08 August 2020

முதல் மொழியாக்க அனுபவம்

The Hindu இதழில் வெளியான (“Cooperation, not confrontation”, Alladi Kuppuswami, 16.8.1999, p.12) கட்டுரை 1999இல் முதன் முதலாக நேரடியாக மொழியாக்கம் செய்தது மறக்கமுடியாத அனுபவம் ஆகும்.

1970களின் இடையில் The Hindu வாசிக்கத் தொடங்கிய காலகட்டத்தில் புதிய சொற்களுக்கான பொருளைத் தேட ஆரம்பித்தேன். பின்னர் சிறு சிறு பத்திகளை அவ்வப்போது மொழியாக்கம் செய்து நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். சோதனை முயற்சியாக, பெரிய கட்டுரை ஒன்றை மொழியாக்கம் செய்ய எண்ணி இக்கட்டுரையை எடுத்துக்கொண்டேன்.

முதன்முதலாக ஆங்கிலக்கட்டுரையை நேரில் பார்த்துத் தட்டச்சு, தமிழ்த் தட்டச்சுப் பொறியில் தொடர்ந்து, இடைவெளியின்றி ஒரே அமர்வு, தவறு வந்துவிட்டால் திருத்தமுடியாத நிலையில் கவனம் செலுத்துதல், அகராதிகளைப் பார்க்காமல் நேரடியாக மொழியாக்கம், முடிந்தவரை எளிய சொற்களைப் பயன்படுத்தியது என்ற வகையில் மொழியாக்கம் அமைந்தது. ஒவ்வொரு பத்தி ஆரம்பிக்கும்போதும் இடைவெளி, ஒவ்வொரு வாக்கியமும் முடிந்தபின் ஒற்றை எழுத்து இடைவெளி, தேவையான இடங்களில் இடைக்கோடு, வலது பக்கம் தாளுக்கு வெளியே சென்றுவிடாமல் தட்டச்சு போன்றவற்றை மனதில் வைத்துக்கொண்டு இதனைச் செய்தேன். இதற்காக முன்வரைவோ, தற்காலிகப் பதிவோ எடுக்கவில்லை. இது முதலில் நேரடியாக (original) தட்டச்சிடப்பட்டதாகும். இதனை 65 நிமிடங்களில் தட்டச்சு செய்து அதனையும் குறிப்பிட்டுள்ளேன். சுமார் 10 இடங்களில் தட்டச்சுப்பிழை இருந்தது. அதனை திருத்தும் வெண்மை மை (correcting fluid) கொண்டு சில இடங்களில் திருத்தினேன். என்னைப் பொருத்தவரை இதனை ஒரு சாதனையாகவே அப்போது எண்ணினேன். அதனை இன்னும் பாதுகாத்து வருகிறேன்.

முந்தைய மொழியாக்கத்தைப் பார்க்காமல் தற்போது நான் மொழியாக்கம் செய்த முதல் பத்தி : “மகாத்மா காந்தியின் தலைமையின்கீழ் அகிம்சை என்ற ஆயுதத்தோடு நாம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தபோது நாம் நமக்கிடையே இருந்த ஜாதி, இனம், சமயம், இடம், பாலினம் உள்ளிட்ட அனைத்து வேற்றுமைகளையும் மறந்தோம். மிக மோசமான போலீசாரின் லத்தியை பலர் எதிர்கொண்டார்கள். பலர் சிறைக்குச் சென்றனர். அவர்கள் தம் சுதந்திரத்தை மட்டுமன்றி தம் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் இழந்தார்கள். இந்த வெற்றிக்கு ஆடவர்-மகளிர், பணக்காரன்-ஏழை, கல்லாதவர்-கற்றவர் என்ற அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் இருந்தது.”






