27 November 2016

ஃபிடல் காஸ்ட்ரோ : எங்களது வாசிப்பில்

வாழும்போதே வரலாறு படைப்பவர்கள், நம் மனதில் நினைப்பவர்கள் சிலரே. அவ்வாறானோரில் ஒருவரே பிடல் காஸ்ட்ரோ. அவரது கொள்கை, மன உறுதி, பிற நாடுகளுடன் நட்புறவு, தன் நாட்டை அனைத்து நிலைகளிலும் உயர்த்துதல் என்ற நிலைகளில் அவருடைய தனித்துவம் அனைவரையும் கவர்ந்ததாகும். எங்களை ஈர்த்த வெளிநாட்டுத்தலைவர்களில் முக்கியமான இடத்தைப் பெற்றவர்களில் ஒருவர் காஸ்ட்ரோ. மற்றவர்கள் யாசர் அராபத் மற்றும் நெல்சன் மண்டேலா. எங்களது வாசிப்பில் அவரைப் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாசிப்போம். 

1983, புதுதில்லி வருகை
1983இல் புதுதில்லியில் கூட்டுசேரா நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்றபோது முதன்முதலாக பிடல் காஸ்ட்ரோ அறிமுகம். அந்த மாநாட்டு ஏற்பாடு தொடங்கி நடைபெற்றது வரை The Hindu நாளிதழில் செய்திகளை முழுமையாக வாசித்தபோதுதான் இவ்வாறாக ஒரு தலைவர் இருக்கிறார் என்பதை அறிந்தேன். கியூப புரட்சிக்குப் பின் 1959இல் காஸ்ட்ரோ தலைமையிலான கியூப சோசலிச அரசு அமைந்த போது அதற்கு ஆதரவுக்கு கொடுத்த முதன்மையான நாடுகள் என்ற நிலையில் இந்தியா முக்கியத்துவம் பெற்றிருந்ததுபற்றி பேசப்பட்ட நிலையில் அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன். அக்காலகட்டத்தில் தொடர்ந்து சேகுவாராவின் புதுதில்லி வருகை, காஸ்ட்ரோவை நேரு நியூயார்க்கில் கூட்டுசேரா உச்சிமாநாட்டில் சந்தித்தது (1960) என்ற நிலைகளில் அறிந்தேன். 
   
காஸ்ட்ரோவின் இந்தியாவுடனான வரலாற்று சிறப்புமிக்க உறவானது கூட்டுசேரா இயக்கத்தை வலுவடைய வைத்தது. அதற்கான வித்திட்டவர் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு.  ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அப்போது காஸ்ட்ரோ, என்னை முதலில் காணவந்தவர் நேரு. அவருடைய அக்குணத்தை நான் என்றும் மறக்கமாட்டேன். அப்போது எனக்கு வயது 34. என்னைப் பற்றி யாரும் அதிகமாக அறிந்திருக்கவில்லை. மிகவும் இறுக்கத்தோடு இருந்தேன். நேரு என் மனதிற்குத் தெம்பினைத் தந்தார். என்னுடைய இறுக்கம் தளர்ந்தது".  
Courtesy: The Hindu, 22 February 2008
இந்திரா காந்தி பிரதமாக இருந்த காலகட்டத்தில், 1983இல் காஸ்ட்ரோ இந்தியாவிற்கு வந்தபோது அவர் 1970களில் இந்தியாவிற்கு வந்ததைப் பற்றி படித்த நினைவு. 1985இல் ராஜீவ் காந்தி, 2006இல் மன் மோகன் சிங்கும் காஸ்ட்ரோவைச் சந்தித்தது இன்னும் எனக்கு நினைவில் உள்ளது. புதுதில்லியில் நடைபெற்ற கூட்டுசேரா உச்சி மாநாட்டில் அந்த அமைப்பின் தலைமைப்பொறுப்பை திருமதி இந்திரா காந்தியிடம் ஒப்படைத்தார். அந்நிகழ்வு மறக்கமுடியாத ஒன்றாகும். 

