31 October 2020

உலக வரலாறு அறிவோம் : இந்து தமிழ் திசை

இந்திரா காந்தி, “என் அப்பா எழுதிய ‘உலக வரலாறு’, ‘சுயசரிதை’, ‘இந்திய வரலாறு’ ஆகிய மூன்று நூல்களும் என் வாழ்க்கை முழுதும் எனக்குத் துணையாக இருந்துவந்துள்ளன. அவற்றிலிருந்து பிரிந்திருப்பது என்பது இயலாதது. குறிப்பாக, ‘உலக வரலாறு’ எனக்காகவே எழுதப்பட்டது'' என்கிறார்.


196 தலைப்புகளில் 1,000 பக்கங்களைக் கொண்ட இந்த நூலில் சுமார் 50 நிலப்படங்களும், காலவாரியான அட்டவணைகளும் உள்ளன. நேருவின் இந்தக் கடிதங்களில் வரலாற்றின் மீதான அவருடைய ஈடுபாடு, தேடல் திறன், பரந்துபட்ட அறிவு, வாசிக்கும் ஆர்வத்தை உண்டாக்கும் எழுத்து பாணி, அழகான சொற்பயன்பாடு போன்றவற்றைக் காண முடியும். இந்த நூலை வாசிக்கும்போது நாம் வேற்றுலகுக்குச் சென்ற உணர்வு ஏற்படும். அந்த அளவுக்கு நிகழ்வுகளை நமக்கு மிகவும் நெருக்கமாகக் கொண்டுவருகிறார் நேரு.


“உனக்கு நினைவிருக்கிறதா? முதன்முதலாக ஜோன் ஆஃப் ஆர்க்கைப் பற்றிப் படித்தபோது, நீ எவ்வளவு ஆச்சர்யப்பட்டாய் தெரியுமா? அவரைப் போலச் சாதிக்க வேண்டும் என்ற உனது விருப்பம் எந்த அளவு இருந்தது தெரியுமா? சாதாரண ஆணோ பெண்ணோ கதாநாயகர் ஆகிவிடுவதில்லை. அவர்களுக்கு அன்றாடப் பிரச்சினைகள் பல உள்ளன. ஆனால், நேரம் வரும்போது ஒட்டுமொத்த ஆண்களும் பெண்களும் கதாநாயகர்களாக ஆகிவிடுகிறார்கள். வரலாறு படைக்கப்படுகிறது. இந்தியாவுக்குச் சேவைசெய்யும் அளவு மிகச் சிறந்த தைரியமான வீராங்கனையாக நீ வளர்வாய், அன்பு மகளே” என்று ஆரம்பப் பக்கங்களில் பேசுகிறார்.


கன்னியாகுமரியைப் பேசும்போது அது இமயமலை வரை நீள்கிறது. 2,500 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி 19-ம் நூற்றாண்டு வரையிலான நீண்ட பயணத்தை மேற்கொள்கிறார். சிந்தனையாளர், தலைவர்கள், பேரரசுகள், தொழில் புரட்சி, அறிவியல் வளர்ச்சி, உலகப் போர் எல்லாம் வருகின்றன. கடைசிக் கடிதத்தில், “இது வரலாறல்ல. இவை நமது கடந்த காலப் பதிவுகள். வரலாறு உனக்கு ஆர்வமூட்டினால், வரலாற்றின் அழகை நீ உணர்ந்தால் பல நூல்களின் துணையோடு கடந்த காலத்தைப் பற்றி அறிந்துகொள்ள முடியும்.


நூல்களைப் படிப்பது மட்டுமே உனக்கு உதவப்போவதில்லை. கடந்த காலத்தைக் கருணையோடும் புரிதலோடும் பார்க்க வேண்டும். பல்லாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு நபரைப் பற்றி அறிந்துகொள்ள அவருடைய சூழலையும், அவர் வாழ்ந்த நிலையையும், அவர் மனதில் இருந்த எண்ணங்களையும் நீ அறிந்துகொள்ள வேண்டும்” என்கிறார்!


உலக வரலாற்றை ஒரு பறவைப்பார்வையாக இந்தக் கடிதங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம். ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய முக்கியமான நூல் இது. பின்னாளில், இந்திரா காந்தி உயர்ந்த பொறுப்புக்கு வர அடித்தளம் அமைத்துத் தந்த நூல்.


நன்றி : உலக வரலாறு அறிவோம், இந்து தமிழ் திசை, 31 அக்டோபர் 2020

இன்று இந்திரா காந்தியின் நினைவு நாள்

24 October 2020

எங்கள் ஆசிரியர் பி.கே.

கும்பகோணத்தில் 1972-75இல் நாங்கள் பயின்ற அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர் திரு பி.கல்யாணசுந்தரம் (பி.கே) அவர்கள் இயற்கையெய்திய செய்தி எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.