நாளடைவில் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழியாக்கம் செய்வதற்கும் இதுபோன்ற அனுபவம் உதவியது. தொழில்நுட்பம், அறிவியல், சட்டம், பொறியியல் போன்ற துறை தொடர்பானவற்றை மொழியாக்கம் செய்வதில் சற்றே சிரமம் உள்ளதால் அதில் கவனம் செலுத்துவதில்லை.  மொழியாக்கம் தொடர்பான பிற அனுபவங்களைப் பற்றி பிறிதொரு பதிவில் விவாதிப்போம்.

19 comments:

  1. மொழிபெயர்ப்பு ஒரு கலை. அவ்வப்போது ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்ததுண்டு - அலுவலகப் பணிகளுக்காக! சமீபத்தில் ஒரு நண்பருக்காக அடிக்கடி மொழிபெயர்ப்பு செய்து தந்து கொண்டிருக்கிறேன் - நட்புக்காக! ஆங்கில வார்த்தைக்கு ஈடான தமிழ் வார்த்தையை பயன்படுத்த வேண்டியிருக்கும்போது இணைய அகராதி பயன்படுத்துவதுண்டு!

    சிறப்பான அனுபவங்கள் உங்களுடையது! பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  2. தங்களது அனுபவம் பிறருக்கு பயனாகும் தொடரட்டும் தங்களது பகிர்வு.

    ReplyDelete
  3. தங்களின் பல திறமைகளில் இதுவும் ஒன்று என்பதை நான் அறிவேன்... வாழ்த்துகள் ஐயா...

    ReplyDelete
  4. இனிய வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்கள் ஆய்வுப்பணி.🌷🌷🌷🌷

    ReplyDelete
  5. தங்களது அனுபவம் இளையோர்க்கு ஒரு பாடம்...

    தட்டச்சு பழகிக் கொள்ளும்படி என் தந்தை சொன்னார்... நான்தான் கேட்க வில்லை..

    ReplyDelete
  6. டி பி கைலாசம் அவர்கள் துரோணர்பர்ரி எழுதி இருந்ததை தமிழில் மொழி பெயர்க்க வேண்டி வாசகர்களைக் கேட்டிருந்தே அதை நீங்கள் முயற்சிக்கலாமே நானே பிறகு ஓரளவு தமிழாக்கி இருந்தேன்

    ReplyDelete
  7. முதல் முயற்சியிலேயே பெரும் வெற்றி.  முயற்சியும், வெற்றியும் உங்கள் ரத்தத்திலேயே இருக்கிறது.

    ReplyDelete
  8. ஆவணப்படுத்துதலைத் தங்களிடமிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும் ஐயா.
    வாழ்த்துகள்

    ReplyDelete
  9. உங்கள் அனுபவங்கள் இப்போது இருக்கும் இளைய தலைமுறைகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

    ReplyDelete
  10. வணக்கம் சகோதரரே

    திறமையாக வார்த்தைகள் பிசகாமல் வரிகளை மொழியாக்கம் செய்வது கடினமான ஒரு கலைதான். தங்கள் திறமைகள் பல கண்டு வியக்கிறேன். அனைத்திலும் நீங்கள் அயராத முயற்சி எடுத்துக் கொண்டு இறைவனின் அருளாலும், வெற்றியடைந்து வருகிறீர்கள். மனமார்ந்த பாராட்டுக்கள். பிறருக்கு அறிந்து கொள்ளும் வகையில் உபயோகமாக அதைப் பதிவாக்கி வெளியிடுவதற்கும் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  11. ஆங்கில ஆசிரியனாக உங்கள் முயற்சியையும் உழைப்பையும், கற்றலையும் வியந்து பார்க்கிறேன். வாழ்த்துகள் ஐயா.

    துளசிதரன்

    ReplyDelete
  12. உங்களின் இந்தப் பதிவு எனது பள்ளிக்கால கற்றல் அனுபவங்களை நினைவுபடுத்தியது.

    அருமையான முயற்சி உழைப்பு அதனால்தான் வெற்றி ஐயா!

