30 ஏப்ரல் 2017 அன்று தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணி நிறைவு பெறவுள்ளேன் என்பதைத் தெரிவிப்பதில் மனம் மகிழ்கின்றேன்.
கும்பகோணத்தில் வியாபாரப் பின்புலமோ, படிப்புப் பின்புலமோ இல்லாத குடும்பத்தில் பிறந்து (2 ஏப்ரல் 1959), குடும்ப சூழ்நிலையின் காரணமாக சொந்த காலில் நிற்க வேண்டிய நிலையில் பல சிரமங்களை எதிர்கொண்டு கல்லூரிப்படிப்பை முடித்து, தனியார் நிறுவனங்களில் பணியாற்றி தொடர்ந்து தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் சுமார் 35 ஆண்டுகள் பணியாற்றி நிறைவு பெறும் நிலையில் என்னை ஏற்றிவிட்ட ஏணியாக இருந்த அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- எனக்குப் பல நிலைகளில் பல பாடங்களைக் கற்றுக் கொடுத்த என் பெற்றோர்
- அன்போடும் கண்டிப்போடும் வளர்த்த தாத்தா திரு ரத்தினசாமி
- பேரன்பைப் பொழிந்து ஊட்டிய ஆத்தா திருமதி பிச்சாரம்மாள்
- பாசத்தின் உறைவிடமான, என்றும் என் நினைவில் இருந்துகொண்டு என்னை வழிநடத்திக்கொண்டிருக்கின்ற, என் அத்தை திருமதி இந்திரா
- தட்டச்சு, சுருக்கெழுத்து கற்றபோது எங்களுக்குப் பயிற்றுவித்த ஈஸ்வரன் தட்டச்சு நிறுவன மேலாளர் மற்றும் பாரத் தட்டச்சு நிறுவனத்தின் திரு பாஸ்கரன்
- இந்தி வகுப்பிற்குச் சென்றபோது எங்களுக்குப் பாடத்தோடு பண்பையும் கற்றுத் தந்த திரு பாலசுப்பிரமணியன் (திரு பாலுஜி)
- பள்ளியில் படித்தபோது எனக்கு உடன் பிறவா சகோதரிகளாக இருந்த சந்தானம் அக்கா, செல்வம் அக்கா, தயாளன் அக்கா
- கல்லூரியில் படிக்கும் காலத்தில் எனக்கு நல்லொழுக்கங்களை கற்றுத் தந்த நண்பன் திரு சந்தானகிருஷ்ணன்.
திரு கே.எஸ்.சந்தானகிருஷ்ணனுடன் (பின் உள்ள புகைப்படத்தில் எங்கள் அப்பா திரு பாலகுருசாமி) |
- கல்லூரி இறுதி வகுப்பில் தேர்வு எழுதவிருந்த காலகட்டத்தில் என் தந்தை இறந்த நிலையில், என் தட்டச்சு சுருக்கெழுத்து தகுதிகளைப் பார்த்து நம் குடும்பத்தில் இவ்வளவு தகுதிகளைக் கொண்டு கல்லூரிப்படிப்பை படித்த ஒருவன் உள்ளானே என்று பெருமைபட்டு என்னை முதன்முதலாக விடுப்புப்பணியிடத்தில் சென்னையில் பணியில் சேர்க்க உதவியதோடு சென்னையில் நான் தங்கியிருந்தபோது எனக்கு ஆதரவாக இருந்த என் மாமா திரு தனஞ்ஜெயன் மற்றும் என் அத்தை திருமதி ஜெண்பகலட்சுமி
திரு தனஞ்செயன் மாமா, திருமதி ஜெண்பகலட்சுமி அத்தை (1 செப்டம்பர் 1985இல் எங்கள் திருமணத்திற்கு வந்திருந்தபோது) |
- அடுத்தடுத்து நானாகவே வேலைக்கு விண்ணப்பம் செய்து கோவையில் பணியில் சேர்ந்தபோது என்னை தன் பிள்ளையாகப் பார்த்துக் கொண்ட நண்பர் திரு கிருஷ்ணமூர்த்தியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தார்
- கோவையில் வேலை பார்த்தபோது வார விடுமுறை நாள் செலவிற்கு 10 அல்லது 20 ரூபாயாவது வைத்துக்கொள் என்று கூறி அவ்வாறு இல்லாத நிலையில் எனக்கு பணம் கொடுத்து உதவியதோடு எனக்கு நல்லொழுக்கங்களைக் கற்றுத் தந்து பழகிய திரு கிருஷ்ணமூர்த்தி
