18 May 2021

எங்கள் நண்பன் நாகராஜன்

 50 ஆண்டு கால நண்பன் நாகராஜன் உடல்நலக்குறைவின் காரணமாக நேற்றிரவு எங்களை சொல்லொணாத்துயரில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டான். செய்தியை எங்களின் நண்பன் கும்பகோணம் நண்பர் சிற்பக்கலைஞர் ராஜசேகரன் நா தழுதழுக்க கூறியபோது அதிர்ந்துவிட்டேன்.அவன் குடும்பத்தாருக்கு எப்படி ஆறுதல் சொல்லித் தேற்றுவது?

மாறாப்புன்னகை, கடின உழைப்பு, அன்பின் உறைவிடம், நட்பின் இலக்கணம், பொறுமையின் சிகரம் என்ற அனைத்திற்கும் பொருத்தமானவன். கும்பகோணத்தில் நானும் அவனும் செல்லாத தெருக்களே இல்லை. நடந்தே போவோம். பேசுவோம், பேசுவோம், பேசிக்கொண்டே இருப்போம். என்ன பேசுவோம்? ஆனால், மனதில் உள்ள சுமை குறைந்ததுபோல இருக்கும். பெரிய நிம்மதி கிடைக்கும்.

கும்பகோணம் மகாமகக்குளக்கரையில், 2016

தஞ்சாவூரில் எங்கள் இல்லத்தில், 2016

கும்பகோணம் செல்வம் இல்லப் புதுமனை புகுவிழாவில், 2017

கும்பகோணம் நண்பர் இல்லத் திருமணத்தில், 2017


கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில், 2019


கும்பகோணம் ராஜசேகரன் சிற்பக்கூடத்தில், 2021

தாராசுரம் கோயில், கும்பேஸ்வரர் கோயில் பிரகாரம், ராமஸ்வாமி கோயில் பிரகாரம், மகாமகக்குளப்படித்துறை, அவன் வீட்டிற்கருகே உள்ள அம்மன் கோயில் மண்டபம் என்று பல இடங்களில் உட்கார்ந்து பேசிக்கொண்டே இருப்போம். 40 ஆண்டுகளுக்கு முன்பாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கண்பார்வை இழந்த நிலையிலும் வாழ்வினை மிகவும் இலகுவாக எடுத்துக்கொண்டு வாழ்ந்தவன். பல நிகழ்வுகளில் அவனை நாங்கள் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்வோம்.

தாராசுரம் அருகே உள்ள மேலச்சத்திரத்திற்குச் செல்லும்போது நாங்கள் செல்லும் முக்கியமான இடம் நாங்கள் தாயாகக் கருதுகின்ற துர்க்கையம்மன் உள்ள பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் கோயில். அம்மாவைப் பார்க்கப்போகலாமா? என்பான். கிளம்புவோம். நடக்க ஆரம்பிப்போம். வயல் வரப்புகளைப் பார்த்துகொண்டு பேசிக்கொண்டே செல்வோம். கோயிலில் சென்றவுடன் வழக்கமாக துர்க்கையம்மன் அணிந்திருக்கும் புடவையின் வண்ணத்தைக் கேட்பான், கூறுவேன். பிற அலங்காரங்களை ஒவ்வொன்றாகக் கூறுவேன். எங்களைப் பொறுத்தவரை இப்பகுதியில் உள்ளோர் பட்டீஸ்வரம் துர்க்கையை ஒரு கடவுளாக எண்ணிப்பார்ப்பதில்லை. எங்களின் ஏற்றஇறக்கங்களில் துணை நிற்கும் தாயாகவும், உடன் பிறந்த சகோதரியாகவும், நினைக்கிறோம். அத்திருமேனியைப் பார்த்துக் கொண்டே மெய்ம்மறந்து நிற்போம். எங்களின் எண்ணங்கள் ஒரே மாதிரியாகவே இருக்கும். நண்பர்களுடன் நேரில் பேசுவதைப் போல நாங்கள் துர்க்கையம்மனிடம் பேசிவிட்டு மன நிறைவுடன் வெளியே வருவோம். பள்ளிச்சிறுவனாக இருந்த காலம் முதல் இன்று வரை எங்களுக்குத் துணை நிற்பவள் அவளே. அடுத்த முறை பட்டீஸ்வரம் செல்லும்போது துர்க்கையம்மன், ஏன் உன் நண்பனை அழைத்துக்கொண்டு வரவில்லை என்று கேட்பாள் என்று எனக்குத் தெரியும். அது அவளுக்கும் தெரியும்.

கும்பகோணத்தில் சூழல் காரணமாக எங்கள் வீடு விற்ற சங்கடத்தில் நான் இருந்தபோது வாழ்வில் சாதிக்க எவ்வளவோ இருக்கிறது என்று கூறி மன தைரியம் கொடுத்த நண்பர்களில் இவனும் ஒருவன்.

கொரொனா ஊரடங்கிற்கு முன்பாக என் மூத்த மகன் பாரத்துடன்  சென்றிருந்தேன். கடந்த நாள்களை நினைவுகூர்ந்தான். மகிழ்ச்சியோடு பேசினான்.

நண்பனே, நீ என்றுமே எங்கள் நினைவில் நிற்பாய். உன் உழைப்பும், மன தைரியமும் எனக்கு ஒரு பாடமாக என்றும் இருக்கும்.