    நானும் சமீபத்தில் ஆங்கிலத்திலிருந்து தமிழிற்கு மொழிபெயர்ப்பு வேலை செய்து வந்தேன். தற்போது தொற்று காரணமாக எல்லாமே முடங்கியிருக்கிறது. மொழிபெயர்க்கும் போது சில ஆங்கிலச் சொற்க்களுக்கு தமிழ்ச்சொல் எது அவ்விடத்தில் சரியாக இருக்கும் என்பதற்கு இணையத்தில் உள்ள தமிழ் அகராதியைப் பயன்படுத்துவது வழக்கம்.

    நட்பு ஒருவருக்கு அவர் தமிழில் எழுதியிருந்ததை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொடுத்தேன்.

    நல்ல பயனுள்ள அனுபவப்பதிவு, நன்றி ஐயா. தங்களுக்கும் வாழ்த்துகள்

    கீதா

    ReplyDelete
  13. தொழில்நுட்பம், அறிவியல், சட்டம், பொறியியல் போன்ற துறை தொடர்பானவற்றை மொழியாக்கம் செய்வதில் சற்றே சிரமம் //

    ஆமாம் ஐயா மிகுந்தச் சிரமம் உண்டு. எனக்கு வரும் பணிகளில் இதுவும் அடக்கம். சிலவற்றை அவர்கள் அப்படியே தமிழில் எழுதச் சொல்லிவிடுகிறார்கள் என்பதால் ஆங்கிலச் சொல் கிட்டாதவற்றிற்கு அப்படியே தமிழில் எழுதி அடைப்புக் குறிக்குள் ஆங்கிலத்திலும் எழுதுவிடுவதுண்டு. கூடியவரை தமிழில் அச்சொற்களை எடுக்க முயற்சி செய்வதுண்டு.

    கீதா

    ReplyDelete
  14. பிழையின்றியும், வலது பக்க மார்ஜின் மற்றும் அடிப்பகுதியை விட்டு வெளியே றாமலும் அதே சமயம் வேகமாகவும் அந்நாள் தட்டச்சுப்பொறிகளில் வேலை செய்வது மிகவும் சவாலாகும். பாராட்டு க்கள்!ஆனால் 1999இல் கணினிகள் வந்துவிட்டனவே, எதற்காக தட்டச்சில் இறங்கினீர்கள்? வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்று காட்டுவதற்காகவோ?

    ReplyDelete
    Replies
    1. அலுவலகத்தில் ஒவ்வொரு துறையாக கணினி தட்டச்சுப் பொறிகள் வர ஆரம்பித்தன. அப்போது நான் பணியாற்றிய துறையில் கணினி தட்டச்சுப் பொறி இல்லை.

      Delete
  15. தங்களின் மொழி பெயர்ப்பு திறனும், அனுபவமும், அதனை ஆவணப்படுத்தி பாதுகாக்கும் விதமும் பாராட்டுக்குரியது. ஆங்கில நாட்டில் பல ஆண்டுகள் வாழ்ந்துவந்தாலும் எந்த செய்தியையும் முதலில் நம் தாய் மொழியில் இன்ஸ்டன்ட் ஆக மொழிபெயர்ப்பு செய்துகொண்டு இயங்குவது எம் வழக்கம்.

    தங்களின் ஆற்றல் வியக்கத்தக்கது - வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
  16. ஐயா, வணக்கம் தாங்கள் அனுப்பிய (காணொளி) ஆய்வுரையை அமைதியாகக் கேட்டு மகிழ்ந்தேன். அரிய தேடல்கள்; நேரிய ஆய்வுநெறிகள். ஏடு தேடி அலைவதைவிடக் காடு தேடிக் காலப் பெட்டகங்களைக் கண்டெடுப்பது எவ்வளவு கடினம் என்பதையும் உணர்ந்தேன். செருமாக்கநல்லூர், வேதாரண்யம், மணலூர், கவிநாடு, நாட்டாணி, குடந்தை இன்னபிறவிடங்களில் தங்களின் தேடுதல் வேட்கையை அறிந்து வியந்தேன். எத்தனை இன்னல்கள், தலை இல்லை அவர் யாரோ..? ஆடை உடுத்தியுள்ளாரா..? ஆய்வு நுணுக்கம். பகுவர் புத்தரா..சமணரா..? களப்பணிகளில் களைத்துப் போகாத உடல் உழைப்பு என்றும் நின்று நிலவும். வாழ்த்துகளுடன்...இரெ. குமரன்.

