24 July 2014

ராஜராஜன் நேருவின் பார்வையில்

---------------------------------------------------------------------------------------------------
இன்றும் (24-7-2014) நாளையும் (25-7-2014) கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெறும் முதலாம் ராஜேந்திரசோழன் 1000ஆவது ஆண்டு விழாவின் நினைவாக (கி.பி.1014-2014) ராஜராஜன் 1000ஆவது ஆண்டு விழாவில் ராஜராஜன் நேருவின் பார்வையில் என்ற தலைப்பில் 26.9.2010 நாளிட்ட தினமணி இதழில் வெளியான கட்டுரை
---------------------------------------------------------------------------------------------------


ல்கியின் "பொன்னியின் செல்வன்' வரலாற்றுப் புதினத்தைப் படிக்கும் வாசகர்கள் அக்காலகட்டத்துக்கே செல்லும் உணர்வைப் பெறுவர்.ஒவ்வொரு கதாபாத்திரமும் வாசகர்களுக்கு மிகவும் நெருக்க மாவதோடு நிகழ்வு நடைபெறும் இடங்களுக்கே அழைத்துச் சென்றுவிடும். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, தனது மகள் இந்திரா பிரியதர்ஷினிக்கு எழுதிய கடிதங்களைப் படிக்கும்போதும் இவ்வுணர்வு ஏற்படும். இக்கடிதத் தொகுப்பைக் கொண்ட  "உலக வரலாறு' (Glimpses of World History) என்ற நூலைப் படிக்கும் வாசகர்கள் அந்தந்த இடங்களுக்கே சென்ற உணர்வைத் தரும்படி அவர் எழுதியுள்ளார்.

""பள்ளியிலோ, கல்லூரியிலோ நாம் அறிந்துகொள்ளும் வரலாறு போதுமானதல்ல. மற்றவர்கள் எப்படியோ எனக்குத் தெரியாது. ஆனால், நான் பள்ளிக்காலத்தில் ஓரளவே கற்றுக் கொண்டுள்ளேன். சிறிதளவே இந்திய வரலாற்றையும், இங்கிலாந்து வரலாற்றையும் கற்றேன். இன்னும் சொல்லப்போனால் நான் படித்தவை அதிகமாக நம் நாட்டைப் பற்றிய தவறான மற்றும் திரித்துவிடப்பட்ட செய்திகளே. கல்லூரியை விட்டு வெளியே வந்த பின்னர்தான் சில உண்மையான வரலாற்றைப் படிக்க ஆரம்பித்தேன். அதிர்ஷ்டவசமாக என்னுடைய சிறைவாசம் என் அறிவைப் பெருக்கிக் கொள்ள வாய்ப்பளித்தது''.

ஒவ்வொரு கடிதத்தின் ஆரம்பத்திலோ முடிவிலோ இவ்வாறான கருத்துக்ளைத் தெரிவித்து மகளை தன் கடிதத்துடன் நேரு பிணைக்கிறார். உலக அரங்கில் அவர் தொடாத துறையே இல்லை என்று கூறுமளவு அனைத்துச் செய்திகளைப் பற்றிய கடிதங்களை எழுதியுள்ள நேரு, தன் நூலில் மாமன்னன் இராஜராஜனைப் பற்றியும், இராஜேந்திரனைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.

தென்னிந்தியா பல மன்னர்களையும், போராளிகளையும் ஒரு பெரும் மனிதனையும் உருவாக்கியுள்ளது என்ற தலைப்பில் 13.5.1932 அன்று எழுதியுள்ள கடிதத்தில் ஹர்ஷரின் மரணம் தொடங்கி பல செய்திகளைக் குறிப்பிடுகிறார். பல்லவர், பாண்டியர் பற்றி எழுதியபின் சோழர்களைப் பற்றி எழுதுகிறார்.

""சோழராட்சி 9-ம் நூற்றாண்டின் நடுவில் தென்னகம் முழுதும் பரவ ஆரம்பித்தது. கடலிலும், அதன் ஆதிக்கம் இருந்தது. வங்காள விரிகுடாவிலும் அரபிக்கடலிலும் பெரிய கடற்படையைக் கொண்டிருந்தது. சோழர்களின் முக்கிய துறைமுகம் காவிரிப்பூம்பட்டினம். சோழராட்சிக்கு அடிகோலிய விஜயாலயன் மிகப்பெரிய மன்னன். சோழர்கள் வடக்கே தம் எல்லையை விரிவுப்படுத்தத் தொடங்கியபோது திடீரென ராஷ்ட்ர கூடர்களால் தோற்கடிக்கப்பட்டனர். ஆனால், மறுபடியும் இராஜராஜன் காலத்தில் எல்லை விரிவடைய ஆரம்பித்ததுடன் பழம்பெருமையும் தக்கவைக்கப்பட்டது.

