21 February 2015

ஆனந்த பவன்

ஆனந்த பவன்
1960களின் இறுதியில் நான்காம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த போது என்னுடைய வியாச (கட்டுரை) நோட்டின் அட்டையில் ஆனந்த பவன் கட்டடத்தைப் பார்த்தேன்.  நோட்டின் அட்டையைப் பார்த்த எனது வகுப்பு ஆசிரியர் நேருவின் ஆரம்ப கால வாழ்க்கை தொடங்கி விடுதலைப் போராட்டம், அரசியல், படிப்பு மற்றும் எழுத்தின் மீதான அவரது ஈடுபாடு ஆகியவற்றை எங்களிடம் எடுத்துக்கூறினார். நேரு பள்ளிக்குச் செல்லும்போது ஆனந்த பவனின் நான்கு வாசல்களிலும் நான்கு மகிழ்வுந்துகள் நிற்கும் என்றும் அவர் நான்கு வாசல்களில் எதில் வேண்டுமானாலும் வந்து, அங்கு நிற்கின்ற மகிழ்வுந்தில் ஏறி பள்ளிக்குச் செல்வார் என்றும் கூறியிருந்தார்.  ஆனந்த பவனிற்குச் செல்லும் வாய்ப்பு அண்மையில் கிடைத்தது. உங்களையும் அங்கு அழைக்கின்றேன். வாருங்கள். 
அலகாபாத்தில் நகரின் நடுவில் காட்சியளிக்கின்றது ஆனந்த பவன். அளவில் சிறியதாக இருந்தாலும், வேலைப்பாடு மற்றும் கலையழகு என்ற நிலையில் உயர்ந்த நிலையில் காணப்படுகிறது. மோதிலால் நேருவால் வடிவமைக்கப்பட்டு அவரால் ஆனந்த பவன் என்ற பெயரையும் பெற்றது இந்த பவன். வண்ணமயமான பலவகைப்பட்ட பூச்செடிகள், அழகான புல்வெளிகள், நெடிது உயர்ந்து வளர்ந்த மரங்கள் போன்றவற்றைக் கொண்டபரந்து விரிந்த தோட்டத்தின் நடுவில்  பார்ப்பவர் மனதை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. பூங்காவிற்குள் இருக்கிறோமோ அல்லது அரண்மனைக்குள் வந்துள்ளோமோ என்று உள்ளே வந்தவரைச் சிந்திக்க வைக்கிறது. 

ஆனந்த பவனின் பெருமை பேசும் 1927ஆம் ஆண்டின் பதிவு
ஆனந்த பவனில் உள்ளே நுழைந்ததும் அனைவருடைய பார்வையையும் கவர்ந்திழுக்கும் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. நுழைவாயிலின் அருகே உள்ள அந்த கல்வெட்டில் இந்தியிலும் ஆங்கிலத்திலும் 1927இல் கட்டப்பட்ட இந்த ஆனந்தபவனானது செங்கல்லாலும், சுண்ணாம்பாலும் கட்டப்பட்டதன்று, நமது நாட்டு விடுதலைப் போருடன் தொடர்புடையது, மிக முக்கியமான முடிவுகள் இங்கிருந்து எடுக்கப்பட்டன, மிக முக்கியமான வரலாற்று நிகழ்வுகள் இங்கு நடைபெற்றன என்ற குறிப்பு விடுதலைக்கு முந்தைய மற்றும் விடுதலை பெற்ற காலத்திய இந்தியாவை நினைவூட்டுகிறது. 

