30 December 2021

2021ஆம் ஆண்டின் சிறந்த சொல்

2021இன் சிறந்த சொல்லை (WOTY/Word of the year) ஆங்கில அகராதிகளும், டிஸ்னரி இணையதளமும் தெரிவு செய்துள்ளன. இவ்வாண்டின் சிறந்த ஆங்கிலச் சொற்களையும், அதற்கான  பின்னணியையும் காண்போம். 

ஆக்ஸ்போடு அகராதி

2021இன் சிறந்த சொல்லாக Vax (தடுப்பூசி) என்ற சொல்லை ஆக்ஸ்போர்டு அகராதி தேர்ந்தெடுத்துள்ளது. ஆக்ஸ்போர்டு அகராதியியலாளர்கள் ஆங்கில மொழித் தொகுப்பினைத் தேடியபோது அச்சொல் அவர்களால் குறிப்பிட்ட வகையில் அதிகமாக ஈர்த்ததாகவும், இந்த ஆண்டு வரை இச்சொல் மிகவும் அரிதாகவே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், செப்டம்பர் வாக்கில் அதன் பயன்பாடானது கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 72 பங்கு அதிகரித்தாகவும் இவ்வகராதி கூறியுள்ளது. இச்சொல் vax sites (தடுப்பூசி போடப்படும் இடங்கள்), vax cards (தடுப்பூசி அட்டைகள்), to getting vaxxed (தடுப்பூசி போடப்படுதல்), being fully vaxxed (முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டிருத்தல்) என்பன பல சார்புச்சொற்களையும் உருவாக்கியுள்ளதாகவும், அவை அலுவல்சாரா முறையில் பயன்படுத்தப்படுவதாகவும், இச்சொல்லைத் தவிர வேறு எந்தசொல்லும் கடந்த ஆண்டு சூழலை இந்த அளவிற்கு ஈர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என்கிறது இவ்வகராதி. 

 கேம்பிரிட்ஜ் அகராதி


2021இன் சிறந்த சொல்லாக perseverence (விடாமுயற்சி) என்ற சொல்லைத் தேர்ந்தெடுத்து இன்று அறிவித்துள்ளதுகேம்பிரிட்ஜ் அகராதி. Perseverance என்றால் ஒன்றை சாதிக்க, நிறைவேற்ற சில சமயங்களில் ஆதிக நேரம் ஆனாலும்கூட, மேற்கொள்ளப்படுகின்ற தொடர் முயற்சி எனப்படும் என்றும் 2021இல் உலகம் முழுவதும் கோவிட்19 மற்றும் பல பிரச்னைகளை வாழ்வில் எதிர்கொண்டபோது தொடர்முயற்சி எடுத்து அதனை எதிர்கொண்டனர் என்றும் இவ்வகராதி கூறுகிறது. "கடினமான சூழலை மக்கள் எதிர்கொள்ளும்போது அவர்களைப் புகழ்கிறோம். அவ்வகையில் இச்சொல் ஓர் நேர்மறைச்சொல்லாகிறது. கேம்பிரிட்ஜ் அகராதியின் வலைப்பக்க வாசகர்கள் தம் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள அதனைத் தொடர்ந்து வாசித்தும், பகிர்ந்தும், அதில் இடப்படுகின்ற பதிவுகளுக்கு மறுமொழி தந்தும் தம் மன உறுதியைக் கடைபிடித்துவந்துள்ளதைக் காண்கிறோம். வாசகர்களின் ஆதரவு எங்களுக்கு வெற்றியை ஈட்டித் தந்துள்ளது. நீங்கள் எங்கள் அகராதியை நாடுவதற்குக் காரணம் நாங்கள் தருகின்ற விளக்கங்கள் குறிப்பாக ஆங்கிலம் கற்போருக்காகவே அமைந்துள்ளன. அவை ஆங்கிலம் எந்த வகையில் உண்மையாகப் பயன்படுத்தப்படுகிறது என்ற ஆழமான ஆய்வின்மூலமாகவும் அமைக்கப்பட்டுள்ளன. கற்போரால் இச்சொல் அதிகமாகப் பயன்படுத்தாவிட்டாலும், உலகளாவிய நிலையில் இச்சொல்லானது 2021இல் 2,43,000 முறை பயன்படுத்தப்பட்டதை எங்களின் புள்ளிவிவரப்படி அறியமுடிகிறது. செவ்வாய்க்கிரகத்தில் நாசாவின் ரோவர் தரையிறங்கியபின்னர், 18 பிப்ரவரி முதல் 24 பிப்ரவரி வரை 30,847 முறை இச்சொல் தேடப்பட்டது. இச்சூழலில் 2021இன் சிறந்த சொல்லாக இச்சொல் தேர்ந்தெடுக்க இக்காரணிகள் துணையாக இருந்தன" என்கிறது இவ்வகராதி. நாங்கள் பயன்படுத்துகின்ற மொழியானது எந்த அளவிற்கு நடப்பு நிகழ்வுகளில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை இவை போன்ற காரணிகளே நிர்ணயிக்கின்றன.

மெரியம் வெப்ஸ்டர் அகராதி

2021இன் சிறந்த சொல்லாக Vaccine (தடுப்பூசி) என்ற சொல்லை மெரியம் வெப்ஸ்டர் அகராதி தேர்ந்தெடுத்துள்ளது. "நம் மதிப்பீடுகளை, எண்ணங்களை, ஆசைகளை வெளிப்படுத்த நாம் தினமும் சொற்களைப் பயன்படுத்துகிறோம். கருத்தியல்ரீதி்யிலான மோதலில் அவை முக்கியமான பங்காற்றுகின்றன. 2021இல் இதுதான் நிகழ்ந்தது. 2020இல் வாழ்வில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்திய கொரோனா பரவலானது அரசியல்ரீதியான விவாதத்தையும், பிரிவிற்கான ஓர் ஆதாரத்தையும் உண்டாக்கியது. நம் காலத்திய பெரிய அறிவியல் நிகழ்வானது விவாதப்பொருளாக மாறியது. இச்சூழலில் தடுப்பூசி என்ற சொல் முக்கியமான இடத்தைப் பெறுகிறது" என்கிறது மெரியம் வெப்ஸ்டர் அகராதி.

 

காலின்ஸ் அகராதி

காலின்ஸ் அகராதி NTF என்ற சொல்லை இவ்வாண்டின் சிறந்த சொல்லாக அறிவித்துள்ளது. Non-fungible token என்பதன் சுருக்கமான NFT டிஜிட்டல் வடிவிலான அடையாளம் ஆகும். அதிகம் நாடப்படுகின்ற ஒளிப்படங்கள், வீடியோக்களுக்காக வர்த்தகத்தின்போது பரிமாறப்படுகின்ற டிஜிட்டல் விலைமதிப்பினை இது குறிக்கிறது. இதனை டிஜிட்டல் சொத்து என்று கூறலாம். .இவ்வகராதி இவ்வாண்டு தேர்ந்தெடுத்த 10 சொற்களில் இச்சொல் உள்ளிட்ட தொழில்நுட்பம் சார்ந்த மூன்று சொற்களும் அடங்கும் என்கிறது இவ்வகராதி.

