04 January 2020

மொழியாக்கம் ஒரு கலை : தினமணி, தமிழ் மொழித் திருவிழா

தினமணி நாளிதழின் தமிழ் மொழித் திருவிழாவில் 24 டிசம்பர் 2019 அன்று வெளியான, மொழியாக்கம் ஒரு கலை என்ற என் கட்டுரையின் மேம்பட்ட வடிவத்தைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவ்விதழுக்கு நன்றியுடன். 


தினமணி நாளிதழுடன் கடந்த 10 ஆண்டுகளாக கார்டியன் (இலண்டன்), நியூயார்க் டைம்ஸ் (அமெரிக்கா), டான் (பாகிஸ்தான்) உள்ளிட்ட பல வெளிநாட்டு நாளிதழ்களைப் படித்து வரும்போது அவற்றில் வெளியான சில கட்டுரைகளை தமிழில் மொழியாக்கம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.
ஆங்கில இதழ்களைப் படித்து தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட “நிதான வாசிப்பு ஒரு கலை”, “தமிழில் இந்த ஆண்டில் சொல் எது? ”, “அமெரிக்கா-கியூபா உறவு இப்படியும் ஒரு ராஜதந்திரம்”, “புளோரிடாவிலிருந்து ஹவானாவிற்கு”, “என்றென்றும் நாயகன் சே குவாரா”, “2017இன் சிறந்த சொல்” என்ற தலைப்பிலான கட்டுரைகள் தமிழ் இந்து நாளிதழில் வெளியாயின.
“நெல்சன் மண்டேலாவின் சுயசரிதையைப் பற்றிய மதிப்புரை” (எனக்குப் பிடித்த புத்தகம், தினமணி கதிர், 14 டிசம்பர் 2014) ஒரு மொழியாக்கமாகும். தொடர்ந்து “கடிதம் செய்த மாற்றம்” (தினமணி, 7 அக்டோபர் 2018), இலக்கை நோக்கும் உயரமான பெண் (தினமணி, 29 நவம்பர் 2018),   “உலக அரசியல் களத்தில் மகளிர்” (தினமணி, 17 ஏப்ரல் 2019), “மாற்றத்திற்கான மங்கை கிரேட்டா தன்பர்க்” (தினமணி, 4 செப்டம்பர் 2019) போன்ற கட்டுரைகள் வெளிநாட்டு இதழ்களில் வெளியான ஆங்கிலக் கட்டுரைகளிலிருந்து திரட்டப்பட்ட செய்திகளைக் கொண்டதாகும்.
இதற்கெல்லாம் மூல காரணமாக அமைந்தது இராஜராஜன் ஆயிரமாவது ஆண்டு விழாவின்போது வெளியான “ராஜராஜன் நேருவின் பார்வையில் (தினமணி கொண்டாட்டம், 26 செப்டம்பர் 2010) என்ற தலைப்பிலான கட்டுரை ஆகும். அக்கட்டுரை ஜவஹர்லால் நேரு எழுதிய உலக வரலாறு என்னும் ஆங்கில நூலில் காணப்பட்ட ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழனின் பெருமைகளைப் பற்றிய மொழியாக்கம் செய்யப்பட்ட செய்திகளைக் கொண்டதாகும்.
இவ்வாறாக பல ஆண்டுகளாக மொழியாக்கம் செய்துவரும் நிலையில் பல அனுபவங்களைக் காணமுடிந்தது. இந்த அனுபவங்கள் மொழியாக்கம் ஒரு கலை என்பதை உணர்த்தின.
அக்டோபர் 1984இல், இந்திரா காந்தி அவரது மெய்க்காப்பாளர்களால் சுடப்பட்டு இறந்தபோது ஓர் ஆங்கில நாளிதழில் இந்திரா காந்தி அசாசினேட்டட் என்றும் மற்றோர் ஆங்கில இதழில் இந்திரா காந்தி ஷாட் டெட் என்றும் செய்திகள் வெளியாகின. இரண்டு சொற்றொடர்களுமே இந்திரா காந்தியின் மரண நிகழ்வினைக் குறிப்பிட்டபோதும் அசாசினேட்டட் என்ற சொல்லானது சற்று கூடுதலான பொருளைத் தரும் வகையில் அமைந்திருந்தது. அசாசினேட் என்பதற்கு படுகொலை செய், மறைந்திருந்து தாக்கிக் கொல்லு, வஞ்சகமாகக்கொல்லு (ஆங்கிலம் தமிழ் சொற்களஞ்சியம், சென்னைப்பல்கலைக்கழகம், 2010) என்றும், முக்கிய நபரை குறிப்பாக அரசியல் காரணங்களுக்காக கொலை செய்தல் (ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி, 2010) என்றும் அகராதிகள் கூறுகின்றன. ஷாட் டெட் என்பதற்கு சுட்டுக்கொல்லு என்பது பொருளாகும். இவ்வாறாக சில சொற்கள் மூல மொழியில் அமையும்போதே முழுப்பொருளையும் தரும் வகையில் அமைந்துவிடுகின்றன.
மொழிபெயர்ப்பு என்பதிலிருந்து மொழியாக்கம் என்பது சற்று வேறு நிலையில் அமைகிறது. மொழியாக்கம் செய்யப்படும் செய்தியானது அனைத்துநிலை வாசகர்களுக்கும் சென்றடைய வாய்ப்புள்ளது. மொழிபெயர்ப்பு என்ற தளத்தில் நின்று மொழியாக்கம் செய்ய ஆரம்பித்தால் சொல்லுக்குச் சொல் என்பதே சாத்தியமாகும். மொழியாக்கத்தின்போது எல்லை சற்றே விரிய ஆரம்பிக்கிறது. மூல மொழியில் உள்ள மொழியாக்கம் செய்யப்படுகின்ற பொருண்மையினை முழுமையாக வாசித்து பின்னர் அதனைக் கிரகித்துக் கொண்டு, இலக்கு மொழிக்கு (மொழியாக்கம் செய்யப்படுகின்ற மொழி) அதனைக் கொண்டு செல்வது மொழிபெயர்ப்பாளரின் முக்கியமான கடமையாகிறது. அவ்வாறு செய்யும்போது அதனை எளிதாக வாசகர்கள் புரிந்துகொள்ளும் வகையில் அமைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். மொழியாக்கத்தின்போது பொருத்தமான சொற்களைத் தெரிவு செய்து பயன்படுத்தவேண்டும். குழப்பம் தருகின்ற, மயக்கம் தருகின்ற, மாற்றுப்பொருள் தருகின்ற சொற்களைப் பயன்படுத்தாமல் இருப்பது மொழிபெயர்ப்பின் தரத்தினை மேம்படுத்தும்.