- கோவையில் பழகிய நண்பர்கள், உடன் தங்கியிருந்த நண்பர்கள்
வத்தலகுண்டு ஆறுமுகம், விழுப்புரம் திருநாவுக்கரசு, கும்பகோணம் ஜம்புலிங்கம், திண்டுக்கல் கண்ணன், கோயம்புத்தூர் கிருஷ்ணமூர்த்தி, திருநெல்வேலி பெருமாள் (15.8.1982இல் கோயம்புத்தூரில் எடுக்கப்பட்ட புகைப்படம்)
- தனியார் நிறுவனங்களில் பணியாற்றியபோது எனக்கு பணிகளைக் கற்றுக் கொடுத்து என் தட்டச்சு, சுருக்கெழுத்து அறிவை மேம்படுத்த உதவிய நிறுவன இயக்குநர்கள் மற்றும் மேலாளர்கள்
- தமிழுக்காக ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தபோது மிகவும் மகிழ்ச்சியாக வந்து பணியில் சேர்ந்தபோது சந்தித்த அறிஞர்பெருமக்கள்
- தஞ்சாவூரில் வேலை பார்த்தபோது ஆரம்ப காலத்தில் தன் வீட்டில் இடம் தந்து என்னை கவனித்துக்கொண்ட என் மாமா திரு பழனிச்சாமி
- முற்றிலும் வியாபாரத்தில் ஈடுபட்ட குடும்பத்தில், வேலை பார்த்த என்னை மருமகனாக ஏற்றுக்கொண்ட என் மாமனார் திரு திருவண்ணாமலை மற்றும் குடும்பத்தார்
- கடந்த 35 ஆண்டுகளில் சந்தித்த தமிழ்ப்பல்கலைக்கழக ஆசிரிய, அலுவலக நண்பர்கள்
- தமிழ்ப்பல்கலைக்கழக முதல் பதிவாளர் தவிர அனைத்துப் பதிவாளர்கள், மற்றும் அனைத்துத் துணைவேந்தர்கள்
தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் தட்டச்சுப்பணியில் |
- முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும்போது களப்பணி மூலமாக தமிழக வரலாற்றில் தனியாக முத்திரை பதிக்கமுடியும் என்று அறிவுரை கூறி என்னை ஊக்கப்படுத்திய முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் ஐயா அவர்கள்
- ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்ட ஆய்விற்கு வழிகாட்டியாக இருந்து ஆய்வேடுகள் செப்பமாக அமைய தடம் அமைத்துத் தந்த பேராசிரியர் க.பாஸ்கரன் அவர்கள்
- என் ஆய்வினை மனம் திறந்து பாராட்டும் அறிஞர் பெருமக்கள்
- நல்ல கருத்துகளை அவ்வப்போது முகநூலில் பகிர சொல்லித் தந்த எனது மூத்த மகன் பாரத்
- என் எழுத்து அனைவருக்கும் சென்று சேரவேண்டும் என்று கூறி எனக்கு வலைப்பூ எழுத கற்றுத்தந்த என் இளைய மகன் சிவகுரு
- என் எழுத்துப்பணி சிறப்பாக அமைய அமைதியாக உதவுகின்ற எங்களுக்கு மகளாக அமைந்த மருமகள் திருமதி அமுதா
- தொலைபேசியிலும், நேரிலும் என் எழுத்தையும், ஆய்வையும் பாராட்டும் நண்பர்கள், உறவினர்கள்
- சோழ நாட்டில் பௌத்தம் ஆய்வில் அடியெடுத்து வைத்த முதல் நான் கண்டுபிடித்த சுமார் 30 புத்தர் மற்றும் சமண தீர்த்தங்கரர் சிலைகளைப் பற்றிய செய்திகளை வெளியிட்ட ஊடக நண்பர்கள்
- என் எழுத்தினை ஊக்குவிக்கின்ற வலைப்பதிவர்கள் முக நூல் நண்பர்கள்
- விக்கிபீடியாவில் சுமார் 600 பதிவுகளை என் எழுதக் காரணமாக இருந்த சக விக்கிபீடிய நண்பர்கள்
- பல தேவாரத்தலங்களுக்கும், மங்களாசாசனம் பெற்ற தலங்களுக்கும் எங்களை அழைத்துச் சென்ற முனைவர் வீ.ஜெயபால் அவர்கள்
- அனைத்திற்கும் மேலாக......