2008 காஸ்ட்ரோ ஓய்வு
2008இல் பிடஸ் காஸ்ட்ரோ ஓய்வு பெற்றபோது The Hindu  நாளிதழில் தொடர்ந்து நான்கு நாட்கள் செய்திகள் வந்தன.பிடலைக் குறித்து தொடர்ந்து செய்திகள் வெளியானதைப் பாராட்டி The Hindu நாளிதழுக்கு கடிதம் எழுதினேன். அக்கடிதம் அவ்விதழில் வெளியாகியிருந்தது. 

20.2.2008 : Photograph of Fidel with caption "End of an era" (p.1), Cartoonscape on Castro (p.10). Life and times of Fidel Castro (p.16), Fidel Castro steps down" (p.16) and "Will not accept position: Castro" (p.16)
21.2.2008 : Cuba's future depends on next US President/Ignacio Ramonet (p.11)
22.2.2008 : The one and only Fidel/K/Natwar Singh (p.11)
23.2.2008 :  A Hero of our times, Editorial (p.10)
 
1970களின் இடையில் தொடங்கி The Hindu நாளிதழை நான் படித்து வந்த வகையில் இவ்வாறாக ஒருவரைப் பற்றி தொடர்ந்து நான்கு நாள்கள் செய்திகளோ கட்டுரைகளோ வந்ததாகப் படித்த நினைவு எனக்கு இல்லை.  
இவ்வாறாக செய்திகள் வந்த நிலையில் நான் தொடர்ந்து வரவுள்ள Frontline இதழிலும் இவ்வாறாக அதிகமான கட்டுரைகளும் புகைப்படங்களும் வரும் என்று கூறியிருந்தேன். என் குடும்பத்தாரும் நானும் எதிர்பார்த்தவாறே அவ்விதழ் A soldier in the battle of ideas என்ற தலைப்பில் காஸ்ட்ரோவைப் பற்றிய சிறப்பிதழாக The practical moralist (pp.4-15), The interview of Herbert Matthews with Fidel (pp.14-24). Intrviewe of Saeed Naqvi (pp.25-27) என்ற தலைப்பில் கட்டுரைகளையும் பேட்டிகளையும் கொண்டு வெளியானது.
அவ்விதழையும் காஸ்ட்ரோவைப் பற்றியும் நான் எழுதிய கடிதம் அவ்விதழில் வெளியானது. என் கடிதம் வெளியானதைவிட கூடுதலாக மற்றொரு சிறப்பாக Frontline ஆசிரியர் திரு என்.ராம் திருச்சி The Hindu அலுவலகத்திலிருந்து ஒருவரை (Mr S.Narayanan, Sales Executive, The Hindu, Trichy) இதற்காகவே என் இல்லத்திற்கு 10.3.2008 அன்று அனுப்பி என் கடிதத்திற்காக பாராட்டு தெரிவித்திருந்தார். 
2006 மன்மோகன்சிங் சந்திப்பு
இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங் காஸ்ட்ரோவை சந்தித்தபோது"எக்காலத்திற்கும் பொருந்தும் ஒரு பெருந்தலைவன் முன்னிலையில் இருப்பதை நான் உணர்கிறேன்" என்று கூறியிருந்தார். காஸ்ட்ரோ அவரிடம் "கூட்டுசேரா உச்சி மாநாடு இன்னும் இரு நாள்கள் கழித்து நடத்தப்பட்டிருந்தால் நான் அம்மாநாட்டிற்கு தலைமை தாங்கியிருப்பேன்" என்றார். இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டதும் காஸ்ட்ரோ கோடிக்கணக்கான மக்களால் இந்த புகைப்படம் பார்க்கப்படவேண்டும் என்ற தன் ஆவலை மன்மோகன் சிங்கிடம்வெளிப்படுத்தினார். 
Courtesy: The Hindu, 19 September 2006