பள்ளி நூற்றாண்டு விழா கொண்டாடுவது தொடர்பாக 14 ஜுலை 2019 அன்று நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் அவருக்கு அருகில் அமர்ந்து விழாத்தொடர்பாகவும், அக்காலகட்ட நினைவுகளையும் பகிர்ந்துகொண்ட இனிய தருணங்களை வாழ்வில் மறக்கவும் முடியுமா? பின்னர் தொடர்ந்து அடுத்தடுத்த கூட்டங்களின்போது அவரைக் காணும் வாய்ப்பு கிடைத்தது.

நாங்கள் படித்துக்கொண்டிருக்கும்போது ராஜராஜசோழன் திரைப்படம் வெளியானது. அப்போது அவர் ராஜராஜ சோழனைப்போல மீசையை சில நாள் வைத்திருந்தார். சிவாஜி கணேசனின் நடிப்பைப் பற்றி வகுப்பில் அவர் பேசியது இன்னும் நினைவிலிருக்கிறது. அதனைப் பற்றி அவரிடம் நினைவுகூர்ந்தபோது வியந்தார். மேடையில் என்னை ஜம்பு சார் என்றபோது மிகவும் சங்கடத்தில் ஆழ்ந்தேன். ஜம்புலிங்கம் என்றழையுங்கள் என்றபோது, அப்போது மாணவன் என்ற வகையில் சரி. சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது நீங்கள் நல்ல நிலையில் பணியாற்றி பணிநிறைவு பெற்று எழுத்துத்துறையிலும், ஆய்விலும் செயல்பட்டு வருகின்றீர்கள். நூற்றாண்டு விழாவிற்கு உங்களைப் போன்றோரின் பங்களிப்பு முக்கியமாக உள்ளதை நான் அறிகிறேன். உங்களைப் போன்றோரை என் மாணவர் என்று சொல்வதில் எனக்குப் பெருமையாக உள்ளது ஜம்பு சார் என்றாரே பார்க்கலாம். தொடர்ந்து பேசி அவரை, என்னை ஜம்புலிங்கம் என்று அழைக்கும்படி பேச வைத்துவிட்டேன்.

ஆசிரியரைப் போலன்றி, ஒரு நண்பரைப் போலவே பழகியவர். அவருடைய சுறுசுறுப்பு, எதையும் சாதிக்க வேண்டும் என்ற ஆவல், பல துறைகளில் ஈடுபாடு, அருமையான நட்பு வட்டம், அரசியல் ஈடுபாடு, மாற்றுக்கருத்துக் கொண்டோரிடமும் அன்புடன் நடந்துகொள்ளும் பாங்கு என்ற வகையில் அவருடைய பெருமைகளை கூறிக்கொண்டே இருக்கலாம். சொல்லாலும், செயலாலும் எங்களை அனைத்து வகையிலும் ஈர்த்தவர்.

பல ஆண்டுகளுக்குப் பின்னர் மறுபடியும் அவரைச் சந்தித்த பின்னர் கும்பகோணத்திற்குச் செல்லும்போதெல்லாம் பிற நண்பர்களைப் பற்றி விசாரிக்கும்போது இவரைப் பற்றியும் விசாரிப்பதும், பேசுவதும் தொடர ஆரம்பித்தது. 

நீங்கள் காட்டிய வழியில் நேர்மையுடன் நடந்து எங்கள் பயணத்தைத் தொடர்வோம் ஐயா.

(புகைப்படம் : 14 ஜுலை 2019 அன்று நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் திரு பி.கே.உரையாற்றுகிறார். அருகில் அமர்ந்திருக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்த பெரும் பேறு)




17 October 2020

எங்கள் பூட்டன் ஜம்புலிங்கம்

எங்கள் தாத்தாவின் (பாட்டன்) அப்பாவை (பூட்டன்) நான் பார்த்ததில்லை. அவரைப் பற்றி வீட்டில் பேசக் கேட்டுள்ளேன். அவர் பெயர் ஜம்புலிங்கம் என்றும், அவர் நினைவாகவே எனக்கு இப்பெயரை வைத்ததாகவும் கூறுவார்கள். அப்பாவின் அப்பாவையும், அம்மாவின் அப்பாவையும் நாங்கள் தாத்தா என்றே கூறுவோம். 

அக்காலத்தில் முன்னோரை நினைவுகூறும் வகையிலும், இறை நம்பிக்கை அடிப்படையிலும் ஆத்தா, தாத்தா, மூத்தவர்கள், குலதெய்வம் என்றவாறு  பெயர் சூட்டியுள்ளனர். அவர்களின் இப்பழக்கத்தைவிட்டு நாம் வெகு தூரத்திற்கு வந்துவிட்டோம். தொடர்பே இல்லாத, உச்சரிக்க முடியாத, நினைவில் வைத்துக்கொள்ள முடியாத, அந்நியமான பெயர்களை தற்போது வைத்துக்கொண்டு அதனைப் பெருமையாகக் கூறிக்கொள்வோரை இப்போது நாம் காணமுடிகிறது. 

