30 November 2015

ஏகாம்பரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

12 மகாமக சைவத் தீர்த்தவாரி கோயில்களில் இதுவரை ஆறு கோயில்களுக்குச் சென்றுள்ளோம். இப்போது ஏழாவது கோயில். தொடர்ந்து மகாமகத்திற்கு முன்பாக மீதி பார்க்கவுள்ள கோயில்களுக்கும் செல்வோம்.
   
சாக்கோட்டை அமிர்தகலசநாதர் கோயிலின் கும்பாபிஷேகம் காண்பதற்காக 22.10.2015 அன்று சாக்கோட்டை சென்றுவிட்டு கும்பகோணம் வந்து ஏகாம்பரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கண்டேன். மகாமகத் தீர்த்தவாரி கோயில்கள் இரண்டை ஒரே நாளில் அடுத்தடுத்து பார்க்கும் வாய்ப்பினைப் பெற்றேன். வாருங்கள், அக்கோயிலுக்குச் செல்வோம்.

கும்பகோணம் நகரில் பழைய பேருந்து நிலையத்திற்குச் செல்லும் வழியில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு மிக அருகில் தீர்த்தவாரி கோயில்களில் ஒன்றான, மிகப்பழமை வாய்ந்த நாகேஸ்வரன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ராகுகால காளியம்மன் சன்னதி உள்ளது. அந்நிலையில் ராகுகாலக்காளியம்மன் கோயில் என்றாலே பலருக்கு இக்கோயிலைப் பற்றித் தெரிகிறது. இக்கோயிலிலுள்ள மூலவர்  ஏகாம்பரேஸ்வரர், இறைவி காமாட்சியம்மன்.




 
கோயிலின் உள்ளே நுழைந்ததும் கொடி மரத்தைக் கடந்து கருவறைக்குச் செல்லும்போது வாயிலில் விநாயகரும், சுப்பிரமணியரும் உள்ளனர். இறைவன் சன்னதியிலிருந்தே அம்மனை தரிசிக்க முடியும். இறைவனையும் அம்மனையும் தரிசித்துவிட்டு வலம்வரும்போது யாகசாலை பூசைகள் நடைபெற்றுவருவதைக் காணமுடிந்தது.  
 


திருச்சுற்றில் சுற்றிவரும்போது ராகுகால காளியம்மன் சன்னதியைக் காணமுடிந்தது. இச்சன்னதியில் ராகுகால வேளைகளில் சிறப்பு பூசை நடைபெறுவதாகவும் அதிகமான எண்ணிக்கையில் வேண்டுதலுக்காகவும், வேண்டுதலை நிறைவேற்றவும் பக்தர்கள் வருவார்கள் என்றும் கூறினர்.

குடமுழுக்கிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் கோயில் முழுவதும் ஒரே கூட்டமாக இருந்தது. குடமுழுக்கிற்கு சற்று முன்பாக பக்தர்கள் பூசைக்குரியனவற்றை தட்டில் வைத்து கோயிலைச் சுற்றிவந்து யாகசாலையில் பூசை நடைபெறுமிடத்தில் தந்தனர். 
சிறிது நேரத்தில் குடமுழுக்கிற்கான ஏற்பாடுகள் தொடர்ந்த நிலையில் கலசங்கள் கோபுரங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டன. 

இதுவரை கோயிலைச் சுற்றி வந்த பின்னர் ராஜகோபுரம் தெளிவாகத் தெரியவேண்டும் என்பதற்காக கோயிலின் வெளியே வந்தேன். விமானக்கலசங்களுக்கும் பூஜை செய்யப்பட்டு குடமுழுக்கு இனிதாக நிறைவேறியது. நிறைவாக சூடமேற்றப்பட்டபோது பக்தர்கள் பக்தியில் திளைத்தனர்.  

