04 March 2017

விக்கிக்கோப்பை 2017 வெற்றியாளர் : மூன்றாம் இடம், 253 பதிவுகள்

ஜனவரி 2017இல் தமிழ் விக்கிபீடியாவால் நடத்தப்பட்ட விக்கிக்கோப்பைப் போட்டியில் மூன்றாம் இடத்தினைப் பெற்று விக்கிக்கோப்பை வெற்றியாளர் பதக்கத்தைப் பெற்றுள்ளேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  ஜனவரி முதல் நாள் தொடங்கி 31ஆம் நாள் வரை நடைபெற்ற போட்டியில் 253 பதிவுகள் (1619 புள்ளிகள்) எழுதியுள்ளேன். என்னை ஊக்குவித்த நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தாருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். போட்டியில் கலந்துகொண்ட அனுபவத்தைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.   


விக்கிக்கோப்பைப் போட்டிக்கான அறிவிப்பு வந்தவுடன் என் பெயரைப் பதிவு செய்தேன். கீழ்க்கண்டவாறு பதிவுகளை எழுத இலக்குகளை வைத்துக்கொண்டேன்.
  • தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள, விக்கிபீடியாவில் இல்லாத கோயில்கள்
  • தொடர்ந்து தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களிலுள்ள கோயில்கள்
  • வைப்புத்தலங்கள் பட்டியலை முழுமையாக்கல்
  • எழுதும் அளவில் குறைந்தது 10 விழுக்காடு கோயில்களுக்கு நேரில் செல்லல்
  • தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானக் கோயில்கள்
  • அறிஞர்கள் அறிமுகம் 
  • போட்டி நாள்களில் தினமும் குறைந்தது இரு பதிவுகளாக எழுதுதல்
  • விடுபாடின்றி தினமும் எழுதுதல்
  • வாய்ப்பிருப்பின் முந்தைய பதிவுகளை மேம்படுத்துதல்

விக்கித்திட்டம் சைவம், விக்கித்திட்டம் வைணவம் இரண்டிலும் முன்னரே சேர்ந்துள்ள நிலையில் விடுபட்ட கோயில்களைப் பற்றிய ஒரு அடிப்படைக் கருத்தானது பதிவுகளை ஆரம்பிக்க உதவியது.  

குறைந்தது இரு பதிவுகள்
இலக்கின் அடிப்படையில் எழுத ஆரம்பித்தபோது தினமும் இரு பதிவுகளாவது எழுதவேண்டும் என்றிருந்தேன். முதல் மூன்று நாள்களுக்குள் 20 பதிவுகளுக்கு மேலாக எழுதும் நிலை அமையவே அதே வேகத்துடன் தொடர்ந்தேன்.  சராசரியாக ஒரு நாளைக்கு ஐந்து, ஆறு, ஏழு என எண்ணிக்கை கூடிக்கொண்டே சென்றது. முதலில் அருகிலுள்ள மாவட்டங்களிலுள்ள கோயில்களைப் பற்றிய பதிவுகளை ஆரம்பித்து, பின்னர் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலுள்ளவற்றைப் பற்றி எழுதினேன். 31 நாள்களில் 30 நாள்கள் பதிவுகளை எழுதியுள்ளேன்.

புதிய பதிவுகள் தொடங்குதல்
புதிய பதிவினை ஆரம்பிக்கும்போது முடிந்தவரை கவனமாக இருந்தேன். அதாவது முன்புள்ள கட்டுரையே சற்றொப்ப வேறொரு தலைப்பில் புதிய கட்டுரை என்ற வகையில் வடிவம் பெற்றுவிடக்கூடாது என்பதிலும், விக்கிபீடியாவில் உள்ள ஒரு கட்டுரை மறுபடியும் இடம் பெறலாகாது என்பதில் கவனம் செலுத்தினேன். உதாரணமாக கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோயிலைப் பற்றி எழுதுவதாக வைத்துக்கொள்வோம். எழுதுவதற்கு முன்பாக நான் கவனித்தது கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில், கும்பேஸ்வரர் கோயில், கும்பேஸ்வரன் கோயில், ஆதிகும்பேஸ்வரர் கோயில், ஆதி கும்பேசுவரர் கோயில், கும்பேஸ்வரசுவாமி கோயில் என்ற நிலைகளில் தட்டச்சு செய்து பார்த்துவிட்டு கும்பேஸ்வரர் கோயிலைப் பற்றிய பதிவு இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு, புதிய பதிவினை எழுத ஆரம்பித்தேன். விக்கிபீடியாடிவில் முன்பு இருந்த பதிவுகளை கவனிக்காமல் முன்புள்ள கட்டுரைகளையே வேறு பெயரில் ஆரம்பித்து, பின்னர் இரு கட்டுரைகளையும் ஒருங்கிணைத்த அனுபவத்தை எதிர்கொண்டுள்ளேன்.

