22 April 2016

நண்பர் கவிஞர் வைகறை

சிலருடைய நட்பு மனதில் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்திவிடும் என்பது அனுபவம் தந்த உண்மை. அந்த வகையில் நண்பர் வைகறையின் நட்பு என்பதானது எங்களுக்கு வலைப்பூ மூலமாகவே அமைந்தது. திரு கஸ்தூரிரங்கன் முகநூலில் வைகறை இயற்கையெய்திய செய்தியைப் பார்த்தபோது நம்ப முடியவில்லை. மிகக் குறுகிய காலமே அவருடனான நட்பு எங்களுக்கு. வலைப்பதிவுகள் மூலமாகவே நாங்கள் அறிமுகமானோம். அவருடைய இழப்பை அறிந்த நண்பர்கள் பரிமாறிக்கொள்ளும் செய்திகளைப் பார்க்கும்போது அவரிடம் அவர்கள் வைத்திருந்த அன்பை உணரமுடிகிறது. வீதி நிகழ்வுகளைப் படிக்கும்போதும், அந்நிகழ்வுகளைப் பற்றிய ஏற்பாடுகளைக் கண்டபோதும் அவருடைய ஈடுபாட்டினை நாங்கள் உணர்ந்தோம். 






மந்தகாசப் புன்னகை என்பார்களே அந்த புன்னகை, எப்பொழுதும் சுறுசுறுப்பு, அழகான ஆழமான, அர்த்தமுள்ள கவிதைகள், அனைவரையும் ஈர்க்கின்ற அவருடைய பழகும் முறை, நிதானமான பேச்சு என்ற நிலையில் அவரை புதுக்கோட்டை வலைப்பதிவர் விழாவில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.  

இயற்கையெய்தும் அளவு அவருக்கு வயதாகிவிட்டதா என்ன? அவர் அண்மையில் வீதியில் படித்த கவிதையைப் பற்றி நண்பர்கள் பகிர்ந்ததைப் படித்தபோது அவருக்கு முன்கூட்டியே தெரிந்திருந்ததோ என்று யோசிக்கத் தோன்றுகிறது. 

இளம் வயதில் மரணத்தைப் பற்றி பேசும்போது நீலவானம் திரைப்படத்தில் கதாநாயகி கூறுவார், "ஆறில் சாகலாம், அறியா வயசு. அறுபதில் சாகலாம் அனுபவித்த வயசு......". இவருடைய வயது இன்னும் சாதிக்க வேண்டிய வயது. அதை நினைக்கும்போது நமக்கு இன்னும் வேதனை மேலிடுகிறது.

வலையுலக நட்பில் இவ்வாறான இழப்புகளைத் தொடர்ந்து நாம் எதிர்கொண்டு வருகின்றோம். சமுதாய நலனில் அதிக அக்கறையுள்ளோர்  உடல் நலத்திற்கும் சற்றே முக்கியத்துவம் கொடுத்திருக்கவேண்டும் என்பதை இவரது மரணம் எடுத்துக்காட்டுகிறது. வரும் எதையும் நம்மால் தடுத்து நிறுத்த முடியாது. இருந்தாலும் இவ்வகையிலான இவரது பிரிவு நண்பர்களுக்கு பேரிழப்பாகும். 

அவரைப் பிரிந்து வாழும் அவருடைய குடும்பத்தாருக்கும், பிற நண்பர்களுக்கும் நம் ஆழ்ந்த இரங்கல்களைச் செலுத்துவோம். அவரது எழுத்தின்மூலமாக அவர் என்றும் நம்முடன் வாழ்ந்துகொண்டேயிருப்பார். கவிதையும் எழுத்தும் இருக்கும்வரை அவரது எழுத்தும் இருப்பும் பேசப்படும் என்பதே உண்மை.

புகைப்படங்கள் நன்றி : தேவதா தமிழ் முகநூல்

16 April 2016

பண்டைத் தமிழக வரைவுகளும் குறியீடுகளும் : முனைவர் இராசு.பவுன்துரை

முனைவர் இராசு. பவுன்துரை (6.1.1953-19.3.2014) எழுதிய பண்டைத் தமிழக வரைவுகளும் குறியீடுகளும் என்ற நூல் பண்டைத் தமிழகத்தின் தொன்மை வரலாற்றையும் பழந்தமிழரின் வாழ்வியற் பண்பாட்டையும் அறியத்தக்க அரிய சான்றுகளை ஆவணப்படுத்தும் நோக்கில் அமைந்துள்ள நூலாகும். 

