29 March 2017

இளைஞர்கள் முன்னேற்றம், வாசிப்பின் தேவை : திரு உட்கோட்டை பழனியப்பன்

கடந்த பதிவில் நாம் திரு உட்கோட்டை பழனியப்பன் அவர்கள் எழுதிய எளிது எளிது ஐ.ஏ.எஸ்.தேர்வு என்னும் நூலை வாசிக்கும் வாய்ப்பினைப் பெற்றோம். மாணவர்களை உருவாக்க அவர் விரும்புகின்றார். அதற்காக அதிகமான உத்திகளைக் கொண்டுள்ளார். நூலாசிரியர் அவர்கள் கீழ்க்கண்டவை உள்ளிட்ட பல தலைப்புகளில் நூல்களை எழுதும் பெரிய திட்டங்களைக் கொண்டுள்ளார். 
  • உலகத்தந்தையர்கள் 
  • ஒருவரிச்செய்திகள் 
  • அகரவரிசையில் பொது அறிவுச்செய்திகள்
  • மெகா குவிஸ் 
  • உலகத் தலைவர்கள் வாழ்க்கை வரலாறு 
  • உலக விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறு 
  • தமிழர்கள் அறிவு ஜீவிகள் 
  • சுருக்கக்குறியீடு விரிவாக்க விளக்கம் 
  • மதிப்புமிக்க மாற்றுத் திறனாளிகளின் சாதனைகள் 
  • மாணவர்கள் என்ன படிக்கலாம்?
அரியலூர் மாவட்டம் உட்கோட்டையைச் சேர்ந்த நூலாசிரியர் திரு உட்கோட்டை பழனியப்பன் (9789640173) அண்மையில் இன்று (29 ஏப்ரல் 2017) இல்லம் வந்திருந்தார். அவரது நூல்களின் பணி குறித்து அவரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. 


ஆர்வமாகப் படித்தால் ஆட்சியராகக்கூட பொறுப்பேற்கலாம் என்று விவாதத்தைத் தொடங்கிய அவர் கூறியவை என்னை வியப்பில் ஆழ்த்தின. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புகுமுக வகுப்பில் பயின்ற இவருடன் பேசும்போது முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியருடன் பேசும் மன நிலை எனக்கு ஏற்பட்டது. உடன் என் மூத்த மகன் திரு பாரத் இருந்தார். இன்றைய இளைஞர்களுக்கு அவர் கூறும் அறிவுரைகள் உற்றுநோக்கத்தக்கன, கடைபிடிக்கவேண்டியன. 
  • பெற்றோர்கள் இளம் வயதிலேயே குறிப்பாக ஐந்தாம் வகுப்பு ஆறாம் வகுப்பு படிக்கும்போதே நாம் நம் பிள்ளைகளுக்கு வாசிக்கும் பழக்கத்தை உண்டாக்க வேண்டும். 
  • அவ்வாறு வாசிக்கும் மாணவர்கள் பள்ளியிறுதித் தேர்வு நிறைவு பெறும் நிலையில் அடுத்து என்ன படிக்கலாம் என்ற தெளிவான எண்ணத்தைப் பெறுவார்கள்.
  • அவர்களுடைய கனவுகளை நினைவாக்க இவ்வாறான பழக்கம் மிகவும் உதவியாக உள்ளது. 
  • பள்ளியிறுதித்தேர்வு முடிக்கும் நிலையில் அடுத்த மேல் படிப்பு தொடர எளிமையான வழிமுறைகளைக் கற்றுக்கொண்டு விடுகின்றனர். 
  • கல்லூரிக்குச் சென்று பின்னர் முடிவெடுப்பதற்கு முன்பாகவே தெளிவாக முடிவெடுக்கும் மன நிலையைப் பெறுகின்றார்கள்.
  • இன்றைய மாணவர்கள் வித்தியாசமான மன நிலையில் சிந்திக்கிறார்கள். புதுமையை விரும்புகின்றார்கள். அவர்களின் எண்ணத்தைப் பூர்த்தி செய்யும் நிலையில் பெற்றோர் பொதுவாக இருப்பதில்லை.
  • மாணவர்கள் பள்ளிக்கூடம் செல்லவேண்டும், பெற்றோர்கள் நூலகம் செல்லவேண்டும் என்று அன்றே தந்தை பெரியார் கூறினார். அவற்றை கடைபிடிக்கவேண்டியது அவசியமாகும். 
  • நம்மை கனவு காணுங்கள் என்று கூறி உற்சாகப்படுத்திய இந்திய குடியரசுத் தலைவர் மேதகு ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் அவர்கள் தினசரி இரண்டு மணி நேரம் படித்தால் மாமனிதராகலாம் என்று கூறியதை நாம் நினைத்துப் பார்த்து, செயல்படுத்தவேண்டும்.  
  • வலைதளங்களும், சிறிய திரைகளும், பெரிய திரைகளும் இளைஞர்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிட்டன. பெரும்பாலான பெற்றோர்களும் தொலைக்காட்சி அடிமைகளாகிவிட்டனர். பெற்றோர் பிள்ளைகள் படிக்க உதவுவதோடு தாம் தொலைக்காட்சி பார்ப்பதை குறைத்துக்கொள்ளல் நலம். டிஸ்கவரி, க்விஸ், அனிமல் ப்ளானட் போன்ற பயனுள்ள தளங்களை பார்ப்பது அவசியமாகும்.
  • தொலைக்காட்சியில் வெளியாகும் செய்திகளை பார்ப்பதற்கு நேரம் ஒதுக்கி கவனமாகத் தொடர்ந்து பார்க்கும் வழக்கத்தை மேற்கொள்ளவேண்டும்.
  • மாணவர்கள் புத்தகப்புழுக்களாக இருந்து அதிக விழுக்காட்டில் மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவதை மட்டுமே இலக்காகக் கொண்டுள்ளனர். அவர்கள் மதிப்பெண் பெறுவது மட்டுமே தேவை என்ற நிலைக்கு ஆளாக்கப்படுகின்றார்கள். ஆனால் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் மட்டுமே வெளியுலக நடப்புகள், பொது அறிவுக்கல்வி என்பனவற்றில் முன்னுக்கு வருகின்றனர்.    
  • பள்ளி, கல்லூரிப்படிப்பு படிப்போருக்கு படிப்பறிவு மட்டுமே இருக்கும். நூலகம் செல்வோருக்கு நூல் அறிவு, நுண்ணறிவு, நினைவாற்றல் திறன், ஆய்வுத்திறன், மொழித்திறன் போன்ற பன்முகத் திறன் காணப்படும்.  இவ்வாறாக பன்முகத்திறன் பெற்றவர்கள் போட்டித்தேர்வில் பங்குபெறவும், எளிதாக வெற்றி பெறவும் வாய்ப்பினைப் பெறுவர்.
  • இன்றைய மாணவர்களின் கனவுகளை மேம்படுத்திக்கொள்ள உரிய ஆலோசனைகள் வழங்கினால் சாதனை புதிய தயாராக உள்ளார்கள். அவர்கள் வழிகாட்டுதல் இன்றி தவிக்கின்றார்கள். அவர்களுக்கு உரிய முறையில் வழிகாட்டும்போது சாதனை புரிவார்கள்.
  • கல்லூரியில் படிக்கும்போதே எந்த மாணவர் அந்த நான்காண்டு காலத்தில், படிப்புடன் தன் திறனை வளர்த்துக்கொள்கிறாரோ அவருக்கு எதிர்காலம் வளமாக அமையும். கல்லூரியில் பயிலும் காலத்தை முறையாகப் பயன்படுத்தாதவர்கள் வாழ்வில் மேன்மையடையது சற்று சிரமமே.
  • 1000 மாணவர்களுக்காவது வழிகாட்டவேண்டும் என்ற ஓர் இலக்கை வைத்து அந்த நோக்கில் சென்று சென்றுகொண்டிருக்கும் அவர், தம்மை அணுகிய மாணவர்களை ஊக்கப்படுத்துகிறார். அவ்வாறான சில மாணவர்களைப் பற்றி அவர் கூறியது : 
  • சராசரி மாணவரால்தான் சாதனை படைக்கமுடியும் என்பதற்கு தன் மகனையே அவர் சான்றாகக் கூறுகிறார். அவருடைய மகன் பட்டப்படிப்பு முடித்து MSc. MTech முடித்து முனைவர் பட்டம் மேற்கொண்டு வருவதாகவும், சராசரி மாணவரான தன் மகன் முனைவர் பட்ட அளவு மேற்கொள்ளும் அளவு உயர்த்தியது தன்னுடைய ஆலோசனையை என்று பெருமையோடு கூறினார். தன்னை உயர்த்திய வாசிப்புப் பழக்கம், தன்னையும், தன்னைச் சார்ந்தோரையும் உயர்த்துவதற்கு உதவியாக உள்ளது என்று பெருமையோடு கூறினார். 
  • திருச்சியைச் சேர்ந்த பள்ளியிறுதித்தேர்வு முடித்த ஒரு மாணவி புதுமையான படிப்பு படிக்க விரும்பி அவரிடம் ஆலோசனை கேட்க வந்தபோது, அவர் மன நிலையை அறிந்து கணிப்பியல் அறிவியல் Actuarial Science என்ற பாடப்பிரிவைப் பற்றிக் கூறும்போது அம் மாணவர் அப்படிப்பில் சரியென்றுகூறி அதில் சேர்ந்துள்ளார்.
  • 1078 மதிப்பெண் எடுத்த ஒரு மாணவர் மருத்துவப்படிப்பு சேர விரும்பி, கிடைக்காத நிலையில் அவரை இளம் அறிவியல் தொடங்கி அதில் முனைவர் பட்டம் வரை படிக்கக் கூறியபோது அவர் அவ்வாறே செய்துள்ளார். தற்போது அம்மாணவர் திருச்சியில் அரசு உதவி பெற்ற கல்லூரியில் பணியாற்றி வருகிறார். படிப்பில் ஏற்றத்தாழ்வு என்பதை அம்மாணவர் உணர்ந்துகொண்டார்.  
பள்ளிப்படிப்பு மற்றும் கல்லூரிப்படிப்பு முடித்து வேலைக்குச் செல்ல விரும்புவோர்கள், எந்த படிப்பு படிக்கவேண்டும் என்ற ஐயத்தில் உள்ளவர்கள் ஆலோசனை பெற அவருடைய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