களப்பணி
தஞ்சாவூர் அருகே வல்லத்திலுள்ள கோயில்கள், தஞ்சாவூர் தேவஸ்தான கோயில்கள், தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அப்பாற்பட்ட மாவட்டத்தைச் சேரந்த கோயில்கள் என்ற நிலையில் நேரில் களப்பணி சென்று விவரங்களைத் திரட்டி அவ்வப்போது புகைப்படங்களை நானே எடுத்து பதிவில் இணைத்தேன்.  போட்டிக்காலத்தில் எழுதும் பதிவுகளில் குறைந்தது 10 விழுக்காட்டுக் கோயில்களுக்கு நேரில் களப்பணி சென்று பதியவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அவ்வாறே செய்தேன். அவ்வகையில் திருவெண்ணெய்நல்லூர் மெய்கண்ட தேவநாயனார் கோயில்கள், பட்டீஸ்வரம் கோதண்டராமர் கோயில் உள்ளிட்ட சில புதிய பதிவுகளைத் தொடங்கினேன்.



தமிழ்நாட்டு இந்துக் கோயில்கள்
விக்கிபீடியாவில் உள்ள தமிழ்நாட்டு இந்துக்கோயில்கள் என்ற பக்கத்தில் மாவட்டவாரியாக உள்ள கோயில்களில் விடுபட்டிருந்த பல கோயில்களைப் பற்றிய பதிவுகளை எழுதி, உரிய மேற்கோளை அவ்வப்போது இணைத்தேன். பிற மாவட்டங்களிலுள்ள கோயில்களைப் பற்றி எழுத அரிய வாய்ப்பாக இதனைப் பயன்படுத்திக்கொண்டேன். எழுதிய பதிவுகளை தமிழ்நாட்டு இந்துக் கோயில்கள் என்ற தலைப்புலும், மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள் என்ற தலைப்பிலும் பொருத்தமான இடங்களில் இணைத்தேன். ‎

வைப்புத்தலங்கள்
முன்னர் விக்கிபீடியாவில் தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் விடுபட்ட கோயில்களைப் பற்றி புதிய பதிவுகளைத் தொடங்கியும், இருந்த பதிவுகளை மேம்படுத்தியும் எழுதியுள்ள நிலையில் வைப்புத்தலங்கள் பக்கத்தில் கவனத்தைத் திருப்பினேன். வைப்புத்தலங்கள் பட்டியலில் விக்கிபீடியாவில் குறைந்த அளவிலான கோயில்களே இருந்தன. அவற்றை மேம்படுத்த முயற்சி செய்தேன். நேரமின்மை காரணமாக அதில் கவனம் செலுத்த இயலா நிலை ஏற்பட்டது.

முக்கிய நபர்கள்
முக்கிய நபர்களைப் பற்றிய பக்கங்களை உருவாக்கல் என்ற நிலையில் தஞ்சாவூர் மருத்துவர் (சு.நரேந்திரன்), தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் (க.பாஸ்கரன்), சைவசித்தாந்தவாதி (வீ.ஜெயபால்) மற்றும் மொழியியலறிஞர் (கி.அரங்கன்) ஆகியோரைப் பற்றி புதிய பக்கங்களை உருவாக்கினேன். மேலும் பலரைப் பற்றி எழுத நினைத்திருந்தாலும் நேரமின்மையால் தொடர முடியவில்லை.
பதிவுகளை மேம்படுத்துதல்
முந்தைய பதிவுகளை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டிருந்தபோதிலும், போதிய நேரமின்மையால் அதனை என்னால் செயல்படுத்த முடியவில்லை. குறைந்த அளவிலான எண்ணிக்கையிலேயே பதிவுகளை மேம்படுத்த முடிந்தது. மற்றொரு காரணம் மேம்படுத்தலுக்கான புள்ளிகள் போட்டியில் சேர்க்கப்படா நிலையில் அதில் ஆர்வம் இல்லாமல் போனது.