ஒரே நாளில் இரு குடமுழுக்கினைக் கண்ட நிலையில் கும்பகோணத்திலிருந்து மன நிறைவோடு கிளம்பினேன். மகாமகத்தில் தீர்த்தவாரி கொடுக்கு கோயில்களில் இதுவரை ஏழு கோயில்களைப் பார்த்துள்ள விரைவில் மற்ற கோயில்களுக்குச் செல்வோம்.
இக்கோயில் திறந்திருக்கும் நேரம் காலை 6.00-12.30, மாலை 4.00-8,30

---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
துணை நின்றவை
மகாமகப் பெருவிழா 2004, கும்பகோணம், இந்து சமய அறநிலையத்துறை, தமிழ்நாடு அரசு, 2004
திருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், இந்து சமய அறநிலையத்துறை, தமிழ்நாடு அரசு, 2014

24 November 2015

சிங்கமடை அய்யனார் : ஜ.பாக்கியவதி

16.10.2015 நாளிட்ட தினமணி இதழில் என் மனைவி திருமதி பாக்கியவதி எழுதியுள்ள சிங்கமடை அய்யனார் என்ற தலைப்பிலான கட்டுரையின் மேம்பட்ட வடிவத்தினைப் பகிர்வதில் மகிழ்கின்றேன். இக்கட்டுரையை வெளியிட்ட தினமணி இதழுக்கு எங்களின் நன்றி.

தினமணி, 16.10.2015 நாளில் வெளியான கட்டுரை

சிங்கமடை அய்யனார் கோயில் கோயில்பட்டிக்கும் சாத்தூருக்கும் இடையே அமைந்துள்ளது. இக்கோயில் 150 ஆண்டுகள் பழமையானது. 30 வருடங்களுக்கு முன்பு சிறிய அளவில் இருந்த இக்கோயில் பக்தர்களின் முயற்சியால் தற்பொழுது புதுப்பொலிவுடன் விளங்குகிறது. சிங்கமடை அய்யனார் சுவாமியை பல இனத்தவர்கள் தங்களது குலதெய்வமாகக் கொண்டு வழிபாடு செய்கின்றனர்.


தெய்வங்கள்
இக்கிராமக் கோயில் வளாகத்தில் உள்ள தெய்வங்களின் பெயர்கள் வித்தியாசமாக உள்ளன. கோயில் வளாகத்தில் சிங்கமடை அய்யனார் சன்னதி, நொண்டி கருப்பசாமி சன்னதி, பதினெட்டாம்படி கருப்பசாமி சன்னதி, பேச்சியம்மன் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன.  கோயில் வளாகத்தில் இத்தெய்வங்களைத் தவிர விநாயகர், சப்தகன்னியர், கருப்பசாமி, பேச்சியம்மன், முனிவர், பாம்பு, லிங்கம், வைரசாமி, முருகன், நந்தி, நாகர், வீரபத்திரர், வில்லடி கருப்பசாமி, முத்துக்கருப்பன், லாட சன்னியாசி, வல்லடமுத்து ஆகியோர் உள்ளனர். 
 