2013 அன்சாரி சந்திப்பு
துணை ஜனாதிபதி அன்சாரி காஸ்ட்ரோவை ஹவானாவில் சந்தித்தார். அப்போது பலதரப்பட்ட பொருண்மைகளில் காஸ்ட்ரோ அவருடன் விவாதித்தார். இந்த பயணத்தைப் பற்றியும் மன்மோகன் சிங்கின் பயணத்தைப் பற்றியும் நான் எழுதிய கடிதம் The Hindu இதழின் தளத்தில் வெளியானது. 

Courtesy: The Hindu, 31 October 2013

அவரைப் பற்றிய எங்களது வாசிப்பு தொடர்ந்துகொண்டிருந்த நிலையில் ஒபாமாவின் கியூப பயணம் பற்றியும், காஸ்ட்ரோவைக் கொல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்தும் தி இந்து இதழில் புளோரிடாவிலிருந்து ஹவானாவிற்கு என்ற தலைப்பில் வெளியான எனது கட்டுரையில் எழுதியிருந்தேன். காஸ்ட்ரோவைப் பற்றி எழுதவேண்டும் என்ற நெடுநாளைய ஆசை அப்போது பூர்த்தியானது. வாசகர் கடிதத்திலிருந்து கட்டுரை எழுதும் அளவிற்கு அந்தத் தலைவனைப் பற்றிய எண்ணங்கள் எங்கள் மனதில் உயர்ந்து அதிக அளவில் இருந்ததை நினைக்கும்போது வியப்பு மேலிடுகிறது. 
அவரைப் பற்றிய எங்களது வாசிப்பு அவரை ஒரு மிகச் சிறந்த முன்னுதாரண தலைவராக அடையாளப்படுத்தியது, அந்த வாசிப்பானது இன்னும் தொடர்கிறது. இவரையொத்த, சற்றொப்ப இவரோடு ஒப்புநோக்கும் அளவிலோ இப்பூமிப்பந்தில் எந்தவொரு தலைவரும் இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. வயது பாரபட்சமின்றி அனைவரும் இவரைப் பாராட்டவும் நினைவுகூறவும் காரணம் அவருடைய மன உறுதியே. சிங்கத்தைப் போன்ற தோற்றம், நடை, பேச்சு என்ற நிலையில் சிம்ம சொப்பனமாகவே விளங்கினார், தன் இறுதி மூச்சு வரையிலும். அந்த மாமனிதருக்கு வணக்கம் செலுத்துவோம். 

பிடல் காஸ்ட்ரோவைப் பற்றிய என்னுடைய பிற பதிவுகள்:

18 comments:

 1. வீர வணக்கம் செலுத்துவோம்

  ReplyDelete
 2. ஒரு மாமனிதரைப்பற்றி மிகவும் விரிவாக எடுத்துச்சொல்லி அசத்தியுள்ளீர்கள்.

  ’தி ஹிண்டு’ போன்ற மிகப் பிரபலமான தினசரிகளில், தங்களின் கடிதங்கள் வெளியிடப்பட்டுள்ளதும், அதற்காகத் தாங்கள் பாராட்டப்பட்டுள்ளதும் கேட்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  என் மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள், முனைவர் ஐயா.

  ReplyDelete
 3. சிறப்பான மனிதருக்கு வணக்கங்கள்...

  ReplyDelete
 4. நல்லதொரு பகிர்வு. ஹிந்து நாளிதழில் உங்கள் கடிதங்கள்.... பாராட்டுகள்.

  ReplyDelete
 5. நல்ல கட்டுரை.
  சிறப்பான மனிதருக்கு வணக்கங்கள்.
  ஹிந்து நாளிதழில் வந்த உங்கள் கடிதங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete
 6. அருமையான ஆய்வுக் கண்ணோட்டம்

  ReplyDelete
 7. வாழும் காலத்திலேயே
  வரலாறு படைத்த மாமனிதருக்கு அஞ்சலி..

