25 ஆகஸ்டு 2019 அன்று அரியலூர் மாவட்டத்தில் உடையாளர்பாளையம் வட்டத்தில் ஒரு புத்தர் சிலையைக் காண்பதற்காக முனைவர் ம.செல்வபாண்டியன் திரு க.ரவிக்குமார் ஆகியோருடன் களப்பணி மேற்கொள்ளத் திட்டமிட்டோம். பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர் என்று மூன்று வெவ்வேறு இடங்களிலிருந்து கிளம்பி கங்கைகொண்டசோழபுரத்தை அடுத்துள்ள குறுக்கு ரோட்டில் ஒன்றுசேரத் திட்டமிட்டோம்.
நான் தஞ்சாவூரிலிருந்து காலை 5.00 மணி வாக்கில் பேருந்தில் புறப்பட்டு திருவையாறு, திருமானூர் வழியாக கீழப்பழுவூர் சென்று அங்கிருந்து பிறிதொரு பேருந்தில் ஜெயங்கொண்டம், கங்கைகொண்டசோழபுரம் வழியாக குறுக்கு ரோட்டினை வந்துசேர்ந்தேன். காலை உணவை குறுக்கு ரோட்டில் உள்ள உணவு விடுதியில் உண்டுவிட்டுக் காத்திருந்தபோது, பேருந்து கிடைப்பதில் தாமதமானால் அவர்கள் வர நேரமாகும் என்பதை அறிந்தேன்.
காத்திருக்கும் நேரத்தில் அருகில் வேறு ஏதாவது சிறப்பு பெற்ற இடத்திற்குச் செல்ல திட்டமிட்டேன். அருகில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் கோயிலுக்கு பல முறை சென்று வந்தவகையில், திரு செல்வபாண்டியனிடம் வேறு ஏதாவது இடமிருக்கிறதா என்று கேட்டபோது அவர் செங்கல்மேட்டில் மிக அரிய சிற்பங்கள் இருப்பதாகக் கூறினார். விசாரித்தபோது குறுக்கு ரோட்டிலிருந்து சாலையைக் கடந்து சுமார் 1.5 கிமீ தொலைவில் அவ்விடம் இருந்ததை அறிந்தேன்.
அங்கிருந்து நடந்தே சென்றேன். விசாரித்தபோது அங்கு மேலச்செங்கல்மேடு, கீழச்செங்கல்மேடு என இரு பகுதி இருப்பதாகக் கூறினர். இரு இடங்களிலும் கோயில்கள் இருப்பதாகக் கூறினர். சிறிது சென்ற பாதையிலிருந்து வலப்புறம் பிரிகின்ற மற்றொரு பாதை வழியாக முதலில் மேலச்செங்கல்மேடு சென்றேன். அங்கிருந்த கோயிலில் சிற்பங்கள் எவையும் காணப்படவில்லை. விசாரித்தபோது ஐந்தாறு சிற்பங்கள் உள்ள கோயில் கீழச்செங்கல் மேட்டில் உள்ளதாகக் கூறினர்.
மேலச்செங்கல்மேட்டிலிருந்து கீழச்செங்கல்மேட்டிற்கு ஒற்றையடிப்பாதை வழியாக செல்லலாம் என்று கூறி வழிகாட்டினர். அவ்வழியாக சுமார் 1 கிமீ நடக்க ஆரம்பித்தேன். வெயிலின் உக்கிரம் சற்று அதிகமாக இருந்தபோதிலும் அழகான சிற்பங்களைப் பார்க்கப்போகின்ற ஆவலில் அது தெரியவில்லை.
நடந்து கோயிலை அடைந்தபோது அங்கு தொல்லியல் துறையின் அறிவிப்புப் பலகையினைக் கண்டேன்.
முதலாம் இராஜேந்திர சோழனின் வெற்றியின் அடையாளமாகக் கலிங்க நாட்டிலிருந்து (தற்போதைய ஒரிஸ்ஸா மாநிலத்தின் வட பகுதி) கொண்டுவரப்பட்ட, அழகான சிற்பங்களை அங்கு காணமுடிந்தது. அச்சிற்பங்கள் செந்நிற மணற்கல்லால் ஆனவை என்றும் கலிங்க நாட்டு கலைப்பாணிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அவை அமைந்துள்ளன என்று தெரிவிக்கும் வகையில் தமிழக அரசின் தொல்லியல் துறையின் அறிவிப்புப்பலகை இருந்தது. அங்கிருந்த வீரமகாகாளி கோயில் வளாகத்தில் இச்சிற்பங்கள் வழிபாட்டில் உள்ளன.
கோயில் இரு பிரிவாகக் காணப்பட்டது. பெரிய கொட்டகையுடன் உள்ள பகுதியில் ஒரே ஒரு பெரிய காளி சிற்பம் இருந்தது. அச்சிற்பம் தஞ்சாவூரில் உள்ள நிசும்பசூதனியைவிட பெரியதாகத் தோற்றமளித்தது. சிறிய கொட்டகையில் பிற சிற்பங்கள் இருந்தன. அரண்மனையையும், கோட்டைகளையும் அமைப்பதற்காக செங்கல் சூளை அமைக்கப்பட்ட இடம்தான் செங்கல்மேடு என்றழைக்கப்படுவதாகவும், இங்குள்ள காளியை வீரமாகாளி என்றழைப்பதாகவும், தமிழகத்தில் இதுவே பெரிய காளி என்றும் அங்கிருந்தோர் கூறினர்.
கோயிலின் எதிரில் பெரிய குளம் காணப்பட்டது. அந்த வெயிலில் குளத்திலிருந்து வந்த காற்று இதமாக இருந்தது. சற்று நேரம் அதனை ரசித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன், மறுபடியும் நடைபயணமாக குறுக்குரோட்டை நோக்கி. நான் சேர்வதற்கும் அவ்விரு ஆய்வாளர்களும் வந்து சேரவும் நேரம் சரியாக இருந்தது. அனைவரும் தேநீர் அருந்திவிட்டு, புத்தர் சிலையைத் தேடிப் போவதற்காக விசாரிக்க ஆரம்பித்தோம். புத்தர் சிலை உள்ள இடம் பள்ளிப்பாளையம் என்றும், குறுக்குரோட்டிலிருந்து 3 கிமீ தொலைவில் உள்ளதாகக் கூறினர். அடுத்த பயணம் தொடர்ந்ததைப் பற்றி பிறிதொரு பதிவில் காண்போம்.
அமைவிடம் : கங்கைகொண்ட சோழபுரத்தை அடுத்துள்ள குறுக்கு ரோட்டிலிருந்து சுமார் 1.5 கிமீ தொலைவில், மேலச்செங்கல்மேடு என்னும் பகுதியை அடுத்து கீழச்செங்கல்மேடு உள்ளது. ஆட்டோவிலோ, மகிழ்வுந்திலோ, நடந்தோ செல்லலாம்.
நன்றி : தகவலைத் தந்து உதவிய நண்பர் முனைவர் ம.செல்வபாண்டியன்