பதிவின்போது அறிந்தவை
தஞ்சாவூரிலுள்ள பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில் ஹரித்ராவிநாயகர் என்றழைக்கப்படுகிறது. ஓமளிப்பிள்ளையார் கோயில் என்றொரு கோயில் மேல வீதியில் உள்ளது. இவ்வாறாக பல அரிய செய்திகளையும், புதிய செய்திகளையும் அறியும் வாய்ப்பு கிடைத்தது.


போட்டியில் கலந்துகொண்ட மாதத்தில் பொங்கல் விழா, இந்தியக்குடியரசு தினம் உள்ளிட்ட பல விடுமுறைகள் இருந்தபோதிலும் பதிவுகளை இடுவதில் விடுபாடு இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.  

இப்போட்டியில் கலந்துகொண்ட விக்கிபீடியர் நண்பர்களுக்கும், வெற்றி பெற்ற சக விக்கிபீடியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் முயற்சிக்குத் துணைநிற்கும் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


விக்கிபீடியா தொடர்பான எனது பதிவுகள்: 
செப்டம்பர் 2014 : விக்கிபீடியாவில் 100ஆவது பதிவு 
சூன் 2015 : விக்கிபீடியா 200ஆவது பதிவு, 5000ஆவது தொகுப்பு 
ஆகஸ்டு 2015 : விக்கிபீடியாவில் பயனராவோம் 
ஆகஸ்டு 2015 : விக்கிபீடியாவில் கட்டுரை எழுதுவோம் 
அக்டோபர் 2015 : ஆங்கில விக்கிபீடியாவில் 100, தமிழில் 250 கட்டுரைகள் நிறைவு 
அக்டோபர் 2015 : முன்னோடி விக்கிபீடியா எழுத்தாளர் விருது  
நவம்பர் 2015 :  விக்கிபீடியாவில் முதற்பக்கம் பங்களிப்பாளர் அறிமுகம் 
நவம்பர் 2015 : Writer of 250 articles in Tamil Wikipedia: The New Indian Express

முந்தைய விருதுகள்
சித்தாந்த இரத்தினம், 1997


அருள்நெறி ஆசான், 1998

பாரதி பணிச்செல்வர், 2001


முன்னோடி விக்கிப்பீடியா எழுத்தாளர், 2015

விக்கிக்கோப்பை வெற்றியாளர் மூன்றாமிடம், 2017 



20 பிப்ரவரி 2022இல் மேம்படுத்தப்பட்டது.

29 comments:

  1. வாழ்த்துகள் ஐயா!
    மேலும் மேலும்
    மதிப்பளிப்புகள் கிடைக்க
    வாழ்த்துகள் ஐயா!

    ReplyDelete
  2. உங்களது கடுமையான அதேசமயம் ஆர்வமான உழைப்பிற்கு கிடைத்த வெற்றி. விக்கிக்கோப்பைப் போட்டியில் மூன்றாம் இடத்தினைப் பெற்றமைக்கு எனது வாழ்த்துகள். தமிழுக்கான உங்கள் தொண்டு தொடரட்டும்.

    ReplyDelete
  3. வாழ்த்துகள் ஐயா!

    ReplyDelete
  4. மிகவும் மகிழ்ச்சி...

    வாழ்த்துகள் ஐயா...

    ReplyDelete
  5. அய்யா, வணக்கம்.
    வியப்பூட்டுகிறது உங்கள் உழைப்பும் ஈடுபாடும்! இன்னமும் இணையப்பக்கம் வாராத ஏராளமான தமிழறிஞர்கள் மீது உங்கள் இணைய வெளிச்சம் பரவட்டும். வணங்கி வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  6. மனம் கனிந்த வாழ்த்துக்கள் ஜம்பு.மேலும் பணிகள் சிறக்கட்டும். பரிசுகளும் சிறப்புகளும் பெருகட்டும்.

    ReplyDelete
  7. மேலும் பல வெற்றிகளை எய்துதற்கு நல்வாழ்த்துகள்!..

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் சார், வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  9. வாசிக்கவே மலைப்பாக இருக்கிறது. உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?..

    வாழ்த்துக்கள், ஐயா.

    ReplyDelete
  10. வியக்க வைக்கும் உழைப்பு வாழ்த்துகள் மேலும் தொடரட்டும்.

