16 ஆகஸ்டு 1982இல் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்து 34 ஆண்டுகள் நிறைவுறவுள்ள நிலையில் (1 மார்ச் 2016 வரை) 300 நூல்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளேன் என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். தட்டச்சுச்சுருக்கெழுத்தாளராகப் பணியில் சேர்ந்த என்னை ஓர் ஆய்வாளனாக ஆக்கிய நான் பணியாற்றும் பல்கலைக்கழகத்தை நன்றியோடு நினைவுகூறுகிறேன்.
வழங்கிய நூல்கள்
வரலாறு, இலக்கியம், தத்துவம், கலை, கதை, கட்டுரை, கருத்தரங்கத் தொகுப்புகள், ஆண்டு நூல்கள் (Yearbook), தமிழ்ச்சுருக்கெழுத்து, ஆங்கிலச்சுருக்கெழுத்து என்ற நிலையில் நான் நூல்களை வழங்கியுள்ளேன். நானும், என் குடும்பத்தாரும், நண்பர்களும் படித்த எங்கள் இல்ல நூலகத்தில் இருந்த நூல்கள் அனைவருக்கும் பயன்படவேண்டும் என்ற எண்ணமே நான் தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு நூல்களை வழங்க உதவியாக இருந்தது.
எங்கள் இல்ல நூலகம்
1975-76இல் கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் புகுமுக வகுப்பில் சேர்ந்த காலகட்டத்தில் தட்டச்சுச் சுருக்கெழுத்தில் ஈடுபட ஆரம்பித்ததன் தாக்கம் என்னை அப்பொழுது The Hindu இதழின் வாசகனாக்கியது. புதிய ஆங்கிலச்சொற்களுக்கான பொருளைத் தேட அகராதியைப் பார்க்க ஆரம்பித்தேன். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்த முயற்சி இன்னும் தொடர்கிறது. எனது அலுவலக மேசையில் இன்றும் ஒரு பெரிய அகராதியையும், கையடக்க அகராதியையும் வைத்துள்ளேன். அகராதியில் ஆரம்பித்த தேடல் என்பது வாசிப்பு நிலைக்கு உயர்த்தியது.
எங்கள் இல்ல நூலகம்
என் மூத்த மகன் ஜ.பாரத், இளையமகன் ஜ.சிவகுரு ஆகிய இருவரையும் வாசிப்பில் ஈடுபடுத்தினேன். அன்பளிப்பாகவும், பணம் கொடுத்தும் வாங்கும் நூல்களை எண்ணிட்டு ஒரு பதிவேட்டில் பதிவு செய்து இல்ல நூலகத்தில் சேர்த்துவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். இப்பணியில் என் இரு மகன்களும் துணைக்கு உள்ளனர். அவர்களும் வரலாற்றுப்புதினம், ஆங்கிலப்புதினம் என்ற பல தலைப்புகளில் நூல்களை வாங்கி எங்களது இல்லத்தில் சேர்த்துள்ளனர். இந்த ஆண்டு இதுவரை மட்டுமே எங்களது நூலகத்தில் 54 நூல்கள் சேர்ந்துள்ளன.
இந்நிலையில் தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு நூல்களை அன்பளிப்பாகத் தர முடிவெடுத்து இன்றுவரை 300 நூல்களை அன்பளிப்பாகத் தந்துள்ளேன். பணி நிறைவு பெறுவதற்குள் (30.4.2017) இன்னும் நூல்களைத் தொடர்ந்து வழங்கவுள்ளேன். 300 நூல்களை வழங்கியமைக்கு துணைவேந்தர் அளித்துள்ள 24.3.2016 நாளிட்ட கடிதத்தை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
அன்புடையீர்,
வணக்கம்.
தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டுள்ள நூல் கொடை இயக்கத்தில் தங்களின் பங்களிப்பாக 300 நூல்களை அன்பளிப்பாக வழங்கியமைக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் வழங்கியுள்ள நூல்கள் அனைத்திலும் தங்கள் பெயர் மற்றும் முகவரி அச்சிடப்படுவதோடு, முறையாகப் பராமரிக்கப்பட்டு ஆய்வாளர்களுக்கும், மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் பயன்படுத்தப்பெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்புடன்,
(ஒம்)...........
தமிழ்ப்பல்கலைக்கழக நூல் கொடை இயக்கம்
தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் அண்மையில் நூல் கொடை இயக்கம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. நவம்பர் 2015இல் தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் தமிழ்ப்பல்கலைக்கழத்துடன் மக்களுக்கு உணர்வுபூர்வமான நேரடித்தொடர்பை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு நூலை அளித்து பல்கலைக்கழகத்துடன் தங்களை இணைத்துக்கொள்ளலாம் என்றும் அதன்மூலம் லட்சக்கணக்கான நூல்கள் ஆய்வு மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்து, நூல் கொடை இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். நூல்களில் கொடையாளர்களின் பெயர்கள் எழுதப்படும் என்றும் 100க்கு மேல் நூல் அளிப்பவர்களின் பெயர் நூலகப்பெயர்ப்பலகையில் குறிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் தற்போது 1,70,327 நூல்களும், 275 காலமுறை இதழ்களும் உள்ளன. இதில் 26,787 நூல்கள் மறைந்த மற்றும் வாழும் அறிஞர்களின் வீடுகளைத் தேடிச் சென்று பணம் கொடுத்தும், அன்பளிப்பாகவும் பெறப்பட்டவையாகும். இதில் 18,000 அரிய நூல்கள் உள்ளன.
அறிவுக்கொடையாக 1 இலட்சம் நூல்களைப் பெற தமிழ்ப்பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ள முயற்சியில் உங்களை இணைத்துக்கொள்ள அன்போடு அழைக்கிறேன். தானத்தில் சிறந்தது அறிவு தானம். நீங்கள் படித்து, பயன்படுத்திய நூல்களைக் கொடையாகத் தர பல்கலைக்கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அவ்வேண்டுகோளை உங்கள் முன் வைக்கிறேன்.
தொடர்புக்கு துணைவேந்தர் செயலகத் தொலைபேசி எண்.04362-227040
நூல் கொடை இயக்கம் தொடர்பான செய்தி நறுக்குகள்
- தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் விரைவில் நூல்கொடை இயக்கம், தினமணி,5 நவம்பர் 2015
- தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு 1 லட்சம் நூல்களை பெறும் நூல் கொடை இயக்கம் தொடங்கப்படும் : துணைவேந்தர் தகவல், தி இந்து, 5 நவம்பர் 2015
- நூல் கொடை இயக்கத்திற்கு தமிழ்ப்பல்கலைக்கழகத்துக்கு 2,120 நூல்கள் வரப்பெற்றுள்ளன : துணைவேந்தர் தகவல், தினகரன், 13 சனவரி 2016