இக்கோயிலில்  தேங்காய், பூ, மொந்தன் வாழைப்பழம், சந்தனம், மாலை ,அர்ச்சனைப் பொருள்களாக உள்ளன. சிலர் மாவிளக்கு இடுகின்றனர்.  பதினெட்டாம்படி கருப்பாசாமி சன்னதியில் இரு புறமும் வாழை மரங்களும், கரும்புக்கட்டுகளும் கட்டப்பட்டுள்ளன. மொட்டையடித்தல், காதுகுத்துதல், கடா வெட்டுதல் போன்றவை இக்கோயிலில் நடத்தப்பெறுகின்றன. விழா நாளன்று மகளிர் குத்துவிளக்கு பூஜை செய்கின்றனர். முடிந்தவுடன் பொதுப்பொங்கல் வைப்பதற்காக ஆண் பெண் வேறுபாடின்றி, வயது வேறுபாடின்றி, நெல்லை உரலில் குத்துகிறார்கள். அந்த அரிசியில் வெண் பொங்கல் வைத்து, உணவின்போது பரிமாறுகின்றனர். இரவு சாமி புறப்பாடு, பூசை, குறி சொல்வது போன்றவை நடைபெறுகின்றன. இரண்டாம் நாள் காலையில் கடாவெட்டுதல் நடைபெறுகிறது. முன்பு கருப்பண்ண சாமியின் முன்பாக வெட்டுவார்களாம். இப்போது பின்வாசலில் வெட்டுவதாகக் கூறுகின்றனர். அவரவர் வேண்டுதலுக்குத் தக்கபடி செய்கின்றனர். மதியம் உணவு முடிந்தபின் குழந்தைகளுக்கு  பொது அறிவுப் போட்டி, வினா விடை போட்டி, விளையாட்டுப் போட்டி போன்றவற்றை நடத்துகின்றனர். விழாவிற்கு வந்துள்ள குழந்தைகள் அதில் ஆர்வமாகக் கலந்துகொண்டதைக் காணமுடிந்தது. இரண்டாம் நாள் இரவு மேளதாளத்துடன் முளைப்பாரி, அக்னி சட்டியெடுத்தல், மூங்கில் குச்சியை வட்டமாக அமைத்து தீப்பந்தம் கொளுத்துதல் போன்றவை சிறப்பாக நடைபெற்றன. சாமி வடிவத்தில் முளைப்பாரியை வடிவமைத்திருந்தது பார்க்க அழகாகவும் வித்தியாசமாகவும் இருந்தது. பார்க்க மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.  
மகள்கள் வழிபாடு
மகள்கள் (பொம்பளை மக்கள்) வழிபடும் தெய்வங்களான ராக்கச்சி, மாடான், மாடத்தி, பாதாளகண்டிகை ஆகிய தெய்வங்களும் இங்கு உள்ளன. மகள்கள் இத்தெய்வங்களுக்கு தனியாக வழிபாடு நடத்துகின்றனர். ஓலைக்கொட்டானில் தேங்காய், வாழைப்பழம் வைத்து பூஜை செய்கின்றனர்.  இதனைப் பெட்டிப்பழம் என்று கூறுகின்றனர். வேறு எந்த குலதெய்வக் கோயில்களிலும் இல்லாத சிறப்பு வழிபாடாக மகள்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர்.
திருவிழா ஏற்பாடு
சுவாமி புறப்பாடு, பூசைகள்,    பங்காளிகள் நன்கொடை வசூலித்து கோயிலில் கட்டடப்பணியை மேற்கொள்கிறார்கள். அன்னதானமும் செய்கின்றார்கள். விழா நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே கோயிலை சுத்தம் செய்வதற்காக குழு அமைத்து சுத்தம் செய்து, பந்தல் கட்டுதல், சுண்ணாம்பு அடித்தல், அன்னதானத்திற்கான ஏற்பாடு உள்ளிட்ட நிகழ்வுகளில் ஈடுபடுகின்றனர். விழாவிற்கு வந்தவர்கள் எங்கெங்கெல்லாம இடம் இருக்கிறதோ அங்கெல்லாம் குடும்பத்துடன் சமையல் செய்து இரு நாள் அல்லது மூன்று நாள் தங்கிச் செல்கின்றனர். சிவன் ராத்திரியைக் கணக்கிட்டு ஒரு வாரத்திற்கு நள்ளிக்கோயில் கூட்டமாக இருக்கும் என்று அங்கு தற்காலிகமாகக் கடை வைத்துள்ளவர்கள் கூறினர். விழாக்காலத்தில் மட்டும் மக்கள் வந்து செல்வதாகவும், பிற நாள்களில் அங்கு யாரும் இருக்க மாட்டார்கள் என்றும், ஈ காக்கையைக் கூடப் பார்க்கமுடியாது என்றும் கூறினர்.  திருவிழா முடிந்தபின் இவர்கள் அங்கு தங்கி அதற்கான கணக்கினை ஒப்படைத்துவிட்டு வருவதாகக் கூறினர். திருவிழாவிற்கு காவலுக்கு வரும் பாதுகாவலரையும் குடும்ப உறுப்பினராக பாவிக்கின்றனர். அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் வந்திருந்த போதிலும் எந்தவொரு அசம்பாவிதமும் நடைபெறாமல் விழா சிறப்பாக நடைபெற்றதைக் காணமுடிந்தது. விழா முடிந்தபின்னர் கோயில் முகவரியிட்ட மஞ்சட்பையில் கரும்பு, வாழைப்பழம், தேங்காய், விபூதி, குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருள்களை கோயில் பிரசாதமாகத் தந்தனர். கிராமத்தில் உறவினர்களுடன் கோயிலில் இரு நாள்கள் தங்கி விழா நிகழ்வுகளைக் கண்ணாரக் கண்டு ஊருக்குத் திரும்பினோம்.
நன்றி 
கோயிலின் முழு வளாக புகைப்படம் : திரு மணிகண்டன் ஏமராஜன்
களத்தில் உதவி : கும்பகோணம் திருமதி சிங்கதேவி லோகேஷ் 
-----------------------------------------------------------
தினமணி இதழில் இக்கட்டுரையைக் கீழ்க்கண்ட இணைப்பில் படிக்கலாம்:
-----------------------------------------------------------