    ReplyDelete
  11. மகிழ்ச்சியான, மலைப்பான விஷயம். வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
  12. போதி மரத்தடியில் தாங்கள் பெற்ற ஞானத்தை, 'விக்கி' மரத்தடியில் தமிழுலகுக்கு வழங்கிவரும் தங்கள் அயராத தமிழ்த் தொண்டுக்கு எனது வாழ்த்துக்கள்!

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
  13. வியப்பாக இருக்கிறது
    நினைக்கவே மலைப்பாக இருக்கிறது
    எனக்கெல்லாம் வாரம் ஒரு பதிவு எழுதவே விழிபிதுங்கிப் போகிறது
    சாதித்து விட்டீர்
    வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  14. ஒரே மாதத்தில் 253 என்ற மிகப்பெரிய இலக்கை, அர்ப்பணிப்புடன் கூடிய கடுமையான உழைப்பில் நிறைவு செய்துள்ளீர்கள். இந்த உழைப்பின் அருமையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. வாழ்த்துக்கள் அய்யா! மேலும் பல இலக்குகளை தொட்டு, ஆன்மிகப் பணியை இன்னும் விரிவுப்படுத்துங்கள்.
    நன்றி!

    ReplyDelete
  15. நண்பருக்கு வணக்கம்.
    நன்றாகத் திட்டமிட்டு, விடா முயற்சியுடன் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றமைக்கு என்னுடைய வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி.
    அன்புடன் கி.மூர்த்தி

    ReplyDelete
  16. ஐயா,
    உங்களின் தமிழ் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  17. மிக்க மகிழ்ச்சி தங்களின் மேலான பணி தொடர வாழ்த்துகளும்,வணக்கங்களும்...

    ReplyDelete
  18. வாழ்த்துகளும்,வணக்கங்களும்...

    ReplyDelete
  19. பெரு மகிழ்ச்சி. தங்கள் பணி வெல்க!(மின்னஞ்சல் மூலமாக : princenrsama@gmail.com)

    ReplyDelete
  20. சாதித்த விரல்களுக்கு ..ஆயிரம் முத்தங்கள் (மின்னஞ்சல் மூலமாக : suriyaudayam@gmail.com)

    ReplyDelete
  21. வாழ்த்துகள் அய்யா! தங்கள் பணி இன்னும் சிறக்கட்டும் (மின்னஞ்சல் மூலமாக : maduraivaasagan@gmail.com)

    ReplyDelete
  22. Congratulations. Many feathers to your cap. Keep it up. My best wishes to you. With best regards and warm greetings, RAJ (மின்னஞ்சல் மூலமாக : rajushush@gmail.com)

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள் ஐயா.இன்னும் பல கோயில் பற்றி தொடர்ந்தும் எழுதுங்கள் .

    ReplyDelete
  24. வியப்பு மிகுந்த வாழ்த்துகள் என் நூல் வாழ்வின் விளிம்பில் முதலில் விக்கிபீடியாவில் அறிமுகப் படுத்தினீர்கள் ஆனால் இப்போது அது காணவில்லையே

    ReplyDelete
  25. Congratulations! with regards. S Irshad Ahamed (மின்னஞ்சல் மூலமாக : irshadahamed1963@gmail.com)

    ReplyDelete
  26. அளப்பரிய சாதனை.வணங்குகிறோம் ஐயா!.தமிழறிஞர்கள் பேராசிரியர்கள்,ஆர்வம் உள்ளவர்கள் ஒரு நல்ல கட்டுரை ஒன்றையாவது எழுத முயற்சி மேற்கொள்ள வேண்டும். அரசும்த தமிழ் வளர்ச்சித் துறையும் தக்க நடவடிக்கை எடுத்து தங்களைப் போன்றவர்களை ஊக்குவிக்க வேண்டும்

    ReplyDelete
  27. I am happy to know your achievement. My heartiest Congratulation. This is the reward for your continuous service..S.Baskaran Head Department of Computer Science Tamil University Thanjvaur - 613 010 (மின்னஞ்சல் மூலமாக : sbaskarantj@yahoo.com)

    ReplyDelete
  28. இதையும் வாசித்துவிட்டுத்தான் தங்களின் வெற்றிப் பதிவை வாசித்தோம் ஐயா!! அருமை!

    ReplyDelete