டிஸ்னரி இணைய தளம்


2020ஆம் ஆண்டின் துருவப்படுத்தப்பட்ட நிலையும், இருத்தல் அல்லது சர்வதேசப்பரவல் காரணமான தாக்கங்களும் அவற்றை எதிர்கொள்ள பல வழிமுறைகளை நாம் 2021இல் கையாண்ட வகையில், alllyship (கூட்டு அல்லது கூட்டணி) என்ற சொல்லைத் தெரிவு செய்துள்ளது டிஸ்னரி இணையதளம். "ஓர் ஆண்டில் காணப்பட்ட பரவலை ஒற்றைய சொல்லில் அடக்கிவிடமுடியாது. இருந்தபோதிலும் இச்சொல் பலவற்றுடன் பின்னிப்பிணைந்த ஒரே சொல்லாகும். இந்த ஆண்டின் சிறந்த சொல்லாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இச்சொல் எங்கள் அகராதிக்குப் புதியது என்ற வகையில் சிறப்பினைப் பெறுகிறது. சமுதாயத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ள பாதிக்கப்பட்ட அல்லது குறிப்பிட்ட வகையிலான பிரிவிற்காக குழுவின் ஓர் உறுப்பினர் என்ற நிலையிலன்றி ஒன்றிணைந்து தம் தலைமைப்பொறுப்பிலும், பார்வையிலும் செயல்படுவதை இச்சொல் குறிக்கிறது" என்கிறது இவ்வகராதி.

2020இன் சிறந்த சொல்லாக "க்வாரன்டைன்" (கேம்பிரிட்ஜ்), "பான்டெமிக்" (மெரியம் வெப்ஸ்டர் மற்றும் டிஸ்னரி இணையதளம்),  "லாக் டவுன்" (காலின்ஸ்) ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டன. சிறந்த சொல்லைத் தெரிவு செய்ய இயலா நிலையைக் கூறியிருந்தது ஆக்ஸ்போர்டு அகராதி.

கொரோனா தீநுண்மியின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதை உணர்த்தும் வகையில் 2021இலும் அது தொடர்பான சொற்கள் அகராதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தமிழில் இவ்வாறாக ஆண்டின் சிறந்த சொல் தேர்ந்தெடுக்கப்படுகின்ற ஒரு முயற்சி மேற்கொள்ளப்படும் நாள் விரைவில் வரும் என நம்புவோம்.      


துணை நின்றவை: மேற்கண்ட அகராதிகளின் தளங்கள்

20 December 2021

சாசனம் அரையாண்டிதழ் 4, 2021

சாசனம் அரையாண்டிதழ் 4, 2021 பிராமி வரி வடிவம் தொடர்பாக வெளிவரவுள்ள மூவிதழ் வரிசையில் முதல் இதழ் என்கிறது இதனை வெளியிட்டுள்ள கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம்.




தமிழியின் காலம்:அண்மைக்கால கரியமில காலக்கணிப்புகள், தமிழ்பிராமி எழுத்துப்பொறிப்புகளும் ஆட்பெயர்களும், ஒரு பண்டைய தமிழ்க்கல்வெட்டு குறித்த மீள்வாசிப்பு, இலங்கையில் பிராமிக் கல்வெட்டுகள், இலங்கைப் பிராமிக் கல்வெட்டுகள் வெளிப்படுத்தும் சமய நிலை, இலங்கையில் தமிழ் அரச மரபின் தோற்றத்தை அடையாளப்படுத்திக் காட்டும் பிராமிச் சாசனங்கள், சங்க கால நெடுநிலை நடுகற்கள், உருவப்பொறிப்புள்ள சாதவாகனர் காசுகள், பெரிய தடாகம் மட்கலப்பொறிப்பு, நாயக்கர் கால இலக்கியங்கள் மற்றும் சிற்பங்கள் காட்டும் அணிகலன்களும் ஆடைகளும் என்ற தலைப்புகளில் தமிழ்க் கட்டுரைகளையும், Measuring Pearl: Text, Practice and Tradition of Pearl Measuring, The origin of the Tamil script, Portrait coins of the Satavahanas, Palaeographical study of Kushana Inscriptions, New coin with title "Pravuda Devaraya" of Vijayanagara Dynasty, Preserving Tamil Scripts: The Way towards their Digitization, Archival and Outreach, The Rediscovery of Brahmi, The Invention of the Brahmi Script என்ற தலைப்புகளில் ஆங்கிலக் கட்டுரைகளையும் கொண்டுள்ள இவ்விதழில் உரிய ஒளிப்படங்களும், வரைபடங்களும், அட்டவணைகளும் இடம்பெற்றுள்ளன. இவையனைத்தும் வாசகர்களை நிகழ்விடத்திற்குக் கொண்டு செல்கின்ற உணர்வினைத் தருகின்றன.

துறைசார்ந்த சான்றோர்கள், தொல்லியல் அறிஞர்கள், வரலாற்றறிஞர்கள், ஆய்வாளர்களின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ள இவ்விதழ் துறைசார் ஆய்வாளர்களுக்கும், ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்கின்ற ஆய்வாளர்களுக்கும் ஒரு முக்கியமான ஆதாரமாக அமையும். இவ்விதழ் கல்லூரி, பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவன நூலகங்களில் இடம்பெற வேண்டிய இதழாகும். முகநூல் தொடங்கி பல தளங்களில் பல கண்டுபிடிப்புகளை தமிழுலகிற்கு அளித்துவருகின்ற வரலாற்று ஆர்வலர்களுக்கும், மாணவர்களுக்கும், வருங்கால வரலாற்றறிஞர்களுக்கும் இது ஒரு கையேடாக அமையும். அரியதோர் துறையில் கட்டுரைகளைக் கொண்டுள்ள இவ்விதழையும், அடுத்தடுத்து இப்பொருண்மையில் வெளிவரவுள்ள இதழ்களையும் வாங்கிப் பயன் பெற அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.

சிறந்த தலைப்புகளில் கட்டுரைகளை வழங்கியுள்ள கட்டுரையாளர்களுக்கும், தேர்ந்தெடுத்தக் கட்டுரைகளை செறிவாகவும், முறையாகவும் ஒருங்கிணைத்து உரிய இடங்களில் ஒளிப்படங்களையும், அட்டவணைகளையும் இணைத்து, பதியப்படும் வரலாறு நீண்ட காலத்திற்குப் பாதுகாக்கப்படவேண்டும் என்ற நன்னோக்கில் இதழ் முழுமையையும் உயர்தர வழவழப்பான தாளில் அச்சிட்டு வழங்கியுள்ள கிருஷ்ணகிரி மாவட்ட தொல்லியல் ஆய்வு மையத்திற்கும், மதிப்புறு ஆசிரியர் முனைவர் மனோகரன், மதிப்புறு இணையாசிரியர் பொறியாளர் குமார், பதிப்பாளர் திரு சுகவன முருகன், மற்றும் ஆலோசர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதழ் தேவைப்படுவோர் தொடர்புகொள்ள:
திரு சுகவன முருகன் (98426 47101)
கிருஷ்ணகிரி மாவட்ட தொல்லியல் ஆய்வுமையம், ஓசூர் 635 109
(மின்னஞ்சல் : kdhrckgi@gmail.com)
ஆண்டுக்கு இரு இதழ்கள்,
ஓர் இதழ் ரூ.400, ஓர் ஆண்டிற்கு ரூ.750.
சுமார் 200 பக்கங்கள்.

பேராசிரியர் இல.தியாகராசன் ஐயா அவர்கள் இயற்கை எய்திய செய்தி என்னைப் போன்ற ஆய்வாளர்களுக்கெல்லாம் ஒரு பெரிய அதிர்ச்சி. வரலாற்றுத்துறைக்கு ஒரு பேரிழப்பு.