வல்லுநர்களிடம் உரையாடல், அகராதிகளைப் பார்த்து உறுதிசெய்தல்
மொழியாக்கம் செய்யப்படும்போது பலவிதமான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு எழும்போது உரிய துறைசார் வல்லுநர்களோடு தொடர்பு கொள்ளலாம். அகராதிகள் மற்றும் தொடர்பான நூல்களைப் பார்த்து பொருத்தமானவற்றை எடுத்துக்கொண்டு பயன்படுத்தலாம். அவ்வாறு மொழியாக்கத்தின்போது தெளிவான பொருளைத் தருகின்ற வகையில் சொற்றொடர் அமைவதை உறுதி செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

சொல்லுக்குச் சொல் மொழியாக்கம்
சொல்லுக்குச்சொல் மொழியாக்கம் செய்யும்போது தெளிவின்மையையோ, மிகைப்படுத்தலோ அமையும். சில சமயங்களில் பொருத்தமாக இருக்கவேண்டும் என்பதற்காக சில சொற்களை விட்டுவிடவும் வாய்ப்பு உள்ளது. ஆதலால் சொல்லுக்குச் சொல் உள்ளது உள்ளபடியே மொழியாக்கம் செய்தும் உத்தியைத் தவிர்ப்பது நலம் பயக்கும். முழுமையாக வாசித்து, பொருளைப்புரிந்து பின்னர் சொல்வாரியாகவோ, சொற்றொடர்வாரியாகவோ, பத்திவாரியாகவோ இடத்திற்குத் தக்கவாறு மொழியாக்கம் செய்யலாம்.

இருமொழித் திறன்
மூல மொழியிலும் இலக்கு மொழியிலும் சமமான அளவு திறன் இல்லாவிட்டாலும்கூட, கிட்டத்தட்ட பொருளை விளக்குகின்ற அளவிற்கான மொழியறிவு இருப்பது அவசியமாகும். அவ்வாறு இல்லாத நிலையில் மொழியாக்கத்தில் ஒரு தெளினைக் காண்பது சிரமமாகும்.