எங்கள் உறவினர்களில் லிங்கம் என்ற பெயரில் முடிகின்ற பெயர்களைக் கொண்டவர்கள் பலர் உள்ளனர். அவ்வகையில் ஜம்புலிங்கம் (நான்), ஜம்புலிங்கம் (என் சித்தப்பா), மகாலிங்கம் (என் சித்தப்பா), சங்கரலிங்கம் (என் பெரியப்பா), சிவலிங்கம் (என் மாமா) அந்த பட்டியல் அமையும். 

எங்கள் பூட்டன் ஜம்புலிங்கம் கம்பீரமாக, உயரமாக இருப்பாராம். பெரிய மீசை வைத்திருப்பாராம். அவரைப் போல நெடிய உயரம் வேறு யாருக்கும் இல்லை என்று கூறுவார்கள். அவர் நடந்து சென்றால் எதிரில் யாரும் வர மாட்டார்களாம். அவ்வளவு மரியாதையும் பயமும் அவரிடம் இருந்ததாம். அனைவரிடமும் மிகவும் அன்பாக நடந்துகொள்வாராம். வீட்டில் அவர் வளர்த்த நாய் அவரைக் கடித்து அவர் இறந்ததாகக் கூறுவார்கள்.

அவரைப் போல உயரமோ, கம்பீரமோ, பெரிய மீசையோ எனக்கு இல்லை. இருந்தபோதிலும் அவர் பெயருக்குக் களங்கம் ஏற்படா வகையில், நடந்து வருவதை உணர்கிறேன். இதனால்தான் மூத்தோரின் பெயரை இவ்வாறாக வைக்கின்றார்கள் போலுள்ளது. எங்கள் தாத்தா எங்களை கண்டிப்புடனும், அதே சமயம் அன்போடும் வளர்த்தார். அப்படியென்றால் அவருடைய அப்பா அவரை எப்படி வளர்த்திருப்பார் என்று நினைத்ததுண்டு. 

பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில், வெளியில் போய்விட்டு நானும் என் தங்கையும் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது குட்டியாம்பாளையத்தெருவினைச் சேர்ந்த ஒருவரின் வீட்டு நாய் என்னைக் கடித்துவிட்டது. வீட்டில் சொன்னால் திட்டுவார்களோ என பயந்து யாரிடமும் சொல்லாமல் நாங்கள் இருந்துவிட்டோம். என் தங்கை எனக்கு மஞ்சள் போட்டு விட்டார். அப்படியே தூங்கிவிட்டேன். சிறிது நேரம் கழித்து எனக்குத் தெரியாமல், நாய்க்கடியால் எதுவும் ஆகிவிடுமோ என்று நினைத்து என் தங்கை எங்கள் ஆத்தாவிடம் கூற, அவர் அழ ஆரம்பித்துவிட்டார். என்ன ஆகப்போகுதுன்னு தெரியலை என்று கூறி சத்தம் போட தெருவே கூடிவிட்டது. அந்த சத்தத்தில் தூக்கத்திலிருந்த நான் எழுந்தேன். எனக்கும் என் தங்கைக்கும் திட்டு விழுந்தது. உடனே என்னை பிரம்மன் கோயில் தெருவிற்கு அருகில் உள்ள நாகூரார் வீடு என்ற வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். அந்த வீட்டில் நாய்க்கடிக்கு மருந்து போடுவார்களாம். அவர் நாயின் பற்கள் அழுத்தமாகப் பதிந்திருந்த ஆறு இடங்களில் ஏதோ ஒரு திரவத்தை தொட்டுத் தொட்டு வைத்தார். அது திராவகம் என்று கூறினர். அவ்வாறு வைக்கும்போது வலி தாங்க முடியாமல் நான் சுவற்றைப் பிடித்துக்கொண்டு கத்தினேன். மருத்துவ மனைக்குக் கூப்பிட்டுக் கொண்டு போய் ஊசி போடவில்லை. அதுவே போதும் என்று கூறினர். வீட்டிற்குத் திரும்பியதும் பத்திய சாப்பாடு என்று கூறி சில உணவு வகைகளைத் தவிர்த்துவிட்டு பிறவற்றைத் தந்தனர்.  

நாய் கடித்த அடுத்த நாள் முதல் ஒவ்வொரு நாளும் எங்கள் ஆத்தா நாய் இருந்த வீட்டிற்குச் சென்று அது உயிரோடு இருக்கிறதா என்று பார்த்துவிட்டு வருவார்.  நாய்க்கு ஏதாவது ஆகிவிட்டால் அது என்னை பாதிக்கும் என்று கூறி புலம்பிக் கொண்டே இருந்தார். எங்கள் பூட்டன்நாய் கடித்து இறந்ததாலும், அதே பெயர் எனக்கு வைத்திருந்ததாலும் எங்கள் ஆத்தாவிற்கு அதிகமான பயம் இருந்துகொண்டே இருந்தது. குறிப்பிட்ட நாள்களைக் கடந்தபின்னர்தான் ஆத்தா உட்பட அனைவரும் பெருமூச்சு விட்டு நிம்மதியடைந்தனர்.