என் மனைவி பாக்கியவதி. "உன் மனசுக்கு ஏத்தபடி நல்ல பொண்ணு உனக்கு மனைவியா வரும்" என்று என் ஆத்தா கூறியபடியே எனக்கு அமைந்த என் மனைவி. வாசகர் கடிதம் எழுதத்தொடங்கி இன்று சுமார் 1000 பதிவுகளை நான் எழுதக் காரணமாக அமைந்தவர். தினமும் காலையில் பணிக்கு உரிய நேரத்திற்குள் கிளம்ப வசதியாக காலை உணவை முடித்து, மதியை உணவையும் தந்து அனுப்பிவைத்தவர். குடும்ப சூழல் காரணமாக தவறான முடிவுகளை எடுக்க நான் முயன்றபோது உரிய ஆறுதல் கூறி தைரியம் தந்தவர். நேர்மை, நேரந்தவறாமை என்ற கொள்கைகளைக் கடைபிடித்த நிலையில் உடன் பிறந்தோர், பெற்றவர் உள்ளிட்ட நெருங்கிய பல உறவுகள் என்னை விட்டுப் பிரிந்தபோது ஆறுதலாக இருந்தவர். என் கொள்கைகளிலும், நேரந்தவறாமையிலும், கடமை தவறாத நிலையில் இருக்க உதவியவர். தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய இந்த 35 வருடங்களில் அலுவலகத்தற்கு தாமதமாக நான் சென்றது நான்கு அல்லது ஐந்து முறை மட்டுமே. அலுவலக நேரத்திற்கு முன்பாகவே நான் சென்றுவிடுவேன். அலுவலகத்திற்குத் தாமதமாக வந்து ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லும் வழக்கத்தை நான் கொள்ளாமல் இருந்ததற்கும், அந்த அளவு நான் பணிக்குச் செல்ல காரணமாக அமைந்ததற்கும் காரணம் அவரே. இவை மட்டுமல்ல இன்னும்.......
எங்கள் மூத்த பேரன் தமிழழகனுடன் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் |
- மனதில் நிற்கும் திருமஞ்சன வீதி பள்ளி (1963-1972)
- மனதில் நிற்கும் பேட்டைத்தெரு பள்ளி (1972-1975)
- கேட்டு வாங்கிப்போடும் கதை : எங்கள் பிளாக்
- மூன்று முத்துக்களை வாழ்த்துவோமே : மனசு
- வெற்றிக்கான வழி இலக்கு நோக்கிய பயணம் : சும்மா : சாட்டர்டே போஸ்ட்
- தமிழ்ப்பல்கலைக்கழகப் பணியில் 35ஆம் ஆண்டு : 800 பதிவுகள், 29 கண்டுபிடிப்புகள்
நல்ல விவரமான சுய சரித்திரம். நான் உங்கள் முனைவர் பட்டத்தைப் பார்த்துவிட்டு நீங்கள் ஆசிரியப் பணியில் இருப்பீர்கள் என்று நினைத்ததுண்டு.ஆனாலும் நிர்வாகத்துறையில் இருந்துகொண்டு ஆரய்ச்சியில் இவ்வளவு ஆர்வம் கொண்டுள்ளவரை நான் இது வரை சந்தித்தது இல்லை. உங்கள் முனைப்பைக் கண்டு ஆச்சரியப்படுகிறேன்.
ReplyDeleteதமிழ்ப் பல்கலைக் கழகம் உங்கள் ஆராய்ச்சித் திறனை சரிவரப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது என் எண்ணம்.
உங்கள் சாதனைகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.