  தங்களுடைய பொக்கிஷக் குறிப்புகள் பதிவினை மேலும் உயர்த்துகின்றன..

  ReplyDelete
 8. ஒரு மாமனிதர் பற்றிய பதிவுகளில் தங்களின் முத்திரையும் பதித்து, பாரம்பரிய ஹிந்துவின் பாராட்டும் பெற்று, அதை தக்க சமயத்தில் பதிவிட்ட தங்களுக்கு வாழ்த்துக்கள்.
  பொதுவாக வரலாறுகளில் மட்டுமே படித்து அறிந்துகொள்ளும் சாகச மனிதர்களின் சரித்தரத்தை போல் நாம் வாழும் காலத்திலும் ஒரு அசாதாரண மனிதர் இருந்திருக்கிறார். அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்பதே நமக்கு பெருமை.
  ஏராளமான கொலை முயற்சியில் இருந்து தப்பித்து, இயற்கையால் மட்டுமே தன்னை வெல்ல முடியும் என்று நிரூபித்த அந்த மாபெரும் மனிதருக்கு எனது வீர வணக்கங்கள்.

  ReplyDelete
 9. அமெரிக்கா பொருளாதார தடை விதித்த போதும் ,பலமுறை அவரைக் கொல்ல முயன்றும் மக்களின் துணையோடு வென்று காட்டிய உலக புரட்சித் தலைவர் அல்லவா ஃபிடல் காஸ்ட்ரோ :)

  ReplyDelete
 10. நல்லதொரு பகிர்வு. உங்கள் கடிதங்கள் வெளியான மகிழ்ச்சியான தகவல்களும் படித்து மகிழ்ந்தேன்.

  ReplyDelete
 11. A noteworthy article and also timely one.
  Very informative.

  ReplyDelete
 12. A noteworthy article and also timely one.
  Very informative.

  ReplyDelete
 13. நல்ல பதிவு.... நினைத்தால் மனம் இனிக்கிறது.

  ReplyDelete
 14. க்யூபாவுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதாரத்தடைகளையும் மீறி நிற்க அவருக்கு சோவியெட் யூனியன் உதவியாய் இருந்தது அவரது நினைவுகளைப் புதுப்பிக்கும் உங்கள் பதிவு. பாராட்டுகள்

  ReplyDelete
 15. காஸ்ட்ரோ பற்றிய தகவல் சேகரிப்பு அபாரம்.தங்கள் வாசிப்பு ஆர்வமும் தேடல் பண்பும் வியக்க வைகிறது ஐயா

  ReplyDelete
 16. (முனைவர் கி.அரங்கன் rangan.lingprof@gmail.com மின்னஞ்சல் வழியாக)
  அன்புள்ள டாக்டர் ஜம்புலிங்கம், காஸ்ரோவைப் பற்றி நீங்கள் எழுதியுள்ள கட்டுரையைப் படித்தேன். மிகத் தெளிவாகவும் எளிய நடையிலும் மனதைத் தொடும்படியும் அக்கட்டுரை அமைந்திருக்கிறது. வருங்காலத் தலைமுறையினருக்குத் தேவையான பதிவுகள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்
  அன்புடன், அரங்கன்

  ReplyDelete
 17. அருமையான பதிவு ஐயா! நம் காலத்தில் வாழ்ந்த ஓர் அசாதாரணமான மனிதர் பற்றி அழகான பதிவு. பல தகவல்கள் அறிந்து கொள்ள முடிகிறது. தங்கள் கடிதம் ஹிந்துவில் வெளியானதற்கும் பாராட்டுகள் வாழ்த்துகள் ஐயா. மிக்க நன்றி பகிர்விற்கு

  ReplyDelete