1993-95இல் பௌத்த ஆய்வில் அடியெடுத்த வைத்தபோதிலும், அவரை முதல் முறையாகக் காணும் வாய்ப்பினை 1997இல்தான் பெற்றேன். முதல் சந்திப்பின்போது அவர் இப்பகுதியில் உள்ள புத்தர் சிலைகளைப் பற்றியும், பௌத்தம் தொடர்பான நூல்களைப் பற்றியும் கூறினார். அவர் சொன்னவற்றில் பல சிலைகளை நான் பார்த்துள்ளேன் என்று நான் கூறியபோது வியந்தார். அன்று முதல் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவரைச் சந்தித்து ஆய்வு தொடரபாக உரையாடுவது வழக்கம். களப்பகுதியில் நான் கண்டுபிடித்த புத்தரைப் பற்றிய செய்திகளைப் பார்த்து மனமுவந்து பாராட்டியவர்.
பல ஆய்வாளர்கள் உருவாகக் காரணமாக இருந்தவர், எந்த நேரத்தில் சென்று கேட்டாலும் ஐயங்களைத் தெளிவிப்பவர், ஒரு நண்பரைப்போல பழகுபவர். அறிஞர்களிடம் பழகும்போது காணும் இடைவெளியை இவரிடம் காணமுடியாது. இயல்பாகப் பேசுவார். தமிழகத்தின் தலைசிறந்த தொல்லியல் அறிஞர். அரியலூர் கல்லூரி வரலாற்றுத் துறையின் மேனாள் பேராசிரியர். அன்னாரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
25 டிசம்பர் 2021

25 டிசம்பர் 2021இல் மேம்படுத்தப்பட்டது.

26 November 2021

திருக்குறள்-சிறப்புரை : முனைவர் ரெ. குமரன்

முனைவர் இரெ.குமரன் எழுதியுள்ள திருக்குறள்-சிறப்புரை என்னும் நூல் இலக்கியப்பொருளின் நோக்கில் உரையைக் கொண்டுள்ள நூலாகும். குறளின் வரிகளுக்கேற்ற வகையில் பொருண்மைக்கேற்றவாறு பிற தமிழ் இலக்கிய நூல்களிலிருந்து மேற்கோளுடன் புரிந்துகொள்ளும் வகையில் எளிய உரையுடன் 1330 குறளையும் ஆராய்ந்து எழுதியுள்ள விதம் பாராட்டத்தக்கதாகும். அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உரைகள் தரப்பட்டுள்ளன. நூலின் இறுதியில் மேற்கோள் நூல்கள், குறள் முதற் குறிப்பு அகர நிரல் ஆகியவை இடம்பெற்றுள்ளன.


"திருக்குறள் சிறப்புரை என்றது, திருக்குறளின் மெய்ப்பொருளைக் கண்டதாகாது மெய்ப்பொருள் காண்பதென்பது என்போன்றோர்க்கு எட்டாக் கனியே...! எனினும் 'ஆசைபற்றி அறையலுற்றேன்', என்பதன்றி வேறில்லை....குறள் பொருள் கூறுந்தோறும் மேலொரு இலக்கியப்பொருள் நுகரும் சிறப்பினால் இது சிறப்புரையாயிற்று எனக் கொள்க.." என்கிறார் நூலாசிரியர். ஒவ்வொரு குறளுக்கும் தரப்பட்டுள்ள உரை வாசகர்களுக்கு தமிழ் இலக்கியங்களைப் படிக்கும் ஆவலைத் தூண்டிவிடும் வகையில் அமைந்துள்ளது. தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, இரட்டைக்காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், கம்ப ராமாயணம், வில்லி பாரதம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நூல்களிலிருந்து ஒத்த கருத்துடைய பாடல்களை உரிய விளக்கத்துடன் எடுத்தாண்டுள்ளார்.

திருக்குறள் குறள் எண், பாடல் வரிகள், உரை, இலக்கியத்திலிருந்து காட்டப்படும் மேற்கோள் பாடல் வரிகள், உரிய எண், உரை என்ற வகையில் தந்துள்ளார். நூலைப் படித்து நிறைவு செய்யும்போது திருக்குறள் மட்டுமன்றி பிற நூல்களையும் படித்த உணர்வு ஏற்பட்டது. சுமார் 850 பக்கங்கள் கொண்ட இந்நூலிலிருந்து சில பாடல்களைக் காண்போம்.

நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு. (திருக்குறள், 20)
எவ்வகைப்பட்ட மக்களுக்கும் நீரின்றி உலக வாழ்க்கை நடைபெறாது; அந்நீரும் வானின்று வீழும் மழையேயன்றி வேறில்லை.
"கழிந்தது பொழிந்து எனவான் கண்மாறினும்
தொல்லது விளைந்து எனநிலம் வளம் கரப்பினும்
எல்லா உயிர்க்கும் இல்லால் வாழ்க்கை." (புறநானூறு, 203)
முன்பு மழை பொழிந்தோம் என்று கருதி இப்போது மழை பெய்யாது போகுமானால், முற்காலத்து விளைந்தோம் என்று கருதி இப்போது நிலம் விளையாது போகுமானால், இவ்வுலகில் எல்லா உயிர்களுக்கும் வாழ்க்கை இல்லாது ஒழியுமே.

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு. (திருக்குறள், 212)
நேரிய முறையில் முயன்று ஈட்டிய பொருள் எல்லாம் இல்லார்க்கும் இயலாதவர்க்கும் வேண்டுங் காலத்து உதவி செய்தற் பொருட்டேயாம்.
"வேதம் உறுவன பாட்டுள வேளாண்மை
வேள்வியோடு ஒப்ப உள." (நான்மணிக்கடிகை, 51)
வேதக் கருத்துகளை உடைய பழைய தனிப்பாடல்களும் உள்ளன, வேள்விக்கு நிகரான உதவிகளும் உள்ளன.

கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல். (திருக்குறள், 577)
கண் உடையவர்கள் கண்ணோட்டம் இல்லாதவர்களாக இருப்பதில்லை; கண்ணோட்டம் இல்லாதவர்கள் கண் உடையவர்கள் அல்லர்.
"எழுத்து எண்ணே நோக்கி இருவரையும் கண்டு ஆங்கு
அருட்கண்ணே நிற்பது அறிவு." (அறநெறிச்சாரம், 172)
இலக்கியம், கணிதம் என்ற கண்ணோட்டத்தில் மட்டும் நூல்களை ஆராய்வதால் பயன் ஒன்றும் இல்லை; இம்மை மறுமைப் பயன்களை அளிக்கும் நூல்களையே ஆராய்ந்து கற்று, அவ்வழி கருணையோடு ஒழுகுதலே அறிவுமிக்க செயலாம்.

இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து. (திருக்குறள், 856)
பிறரை இகழ்வதே இன்பம் என்று கருதி, அதனை மிகவும் விருப்பமுடன் செய்வானது வாழ்க்கை, அமைதியின்றித் துன்புறுதலும் அழிவதும் விரைந்து நிகழும்.
"கோத்து இன்னா கூறி உரையாக்கால் பேதைக்கு
நாத்தினும் நல்ல சுனைத்து." (நாலடியார், 335)
பிறரைக் குறை கூறாவிட்டால் பேதையின் நாக்கில் தினவு ஏற்பட்டு, அரிப்பு எடுக்கும்.

மாறுபட்ட கோணத்தில் உரையினைத் தந்து திருக்குறளுக்கு மிகவும் நெருக்கமாக நம்மை அழைத்துச்சென்றுள்ள நூலாசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.



நூல் : திருக்குறள்-சிறப்புரை
ஆசிரியர் : முனைவர் இரெ.குமரன் (9443340426)
பதிப்பகம்: மின்கவி, கோபி, ஈரோடு மாவட்டம் 638 452 (9626227537)
பதிப்பாண்டு: செப்டம்பர் 2021
விலை ரூ.800



02 November 2021

சோழர் வரலாற்றில் மச்சபுரீஸ்வரர் : கோ.தில்லை கோவிந்தராஜன்



கோ.தில்லை கோவிந்தராஜன் எழுதியுள்ள சோழர் வரலாற்றில் மச்சபுரீஸ்வரர் என்னும் நூல் கோயிலின் அமைப்பு, சிற்பக்கலை, கல்வெட்டுக்களால் அறியப்படுகின்ற சமூகப் பொருளாதார நிலை என்ற துணைத்தலைப்புகளைக் கொண்டுள்ளது.