பெரியவர்கள் இவ்வாறாகப் பெயர் வைக்கும்போது என்ன நம்பிக்கையில் வைத்தாலும், அது ஒரு  பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது என்பதை என் அனுபவத்தில் கண்டுள்ளேன். ஜம்புலிங்கம் என்று பெயர் வைத்ததால், அவரைப் போலவே நாய்க்கடியால் இறந்துவிடுவேன் என்று பயந்துகொண்டிருந்தவர்களே பின்னர் தம் கருத்தினை மாற்றிக்கொண்டனர்.  

நெறியோடு வாழ வேண்டும் என்ற உள்ளுணர்வும், அவரின் பெயருக்குக் குறை வராமல் நடந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணமும் என்னையும் அறியாமல் என்னை ஒரு சட்டகத்தில் வைத்து வழிநடத்துவதை உணர்கிறேன். நம் முன்னோர் நமக்கு இவ்வாறாக பெயர் வைத்ததன் சூட்சுமம் இதுதானோ? 

10 October 2020

15-நிமிட நகரம் : தினமணி

டைம்ஸ் இதழ் அறிவித்துள்ள, 2020ஆம் ஆண்டின் 100 மிகப் பிரபலமானவர்களில் ஒருவர் என்ற சிறப்பினைப் பெறுகிறார் இரண்டாவது முறையாக பாரிஸ் நகரின் மேயராகப் பொறுப்பேற்ற அன்னி ஹிடல்கோ.  மேயராக 2014ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் இவர் அப்பதவியினை வகிக்கும் முதல் பெண்மணி என்ற சிறப்பினைப் பெறுகிறார். சோசலிசக் கட்சியின் உறுப்பினராக இவர், 2001 முதல் 2014 வரை துணை மேயராகப் பணியாற்றியுள்ளார்.  மேயராக முதல் முறை பணியாற்றிய காலத்தில் சார்லி ஹெப்டோ பத்திரிக்கை தலைமையகத்திலும் ஹைப்பர் ஹேச்சர் சூப்பர் மார்க்கட்டிலும் தீவிரவாதத் தாக்குதல்,  131 பேர் பலியான தற்கொலைப்படைத் தாக்குதல், இயற்கைப் பேரிடர்களான பெருவெள்ளம் மற்றும் வெப்ப அலை, மஞ்சள் சட்டைப் போராட்டம், ஓய்வூதியத்திட்டத்திற்கு எதிர்ப்பு, அகதிகள் மற்றும் புலம் பெயர்ந்தோரின் வருகை, சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்ட பல பிரச்னைகளை எதிர்கொண்டார். பாரிஸ் மேயராக இருப்பது கடுங்காற்றில் கட்டுமரத்தை ஓட்டுவதற்கு ஒப்பானது என்றார்.


 

இரண்டாவது முறையாகப் போட்டியிட்ட காலகட்டமான பிப்ரவரி 2020இல், பாரிஸ் நகரில் “15-நிமிட நகரம்” என்ற திட்டத்தை முன்வைத்தார். கடை, பூங்கா, சிற்றுண்டி விடுதி, விளையாட்டு மைதானம், ஆரோக்கிய மையம், பள்ளி, பணியாற்றும் இடம் உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் சிறிது நேரத்தில் நடந்தோ, சைக்கிளில் பயணித்தோ சென்று அடையும் வகையில் அந்த இலக்கானது அமைந்தது. கால் மணி நேரம் என்றழைக்கப்படுகின்ற அந்த வசதியானது பாரிஸ் நகரில் உள்ளோர் வீட்டுக்கு அருகிலேயே அனைத்தையும் பெறும் வாய்ப்பினைத் தரும். இதன் மூலமாக மாசு, மன அழுத்தம் குறைவதோடு சமூக, பொருளாதாரரீதியில் ஒருங்கிணைந்த மாவட்டங்களை உருவாக்கும் என்றும், அங்கு வசிப்போரின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் என்றார். “பாரிஸ் மற்ற நகரங்களைப் போலல்ல…..அது ஒரு சுதந்திரமான, சுறுசுறுப்பான எப்போதும் இயங்குகின்ற நகரம் ஆகும். கடந்த காலத்தை மறக்காமல் புதிய வரலாற்றை உருவாக்கும் தகுதி அந்நகருக்கு உண்டு,” என்றார் அவர்.