27 March 2017

எளிது எளிது ஐ.ஏ.எஸ் தேர்வு : உட்கோட்டை பழனியப்பன்

அண்மையில் நான் படித்த நூல் திரு உட்கோட் பழனியப்பன் அவர்கள் எழுதியுள்ள எளிது எளிது : ஐ.ஏ.எஸ். தேர்வு என்னும் நூல். 

இந்திய ஆட்சிப்பணி, இந்திய ஆட்சிப்பணியின் மூன்று கட்டத் தேர்வுகள், நூலகம் சென்று படிப்பது, பயிற்சி மையம், ஐஏஎஸ் தேர்வு பற்றிய பயம் இருக்கிறதா? பொதுத்தேர்வும், போட்டித்தேர்வும், சிவில் சர்வீஸ் தேர்வின் பிரிவுகள், சிவில் சர்வீசஸ் தேர்வின் 26 பணிகள் பற்றிய விவரங்கள், ஐ.ஏ.எஸ்.தேர்விற்குப் பிறகு பயிற்சி, ஐ.ஏ.எஸ்.தேர்வில் வெற்றி பெற்ற பல தரப்பினர்கள் சாதனை, மாதிரி வினாக்கள் என்ற தலைப்பிலான பொருளடக்கத்தைக் கொண்டு இந்நூல் அமைந்துள்ளது.

இந்திய ஆட்சிப்பணி (சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும், சிவில் சர்வீஸ் தேர்வின் சிறப்பு அம்சங்கள், மத்தியப் பணியாளர் தேர்வாணையம், தேர்வு எழுதத் தகுதிகள், விண்ணப்பிப்பது, விண்ணப்பங்கள் அனுப்பும்போது கவனிக்கவேண்டியவை), இந்திய ஆட்சிப்பணியின் மூன்று கட்டத் தேர்வுகள் (முதல் நிலைத்தேர்வு, முதன்மை நிலைத்தேர்வு, நேர்முகத்தேர்வு),  நூலகம் சென்று படிப்பது (நூலகப் படிப்பின் மூலம் உயர்ந்தவர்கள், நூலகப் படிப்பின் மூலம் ஐ.ஏ.எஸ்.தேர்வானவர்கள், நூலகங்களில் உள்ள வசதிகள்), பயிற்சி மையம் (பயிற்சி மையங்கள், பெண்களுக்கான இலவசப் பயிற்சி, ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதத் தாட்கோ உதவித்தொகை, ஐ.ஏ.எஸ்.தேர்வுக்குப் பயன்படும் படிபப்புகள்) போன்ற தலைப்புகள் பல உட்தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளன.

இந்நூலைப் பற்றி அரியலூர் மாவட்ட  ஆட்சியர் அணிந்துரை : 
"இன்றைய காலகட்டத்தில் திறன்மிக்க மாணவ மாணவிகள் இந்திய ஆட்சிப்பணியைப் பெற மிகவும் விரும்புகின்றாரகள். ஆனால போட்டித் தேர்வை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும், அதில் வெற்றி பெறுவதற்குதிரய வழிகள் யாவை என்பதை எல்லாம் அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஐ.ஏ.எஸ்.கனவுடன் வாழும் அனைவருக்கும் இந்நூல் பேருதவி புரியும் என்பது உறுதி.. இந்திய இளைஞர்கள் தன்னம்பிக்கையோடு இத்தேர்வினை எதிர்கொண்டால் ஏதாவது ஒரு பணியில அமரலாம். ஆதலால் ஊக்கத்துடன் முயல்வதற்கு இந்நூல் உங்களுக்குக் கையேடாக உதவும். நகர்ப்புற இளைஞர்களுக்குப் பல வாய்ப்புகள் அமையும். ஆனால், கிராமப்புற இளைஞர்களுக்கு இந்நூல் ஒன்றுதான் வாய்ப்பாக ஏணியாக அமையும்....."  

இந்நூலைப் பற்றி நூலாசிரியர் :  
"போட்டிகள் நிறைந்த உலகில் வெறும் பட்டத்தை மட்டும் வைத்துக் கொண்டு வேலைக்குச் செல்ல முடியாத சூழல் இப்போது உள்ளது. படிப்பறிவோடு பட்டறிவையும் பன்முகத்திறமையும இளைஞர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்....நாள் தவறாமல் நூலகம் சென்று வாசிக்கின்ற பழக்கத்தை மாணவர்கள் ஏற்படுத்திக் கொண்டால் பல போட்டித் தேர்வுகளை அவர்களால் எளிதில் எதிர்கொண்டு வெற்றி பெற முடியும்....இளைஞர்கள் தொலைக்காட்சி, கைபேசி, இணையதளம், வைலைதளம், வீடியோ விளையாட்டு முதலானவற்றிற்கு அடிமையாகிவிட்டால் ஒரு ரோபோவைப் போல் இயந்திரமாகிவிடுவர். இதனால் மூளையில் பாதிப்பு உண்டாகி நினைவாற்றல் குறையும்....ஆதலால் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக   நின்று அவர்களைப் பக்குவப்படுத்தி அவர்களது வாழ் உயர்த்துவது மூத்தோர் கடமையாம். அக்கடமைக்கு அணில் உதவியாக யான் பாடுபட உள்ளேன்....." 

ஐ.ஏ.எஸ். எனப்படுகின்ற இந்திய ஆட்சிப்பணிக்கான தேர்விற்கான இரு தாள்களுக்குரிய பாடங்கள் (400 மதிப்பெண்கள்), முதன்மைநிலைத் தேர்விற்கு உள்ள ஒன்பது தாள்களுக்குரிய பாடங்கள் (2350 மதிப்பெண்கள்) மற்றும் நேர்முகத்தேர்வு (275 மதிப்பெண்கள்) என்றவாறு தேர்வின் அமைப்பினைத் தொடங்கி பறவைப்பார்வையாக தேர்வுடன் தொடர்புடையனவற்றை ஆசிரியர் விவாதிக்கும் விதம் படிப்போர் மனதில் பதியும் வகையில் உள்ளது.

தேர்வு எழுதவேண்டியோர் வைக்கவேண்டிய நம்பிக்கை, உறுதியான எண்ணம், நேர்மறை சிந்தனை ஆகியவற்றைப் பற்றி மிகவும் நுணுக்கமாக ஆசிரியர் எழுதியுள்ளார். இத்தேர்வினை எழுதி நல்ல நிலையில் உள்ளோர், அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சி ஆகியவற்றையும் எளிதாகப் புரியும் வகையில் பகிர்ந்துள்ளார். தேர்வு எழுதுவதற்கான தகுதிகள், மதிப்பெண்கள் விவரம், எத்தனை முறையில் எழுதலாம், எங்கு தேர்வு எழுதவேண்டும் என்ற நிலையில் ஒன்றுவிடாமல் அனைத்தையும் ஆசிரியர் திரட்டித் தந்துள்ளார். எந்தந்த நூல்களைப் படிக்கவேண்டும், எந்தந்த இதழ்களைப் படிக்கவேண்டும், நாளிதழ்கள் வாசிப்பதன் முக்கியத்துவம், தொலைக்காட்சிச் செய்திகளைக் கேட்பதில் உள்ள பலன், ஆங்கில இதழ்களைப் படிக்க வேண்டிய காரணம், நாட்டு நடப்புகளை விரல் நுனியில் வைத்துக் கொள்ளவேண்டியதன் தேவை என்ற வகையில் தேர்வு எழுதுவோரின் கண்ணோட்டத்தில் ஆராய்ந்துள்ளார்.  பலர் விண்ணப்பித்தாலும்  குறைந்த அளவிலானர்களே  தேர்வு எழுதுகின்றனர் என்றும் கூறி, விண்ணப்பித்தவர்கள் பின்வாங்குவதற்கான காரணங்களையும் விளக்குகின்றார்.  

ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி, அஞ்சல் மூலம் படித்தவர், தொழில்நுட்பப்பயிற்சி முடித்தவர், ஏழாவது முயற்சி, தமிழ் வழி, நூலகப்படித்து நிறைவு செய்தவர் என்ற பல தரப்பினர்களின் சாதனைகளை ஆசிரியர் பட்டியலிட்டுள்ளார். அவர்களுடைய அனுபவங்களைப் படிக்கும்போது நம்மாலும் படித்து தேர்ச்சி பெற முடியும் என்ற எண்ணத்தை படிப்பவர் மனத்தில் ஆழப் பதிக்கிறார் ஆசிரியர். 

ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத விரும்புவோருக்கு அனைத்துச் செய்திகளையும் கொண்டு அமைந்துள்ள நூல் அவர்களுடைய பல ஐயங்களை தெளிவிப்பதோடு, நம்மால் எழுத முடியும், தேர்ச்சி பெற முடியும், நல்ல பதவியைப் பெற வேண்டும் என்ற ஓர் எண்ணத்தை விதைக்கிறது. இக்காலகட்டத்திற்குத் தேவையான இந்நூலைப் படிப்போம், பயன்படுத்திக்கொள்வோம், வாருங்கள்.

நூல் : எளிது எளிது ஐ.ஏ.எஸ்சி. தேர்வு
ஆசிரியர் :  உட்கோட்டை பழனியப்பன் (04331247427/9789640173)
பதிப்பகம் : தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் வளர்மதி பதிப்பகம், வடக்குத்தெரு, உட்கோட்டை அஞ்சல், அரியலூர் மாவட்டம் 612 901 
ஆண்டு : ஏப்ரல் 2015
விலை : ரூ.120

25 March 2017

அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி (1972-1975) : இனிய நினைவுகள்

கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பினை (1971-72) நிறைவு செய்து தேர்வு முடிவினை எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரம். விளையாடிக் கொண்டும், அனாவசியமாக பொழுதுபோக்கிக் கொண்டும் இருக்கக்கூடாது என்று கூறிய என் தாத்தா விடுமுறை நாள்களில் அவருக்குத் தெரிந்த பைண்டிங் ஆபீசில் வேலைக்குப் போகக் கூறினார். முதன்முதலாக அப்போதுதான் வேலைக்குப் போகிறேன். தாள் கட்டுகளை அடுக்குதல், கோடு போட்ட தாள்களை கணக்குப் பதிவேட்டுக்குரியவை, பிற பதிவேட்டுக்குரியவை, மூலை வெட்டப்படவேண்டியவை, காலிகோ ஒட்டப்படவேண்டியவை என்று ரகம் வாரியாகப் பிரிக்கக் கூறினர். பெரும்பாலும் கணக்குப்பதிவேடுகள் (Account ledgers) அங்கு கோடு அச்சேற்றம் செய்யப்பட்டு, நூற்கட்டு செய்யப்படும். காலையிலும், மாலையிலும் அனைவருக்கும் தேநீர் வாங்கித்தருவதும் என் வேலையில் அடங்கும். தேநீர்க்கடையில் சென்று அவர்கள் கொடுக்கும் தூக்கில் ஐந்து அல்லது ஆறு தேநீர்க் குடுவைகளில் எடுத்துக் கொண்டு சென்று தருவது வேலையாக இருந்தது. சில சமயங்களில் வெட்டிய அல்லது கோடு போட்ட தாளை தலையில் வைத்துக்கொண்டு போய் அந்தந்த கடையில் கொடுக்கவேண்டும். முதலில் இதுபோன்ற வேலைகளைப் பார்ப்பதில் அவமானமாகவும், வெட்கமாகவும் இருந்தது. உழைத்தால்தான் முன்னுக்கு வரமுடியும் என்ற என் தாத்தாவின் கூற்றுப்படி அனைத்தையும் முகம் சுளிக்காமல் செய்தேன். 

பள்ளியா, பைண்டிங் ஆபீசா?
தேர்வு முடிவு வந்து மேற்கொண்டு பள்ளியில் சேர்ப்பதா அப்படியே வேலையிலே தொடர்வதா என்று பேச்சு வந்தது. நான் படிக்க ஆசைப்படுவதாக வலியுறுத்துக்கூறவே, பள்ளியைத் தேடும் படலம் ஆரம்பமானது. வற்புறுத்திக் கூறாமலிருந்தால் பைண்டிங் ஆபிசிலேயே தொடர்ந்து வேலை பார்த்திருப்பேன்.

நகராட்சி உயர்நிலைப்பள்ளி (1972-75)
கும்பகோணத்தில் உள்ள பள்ளிகளில் ஒவ்வொன்றாக ஆராய்ந்து கடைசியில் வீட்டின் அருகே இருக்கின்ற பேட்டைத்தெருப் பள்ளி என்று கூறப்படுகின்ற நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் சேர்த்தனர். 

ஓரளவு கண்டிப்பிற்கும், படிப்பிற்கும் அப்போது அப்பள்ளி பேசப்பட்ட நிலையிலும், வீட்டிற்கு அருகில் இருப்பதாலும் அங்கு சேர்த்தனர். ஆசிரியர்கள் அனைவரும் எங்களை நல்வழிப்படுத்தினர். ஓவிய வகுப்பு, விளையாட்டு என்பனவும் உண்டு. 
புகைப்படம் நவம்பர் 2017

புகைப்படம் நவம்பர் 2017
ஆசிரியர்கள்
9ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை வகுப்பு ஆசிரியர், பாட ஆசிரியர் என்று பல ஆசிரியர்களைக் காண முடிந்தது. ஆர்.டி. என்கிற திரு துரைக்கண்ணு (தலைமையாசிரியர்), திரு ஏ.செல்லப்பா, பி.கே. என்கிற திரு பி.கல்யாணசுந்தரம் (வகுப்பு ஆசிரியர்கள்) திரு தண்டபாணி தேசிகர், திரு தட்சிணாமூர்த்தி, திரு சோமா, கே.ஜி.என்கிற கி.ஞானசுந்தரம் (தமிழ் ஆசிரியர்கள்), திரு கிருபாமூர்த்தி, திரு கருப்பையன், திரு ச.கல்யாணசுந்தரம் (விளையாட்டு ஆசிரியர்கள்), திருமதி மல்லிகா, திரு எஸ்.சம்பந்தம், சி.கே. என்கிற திரு சி.கிருட்டிணமூர்த்தி (பிற பாடங்களுக்கான ஆசிரியர்கள்) என்று ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக ஆசிரியர் வகுப்பெடுத்தது வித்தியாசமாக இருந்தது.

கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில்  ஒன்பதாம் வகுப்பு (IX Std B Section, 1972-73), பத்தாம் வகுப்பு (X Std A Section, 1973-74),  11ஆம் வகுப்பு (பழைய எஸ்.எஸ்.எல்.சி, XI Std A Section, 1974-75) ஆகிய வகுப்புகளைப் படித்தேன். நான் சேரும்போது முனிசிபல் உயர்நிலைப்பள்ளி (Municipal High School) என்றிருந்த பள்ளியானது அரசு உயர்நிலைப்பள்ளி (Government High School) என்றாகி, அறிஞர் அண்ணா அரசு உயர்நிலைப்பள்ளி (Arignar Anna Government High School) என்ற பெயரையும் பெற்றது. 

11ஆம் வகுப்பில் மொழிப்பாடம் பகுதி 1 (தமிழ்), மொழிப்பாடம் பகுதி 2 (ஆங்கிலம்), கணக்கு, அறிவியல், வரலாறு & புவியியல், விருப்பப்பாடம் (வரலாறு) ஆகியவற்றை தமிழ் வழியாகப் (Tamil medium) படித்தேன்.  600க்கு 311 மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்றேன்.

நாங்கள் படித்தபோது இருந்த அதே முதன்மை நுழைவாயில்

நாங்கள் படித்த ஒன்பதாம் வகுப்பு இருந்த இடம்
பல வகுப்புகளைக் கொண்ட கட்டடமாக மாறியுள்ளது

நாங்கள் படித்த பத்தாம் வகுப்பு இருந்த இடம் 
பல வகுப்புகளைக் கொண்ட கட்டடமாக மாறியுள்ளது

நாங்கள் படித்த 11ஆம் வகுப்பு இருந்த இடம் 
பல வகுப்புகளைக் கொண்ட கட்டடமாக மாறியுள்ளது

பிற வகுப்புகளைக் கொண்டுள்ள கட்டடங்கள்

பிற வகுப்புகளைக் கொண்டுள்ள கட்டடங்கள்

பள்ளி அலுவலகம்

பெரிய மாற்றமடையாத பள்ளியின் விளையாட்டு மைதானம்


பள்ளியின் பிறிதொரு தோற்றம் (கும்பகோணம்-தஞ்சாவூர் சாலை)

படிப்பும், விளையாட்டும்
வீட்டுப்பாடங்களை அவ்வப்போது முடிக்காவிட்டால் திட்டுவார்கள். திட்டுக்குப் பயந்து முடித்துவிடுவோம். சில சமயங்களில் ஏமாற்றுவதும் உண்டு. மாணவர்கள் ஏதாவது தவறு செய்துவிட்டால் செய்தி தலைமையாசிரியருக்குச் சென்றுவிடும். அவர் வருவதைக் கண்டாலே எங்களுக்கு நடுக்கம் வந்துவிடும்.  தவறு செய்த மாணவர்களின் பெயரைக் குறிப்பிடாமல் அங்கு நடந்த தவறைப் பற்றிக் கூறிவிட்டு, எச்சரித்துவிட்டுச் செல்வார். விளையாட்டுப் போட்டிகளில் எதுவும் ஆர்வம் இல்லாத நிலையில் உயரத்தாண்டல், நீளத்தாண்டல் போன்ற அடிப்படையானவற்றில்கூட ஈடுபாடு இல்லாத நிலையில் அதற்காக குறைந்த அளவு ஒன்றினைக் குறித்துக்கொள்வார்கள். கொஞ்சமாவது விளையாட்டில் ஆர்வம் செலுத்து என்பார் ஆசிரியர். 

