04 May 2019

பெருமகளூரில் மோடி கல்வெட்டு கண்டெடுப்பு

          தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பெருமகளூருக்கு நண்பர் திரு மணி.மாறனுடன் களப்பணி சென்றபோது அங்குள்ள சிவன் கோயிலில் ஓர் அரிய கல்வெட்டைக் காண முடிந்தது. தஞ்சாவூரை ஆட்சி செய்த மராட்டிய மன்னரான பிரதாமசிம்மன் காலத்தில் அளிக்கப்பட்ட கொடையைப் பற்றிய மராத்திய மொழியில் மோடி எழுத்தில் அமைந்த அக்கல்வெட்டைப் பற்றிக் காண்போம். 




பெருமகளூர், பேராவூரணி-அத்தாணி-கட்டுமாவடி பேருந்து வழித்தடத்தில் பேராவூரணியிலிருந்து சுமார் 15 கிமீ தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது.
          இவ்வூரில் இடுபாடுற்று கிடக்கும் சிவாலயத்தினை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவ்வூர் மக்களின் சார்பாக பெரியவர் சண்முகநாதன் கோயில் வளாகத்தில் புதையுண்டு எடுக்கப்பட்ட கல்வெட்டுச் செய்தியினைப் படித்தறியும்படி கேட்டுக்கொண்டதன்பேரில் தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தமிழ்ப்பண்டிதரும், தொல்லியல் ஆய்வாளருமான மணி.மாறன், முனைவர் பா.ஜம்புலிங்கம், கோ.தில்லை கோவிந்தராஜன், வை.இராமமூர்த்தி ஆகியோருடன் அவ்வூருக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். இது பற்றி மணி.மாறன் கூறியதாவது.
          களப்பணியின்போது சோமநாதர் கோயில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோயில் என்பதும் குலோத்துங்க சோழனாலும், பாண்டிய மன்னர்களாலும் பராமரிக்கப்பட்டதை அறியமுடிகிறது என்றும், பின்னர் தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னனான பிரதாபசிம்மன் காலத்தில் கொடை அளிக்கப்பெற்ற செய்தியினைக்கூறும் மராத்தி மொழி மற்றும் மோடி எழுத்திலமைந்த கல்வெட்டே தற்போது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டது என்று தெரிவித்தார். இக்கோயில் சோழர் காலக்கோயில் என்பதை உறுதிப்படுத்தும்விதமாக அக்கோயிலுக்கு நேர் எதிராக காவிரிக் குடிநீர்த் திட்டத்திற்காக குழாய் பதிக்கும் பணி நடைபெற்றபோது நடராஜர், விநாயகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட செப்புத்திருமேனிகள் புதையுண்டிருந்து, கண்டெடுக்கப்பட்டது. இவை தற்போது தஞ்சாவூர் மாவட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 