இது 10-ம் நூற்றாண்டின் இறுதிக்கட்டம். அக்காலகட்டத்தில் வட இந்தியாவில் முகலாயர் படையெடுப்பு நடைபெற்றது. வடக்கே நடந்த நிகழ்வுகளால் ராஜராஜனுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை. தொடர்ந்து, படையெடுப்புகளில் அவர் ஈடுபட்டார். இலங்கையை வென்றார். அங்கு சோழர்கள் 70 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். அவரது மகன் இராஜேந்திரன் தந்தையைப் போலவே போர்க்குணம் மிக்கவன். தன் யானைகளை கப்பலில் எடுத்துச் சென்று தென் பர்மாவை வென்றான். வடஇந்தியா சென்று வங்காள மன்னனைத் தோற்கடித்தான். குப்தர்களுக்குப்பின் இக்காலகட்டத்தில் சோழராட்சி விரிவடைய ஆரம்பித்தது.

ஆனால், அது நெடுநாள் நீடிக்கவில்லை. தான் வென்ற நாடுகளைத் தக்க வைக்கும் முயற்சியில் இராஜேந்திரன் ஈடுபடவில்லை. கி.பி. 1013 முதல் 1044 வரை அவன் அரசாட்சி செய்தான். அவனது மரணத்திற்குப்பின் சோழராட்சி சரிய ஆரம்பித்தது.

சோழர்கள் போர் வெற்றிகளில் மட்டும் சிறந்தவர்கள் அல்லர். கடல் வணிகத்திலும் பெயர் பெற்றவர்கள். காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகப் பொருள்களின் ஏற்றுமதியும், இறக்குமதியும் நடைபெற்றது. கடல் வழியாக வெகுதூரம் வரை வணிகப் பொருள்கள் அனுப்பப்பட்டன. யவனர்கள் அல்லது கிரேக்கர்களின் குடியிருப்பு அங்கு இருந்தது.

இதே கடிதத்தில் தொடர்ந்து இந்திரா பிரியதர்ஷினிக்கு ஒரு செய்தி கூறிவிட்டு மறுபடியும் சோழர்களைப் பற்றி எழுதுகிறார். மகளுக்கு அவர் எழுதும் குறிப்பு வாசகரையும் தெளிவுப்படுத்துகிறது.

""பல நூற்றாண்டு கால தென்னிந்திய வரலாற்றை உனக்குச் சுருக்கமாகச் சொல்ல முயன்றுள்ளேன். என் இந்த முயற்சி உனக்குச் சிறிய குழப்பத்தைக்கூட உண்டாக்கலாம். அப்போது பல மன்னர்களைப் பற்றியும், வம்சங்களைப் பற்றியும் அறிய எண்ணும்போது குழப்பத்தில் ஆழ்ந்துவிடக்கூடாது.

மன்னர்களையும் அவர்களுடைய வெற்றியையும்விட மிகவும் முக்கியமானது அந்நாளைய பண்பாடு மற்றும் கலை தொடர்பான பதிவே. கலையியல் நோக்கில் எடுத்துக் கொண்டால் அதில் வடஇந்தியாவைவிட தென்னிந்தியாவின் பங்களிப்பே அதிகம். வடஇந்தியாவில் பெரும்பாலான மரபுச் சின்னங்களும், கவின்மிகு கட்டடங்களும், சிற்பங்களும் போரின் காரணமாகவும், முகலாயர்களின் படையெடுப்புகளாலும் அதிக பாதிப்புக்குள்ளாயின.

இக்காலகட்டத்தில் சோழமன்னன் இராஜராஜனால் ஓர் அழகான கோயில் தஞ்சாவூரில் கட்டப்பட்டது. பாதமியிலும், காஞ்சிபுரத்திலும் கூட அழகான கோயில்கள் இருந்தன. எட்டாம் நூற்றாண்டின் பிற்பாதி நிலை இதுவே. ராஜராஜன் காலத்தில் அழகான செப்புத்திருமேனிகளும் காணப்பட்டன. அவற்றுள் மிக முக்கியமானது நடராஜர் சிற்பமே.

கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழமன்னன் முதலாம் இராஜேந்திரன் பல நீர்ப்பாசன வசதிகளைச் செய்தான். அவற்றுள் முக்கியமானது 16 மைல் நீளமுள்ள நீர்த்தேக்கமாகும். இது கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்குபின் அங்கு வந்த அரேபியப் பயணி அல்பெரூனி அதைக் கண்டு வியக்கிறார். தம் மக்கள் அதைக் கண்டால் வியந்து போவார்கள்'' என்றும் கூறி இதுபோன்ற கட்டுமானத்தை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் புகழாரம் சூட்டுகிறார்.