20 November 2015

கம்பட்ட விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம்

மகாமகத்தின்போது மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி காணும் 12 சைவக் கோயில்களில் இதுவரை ஐந்து கோயில்கள் பார்த்துள்ள நிலையில் ஆறாவது கோயிலுக்குச் செல்வோம்.

26.10.2015 அன்று கும்பகோணத்தில் பல கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றது. அக்கோயில்களில் தீர்த்தவாரி சைவக்கோயில்களான அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், பாணபுரீஸ்வரர், கம்பட்ட விஸ்வநாதர் கோயில்களுக்கும், காவிரியில் தீர்த்தவாரி வைணவக்கோயில்களில் ஒன்றான வராகப்பெருமாள் கோயிலுக்கும் சென்றோம். இப்பயணத்தில் நாங்கள் சென்ற கோயில்களில் இதுவரை மூன்று சிவன் கோயில்களைப் பார்த்த நிலையில் இப்பதிவின் வழியாக இதே நாளில் குடமுழுக்கு கண்ட நான்காவது கோயில் கம்பட்ட விஸ்வநாதர் கோயில்.


தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் கும்பேஸ்வரர் கோயிலுக்குத் தென்மேற்கு திசையில், மௌனசுவாமி மட வளைவுக்கு அருகே இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு அருகிலுள்ள அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் நான் படித்த நிலையில் (1972-75) இக்கோயிலுக்கு பல முறை சென்றுள்ளேன். கோயிலின் நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றால் கொடி மரம், பலிபீடம், நந்தியைக் காணமுடியும்.  

அதற்கு அடுத்து உள்ளே செல்லும்போது அழகான ராஜகோபுரத்தைக் காணலாம். ராஜகோபுரத்திற்கு அடுத்துள்ள மண்டப முகப்பில் இறைவன், இறைவியும் காளையின் முன்பாக அமர்ந்த கோலத்தில் உள்ளனர். அருகே விநாயகரும் முருகனும் உள்ளனர். பிரளய காலத்தில் அமுத கும்பத்திலிருந்த மாலை இங்கு விழுந்ததால் இத்தலத்தை மாலதிவனம் என்றழைக்கின்றனர். முகப்பின்கீழே மாலதி வனம் என்று எழுதப்பட்டிருந்தது. 

கருவறையில் கம்பட்ட விஸ்வநாதரைத் தரிசித்தோம்.  தஞ்சாவூரையும், பழையாறையையும் சோழர்கள் தலைநகரங்களாகக் கொண்டு ஆட்சிசெய்த காலத்தில் இங்கு பொற்காசு அடிக்கும் நிலையங்கள் (கம்பட்டம் என்றால் பொன், வெள்ளி நாணயங்கள் அடிக்குமிடம் என்று பொருள்) இருந்ததால் மூலவரை கம்பட்ட விஸ்வநாதர் என்றழைக்கப்படுவதாக அறிந்தோம். பின்னர் இறைவியைத் தரிசித்தோம். பின்னர் கும்பாபிஷேகம் கண்ட இரு விமானங்களையும் கண்டோம். 



இக்கோயில் திறந்திருக்கும் நேரம் காலை 6.00-12.30, மாலை 4.00-8.30

கம்பட்ட விஸ்வநாதரைத் தரிசித்த பின்னர் தஞ்சாவூருக்குக் கிளம்ப ஆயத்தமான போது அருகில் உள்ள, அதே நாளில் கும்பாபிஷேகம் ஆன திரௌபதியம்மன் கோயிலுக்குச் சென்றோம். கும்பகோணத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.  திரௌபதியம்மனை தரிசித்துவிட்டு மன நிறைவுடன் கிளம்பினோம்.