ஒலிபெருக்கியில் கேமரா?
நாங்கள் எட்டாவது படிக்கும்போது ஒவ்வொரு அறையிலும் முதன்முதலாக ஒலிபெருக்கி வைத்தார்கள். அவ்வாறு வைக்கும்போது எங்களிடம் அந்த ஒலிபெருக்கியில் ஒரு கேமரா இருப்பதாகவும் வகுப்பில் நடப்பது அனைத்தையும் தலைமையாசிரியர் அவரது அறையில் இருந்து கவனித்துக்கொண்டே இருப்பார் என்றும் பயமுறுத்திவிட்டனர். அதை நாங்கள் நம்பி ஒலிபெருக்கியை நோக்கி இருக்கும் நிலையில் பவ்வியமாக நடந்துகொள்வதையும், ஒலிபெருக்கி கண்ணுக்குப் படாத இடங்களில் குறும்புகளைச் செய்ய ஆரம்பித்தோம்.

மயில் ஓவியம்
எங்கள் ஓவிய ஆசிரியர் வரைந்த படங்களில் எங்களுக்குப் பிடித்தது மயில். மிக அழகாக எளிதாக அனைவரும் வரையும் படி அவர் வரைந்து காட்டுவார். 

நான்மாடக்கூடல்
தமிழ் ஆசிரியர் நான்மாடக்கூடல் எனப்படும் மதுரையைப் பற்றிப் பேசும் போது மாடங்கள் நிறைந்த ஊர் என்றவாறு பொருள்கொள்ளும் வகையில் பின்வருமாறு பேசினார். ஒவ்வொரு சொற்றொடருக்கும் அவர் கூறிய விளக்கம் தமிழின்பால் எங்களை ஈர்த்தது.
  • நான்மாடக்கூடலில் நிற்கிறேன்
  • நான் மாடக்கூடலில் நிற்கிறேன்
  • நான்மாடக் கூடலில் நிற்கிறேன்
ராஜ நாகம்
பள்ளியில் நிகழ்ச்சிகள் நடக்கும்போது மாணவர்கள், அப்போது ஸ்ரீகாந்த் நடித்து வெளிவந்த ராஜநாகம் திரைப்படத்தில் வருகின்ற மாணவன் நினைத்தால் நடத்திக் காட்டுவான் என்ற பாடலை அதிக சத்தத்தில் வைத்து, ஆசிரியர்களை கோபப்படும்படி செய்வர். 

ராஜராஜ சோழன் மீசை
நாங்கள் படித்துக்கொண்டிருக்கும்போது ராஜராஜசோழன் திரைப்படம் வெளியானது. ஆசிரியர் பி.கே., ராஜராஜ சோழனைப்போல மீசையை சில நாள் வைத்திருந்தார். சிவாஜி கணேசனின் நடிப்பைப் பற்றி வகுப்பில் அவர் பேசியது இன்னும் நினைவிலிருக்கிறது.

உடன் பயின்றவர்கள்
தயாளன் (சாரங்கபாணி தெற்கு வீதி), இளஞ்சேரன் (மாணவர் விடுதி), செல்வம், ராஜு (பழைய அரண்மனைத்தெரு), சண்முகசுந்தரம் (அண்ணாலக்ரகாரம்), மனோகரன், குமாரராஜா (தாராசுரம்), பாலகிருஷ்ணன் (மல்லுக செட்டித்தெரு), ஜான்முகமது (மணிக்காரத்தெரு), பாஸ்கர் (கவரத்தெரு), அன்பழகன், ராதாகிருஷ்ணன் (தோப்புத்தெரு) உள்ளிட்ட பல நண்பர்கள் எங்களோடு படித்தவர்கள் ஆவர்.

பள்ளியின் பெயர் மாற்றம்
பள்ளியில் சேர்ந்தபோது இருந்த பெயர் (Municipal High School) மாற்றம் படித்து முடித்து வெளியே வரும்போது (Arignar Anna Govt High School) அறிஞர் அண்ணா அரசு உயர்நிலைப்பள்ளி என்ற பெயரைப் பெற்றிருந்தது. 

கருப்புப்புள்ளி
அப்போதைய ஏதாவது தப்பு செய்தால் நடத்தைச் சான்றிதழில் கருப்புப்புள்ளி வைத்துவிடுவோம், உங்களால் வேறு பள்ளிக்குப் போய் படிக்க முடியாது, வேலைக்கும் போகமுடியாது என்பார். அவருடைய சத்தத்திற்கும் மிரட்டலுக்கும் பயந்து படிக்க ஆரம்பிப்போம். அவருடைய மிரட்டல் எங்களை நாங்களே திருத்திக்கொள்ள மிகவும் உதவியது. அவர் அவ்வாறு யாருக்கும் வைக்கவில்லை என்பதை பின்னர்தான் அறிந்தோம்.
   
தேர்வு எண் 132430
என்னுடைய SSLC தேர்வெண் 132430 ஆகும். முதன்முதலில் நான் மனனம் செய்து வைத்த எண் இது. தேர்வு முடிவு நாளிதழில் வருவதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். தேர்வு முடிவினை செய்தித்தாளில் எதிர்பார்ப்பது என்பது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. முடிவு வெளியான நாளன்று எங்கள் தெருவான சம்பிரதி வைத்தியநாதய்யர் அக்கிரகாரத்திலிருந்து கிளம்பி (தற்போது கே.ஜி.கே. தெரு) கும்பேஸ்வரர் கோயில் மேல வீதியும், வடக்கு வீதியும், சிங்காரம் செட்டித்தெருவும் சந்திக்கும் இடத்தில் நண்பர்களோடு காத்திருந்தோம். பேப்பர்காரப் பையனிடம் பேப்பரை அவசியமாக வாங்கி ஒவ்வொருவராக அவசரம் அவசரமாக படபடப்புடன் பார்த்தோம். அனைவருமே வெற்றி பெற்றோம் என்பது ஒரு மகிழ்ச்சியான செய்தியாக இருந்தது. அவரவர்கள் வீட்டில் சென்று அனைவரிடமும் செய்தியைப் பகிர்ந்துகொண்டோம்.

பாலசந்தரின் பாதிப்பு
பள்ளிக்காலத்தில்தான் முதன்முதலாக இயக்குநர் கே.பாலசந்தரின் படங்களின்மீதான ஆர்வம் ஆரம்பித்தது. அதற்குக் காரணம் அப்போது குடும்பம் இருந்த சூழல். பள்ளிப்பருவம் ஒரு விளையாட்டுப் பருவமாக இருந்தாலும்கூட வீட்டுச் சூழலானது எங்களது மகிழ்ச்சியை அதிகம் குறைத்துவிட்டது. ஒரு குடும்பத்தை கட்டிக்காத்து நடத்துவது என்பதை எங்கள் தாத்தா மேற்கொண்டதால், வீட்டுச்செலவுகளை கணக்கிட்டு மேற்கொண்டபோது வீட்டு நிலையை அறிந்தேன். குடும்பத்தைக் காப்பாற்ற கதாநாயகி படும் சிரமத்தை அரங்கேற்றம் (1973) திரைப்படத்தில் பார்த்தேன். தொடர்ந்து சற்றொப்ப அதே வகையிலான கதையைக் கொண்ட அவள் ஒரு தொடர்கதை (1974) குடும்பத்தின் மீதான பொறுப்பை நான் உணர ஒரு தூண்டுகோலாக அமைந்தது. வாழ்க்கையில் நான் கால் ஊன்றவும், தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும் உதவியவை இந்த இரு திரைப்படங்களுமே. நம்மைப் படிக்க வைக்க வீட்டார் படும் சிரமத்திற்கு முடிவு ஏற்படவேண்டும் என்று என் மனம் சிந்திக்க ஆரம்பித்தது. விளையாட்டுப் பருவமாக இருந்த நிலையிலும் வீட்டுச்சூழலும் வளர்க்கப்பட்ட நிலையும் அவ்வாறான எண்ணத்தை மனதில் விதைத்துவிட்டது. 

எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றபோது இருந்த நிலையே 11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றபின்னரும் இருந்தது. மற்ற நண்பர்களுக்கெல்லாம் தேர்வு முடிவு மகிழ்ச்சியாக அமைய என்னைப் பொறுத்தவரை மேற்கொண்டு படிப்பா, வேலையா என்ற நிலையில்  மனதில் குழப்பம் தோன்ற ஆரம்பித்தது. படிப்பைத் தொடர முடியும் நிலையில் குடும்பம் உள்ளதா? வேலைக்குப் போய்த்தான் ஆகவேண்டுமா? என்ற மாறுபட்ட எண்ணங்களில் படிப்புக்கனவுகள் சிறிது சிறிதாக மறைய ஆரம்பித்தன. 

