இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள் (14 சனவரி 2017)
இரண்டாவது வலைப்பூவில் 151ஆவது பதிவு
வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்திக்கொள்வதும், வீட்டில் நூலகத்தைப்
பேணுவதும் ஒவ்வொருவரும் கடைபிடிக்கவேண்டிய நல்ல பழக்கங்களாகும். வாசிக்கும் பழக்கத்தைத் தொடரவேண்டும் என்ற நன்னோக்கில் நல்ல பல உத்திகளைப் பலர் மேற்கொண்டு வருகின்றனர்.
அவற்றில் ஒன்று விழாக்களின்போது நூல்களை அன்பளிப்பாக வழங்குவதாகும். கல்விச் செல்வத்தைப்
பெருக்கிக்கொள்வது நம்மை மென்மேலும் மேம்படுத்திக் கொள்ள உதவும். எளிதில் பகிர்ந்துகொள்ள முடிகின்ற செல்வமும் இதுவே. இப்பழக்கத்தை நான் தொடர்ந்து பல ஆண்டுகளாகக் கடைபிடித்து வருகிறேன். என் நண்பர்கள் பலர் தம் இல்ல நிகழ்வுகளின்போது நூல்களை அன்பளிப்பாகத் தந்துள்ளனர். அவ்வாறான அன்பளிப்புகளைக் காணவும், அந்த பழக்கத்தை மேற்கொள்ளவும் அன்போடு அழைக்கிறேன்.
சைவ சித்தாந்த வித்யாநிதி முனைவர் வீ.ஜெயபால் தன்னுடைய மகன்களின் திருமணத்தின்போது ஒவ்வொரு நூலை எழுதி அதற்கு அட்டையாக திருமண அழைப்பிதழை
இணைத்து வடிவமைத்திருந்தார். அவ்வகையில் அவருடைய மகன்களின் திருமணத்திற்கு அவர் எழுதிய
நூல்கள் (வெளியீடு : சைவ சித்தாந்த ஆய்வு மையம், 28 அம்மையப்பா இல்லம், கோவிந்தராஜ் நகர், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர், அலைபேசி 9443975920) பின்வருவனவாகும். மேலட்டை இரட்டை மடிப்பாகவும், பின்னட்டை ஒற்றை மடிப்பாகவும் திருமண அழைப்பிதழாக அமைந்திருந்தது.
- திருமுறைத்திருமணம் (செயல்முறை-விளக்கம்), (48 பக்கங்கள்)
- சைவ நால்வரால் பாடல் பெற்ற திருத்தலங்கள் (96 பக்கங்கள்)
- திருவிசைப்பா திருப்பல்லாண்டு சிவத்தலங்கள், அருணகிரிநாத சுவாமிகள்
அருளிச்செய்த திருப்புகழ் பாடல் பெற்ற முருகன் திருத்தலங்கள், 108 வைணவ திவ்யதேசங்கள்
(48 பக்கங்கள்)
|
வீ.ஜெ.நவகோடி நாராயணன்-து.ரேவதி திருமணம் 15.9.2011 |
|
வீ.ஜெ.மதுசூதனன்-கு.திவ்யா திருமணம் 2.3.2015 |
|
வீ.ஜெ.வேதராமன்-து.பிரீத்தி திருமணம் 11.5.2016 |
திரு அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி அவர்கள் தன் மூத்த மகன் திருமணத்தின்போது, திருமண அன்பளிப்பு என்ற குறிப்பு முதல் பக்கத்தில் இணைக்கப்பட்ட நிலையில் திருக்குறள் எளிய உரை (உரை : நல்லாசிரியர் புலவர் செக.வீராசாமி, திருவருள் பதிப்பகம், 12/91, முதல் தெரு, முதல் பிரிவு, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600 008) என்ற நூலை வழங்கினார். இளைய மகன் திருமணத்தின்போது அவராலும் அவருடைய மகனாலும் தொகுக்கப்பட்ட நூலை (தொகுப்பு : அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி, சென்னை தே.கி.மலையமான், இராசகுனா பதிப்பகம், 28 முதல் தளம், 36ஆவது தெரு, பாலாஜி நகர் விரிவு, சின்னம்மாள் நகர், புழுதிவாக்கம், சென்னை 600 091) அன்பளிப்பாக வழங்கினார். முதல் பக்கத்தில் திருமண அன்பளிப்பு என்ற நிலையிலான நூலட்டையைக்கொண்டும், இரண்டாவது பக்கம் திருமண அழைப்பாகவும் இருந்தது.
|
தே.கி.மலையமான்-பெ.சுகன்யா
திருமணம் 29.1.2012 |
|
தே.கி.பூங்குன்றன்-நெடு.கார்த்திகா திருமணம் 26.2.2016 |
திரு மா.பாலகிருட்டினன் தன் மகன் திருமணத்திற்கு அளித்த
அழைப்பிதழ் தமிழ் கற்போம் என்ற தலைப்பிலான 32 பக்கங்களைக்
கொண்ட பாதுகாத்து வைக்கப்படவேண்டிய தொகுப்பாக அமைந்திருந்தது. அந்த அழைப்பிதழ் நூலில் ஔவையாரின்
ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, சிவப்பிரகாசரின் நன்னெறி, உலக நாதரின் உலக நீதி
ஆகியவை உரையுடன் இடம் பெற்றிருந்தன. மேலும் தமிழ் எண்கள், ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு
காப்பியங்கள், 16 பேறுகள், 18 சித்தர்கள், 12 ஆழ்வார்கள், திரிகடுகம், ஐம்புலன்கள்,
அறுசுவை, கடையெழு வள்ளல்கள், நவமணிகள், நவரசம், ஐவகை இசைக் கருவிகள், எட்டுத்தொகை,
பத்துப்பாட்டு நூல்களின் தலைப்புகள், நிகண்டுகள் ஆகியவை பெட்டிச் செய்திகளாகத் தரப்பட்டிருந்தன.
