முகப்பு

28 January 2016

நாகேஸ்வரர் ஆலய உலா : தி இந்து


கும்பகோணத்தில் தீர்த்தவாரி காணும் 12 சைவக்கோயில்களில் நாம் பார்க்கவேண்டிய கோயிலான நாகேஸ்வரன் கோயிலைப் பற்றிய கட்டுரை இன்றைய தி இந்து இதழில் வெளிவந்துள்ளது. கட்டுரையை வெளியிட்ட தி இந்து நாளிதழுக்கு நன்றி. அக்கட்டுரையின் மேம்பட்ட வடிவத்தினைப் பகிர்வதில் மகிழ்கிறேன். 


  
குடமூக்கு, குடந்தை என்று போற்றப்படும் அழைக்கப்படுகின்ற கும்பகோணம் கோயில்கள் நிறைந்த நகராகும். பிப்ரவரி 13 முதல் 22 வரை நிகழவுள்ள மகாமகத்தை முன்னிட்டு மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி காணும் சைவக்கோயில்கள், காவிரியாற்றில் தீர்த்தவாரி காணும் வைணவக்கோயில்கள் உள்ளிட்ட பல கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றது. இக்கோயில்கள் அனைத்திற்கும் சென்றுவந்த நிலையில் அண்மையில் நாகேஸ்வரர் கோயில் சென்றேன்.  பல முறை அக்கோயிலுக்குச் சென்றபோதிலும் ஒவ்வொரு முறை செல்லும்போதும் புதியதாகச் செல்லும் உணர்வை ஏற்படுத்தும் பெருமை வாய்ந்தது அக்கோயில். 

கோயில் உலாக்களில் மறக்க முடியாத கோயில்களில் ஒன்று இக்கோயில். கும்பகோணத்திலுள்ள கோயில்களில் சார்ங்கபாணிகோயில் அழகான கோபுரத்திற்கும், ராமசாமி கோயில் அழகான சிற்ப மண்டபத்திற்கும், ராமாயண ஓவியங்களும் பெயர் பெற்றுள்ள நிலையில் இக்கோயில் தேர் வடிவில் அமைந்துள்ள நடராசர் மண்டபம், கருவறையைச் சிறிய அழகான சிற்பங்கள், அழகான கருவறையுடன் கூடிய விமானம் என்ற நிலையில் சிறப்பைப் பெற்று கட்டடக்கலையிலும் சிற்பக்கலையிலும் முதன்மையான  இடத்தைப் பெறுகிறது.




மகாமகத்தின்போது மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி காண்கின்ற காசி விஸ்வநாதர் கோயில், கும்பேஸ்வரர் கோயில், நாகேஸ்வரர் கோயில், சோமேஸ்வரர் கோயில், கோடீஸ்வரர் கோயில், காளஹஸ்தீஸ்வரர் கோயில், கௌதமேஸ்வரர் கோயில், அமிர்தகலசநாதர் கோயில், பாணபுரீஸ்வரர் கோயில், அபிமுகேஸ்வரர் கோயில், கம்பட்ட விஸ்வநாதர் கோயில்,  ஏகாம்பரேஸ்வரர் கோயில் ஆகிய 12 கோயில்களில் 10 கோயில்கள் கும்பகோணம் நகரில் உள்ளன. மற்ற இரு கோயில்களான கோடீஸ்வரர் கோயில் கொட்டையூரிலும், அமிர்தகலசநாதர் கோயில் சாக்கோட்டையிலும் உள்ளன.