நன்றி
இக்கட்டுரை எழுதும்போது பல நண்பர்களின் பெயரை நினைவூட்டிய நண்பர் திரு தயாளன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.  
மனதில் நிற்கும் திருமஞ்சன வீதி பள்ளி 




அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியைப் பற்றி விக்கிபீடியாவில் நான் ஆரம்பித்த பதிவினை மேற்கண்ட இணைப்பில் காணலாம். இப்பள்ளியில் படித்த மாணவர்கள், பயிற்றுவித்த ஆசிரியப்பெருமக்கள், நண்பர்கள் இப்பள்ளி தொடர்பான செய்திகளை வலைதள இணைப்புடனோ, பிடிஎப் வடிவிலோ எனக்கு (drbjambulingam@gmail.com) அனுப்பிவைத்தால் விக்கிபீடியாவிலுள்ள நம் பள்ளி தொடர்பான பதிவினை மேம்படுத்த முடியும். இருக்கும். இந்த முன்னாள் மாணவனின் முயற்சிக்கு உங்கள் அனைவருடைய ஒத்துழைப்பு பெரிதும் உதவும்.

17 ஜனவரி2022இல் பதிவு மேம்படுத்தப்பட்டது.

18 March 2017

சிவ வடிவங்கள் : மா. சிவகுருநாத பிள்ளை

அண்மையில் நான் மறுமுறை படித்த நூல் தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடுகளில் ஒன்றான, சைவத்தமிழ்மணி வித்துவான் மா.சிவகுருநாத பிள்ளை எழுதியுள்ள சிவ வடிவங்கள் என்னும் நூல். 

சிவ வடிவங்கள், அருஉருவம், உருவம், அருவம், இலக்கிய வடிவம் என்ற முதன்மைத் தலைப்புகளைக் கொண்டுள்ள இந்நூலின் பின்னிணைப்பாக சிவ வடிவங்கள் பற்றிய பல்வகைச்செய்திகள், பரத கண்டத்திற்கு வெளியில் உள்ள நாடுகளிலுள்ள சிவ வடிவங்கள் என்ற தலைப்பிலான பதிவுகள் உள்ளன.
இந்நூலைப் பற்றி துணைவேந்தர் முனைவர் சி.பாலசுப்பிரமணியன்: 
"சைவத் தமிழ்மணி அவர்கள் தம் இளமைக் காலந்தொட்டு ஈடுபாடு கொண்டுள்ள சிவநெறி பற்றியும் சிவநெறியின் மூல முதற்பொருளான சிவம் பற்றியும் அவர்க்குக் குறியீடாக விளங்கும் சிவலிங்கம் பற்றியும் தெளிவான ஒரு பேராய்வு செய்தே இந்நூலினைத் தமிழக மக்களுக்கு வழங்கியுள்ளார்கள். சிவலிங்கம் பற்றிய தத்துவக் கருத்துகள், நின்ற, இருந்த, கிடந்த கோலத்து சிவலிங்கங்கள், சிவலிங்க அமைப்பு பற்றிய விவரங்கள் ஆகியவை பற்றி நுண்மாண் நுழைபுலம் கொண்டு இந்நூலில் ஆய்வு மேற்கொள்ளப் பெற்றுள்ளது...... காவியச்செல்வராக விளங்கும் இந்நூலாசிரியர் அவர்கள் ஓவியச் செல்வராகவும் விளங்கும் தன்மையை இந்நூலிலுள்ள ஓவியங்கள் நம்மை உணர்த்துகின்றன....."

இந்நூலில் ஆசிரியர் சிவலிங்கத்தின் தத்துவக் கருத்துகள், அமைப்பு, கூறுகள், அறிவியல் தத்துவம், அளவு, மூவகைக்கோலம், மூவகை, நால்வகை, ஐவகை, எண்வகை லிங்கங்கள், மண், நீர், அனல், காற்று, வெளி வடிவம், ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒரு முகம், முகலிங்க அமைப்பு, கோடி லிங்கம், நவலிங்கங்கள், பன்னிரு சோதி லிங்கங்கள்,  சிவலிங்கத் தோற்றங்கள், சிவாலயங்களில் லிங்கத் தொகுதிகள், மூவகைச் சிற்பங்கள், சிவ வடிவத் திருமுகங்கள், மகேசுவர வடிவங்கள் 25, சிவ பராக்கிரமத்தில் 64 வடிவங்கள், தியான வடிவம், மந்திர வடிவம் என்பன போன்ற பல தலைப்புகளில் ஆழ்ந்து எழுதியுள்ளார். உரிய இடங்களில் புகைப்படங்களை இணைத்துள்ளார். பல இடங்களில் தான் வரைந்த படங்களையும் தந்துள்ளார். இந்நூலின் குறிப்பிடத்தக்கனவற்றில் சிலவற்றைக் காண்போம். 


சிவலிங்கம் என்ற சொல்லில் லிங்கம் என்னும் தொடர் சித்தரித்தல் என்று பொருள்படும். சிவபிரான் படைப்பு முதலான ஐந்தொழில்களாலும் பிரபஞ்சத்தைச் சித்தரிக்கின்றதால் சிவலிங்கம் எனப் பெயர் பெற்றது என்பர். (ப.5)  

குடந்தையாகிய கும்பகோணத்திற்கும் சுவாமிமலைக்கும் இடையில் உள்ள தேவாரத்தலம் திருக்கொட்டையூர். இங்குக் கருவறையில் உள்ள மூல லிங்கம் கோடிலிங்கம், கோடிச்சுரர் என்ற பெயருடன் விளங்குகிறது. இவ்விலிங்க சிவபாகத்தில் சிறுசிறுவடிவில் (பலாப்பழம் போல) பல காணப்படுகிறது.  (ப.71)

ஆதிகும்பேசுவரர் எனச் சிறப்புடன் அழைக்கப்பெறும் (கும்பகோணம் கும்பேசுவரர்) கும்ப லிங்கம் மண் வடிவில் உள்ளதாகும். (ப.80)

குடிமல்லத்தில் அமைந்துள்ள கி.மு.இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதான புகழ் வாய்ந்த இலிங்க மீதான சிவ வடிவம் தன்னிகரற்ற முற்பட்ட சாலிவாகன கலைத்திறத்திற்கோர் எடுத்துக்காட்டாகும். (ப.82)

சிவ வடிவில் கிடந்த கோல நிலை குறிப்பாக ஒரு இடத்தில் உள்ளது. சென்னை மாநகரத்திலிருந்து திருப்பதி செல்லும் வழியில் 60 கிமீ. தொலைவில் தமிழகத்து எல்லையில், ஊத்துக்கோட்டை என்ற ஊருக்கு இரண்டு கி.மீ. தூரத்தில் ஆந்திர மாநிலச் சோதனைச் சாவடியை அடுத்துள்ள சுருட்டப்பள்ளி என்ற சிற்றூரில் விளங்கும் சிவாலயத்தில் இருக்கும் நஞ்சுண்ட கடவுள் (விடாபகரணர்) வடிவ சயனக் கோலத்தில் இருக்கிறது. (ப.101)

சிவ வடிவங்களில் சதாசிவ வடிவமே எல்லா வடிவத் தோற்றங்களுக்கும் பிறப்பிடமாகும். ஆறு ஆதாரங்களுள் ஆறாவது ஆதாரத்தில் மனோன்மணி என்ற சக்தியுடன் விளங்குவது சதாசிவமாகும்....சதாசிவவடிவத் திருமேனி மற்ற சிவ வடிவங்களை ஒப்ப எங்கும் கோயில்களில் இருப்பதில்லை. விரல்விட்டு எண்ணிச் சொல்லும் வகையில் சில இடங்களில் கருங்கல், சுதை, உலோகம் இவற்றால் ஆனவை உள. இவ்வாறு உள்ள வடிவங்களும் நித்திய வழிபாட்டில் இல்லாது காட்சிப் பொருளாகத்தான் உள்ளது. ஒரு சில அருங்காட்சியகங்களிலும் இருக்கிறது. (ப.122)

தமிழ்நாட்டில் திருமணஞ்சேரி, திருவேள்விக்குடி, திருவீழிமிழலை, பந்தணைநல்லூர் முதலிய தலங்களில் கலியாணசுந்தரரைக் காணலாம்.  (ப.151) 

வலப்பாதி சிவ வடிவமாயும், இடப்பாதி உமையாகவும் இருக்கும் கோலம் மாதொருபாகன். சிவ பாகத்தில் தோலாடை, காதில் குழை, பால் வெண்ணீறு, கையில் சூலம் காணப்படும். உமை பாகத்தில் துகில் ஆடை, சுருள் தோடு, பசுஞ்சாந்து, கிளி கையில் வளை காணப்படும். இக்கோல வடிவு நான்கு திருக்கரங்களுடனும், மூன்று திருக்கரங்களுடனும், இடபத்தின் அருகில் நிற்கும் நிலையில் பலவிதமாகக் காணப்படும். சில சிவத்தலங்களில் வலப்பால் உமையாகவும, இடப்பால் சிவமாகவும் திருவேள்விக்குடியில் இருக்கிறது. (ப.178)