 “15-நிமிட நகரம்” உத்திக்கான பின்னணியில் முக்கியமான பங்கினை வகித்த, பாரிஸில் உள்ள சோர்போனைச் சேர்ந்த பேராசிரியரும் அறிவியலாளருமான  கார்லஸ் மொரீனோ, “பொதுமக்களின் நடவடிக்கைகள், வாகனங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் அமையவேண்டும்.  வாழும் இடங்களுக்கு அருகிலேயே பணியிடங்களும்,  கடைகளும் அமையும் நிலையில் மக்களுக்கு போதிய நேரம் கிடைப்பதோடு, அவர்கள் நிம்மதியாக வாழவும் வழி வகை செய்யும். இல்லங்களிலிருந்து பணியாற்றும் இடம் தொலைவில் இருப்பதால் பணி என்பதானது பெரும்பாலும் பிரச்னைகள் சார்ந்ததாக அமைந்துவிடுகிறது” என்றார். தன்னுடைய 20 வயது முதல் பாரிஸில் வாழ்ந்து வரும் அவர்,  “பொலிவுறு நகர வாழ்வு” என்ற தன்னுடைய திட்டம் மேயரின் தேர்தல் களத்தில் ஒரு முக்கியமான கூறாக அமைந்ததை பெருமையோடு நினைவுகூர்கிறார்.   “இது தொடர்பாக மேயர் என்னை  சந்திக்க அழைத்து தன் ஆர்வத்தை என்னிடம் வெளிப்படுத்தியபோது, தேர்தல் முகாமில் இது ஒரு சிறு பங்காக இருக்கின்றபோதிலும், அதற்கான முக்கியத்துவம் மிக அதிகமாக இருப்பதை உணர்ந்தேன்” என்று கார்டியன் இதழுக்கு அளித்த பேட்டியில் மொரீனா கூறியிருந்தார்.

 

“அக்கம்பக்கம் வெறும் கட்டடங்கள் மட்டுமே இருக்கக்கூடாது. சமூக உறவுகள் பேணப்படுவதோடு, உணர்வுகள் பரிமாறப்படுகின்ற இடமாக இருக்கவேண்டும்” என்று கூறிய அமெரிக்க-கனடா எழுத்தாளரும் செயற்பாட்டாளரும், 1961இன் செவ்வியல் நூலான அமெரிக்க மாநகரங்களில் இறப்பும் வாழ்வும் என்ற நூலின் ஆசிரியருமான ஜான் ஜேகப்ஸ் என்பவரால் இத்திட்டத்தினை வடிவமைக்க தான் தூண்டப்பட்டதாக கார்லஸ் மொரீனோ கூறினார்.  

 

பல ஆண்டுகளாக பாரிஸ், வாகனப் போக்குவரத்தினை அறிமுகப்படுத்துவதில் முன்னுதாரண நகரமாக இருந்து வருகிறது. தொழில்நுட்பம் வளர்ந்த இக்காலகட்டத்திலும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு, குறிப்பாக வாழ்விடத்திலிருந்து பணியிடத்திற்குச் செல்வதற்கு, அதிக நேரம் செலவழிப்பதைக் காணமுடிகிறது. பாரிஸ் மட்டுமன்றி ஒவ்வொரு நகரிலும் ஒவ்வொரு நாளும் காலைப்பொழுதில் பெற்றோர்கள் தம் பிள்ளைகளை தம் சொந்த வாகனங்களில் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் நேரத்தில் போக்குவரத்து பல இடங்களில் ஸ்தம்பித்துவிடுகிறது. நகர்ப்புற இரைச்சல்கள், வாகன ஒலி, சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற தாக்கங்களும் ஏற்படுகின்றன.  பொதுமக்களுக்கு அணுக்கமாக உள்ள திட்டமாக அன்னி முன்வைக்கின்ற இத்திட்டமானது தேக ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, நடைப்பயிற்சிக்கும் முக்கியத்துவம் தரும். ஒரு நகரமானது மக்களுக்காகத்தானேயன்றி, கார்களுக்காக அல்ல என்கிறார் மேயர் அன்னி.


 

பாரிஸ் நகரத்தவர் சமூகரீதியாகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் அக்கரை செலுத்துவதைக் காணமுடிகிறது. கடந்த ஆறு வருடங்களாக அன்னி செயல்படுத்தி வரும் திட்டங்கள் அவர்களால் ஏற்கப்படுகின்றன. குறிப்பாக குறிப்பிட்ட சில இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்படக்கூடாது என்ற அவருடைய கருத்து பரவலாக ஏற்கப்பட்டதே இதற்கு சான்றாகும். பாரிஸ் நகர வரைபடத்தினை பார்க்கும்போதே கார்களற்ற நகரம் என்ற இலக்கினை எளிதாகச் செயல்படுத்தலாம் என்பதை உணரமுடியும். இத்திட்டத்தில் அதிக எண்ணிக்கையில் பல கிலோமீட்டர் தொலைவிற்கு சைக்கிள் பாதை அமைக்கும் பணியும் அடங்கும். இவ்வாறான திட்டம் அறிமுகப்படுத்தும் நிலையில் சொந்தமாக வாகனம் வைத்துள்ளோர் இயல்பாகவே பிறர் நலனைக் கருத்தில் கொண்டு தம் எண்ணத்தை மாற்றிக்கொள்ள வகையுள்ளது என்ற நிலையில் பாரிஸ் ஒரு நம்பிக்கைக்கீற்றாகத் தெரிகிறது.

