கும்பகோணம்சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலைய நிறுவனரின் நூற்றாண்டு விழாவின் ஒரு முக்கிய நிகழ்வாக நண்பர்
முனைவர் ச.அ.சம்பத்குமார் (அலைபேசி 9443677943) எழுதிய கும்பகோணத்தில் ஓர் அறிவுத்திருக்கோயில்
என்ற நூலைக் குறிப்பிடலாம். நூலாசிரியரை நான் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த
காலத்தில் நன்கறிவேன். இந்நூலகத்தைப் பற்றிய அவரது தேடல் தற்போது நூல் வடிவம் பெற்றுள்ளது.
அறிவுத் திருக்கோயில் என்று அவர் குறிப்பிடுவது
சிவகுருநாதன் செந்தமிழ் நூலகத்தையாகும். இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கியது எனக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. நூலையும், வாழ்த்துரையையும் வாசிக்க அழைக்கிறேன்.
நூலக
நிறுவனர் திரு சாமிநாத செட்டியார் அவர்களை, திருப்பனந்தாள் கல்லூரியில் தான் நூலகராகப்
பணி ஏற்றது முதல் அறிந்ததாகவும், அவ்வப்போது இந்நூலகத்திற்கு வருகை தருவதாகவும், தமிழ்
நூல்களைப் பற்றியும் நூலகத்தைப் பற்றியும் அவர் எடுத்துரைத்ததாகவும், அவர் கூறிய பல
கருத்துகள் தன் நூலகப் பணிக்கு பயன்படும் வகையில் அமைந்திருந்ததாகவும் கூறும் நூலாசிரியர்,
நிறுவனரின் நூற்றாண்டில் இதனை எழுதுவதற்கு வாய்ப்பு கிடைத்ததைப் பெரும் பேறாகக் கருதுவதாகக்
குறிப்பிடுகிறார்.
இந்நூலகம்
தொடர்பாக வெளிவந்துள்ள பிற நூல்களை நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
- ஜி.எஸ்.சுவாமிநாத செட்டியார், சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் ஓர் அறிமுகம், நூல் நிலைய 13ஆவது ஆண்டு விழா அறிக்கை, சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம், கும்பகோணம், 23.5.1971
- ஜி.எஸ்.சுவாமிநாத செட்டியார், சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம், வெள்ளி விழா அறிக்கை, 1.7.1979
- சி.கோடிலிங்கம், இரா.குருநாதன், ஆயிரம் பிறை கண்ட அண்ணல் கோபு.சு.சுவாமிநாத செட்டியார் அவர்களின் விழா மலர், சிதம்பரநாதர் பேரவை, 29, நாணயக்காரத் தெரு, கும்பகோணம், 23.6.1997
- விழிகள் நடராஜன், சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் பொன் விழா ஆண்டு (1959-2009) தகவல் களஞ்சியம், விழிகள் பதிப்பகம், சென்னை, 27.2.2010
- இரா.குருநாதன், கே.சுவாமிநாதன், சில நினைவலைகள், நூற்றாண்டு தொடக்கம், 23.5.2016
தலைப்பு
: கும்பகோணத்தில் ஓர் அறிவுத் திருக்கோயில்
ஆசிரியர்
: முனைவர் ச.அ.சம்பத்குமார் (மின்னஞ்சல்: saskumar59@gmail.com)
பதிப்பம்
: நட்சத்திரா பதிப்பகம், OA2, சென்னை சாலை,
வேதபவனம் தெரு, கும்பகோணம் 612 002
ஆண்டு
: 25.10.2017
விலை
: ரூ.50
இந்நூலில் வெளியாகியுள்ள என்னுடைய வாழ்த்துரை
தேவாரப்பாடல் பெற்ற கோயில்களையும், மங்களாசாசனம் பெற்ற கோயில்களையும், சமணக் கோயில்களையும், பௌத்த சமயம் இருந்ததற்கான சான்றையும் கோயில்களின் நகரம் கும்பகோணம் கொண்டுள்ளது. 12 ஆண்டுக்கொரு முறை நடைபெறுகின்ற மகாமகம் அனைவரும் அறிந்த பெரிய திருவிழா ஆகும். கல்வி, வணிகம், கலை போன்ற நிலைகளில் முன்னிலையாக உள்ள நகரங்களில் இந்நகரும் ஒன்றாகும். இந்நகருக்கு மேலும் பெருமை சேர்க்கின்ற இடமாக சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் அமைந்துள்ளது. இந்நூலகத்தைப் பற்றி கும்பகோணத்தில் ஓர் அறிவுத் திருக்கோயில் என்னும் நூலை முனைவர் ச.அ.சம்பத்குமார் எழுதியுள்ளார். இந்நூலகத்தின் நிறுவனர் திரு கோ.சு.சாமிநாத செட்டியார் அவர்களின் நூற்றாண்டு விழா நினைவாக இந்நூல் வெளியிடப்படுவது பாராட்டத்தக்கதாகும்.
தான் பணியாற்றிய துறை சார்ந்த நிலையில் சிவகுருநாதன் செந்தமிழ் நூலகத்தைப் பற்றிய வரலாற்றை அதன் தொடக்கம் முதலாக அவர் தொகுத்தளித்துள்ள விதம் சிறப்பாக அமைந்துள்ளது. முடிந்த வரையில் தரவுகளைத் திரட்டி உரிய தலைப்புகளைத் தந்துள்ளார். நூலகத்தின் வரலாற்றை மிகவும் நுணுக்கமாக எடுத்துள்ள விதம் பாராட்டத்தக்கதாகும். அவருடைய முயற்சியினை நூலை வாசிக்கும்போது நன்கு உணர முடியும்.
இந்நூலகத்தைப் பற்றி தமிழ் விக்கிபீடியாவிலும், ஆங்கில விக்கிபீடியாவிலும், என்னுடைய வலைப்பூவிலும் நான் பதிவு செய்தபோது இந்நூலகத்தைப் பற்றிய ஒரு நூல் முழுமையாக வரவேண்டும் என்று ஆர்வம் கொண்டிருந்தேன். அது இந்நூலாசிரியரின் மூலமாக நிறைவேறியதை எண்ணி உவகையடைகின்றேன். நூலகம் கண்டு பாராட்டிய பெருமக்கள் என்ற தலைப்பில் உள்ள பதிவில் என் பெயரும் கருத்தும் இடம்பெற்றுள்ளது. 40 ஆண்டுக்கும் மேலான வாசகன் என்ற நிலையில், அந்நூலகத்துடனான என் தொடர்பினை நினைத்து மகிழ்ச்சியடைகின்றேன். இந்நூலகத் திற்கு அனைவரும் சென்று வாசிக்கும் அவாவினைத் தூண்டும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது. இந்த அரிய படைப்பினைத் தந்தமைக்கு நூலாசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.