பெருமான் ஒற்றைக்காலில் நான்கு திருக்கரங்களுடன், இவரது பாதத்தின் வலப்பக்கம் பிரமனும், இடப்பக்கம் திருமாலும் நான்கு கரங்களுடன் இருக்கும் தோற்றம் ஏகபாத திரிமூர்த்தி ஆகும். (ப.190)

காண வீடுபேறளிக்கும் சிதம்பரத்தின்கண் சிற்பர வியோமமாகிய பரவெளியில் ஆனந்தக் கூத்தியற்றும் ஆடவல்லானின் திருவடிவம் திருவைந்தெழுந்தால் ஆனதாகும். சிதம்பரம் அல்லாத மற்றத் திருத்தலங்களில் உள்ள ஆடல்வல்லானது திருவடிவம் மகேஸ்வர வடிவங்கள் இருபத்தைந்துள் ஒன்றாகுமே தவிர அறிவுவெளி (ஞானகாய) சிதம்பர சிற்சபாநாதரல்லர். மகேசுவர வடிவங்களில் ஒன்றாக விளங்கும் நடராசரது வடிவம் பஞ்சப் பிரத சடாங்க மத்திரத்தால் அமைந்தது. ஆனால் தத்துவங்கடந்த கடவுளாகிய தில்லை நடராசர் திருவைந்தெழுத்தே வடிவானவர். (ப.219)

சிவாலயங்களில் மூலவடிவாய்க் கருவறையில் இருப்பது அருஉருவ வடிவாகிய சிவலிங்கமே. ஆனால ஒரே ஒரு தலத்தில் மட்டும் உருவமூர்த்தியாக இருக்கிறது. அதுதான் மாதொருபாகன் (அர்த்தநாரீச்சரன்) இருக்கும் திருக்கொடிமாடச்செங்குன்றூர் என்னும் திருச்செங்கோட்டு மலையில் ஆகும். (ப.304)

சிவ வடிவங்களைப் பல கோணங்களில் ஆய்ந்து நோக்கி அரிய புகைப்படங்களைக் கொண்டு அமைந்துள்ள இந்நூலைப் பார்ப்போம், படிப்போம், அவனைப் பற்றி அரியன அறிவோம், வாருங்கள்.  

நூல் : சிவ வடிவங்கள்
ஆசிரியர் :  மா.சிவகுருநாத பிள்ளை
பதிப்பகம் : தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
ஆண்டு : திசம்பர் 1991
விலை : ரூ.50

14 March 2017

கும்பகோணம் மாசி மகம் : 11 மார்ச் 2017

என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே என்று ஞானசம்பந்தப்பெருமான் இறைவனை நோக்கிப் பாடிய பாடலின் அடிகள் மாசிமகத்தன்று (11 மார்ச் 2017) கும்பகோணத்திற்கு மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி காண குடும்பத்துடன் சென்றபோது உணர முடிந்தது.

கும்பேஸ்வரராக, நாகேஸ்வரராக, சோமேஸ்வரராக, அபிமுக்தேஸ்வரராக, கோடீஸ்வரராக, கம்பட்ட விசுவநாதராக, காசி விசுவநாதராக, சோமேஸ்வரராக, கௌதமேஸ்வரராக, ஏகாம்பரேஸ்வரராக, பானுபுரீஸ்வரராக, காளஹஸ்தீஸ்வரராக, அமிர்தகலசநாதராக ......என்று எந்தவொரு பெயரிலும் எங்கள் ஈசனின் அழகு அழகேதான். கும்பகோணம் மகாமகக்குளக்கரையின் கரைகளைச் சுற்றி இறைவனும், இறைவியும் விடை மீது ஏறி சுற்றி வந்த அழகும், தீர்த்தவாரிக்காக குளத்தினை நோக்கி நின்ற அழகும், தீர்த்தவாரியின்போது அனைவரும் மகாமகக்குளத்தை நோக்கி நின்று அருள் தந்த விதமும் மனதில் நின்றன. இந்த முறைதான் பெரும்பாலும் அனைத்துக் கோயில்களின் மூர்த்திகளையும் புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. குளத்தைச் சுற்றி வெளியே ஒரு முறையும், குளத்திற்குள் இரு முறை சுற்றி வந்து அனைத்து புகைப்படங்களையும் எடுத்தேன். 


















பல முறை மாசி மகத்தின்போதும், மகாமகத்தின்போதும் கும்பகோணம் சென்றாலும், ஒவ்வொரு முறையும் புதிதாகச் செல்வது போன்ற உணர்வே ஏற்படுகிறது. இப்பயணத்தின்போது என் மனைவி பாக்கியவதி, இளைய மகன் சிவகுரு, பேரன் தமிழழகன் ஆகியோர் உடன் வர எங்களின் மகாமகக்குள உலா நிறைவைத் தந்தது. எந்த தொந்தரவும் செய்யாமல் எங்கள் பேரன் தமிழழகன் குளத்தைச் சுற்றி வந்தது எங்களுக்கு வியப்பினைத் தந்தது. எல்லாம் நம் ஈசனின் செயலே. 



நன்றி 
புகைப்படம் எடுக்க உதவிய என் மனைவி திருமதி பாக்கியவதி, மகன் சிவகுரு

10 March 2017

மனதில் நிற்கும் திருமஞ்சனவீதி பள்ளி (1964-1972)

ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு முக்கிய தாக்கத்தை உண்டாக்குவது அவர்கள் படித்த ஆரம்பப்பள்ளிக்கூடமும், அங்கு பெறப்பட்ட அனுபவங்களும். கும்பகோணத்தில் நான் படித்த (சற்றொப்ப 1964-72) கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி ஆரம்பப் பள்ளி எனக்கும் நண்பர்களுக்கும் போதி மரமாகும். அங்கு நாங்கள் கற்றுக்கொண்ட கல்வி என்பதானது இன்றளவும் எங்கள் வாழ்க்கைக்கு பெரிய அளவில் உதவுகின்றது.

நேரந்தவறாமை, உண்மை பேசுதல், அனாவசிய விஷயங்களில் தலையிடாமை, பெரியவர்களை மதித்தல், அன்றைய பணிகளை அவ்வப்போது முடித்தல், திட்டமிடல் உள்ளிட்ட என்னுடைய தற்போதைய பல பழக்கங்களுக்கு அடித்தளம் நான் படித்த ஆரம்பப்பள்ளியே.   

நாங்கள் படித்த காலத்தில் திருமஞ்சன வீதி பள்ளி கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதியில் 16கட்டு மாரியம்மன் கோயில் எதிரிலும், சாத்தாரத்தெருவில் கிருஷ்ணன் கோயில் அருகிலும் செயல்பட்டு வந்தது. முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை சாத்தாரத்தெருவிலும், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை திருமஞ்சன வீதியிலும் இயங்கி வந்தன.

1964வாக்கில் நான் முதல் வகுப்பில் சேர்ந்திருப்பேன் என நினைக்கிறேன். பெரும்பாலும் எங்களின் ஆசிரியர்கள் அனைவருமே மிகவும் ஈடுபாட்டோடு வகுப்பினை நடத்தினார்கள். அப்போதைய ஆசிரியர்களுக்கு இலக்கு மாணவர்களின் நலன் மட்டுமே.  ஆசிரியரின் பெயரைவிட நாங்கள் வைத்த பெயரோ, பட்டப்பெயரோதான் எங்களுக்கு இன்னும் நினைவில் உள்ளது. சிண்டு வாத்தியார் (முதல் வகுப்பு), கண்ணாடி டீச்சர் (2ஆம் வகுப்பு), கண்ணாடி வாத்தியார் (3ஆம் வகுப்பு திரு ராஜகோபால்), ஒல்லி வாத்தியார் (4ஆம் வகுப்பு திரு தண்டபாணி), செவிட்டு வாத்தியார் (5ஆம் வகுப்பு திரு காளமேகம்), வெற்றிலை சீவல் வாத்தியார் (6ஆம் வகுப்பு திரு கண்ணப்பன்), இன்னொரு குடுமி வாத்தியார் (7ஆம் வகுப்பு திரு தியாகராஜன்), ஒன்றரை கண்ணு வாத்தியார் (8ஆம் வகுப்பு திரு கே.ஆர்.கே) என்று அனைவரும் என்றும் எங்கள் மனதில் இடம் பெற்றவர்கள் ஆவார்கள். 

பள்ளி என்றாலே பயம் தான்
பள்ளிக்குச் செல்வதென்றால் எனக்கு முற்றிலும் பிடிக்காது. வீட்டிலிருந்து பள்ளிக்கு நெருங்க நெருங்க என்னை அறியாமல் ஏதோ ஒரு பயம் வரும். வாசலருகே வந்ததும் இன்னும் அதிகமாகும். பள்ளிக்குப் போக மறுத்தால் எங்கள் தாத்தா விறகுக்கட்டையை எடுத்துக்கொண்டு மிரட்டுவார். (எங்கள் வீட்டின் எதிரில் விறகுக்கடை இருந்தது) பயந்துகொண்டு சென்றுவிடுவேன். மணியடிப்பதற்குள் வகுப்பிற்குள் வந்துவிடவேண்டும். இல்லாவிட்டால் ஆசிரியரிடம் திட்டு வாங்கவேண்டும். அதற்காக முன்கூட்டியே வகுப்பிற்கு வந்துவிடுவோம். வந்தபின் வகுப்பை சுத்தம் செய்வோம். தோட்டத்தில் உள்ள இலைகளைப் பொறுக்கிக் குப்பையில் போடுவோம். கையில் விளக்குமாற்றுக்குச்சியை வைத்துக்கொண்டு ஒவ்வொரு இலையாகக் கொத்திக் கொத்தி எடுப்போம். யார் அதிகமாக எடுக்கிறார்கள் என்று எங்களுக்குள் போட்டி வைத்துக்கொள்வோம். 