தேவாரப்பாடல் பெற்ற தலங்களில், காவிரியின் தென் கரையில் அமைந்துள்ள 27ஆவது தலமாகும். கி.பி.ஏழாம் நூற்றாண்டில் செங்கற்கோயிலாக இருந்து கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டில் ஆதித்தசோழனால் கற்கோயிலாக வடிவம் பெற்ற பெருமையுடையது இக்கோயில்.  நாகராஜனும், சூரியனும்  பூசித்த பெருமை பெற்றது இக்கோயில். இத்தலத்து இறைவனை நாகேசப்பெருமான் என்றும், தலத்தினை நாகேஸ்வரம் என்றும் அழைப்பர்.  பாஸ்கர சேத்திரம் என்று பெயர் பெற்றதற்கு இத்தலம் சான்றாக உள்ளது. இத்தலத்தில் இன்றும் சித்திரை மாதம் 11, 12, 13 ஆகிய நாள்களில் சூரிய கிரகணங்கள் கருவறையில் உள்ள லிங்கத்திருமேனியின்மீது நேராக விழுகின்ற அரிய காட்சியைக் காணமுடியும். திருநாவுக்கரசர் இங்குள்ள இறைவனைப் போற்றிப்பாடும்போது இத்தலத்தினைக் குடந்தைக்கீழ்க்கோட்டம் என்கிறார்.

ஐந்து நிலைகளுடன் உள்ள ராஜகோபுரம் கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளது. உள்ளே செல்லும்போது வலப்புறம்  அம்பிகையின் சன்னதி உள்ளது. 

இடப்புறம் சிங்கக்கிணறு உள்ளது. அடுத்து இக்கோயிலில் திருப்பணி மேற்கொண்டு 1923இல் குடமுழுக்கு செய்த பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகளுக்கான தனி சன்னதி  அமைக்கப்பட்டுள்ளது. நுழைவாயிலின் இரு புறமும் விநாயகரும், சுப்பிரமணியரும் காணப்படுகின்றனர். நுழைவாயிலைக் கடந்து செல்லும்போது கொடி மரம், பலிபீடம் காணப்படுகின்றன. இடப்புறம் பதினாறு கால் மண்டபமும், வலப்புறமும் நடராஜர் சன்னதியும் உள்ளன. 


நடராஜர் சன்னதி நகர்ந்து செல்லும் தேர் வடிவில் அமைந்துள்ளது. மண்டபத்தில் இரு புறங்களிலும் கல்லால் ஆன சக்கரங்கள் உள்ளன. 




இரு குதிரைகளும், நான்கு யானைகளும் இழுத்துச் செல்லும் நிலையில் இம்மண்டபம் அமைந்துள்ளது. சக்கரங்களின் ஆரங்களாக 12 ராசிகளும் இடம்பெற்றுள்ளன.  

இக்கோயிலின் உள் மண்டபத்தில் படைவெட்டி மாரியம்மன், நவக்கிரக சன்னதிகள் உள்ளன. கருவறையைச் சுற்றி வரும்போது கருவறைக் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கருவறையின் பின்புறம் வீதிவிடங்கர் (திருவாரூர்), சோளிங்கநாதர் (திருக்குவளை), கண்ணாயிரநாதர் (திருக்காரவாயில்), வாய்மூர்நாதர் (திருவாய்மூர்), மறைகாட்சி மணாளநாதர் (வேதாரண்யம்), தர்பாரண்யேஸ்வரர் (திருநள்ளாறு) ஆகியோரைக் குறிக்கும் லிங்கத்திருமேனிகள் காணப்படுகின்றன. அடுத்து சுப்பிரமணியர், கஜலட்சுமி, சரஸ்வதி காணப்படுகின்றனர். 

திருச்சுற்றில் சண்டிகேஸ்வரர் சன்னதி, சூரியன் சன்னதி, சோமாஸ்கந்தர் சன்னதியும், நடராசர் சன்னதியும் அருகேயுள்ளன. சூரியன் சன்னதி வடகிழக்குப் பகுதியில் மேற்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது.

கருவறையில் லிங்கத்திருமேனியாக உள்ள மூலவர் நாகேஸ்வரர் என்றும் நாகநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். கருவறையின் வெளியே கோஷ்டத்திற்குக் கீழே அதிட்டானப்பகுதியில் சிறிய அளவிலான சிற்பங்கள் காணப்படுகின்றன. இவற்றில் இராமாயணச்சிற்பங்கள் உள்ளிட்ட சிற்பங்கள் அமைந்துள்ளன. இவை போன்ற சிற்பங்களை திருப்புறம்பியத்திலும், புள்ளமங்கையிலும் காணமுடியும். 