நூலாசிரியர் இந்நூலில் வரலாற்றுப் பின்னணியில் ஊர்ப் பெயரின் பழமையான காரணம், கோயில் அமைவிடம், அரசர்களின் கல்வெட்டில் காணும் தானங்கள், கட்டடக்கலையில் சங்க காலம், பல்லவர் காலம், சோழர் காலம் எனப் படிநிலை வளர்ச்சி,  சிற்பக்கலையில் கருவறை, தேவகோட்ட, அர்த்தமண்டப, மகாமண்டப, முகமண்டபப்படிமங்கள், சப்தமாதர்கள், திருகாமக்கோட்டம், அருங்காட்சியகப்படிமங்கள் ஆகியவற்றைக் குறித்து விவாதிக்கிறார். மேலும், கல்வெட்டினால் அறியப்படும் சமூகப் பொருளாதார வாழ்க்கை என்ற தலைப்பில் வளநாடு, கோட்டம், கூற்றம், மங்கலம், சேரிகள், வாய்க்கால்கள், நில வகைப்பாடுகள், அளவைகள், நாணயங்கள், கல்விநிலை, குற்றமும் தண்டனையும், உலோகப்படிமங்கள், திருவிழாக்கள் ஆகியவற்றைப் பற்றி  ஆராய்கிறார். இந்நூலில் குறிப்பிடத்தக்க செய்திகளில் சிலவற்றைக் காண்போம்.  


“பாபநாசம் என்ற ஊரிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள பண்டாரவாடை என்ற ஊரைச் சேர்ந்த திருச்சேலூர் என்கிற பழைமையான கோயில் இன்று மச்சபுரீஸ்வரர் எனும் பெயரால் தேவராயன்பேட்டை என்ற கிராமத்தில் அமைந்துள்ளது...........திருஞானசம்பந்தர் திருப்புள்ளமங்கையிலிருந்து திருப்பாலைத்துறை தலத்திற்குச் செல்லும் வழியில் உள்ள இத்திருக்கோயிலை வணங்கிச்சென்றமையை சேக்கிழார் தம் பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்றார். சேல் என்பது கெண்டை மீனாகும். இம்மீன் இறைவனை வழிபட்டதால் திருச்சேலூர் உடையார் என இவ்வூர் வழங்கப்பட்டது.” (ப.3,)


“கோயில் தேவராயன்பேட்டை மச்சபுரீஸ்வரர் திருக்கோயில் முதலாம் ஆதித்தன் (கி.பி.870-907) காலத்தில் கட்டப்பட்ட முற்கால சோழர் கலைப்பாணியைச் சேர்ந்ததாகும்.” (ப.32)


“கோயிலின் வளாகத்திலேயே திருக்காமக் கோட்டம் (அம்மன் கோயில்) அமைந்துள்ளது. திருக்காமக் கோட்டம் என்ற தனிக்கோயில் (கட்டுமானம்) கட்டும் மரபினை முதன் முதலில் தோற்றுவித்த அரசன் முதலாம் இராஜேந்திர சோழன் ஆவான் .” (ப.40)


“தொடக்ககால சோழர் கோயில்களில் மேற்குபுறத் தேவ கோட்டத்தில் அர்த்தநாரியும், லிங்கோத்பவர் எனப்படும் அண்ணாமலையார் படிமங்களில் எவையேனும் ஒரு படிமத்தினை அமைப்பதுண்டு. ஆதித்தனால் திருமால் படிமம் திருக்கட்டளையில் அமைக்கப்பட்டது. இத்திருக்கட்டளையின் சமகாலத்தைச் சார்ந்த இக்கோயிலில் மேற்குப்புற கோட்டத்தில் திருமால் நின்ற கோலத்தில் படிமம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கவொன்றாகும்.” (ப.46)


“ஆதித்தனுக்குப் பின் வந்த அரசர்கள் சண்டிகேசுவரர் படிமத்தினை வட திசையில் தெற்கு நோக்கிய வண்ணம் அமைத்தனர்.” (ப.52)


“மச்ச அவதார விஷ்ணு (திருமால்) நான்கு கைகளுடன் நின்ற கோலத்தில் சிவனை வழிபடுவதாக அர்த்த மண்டபத்திலுள்ள தேவகோட்டத்து பிள்ளையார் படிமத்திற்கு மேலே தேவகோட்ட இரு தூண்கள் பலகைக்கு இடையில் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது..முகமண்டப நுழைவாயிலின் வலப்புறச் சுவற்றில் மீன் வடிவில் திருமால் சிங்கத்தை வழிபடுவதாக புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே காட்சியினை முகமண்டபத்தூண் ஒன்றிலும் காணமுடிகிறது”. (ப,57)


“விஜயாலயன் காலம் தொடங்கி உத்தமசோழன் காலம் வரை கற்றளிகளில் சிற்பங்களின் எண்ணிக்கை என்பது குறைவாகவும், தேவ கோட்டங்கள் மற்றும் கோட்டங்களின் எண்ணிக்கை மூன்றிலிருந்து ஐந்து வரையே அமைக்கப்பட்டன. இவற்றால் கருவறையில் மூன்று தேவ கோட்டங்களும், அர்த்தமண்டபத்தில் இரண்டு தேவ கோட்டங்களும் அமைக்கப்பட்டன”. (ப.66)


“இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுகளில் அரசர்களும், அரசமாதேவிகளும், அரசியல் அதிகாரிகளும் வழங்கிய கொடையினையும் அறியமுடிகிறது. அவை மக்களின் சமூக பொருளாதார நிலைகளை எடுத்து இயம்புவனவாக உள்ளன”. (ப,68)


ஓர் அருமையான கோயிலைப் பற்றி காலவாரியாக விரிவாக ஆராயும் இந்நூலை வெளியிட்ட ஆசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.


நூல்: சோழர் வரலாற்றில் மச்சபுரீஸ்வரர்
ஆசிரியர்: கோ.தில்லை கோவிந்தராஜன்
பதிப்பகம்: எம்.ஜே.பப்ளிஷிங் ஹவுஸ், 9, செ.ஜான் சர்ச் வணிக வளாகம், ராக்கின்ஸ் சாலை, திருச்சி 620 001, 0431-4038994/99434 28994
பதிப்பாண்டு: 2019
விலை ரூ.100


நன்றி: புக் டே இணையதளம்



26 October 2021

சத்யஜித்ரே நூற்றாண்டு நினைவு சிறப்பிதழ் : ப்ரண்ட்லைன்

ப்ரண்ட்லைன் சத்யஜித்ரே சிறப்பிதழை (The World of Ray, Frontline, A CommemorativeIssue, November 5, 2021) நேற்று காலை அஞ்சல்வழியாகப் பெற்றேன். 132 பக்கங்கள் கொண்ட இதழை நேற்று படிக்க ஆரம்பித்து சுமார் மூன்று அமர்வில் எட்டு மணி நேரத்தில் இன்று மதியத்திற்குள் முழுமையாகப் படித்துவிட்டேன். வழக்கமாக சிறப்பிதழுக்குத் தருகின்ற முக்கியத்துவத்தோடு இவ்விதழ் தயாரிக்கப்பட்டதைக் காணமுடிந்தது.