அடடா...என்ன ஞாபக சக்தி...என்னே நன்றி உணர்வு! என்னை விட சரியாக ஒன்பதே ஆண்டுகள் இளையவர் நீங்கள்...ஒய்வு பெற்றபின் மேலும் ஒளிமயமானதாக இருக்கட்டும் உங்கள் எதிர்காலம்! தமிழும் இணையமும் இனி உங்கள் இரு கண்களாக இருக்கட்டும்! தாங்களும் தங்கள் துணைவியாரும் நல்ல ஆரோக்கியமும் நட்பும் கொண்டு பல்லாண்டு வாழ்ந்திட எல்லாம் வல்ல அரவிந்த அன்னையின் பேரருளைக் கோருகின்றேன்!
ReplyDelete-இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.
ஒரு மனிதரின் வெற்றி
ReplyDeleteதன் நிலை உணர்ந்தவருக்கு
இலகுவானதே!
தங்கள் வெற்றியும் அப்படியே!
தங்கள் வெற்றியில்
பங்கெடுத்த எல்லோரையும் பகிர்ந்தமை
பாராட்டுக்குரியதே!
ஆயினும்,
தங்கள் ஆய்வுப் பணிக்கும்
எழுத்துப் பணிக்கும் ஓய்வு வேண்டாம்!
தங்கள்
ஆய்வுப் பணியும்
எழுத்துப் பணியும்
தொடர வாழ்த்துகள்
உணர்வை நெகிழச் செய்யும் கட்டுரை
ReplyDeleteவாவ்
பணியனுபவம் கடந்து வாழ்வனுபவமாக இருபது நேர்த்தி
மனம் மகிழ்கிறது ஐயா
ReplyDelete35 ஆண்டுகள் பணி என்பது, இக்காலத்தில் யாருக்குமே கிட்டாத வாய்ப்பு,
தங்களுக்கு உதவியவர்களை, நல் வழிப்படுத்தியவர்களை வரிசையாய் தொகுத்து, இத் தருணத்தில் நினைவு கூர்ந்த செயல் போற்றுதலுக்கு உரியது
ஓய்வு என்பது தமிழ்ப் பல்கலைக் கழகப் பணிக்குத்தானே தவிர, தங்களின் ஆய்விற்கு அல்லவே,
முன்னிலும் அதிகமாய் ஆய்வு மேற்கொண்டு,
தொண்டாற்றிட வாழ்த்துக்கள் ஐயா.
ஒரு நிறைவான பணியை செய்திருக்கிறீர்கள் அய்யா. மற்றவர்களுக்கு நல்ல முன்னுதாரணமாக தங்களின் வாழ்க்கை அமைந்திருக்கிறது. மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteநாளை பிறந்தநாள் காணும் தங்களுக்கு எனது அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!
முனைவர் அவர்களுக்கு வணக்கம்
ReplyDeleteவிரிவான நன்றியுரை அழகு வந்தபாதை திரும்பி பார்த்து அழகாக கோர்த்த மணிமாலை தங்களது சுயசரிதம் பலருக்கும் நன்மை பயக்கும் வகையில் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
தங்களது விடயங்களில் நேரந்தவறாமை அது எனக்கும் பிடித்தது நான் பள்ளியில் தொடங்கிய பழக்கம் இன்றும் தொடர்கிறது
குடும்பத்தினருடன் சந்தோஷமாய் ஓய்வெடுத்து மேலும் தமிழுக்கு தொண்டு செய்ய எமது வணக்கத்துடன் கூடிய வாழ்த்துகள்.
த.ம.3
மகிழ்ச்சியான ஓய்வு நாட்கள் அமைய வாழ்த்துகள். அனைவருக்கும் நன்றி சொல்லியிருப்பது சிறப்பு.
ReplyDeleteஇனிமையான நினைவலைகளை நெகிழ்வுடன் பகிர்ந்துள்ளீர்கள் என்பதை வாசிக்கும் ஒவ்வொரு வரியிலும் உணரமுடிகிறது. நன்றிப்பெருக்கால் நிறைந்து தளும்பும் நெஞ்சத்தின் பிரதிபலிப்பையும் பார்க்கமுடிகிறது. மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா.
