2017இன் சிறந்த சொல் என்ற தலைப்பில் தி இந்து நாளிதழில் 7 ஜனவரி 2018இல் வெளியான என் கட்டுரையைப் படித்து பல நண்பர்கள் கடிதங்கள் எழுதியிருந்தனர். அவை பெரும்பாலும் அகராதிகள், மொழிபெயர்ப்பு, சொல் என்ற அடிப்படையில் அவ்வவற்றின் இன்றியமையா நிலையைப் பற்றி எடுத்துரைத்தன.
அக்கட்டுயைப் படித்த, திருவிடைமருதூரைச் சேர்ந்த திரு தி.சிவசுப்ரமணியன் (80) என்பவர் கட்டுரைக்குப் பாராட்டுத் தெரிவித்துவிட்டு, தான் கண்டுபிடித்த புதிய ஆங்கிலச்சொல்லை ஆக்ஸ்போர்டு அகராதியில் (OED - Oxford English Dictionary) சேர்ப்பது தொடர்பாக வினா எழுப்பியிருந்தார். அழகான கையெழுத்தால் இருந்த அவருடைய கடிதம் அலுவலக முகவரியிலிருந்து திருப்பிவிடப்பட்டு என் இல்ல முகவரிக்கு 13 ஜனவரி 2018 அன்று வந்து சேர்ந்தது.
கடிதம் வந்த நாளன்றே அவரோடு தொலைபேசிவழி தொடர்புகொண்டு நன்றி தெரிவித்தேன்.
தொடர்ந்து ஆக்ஸ்போர்டு அகராதியின் தளத்தில் (https://en.oxforddictionaries.com/) நம்மால் கண்டுபிடிக்கப்பட்ட புதிய சொல்லைத் சேர்ப்பது தொடர்பான நடைமுறையைத் தேடிக் கண்டுபிடித்தேன். அதனை அவருக்குத் தெரிவித்தேன்.
புதிய சொல்லைச் சேர்ப்பது தொடர்பான முறைகளை அத்தளத்தில் Oxford dictionaries FAQ : New words FAQ என்ற பக்கத்தில் காணமுடிந்தது. அதில் வினா விடை உத்தியில் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு அவர்கள் விளக்கமாக மறுமொழி தந்துள்ளனர்.
தொடர்ந்து ஆக்ஸ்போர்டு அகராதியின் தளத்தில் (https://en.oxforddictionaries.com/) நம்மால் கண்டுபிடிக்கப்பட்ட புதிய சொல்லைத் சேர்ப்பது தொடர்பான நடைமுறையைத் தேடிக் கண்டுபிடித்தேன். அதனை அவருக்குத் தெரிவித்தேன்.
புதிய சொல்லைச் சேர்ப்பது தொடர்பான முறைகளை அத்தளத்தில் Oxford dictionaries FAQ : New words FAQ என்ற பக்கத்தில் காணமுடிந்தது. அதில் வினா விடை உத்தியில் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு அவர்கள் விளக்கமாக மறுமொழி தந்துள்ளனர்.
- ஆக்ஸ்போர்டு அகராதியில் புதிய சொற்கள் எவ்வாறு சேர்க்கப்படுகின்றன?
- புதிய சொற்களையும், அதற்கான பொருளையும் எவ்வாறு காண முடியும்?
- ஆங்கில மொழியில் ஒவ்வொரு ஆண்டும் எத்தனை புதிய சொற்கள் இடம்பெறுகின்றன?
- OED/Oxford Dictionaries.com தளத்தில் ஒவ்வொரு ஆண்டும் எத்தனை புதிய சொற்கள் இடம்பெறுகின்றன?
- நான் ஒரு புதிய சொல்லைக் கண்டுபிடித்துள்ளேன். அதனை உங்களுடைய அகராதியில் சேர்த்துக்கொள்ள முடியுமா?
மேற்கண்டவற்றில் இறுதி கேள்விக்கு கீழ்க்கண்ட மறுமொழியைத் தந்துள்ளனர்.
பொதுமக்கள் எங்களுக்கு, தாம் கண்டுபிடித்த சொற்களை அடிக்கடி அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள். அதனை எங்களது அகராதிகளில் சேர்த்துக்கொள்ளமுடியுமா என்று கேட்கிறார்கள். துரதிருஷ்டவசமாக, இக்கேள்விக்கான எங்களின் மறுமொழி இல்லை என்பதேயாகும். ஏனென்றால் முறைப்படியாக அந்த மொழியில் நுழைந்ததாகக் கருதப்படுகின்ற சொல்லையே நாங்கள் சேர்த்துக்கொள்கிறோம். இதற்கு சான்றாதாரமாக நாங்கள் எங்களது தகவல் தரவுதளங்களை (database) நாடுகிறோம். அதனடிப்படையில் மதிப்பிடுகிறோம். இடைவெளியினை நிரப்பும் நிலை அல்லது புதிய ஒன்றை விளக்குதல் என்ற நிலையில் சில புதிய சொற்கள் மொழியின் முக்கிய அங்கமாக மாறிவிடுகின்றன. உதாரணமாக இவ்வாறாகக் கண்டுபிடிக்கப்பட்ட சொற்களாக quark, spoof மற்றும் hobbit போன்ற சொற்கள் உள்ளிட்டவற்றைக் கூறலாம்.
இதனடிப்படையில் நோக்கும்போது புதிதாக நம்மால் கண்டுபிடிக்கப்படுகின்ற சொற்கள் அகராதியில் இடம்பெறுவது சற்று சிரமமே என்று தோன்றுகிறது. இருந்தபோதிலும் அகராதியின் முயற்சியை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.
மேற்கண்ட அனைத்து விவரங்களையும் தட்டச்சு செய்து, உரிய பக்கங்களை அச்செடுத்து அவர் படிக்க வசதியாக அவருக்கு உரிய முகப்புக்கடிதம் எழுதி மறுமொழியினை அன்றே அனுப்பினேன். இவர்களைப் போன்ற ஆர்வமுள்ள வாசகர்களின் எழுத்துக்கள் என்னை மென்மேலும் எழுதவைக்கின்றன என்பதைப் பெருமையாக நினைக்கிறேன். ஆங்கில அகராதியில் புதிய சொல்லைச் சேர்ப்பது தொடர்பாக சிந்திக்க வைத்த அவருக்கு நன்றி.