அட்டைப்படம் தொடங்கி அனைத்துப்பக்கங்களும் ரசனையோடு அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும். இதழாசிரியர் இதழ் உருவாக மேற்கொண்ட முயற்சிகளைச் சுருக்கமாகக் கூறியுள்ளார். ஓர் இமாலய முயற்சியை சிறப்பாக நிறைவேற்றியுள்ள அவர்களுக்கு முதல் பாராட்டு. பொருளடக்கப் பக்கத்தில் சிகப்பு வண்ணத்தில் தலைப்பு, தொடர்பான புகைப்படம், கட்டுரையின் செறிவான தேர்ந்தெடுக்கப்பட்ட வரிகள், கட்டுரையாளர்/பேட்டியாளரின் பெயர், பக்க எண் தரப்பட்ட விதம் மிகவும் அருமை. சில முழுப்பக்க புகைப்படங்களைப் (பக்.6, 7, 8, 33, 68, 72-73, 130) பார்த்துக்கொண்டே இருக்கலாம். ஒவ்வொரு கட்டுரைக்கும் பெரிய எழுத்தில் கட்டுரையின் பொருண்மையை உணர்த்தும் வகையில் தரப்பட்டுள்ள நடுவில் அமைக்கப்பட்டுள்ள தலைப்பு, தேவைப்படும் இடங்களில் ஒற்றை மேற்கோளுடன் தலைப்பு, தொடர்ந்து அதன்கீழ் உட்தலைப்பாக சில சொற்களில் கட்டுரையின் சுருக்கம், முற்றிலும் வாசகருடைய படிப்பின் ஆர்வத்தை மிகுவிக்கும் வகையில் பெரிய எழுத்தில் கட்டுரையின் முதல் வரி, பேட்டிகளில் கேள்விகள் தடித்த எழுத்திலும் பதில்கள் சாதாரண எழுத்திலும் தந்துள்ள விதம் என்ற வகையில் எந்த அளவிற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பதை அறியமுடிகிறது. கட்டுரையின் உள்ளே ஆங்காங்கே தரப்பட்டுள்ள பெட்டிச்செய்திகள், அதற்கான புகைப்படங்கள், அவற்றுக்காக தனியாக எழுத்துரு மிகவும் நல்ல உத்தி. வாசிப்பில் அயற்சி தராமல் இருப்பதற்காக சில பதிவுகள் நீல நிறப் பின்புலத்தில் அமைக்கப்பட்டுள்ள விதம் அருமை.

இத்தகைய பின்புலத்தில் அமைந்துள்ள இதழுக்கு உரிய செய்திகளையும், புகைப்படங்களையும் திரட்ட ஆசிரியர் குழுவினர் மேற்கொண்ட முயற்சி பெரிதும் போற்றத்தக்கது. இதழாசிரியர் கூறியதைப் போல உரிய நேரத்தில் ஆண்ட்ரியூ ராபின்சனின் தொடர்பு ஒரு முக்கியமான இடத்தைப் பெறுகிறது. பல்துறைச் சார்ந்தோருடைய நினைவலைகள் ஒவ்வொரு கண்ணோட்டத்தில் உள்ளதை அவருக்கு சூட்டப்பட்ட புகழாரங்கள் உணர்த்துகின்றன.

“சத்யஜித்ரேயின் திரைப்படங்கள் அரிய கருவூலங்கள். திரைப்பட ஆர்வலர்கள் அவற்றை அவசியம் பார்க்க வேண்டும்….ரேயின் சிறந்த திரைப்படங்களை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அவை புதிய பரிமாணங்களைத் தருகின்றன” (ஆண்ட்ரியூ ராபின்சன், ப.9),

“இரு நிலைகளும் எனக்கு ஒன்றுதான். பல மணி நேரங்கள் என்னால் பேசாமல் இருக்கமுடியும். அவ்வாறே ஒரே சமயத்தில் தொடர்ந்து 17-18 மணி நேரங்கள் பணியாற்றவும் முடியும்.” (ஆண்ட்ரியூ ராபின்சன் பேட்டி, ப.22),

“இத்துணைக்கண்டத்தின் பண்பாட்டு உலகில் ரே முக்கியமான இடத்தைப் பெறுகிறார். நூற்றாண்டின் ஆரம்பக்காலக்கட்டத்தில் ரவீந்திரநாத் தாகூரைத் தவிர வேறு எவரும் தேசிய அளவிலும், உலகளவிலும் அத்தகைய பெருமையைப் பெறவில்லை.” (மிகிர் பட்டாச்சார்யா, ப.26),

இந்திய சினிமாவில் பன்முகத்திறன் கொண்டவர் ரே…ரசிகர்களை இழுக்கவேண்டும் என்பதற்காக அவர் தன் கொள்கையை சமரசம் செய்துகொள்ளவில்லை… ஒவ்வொன்றிலும் முழுக்கவனமும் செலுத்துவார். (ஆடூர் கோபாலகிருஷ்ணன் பேட்டி, ப.29),

வங்காள சினிமாவில் வண்ணத்திரைப்படங்கள் அரிதாக இருந்த காலகட்டத்தில் ஒரு வண்ணப்படத்தை எடுத்து, அதற்கான காரணத்தையும் அவர் கூறினார். (மோய்நக் பிஸ்வாஸ், ப.32),

“அவருக்கு வந்த கடிதங்களுக்கு அவரே மறுமொழி எழுதுவார். அப்போது வருகின்ற கடிதங்கள் மறுமொழி அட்டையுடனே வரும். அதில் அவர் பதில் எழுதி அனுப்புவார்.” (சந்திப் ரே பேட்டி, ப.37),

“அவர் தனிமையிலே இருப்பார், அவரை நெருங்கமுடியாது என்று பலர் கூறக்கேட்டிருக்கிறேன். ஆனால் அப்படியல்ல…அவர் வீட்டு வாசலில் உள்ள அழைப்பு மணியை அடித்துவிட்டு அவரைச் சந்திக்கலாம்.” (கௌதம் கோஷ், ப.53),

“ரே ஒரு அதீத வாசகர். அவருடைய இலக்கிய ஆர்வம் பன்முகத்தன்மையுடையது. உடல் நலன் குன்றியபோது, செயலாற்ற முடியாத நிலையில், அவருக்குப் படிக்க அதிக நேரம் கிடைத்தது..” (தீர்த்திமன் சட்டர்ஜி, ப.74),

“அவர் மிகவும் அரிதாக அரசியல் தொடர்பான அறிக்கைகளை வெளியிடுவார். இருந்தபோதிலும் தன் நிலைப்பாட்டினை திரைப்படத்தில் காட்சிகளிலும், வசனங்களிலும் தெளிவாகக் கொணர்ந்துவிடுவார்.” (சுக்ரித் சங்கர் சட்டோபாத்யாய், ப.77),

“ரே ஒரு நூலை வாசிக்க ஆரம்பித்தால் அவருடைய மனதில் கதாபாத்திரங்கள் இயல்பாகத் தோன்ற ஆரம்பித்துவிடும்..” (பரூன் சந்தா, ப.83),

“மாணிக்டா (சத்யஜித் ரே) காட்சிகளைப் பற்றியும், அவை எடுக்கப்படவேண்டிய முறை பற்றியும் மிகவும் தெளிவாக இருப்பார். அவருடைய இலக்கிற்கு வடிவம் கொடுப்பதில் எங்களுக்கு எவ்விதச் சிக்கலும் இருந்ததில்லை.” (ஷர்மிளா தாகூர் பேட்டி, ப.89),

“அவர் எங்களை கதாபாத்திரமாக முற்றிலும் மாற்றிவிடுவார்” (அபர்னா சென் பேட்டி, ப.103),

“சினிமா சத்யஜித்ரேக்கு முன், சத்யஜித்ரேக்குப் பின் –ச.மு., ச.பி.,-. என்ற வகையில் அமையும்.” (ஷ்யாம் பெனேகல் பேட்டி, ப.109),

“அவர் யாரையும் குறை கூறியதில்லை.” (ரகுராய் பேட்டி, ப.122),

சத்யஜித்ரே இயற்கையெய்திய பின்னர் ஒரு காலகட்டத்தில் பிரண்ட்லைன் இதழ் மறுவடிவாக்கம் பெறப்பட்டபோது அவ்விதழில் “ரே உயிரோடிருந்திருந்தால் இந்த வடிவத்தை ரசித்திருப்பார்” என்று வாசித்த நினைவு. அதே கருத்து இச் சிறப்பிதழுக்கும் நூற்றுக்கு நூறு பொருந்தியிருக்கும் என நினைக்கிறேன்.