பள்ளி அலுவலகத்தில் உள்ள அவரது ஒளிப்படம்
(17 டிசம்பர் 2024இல் பள்ளிக்குச் சென்றபோது எடுக்கப்பட்டது)

காலை உணவு
மூன்றாம் வகுப்பு படிக்கும்போது ஒரு முறை பள்ளிக்குச் செல்லமாட்டேன் என்று அழுதுகொண்டு வீட்டில் விரட்ட பள்ளிக்கு சாப்பிடாமல் வந்துவிட்டேன். எங்கள் ஆத்தா ஒரு கிண்ணத்தில் உணவு வைத்துக்கொண்டு வைத்துக்கொண்டு பள்ளிக்கு வந்துவிட்டார்கள். சாப்பிடாமல் வந்துவிட்டான் என்று அவர்கள் கூறவே வகுப்பு ஆசிரியர் பெரிய வாத்தியார் (தலைமை ஆசிரியர் திரு ராஜகோபால்) அறைக்கு மற்றொரு மாணவரோடு அனுப்பிவைத்துவிட்டார். நடுங்கிக்கொண்டே வாசலில் நின்றேன், ஆத்தாவுடன். பெரிய வாத்தியார் எங்கள் ஆத்தாவிடம் இவ்வாறு சாப்பிடாமல் அனுப்பாதீர்கள் என்று கூறி அவர் அறையிலேயே சாப்பிடச்சொன்னார். அவரது அறையில் எங்கள் ஆத்தா எனக்கு ஊட்டிவிட்டார்கள். அவர் சென்றதும், வயதானவர்களை அலையவிடக்கூடாது என்றும், உடலை கவனித்துக்கொள்வது அவசியம் என்றும் பெரிய வாத்தியார் திட்டிக்கொண்டே கூறிய அறிவுரையை மறக்கமுடியாது.  

வியாச நோட்
நான்காவது படிக்கும்போது ஒரு முறை வீட்டில் வியாச (கட்டுரை நோட்டை வியாச நோட் என்போம்) நோட்டை வைத்துவிட்டு வந்தேன். அவ்வகுப்பிற்கு இரு வாயில்கள். இரண்டாவது வாயிலில் என்னை கொக்கு போடச் சொன்னார் ஆசிரியர். எவ்வளவு நேரம் நின்றேன் என எனக்குத் தெரியாது. மற்றொரு வாசல் வழியாக வந்த என் தந்தையார் நான் சாதாரணமாக நிற்பதாக நினைத்துக்கொண்டு வெளியே நிற்காதே என்று என் ஆசிரியர் முன்பாகச் சொல்ல, அந்தப் பய செஞ்ச தப்புக்கு நாந்தான் நிக்கவச்சேன் என்றாரே பார்க்கலாம். நாம் செய்த தப்பு வீட்டிற்கும் தெரிந்துவிட்டதே என்ற அவமான உணர்வு ஏற்பட்டது. தவறுகள் குறையவும் நம்மை திருத்திக்கொள்ளவும் அதிகமான வாய்ப்புகள் இப்பள்ளியில் தரப்பட்டன. 

முருகா நான் பாஸ் ஆகணும்
முழு ஆண்டு தேர்வுக்கான பரீட்சை அட்டையில் முருகன் படத்தை ஒட்டி அதன் நான்கு பக்கங்களிலும் முருகா நான் பாஸ் ஆகணும் என்று எழுதி வைத்திருந்தேன். அதனைப் பார்த்த வகுப்பாசிரியர் முருகன் பாஸ் போட மாட்டார், நீ தான் நன்கு படித்து எழுதவேண்டும் என்றார். பக்தி இருக்கலாம், ஆனால் பரீட்சை அட்டையில் அது கூடாது என்றார் அன்பாக.  

இங்க் மாத்திரை
ஐந்தாம் வகுப்பில் இங்க் மாத்திரை அனுபவம் மறக்க முடியாதது. பல மாணவர்கள் இங்க் போடாமல் வந்து ஆசிரியரை ஏமாற்றுவது வாடிக்கை. அதைத் தடுப்பதற்காக வகுப்பு ஆசிரியர் அனைவரிடமும் காசுகளைப் பெற்று ஒரு மாணவனை அனுப்பி ஐந்து அல்லது பத்து இங்க் மாத்திரைகளை வாங்கி வரச் சொல்வார். கும்பேஸ்வரர் வடக்கு வீதியில் உள்ள கல்யாண்ராம் சாயச்சாலையில் ஒரு மாத்திரை இரண்டு காசு என்ற நிலையில் தேவையானதை அவன் வாங்கி வருவான். அதனை நீரில் கரைத்து ஒரு பாட்டிலில் வைக்கச் சொல்வார். அந்த வகுப்பு மாணவர்கள் மட்டும் தேவைப்படும்போது இங்க் ஊற்றிக்கொள்ளலாம்.

ஓடி ஒளிதல்
பயந்துகொண்டு பள்ளிக்குப் போகாமல் எங்காவது ஒளிந்துகொள்வது என் வழக்கம். அவ்வாறு ஒளிந்துகொள்ளும்போது பள்ளியில் இருந்து என்னைத் தேடிக்கொண்டு சில மாணவர்கள் வருவார்கள். அவர்கள் ஆசிரியரால் எங்களை (பிள்ளை பிடிப்பது போல) பிடித்துச் செல்வதற்காக அனுப்பப்பட்டவர்கள். நான் வழக்கமாகக் கொல்லைப்புறத்திலோ, மாடியிலோ சென்று ஒளிந்துகொள்வேன். அப்போது அவர்கள் சுற்றிவளைத்து இழுத்துக்கொண்டு போய் ஆசிரியர் முன் விட்டு விடுவார்கள். கிட்டத்தட்ட ஐந்தாம் வகுப்பு படிக்கும் வரை நான் இவ்வாறு ஈடுபட்டு வந்துள்ளேன்.

அப்பாவிற்கு வேலையில்லை
ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது நடைபெற்ற நினைவு என் வாழ்வில் என்றும் மறக்கமுடியாது. எங்களின் தாத்தா செல்லமாக வளர்த்ததன் காரணமாக எங்கள் அப்பா நிரந்தரமாக வேலைக்குச் செல்லாமல் இருந்தார். வகுப்பாசிரியர் ஆங்கில வகுப்பில் What is your father? என்ற கேள்விக்கு பதில் கூறும்படி சொன்னார். My father is a clerk, My father is a petty shop owner, என்று நண்பர்கள், சொல்லிக்கொண்டே வந்தார்கள். நான் எழுந்து நின்று My father is....is....is என்று அப்படியே நின்றுவிட்டேன். ஆசிரியர் அருகில் வந்தார்.  பதில் சொல்லும்படி கூறவே, அழுதுகொண்டே என் அப்பாவிற்கு வேலையில்லை, அதற்கு எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை என்று அழ ஆரம்பித்தேன். அதற்கு அவர் My father has no job என்று கூறவேண்டும் என்று சொல்லிவிட்டு, என்னை வாஞ்சையோடு தடவிக்கொடுத்துவிட்டு, நீ நல்ல வேலைக்குச் செல்லவேண்டும், செல்வாய் என்று கூறி பேச்சை மாற்றினார். மனதின் பாரம் குறைந்தது.

நம்பர் கிளாஸ்
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு வாரமும் முதல் நாள் நம்பர் கிளாஸ் வைப்பார்கள். பள்ளி மைதானத்தில் அந்தந்த வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் வரிசையாக நிற்போம். கேட்கும் கேள்விக்கு சரியாக பதில் கூறுபவர்கள் வரிசையில் முதலில் வந்துவிடுவர். இல்லாதவர்கள் பின்னுக்குத் தள்ளப்படுவர். எவ்வளவு பின் தள்ளிப்போகிறோமோ அந்த அளவிற்கு அடி விழும். அடியிலிருந்து தப்பவும் முன்னுள்ள எண்ணில் வரவேண்டும் என்பதற்காகப் படிக்க ஆரம்பித்தோம்.

வாக்கிங் ஸ்டிக்
வகுப்பு ஆசிரியர் வேறொருவர் இருந்தாலும், எட்டாம் வகுப்பிற்கு தலைமையாசிரியரே ஒரு வகுப்பு எடுக்க வருவார். சில சமயங்களில் உதவித்தலைமையாசிரியர் (திரு வரதாச்சாரியார்) வருவார். வகுப்பறையில் அவருடைய இருக்கைக்குப் பின்னால் ஒரு கம்பு வாக்கிங் ஸ்டிக் போல இருக்கும். அதனை நாங்கள் காசு சேர்த்து அவருக்கு வாங்கித்தர வேண்டும். முன்பக்கம் வளைந்து, வயதானவர்கள் ஊன்றிச்செல்லும் குச்சிதான் அது. எங்களை அடிப்பதற்கு அந்தக்குச்சிதான்.