 

2024க்குள் அனைத்துத் தெருக்களிலும் சைக்கிள் செல்வதற்கான தனியான பாதைகள் அமைக்கப்படவுள்ளதாக அன்னி தெரிவித்துள்ளார். வாகன நிறுத்தத்திற்கான 60,000 இடங்களை அகற்றிவிட்டு அங்கு பசுமைசார் இடங்களையும் விளையாட்டு மைதானங்களையும் அமைக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். முன்னதாக அந்நகரில் உள்ள செய்ன் நகரையொட்டியும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் கார் ஓட்டுதல் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் 50 கிமீ தொலைவிற்கு சைக்கிள் செல்வதற்கான அமைக்கப்பட்டுள்ளது.


ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் “20-நிமிட  நகரம்” திட்ட சோதனை முயற்சியில் களம் இறங்கியுள்ளது. இத்தாலி, வெனிஸ் அருகேயுள்ள லாசரெட்டோ பகுதியில் “15-நிமிடம்” திட்டத்தை முன்னெடுத்துள்ளது. நகரவாசிகளின் தேவைகளுக்காக, சற்றொப்ப இதையொத்த “மிக அண்மை” என்ற திட்டத்தை டென்மார்க்கின் தலைநகரான கோபன்ஹேகன், நெதர்லாந்தின் உத்ரெக்ட் ஆகிய நகரங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளன. அன்னி ஹெடல்கோவின் சைக்கிளுக்கான, பாதசாரிகளுக்கான அதன்மூலமாக சுற்றுச்சூழலுக்கான ஆதரவு உலகின் பிற நகரங்களிலும் பரவுவதை இதன்மூலம் அறியமுடிகிறது. 


15-நிமிட நகரம் என்ற என் கட்டுரையை வெளியிட்ட தினமணி (தினமணி, மகளிர் மணி, 7அக்டோபர் 2020) நாளிதழுக்கு நன்றி. அதன் மேம்படுத்தப்பட்ட வடிவம்.

03 October 2020

தொடரும் மொழியாக்க அனுபவம்

1970களின் இடையில் The Hindu நாளிதழ் வாசிக்கத் தொடங்கிய காலத்தில் ஆரம்பமான புதிய சொற்களுக்கான தேடலையும், ஆரம்ப கால மொழியாக்க அனுபவங்களையும் முந்தைய பதிவில் கண்டோம். 

1980-82இல் கோயம்புத்தூரில் ரேஸ் கோர்ஸ் சாலையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, பணி நேரத்திற்குப் பின் மாலை நேரத்தில், ஐ.சி.டபிள்யூ.ஏ. படித்தேன். எனக்கு வகுப்பெடுத்த ஆசிரியர்களில் ஒருவர் ஆங்கில சொற்களை அனாயாசமாகப் பயன்படுத்துவார். வகுப்பில் ஒரு முறை, “Your words should be pregnant” என்றார். எனக்கு அதற்குப் பொருள் புரியவில்லை.  வகுப்பு முடிந்தபின் அவரிடம் அதற்கான பொருளைக் கேட்டபோது அவர் “நீங்கள் பேசுகின்ற வார்த்தைகள் பொருள் பொதிந்தவையாக இருக்கவேண்டும்” என்றார். இவ்வாறாக பல சொற்களையும், பயன்பாட்டு முறையையும் அவரிடமிருந்து அறிந்தேன். கோயம்புத்தூர் அனுபவம் மொழிபெயர்ப்புக்கான ஆவலின் அடுத்த கட்டமாக அமைந்தது. 

