவாமியாய் இருப்பவனுமான பெருமானைத் தென்னரங்கத்தே கண்டேன்.

வாள் ஒண் கண் நல்லார் தாங்கள் மதனன் என்றார் தம்மைக்
கேளுங்கள், ஈளையோடு ஏங்கு கிழவன் என்னாத முன்,
வேள்வும் விழவும் வீதியிலி என்றும் அறாத ஊர்,
நாளும் நறையூர் – நாம் தொழுதும், எழு நெஞ்சமே! (1485)
வாள் போன்று அழகிய கண்களை உடைய பெண்கள் தாங்களே ‘இவன் மன்மதனே’ என்று முன்பு கொண்டாடிச் சொன்னவர்களைக் குறித்து ‘கோழையோடு கூடித் தளர்ந்திருக்கின்ற இந்தக் கிழவன் வந்த காரியம் என்னவென்று கேளுங்கள்’ என்று இகழ்ந்து சொல்வதற்கு முன்னே திருவீதிகளில் யாகங்களும் விழாக்களும் ஒருநாளும் விட்டு நீங்காத ஊராகிய திருநறையூரை நாள்தோறும் நாம் வணங்க நெஞ்சமே எழுவாயாக!

வந்தாய், என் மனத்தே; வந்து நீ புகுந்த பின்னை,
எந்தாய்! ­­­ போய் அறியாய் இதுவே அமையாதோ?
கொந்து ஆர் பைம்பொழில் சூழ் குடந்தைக் கிடந்து உகந்த
மைந்தா! உன்னை என்றும் மறவாமைப் பெற்றேனே. (1732)
எம் பெருமானே! என் நெஞ்சினுள்ளே நீ வந்து புகுந்தாய். அங்ஙனம் வந்து சேர்ந்த பிறகு திரும்பிப் போவதை அடியோடு மறந்துவிட்டாய். இந்தப் பேறுதானே போதாதோ?  பூங்கொத்துகள் நிரம்பிய சோலைகளால் சூழப்பட்ட திருக்குடந்தையிலே சாய்ந்தருளி திருவுள்ளம் உவந்த அழகனே!  உன்னை என்றைக்கும் மறவாமல் இருக்கப் பெற்றேன்.

சுடலையில் சுடு நீறன் அமர்ந்தது ஓர்
நடலை தீர்த்தவனை நறையூர் கண்டு, என்
உடலையுள் புகுந்து, உள்ளம் உருக்கி, உண்
விடலையைச் சென்று காண்டும் - மெய்யத்துள்ளே. (1852)
சுடுகாட்டில் சுட்ட சாம்பலைப் பூசுபவனான சிவனுக்கு நேர்ந்த துன்பத்தைப் போக்கி அருளினவனும், எனது உடலினுள்ளே புகுந்து நெஞ்சை உருக்கி உண்கின்ற இளைஞனான சர்வேசுவரனை திருநறையூரிலே வணங்கி திருமெய்யத்திலே சென்று சேவிப்போம். 

தொடர்ந்து இவருடைய திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், பெரிய திருமடல், சிறிய திருமடல், திருவெழுகூற்றிருக்கையை வாசிப்போம்.  

நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் : பெரிய திருமொழி :  திருமங்கையாழ்வார்
உரையாசிரியர் :  முனைவர் இரா.வ.கமலக்கண்ணன்
வர்த்தமானன் பதிப்பகம், 21, இராமகிருஷ்ணா தெரு, தியாகராய நகர், 
சென்னை 600 017
தொலைபேசி : 99418 63542, 90949 63125, 93806 30192, 2814 4995, 2814 0347,
43502995

5 நவம்பர் 2017 அன்று மேம்படுத்தப்பட்டது.