    ReplyDelete
  17. அருமையான அனுபவங்கள் ...தங்களின் அனுபவங்கள் நிச்சயம் பலருக்கு வழிகாட்டியாக அமையும் ..

    பகிர்வுக்கு நன்றிகள் ஐயா ...

    ReplyDelete
  18. எனக்கு முன்னோடி போன்றவர்கள் நீங்கள். நான் முதலில் பிரிட்டீஸ் பெட்ரோலியத்தின் ஆர் என் டி பிரிவில் ஆய்வாளராக பணியிலிருந்த போது ஆங்கில கட்டுரைகளை தமிழில் மொழி பெயர்த்து சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள பிளாண்டிற்கு அனுப்புவதற்காக மொழி பெயர்ப்பாளர் கேட்டார்கள். வெளியில் இருந்து மொழி பெயர்க்கும் ஒரு பெரிய மேதை அவருக்கே மீண்டும் படித்தால் புரியாத 70 விழுக்காடு சன்ஸ்கிரிட் 30 விழுக்காடு டமில் கலந்து எழுதி இருந்தார். இதைப் பார்த்து நானே மொழி பெயர்க்கிறேன் என்று கூறி மொழி பெயர்க்கத்துவங்கியது முதல் அனுபவம் அதிலிருந்து அறிவியல் கட்டுரைகள் பிறகு பல கட்டுரைகள் என எழுத தானாகவே ஊடகத்தின் மீது ஆர்வம் பிறந்துவிட்டது,
    இந்தி மராட்டி சீனம் மற்றும் அரபு மொழிகளில் மொழி பெயர்க்க கற்றுக்கொண்டு சீனத்திலிருந்து சிறிய மொழிபெயர்ப்பு நூலை தமிழில் எழுதிவிட்டேன், பவுத்த போதனை தொடர்பானது, அரபியில் எளிதில் புரிந்து கொள்வது எப்படி என்ற நூலும் எழுதிவிட்டேன், அதன் பிறகு மணிமேகலை பிரசுரம் ஒரு அரபி தொடர்பான நூலை தமிழ் மற்றும் அரபு எழுத்துக்களின் எழுத பணிந்தார்கள்.

    2011-ஆம் ஆண்டிலிருந்து விடுதலை பெரியார் பிஞ்சு மற்றும் உண்மை போன்ற இதழ்களுக்கு தொடர்ந்து எழுதி மும்பையிலிருந்து நேராக பெரியார் திடலுக்கு வந்து சேர்ந்துவிட்டேன், இதுவரை எத்தனை மொழிபெயர்ப்புகள் என்று கணக்கில்லை. இருப்பினும் அந்த முதல் ஒரு மேதை மொழி பெயர்த்ததை மீண்டும் தமிழில் மொழி பெயர்த்த அனுபவம் வியப்பாக உள்ளது, மும்பையில் உள்ள சில மேதைகள் என்பவர்கள் திருநெல்வேலியைக் கூட தின்னவேலி என்றுதான் எழுதுவார்கள். அதே நேரத்தில் அங்கும் பல தமிழ் அறிஞர்கள் உள்ளனர், ஆனால் அங்கு உள்ள மேல் தட்டு வர்க்கத்திற்கு தமிழ் அறிஞர்களை விட தின்னவேலி என்று எழுதும் மேதைகள் தான் பிடிக்கும்..

    ReplyDelete