அங்கோர்வாட் (கம்போடியா) மற்றும் ஸ்ரீவிஜயம் (இந்தோனேசியா) என்னும் தலைப்பில் அமைந்த 17.5.1932-ம் நாளிட்ட கடிதத்தில் நேரு ஸ்ரீவிஜயத்துடன் சோழர்கள் கொண்ட தொடர்பு பற்றியும், தென்னிந்தியாவில் சோழப்பேரரசு 11-ம் நூற்றாண்டில் உச்சநிலையில்  இருந்தபோது ஸ்ரீவிஜயமும் அத்தகு நிலையில் இருந்தது பற்றியும், இரு பேரரசுகளுக்கும் இடையே இருந்த நட்புறவு பற்றியும் குறிப்பிடுகிறார்.

11-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இவர்களுக்கிடையே போர் மூண்டது பற்றியும், அக்காலகட்டத்தில் சோழமன்னன் முதலாம் இராஜேந்திரன் கடற்பயணம் மேற்கொண்டு ஸ்ரீவிஜயத்தைக் கைப்பற்ற முயன்றதையும் விரைவில் அந்த அதிர்ச்சியில் இருந்து ஸ்ரீவிஜயம் மீண்டது பற்றியும் குறிப்பிடுகிறார்.

சோழர்களைப் பற்றிய ஒரு பறவைப் பார்வையை தன் கடிதங்களில் நேரு குறிப்பிட்டுள்ளதன் மூலமாக அவர் உலக வரலாற்றில் சோழர்களுக்குத் தந்துள்ள முக்கியத்துவத்தை உணரமுடிகிறது. 

 நன்றி :  தினமணி, 26.9.2010

33 comments:

  1. மிக்க நன்றி ஐயா
    கட்டுரை வெளிவந்த அன்றே படித்துவிட்டேன்
    தற்பொழுது மீண்டும் ஒருமுறை படிக்க வாய்ப்பு

    ReplyDelete
    Replies
    1. படித்ததை மறுபடியும் படித்தமைக்கு நன்றி. தங்களின் வருகை மகிழ்வைத் தருகிறது.

      Delete
  2. படிக்காமல் விட்டுப்போன கட்டுரையை இன்று தங்களால் படிக்க முடிந்தது. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. படிக்காமல் விடுபட்ட நண்பர்களுக்காக இப்பதிவு. நன்றி.

      Delete
  3. வணக்கம்
    ஐயா
    படிக்க படிக்க திகட்டவில்லை படிக்க தந்தமைக்கு நன்றிகள் பல.....
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. திகட்டாத அளவிலான கட்டுரை என்ற தங்களின் புகழாரத்திற்கு நன்றி.

      Delete
  4. முக்கியமானது நடராஜர் சிற்பமே - உண்மை தான் ஐயா...

    சிறப்பான கட்டுரை... பாராட்டுக்கள்...

    தினமணி இதழில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகையும் வாழ்த்தும் என்னை மென்மேலும் எழுதவைக்கிறது. நன்றி.

      Delete
  5. wishes. i got a glimpse of chola history. thank you

    ReplyDelete
    Replies
    1. தவறாமல் என்னுடன் பயணிக்கும் தங்களின் அன்புக்க நன்றி.

      Delete
  6. சரித்திர உண்மைகள் அழிந்துகொண்டு வரும் இந்த வாழ்க்கைச்சூழலில் இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துவைக்க தங்களை போன்றவர்களால் பெருமையே ஐயா.
    தற்போது எனது பதிவு ''தாலி''

    ReplyDelete
    Replies
    1. இவ்வாறான நோக்கில் எழுதப்படவேண்டும் என்ற எனது நெடுநாளைய ஆசையை இக்கட்டுரை பூர்த்தி செய்தது. தங்களின் பதிவறிந்து மகிழ்ச்சி.

      Delete
  7. பகிர்வுக்கு நன்றி! நேரு மகளுக்கு (இந்திரா காந்திக்கு) எழுதிய கடிதங்களில் உலக வரலாறு – முதல் பாகம் (தமிழாக்கம்) படித்து இருக்கிறேன். உங்கள் பதிவு அந்த புத்தகம் பற்றிய எனது வாசிப்பு நினைவலைகளை நினைவூட்டியது.

    ReplyDelete
    Replies
    1. இக்கட்டுரையை எழுதும்போது நண்பர்கள் இந்நூலின் மொழிபெயர்ப்பிலிருந்து எழுதிவிடலாம் என்று கருத்து தெரிவித்தனர். ஆங்கிலத்தில் நேரு எழுதியதை என்னால் உள்வாங்கிய அளவில் வெளிப்படுத்தவேண்டும் என்ற ஆர்வமே இக்கட்டுரை உருவாகக் காரணம். நன்றி.