ReplyDeleteபணி ஓய்வுக்காலம் இனிமையும் நிறைவும் தருவதாக அமையட்டும்.
அருமை.. அருமை..
ReplyDeleteசொந்தபந்தங்களுக்குள் ஊடாடி வந்ததைப் போன்றதொரு உணர்வு..
மகத்தான சாதனையாளரை உறவினராகப் பெற்றதில் மகிழ்ச்சி..
ஓய்வுக்குப் பின் தங்களுடைய இறைப்பணியும் மொழிப் பணியும் மேலும் சிறக்க வேண்டும்..
அன்னை அபிராமவல்லி அருகிருந்து அருள் புரிவாளாக!..
நெகிழச் செய்யும் கட்டுரை ஐயா...
ReplyDeleteஎல்லாரையும் மனதில் நிறுத்தி இங்கு பகிர்ந்த விதம் அருமை...
ஓய்வு என்பது இன்னும் உங்கள் ஆய்வினை அதிகரிக்கட்டும்....
வாழ்த்துக்கள்...
நெகிழ்ச்சியான பதிவு. இறைப் பற்றும் தமிழ்ப் பற்றும் மிக்க உங்களது நட்பு, வலைத்தளம் மூலம் எனக்கு கிடைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்த்துகள்.
ReplyDeleteஎன்னே ஒரு ஞாபக சக்தி...!
ReplyDeleteவணங்குகிறேன் அய்யா...
தங்களின் எழுத்துப் பணிதொடர வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆரம்ப காலம் முதல் அனைவரையும் நினைவில் நிறுத்தி நன்றியறிதல் தெரிவித்தலே சிறந்த பண்பு என்பது பதிவின் வாயிலாக தடம் பதித்துள்ளீர்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி
ReplyDeleteதங்களின் பணி ஓய்வு மன அமைதியையும் மகிழ்வையும் இதுவரை இழந்த சிறு சிறு மகிழ்வான அனுபவங்களைக்கூட திரும்பப்பெறும் வாய்ப்புகளையும் தர வேண்டும் என்று மனம் நிறைந்து வாழ்த்துகிறேன்!
ReplyDeleteநாளை பிறக்கவிருக்கும் உங்களின் பிறந்த நாள் மிகச் சிறந்த, மகிழ்வான நாளாக அமையட்டும்!!
மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
வாவ் யூ ஆர் கிரேட்.........உங்களை எப்படி வாழ்த்தினாலும் அதற்கு தகுதியானவர் நீங்கள்... உங்களை வாழ்த்த சொற்கள் கிடைக்காமல் உங்களை வணங்கி செல்லுகிறேன் வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் தமிழ் சேவை
ReplyDeleteமனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteமிகச் சிறந்த முன்னோடியாகவும், மனதைத் தொட்டது என்றும் சொல்லும் வகையிலான தங்கள் வாழ்க்கைக் கட்டுரை. பணி ஓய்வு என்றால் தாங்கள் மேலும் ஆராய்ச்சியில் ஈடுபடலாம் அல்லவா...தங்கள் ஆராய்ச்சி மேலும் மேலும் வளரவும் வாழ்த்துகள். தாங்கள் தங்களுக்கு உந்து சக்தியாகவும் ஊக்கம் அளித்தவர்களையும் இங்கு சொல்லி நினைஉ கூர்ந்தது மிகவும் பாராட்டிற்குரியது...
ReplyDeleteவாழ்த்துகள் ஐயா
பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா!
ReplyDeleteபணிவன்பே உனக்கு மறு பெயர்தான் ஜம்புலிங்கமா வாழ்த்துகள்
ReplyDeleteஓய்வு என்பது செய்யும் தற்காலிகப் பணிக்கே உள்ளத்துக்கும் நல்ல செயல்களுக்கும் ஓய்வில்லை வாழ்த்துகள்
ReplyDeleteஅபார ஞாபக சக்தி . ஒளி மயமான ஓய்வு வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteமனம் திறந்த பதிவு! வாழ்க வளமுடன்!இனிதான் உங்களுக்கு பணி அதிகம்
ReplyDeleteபல்லாண்டு வாழ்க!
ReplyDeleteமனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். மிகவும் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்து வருகிறீர்கள். நல்ல உடல் நலமுமும் அன்பும் நிறைந்து நீண்ட ஆயுளுடன் இருக்க இறைவனுடன் இறைஞ்சுகிறேன் . -பாபு
ReplyDeleteமனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் ஐயா.
ReplyDeleteபணி ஓய்வு - உங்களுக்குக் கிடைக்கப்போகும் அதிக நேரம் பயனுள்ளதாய் அமையும் என்பதில் சந்தேகமில்லை. வாழ்த்துகள் ஐயா.
அருமை அய்யா...
ReplyDeleteமனமார்ந்த வாழ்த்துக்கள் , அருமையான நினைவுகள் .... உங்கள் மனைவி பற்றி எழுதியது மிகவும் அருமை . வாய்ப்பு இருந்தால் சந்திக்க ஆவல் .
ReplyDeleteஐயா! நீங்கள் ஒருசாதனை மனிதர். ஆய்வுகள் உங்கள் பெயரை சொல்லிக் கொண்டே இருக்கும். தங்கள் பதிவுகள் விக்கி பீடியா கட்டுரைகள் அனைத்தும் இணையத் தமிழுக்கு தாங்கள் செய்துள்ள மிகப் பெரிய சேவை.உயர் விருதுகள் பெறத் தகுதியானவர் தாங்கள்.
ReplyDeleteஅரசு உங்களை உரிய முறையில் கௌரவித்தால் நாங்கள் மகிழ்வோம்.
செல்வாக்குள்ள யாரேனும் பரிந்துரைக்க வலைப் பதிவர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.
மனமார்ந்த வாழ்த்துக்கள் , அருமையான நினைவுகள்
ReplyDeleteஅன்பு நண்பருக்கு…
ReplyDeleteபணி ஓய்வின்போது பழைய நினைவுகளை புகைப்படங்களுடன் நன்றி பாராட்டியவிதம் அருமை..செம்மையான பதிவு… ஓய்வு என்பது அலுவலகத்திற்குத்தானே தவிர உங்கள் ஆய்வுக்கல்ல என்பது எங்களுக்குத் தெரியும்…முன்பைவிட அதிக முனைப்புடன் ஆய்வில் ஈடுபட்டு மேன்மேலும் பல உன்னத நிலையை அடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.
கே கே ரமேஷ்பாபு
(Dr S.Rajendran, thro email: rajushush@gmail.com)Wish you a very fruitful retirement life.RAJ
ReplyDelete(Dr Kamalathiagarajan R, thro email: tukishore@gmail.com)Wish u a happy and fruitful retirement life.With regards, Kamalathiagarajan
ReplyDelete(Dr Ramiah Valliapapan, thro email: rmvs1962@yahoo.com) Happy Retired Life in advance. Valliappan. I think you are the final one those who joined Tamil University during 80's. Any how accept it. Valliappan
ReplyDelete(Dr K.Ravindran, thro email: dr.ravindran.athencode@gmail.com)A true scholar has no retirement bro.! My wishes to your honesty& sincerity!
ReplyDelete(Mr Shanmukham Baskaran, thro email: sbaskarantj@yahoo.com) Dear Jambu,I congratulate you for the successful completion of service, without any blemish, at Tamil University. At the time of joining the University, our beloved founder Vice Chancellor inscribed in our mind and inculcated us that ours was a temple for Tamil Language. Our service to it is service to Mother/GOD of Tamil. I witness your visible developments and enjoy your contributions to the field of your choice. Even though it is not at all mandatory and moral obligation for your job placement and career at Tamil University, you have been doing a lot. Needless to say, out of your interest, curiosity and above all for your self-satisfaction, you have done wonderful things. You bring your readers to the places where you go and explore. Many times they are like virtual tours. Very often your style of education to your readers is impressed me. Keeping these in my mind, I hope you will continue your contributions. I wish every success in your future endeavor.