மற்றும் ஓரெழுத்தொரு மொழிகள், பதினென்கீழ்க்கணக்கு நூல்கள், சிற்றிலக்கியங்கள், 63
நாயன்மார்கள், முக்கிய இலக்கண நூல்கள், இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மொழிகள்
பட்டியலிடப்பட்டிருந்தன. அழைப்பிதழின் மேலட்டையின் மணமக்கள் மற்றும் மணமகனின் பெற்றோர் புகைப்படமும், மேலட்டையின் உட்புறம் திருமண அழைப்பிதழும், பின் அட்டையின் உட்புறம் சுற்றமும் நட்பும் விடுக்கும் அழைப்பும், வெளிப்புறம் மணமகனின் பெற்றோர், சித்தப்பா சித்தி புகைப்படங்கள் இருந்தன.
|
பா.பாலு ஆனந்த்-ப.சத்யபாமா
திருமணம் 22.3.2015 |
திரு கஜேந்திரன் தன் மகள் திருமணத்தின்போது, ஸ்வாமி சிவானந்தா
எழுதிய மன அமைதி பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கை பாதை என்ற நூலை (நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, தி.நகர், பாண்டி பஜார், தியாகராய நகர், சென்னை 600 017)அன்பளிப்பாக வழங்கினார். திருமண விழா என்ற நிலையிலான குறிப்பு முதல் பக்கத்தில் மணமக்களின் புகைப்படங்களுடன் இணைக்கப்பட்டிருந்தது.
|
கவி.கயல்விழி-ஆதி.பரணி
விஜயகுமார் திருமணம் 11.5.2016 |
முனைவர் ந.அதியமான் தன் மகள் திருமணத்தின்போது, வ.உ.சிதம்பரம்பிள்ளை
எழுதிய ஜேம்ஸ் ஆலனின் மனம்போல வாழ்வு அகமே புறம் என்ற, 108 பக்கங்களைக் கொண்ட இரு நூல்களை ஒரே தொகுப்பாக (பதிப்பாசிரியர் நடராசன் அதியமான், காமினி பதிப்பகம், 43/2, பெரியப்பண்ணை சந்து, சிறுகனூர், மண்ணச்சநல்லூர் வட்டம், திருச்சி மாவட்டம் 621 123) அன்பளிப்பாக வழங்கினார். நூலின் முதற்பக்கத்தில்
மணமக்களின் புகைப்படமும், திருமண அழைப்பிதழும் அச்சிடப்பட்டிருந்தன. நூலின் பின்னட்டையில் வ.உ.சிதம்பரம்பிள்ளையின் புகைப்படமும், மணமக்கள் பெயரும், மண நாளும் குறிப்பிடப்பட்டிருந்தது.
|
அ.காயத்ரி-க.நிரஞ்சன் திருமணம்
4.9.2016 |
பதிப்பாசிரியராக, தொகுப்பாசிரியராக, நூலாசிரியராக அன்பளிப்பாக
நூலினை வழங்குதல் என்பதோடு பிறர் எழுதிய நூல்களை அன்பளிப்பாக வழங்குவதும் பாராட்டத்தக்கதாகும்.
திருமணத்தின்போது மேற்கொள்ளப்படும் செலவுகளில் பயனுள்ள செலவாக இதனைக் கொள்ளலாம்.
எங்களது பேரன் தமிழழகன் பெயர் சூட்டு விழாவின்போது, முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் எழுதிய தஞ்சைப்பெரிய கோயில் என்ற நூலை வந்திருந்த உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுத்து மகிழ்ந்தோம். அந்நூலின் முதற்பக்கத்தில் என் மகனும், மருமகளும் கையொப்பமிட்டு
இருந்தனர்.
|
முனைவர் சோ.கண்ணதாசன்-தாமரைச்செல்வி புதுமனை புகுவிழா 23.11.2017
|
|
முனைவர் சோ.கண்ணதாசன்-தாமரைச்செல்வி புதுமனை புகுவிழா அழைப்பிதழ்
முனைவர் சோ.கண்ணதாசன் அவருடைய புதுனை புகுவிழாவின்போது நடுக்காவேரி அருள்மிகு அரிபிரம்மேசுவரர் திருக்கோயிலும் பதிற்றுப்பத்தாந்தியும் என்ற அவரால் பதிப்பிக்கப்பட்ட நூலை அன்பளிப்பாக வழங்கினார். விழாவிற்கான அழைப்பிதழும் சிறப்பாக இருந்தது.
விழா நிகழ்வுகளில் நூல்களை அன்பளிப்பாகக் கொடுக்கும் பழக்கத்தைக் கடைபிடிப்போம். ஒவ்வொருவரும் இல்லத்தில் நூல் நிலையம் பேணுவோம். வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவோம்.
23 நவம்பர் 2017இல் மேம்படுத்தப்பட்டது.
|