 
---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
துணை நின்றவை
மகாமகப்பெருவிழா 2004 கும்பகோணம், இந்து சமய அறநிலையத்துறை,தமிழ்நாடு அரசு

13 November 2015

Writer of 250 articles in Tamil Wikipedia: The New Indian Express

தமிழ் விக்கிபீடியாவில் 250 பதிவுகளை நிறைவு செய்தது தொடர்பான எனது அனுபவங்களைப் பற்றிய கட்டுரை இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் வெளியாகியுள்ளது. அவ்விதழுக்கு நன்றி.



இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் வெளியான இக்கட்டுரையை இங்குடிக்கலாம். 

விக்கிபீடியா தொடர்பான எனது பதிவுகள்: 
செப்டம்பர் 2014 : விக்கிபீடியாவில் 100ஆவது பதிவு
சூன் 2015 : விக்கிபீடியா 200ஆவது பதிவு, 5000ஆவது தொகுப்பு
ஆகஸ்டு 2015 : விக்கிபீடியாவில் பயனராவோம்
ஆகஸ்டு 2015 : விக்கிபீடியாவில் கட்டுரை எழுதுவோம்
அக்டோபர் 2015 : ஆங்கில விக்கிபீடியாவில் 100, தமிழில் 250 கட்டுரைகள் நிறைவு
அக்டோபர் 2015 : முன்னோடி விக்கிபீடியா எழுத்தாளர் விருது
நவம்பர் 2015 :  விக்கிபீடியாவில் முதற்பக்கம் பங்களிப்பாளர் அறிமுகம்
நவம்பர் 2015 : Writer of 250 articles in Tamil Wikipedia: The New Indian Express

10 November 2015

கும்பகோணம் காளஹஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

26.10.2015 அன்று கும்பகோணத்தில் பல கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றன. அக்கோயில்களில் மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி காணும் சைவக்கோயில்களான அபிமுகேஸ்வரர்,  பாணபுரீஸ்வரர், கம்பட்ட விஸ்வநாதர் , காளஹஸ்தீஸ்வரர் கோயில்களுக்கும், காவிரியில் தீர்த்தவாரி காணும் வைணவக்கோயில்களில் ஒன்றான வராகப்பெருமாள் கோயிலுக்கும் சென்றோம். இப்பதிவின் வழியாக கம்பட்ட காளஹஸ்தீஸ்வரர் கோயிலுக்குச் செல்வோம், வாருங்கள்.

காவிரியாற்றில் தென் கரையில் அமைந்துள்ள இக்கோயில், பெரிய மடத்திற்கு சற்று முன்னதாக உள்ளது. கல்லூரி நாள்களில் (1975-79) இக்கோயிலைக் கடந்துதான் நண்பர்கள் குழாமாகக் கல்லூரிக்குச் செல்வோம். ஆனால் அப்போது இக்கோயிலைப் பற்றி அறிந்திருக்கவில்லை. 

காளத்தி என்றால் நம் நினைவிற்கு வருவது தேவார மூவரால் பாடப்பெற்ற, கண்ணப்பர் வழிபட்டு பேறுபெற்ற, திருக்காளத்தி எனப்படும் காளஹஸ்தியாகும். அவ்வாறான பெயரில் கும்பகோணத்தில் ஒரு கோயில் உள்ளது என்பதை, விக்கிபீடியாவிற்காகக் கும்பகோணத்திலுள்ள கோயில்களைப் பற்றி எழுத ஆரம்பித்தபோது அறிந்தேன். அந்த வாய்ப்பு கும்பாபிஷேகம் காண உதவியது. 
அழகான ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றோம். உள்ளே சென்றதும் ஒரு மண்டபம் இருந்தது. மண்டப முகப்பில் நடராஜர் சிலை மிகவும் அழகாக அமைந்திருந்தது. 

உள்ளே சென்றதும் ஒரு மண்டபம் இருந்தது. மண்டப முகப்பில் நடராஜர் சிலை மிகவும் அழகாக அமைந்திருந்தது. கொடி மரத்தைக் கடந்து உள்ளே மூலவர் கருவறையில் இருந்த காளஹஸ்தீஸ்வரரைக் கண்டோம், தரிசித்தோம். 