மோதிலால் நேரு காலத்திலிருந்து உள்ள இந்த பவன் தரைத்தளம், ஒரு மாடியுடன் கூடியதாக உள்ளது. இரண்டாவது மாடியில் ஒரு மூலையில் மண்டபம் போன்ற சிறிய அமைப்பு காணப்படுகிறது.  இந்த பவனில் மோதிலால் நேரு, சொரூப ராணி, ஜவஹர்லால் நேரு பயன்படுத்திய அறைகள் மிகவும் நேர்த்தியாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அனைத்து அறைகளும் கண்ணாடித் தடுப்புகளால் உள்ளே உள்ளது தெளிவாகத் தெரியும்படி அமைக்கப்பட்டுள்ளன. ஓர் அறை காங்கிரஸ் கமிட்டி கூடி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட அறையாக உள்ளது. இன்னொரு இடத்தில் மகாத்மா காந்தி பெரும்பாலும் இங்குதான் இருப்பார் என்ற குறிப்பு காணப்படுகிறது.  நேரு எழுதிய நூல்கள் ஓர் அறையில் விற்பனைக்கு உள்ளன. வரலாற்று நிகழ்வுகளை எடுத்துக் கூறும் பல அரிய புகைப்படங்கள்  பவனில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நேரு எழுதிய கடிதங்களை அங்கு உள்ளன. நேரு குடும்பத்தினர் பயன்படுத்திய பொருள்கள், படித்த நூல்கள், பேனா மற்றும் பரிசுப்பொருள்கள் மிகவும் அழகாகவும், கண்ணைக்கவரும்படியும் அமைக்கப்பட்டுள்ளன. நேர்த்தியான அறைகள், கலை நயமிக்க நாற்காலி, மேசை உள்ளிட்ட மரப்பொருள்கள், நெடிதுயர்ந்த கதவுகள், அழகான தூண்கள், கண்ணைக் கவரும் முகப்பு, பவனைச் சுற்றிச் செல்லும் வகையில் அமைந்துள்ள தளம் என்ற நிலைகளில் சிறப்பான கட்டடமாக அது உள்ளது. நேரு குடும்பத்தார் பயன்படுத்திய அறைகளை உள்ளதுஉள்ளபடியே காட்சிப்படுத்தப்பட்டுள்ள விதத்தின் மூலமாக அவர்களுடைய கலை ரசனையை உணரமுடிகிறது. இந்திரா காந்தி பிறந்ததும், அவருக்குத் திருமணம் ஆனதும் ஆனந்த பவனில்தான். 
இந்திரா பிரியதர்ஷினி காந்தியின் திருமணம் 
ஆனந்த பவனில் ஜம்புலிங்கம் பாக்கியவதி
நேரு தான் பிறந்த மண்ணான அலகாபாத்தை அதிகம் நேசித்தார். அவர் அலகாபாத்தையும், கங்கையையும் ரசிப்பதை  நட்வர்சிங்  One life is not enough  என்ற தன்னுடைய நூலில் குறிப்பிட்டுள்ளார்.  நேருவின் மரணத்தைப் பற்றி நேருவே கூறுவதை நட்வர்சிங் பின்வருமாறு எடுத்துக்கூறுகிறார். "நான் வெளி நாட்டில் இறந்தால் என் உடல் அங்கேயே எரியூட்டப்படவேண்டும். என் சாம்பலை அலகாபாத்திற்கு அனுப்பப்படவேண்டும். சாம்பலின் ஒரு பகுதி கங்கையில் இடப்படவேண்டும்.  மீதியை விவசாயிகளின் வயலில் தெளித்துவிடுங்கள். கங்கையில் நான் கரைத்துவிடக் கூறுவதற்குக் காரணம் அதன்மீதான சமயம் சார்ந்த பிணைப்பு தொடர்பாக அல்ல. என் இளமைக்காலம் முதல் நான் கங்கையாற்றுடனும் யமுனையாற்றுடனும் மிகவும் நெருக்கமாக இருந்தவன். நான் வளர வளர அந்த பிணைப்பும் வளர்ந்தது. பருவ மாற்றங்கள் கங்கையில் ஏற்படுத்திய தாக்கங்களை நான் பார்த்துள்ளேன். கங்கையோடு தொடர்புடைய வரலாறு, பாரம்பரியம், பாடல், கதைகள் போன்றவை காலங்காலமாகப் பின்னிப் பிணைந்துவிட்டன. இவையனைத்தும் கங்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டன. கங்கையை இந்தியர்கள் நேசிக்கின்றார்கள்........அந்த நீண்ட காலத் தொடர்ந்து வரும் பாரம்பரியத்தை நான் பெருமையோடு நினைவுகூர்கிறேன். இந்த இணைப்பானது அறுந்துவிடக்கூடாது என்பதே என் அவா. இந்த நிலையில் நான் அதைப் போற்றுகின்றேன். அதனை ஒரு தூண்டுகோலாக கருதுகிறேன்....மீதி சாம்பலை ஆகாயத்தில் விமானம் வழியாக எடுத்துச்சென்று இந்த விவசாயிகள் உழுகின்ற நிலத்தில் தெளித்துவிடுங்கள். அப்போது அவை இந்திய மண்ணுடன் இரண்டறக் கலந்து, இந்தியாவின் பிரிக்கமுடியாத அங்கமாக ஆகிவிடும்...."