ReplyDeleteWith love, S.Baskaran Head Department of Computer Science Tamil University Thanjvaur
பாலுஜீயை கூட மறக்காமல் நன்றி சொன்ன உங்களுக்கு பகவான்ஜீயின் அன்பு வாழ்த்துகள் :)
ReplyDeleteதமிழாசிரியர் அல்லாத பலர்தான், தமிழுக்கு நிரந்தரமான வளர்ச்சியைத் தரும் பணிகளைச் செய்திருக்கிறார்கள். அந்த வகையிலும் தங்கள் பதிவுகள் தமிழாய்வுலகில் புதிய மைல்கற்கள். தங்கள் பணி என்றென்றும் போற்றப்படும் அய்யா. இனிமேல், முழுநேரமும் நீங்கள் விரும்பும் களஆய்வு, மற்றும் கணினிப் பதிவுக்கே என்பது நாங்கள் பெற்ற பேறு! உடல்நலமும் பேணுங்கள். உங்கள் பணிகளைத் தொடருங்கள்! ஓய்வு அரசுப் பணிக்குத்தான், உங்களுக்கல்லவே! வணங்கி வரவேற்கிறேன். (அய்யா, பணிநிறைவு விழா இருப்பின் தெரிவியுங்கள்..புதுகை கணினித் தமிழ்ச்சங்க நண்பர்கள் தங்களை வணங்கி, முழுநேரப்பணிக்கு வரவேற்க வருவோம்!)
ReplyDeleteதொடர்ந்து 29,30.4.2017 மற்றும் 1.5.2017 அன்று விடுமுறையாக வருவதால் பணி நிறைவு நிகழ்வு தொடர்பாக அலுவலகத்தில் உறுதி செய்தபின்னர் தெரிவிப்பேன் ஐயா.நன்றி.
Deleteஇப்பதிவில் நான் குறிப்பிட்டுள்ள, நாக்பூரில் தற்போது பணியாற்றும் என் நண்பன் திரு கே.எஸ்.சந்தானகிருஷ்ணன்.(krishnan.kss@gmail.com மின்னஞ்சல் வழியாக) can't believe, time ran so fast, anyhow all the best and enjoy the retirement..Kss Krishnan
ReplyDeleteஅருமையான நினைவுக் கோர்வை. பொக்கிஷம். அனைவருமே இதுபோல் தகவல்களைப் பதிந்து வைக்க வேண்டும் என்ற ஆவலை உருவாக்கியது . வாழ்த்துகள் ஜம்பு சார் . உங்கள் வலைத்தளப்பணி தொடரட்டும்.
ReplyDeleteவாழ்க்கையில் வேலைக்குப் போதல், திருமணம், பணி நிறைவு என்று ஒவ்வொரு காலகட்டமும் ஒரு திருப்புமுனை தான்.
ReplyDeleteநான் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்காக 'எப்பொழுதுடா அந்தத் திருநாள் வரும்?' என்று ஆவலுடன் காத்திருந்தேன். 'விடுதலை, விடுதலை!' என்று பள்ளு பாடுவதற்குத் தான்.
இனிமையான பணி ஓய்வுக்கு வாழ்த்துக்கள், ஐயா!
(Mr Prince Ennares Periyar, thro email: princenrsama@gmail.com) அய்யா, வணக்கம்.
ReplyDeleteதமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஊதியத்துடனான உங்கள் பணி நிறைவுற்றிருக்கலாம். தமிழைத் திசையெட்டும் சேர்க்கும் பணியில் ஊதியமில்லாதுழைக்கும் தங்கள் பணி என்றும் நிறைவானது - ஆனால் நிறைவுறாதது. தொடர்க! வாழ்க!
பதவி ஓய்வு பெற்றநிலையில் மனசார சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றி கூறியிருப்பது நன்றாக உள்ளது. எந்நிலையிலும் நமக்கு உதவிசெய்தோரை மறந்துவிடலாகாது.
ReplyDeleteRemembering each and every persons ,institutions to help you to rise this status and conveying gratitude on this occasion is evincing your exemplary character. Your works must continue to benefit the Tamil community. Best wishes
ReplyDelete(Mr Sundaram Kandan, thro email: kandansundaram@yahoo.com) Respected sir, You are the real Gowthama Buddha k.sundaram
ReplyDeleteஅருமை ஐயா. வாழ்த்துக்கள்.
ReplyDelete