இவ்விதழின் அனைத்து சிறப்பிதழ்களையும் வாசித்த வாசகன் என்ற நிலையில் இதுவரை வந்த இதழ்களில் இது சிறப்பிடத்தைப் பெறுகிறது என்பதைப் பகிர்வதில் மகிழ்கிறேன். பாராட்டுகள், ப்ரண்ட்லைன் ஆசிரியருக்கும், குழுவினருக்கும்.

27 ஆகஸ்டு 2022இல் மேம்படுத்தப்பட்டது

13 October 2021

மனதில் பதிந்த நினைவுகள் : நவராத்திரி

ஒவ்வொரு நவராத்தியின்போதும் கொலுவின் முதல் நாள் முதல் நிறைவு நாள் வரை முழு ஈடுபாட்டுடன் இருப்பார் எங்கள் அத்தை திருமதி இந்திரா. கும்பகோணத்தில் எங்கள் வீட்டில் அழகாக கொலு அமைந்ததற்குக் காரணம் அவரே. எங்கள் வீட்டில் பெரிய பொம்மைகள் அதிகமாக இருக்கும்.  
கும்பேஸ்வரர் கோயில் கடைகளில் உள்ள கொலு அலங்காரத் தொகுப்பு, 2018 நவராத்திரி 

ஒவ்வொரு படியின் இரு ஓரங்களிலும் உரிய பொம்மைகளை வைத்தல், அதன் அளவிற்கும், வண்ணத்திற்கும் தகுந்தபடி அடுக்குதல், கண்களுக்கு எளிதாகத் தெரியும்படி பெரிய பொம்மை, சிறிய பொம்மை என்று அமைத்தல், தசாவதாரம் போன்றவற்றை அந்தந்த வரிசைக்கிரமப்படி வைத்தல், முதல் படி முதல் கடைசிப்படி வரை ஒவ்வொரு படியிலும் சரியாக அமைத்தல் என்றவாறு நுணுக்கமாகச் செய்வார். 

வீட்டில் இல்லாத கொலுப்பொம்மைகளை வாங்கிச் சேர்த்தல் என்ற வகையில்  எனக்கு நினைவு தெரிந்து சேர்ந்த பொம்மைகளில் சிவனும் நந்தியம்பெருமானும், திருமண செட், தசாவதாரம், ராமர் பட்டாபிஷேகம், பொய்க்கால்க்குதிரை, காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி போன்றவை அடங்கும். ஒவ்வோராண்டும் வாங்கிச் சேர்க்கச் சேர்க்க எங்கள் வீட்டில் கொலு பொம்மைகள் அதிகமாயின. உடையும் பொம்மைகளுக்குப் பதிலாக புதிய பொம்மைகளை எங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள கொலுக்கடைகளில் வாங்கி வைத்துவிடுவார். 

கொலுவின்போது பலர் தலையில் கூடையில் பொம்மைகளை விற்றுக்கொண்டுவருவர். அவர்களிடமும் அவர் பொம்மை வாங்கிய நினைவு உள்ளது. கும்பேஸ்வரர் கோயில் மேலவீதியில் அவருடைய வீட்டில் திண்ணையில் நாங்கள் உட்கார்ந்திருந்தபோது ஒருவர் கொலு பொம்மைகளை விற்றுக்கொண்டு சென்றார். அவரை அழைத்தார். கூடையை இறக்க நான் உதவினேன். ராமர், சீதை, லட்சுமணர் நின்ற நிலையிலும் அனுமார் அமர்ந்த நிலையிலும் இருந்த பொம்மைகள் அவரை அதிகம் ஈர்த்தன. எங்கள் வீட்டுக்கொலுவில் இல்லாத அவர் வாங்க ஆசைப்பட்ட பொம்மைகள். ராமர் பொம்மையின்  உயரம் சுமார் ஒன்றரை அடி. மற்ற பொம்மைகள் அடுத்தடுத்து சற்றுச் சிறிதாக இருந்தன. அவற்றை நான்கு ரூபாய்க்கு வாங்கினார். வாங்கும்போது அந்த பொம்மைகளில் அடிக்கப்பட்டுள்ள வண்ணம் சீராக உள்ளதா என்று பார்த்து, ராமர் பச்சை சரியாக உள்ளது என்றார். அப்போதுதான் ராமர் பச்சை என்ற சொல்லை நான் அறிந்தேன்.  அப்போது நான் ஆறாம் வகுப்போ ஏழாம் வகுப்போ படித்தேன். ராமர் பச்சை கலரைக் காணும்போது கொலு வாங்கிய அந்த நாள் நினைவிற்கு வந்துவிடும். 
     
மற்றவர்களின் வீட்டிற்குக் கொலு பார்க்கச் செல்லும்போது எங்கள் வீட்டில் இல்லாத பொம்மைகள் அங்கிருந்தால் அதனைக் கவனித்து வாங்கி வைத்துவிடுவார். எந்த பொம்மைகளும் விடுபடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். 

ஆரம்பத்தில் கள்ளிப்பெட்டிகளை அடுக்கி, மேலே துணியை விரித்துவைத்து அதில் கொலு பொம்மைகளை வைத்தோம். ஒரு நவராத்திரியின்போது எங்கள் அத்தை ஏழு மரப்படிகளை (ஏழோ, ஒன்பதோ மறந்துவிட்டேன்) இரு புறமும் பக்கப்படிகளுடன் வாங்கிவைத்தார். அதற்குப் பின் கொலுவின் அழகு இன்னும் பிரமிப்பாக இருந்தது.  

எங்கள் பள்ளிக்காலத்தில் நான் எங்கள் அத்தை கொலு வைக்கும் அழகினை ஆர்வத்தோடு பார்த்துள்ளேன். அதில் அவருடைய முழு ரசனையும் ஈடுபாடும் இருக்கும். இப்போதெல்லாம் ஒவ்வொரு நவராத்திரியின்போதும் பொறுமையாக கொலுவினைப்  பார்க்கிறேன். அவர் கூறியபடி சரியாக உள்ளதா என்று பார்க்கிறேன், ரசிக்கிறேன், லயிக்கிறேன். நவராத்திரி கொலுவில் வழிபாடு, நம்பிக்கை, கடவுள் பக்தி ஆகியவற்றுடன் ரசனை இழையோடிருப்பதை உணர்கிறேன். கும்பகோணத்தைவிட்டு நான் வந்தாலும், அவர் எங்களை விட்டுப் பிரிந்தபோதிலும் அவர் காட்டிய ஈடுபாடும், ரசனையும் ஒவ்வொரு கொலுவின்போதும் இயல்பாகவே என் மனதிற்குள் வந்துவிடுகிறது. மூன்று மாமாங்கங்களுக்கு மேலாகியும் மனதில் பதிந்த அந்த இளமைக்கால கொலு நினைவுகளும், ரசனையும் இன்னும் தொடர்கின்றன. 