நேருவின் அஸ்தி வைக்கப்பட்டது பற்றிய பதிவு
நேர்த்தியாகப் பராமரிக்கப்பட்டு வரும் ஆனந்த பவனின்  நுழைவாயிலின் அருகே ஓர் இடத்தில் "நேருவின் அஸ்தி (திரிவேணி) சங்கமத்தில் கரைக்கப்படும் முன்பாக இங்கே வைக்கப்பட்டிருந்தது" என்று இந்தியிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட குறிப்பு காணப்படுகிறது. நேருவின் ஆசை பூர்த்தியானதை இங்கு வைக்கப்பட்டிருந்த சாம்பல் நினைவுபடுத்தியது. மோதிலால் நேரு காலந்தொட்டு இருந்துவருகின்ற ஆனந்த பவனில் மிக முக்கியமான அரசியல் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.  இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பாக காங்கிரஸின் பெரும்பாலான நடவடிக்கைகள் இங்கிருந்தே மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேசத்தலைவர்கள் பயன்படுத்திய பொருள்கள் ஒரே இடத்தில் சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நேருவும் காந்தியும் விடுதலைப் போராட்ட வீரர்களுடனும் பெருந்தலைவர்களுடன் உரையாடிய பெருமை கொண்ட இடம். இவ்வாறான பல பெருமைகளைக் கொண்ட ஆனந்த பவன் 1970இல் இந்திரா பிரியதர்ஷினியால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 

ஆனந்த பவன் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்படல்
 அருங்காட்சியகமாக ஆக்கப்பட்டு பலர் வந்து கண்டுகளிக்கும் அளவு மிகவும் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. வட இந்தியப் பயணத்தில்  ஆனந்த பவனத்திற்கு சென்ற நினைவுகள் என்றென்றும் எங்கள் நெஞ்சில் ஆனந்தமாக இருக்கும்.  
---------------------------------------------------------------------------------------------------
புகைப்படங்கள் எடுக்க உதவி : திருமதி கண்மணி இராமமூர்த்தி, திருமதி பாக்கியவதி
---------------------------------------------------------------------------------------------------

38 comments:

  1. வணக்கம்
    ஐயா.

    அரிய தகவல் தங்களின் பதிவு வழி அறிந்தேன் தேடலுக்கு எனது வாழ்த்துக்கள் த.ம 1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. எங்கள் நீஞ்சிலும் நீங்கா இடம் பெரும் பகிர்வு ஐயா... பல தகவல்களை அறிந்து கொண்டேன்... நன்றி...

    ReplyDelete
  3. நல்ல பதிவு. நினைவுச் சின்னங்கள் சரித்திரத்தின் தூண்கள்.