          சோழ நாட்டில் முதலாம் இராஜராஜனால் உருவாக்கப்பெற்ற வளநாடுகள் பலவற்றை முதலாம் ராஜேந்திரசோழன் மேலும் பல வளநாடுகளாகவும் கூற்றங்களாகவும் பிரித்தான். அவற்றுள் பாண்டிய குலாசனி வளநாட்டிலிருந்து பிரிக்கப்பட்டு, உருவாக்கப்பெற்ற ஜெயசிங்க குலகால வளநாட்டில் அடங்கிய ஒரு பேரூரே பெருமுள்ளூர் என்னும் ஊராகும். அன்று பெருமுள்ளூர் என்றழைக்கப்பட்ட இவ்வூர் பெயர் மருவி இன்று பெருமகளூர் என்று அழைக்கப்படுகிறது.
வரலாற்றில் இவ்வூர், பெருமுள்ளூரான குலோத்துங்க சோழ சதுர்வேதிமங்கலம் எனக் குறிக்கப்பெறுகின்றது. குலோத்துங்கசோழன் காலத்திற்கு (கி.பி.1070-1125) முன்னதாகவே இராஜராஜனால் இச்சிவாலயம் எழுப்பப்பெற்றிருக்கவேண்டும். நம் வரலாற்றில் பல்வேறு சான்றுகள் மறைந்தும் புதைந்தும் கிடப்பதால் பல செய்திகளை வெளியுலகு அறிய இயலாமல் போய்விடுகிறது. கோயிலோடு இணைந்து திகழும் பெருங்குளமான தாமரைக்குளத்தின் நீர் வெளியேறும் அமைப்பும், கட்டுமானமும் இராஜராஜன் காலத்துப் பாணியைக் காட்டுகின்றன.
பாண்டிய மன்னர்களால் இவ்வூரும், இங்கு திகழும் கோயில்களும் போற்றப்பெற்றுள்ளன. பாண்டிய நாட்டின் எல்லையான வெள்ளாற்றின் அருகே இவ்வூர் அமைந்துள்ளதே இதற்குக் காரணம் ஆகும். இங்கு கிடைத்த கல்வெட்டில் காலத்தால் முந்தையது குலோத்துங்க சோழனின் கல்வெட்டாகும். பல்வேறு காரணங்களால் பிற கல்வெட்டுகள் காலப்போக்கில் அழிந்துள்ளன.
இங்கு புதிதாகக் கண்டறியப்பட்ட மராத்திய மொழியின் ஒரு வடிவமான மோடி எழுத்துக்களைக் கொண்ட கல்வெட்டு தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னன் பிரதாம சிம்மன் (கி.பி.1739-1763) காலத்தில் வெட்டப்பட்டதாகும். இக்கல்வெட்டில் சாலிவாகன சகாப்தம் 1674 என்றும் கலி ஆண்டு 4854 என்றும் குறிப்பிடப்பெற்றுள்ளது. இதன்படி இக்கல்வெட்டு வெட்டப்பெற்ற ஆங்கில ஆண்டு கி.பி.1753 ஆகும். இக்கல்வெட்டுச் சாசனத்தில் செப்பேடு மற்றும் ஓலைச்சுவடிகளில் காணப்படுவதுபோன்று முத்திரை இடப்பட்டுள்ளது சிறப்பானதாகும். மேலும், சூரிய, சந்திரரைக் குறிப்பிடும் வட்டமும் பிறையும் வெட்டப்பட்டுள்ளது. மராத்தி மோடி எழுத்துக்கள் கலந்து காணப்படும் இக்கல்வெட்டு பிரதாபசிம்மன் பெருமுள்ளூர் சிவாலயத்திற்கு வழங்கிய கொடையினை விவரிக்கிறது.
கிட்டத்தட்ட 5 அடி உயரமும் 2 அடி அகலமும் கொண்ட கல்வெட்டின் பக்கவாட்டில் இதே செய்தி, தமிழிலும் வெட்டப்பட்டுள்ளது.  ஆனால் தமிழ்ப்பகுதி மிகவும் சிதைவுற்று இருப்பதால் படித்தறிய முடியா நிலையில் உள்ளது. தமிழகத்தில் சோழர் காலத்துக் கோயிலில் கிடைத்துள்ள மராத்தி மொழி மோடி எழுத்தில் அமைந்த கல்வெட்டு இதுவேயாகும் என்று மணி.மாறன் தெரிவித்தார்.