நவராத்திரி தொடர்பான முந்தைய பதிவுகள் : 

14 அக்டோபர் 2021இல் மேம்படுத்தப்பட்டது.

02 October 2021

எங்கள் இல்லத்தில் காமராஜர்

எங்கள் தாத்தா திரு ரெத்தினசாமி அவர்கள்,  பெருந்தலைவர் காமராஜர் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். காமராஜர் இறந்த செய்தியைக் கேட்டபோது அவர் அதிர்ச்சியடைந்தது இன்னும் என் நினைவில் உள்ளது. கட்சிக்காரர்களும், உறவினர்களும் கும்பகோணத்தில் எங்கள் வீட்டில் துக்கம் விசாரிப்பதைப் போல எங்கள் தாத்தாவைப் பார்த்துச் சென்றனர். எங்கள் வீட்டில் காமராஜர் உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படங்கள் இருந்தன. அதன் நினைவாக தஞ்சாவூரில் எங்கள் இல்லத்தில் தலைவர்களின் படங்களை வைத்துள்ளேன். அவர்களைப் பற்றிய உணர்வினையும், நாட்டுப்பற்றையும் இளம் தலைமுறையினரிடையே ஊக்குவிப்பது நம் கடமையென்று கருதுகிறேன். கட்சியுடனான அவருடைய ஈடுபாடு என்னுள் சில தாக்கங்களை உண்டாக்கியது.    

எங்கள் இல்லத்தின் உள்ள காமராஜர், காந்தி படங்கள்

அப்போதைய தேர்தல்
எங்கள் தாத்தா அப்போதைய காங்கிரஸ்காரர். எங்களது வீட்டின் மாடியில் கட்சிக்காரர்கள் சேர்ந்து கூட்டம் போடுவார்கள். அப்போது நாங்கள் அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருப்போம். தேர்தல் நேரங்களில் சம்பிரதி வைத்தியநாதய்யர் தெருவில் எங்கள் வீடு தொடங்கி, தெருவில் இறுதி வரை காங்கிரஸ் கட்சி பேனர்களைக் கட்டுவார்கள். தேர்தலுக்குப் பின் அந்த பேனர்களை எங்கள் வீட்டு மாடி அறையின் உத்தரத்தில் வைத்துவிடுவார் எங்கள் தாத்தா. எனக்கு நினைவு தெரிந்து அவ்வாறாக ஐந்தாறு பேனர்கள் இருந்தன. வீட்டு வாசலில் கொடிக்கம்பத்தில் கொடி பறந்துகொண்டே இருக்கும். 

வாக்குக் கேட்டது மற்றொரு அனுபவம். வாக்குக் கேட்பதற்காக கையில் கொடியை ஏந்திக்கொண்டு குழாய் போன்ற மைக்கை வைத்து "போடுங்கம்மா ஓட்டு, காளைச்சின்னத்தைப் பாத்து, போடுங்கய்யா ஓட்டு, காளைச்சின்னத்தைப் பாத்து" என்று சொல்லிக்கொண்டே ஓட்டுப்போடக் கேட்டு தெருத் தெருவாகச் செல்வோம். அப்போது ஒன்றுபட்ட காங்கிரஸின் சின்னமாக ரெட்டைக்காளைச்சின்னம் இருந்தது. 1960களின் இறுதி. அப்போது நான் நான்காம் வகுப்போ, ஐந்தாம் வகுப்போ படித்தேன். காங்கிரஸ் பிளவுபட்டு ஸ்தாபன காங்கிரஸ்/பழைய காங்கிரஸ் (ராட்டை நூற்கும் பெண் சின்னம்), இந்திரா காங்கிரஸ் (பசுவும் கன்றும் சின்னம்) என்றானது. காங்கிரஸ் உடைந்தது எங்கள் தாத்தாவுக்கு வருத்தத்தைத் தந்தது. இந்திரா காந்தியின் அபிமானியான அவர் ஸ்தாபன காங்கிரஸின் ஆதரவாளரானார். அதன் சின்னம் ராட்டை நூற்கும் பெண். தொடர்ந்து வந்த  தேர்தலின்போது எங்கள் வீட்டருகில் ராட்டை நூற்கும் பெண்ணின் படத்தை வரைந்து ஓட்டு கேட்டிருந்தார்கள். அந்தந்த கட்சிக்காரர்கள் இவ்வாறாக மாணவர்களை ஓட்டுக் கேட்க அழைத்துச்செல்வதைப் பார்த்திருக்கிறேன்.

பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது நாங்கள் ஓட்டுக் கேட்கச் சென்ற நினைவு உள்ளது. யாராவரு ஒருவர் கட்சியின் சின்னத்தை ஒரு குச்சியில் வைத்திருப்பார். அவர் முன்னே செல்ல மற்றவர்கள் பின் செல்வோம். கூட்டத்தில் உள்ளோர் கட்சியின் கொடியினைக் ஒரு குச்சியில் கட்டிக்கொண்டு வருவர். சம்பிரதி வைத்தியநாதய்யர் அக்கிரகாரத்தில் புறப்பட்டு, மேட்டுத்தெரு, மேல மேட்டுத்தெரு, சிங்காரம் செட்டித்தெரு, நேரமிருந்தால் கும்பேஸ்வரர் கோயில் மேல வீதி மற்றும் வடக்கு வீதிகளில் செல்வோம். அவ்வாறு ஒரு முறை நாங்கள் போகும்போது எங்களுடைய திருமஞ்சனவீதி நடுநிலைப்பள்ளியின் ஏழாம் வகுப்பு ஆசிரியர் (மேல மேட்டுத்தெருவிலிருந்த திரு கோபால்) பார்த்துவிட்டு மறுநாள் பள்ளியில் என்னை வெளுத்து வாங்கியது இன்னும் நினைவில் உள்ளது. அதற்குப் பிறகு தேர்தலுக்காக ஓட்டுக் கேட்டுச் செல்வோருடன் போவதே இல்லை. அரசியல் கட்சிகளைப் பற்றிப் பேசுவதும் இல்லை. 

நவசக்தி, நாத்திகம் இதழ்கள்
எங்கள் வீட்டிற்கு நவசக்தி இதழ் வந்தது எனக்கு நினைவில் இருக்கிறது. அப்போதைய காங்கிரஸ்காரர்கள் அவ்விதழைப் படிப்பதைப் பார்த்துள்ளேன். அதன் முதன்மைச் செய்திகளைப் படித்துக் கூறச் சொல்வார் எங்கள் தாத்தா. போல்ஸ்டார் (போல்ஸ்டார் அல்லது நாத்திகம் என்பது இதழின் பெயர், சரியாக நினைவில்லை) என்ற இதழ் அப்போதே டேப்ளாய்ட் வடிவில் வந்தது இன்னும் நினைவில் உள்ளது. அதன் ஆசிரியர் நாத்திகம் ராமசாமி என்று நினைக்கிறேன். நாத்திகம் இதழின் செய்திக்கான தலைப்புகள் விறுவிறுப்பாக இருப்பதை நான் பார்த்துள்ளேன். ஏதோ ஒரு நிகழ்வினைப் பற்றி குறிப்பிடும்போது நில்லுங்கள், நிமிர்ந்து நில்லுங்கள், சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள் என்ற தலைப்பினைக் கண்டோம். (நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த சிவந்த மண் வந்த காலகட்டம்). கல்லூரிக்காலத்தில் டேப்ளாய்ட் வடிவில் பிளிட்ஸ் ஆங்கில இதழை ஆர்வமாகப் படிக்க இவ்விதழ் காரணமாக அமைந்தது. 
எங்கள் தங்க ராஜா படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நவசக்தி இதழுடன்
நன்றி : கோல்டன் சினிமா