நூலாசிரியர் நூலின் முன்னுரையில் பின்வருமாறு கூறுகிறார். "சங்க காலத் தமிழக வரலாறு, கலை மற்றும் பண்பாடு குறித்து முழுமையாக அறிவதற்கும் எழுதுவதற்கும் பண்டைத் தமிழக வரைவுகள், குறியீடுகள் அடிப்படைச் சான்றுகளாக உள்ளன. பண்டைத் தமிழக வரைவுகள் என்பன கோட்டு வரைவு, வடிவம், படிமம் என்னும் வளர்ச்சியை உள்ளடக்கமாகவும் குறியீடுகள் என்பன வரிவடிவங்கள், முத்திரை வடிவங்கள், இயற்கை வரைவுகள், செயற்கை வரைவுகள் என்னும் உத்தியை உள்ளடக்கமாகவும் பெற்றுள்ளன. ... பண்டைத் தமிழக வரைவுகளும் குறியீடுகளும் என்ற ஆய்வுக்களம் தமிழர் நாகரிகத்தின் தொன்மைச் சிறப்பு, பண்பாடு, மொழி பற்றிய சிந்தனைகளை மேலும் சிறப்பாக நுணுகிக் காணும் வாய்ப்பாக அமைக்கப்பட்டுள்ளது. சுருக்கமாகக் கூறின் பண்டைய தமிழரின் படைப்புச் சான்றுகளை மட்டும் முதன்மைப்படுத்தி அதன் வழித் தமிழரின் அறிவியல், சுற்றுச்சூழல், வாழ்வியல் கூறுகள் விளக்கம் காணப்படுகின்றன...வரைவுகள், வடிவங்கள், படிமங்கள் ஒன்றை ஒன்றுச் சார்ந்து எவ்வாறு மானுடம் பெற்ற ஆற்றல் அறிவுடன் இணைந்து வளர்ந்து வந்திருக்கின்றன என்பதைக் கூறும் தொகுப்பு முயற்சியாகவும் இந்த ஆய்வு அமைகிறது".

"தொன்மைத் தமிழகத்தின் தொல்லியல் ஆவணங்களாகக் கிடைத்துள்ள பெருங்கற்படைக் காலச் சின்னங்களிடையேயும், பழங்கற்காலம் மற்றும் புதிய கற்காலத்தில் வாழ்ந்த வேட்டைத் தொழிலைக் கொண்டிருந்த மக்கள் குகைகளிலும் பாறைகளிலும் விட்டுச்சென்ற பாறை ஓவியங்கள், பாறைக்கீறல்களிடையேயும் அமைந்துள்ள வரைவுகளும் குறியீடுகளும் கண்டறியப்பட்டு இந்நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன" என்று நூலின் அணிந்துரையில் உலகத்தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் குறிப்பிடுகிறார். 

மேலும் அவர், "பெருங்கற்படைக் காலச்சின்னங்களில் குறிப்பிடத்தக்கவையான செத்தவரை, கீழ்வாலை, பெருமுக்கல் போன்றவற்றில் காணப்படும் மனித மற்றும் விலங்கினங்களையும் அவற்றுள் காணப்படும் குறியீடுகளையும் அவற்றைப் போன்றவற்றுடன் இன்னும் சேர்க்கத்தக்க சான்றுகளான திருமால்பாடி பாறை முற்றத்துப் பழங்கால மன்னர்களின் உருவங்கள் மற்றும் விலங்குகள், அவற்றைக் கல் அகல்கள் ஏற்றி வழிபடும் சடங்குகள், பெருமுக்கல், செஞ்சி, உத்தமபாளையம் போன்ற இடங்களில் அமைந்துள்ள நீர்ச்சுனைகளில் ஈமச்சடங்கின் போது ஏற்பறப்பட்டட கல் அகல்கள், அப்பகுதிகளில் இடம்பெறும் எழுத்துக்கோடுகள் போன்றவற்றையும் ஆராய்வோர் தொல்பழந்தமிழ்நாட்டின் வரலாற்றையும் பழந்தமிழர் பண்பாட்டையும் இன்னும் பலவாக விரித்துக் கூறும் பாங்கைப்பெறுவர் என்பதில் ஐயமில்லை" என்று புகழாராம் சூட்டுகிறார்.