சிறப்புக்கூறுகள்
மொழிக்கே உரிய சிறப்புக்கூறுகள், பதங்கள், சொல்லாடல்கள் அமையும்போது  அதனை மொழியாக்கம் செய்வது  எளிதன்று. உதாரணமாக மூல மொழி தமிழ் என்றும் இலக்கு ஆங்கிலம் என்றும் வைத்துக்கொள்வோம். அப்போது தமிழ் மொழிக்கே உள்ள தனித்தன்மை வாய்ந்த சொற்களையோ, சிறப்பான கூறுகளையோ, சொல்லாடல்களையோ, பழமொழிகளையோ அப்படியே பொருளைத் தரும்வண்ணம் மொழியாக்கம் செய்வது எளிதல்ல. தமிழ் மொழியின் இலக்கணம், இலக்கியம் போன்றவற்றில் அடிப்படையாக சிலவற்றை அறிந்திருந்தால் மட்டுமே மொழியாக்கம் செய்வது சாத்தியமாகும்.  ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யும்போதும் இதனை மனதில் கொள்ளவேண்டும்.

சொற்றொடர் அமைப்பு
சில சமயங்களில் மூல மொழியில் குறைவான சொற்களைக்கொண்ட சொற்றொடர் அதிகமான சொற்களைக் கொண்டும், அதிகமான சொற்களைக் கொண்ட சொற்றொடர் குறைவான சொற்களைக்கொண்டும்  இலக்கு மொழியில் மொழியாக்கம் செய்யப்படும். அந்நிலையில் விடுபாடோ என்றோ, கூடுதல் என்றோ கருதாமல் பொருள் விளங்கும் வகையில் மொழியாக்கம் அமைந்துள்ளதா என்பதை உறுதி செய்தல் அவசியமாகும். நீண்ட சொற்றொடர்களாக அமைப்பதைவிட எளிதில் புரியும் வகையில் சிறிய சொற்றொடர்களாக பிரித்து அமைக்கும்போது வாசகர்கள் எளிதில் புரிந்துகொள்ள வாய்ப்பு உண்டு.

சமூகம் மற்றும் பிற சூழல்
சமூகம் மற்றும் பண்பாடு என்ற சூழலிலும், கடினமான பொருள் தரும் சொல் பிற மொழிச்சொல் என்ற நிலையிலும் தெளிவற்ற நிலையில் ஒரு சொல் அமையவோ, தவறாகப் புரிந்துகொள்ளவோ வாய்ப்புள்ளது. அப்போது மூல மொழியில் சொல்லப்பட்ட பொருண்மையின் பின்புலத்தை முழுமையாக அறிந்துகொண்டு மொழியாக்கத்தில் ஈடுபட்டு, பொருத்தமான சொல்லாக மொழியாக்கம் செய்யவேண்டும்.  அப்போது மூல மொழியில் வெளிப்படுத்தப்பட்டுள்ள நோக்கத்தையும், பின்னணியையும் மனதில் கொள்ளவேண்டும்.