    ReplyDelete
  4. திரு. நேரு அவர்களின்...
    விவசாயிகள் உழுகின்ற நிலத்தில் தெளித்து விடுங்கள். அப்போது அவை இந்திய மண்ணுடன் இரண்டறக் கலந்து, இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கமாக ஆகிவிடும்.
    வரிகள் படிக்கும்போது சிலிர்க்கிறது எத்தனையொரு உண்தமான சிந்தனை...
    அறியாத விடயங்கள் அறியத்தந்தமைக்கு நன்றி முனைவரே...
    தமிழ் மணம் 4

    ReplyDelete
  5. நாங்கள் வட இந்தியப் பயணம் மேற்கொண்டபோது அலஹாபாதில் ஒரு பகல்பொழுது தன்கி இருக்கிறோம். அப்போது ஆனந்த பவன் முன்பாகச் சென்றதுண்டு. உள்ளே சென்று காண வில்லை. கதவுகள் மூடப் பட்டிருந்ததால் அனுமதி இல்லை என்று எண்ணிக் கொண்டோம். நேருவின் அந்திம கால வேண்டுதல் பற்றி நானும் படித்துள்ளேன். ஆனால் இந்தத் தலை முறையினருக்கு அவரது பெருமை தெரிவதில்லை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  6. அரிய தகவல்கள் பகிர்வு ஐயா...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. இனிய பதிவு!..
    பற்பல கணைகள் அவர் மீது வீசப்பட்டாலும் - நாட்டுக்காக தன்னைத் தானே அர்ப்பணித்துக் கொண்ட தியாக சீலர்!..

    அவருடைய மறைவு கேட்டு குடும்பம் முழுதும் கண்ணீர் விட்டுக் கிடந்தது - இப்போது நினைவுக்கு வருகின்றது.

    வாழ்க ஆசிய ஜோதியின் புகழ்!..

    ReplyDelete
  8. மிக்க நன்றி .
    விருப்பமாக வாசித்தேன்
    வேதா. இலங்காதிலகம்

    ReplyDelete
  9. ஆனந்த பவன்! பள்ளியில் படிக்கையில் இதன் அழகை ஆசிரியர் விவரிக்கையில் ஓர் ஆவல் மிகும்! நேரில் சென்று பார்த்த உணர்வை ஏற்படுத்தியது தங்கள் பதிவு! நன்றி!

    ReplyDelete
  10. //1960களின் இறுதியில் நான்காம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த போது...//

    ஹ...ஹ... நாங்கல்லாம் அப்பவே ஸ்கூலையே முடிச்சிட்டோம்ல ..... !

    ReplyDelete
  11. அன்பின் அய்யா,
    ஆனந்த பவன் பற்றி படித்தவர்கள் அனைவரும் அதனை நேரில் பார்க்க வேண்டும் என்று விரும்புவது இயல்பு. தங்களுக்கு கிடைத்த நேரில் பார்த்த அனுபவத்தை மிக அழகாக பதிவிட்டு வாசிக்கும் அனைவரும் இன்புறுமாறு செய்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  12. அனந்த பவனின் பல தகவல்களை அறிந்து கொண்டென் ஐயா..

    ReplyDelete
  13. நானும்தான் சென்ற வருடம் அங்கு சென்று வந்ததைப் பதிவில் போட்டேன் ,ஆனால்,உங்களைப் போல் விவரமா எனக்கு எழுத வரலே :)
    த ம 6

    ReplyDelete
  14. ஆனந்தபவன் பற்றி அறியாத பலதகவல்களை மிக விரிவாக பகிர்ந்தற்கு பாராட்டுக்கள். இது மாதிரி தகவல்களை தேடிப்படிப்பவர்களுக்கு பயனளிக்க கூடிய செய்திகள்

    ReplyDelete
  15. ஆனந்த பவன் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். அதிகம் அறிந்ததில்லை. இந்தியப் பிரதமர்களில் எனக்கு மிகவும் பிடித்த இந்திரா காந்தியைப் பற்றிய தங்களது தகவல்களால் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
    த.ம.7

    ReplyDelete
  16. நானும் சென்றிருக்கிறேன் அய்யா
    மீண்டும் அந்தக் காட்சிகளைத் தங்களின் எழுத்தினூடாகத் தரிசித்ததில் மிக்க மகிழ்ச்சி!
    த ம 8

    ReplyDelete
  17. ஆனந்த பவன்
    நெகிழ்ச்சியூட்டும் பதிவு ஐயா
    எப்பேர்ப் பட்ட மாமனிதர்கள் காலடி பட்ட இடம்
    கொடுத்து வைத்தவர் ஐயா தாங்கள்
    நன்றி
    தம +1

    ReplyDelete
  18. ஆனந்தபவன் சென்ற ஆனந்தத்தை எங்களுக்கும் தந்து மகிழ்ந்தது மிக்க மகிழ்ச்சிஐயா.