இந்நூல் குறியீடுகளும்  ஆய்வு அணுகுமுறைகளும், தமிழகப் பாறை வரைவுகளும் குறியீடுகளும், தொல் வடிவங்களும் குறியீடுகளும், காசுகளும் குறியீடுகளும், மட்பாண்ட வரைவுகளும் குறியீடுகளும், தமிழகக் குறியீடுகளும் சிந்துவெளி நாகரிகமும், சிந்துவெளிக் குறியீடுகளில் காணும் ஒப்புமைகள், தமிழகக் குறியீடுகளும் பண்டைய அயலகமும், குறியீடுகளும் மொழியும், நிறைவுரை என்ற தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது. சிறப்பான துணை நூல் பட்டியல் நூலுக்கு அழகு சேர்க்கிறது. நம் பழம்பெருமையை உணர்த்தும் இவ்வரிய நூலை வாசிப்போமே. 

நூல்  பண்டைத் தமிழக வரைவுகளும் குறியீடுகளும்
ஆசிரியர் முனைவர் இராசு பவுன்துரை
பதிப்பகம் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாவது முதன்மைச்சாலை, சிஐடி வளாகம், சென்னை 600 113 (தொலைபேசி 044 2254 2992)
ஆண்டு 2004
பக்கங்கள் 270 + x  

முனைவர் இராசு பவுன்துரை அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக்குறிப்பினை முனைவர் இளங்கோவன் அவர்களுடைய வலைப்பூவில் காணலாம்.
-----------------------------------------------
18 ஏப்ரல் 2016 அன்று தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலில் திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.






19.4.2016 அன்று மேம்படுத்தப்பட்டது.

01 April 2016

ஃபுளோரிடாவிலிருந்து ஹவானாவுக்கு.. : தி இந்து

பீடல் காஸ்ட்ரோவை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், அமெரிக்கா மற்றும் கியூபாவின் புதிய நட்பு, அமெரிக்கா அதிபரின் கியூபா பயணம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஃபுளோரிடாவிலிருந்து ஹவானாவுக்கு.. என்ற தலைப்பிலான எனது கட்டுரை இன்றைய (1 ஏப்ரல் 2016) தி இந்து நாளிதழில் வெளியாகியுள்ளது. அதனைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.

ஃபுளோரிடாவிலிருந்து ஹவானாவுக்கு..  

பிடல் காஸ்ட்ரோவுக்கு முடிவுரை எழுத முயன்ற சக்திஇப்போது நட்பு மூலமாக புதிய முன்னுரையை எழுத ஆரம்பிக்கும்விதமாக மாறியிருப்பதை அமெரிக்க அதிபரின் கியூபா பயணம் தெரிவிக்கிறது.
எண்ணங்களின் பிரதிபலிப்புகள் என்று ஒரு கட்டுரையை 2009-ல் பிடல் வெளியிட்டார். கம்யூனிஸ்ட் கட்சியோ அரசோ எடுக்கும் முடிவுகளில் நான் தலையிடப்போவதில்லை” என்று அதில் குறிப்பிட்டார். அதில் ஒபாமாவுக்குப் பெரும் புகழாரத்தையும் பிடல் காஸ்ட்ரோ சூட்டியிருந்தார். கியூப - அமெரிக்க உறவில் இது ஒரு தொடக்கப்புள்ளி என்றாலும்பிடல் காஸ்ட்ரோவின் இந்த நகர்வை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால்பிடல் காஸ்ட்ரோவைக் கொல்ல அமெரிக்க உளவுத் துறையால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இன்றைக்கும் உலகத்தால் மறக்கப்பட்ட கதைகள் அல்ல.


கொலை முயற்சிகள்
1959 புரட்சிக்குப் பின் ஆட்சிக்கு வந்தார் காஸ்ட்ரோ. அப்போது கியூபா உளவுத் துறையின் தலைமைப்பொறுப்பில் இருந்தவர் எஸ்கலன்டே. 1959முதல் 2000 வரை காஸ்ட்ரோவைக் கொல்ல 634 முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் அவற்றில் 168 முயற்சிகள் வெற்றி பெற்றிருக்க வாய்ப்புள்ளவை என்றும் அவர் எழுதிய எக்ஸிகியூட்டிவ் ஆக்‌ஷன்எனும் புத்தகத்தில் கூறுகிறார்.