குறியீடுகள் பயன்பாடு
தடித்த எழுத்து பயன்பாட்டினை உள்ளடக்கிய செய்திகளை மொழியாக்கம் செய்யும்போது இடத்தின் தன்மையினை அறிந்து உணர்வினை கவனமாக வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும். தமிழிலும், ஆங்கிலத்திலும் குறிப்பிட்ட செய்தியை வலியுறுத்திச்சொல்லும்போது தடித்த எழுத்துகள் பயன்படுத்தப்படுகின்றன.  தமிழில் குறிக்கும்போது அவ்வாறான சொற்களுக்குப் பக்கத்தில் அடைப்புக்குறிக்குள் அழுத்திப்படிக்கவும் என்று இருப்பதைக் காணலாம். ஆங்கிலத்தில் எம்பசிஸ் ஆடட் என்றவாறு கூறப்பட்டிருக்கும். 
நவம்பர் 2019இல்  தமிழ் விக்கிப்பீடியா ஆசிய மாதக் கட்டுரைப் போட்டியினை அறிவித்திருந்தது. அதில் ஆசிய நாடுகள் தொடர்பாக ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள, தமிழில் இல்லாத கட்டுரைகளை மொழியாக்கம் செய்யும் வகையில் ஒரு விதி இருந்தது.   அந்தப் போட்டியில் கலந்துகொண்டு இந்தோனேசியா தொடர்பாக 150க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதும் வாய்ப்பு கிடைத்தது. ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து தமிழ் விக்கிபீடியாவிற்கு மொழியாக்கம் செய்தபோது பெற்ற அனுபவங்களில் ஒன்று கோயில் தொடர்பானதாகும். தமிழகத்தில் அந்தந்த கோயிலைப் பற்றி எழுதும்போது அடைமொழியாக கோயில் என்று இடுகின்றோம். அவர்கள் புரா, கண்டி, கோயில்  என்று வேறுபடுத்துகின்றனர்.
ஒரு புரா என்பது ஒரு பாலினிய இந்துக் கோயிலாகும். இது இந்தோனேசியாவில் பாலினிய இந்து சமயத்தைப் பின்பற்றுபவர்களுக்கான வழிபாட்டுத் தலமாகும். பாலினிய கட்டிடக்கலையில் காணப்படும் விதிகள், நடை, வழிகாட்டுதல் மற்றும் சடங்குகளுக்கு ஏற்ப புராக்கள் கட்டப்பட்டுள்ளன. பாலி தீவில் பெரும்பாலான புராக்கள் காணப்படுகின்றன. பாலி, "ஆயிரம் புராக்களின் தீவு" என்று பெயரிடப்பட்டது.
ண்டி  என்பது இந்தோனேசியாவில் உள்ள ஒரு இந்து அல்லது பௌத்தக் கோயிலாகும். இது பெரும்பாலும் இந்து-பௌத்தக் காலமான கி.பி.4 மற்றும் கி.பி.15 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டது. வழிபாட்டிற்காக அல்லது தகனம் செய்யப்பட்ட இந்து அல்லது பௌத்த மன்னர்கள் மற்றும் பிக்குகளின் அஸ்தியை சேமிப்பதற்காக பயன்படுத்தப்படும் ஒரு பழங்கால கல் கட்டிடம் என்று வரையறுக்கிறது. பண்டைய மதச்சார்பற்ற கட்டமைப்புகளான வாயில்கள், நகர்ப்புற இடிபாடுகள், குளங்கள் மற்றும் குளியல் இடங்கள் பெரும்பாலும் கண்டி என்று அழைக்கப்படுகின்றன.
          கோயில் அல்லது கோவில் என்பது திராவிட கட்டிடக்கலை கொண்ட இந்து கோவிலின் தனித்துவமான பாணிக்கான தமிழ் சொல்லாகும்.

மொழியாக்கம் செய்வோர் அப்பணியில் முழுமையாக தம்மை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும். தாம் புரிந்துகொண்டதை அப்படியே வாசகர்களுக்கு கடத்துவது மொழியாக்கம் இல்லை.  வாசகர்கள் புரிந்துகொள்ளும் அளவில் மொழியாக்கம் அமைய வேண்டும். மொழியாக்கத்திற்கு அடிப்படையாக அமைவனவற்றில் வாசிப்பு முக்கியமானது. குறிப்பாக, தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களை  தொடர்ந்து விடுபாடின்றி படிப்பதன் மூலம் மொழியாக்கத்திற்கான ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளலாம். துறை சார்ந்த நூல்களை வாசிப்பதன் மூலமும், துறை சார்ந்த அறிஞர்களுடன் உரையாடுவதன்மூலமாக மொழியாக்கம் தொடர்பான சிக்கல்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள முடியும்.
ஆங்கிலத்தில் மட்டுமே காணப்படுகின்ற பதிவுகளையும், கட்டுரைகளையும் தமிழில் மொழியாக்கம் செய்வதன் மூலமாக தமிழ் மொழிக்கு சிறப்பான பங்களிப்பினைச் செய்ய பல வாய்ப்புகள் காத்திருக்கின்றன. அவ்வாறே தமிழில் உள்ளவற்றை ஆங்கிலத்திலோ, பிற மொழிகளிலோ மொழியாக்கம் செய்யும்போது தமிழின் பெருமைகளை பிற மொழியினரும் அறிந்துகொள்ளலாம்.  மொழியாக்கத்தை ஒரு கலையாக எண்ணி மேற்கொள்ள ஆரம்பித்தால் பல புதியனவற்றை தமிழ் மொழிக்கும், தமிழ் மொழியிலிருந்து பிற மொழிகளுக்கும் கொண்டுசெல்வதற்கு மொழியாக்கம் ஒரு பாலமாக அமையும்.

19 comments:

  1. மொழிபெயர்ப்புக்கும், மொழியாக்கத்துக்குமான வித்தியாசம் விளக்கிச் சொல்லி இருப்பது சிறப்பு.