அழகான இயற்கைச்சூழலில் அமைந்துள்ள இக்கோயிலைப் பற்றி விக்கிபீடியாவில் நான் ஆரம்பித்துள்ள பதிவினை கீழ்க்கண்ட இணைப்பில் காணலாம். இக்கோயிலில் உள்ள மூலவர் திருமேனியானது உளியால் செதுக்கப்படாத விடங்கத்திருமேனியாகும். மேற்கண்ட கல்வெட்டு தொடர்பான செய்தி தற்போது விக்கிபீடியாவில் இணைக்கப்பட்டுள்ளது. 



நன்றி : திரு மணி.மாறன்
விக்கிபீடியா
செய்திகளை வெளியிட்ட நாளிதழ்கள்

18 comments:

  1. தங்கள் ஆய்வுப் பணி தொடரவேண்டும்.
    இவை யாவும் நூலுருப் பெற்றால் சிறப்பு.

    ReplyDelete
  2. மராத்தி மொழிக்கு மோடி எழுத்துகள் என்று பெயர் உள்ளதை இன்றே அறிந்தேன். மிகவும் சுவையான தகவல்கள்.

    ReplyDelete
  3. இணைய பத்திரிக்கைகளில் இந்தச் செய்தியினைப் படித்தபோது அதில் தங்களது பெயரும் கண்டு மகிழ்ச்சியடைந்தேன்...

    ReplyDelete
  4. வாழ்த்துகள் ஐயா
    தங்களின் தேடல் தொடரட்டும்

    ReplyDelete
  5. அரிய தகவல்கள் தங்களது தேடுதல்கள் மென்மேலும் வளரட்டும்.
    மோடி என்பது பற்றிய தகவல்கள் ஆச்சர்யமாக இருக்கிறது.

    ReplyDelete
  6. "மோடி எழுத்துகள்" என்பதை இன்றுதான் அறிந்தேன். நல்ல கட்டுரை

    ReplyDelete
  7. 'மோடி எழுத்துக்கள்' பற்றி தெரிந்து கொண்டேன்.
    பத்திரிக்கை செய்திகளும் படித்து மகிழ்ந்தேன்.
    உங்கள் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  8. புதிய தகவல்கள் அறிந்தேன் ஐயா... நன்றி...

    ReplyDelete
  9. சோழர் காலத்திய, பின்னர் பாண்டியர் பராமரித்த, அதன் பின் மராட்டிய மன்னன் பிரதாப சிம்மனால் சிறப்பு பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க‌ பெருமகளூர் பற்றி அரிய தகவல்க‌ளை அறிந்தேன். இப்படிப்பட்ட பொக்கிஷங்களை அறிமுகம் செய்வித்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  10. 'மோடி எழுத்துக்கள்' பற்றி தெரிந்து கொண்டேன். நன்றி...ஐயா...

    ReplyDelete
  11. இந்த செய்திகள் வந்த பொழுது அவ்வளவு மகிழ்வாக உணர்ந்தேன்.
    வாழ்துகள் அய்யா

    ReplyDelete
  12. புதுமையாக எத்தனை தகவல்கள்.
    தினமலரில் தங்கள் பெயரும் வந்திருப்பது மகிழ்ச்சி ஐயா.
    மோடி என்று கேட்டதும் அதிசயமாக இருந்தது.

    மராத்தி எழுத்துக்களா. மிக நன்றி ஐயா.

    ReplyDelete
  13. குறைந்தபட்சம் தமிழகம் முழுக்க இருக்கும், இதுவரையிலும் கண்டு பிடித்த கல்வெட்டுக்கள், மேற்கொண்டு செய்ய வேண்டிய முயற்சிகள் போன்றவற்றை தனி வாரியமாக அமைத்து உண்மையான அக்கறையுள்ள ஆர்வம் உள்ள அதிகாரிகளின் கீழ் உங்களைப் போன்றவர்களை நியமித்து முழுமையாக வரலாற்று விசயங்களைத் தொகுத்தால் மொத்த தமிழக வரலாறும் மாறும் என்பதே உண்மை.

    ReplyDelete
  14. மோடி எழுத்துகள் என்றதும் என்னவோ என்று நினைத்தேன் மராத்திய மொழியின் லிபி அவ்வாறு கூறப்படுகிறதோ

    ReplyDelete
  15. மிக அருமையான தகவல். ஆய்வுகள் தொடரட்டும் சார். நானும் மோடி எழுத்துக்கள் என்றதும் ஓடி வந்தேன் :) மேலும் ப்ரதாப சிம்மன் என நினைத்தேன். பிரதாமசிம்மனா !

    ReplyDelete
    Replies
    1. நானும் பிரதாப சிம்மன் என்றுதான் நினைத்தேன்.

      கீதா

      Delete
  16. மராத்தி மொழியின் வடிவமான மோடி எழுத்துகள் பற்றி அறிந்து கொண்டோம். புதியதொரு வரலாற்றுத் தகவல்.

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  17. மராட்டிய மன்னன் பிரதாம சிம்மன் (1739-1763) ஆட்சியில் பொறிக்கப்பட்ட பெருமுள்ளூர் மோடி வரிவடிவக் கல்வெட்டு பற்றிய ஆய்வுச் செய்திகள் அனைவரும் புரிந்துகொள்ளும்படி எழுதிய சிறப்பான பதிவு.

    ReplyDelete