காஸ்ட்ரோவைக் கொல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுஅவர் குடிக்கும் சுருட்டில் வெடி மருந்தை வைத்து அவரது முகத்தைச் சிதறவைப்பது. 1985-ல் காஸ்ட்ரோ சுருட்டுப் பிடிக்கும் பழக்கத்தைக் கைவிட்டார். ஒரு முறை பேனாவில் நச்சுத்தன்மை வாய்ந்த ஹைபோடெர்மிக் ஊசி செருகப்பட்டிருந்தது. ஒரு முறை அவர் கடலில் நீந்தும்போதுஅதிகமான கரீபியன் மெல்லுடலிகளைப் பயன்படுத்தி அவரைக் கொல்லும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஒரு முறை கடலுக்கு அடியில் ஒரு பெரிய சங்கு ஓட்டில் வெடிகுண்டைப் பொருத்தி வெடிக்கச் செய்யும் முயற்சி நடந்திருக்கிறது. ஒரு முறை அவருடைய முன்னாள் காதலியான மரிட்டா லோரன்ஸை வைத்து அவரைத் தீர்த்துக்கட்டும் முயற்சி நடந்திருக்கிறது. காஸ்ட்ரோவைக் கொல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பான திரைப்படத்தை இயக்கிய பீட்டர் மூர் அதனைப் பற்றிக் கூறுவதைப் பார்ப்போம். அமெரிக்க உளவுத் துறையால் அந்தப் பெண்ணிடம் விஷ மாத்திரைகள் தரப்பட்டன. அவள் அவற்றைக் குளிர்ந்த ஜாடி ஒன்றில் வைத்துக்கொண்டாள். குளிர்ச்சியின் காரணமாக அந்த மாத்திரைகள் கரைந்துவிடவேகாஸ்ட்ரோவின் வாயில் குளிர்ந்த கிரீமை வைக்க முயற்சித்து அந்த முயற்சியையும் அவள் கைவிட்டாள். அவள் தன்னைக் கொல்ல வந்திருக்கிறாள் என்பதை உணர்ந்த காஸ்ட்ரோ,தன்னைக் கொல்வதற்காக அவளிடம் தன்னுடைய கைத்துப்பாக்கியைத் தருகிறார். அப்போது அவள், ‘என்னால் முடியாது பிடல்’ என்று கூறிவிட்டாள்” என்கிறார் அவர். இவையெல்லாம் தவிரமாஃபியா கும்பல்கள் மூலம் துப்பாக்கிச்சூடுவெடிகுண்டு வீச்சு மூலம் அவரைக் கொல்லும் முயற்சிகள் காலமெல்லாம் நடந்திருக்கின்றன.

இந்த முயற்சிகள் காஸ்ட்ரோவின் வாழ்க்கை முறையையே மாற்றின. அதிபர் பதவிப் பொறுப்பேற்ற ஆரம்பக் காலங்களில் அவர் தனியாகத் தெருவில் நடந்துசெல்வதை வழக்கமாகக்கொண்டிருந்தார். ஆனால்,நாளடைவில் அப்பழக்கத்தைக் கைவிட்டார். பின்னர்அவரைப் போன்ற மாதிரிகள் பயன்படுத்தப்பட்டனர். பின்னர்அவர் கியூபாவில் 20 வேறுபட்ட முகவரிகளில் தங்க ஆரம்பித்தார்.

உண்மையில் பார்க்கப்போனால்அமெரிக்கா தன் ஜென்ம விரோதியான காஸ்ட்ரோவைக் கொல்லும் முயற்சியைக் கைவிட்டுவிட்டாலும்கூட கியூபா பாதுகாவலர்கள் மிகவும் எச்சரிக்கையாகவே நடந்துகொள்கிறார்கள்.

கைகுலுக்கிய நட்பு

2013 டிசம்பரில் நெல்சன் மண்டேலாவின் இறுதிச்சடங்கின்போது கியூப அதிபர் ரால் காஸ்ட்ரோவும் ஒபாமாவும் கைகுலுக்கிக்கொண்டனர். நெடுநாள் பகையை மறந்து இரு நாடுகளும் நட்பு பேணுமா என்ற வினாவை எழுப்பியது இந்தக் கைகுலுக்கல்.