தஞ்சாவூரில் பணியில் சேர்ந்தபின்னர் இது தொடர்ந்தது. 1980களின் இறுதியில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், பதிப்புத்துறையில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றியபோது அலுவலகப்பணிகளோடு தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழிலும் (தமிழ்ப் பல்கலைக்கழகச் செய்தி மலர்) ஆங்கிலத்திலும் (Tamil University News Bulletin) வெளியான மாத இதழுக்கான செய்திகளைத் தட்டச்சிடும் பணியும் என்னால் மேற்கொள்ளப்பட்டது. கருத்தரங்க நிகழ்வுகள் மற்றும் தொடர்பான செய்திகள் சில சமயங்களில் தமிழில் மட்டுமே சில துறையிலிருந்து பெறப்படும்போது அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் சூழல் எழும். உதவிப்பதிப்பாசிரியரும் பிறரும் அதனை மொழிபெயர்க்கும்போது நானும் அவர்களுடன் சேர்ந்து அப்பணியில் ஈடுபடுவேன். நாளடைவில் தனிப்பட்ட ஒரு செய்தியை/நிகழ்வினை மொழிபெயர்க்கும் வாய்ப்பும் எனக்கு அமைந்தது. ஐயம் ஏற்படும்போது அகராதிகளைத் துணைகொள்வதுண்டு. இதுதொடர்பாக உரிய துறைத்தலைவர்களுடனோ ஆசிரியர்களுடனோ விவாதித்து உரிய சொற்களை அறிந்துகொள்வதும் உண்டு. இளநிலை உதவியாளர் என்ற நிலைக்கு அப்பாற்பட்டு, ஆங்கில மற்றும் தமிழ் மொழியறிவை வளர்த்துக்கொள்ள மொழிபெயர்ப்பு மிகவும் உதவியாக இருந்தது. ஒரு சொல்லுக்கான பொருளை ஒரு முறை பயன்படுத்தியபின்னர் அது இயல்பாக மனதில் பதிந்துவிடுவதை உணர்ந்தேன்.

மொழிபெயர்ப்பின் ஆர்வம் காரணமாக அவ்வப்போது தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் வெளிவருகின்ற கட்டுரைகளை மொழிபெயர்த்து அவற்றை தனியாக ஒரு கோப்பில் இடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அவ்வாறு மொழிபெயர்த்த முதல் கட்டுரை “Cooperation, not confrontation, Alladi Kuppusami, The Hindu, 16 August 1999, p.12” என்பதாகும். அப்போது தொடங்கி தொடர்ந்து மொழிபெயர்த்து வந்துள்ளேன். மொழிபெயர்ப்புக்கு ஆகும் நேரத்தையும் கட்டுரையில் குறித்துக் கொள்வேன். தி இந்து நாளிதழை மேசையில் வைத்துக்கொண்டு அதனைப் பார்த்துக்கொண்டு அப்படியே தமிழ்த் தட்டச்சுப்பொறியில் நேரடியாகத் தட்டச்சு செய்வேன். இப்பணியினை பெரும்பாலும் உணவு இடைவேளையின்போது மேற்கொள்வேன். சில சமயங்களில் ஒரு கட்டுரையினை ஒன்றுக்கு மேற்பட்ட அமர்வில் தட்டச்சிடும் நிலை ஏற்படும்போது அதற்கு ஆகின்ற ஒட்டுமொத்த நிமிடங்களைக் குறித்துக்கொள்வேன். ஆங்கில மற்றும் தமிழ்த் தட்டச்சில் தேர்ச்சி பெற்ற அனுபவமும், அவற்றைக் கற்றபோது உரிய நேரத்திற்குள் முடிக்கவேண்டும் என்றிருந்த இலக்கும் மொழிபெயர்ப்பினை மேற்கொள்ளும் நேரத்தினைக் குறித்துக் கொண்டு வேகத்தினை மேம்படுத்த உதவியது. தற்போதும் கூகுள் கருவிகளின் துணையின்றியே மொழிபெயர்த்து வருகிறேன். தேவைப்படும் சொற்களுக்கு அவ்வப்போது அகராதிகளைப் பார்த்து வருகிறேன்.

ஆரம்பத்தில் பெரும்பாலும் கோயில்கள் தொடர்பாக வந்த கட்டுரையினையே மொழிபெயர்த்தேன். அவற்றுள் Temple with special significance (V.Ganapathy, The Hindu, 3 March 2000), Stepped in legend (T.A.Srinivasan, The Hindu, 7 April 2000), Restoring the glory of a holy spot மற்றும் (Prema Nandakumar, The Hindu, 23 December 2000) உள்ளிட்ட பல கட்டுரைகள் அடங்கும். சில கட்டுரைகளை நேரடியாக மொழிபெயர்த்து எழுதுவதும் உண்டு. அவ்வகையில் எழுதிய கட்டுரையில் ஒன்று N.V.Ramaswamy, Where the Lord is a learner, The Hindu, 10 November 2000 என்பதாகும்.


 
கல்கத்தா பல்கலைக்கழகத்தில் 22 நவம்பர் 2001இல் நடைபெற்ற சிறப்புப் பட்டமளிப்பு விழாவில் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றபோது நோம் சோம்ஸ்கி ஆற்றிய உரை Frontline இதழில் (Understanding human language, Frontline, December 21, 2001) வெளியாகியிருந்தது. அதனை மொழிபெயர்த்து பேராசிரியர் கி.அரங்கன் அவர்களிடம் காண்பித்தபோது அவர் அதனைப் பாராட்டினார். அதனை அவரும் மொழிபெயர்த்தார். அப்போது இரண்டிற்கும் இடையேயான வேறுபாட்டினை என்னால் உணரமுடிந்தது. ஆரம்ப காலத்தில் நான் மொழிபெயர்த்தனவற்றுள் முக்கியமானதாக இதனைக் கருதுகிறேன்.