அவ்வாறே நவசக்தியில் ஒரு செய்தி (மேலுள்ள ஒளிப்படம்) இன்னும் நினைவில் உள்ளது. அப்பா குடிக்கிறார், அம்மாவை அடிக்கிறார், பள்ளிக்கூடம் போகமுடியவில்லை என்று ஒரு சிறுவன் அழுதுக்கொண்டே கூறுவது தலைப்புச் செய்தியாக அப்போது வந்திருந்தது.  (இதே நாளிதழ் உள்ள காட்சி 1973இல் வெளிவந்த, சிவாஜிகணேசன் நடித்த எங்கள் தங்க ராஜா திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் அக்காட்சியில் பட்டாக்கத்தி பைரவன் விடுதலை என்ற செய்தியைக் கேட்டுக்கொண்டே நாகேஷ் பயந்து ஓடுவார்). சுமார் 50 ஆண்டுகளாக நாளிதழ் படிப்பதற்கு அடித்தளம் அமைத்துத்தந்தது அப்போது நாங்கள் படித்த இந்த நாளிதழ்களே.   

மூர்த்திக்கலையரங்கம்
நான் கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி ஆரம்பப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது (நான்கு அல்லது ஐந்தாம் வகுப்பாக இருக்கலாம், அறுபதுகளின் இறுதியில்) கும்பகோணம் மூர்த்திக்கலையரங்கில் காமராஜர் கலந்துகொண்ட ஒரு கூட்டத்திற்கு எங்கள் தாத்தா எங்களை அழைத்துச்சென்றார். பெருந்தலைவரை நேரில் பார்த்தபோது எனக்குக் கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. எங்கள் தாத்தா அவருடன் பேசிக்கொண்டிருந்ததை மிக அருகில் காணும் வாய்ப்பு கிடைத்தது. மறுநாள் பள்ளியில் அவரை அருகில் பார்த்ததைப் பற்றி பெருமையுடன் பேசிக்கொண்டேயிருந்தேன். ஒழுக்கம், நேர்மை என்பனவற்றை எங்கள் தாத்தா பெருந்தலைவரைப் பற்றியும், பிற தலைவர்களைப் பற்றியும் எடுத்துரைப்பார். சில ஆண்டுகளுக்கு முன்னர் விருதுநகர் சென்றபோது காமராஜர் இல்லம் சென்றேன். அனைவரும் பார்க்கவேண்டிய முக்கியமான இடம். எங்கள் தாத்தாவின் தாக்கம் என்னிடம் இன்னும் இருப்பதை உணர்கிறேன். 

காமராஜரைப் போன்ற பெருந்தலைவரைப் பற்றிய எண்ணங்களும், அவர் வழியிலான கொள்கைகளும் என்றென்றும் வீட்டையும் நாட்டையும் முன்னுக்கு எடுத்துச் செல்லும். 


9 அக்டோபர் 2021இல் மேம்படுத்தப்பட்டது.

15 September 2021

தமிழ்ப் பல்கலைக்கழகம் 41ஆவது நிறுவன நாள்

41ஆவது நிறுவன நாளை இன்று கொண்டாடும் (15 செப்டம்பர் 2021) தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சுமார் 35 ஆண்டுகள் (16.8.1982-30.4.2017) பணியாற்றிய பணியாளர் என்ற நிலையிலும் தட்டச்சுச்சுருக்கெழுத்தாளராகப் பணியில் சேர்ந்த என்னை ஓர் ஆய்வாளனாக உருவெடுக்கவைக்க உதவிய நிலையிலும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். நான் பெற்ற தகுதிகள் அனைத்தும் நான் பணியாற்றிய, ஆய்வினை மேற்கொண்ட தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் எனக்குச் சாத்தியமானது.


 தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் என் இருக்கையில் (2016)


தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேருந்துக்காகக் காத்திருப்பு (2017)

தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்குப் பேருந்தில் வரல் (28 ஏப்ரல் 2017)


பணி நிறைவு நாளில் (28 ஏப்ரல் 2017) 
என் மனைவி எழுதிய கோயில் உலா நூல் வெளியீடு

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் எனக்கு வழங்கப்பட்ட நினைவுப்பரிசு

விழா நிகழ்விற்குப் பின் குடும்பத்தாருடன்



தமிழ்ப் பல்கலைக்கழகத்திலிருந்து பிரியா விடை
நன்றி, தமிழ்ப் பல்கலைக்கழகம்


மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் (Buddhism in Tamilnadu with special reference to Thanjavur district, 1995). 

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் (சோழ நாட்டில் பௌத்தம், 1999). 

தமிழகத்தில் 19 புத்தர் சிலைகள், 13 சமண தீர்த்தங்கரர் சிலைகள், ஒரு நாகப்பட்டினப் புத்தர் செப்புத் திருமேனி கண்டெடுப்பு

வாழ்வில் வெற்றி (சிறுகதைத்தொகுப்பு, பிட்டி விஜயகுமார், சென்னை, 2001), Judgement Stories of Mariyathai Raman (2002), Tantric Tales of Birbal (2002), Jesting Tales of Tenali Raman (2005), Nomadic Tales from Greek (2007) (Translations, New Century Book Houe (P) Ltd, Chennai), படியாக்கம் (தாமரை பப்ளிகேஷன்ஸ், சென்னை, 2004), தஞ்சையில் சமணம் (மணி.மாறன், கோ.தில்லை கோவிந்தராஜன் உடன் இணைந்து, ஏடகம், தஞ்சாவூர், 2018), விக்கிப்பீடியா 1000: பதிவு அனுபவங்கள் (மின்னூல், 2020), சோழ நாட்டில் பௌத்தம் (புது எழுத்து, 2022)  ஆகிய நூல்கள்

சோழ நாட்டில் பௌத்தம் (140+), முனைவர் ஜம்புலிங்கம் (360+) என்ற வலைப்பூக்களிலும், தமிழ்க்கலை, தமிழ்ப்பொழில், அறிக அறிவியல், Tamil Civilization, முக்குடை, தினமணி, இந்து தமிழ் திசை, புதிய தலைமுறை போன்ற இதழ்களிலும் (60+), தமிழ் விக்கிப்பீடியாவிலும் (1000+), ஆங்கில விக்கிப்பீடியாவிலும் (300+) கட்டுரைகள். தமிழகப் பல்கலைக்கழகப் பணியாளர் சங்க மலர் (1994), பன்னிரு திருமுறை சான்றோர் வாழ்வியல் (1997), மகாமகம் மலர் (2004), தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு மலர் (2020) ஆகியவற்றில் குழு உறுப்பினர். சித்தாந்த ரத்னம் (திருவாவடுதுறை ஆதீனம், 1997), அருள்நெறி ஆசான் (தஞ்சை அருள்நெறித் திருக்கூட்டம், 1998), பாரதி பணிச்செல்வர் (அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம், 2001), முன்னோடி விக்கிபீடியா எழுத்தாளர் (கணினி தமிழ்ச்சங்கம், 2015), விக்கிக்கோப்பை வெற்றியாளர் (விக்கிப்பீடியா, 2017), அருமொழி விருது (சோழர் வரலாற்று ஆய்வு சங்கம்),  நிகரிலி சோழன் விருது (சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழு, 2022) ஆகிய விருதுகள்

மேலும் பல........ 

பா.ஜம்புலிங்கம், உதவிப்பதிவாளர் (பணி நிறைவு)

தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்


10 டிசம்பர் 2022இல் மேம்படுத்தப்பட்டது