டிசம்பர் 2014-ல் ஒபாமாவும் ரால் காஸ்ட்ரோவும் 45 நிமிடங்கள் தொலைபேசியில் முதன்முதலாகப் பேசினர். இரு நாடுகளின் நட்புப் பாராட்டலின் தொடக்கமாக அமைந்தது. ஆகஸ்ட் 2015-ல் அமெரிக்ககியூப தூதரகங்கள் 54 ஆண்டுகளுக்குப் பின்னர் திறக்கப்பட்டன. மார்ச் 2016-ல் 88ஆண்டுகள் கழித்துகியூபாவுக்கு வரும் அமெரிக்க அதிபர் என்ற பெருமையைப் பெற்றார் ஒபாமா. அதிக எதிர்பார்ப்புகளுக்கிடையே அதிபர் ஒபாமாவின் கியூபா பயணம் அமைந்தது. கியூபா மக்களுடனான தனது சந்திப்பை வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்று கூறி பெருமைப்பட்டுக்கொண்டார். கியூபாவில் ஒரு மாற்றம் நிகழப்போகிறது. ரால் காஸ்ட்ரோ அதனைப் புரிந்துகொள்வார் என நினைக்கிறேன்” என்றார் ஒபாமா. கியூபாவுடனான உறவைப் புதுப்பித்துக்கொள்ளும் வகையில் கடந்த ஓராண்டில் பல திட்டங்களை மேற்கொண்டார் ஒபாமா. அவற்றுள் பயணத் தடைகளில் சில மாற்றங்கள்அமெரிக்க வங்கிகளின் வழியான செயல்பாட்டில் தடை நீக்கம்அமெரிக்க வங்கிகளில் கியூபா நாட்டவர் வங்கிக் கணக்குத் தொடங்க அனுமதிநேரடி கடிதப் போக்குவரத்துவணிக நோக்கிலான விமானங்கள் செயல்பாடுஅமெரிக்கச் சிறைகளில் உள்ள கியூபா கைதிகள் விடுதலை. அவ்வாறே கியூபாவிலிருந்த அமெரிக்கர் அலன் கிராஸ் விடுதலைஅமெரிக்கா வைத்துள்ள தீவிரவாத ஆதரவாளர்கள் பட்டியலிலிருந்து கியூபா நீக்கம் உள்ளிட்டவை அடங்கும்.

புதிர் கடிதம்

அமெரிக்க அதிபரின் கியூபா பயணமும்அவருக்குக் கிடைத்த வரவேற்பும்,உறவை மேற்கொள்ள இரு நாடுகளும் மேற்கொள்ளும் முயற்சிகளும் சாதாரண நிகழ்வாசாதனையா என்று விவாதிக்கும் இந்தச் சூழலில்பிடல் காஸ்ட்ரோ ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் அமெரிக்க அதிபரின் பேச்சுகள் தேனில் தோய்க்கப்பட்டவைஅமெரிக்க அதிபரிடமிருந்து இவ்வாறான வார்த்தைகளைக் கேட்கும்போதே மாரடைப்பு வந்துவிடும்என்று கூறியுள்ளார். காஸ்ட்ரோ தன் கடிதத்தில், 1959-ல் கியூபா விடுதலையானது தொடங்கி இன்றைய நிலை வரை விவாதிக்கிறார். ஒபாமா கியூப அரசியலின் கோட்பாடுகளைப் பற்றிய தம் எண்ணங்களைக் கூறுகிறாரே தவிரஅதனைப் பற்றி விரிவாக விவாதிக்கவில்லை என்கிறார். ஒபாமாவின் நல்லெண்ணத்தை பிடல் காஸ்ட்ரோ பாராட்டவே செய்கிறார். ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தால்ஒபாமாவின் நடத்தை சரியாக உள்ளது என்கிறார். அதே நேரத்தில்தன்னலம் இல்லாத கியூப நாட்டு மக்கள் தங்கள் நாட்டின் பெருமைகளையும்கல்விஅறிவியல் மற்றும் பண்பாட்டோடு இயைந்த அதன் வளத்தையும் விட்டுக்கொடுப்பார்கள் என்ற மாயையில் யாரும் இருந்துவிடக் கூடாது என்றும் கூறுகிறார்.

ஃபுளோரிடாவிலிருந்து ஹவானா 90 மைல்கள்தான். ஆனால்நாம் இந்த தூரத்தைக் கடப்பதற்கு அதிக தூரம் பயணிக்க வேண்டியிருந்தது” என்றார் ஒபாமா. உண்மைதான். ஆனால்அமெரிக்கா - கியூபா உறவுப் பயணத்தில்,அமெரிக்கர்கள் எடுத்துவைக்க வேண்டிய அடிகளே அதிகம் என்றே தோன்றுகிறது!

பா.ஜம்புலிங்கம்முனைவர்தமிழ்ப் பல்கலைக்கழகக் கண்காணிப்பாளர்.
 தொடர்புக்கு: drbjambulingam@gmail.com


----------------------------------------------------------------------------
தி இந்து நாளிதழில் இக்கட்டுரையை கீழ்க்கண்ட இணைப்பில் வாசிக்க அழைக்கிறேன்.
ஃபுளோரிடாவிலிருந்து ஹவானாவுக்கு..  






----------------------------------------------------------------------------

பிடல் காஸ்ட்ரோ/கியூபா தொடர்பான முந்தைய கட்டுரைகளைப் பின்வரும் இணைப்பில் வாசிக்கலாம்:
3 ஏப்ரல் 2016அன்று மேம்படுத்தப்பட்டது.