இவ்வாறான ஆரம்பகால மொழிபெயர்ப்புப்பணிகள் Tantric Tales of Birbal (2002), Judgement Stories of Mariyathai Raman (2002), Jesting Tales of Tenali Raman, (2005), Nomadic Tales from Greek, (2007) New Century Book House, Chennai போன்ற மொழிபெயர்ப்பு நூல்களையும், தி இந்து நாளிதழில் வந்த படியாக்கம் (cloning) தொடர்பான செய்திகளை அவ்வப்போது சேகரித்து, ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்து, படியாக்கம் (தாமரை பப்ளிகேஷன்ஸ் பி.லிட், சென்னை, 2004) என்ற நூலினை எழுதினேன். 

இந்த மொழியாக்க அனுபவமானது An icon for all time, John Cherian, Frontline, 4 July 2008 (அனைத்துக் காலத்திற்கும் பொருந்தும் கதாநாயகன், ஜான் செரியன், நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம், நவம்பர் 2008), The art of slow reading, Patrick Kingsley, The Guardian, 15 July 2010 (நிதான வாசிப்பு ஒரு கலை, பேட்ரிக் கிங்ஸ்லி, தி இந்து, 13 ஜனவரி 2014), Claire Boobbyer, On the trial of Che Guevara’s last days in Bolivia, The Guardian,  27 September 2017 (சே குவாராவின் இறுதி நிமிடங்கள், கிளையர் பூபையர், கார்டியன், பத்திரிகை.காம்., 9 அக்டோபர் 2017), How artificial insemination conceived a new era in US-Cuba relations, Mark Tran, The Guardian, 22 October 2014 (இப்படியும் ஒரு ராஜ தந்திரம், மார்க் டிரான்,  தி இந்து, 5 ஜனவரி 2015), Che Guevara’s  legacy still contentious 50 years after his death in Bolivia, Laurence Blair, Dan Collyns, The Guardian, 5 October 2017, (என்றென்றும் நாயகன் சேகுவாரா, லாரன்ஸ் பிளையர், டான் காலின்ஸ்,  தி இந்து, 9 அக்டோபர் 2017, சே குவாராவின் 50ஆம் ஆண்டு நினைவு தினம்) போன்ற பல கட்டுரைகளை மொழியாக்கம் செய்ய மிகவும் உதவியாக இருந்தது. 

மேலும் The Guardian,  Daily Mail, Daily Express, The Times, Daily Mirror, Independent, The Telegraph, The Sun, The New York Times, Washington Post, Bild, Dawn உள்ளிட்ட ஆங்கில இதழ்களில் வெளியான கட்டுரைகளில் செய்திகளைத் திரட்டி தமிழில் இந்த ஆண்டின் சொல் எது? (தி இந்து, 12 ஜனவரி 2014), ஃபுளோரிடாவிலிருந்து ஹவானாவிற்கு (தி இந்து, 1 ஏப்ரல் 2016), 2017இன் சிறந்த சொல் (தி இந்து, 7 ஜனவரி 2018), உலக அரசியல் களத்தில் மகளிர் (தினமணி, 17 ஏப்ரல் 2019), மாற்றத்திற்கான மங்கை கிரேட்டா தன்பர்க் (தினமணி, 4 செப்டம்பர் 2019), 'ரியலி கிரேட்'டா தன்பர்க் (புதிய தலைமுறை பெண், அக்டோபர் 2019), உலகின் இளம் பெண் பிரதமர் சன்னா மரின் (தினமணி, 8 மார்ச் 2020),  வாசகர்களை ஈர்க்கும் டேப்ளாய்ட்கள் (தினமணி, 11 ஜுன் 2020), அயலக இதழ்கள் புகழாரம் சூட்டிய அப்துல் கலாம் (தினமணி, 27 ஜுலை 2020) உள்ளிட்ட பல கட்டுரைகளை எழுதவும் இந்த அனுபவம் துணை நின்றது.  

இந்த 20 ஆண்டு கால மொழியாக்கப் பயணம் தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகளை ஆங்கில விக்கிப்பீடியாவிலும், ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகளை தமிழ் விக்கிப்பீடியாவிலும் மொழியாக்கம் செய்யவும் ஒரு காரணியாக அமைந்தது.

ஒரு மொழியில் குறிப்பிட்ட பொருண்மையில் இல்லாதவற்றை வெளிக்கொணரவும், மொழியறிவை மேம்படுத்திக்கொள்ளவும் மொழியாக்கம் பெருந்துணை செய்கிறது.