முனைவர் இராச.கலைவாணியும், முனைவர் சு.தமிழ்வேலுவும் இணைந்து எழுதியுள்ள சிலப்பதிகாரத்தில் இசைக்கருவிகள் என்ற நூல் நரம்புக்கருவி (யாழ், வீணை), காற்றுக்கருவி (குழல், கோடு, சங்கு, சூறைச்சின்னம், வயிர்), தோற்கருவிகள் (ஆறெறிப்பறை, கிணைப்பறை, சிறுபறை, தண்ணுமை, துடி, தொண்டகப்பறை, பறை, முரசு, முருடு, முழவு), கஞ்சக்கருவிகள் (கைத்தாளம், மணி), குயிலுவக்கருவிகள், பல்லியம் என்ற உட்தலைப்புகளில் பல்வேறு வகையான இசைக்கருவிகளைப் பற்றி ஆராய்கிறது.
நூலாசிரியர்கள், இசைக்கருவிகளின் அமைப்பு, பகுதிகள், வளர்ச்சி நிலை, பல்வேறு வகைகள், சிறப்பு, பயன்பாடு ஆகியவற்றை இலக்கியம் உள்ளிட்ட சான்றுகளோடு விவாதிக்கின்றனர். நூலில் காணப்படுகின்ற முக்கியமான கூறுகளில் சிலவற்றைக் காண்போம்.
"சங்க இலக்கியத்தில் வீணை என்னும் சொல்
பெயரளவில் கூட பதிவு பெறாத நிலையில் சிலப்பதிகாரத்தில் நாரதன் இசைக்கும்
கருவியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது." (ப.67)
"நாட்டிய அரங்கில் உள்ள அனைத்துக்
கருவிகளையும் முதன்மையான கருவியாக நின்று வழி நடத்தக்கூடியது வங்கியம்
என்றழைக்கப்படும் குழலே ஆகும்." (ப.70)
"பக்தி இலக்கியங்கள் சங்கை ஒரு மங்கலகரமான
இசைக்கருவியாகப் பதிவு செய்துள்ளன......இன்றைக்கு இறப்புச்சடங்கு நடக்கும்
இடங்களில் சேகண்டி என்னும் இரும்புக்கோல் கொண்டு அடிக்கும் வெண்கலத்தட்டுடன் இணை
ஒலியாகச் சங்கு பயன்படுத்தப்படுகிறது. " (ப.92)
"வயிர் என்பது ஒரு வகை ஊது கொம்பு. சங்க
காலம் முதலே மிகுதியான பயன்பாட்டில் உள்ள கருவியாகத் திகழ்ந்து வருகிறது. இக்கருவி
தனித்தும் பிற இசைக்கருவிகளுடன் இணைந்தும் இசைக்கப்பட்டுள்ளது." (ப.102)
"தண்ணுமை என்னும் இருமுகப்பறை இரு புறமும்
நீண்டு குவிந்து நடுப்பக்கம் அகலமாக அமைந்த பறையாகும். இது தோலினால் இருபுற
வாய்களும் மூடப்பட்ட, வார்க்கட்டுகளால் இழுத்துக்கட்டப்பட்ட பறையாகும். மிகத்
தொன்மையான பறையாகும்." (ப.119)
"பறை என்பது பல்வேறு வகையான முழக்கும்
தோற்கருவிகளின் பொதுப்பெயர். அதைப் போல் பறை என்பது நெல் முதலான தானியங்களை
முகத்தல் அளக்கும் அளவை என்னும் பொருண்மையிலும் சிலப்பதிகாரத்தில்
எடுத்தாளப்பட்டுள்ளது." (ப.139)
"முரசு காலை முரசு, வீர முரசு, போர்
முரசு, வெற்றி முரசு, மணமுரசு, பொது முரசு, நியாய முரசு, நாள் முரசு எனப் பல செயல்பாடுகளுக்கப்
பயன்படுத்தும் வகையில் பல வகைகளாக இருந்துள்ளன. காலை நேரத்தில் கொட்டப்படுவது காலை
முரசம் ஆகும்…..திருமண நிகழ்வை அறிவிக்கவும், திருமண நிகழ்வின்போதும்
இசைக்கப்படுவது மண முரசாகும்…..." (ப.146)
"கோவலன் கண்ணகி இருவருக்குமான திருமணத்தை
ஊர் முழுவதும் அறிவிக்கின்றனர். அப்போது முரசுடன் முருடு என்னும் தோற்கருவியும்
இசைக்கப்பட்டுள்ளது. " (ப.160)
"காளை மாடுகள், பசுக்கள் ஆகியவற்றின்
கழுத்தில் மணி கட்டப்படுவது பழமையான வழக்கமாகும். இனிமையான ஒலிநயம் அல்லது தங்களது
மாடுகளைத் தனித்து அடையாளப்படுத்த அல்லது மாடுகளின் இருப்பையும் வருகையையும்
அறிந்துகொள்ள எனப் பல்வேறு பயன்பாடுகளை முன்னிறுத்தி மணிகள் கட்டப்பட்டன. சிறிய
அளவிலான மணிகள் கயிறு கொண்டு கட்டப்படும் வழக்கம் இன்றும் நிலைபெற்றிருக்கின்றது…சிலப்பதிகாரத்தில்
பசுக்கள் கழுத்தில் மணி கட்டப்பட்டிருந்தது. அம்மணி அறுந்து வீழ்தல் என்பது தீய
அறிகுறியாகக் கருதப்பட்டது….." (ப.172)
நூலாசிரியர்கள் குறிப்பிடுகின்ற
விளக்கங்களும், ஒப்புநோக்கும், சான்றுகளும் ஒவ்வொரு இசைக்கருவியைப் பற்றியும் ஒரு தெளிவான
புரிதலைத் தருகிறது. சங்க காலம் தொடங்கி இன்று வரையிலான பயன்பாட்டைத் தர அவர்கள்
எடுத்துக்கொண்டுள்ள முயற்சி பெரிதும் போற்றத்தக்கதாகும். தொடர் களப்பணியும், பரந்த
வாசிப்பும் நூல் சிறப்பாக அமையப் பெருந்துணை புரிந்துள்ளது. அரியதொரு நூலைப் படைத்துள்ள ஆசிரியர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
ஆசிரியர் : முனைவர் இராச. கலைவாணி, முனைவர் சு.தமிழ்வேலு
பதிப்பகம் : ஏழிசைப்பதிப்பகம், தமிழ்க்கலையகம், 15/1, மாந்தோப்புத்தெரு, மூங்கில் தோட்டம், மயிலாடுதுறை 609 305 (அலைபேசி 99655 33832/96299 08792)
ஆண்டு : 2024
விலை : ரூ.200