    ReplyDelete
  19. 1991ல் பார்க்க முடியாத இடத்தை இன்று எனக்கு காட்டிவிட்டீரகள். மிக்க நன்றி !

    ReplyDelete
  20. ஒரு கடுமையான மழைநாளில் நாங்கள் அலகாபாத் சென்றிருந்தோம். மொத்தம் பன்னிரண்டு பேர். உரிய வாகன வசதி கிடைக்காமல் திட்டமிட்ட இடங்களைப் பார்க்க முடியாமல். போனது. அவ்வருத்தம் இன்று தங்கள் எழுத்தாலும் படத்தாலும் நீங்கியது என்றால் மிகையாகாது. நன்றி !

    ReplyDelete
  21. அருமையான பதிவு! ஆனந்த பவன் பற்றி அறியத்தந்ததற்கும் அதன் தொடர்பான அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிக்க வைத்ததற்கும் அன்பு நன்றி!

    ReplyDelete
  22. பள்ளிகூடத்தில் படிக்காததை இப்போது படிக்க வேண்டியுள்ளது ஐயா....

    ReplyDelete
  23. “ஆனந்த பவன்”க்கு அடுத்து.............

    ReplyDelete
  24. அருமையான பதிவு. ஆனந்த பவன் பற்றி அறிந்துக்கொண்டொம். நன்றி.

    ReplyDelete
  25. தங்களின் பயணங்கள் தொடரட்டும்

    ReplyDelete
  26. மிக மிக அருமையான பயணப் பதிவு! பல புதிய தகவல்கள் ஐயா! பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete
  27. இந்திய வரலாற்றுடனும், நேருவின் குடும்பத்துடனும் நெருங்கியத் தொடர்பு கொண்ட ஆனந்த பவன் பற்றியறிந்து மகிழ்ச்சி. புகைப்படங்கள் அருமை! அவசியம் காண வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்துகின்றது. பாராட்டுக்கள் ஐயா!

    ReplyDelete
  28. நாங்களே நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள்.ஆனந்த பவனம் சரித்திரத்தோடு பின்னிப் பிணைந்தது நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டோம் நன்றி ஐயா

    ReplyDelete
  29. வாசிக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.

    ReplyDelete
  30. புகைப்படங்களை பார்த்தே பார்த்தாக பீலா விட்டுக்கொள்ளலாம். ஐயா...

    ReplyDelete
  31. புகைப்படங்களை பார்த்தே பார்த்தாக பீலா விட்டுக்கொள்ளலாம். ஐயா...

    ReplyDelete
  32. ஆனந்தபவனைப் பற்றி அருமையான தகவல்களுடன் படங்களும் தந்ததற்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  33. நினைவுச் சின்னங்களை சொல்லி
    எண்ணங்களை "'ஆனந்தம் விளையாடும் ஆனந்த பவன்"அருங்காட்சியக சிறப்புகளை
    பகிர்ந்தளித்தமைக்கு நன்றி முனைவரே!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
  34. அடுத்த பயண பதிவுக்கு காத்திருக்கிறேன் ஐயா..

    ReplyDelete
  35. அடுத்த பயண பதிவுக்கு காத்திருக்கிறேன் ஐயா..

    ReplyDelete
  36. ஆனந்தபவன் போக முடியவில்லை வந்துவிட்டோம் அவசரவேலையாக. இன்று உங்கள் பதிவின் மூலம் நன்றாக பார்த்து விட்டேன். ஆனந்தபவன் பற்றிய விரிவான தகவலுக்கு நன்றி.

    ReplyDelete