தொடர்ந்து இறைவியின் சன்னதிக்குச் சென்றோம். ஞானாம்பிகை அம்மனை தரிசித்தோம். திருச்சுற்றில் வலம் வரும்போது கும்பாபிஷேகம் ஆன கருவறை விமானங்களைக் கண்டோம். இக்கோயிலுக்கு காமாட்சி ஜோசியர் தெருவின் வழியாகவும் வரலாம். 




கோயிலில் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம். 
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 6.00-12.30, மாலை 4.00-இரவு 8.30 


வரும் வழியில் அதே நாளில் கும்பாபிஷேகம் ஆன பகவத் விநாயகர் கோயிலுக்குச் சென்றோம். இங்குள்ள பகவ ரிஷியை புத்தர் என்று வரலாற்றறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் குறிப்பிட்டிருந்ததை எனது பௌத்த ஆய்வின்போது படித்துள்ளேன். அந்நிலையில் இக்கோயிலுக்கு முன்னரே பல முறை ஆய்விற்காக வந்துள்ளேன். விநாயகரையும் பகவரையும் பார்த்துவிட்டு, அடுத்த கோயிலுக்குக் கிளம்பினோம்.



கும்பகோணத்தில் யானையடி என்று பெயர்பெற்ற இடத்தின் அருகே அமைந்துள்ள யானையடி அய்யனார் கோயில் நாங்கள் சென்ற அடுத்த கோயில். இக்கோயில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை எதிரே அமைந்துள்ள விநாயகர் கோயிலில் அமைக்கப்பட்டிருந்தது. யாகசாலையைப்பார்த்துவிட்டு எதிரே உள்ள அய்யனார் கோயிலுக்கு வந்தோம். மூலவராக அய்யனார் பூரணை புஷ்கலையுடன் உள்ளார். கருவறையின் வெளிப்புறம் வலப்புறத்தில் ஐயப்பன் சன்னதி சற்றே உயர்ந்த தளத்தில் உள்ளது. தரிசனத்தை முடித்துவிட்டு மன நிறைவோடு அங்கிருந்து கிளம்பினோம். 


--------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------
உங்களுடன் பகிர்ந்துகொள்ள மற்றொரு மகிழ்ச்சியான செய்தி
தமிழ் விக்கிபீடியாவின் முதற்பக்கத்தில் பங்களிப்பாளர் அறிமுகம்
நவம்பர் 1, 2015 முதல் என்னைப் பற்றிய பங்களிப்பாளர் அறிமுகம் தமிழ் விக்கிபீடியாவில் முதற்பக்கத்தில் வெளியாகிறது என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இந்த அறிமுகமானது தொடர்ந்து சில நாள்களுக்கு முதல் பக்கத்தில் காணப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்கின்றேன். 
--------------------------------------------------------------------------

06 November 2015

கும்பகோணம் பாணபுரீஸ்வரர் கோயில்

26.10.2015 அன்று கும்பகோணம் பகுதியில் கும்பாபிஷேகம் நடைபெற்ற 14 கோயில்களில் மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி காணும் சைவக்கோயில்களான அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், பாணபுரீஸ்வரர், கம்பட்ட விஸ்வநாதர் கோயில்கள் உள்ளிட்ட ஒன்பது கோயில்களுக்குச் சென்றோம். கடந்த பதிவில் அபிமுகேஸ்வரர் கோயில் சென்ற நாம் இப்போது பாணபுரீஸ்வரர் கோயில் செல்வோம்,  வாருங்கள்.



கும்பகோணம் நகரின் மையப்பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது. ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றோம். திருப்பணிகண்ட கொடிமரம் மிகவும் அழகாக இருந்தது. முன்மண்டபத்தைக் கடந்து உள்ளே கருவறையில் இருந்த பாணபுரீஸ்வரரைக் கண்டோம். 