பெரியநாயகி என்றும் பிரகந்நாயகி என்றும் அழைக்கப்படும் அம்மன் சன்னதி தெற்கு நோக்கிய நிலையில் தனியாக அமைந்துள்ளது. இச்சன்னதியில் ஆடிப்பூர அம்மன் சன்னதியும், பள்ளியறையும் உள்ளன. அருகே பிராமஹி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் உள்ளனர். கருவறையைச் சுற்றிவரும்போது சண்டிகேஸ்வரி சன்னதி உள்ளது.  


இக்கோயிலில் உள்ள சன்னதிகளில் முக்கியமானதாகக் கருதப்படுகின்ற மற்றொரு சன்னதியான நாகர் சன்னதி வெளிச்சுற்றில் உள்ளது.  இங்குள்ள நாக கன்னி அம்மன் சன்னதியைச் சுற்றி அதிகமான நாக சிற்பங்கள் காணப்படுகின்றன.   


பிப்ரவரி 13இல் மகாமகத்திற்காக கோயில்களில் கொடியேற்றம் தொடங்கி 22 வரை மகாமக நிகழ்வுகள் சிறப்பாக நடைபெறவுள்ள நிலையில் மகாமகத்திற்காக கும்பகோணம் வரும்போது சிற்பக்கலை நுணுக்கத்தைத் தன்னுள் கொண்டு விளங்கும்.

இக்கோயிலுக்கு உலா செல்வோம். நம் பயணத்தில் நாம் பார்க்கவேண்டிய மீதியுள்ள ஒரே கோயிலான கொட்டையூர் கோடீஸ்வரர் கோயிலுக்கு விரைவில் செல்வோம்.

---------------------------------------------------------------------------------------------------
      ---------------------------------------------------------------------------------------------------
      துணை நின்றவை
      மகாமகப்பெருவிழா 2004 கும்பகோணம், இந்து சமய அறநிலையத்துறை,தமிழ்நாடு அரசு

      12 comments:

      1. உடன் பயணித்த உணர்வு ஐயா
        நன்றி

        ReplyDelete
      2. குடந்தையிலுள்ள திருக்கோயில்களைத் தங்களால் மீண்டும் தரிசனம் செய்கின்றேன்... மகிழ்ச்சி..

        ReplyDelete
      3. படங்களுடன் விளக்கங்கள் மிகவும் அருமை ஐயா...

        ReplyDelete
      4. அருமையான தகவல்களுடன் படங்களும் ரசித்தேன். இந்து நாளிதழில் வெளியானமைக்கு வாழ்த்துகள்.

        ReplyDelete
      5. இந்து நாளிதழில் வெளியான அருமையான பயனுள்ள கட்டுரைக்கு பாராட்டுக்கள்.

        ReplyDelete
      6. இந்துவில் வெளிவந்ததை காலையிலேயே பார்த்தேன்! படிக்க முடியவில்லை! தற்போது படித்து ரசித்தேன்! படங்களும் தகவல்களும் வழக்கம் போல சிறப்பு! நன்றி!

        ReplyDelete
      7. நல்லதொரு பகிர்வு தந்த முனைவருக்கு நன்றி
        தமிழ் மணம் 2

        ReplyDelete
      8. அருமையான விளக்கம் பகிர்வுகு நன்றி ஐயா.

        ReplyDelete

      9. அருமையான இலக்கியப் பகிர்வு.

        ReplyDelete
      10. நல்ல தகவல்கள். படங்களும் அருமை. இந்துவில் வெளிவந்தமைக்கு வாழ்த்துகள் ஐயா.

        ReplyDelete
      11. கோவிலைப்பற்றி அறிந்தேன் ஐயா. படங்கள் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள் ஐயா.தம +1

        ReplyDelete
      12. Dr S.Ganeshram (thro email: nsganeshram@gmail.com)
        Thanks for your mail. Please keep on writing .
        With regards. S. Ganeshram

        ReplyDelete