15 January 2023

தமிழ்நாட்டில் சமணம் (கி.பி.ஆறாம் நூற்றாண்டு வரை) : அனந்தபுரம் கோ. கிருட்டினமூர்த்தி

திரு அனந்தபுரம் கோ.கிருட்டினமூர்த்தி எழுதியுள்ள தமிழ்நாட்டில் சமணம் (கி.பி.ஆறாம் நூற்றாண்டு வரை) என்னும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆய்வுத்திட்டங்களுள் ஒன்றாகச் செய்தளிக்கப்பட்ட நூலாகும்.

கி.பி.ஆறாம் நூற்றாண்டு வரையிலான சமணத்தின் வரலாற்றை மிகச்சிறப்பாக இந்நூல் எடுத்துரைக்கிறது. தமிழ்நாட்டின் தொன்மை, தமிழ்நாட்டில் சமணப் பரவல், குகைத்தளக் கல்வெட்டுகளும் படுக்கைகளும், தமிழி கல்வெட்டுகளும் சமணமும், இலக்கியங்களில் சமணம், சமணக்கலைகள், சமணத்தின் வீழ்ச்சி ஆகிய உள் தலைப்புகளைக் கொண்டு இந்நூல் அமைந்துள்ளது.


நூலாசிரியருடன் ஜம்புலிங்கம் (டிசம்பர் 2022, சென்னை)

இந்திய சமயங்களை ஏகாந்தவாதம், அநேகாந்தவாதம் என இருவகையாகக் கூறுவர். ஜைன சமயம் தவிர்த்த பிற சமயங்களை ஏகாந்தவாத சமயம் என்பர். ஜைனம் மட்டுமே அநேகாந்த வாதசமயம் என்று கூறப்படுகிறது. ஜைனம் அசோக (பிண்டி) மரத்தைப் போற்றுவதால் பிண்டி சமயம் என்ற பெயரும் வழங்கப்பட்டுள்ளது. (ப.32)

ஜைனம் நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவை திகம்பரம், சுவேதம்பரம், ஸ்தானகவாசி, யாப்பினியம் என்பதாகும். உலகப்பொருள்கள் அனைத்தையும் துறந்து வானத்தையே உடையாகக் கொண்டு, சிறிய ஆடையும் உடலில் அணியாது (நிர்வாணமாக) உடையவர் திகம்பரர். வெள்ளை ஆடை உடுத்தியவர் சுவேதம்பரர். ஸ்தான வாசிகர் உருவ வழிபாட்டை ஏற்காதவர். ஆகம நூல்களையே தீர்த்தங்கரர்களாகவும், அருகக் கடவுளாகவும் கருதி வழிபடுபவர் யாப்பன ஜைனர். திகம்பர சுவேதம்பர்களின் நற்கொள்கைகளை இணைத்து மந்திரம் தந்திரங்களை வழிபாட்டில் ஏற்றுக்கொண்டவர்கள். தமிழ் நாட்டில் திகம்பர ஜைனமே கி.பி.6ஆம் நூற்றாண்டு வரை நிலைத்திருந்தது. அப்போது ஸ்வேதம்பர ஜைனம் வட நாட்டில் மட்டும் இருந்தது. (ப.46)

தமிழ்நாட்டின் மலைக் குகைத்தளங்களில் கி.மு.மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி.நான்காம் நூற்றாண்டு வரையிலான தொல்தமிழ் எழுத்திலான 90 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகள் அனைத்தும் இயற்கையாக அமைந்த குன்றுகளின், குகைத்தளங்களின் உள்ளேயும் வெளியேயும் செதுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான கல்வெட்டுகள் கற்படுக்கைகள் அமைக்கப்பட்டதைக் குறத்தே உள்ளன. இக்கற்படுக்கைகள் கல்வெட்டுக் காலத்தில் வாழ்ந்த துறவிகளுக்கானது என்பது தெளிவாகத் தெரிகின்றன. (ப.79)

மகாவீரருக்குப் பிறகு ஜைன அமைப்பைப் பத்திரபாகு முனிவர் என்பவர் பொறுப்பு வகித்த காலத்தில்தான் ஜைன தமிழ்நாட்டிற்குப் பரவியதாகக் கூறப்படுகிறது. பத்திரபாகு முனிவர் கி.மு.317 முதல் கி.மு.297 வரை ஜைனத் தலைவராக இருந்திருக்கிறார்....தமிழ்நாட்டிலுள்ள தமிழி கல்வெட்டுகளையும், கற்படுக்கைகளையும் நோக்கும்போது ஜைனம் சங்க காலத்திற்குப் பிறகுதான் பெருமளவு வளர்ச்சி அடைந்திருக்கவேண்டும் என்று கருத வேண்டியுள்ளது. ஜைனர்களின் சமய இலக்கியங்கள், அவர்களின் வழிபாடு, கோயில் அமைப்பு, வழிபாட்டுச் சடங்குகள் குறித்து அறியும்போது கி.பி.3-4ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு ஜைனத் துறவிகள் தமிழ்நாட்டில் மிகுதியாகப் பரவியிருக்க வேண்டும். (பக்.334-336)

தொன்மைக்கல்வெட்டுகள் பல தமிழ்நாட்டிற்கு ஜைனம் பரவியதற்குப் பின்பு செதுக்கப்பட்டுள்ளன. அவற்றின் செய்திகளைக் குறித்து ஆராயும்போது ஜைனம் கி.பி.4-5ஆம் நூற்றாண்டில் பெருவளர்ச்சியடைந்திருந்தது தெரியவருகிறது. ஜைனம் குறித்த செய்திகள் பெரும்பாலும் வட்டெழுத்துக் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. (ப.xiv)

கி.பி.ஆறாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் சமணத்தின் போக்கினை களப்பணி மற்றும் பிற ஆதாரங்களோடு வெளிக்கொணர்ந்துள்ள நூலாசிரியரின் முயற்சி போற்றத்தக்கதாகும்.

நூல் : தமிழ்நாட்டில் சமணம் (கி.பி.ஆறாம் நூற்றாண்டு வரை)
ஆசிரியர் : அனந்தபுரம் கோ.கிருட்டினமூர்த்தி
பதிப்பகம்: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், செம்மொழிச்சாலை, பெரும்பாக்கம், சென்னை 600 100, தொலைபேசி 044 22540125
பதிப்பாண்டு: முதல் பதிப்பு, பிப்ரவரி 2022
விலை ரூ.500