வெளியில் வரும்போது அத்தலத்தின் வரலாற்றோடு தொடர்புடைய அழகான ஓவியங்களைக் கண்டோம். மகாபிரளயத்தின்போது மிதந்து வந்த அமுதக் கும்பத்தினை எம்பெருமான் உடைக்கத் திருவுளம் கொண்டபோது இவ்விடத்திலிருந்துதான் கும்பத்தின்மீது பாணத்தைத் தொடுத்ததாகவும், பாணம் தொடுத்த இடமாதலால் பாணாதுறை என்று அழைக்கப்படுவதாகவும், அதன் காரணமாகவே இறைவன் பாணபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுவதாகவும் கூறினர். 


ஓவியங்களைப் பார்த்துவிட்டு கருவறையைச் சுற்றிவந்தோம். கும்பாபிஷேகம் முடிந்து சில மணி நேரங்கள் ஆன நிலையில் கோயிலில் கூட்டம் குறைவாகவே இருந்தது. 


மூலவர் கருவறை விமானத்திலும், இறைவியின் கருவறை விமானத்திலும் உள்ள கும்பங்களைக் கண்டு தரிசனம் செய்தோம். 



கும்பாபிஷேகம் கண்ட அக்கோயிலில் சிறிது நேரம் அமர்ந்திருந்தோம். ஒரே நாளில் அடுத்தடுத்து கோயில்களைப் பார்க்கவேண்டியிருந்ததால் அங்கிருந்து அடுத்த கோயிலைப் பார்க்கக் கிளம்பினோம்.

(கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 6.00-12.30, மாலை 4.00 முதல் இரவு 8.30)

கோயிலைவிட்டு வெளியே வரும்போது எதிரில் இருந்த சித்திவிநாயகர் கோயிலைக் கண்டோம். அக்கோயிலும் அதே நாளில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் விநாயகரைத் தரிசித்துவிட்டு அடுத்த கோயிலுக்கு எங்களது பயணத்தைத் தொடர்ந்தோம்.  


----------------------------------------------------------------------------------------------
மகாமகத்தில் தீர்த்தவாரி கொடுக்கும் சைவக்கோயில்கள்
  • காசி விஸ்வநாதர் கோயில் (நவகன்னியர் அருள்பாலிக்கும் இடம்)
  • கும்பேஸ்வரர் கோயில் (அமிர்தகலசத்திலிருந்து குடமூக்கு தங்கிய இடம்)
  • நாகேஸ்வரர் கோயில் (வில்வம் விழுந்த இடம்)
  • சோமேஸ்வரர் கோயில் (உறி விழுந்த இடம்)
  • கோடீஸ்வரர் கோயில், கொட்டையூர் (அமிர்தத் துளிகள் விழுந்த இடம்)
  • காளஹஸ்தீஸ்வரர் கோயில் (சந்தனம் விழுந்த இடம்)
  • கௌதமேஸ்வரர் கோயில் (பூணூல் விழுந்த இடம்)
  • அமிர்தகலசநாதர் கோயில், சாக்கோட்டை (கலச நடுப்பாகம் விழுந்த இடம்)
  • பாணபுரீஸ்வரர் கோயில் (வேடுவ உருவில் சிவன், பாணம் எய்த இடம்)
  • அபிமுகேஸ்வரர் கோயில் (தேங்காய் விழுந்த இடம்)
  • கம்பட்ட விஸ்வநாதர் கோயில் (புஷ்பங்கள் விழுந்த இடம்)
  • ஏகாம்பரேஸ்வரர் கோயில் (மற்ற உதிரி பாகங்கள் விழுந்த இடம்)
----------------------------------------------------------------------------------------------
துணை நின்றவை
மகாமகப்பெருவிழா 2004 கும்பகோணம், இந்து சமய அறநிலையத்துறை,தமிழ்நாடு அரசு
----------------------------------------------------------------------------------------------
தஞ்சாவூர் மாவட்டம் விக்ரமம் என்னுமிடத்தில் நாங்கள் பார்த்த புத்தர் சிலையைக் கண்ட அனுபவத்தைக்  காண எனது முதல் வலைப்பூவிற்கு அழைக்கிறேன். 1999இல் முதல் முறை தனியாக. தற்போது நண்பர் திரு கரந்தை ஜெயக்குமார் மற்றும் திரு அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி ஆகியோருடன்.  
----------------------------------------------------------------------------------------------