தண்டனைகள்
கொக்கு போடல், பிரம்படி, நம்பர் கிளாசில் கடைசியாகப் போகப் போக அடி, காதினைத் திருகுதல்,  போன்ற தண்டனைகளுடன் நாங்கள் பார்த்த தண்டனைகளில் ஒன்று விலங்குக்கட்டை. சிறிய கட்டை இரும்புச்சங்கிலியால் இணைக்கப்பட்டிருக்கும். அதிகமாக தவறு செய்தவர்கள், கட்டுப்படுத்த முடியாதவர்களை விலங்குக்கட்டையில் உள்ள சங்கிலியைக் கொண்டு காலில் கட்டி விடுவார்கள். தவறு செய்தவன் அந்த விலங்குக்கட்டையைத் தூக்கிக்கொண்டே செல்லவேண்டும். 

அழகிய கையெழுத்து
இப்பள்ளியில்  படித்த அனைவரும் சேர்த்த சொத்துகளில் ஒன்று அழகான கையெழுத்து. பள்ளியில் கொடுக்கும் பயிற்சியின் காரணமாக அனைவருமே அழகாக, ஒரே மாதிரியாக எழுதும் திறனை வளர்த்துக்கொண்டோம். எங்களின் கையெழுத்தை வைத்தே திருமஞ்சனவீதியில் படித்த பிள்ளையா என்று கேட்பார்கள்.

மனப்பாடம், ஒப்புவிப்பு
மனப்பாடம் செய்வதில் எங்களுக்கு நிகர் நாங்களே. அந்த அளவிற்கு நாங்கள் எங்கள் ஆசிரியர்களால் பழக்கப்படுத்தப்பட்டோம். அவ்வாறே வீட்டிலும் பாடங்களை சத்தம் போட்டுப் படிப்போம். ஓர் கா கா, பத்திக்கா ரெண்டரை, நூத்துக்கா இருபத்தஞ்சு (1 x 1/4 =  1/4, 10 x 1/4 =  2 1/2, 100 x 1/4 =  25) என்று தொடங்கி விடுபாடே இன்றி ஒப்பிப்போம்.  கால் வாய்ப்பாடு, அரை வாய்ப்பாடு, முக்கால் வாய்ப்பாடு என்ற நிலையில் மிகவும் வேகமாக ஒப்பிப்போம். அவ்வாறே 60 ஆண்டுகளையும் பிரபவ, விபவ, சுக்ல, பிரமாதூத, பிரசோற்பத்தி, ஆங்கிரச, ஸ்ரீமுக, பவ, யுவ.... என்று தொடங்கி  இடைவெளியின்றி ஒப்பிப்போம். ஒப்பிக்கும்போது சிலர் மோட்டுவளையைப் பார்ப்போம், சிலர் கண்களை மூடிக்கொள்வோம். சிலர் ஒரே இடத்தையே கவனித்துக்கொண்டு சிந்தனையோடு ஒப்பிப்போம்.

ல, ள, ழ உச்சரிப்பு
எந்த ஊரில், எந்த நாட்டில் எங்கு சென்றாலும் எங்களின் ல, ள, ழ உச்சரிப்பை வைத்து எங்கள் பள்ளியின் பெயரைக் கூறிவிடுவார்கள். அந்த அளவிற்கு நாக்கானது அன்னத்தைத் தொடல், நாக்கு மடக்குதல், நடுத்தொண்டையில் தொடல் என்ற அளவிற்குப் பயிற்சி பெற்றோம். 

கை கட்டுதல்
பள்ளியில் படிக்கும் காலத்தில் ஆசிரியர் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்லும்போதோ, பிற நிலைகளிலோ கைகட்டிக் கொண்டே இருக்கவேண்டும். (விவேகானந்தர் கையைக் கட்டிக் கொண்டு நிற்கின்ற படம் நினைவிற்கு வருகிறதா, அவரைப்போல, ஆனால் சற்று பயந்த நிலையில் மரியாதையோடு). பள்ளிப் படிப்பு முடிந்து வெளியில் சென்றபின்னர்கூட அவ்வப்போது திருமஞ்சன வீதி ஆசிரியர்களைப் பார்க்கும்போது எங்களையும் அறியாமல் கையைக் கட்டிக் கொண்டு மரியாதை செலுத்துவோம்.  

தலைமுறை
எங்களில் பெரும்பாலான குடும்பத்தில் அண்ணன், அக்கா, தம்பி, தங்கை என்று வரிசையாக தொடர்ந்து ஒரே ஆசிரியர்களிடம் படித்துள்ள அனுபவத்தைத் தந்தது இப்பள்ளி. தலைமுறைகளை இணைத்த பள்ளி என்று கூட நாங்கள் கூறுவோம். ஆசிரியர்களும் மாறமாட்டார்கள். அந்தந்த வகுப்பிற்கு ஒரே ஆசிரியர்.  

அது அந்தக்காலம்
இவையனைத்தும் சுமார் 40-50 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தவை. தண்டனை, பள்ளி போன்றவற்றை வைத்து இந்நிலையை இப்பள்ளியோடு மட்டுமல்ல, வேறு எந்த பள்ளியோடும் ஒப்புநோக்கவே கூடாது. முடியாது. எந்த அளவிற்கு கண்டிப்பு இருந்ததோ அதைவிட அதிகமான கரிசனம் காட்டியவர்கள் எங்கள் திருமஞ்சனவீதி பள்ளியின் ஆசிரியர்கள். வீட்டில் பெற்றோர் கவனிப்பதைவிட நம்மை ஆழ்ந்து கவனிப்பர். நம் நடவடிக்கைகள் அவர்களால் உற்றுநோக்கப்படும். ஏதாவது குறை இருப்பின் பெற்றோரை வரச்சொல்லி அவர்களிடம் எடுத்துரைத்து எங்களை நல்ல வழியில் செல்லும்படி அறிவுறுத்துவர். அந்த கண்ணோட்டத்தில் பார்க்கும்போது எங்களுக்கு மற்றொரு பெற்றோராகவே ஆசிரியர்கள் இருந்தார்கள் என்பதை அங்கு படித்த அனைவரும் முழுமையாக ஏற்போம்.  
  
உடன் படித்த நண்பர்கள் மோகன், சுரேஷ்தாஸ், ரேவதி, பிருந்தா, நிர்மலா (சிங்காரம் செட்டித்தெரு), மதியழகன், ராஜசேகரன், (பேட்டை, 16கட்டு), திருமலை (மதகடித்தெரு), ஓமலிங்கம் (மௌனசாமி மடத்துத்தெரு), விட்டல்ராவ் (கும்பேஸ்வரர் மேல வீதி) போன்றோர் மிக அருகிலுள்ள தெருக்களிலே இருந்தனர். மேல் வகுப்பிற்குச் செல்லச் செல்ல விளையாட்டுகளும், குறும்புகளும் ஓரளவு குறைய ஆரம்பித்து படிப்பின்மீதான ஆர்வம் அதிகமானது. 

இன்றும் கும்பகோணம் சம்பிரதி வைத்தியநாதய்யர் அக்கிரகாரத்தில் எங்களின் வீடு, தாத்தா விரட்டல், நண்பர்கள் பிடித்துத்தரல் போன்றவை மலரும் நினைவுகளாக உள்ளன. பள்ளிப்படிப்பு முடிந்து பல வருடங்கள் ஆனபோதிலும் அந்தப் பள்ளி ஆசிரியர்களைப் பார்க்கும்போது எங்களையும் அறியாமல் எங்களின் இரு கைகளையும் கைகட்டிக்கொள்வோம். ஏனென்றால் பள்ளியில் படிக்கும்போது ஆசிரியரைக் கண்டால் கைகட்டி மரியாதை செலுத்தவேண்டும் என்பது அப்போதைய நடைமுறை.  என் நண்பர்களில் பெரும்பாலானோர் நல்ல நிலையில், பணியில் தற்போது இருக்கின்றார்கள். எங்களை நெறிப்படுத்திய, நாங்கள் ஆரம்பத்தில் படித்த, திருமஞ்சனவீதி பள்ளியின் ஆசிரியப்பெருமக்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். ஒட்டுமொத்தத்தில் எங்களுக்கு ஒரு போதி மரமாகவே ஆனது நாங்கள் படித்த திருமஞ்சனவீதி ஆரம்பப்பள்ளி.     

திருமஞ்சன வீதி வழியாக போகும்போதெல்லாம் அக்கால நினைவுகள் வந்துவிடும். இப்போது அப்பள்ளி இன்னும் ஒரே வளாகத்தில் திருமஞ்சன வீதியில் இயங்கிவருகிறது. வாய்ப்பு கிடைக்கும்போது உள்ளே போய் பார்க்க ஆசையாக உள்ளது.  அந்த நல்வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன். அக்கால திருமஞ்சன வீதி பள்ளியும், உடன் படித்த நண்பர்களும் என்றும் என் இதயத்தில்.   

17 டிசம்பர் 2024இல் மேம்படுத்தப்பட்டது.