      Delete
  8. நல்ல நேரத்தில் நினைவூட்டினீர்கள். எப்படியோ தினமணியில் படிக்க விட்டுப்போனது. நனறி!

    ReplyDelete
    Replies
    1. தனியாக இராஜேந்திரசோழனைப் பற்றி ஒரு கட்டுரை எழுத விரும்பினேன். காலமின்மையால் இவ்வாறாகப் பகிர்ந்துகொள்ளும் சூழல் எழுந்தது. விட்டுப்போனதைத் தாங்கள் படித்ததறிந்து மகிழ்ச்சி. நன்றி.

      Delete
  9. வாசிக்க விட்டுப் போனக் கட்டுரையைத் தாங்கள் இங்கு பதிர்ந்ததற்கு மிக்க நன்றி! வாசித்துவிட்டோம்! எவ்வளவு வரலாற்றுத் தகவல்கள் மகள் இந்திராவுக்கு எழுதியுள்ளார் நேரு! நல்ல ஒரு பதிவு ஐயா! சோழர்கள் ப்ற்றிய பல தகவல்களை நண்பர் ஜோதிஜி திருப்பூர் அவர்கள் தனது புத்தகமாகிய தமிழர் தேசத்தில் மிக அழகாக எழுதியுள்ளார்....இதை வாசித்த போது அது நினைவுக்கு வந்ததால் குறிப்பிட்டுள்ளோம் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்பு கிடைக்கும்போது தாங்கள் கூறியுள்ள நூலை அவசியம் படிப்பேன். வருகைக்கு நன்றி.

      Delete
  10. நடராஜர் சிற்பமும், நீர்த்தேக்கமும் மிகவும் முக்கியமானவை சோழர்களின் வரலாற்றில்!

    ReplyDelete
    Replies
    1. அவர்களின் சாதனைகளில் இவையும் குறிப்பிடத்தக்கனவே. நன்றி.

      Delete
  11. அன்புடையீர்..
    நேருஜி - தன் அன்பு மகள் இந்திரா பிரியதர்ஷனிக்கு சோழர் வரலாற்றினை உள்ளடக்கி எழுதிய கடிதம் அறியாதது.
    தங்கள் பதிவில் வாசிக்கும் போது மெய்சிலிர்த்தது... ஐயா!..

    இனியதொரு தகவலை வழங்கியமைக்கு நன்றி..

    நமது தஞ்சையம்பதியிலும் மாமன்னன் ராஜேந்திர சோழனைப் பற்றி எழுதியுள்ளேன். தங்களின் மேலான வருகையை அன்புடன் எதிர்பார்க்கின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. எனது எழுத்து தங்களை மெய்சிலிர்க்கவைத்ததறிந்து மகிழ்ச்சி. தங்கள் பதிவும் சோழனைப் பற்றியதே என்பதை நினைக்கும்போது மகிழ்வாக உள்ளது. படிப்பேன். நன்றி.

      Delete
  12. பத்திரிக்கை நேயர்களாகப் படிக்கத் தவறியது வலைப்பூ நேயராக இருப்பதால் கிடைக்கப் பெற்றது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்கள் எனது எழுத்துக்கு பெருமை சேர்க்கின்றன. நன்றி.

      Delete
  13. ஐயா, புதிய புதிய செய்திகளும், பல விவரங்களும் தங்களது வலைப்பூ வழி தெரிந்துகொள்ள முடிகிறது. இராசேந்திர சோழனின் 1000 வது ஆண்டு விழாவிற்கான நேர்த்தியான செய்தியாக உள்ளது. நன்றி. ச.மல்லிகா

    ReplyDelete
    Replies
    1. தங்களைப் போன்றோரின் கருத்துக்கள் என்னை மென்மேலும் சிந்திக்கவும், எழுதவும் துணை செய்கின்றன. நன்றி.

      Delete
  14. I have read it at the time of publication !Valuable documentation

    ReplyDelete
  15. தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete
  16. நான் அறிந்திராத பல புதிய செய்திகளை தந்ததற்கு நன்றி.

    ReplyDelete
  17. அன்பான கருத்திற்கு நன்றி. தொடர்ந்து உங்களது வருகையை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  18. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
  19. தங்களின் அன்பான வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி. தொடர்ந்து எழுதுவேன்.

    ReplyDelete
  20. நேரு எழுதியும் கூடவா வடநாட்டினர் தமிழ் இனத் தொன்மையை ஏற்க மறுக்கின்றனர்? :(
    பகிர்விற்கு நன்றி ஐயா

    ReplyDelete