01 November 2015

விக்கிபீடியாவில் முதற்பக்கம் பங்களிப்பாளர் அறிமுகம்

இன்று (நவம்பர் 1, 2015) முதல் என்னைப் பற்றிய பங்களிப்பாளர் அறிமுகம் தமிழ் விக்கிபீடியாவில் முதற்பக்கத்தில் வெளியாகிறது என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இந்த அறிமுகமானது தொடர்ந்து சில நாள்களுக்கு முதல் பக்கத்தில் காணப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்கின்றேன். தமிழ் விக்கிபீடியாவில் பங்களிக்கத் தொடங்கி 250 கட்டுரையை அண்மையில் நிறைவு செய்த நிலையில் இவ்வாறான ஒரு அறிமுகம் என்னை மென்மேலும் எழுத ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்.
பங்களிப்பாளர்கள் பக்கத்தில் என்னைப் பற்றிய அறிமுகம்
தமிழ் விக்கிபீடியாவின் முதல் பக்கத்தை முழுமையாகவும், தொடர்ந்து தெளிவிற்காக தனித்தனியாகப் பிரித்தும் தந்துள்ளேன். 
தமிழ் விக்கிபீடியா முதல் பக்கம் முழுமையாக (நவம்பர் 1, 2015) 

தமிழ் விக்கிபீடியா முதல் பக்கம் முதல் பகுதி

இரண்டாம் பகுதி

மூன்றாம் பகுதி

நான்காம் பகுதி

முதல் பக்கத்தில் பங்களிப்பாளர் அறிமுகம் நவம்பர் 1, 2015


பங்களிப்பாளர் அறிமுகம்

பா. ஜம்புலிங்கம்தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றுகின்றார். கும்பகோணத்தைச் சேர்ந்த இவர், சூலை 2014 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்கத் தொடங்கி 250 கட்டுரைகள் எழுதியுள்ளார். விக்கித் திட்டம் சைவம் மூலம் கும்பகோணத்திலுள்ள கோயில்கள், தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தியுள்ளார். மகாமகம்நல்ல தமிழ் எழுத வேண்டுமா? (நூல்),சோழர்கள் (நூல்)சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்தஞ்சைப் பெரிய கோயில் தேரோட்டம்இளைய மகாமகம் 2015தமிழ்நாட்டில் பௌத்தக் கோயில்கள்தேனுகா (எழுத்தாளர்)திருவூடல் ஆகியன இவர் எழுதிய கட்டுரைகளில் சில. தமிழர்  அல்லாதோரும்  தமிழின், தமிழ்நாட்டின் பெருமையை அறியவேண்டும் என்ற நன்னோக்கிலும் தமிழ் விக்கிப்பீடியா தந்த அனுபவத்திலும் ஆங்கில விக்கிப்பீடியாவில் மே 2015 தொடங்கி இதுவரை 100 கட்டுரைகள் எழுதியுள்ளார்.

முதற்பக்கத்தில் மேற்கண்ட குறிப்பு இடம்பெற்றுள்ளது. இவ்வாறாக என்னைப் பற்றிய அறிமுகம் முதல் பக்கத்தில் வெளிவரக் காரணமாக இருந்த அனைத்து விக்கிபீடிய நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வலைப்பூக்களில் எழுத ஆரம்பித்து அந்த அனுபவமே என்னை விக்கிபீடியாவில் எழுத உதவி செய்த நிலையில் சக வலைப்பதிவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

வாருங்கள் விக்கிபீடியாவில் எழுதுவோம், நாம் பார்த்ததை, படித்ததை, சிந்தித்ததை, நேசித்ததை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் பகிர்ந்துகொள்ள தமிழ் விக்கிபீடியாவை ஒரு தளமாகப் பயன்படுத்துவோம் வாருங்கள்.
--------------------------------------------
தமிழ் விக்கிபீடியா முதல் பக்கம் முழுமையாக (நவம்பர் 15, 2015) 
முதற்பக்க பங்களிப்பாளர் அறிமுகம் 15 நவம்பர் 2015 வரை திரையில் காணப்பட்டது.
--------------------------------------------

16 நவம்பர் 2015 அன்று மேம்படுத்தப்பட்டது.