    ReplyDelete
  2. மொழிபெயர்ப்பையும் மொழியாக்கத்தையும் வேறுபடுத்தி, அவற்றை விளக்கியிருப்பதும் அருமை. வாழ்த்துகள்

    ReplyDelete
  3. விளக்கம் மிகவும் அருமை ஐயா...

    வாழ்த்துகள்...

    ReplyDelete
  4. மொழியாக்கம் என்பது மொழிபெயர்ப்பைக் காட்டிலும்
    மொழியின் அழகு, மொழியின் கலைக்கூறு, சற்றே
    படைப்புக்கூறு ஆகியன கொண்டு அழகாக அமையும்
    ஒரு கட்டுமானம் என்பதையும், மொழியாக்கம் செய்கையில் என்னென்ன வகையில் கவனம் இருத்தல்
    வேண்டும் என்பதைத் தெளிவாக எடுத்துரைதுள்ளீர்கள்.
    வெறும் சொல்லுக்குச் சொல் மொழி பெயர்ப்பு, மொழியாகத்தில் இருக்கும் உயிர்ப்பையும் கருத்துத் தெளிவையும் கொண்டிராது என்பதை விளக்கியுள்ளமை
    பாராட்டுக்குரியது. அருமை.

    ReplyDelete
  5. மொழியாக்கம், மொழிபெயர்ப்பு செய்பவர்களுக்கு ஏற்ற பதிவு.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. மொழியாக்கத்தின் அவசியத்தையும் மொழியாக்கம் வேறு மொழிபெயர்ப்பு என்பது வேறு என்னும் தெளிவான விளக்கத்தையும் தந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி

    ReplyDelete
  7. படித்து பல புரிந்து கொண்டேன். மிக்க நன்றி

    ReplyDelete
  8. நல்லதொரு விளக்கம் ஐயா.

    தொடரட்டும் உங்கள் பதிவுகள்.

    நாளிதழில் வெளியீடு - பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
  9. விளக்கம் அருமை நாளிதழ் செய்திகள் தொடர வாழ்த்துகள்

    ReplyDelete
  10. விளக்கமான பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  11. அருமை
    வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete
  12. நிறைய தகவல்களை அழகாக தொகுத்து அளித்திருக்கிறீர்கள். நன்றி.

    ReplyDelete
  13. நல்லதொரு விளக்கம். தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. நல்லதொரு விளக்கம். தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். தஞ்சை அப்பா ண்டை ராஜ்

    ReplyDelete
  15. வெற்று மொழியில் இருந்து எழுடும்போது மொழ்பெயர்த்தலால் நெடிவிடி மறையக்கூடும் இதையெ மொழி யாக்கம் அல்லது மொழி மாற்றம் என்று கூறிஆல் சரியாக இருக்கும் நான் மொழி மாற்றங்கள்எனுமொரு பத்வு எழுதீருந்தேன் இரு மொழிபகுதிகளையும் காட்டிக் மொழி மாற்றப் பதிவுகளையும் காட்டி இருக்கிறேன் இது ஒரு செம்மையன புரிதலுக்கு வழி வகுக்கலாம் சுட்டி இதோ http://gmbat1649.blogspot.com/2019/05/blog-post_18.html

    ReplyDelete
  16. மொழிப்பெயர்ப்பு ஒரு கலை அதை இலகுவாக விவரித்துள்ளீர்கள். சிறப்பு.

    ReplyDelete
  17. உள் தலைப்புகள் இடாமல் கோர்வையாக ஒரு நிகழ்வை வர்ணிப்பது போல வார இதழ்களில் வரும் கட்டுரைகள் போல எழுதினால் வாசிப்பவர் மனத்தில் ஆழமாகப் பதிவதாக இருக்கும் என்பது என் கருத்து.

    ReplyDelete
  18. நல்லபயனுள்ள பதிவு அய்யா,தெளிவானதகவல் மிக்க நன்றி.

    ReplyDelete
  19. ஒரு நல்ல ஆசிரியர் மாணவர்களுக்கு மிக எளிமையாக விளக்குவது போல நீங்களும் மிக எளிமையாகவும் தெளிவாகவும் விளக்கி சொல்லியதற்கு பாராட்டுக்கள்..... இந்த பதிவை கல்லூரி மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாக ஒரு தடவையாவது படிக்க வேணடும் இது எல்லா மாணவர்களையும் சென்று அடைய வேண்டும் என்பது என் கருத்து

    ReplyDelete