19 November 2017

இந்திரா காந்தி நூற்றாண்டு : 10 வயது மகளுக்கு அப்பாவின் கடிதங்கள்

நேரு, தன் மகள் இந்திரா காந்திக்கு எழுதிய  Letters from a Father to His Daughter நூலிலிருந்து சில கடிதங்களை மொழிபெயர்த்து எழுதிய கட்டுரை 
பத்திரிக்கை.காம். இதழில் வெளியாகியுள்ளது. 
அதனை வெளியிட்ட அவ்விதழுக்கு நன்றி. 
அதன் மேம்படுத்தப்பட் வடிவைப் பகிர்வதில் மகிழ்கிறேன். 
இந்திரா காந்தி நூற்றாண்டு நினைவு (19.11.1917-19.11.2017)


இன்றிலிருந்து சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பாக ஜவஹர்லால் நேரு தன் மகள் இந்திரா காந்திக்கு  எழுதிய கடிதங்கள் Letters from a Father to His Daughter என்ற நூலில் இடம்பெற்றுள்ளன. அக்கடிதங்கள் இயற்கையைப் பற்றிய நூல், ஆரம்ப கால வரலாறு எழுதப்பட்ட முறை, பூமி உருவாதல், முதன்முதலாக உயிருள்ளனவற்றின் தோற்றம், மிருகங்களின் வருகை, மனிதனின் வருகை, ஆரம்ப கால மனிதர்கள், பல வகையான இனங்களின் அமைப்பு, மனித இனத்தில் மொழிகளும் இனங்களும், மொழிகளுக்கிடையேயான உறவு, நாகரிகம் என்றால் என்ன?, சமயம் எவ்வாறு உருவானது? ஆரம்ப கால நாகரிகம், கடற்பயணங்கள், ஆரியர்களின் வருகை, இராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட 30 தலைப்புகளில் அமைந்துள்ளன. 

நவம்பர் 1929இல் இந்நூலுக்கான முன்னுரையில் நேரு, “இந்த கடிதங்கள் எல்லாம் என் மகள் இந்திராவுக்கு 1928 கோடையில் அவர் இமயலையில் முசௌரியில் இருந்தபோது எழுதப்பட்டவையாகும். இக்கடிதங்கள் 10 வயது பெண்ணான அவருக்கு எழுதப்பட்ட தனிமுறைக் கடிதங்களாகும். இக்கடிதங்களில் உள்ள முக்கியத்துவத்தைக் கண்ட என் நண்பர்கள் இது பலருக்கும் சென்றடையவேண்டும் என்று விரும்பினர். மற்ற பையன்களோ, பெண்களோ இதனைப் பாராட்டுவார்களா என்று எனக்குத் தெரியாது. இருந்தாலும் இந்தக் கடிதங்கள் போகப்போக நாம் வாழும் இந்த உலகத்தைப் பெரிய குடும்பத்தினைக் கொண்ட நாடுகளாக நினைத்துப் பார்க்க வைக்கும்…… “  என்று குறிப்பிடுகிறார். அவர் தன் மகளுக்கு எழுதிய கடிதங்களிலிருந்து சிலவற்றைப் பார்ப்போம்.

நாம ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கும்போது நீ ஏதாவது கேள்வி கேட்டுக்கிட்டே இருப்பே. நான் பதில் சொல்ல முயற்சிப்பேன். இப்ப நீ முசௌரியில இருக்கே. நான் அலகாபாத்துல இருக்கேன். நாம முன்னமாதிரி ரொம்ப பேச முடியாது. அதனாலே நான் நம்மளோட பூமியைப் பத்தியும், பெரிய, சின்ன நாடுகளைப் பத்தியும், உனக்கு அப்பப்ப கடிதம் எழுதுவேன். நீ கொஞ்சம் ஆங்கிலேயர் வரலாறு படிச்சிருக்கே. அதே மாதிரி இந்திய வரலாறும் படிச்சிருக்கே. இங்கிலாந்து ஒரு குட்டித் தீவு. பெரிசா இருந்தால்கூட இந்தியா இந்த பூமியில ஒரு பகுதின்னு சொல்லலாம்.  (ப.1)

இப்பல்லாம் வரலாற்றைப் பத்தி நீ புத்தகங்கள்ல படிக்கிறே. ஆனா மனுஷன் பொறக்குறதுக்கு முன்னாடி கண்டிப்பா புத்தகமெல்லாம் இருந்திருக்காது. அப்படீங்கும்போது அப்ப என்ன நடந்துச்சுன்னு இப்ப எப்புடி சொல்ல முடியுது? சும்மா உட்காந்துகிட்டு நாம எல்லாத்தையும் கற்பனையில பாத்துட முடியாது. நாம எதெல்லாம் ஆசைப்படுறமோ அதையல்லாம் கற்பனையில பாக்கலாம். எப்படி? குட்டிக் குட்டிக் கதை மூலமா. அது எல்லாமே உண்மையா இருக்காது. அந்த காலத்துல புத்தகமெல்லாம் இல்லைன்னாகூட புத்தகம் மாதிரி நமக்கு சிலது உதவியா இருந்துச்சு. புத்தகம் செய்யறதை அது செஞ்சுச்சு. குன்று, மலை, கடல், நட்சத்திரங்கள், ஆறுகள், பாலைவனங்கள், மிருகங்களின் எச்சங்களைல்லாம் நாம இப்ப பாக்கிறோம். இவையெல்லாம்தான் நமக்கு புத்தகம் மாதிரி. ஏன்னா இதுமூலமாத்தான் நாம நம்ம பூமியோட உண்மையான கதையைத் தெரிஞ்சுக்க வாய்ப்பு கிடைச்சுருக்கு. (ப.3)

இயற்கைங்கிற இந்த புத்தகத்திலேர்ந்து நாம ரொம்ப நாளைக்கு முன்னாடி நடந்ததை நினைச்சுப் பாக்கலாம். அப்ப நம்மளோட பூமிலே மனுஷங்க கிடையாது, மிருகங்க கிடையாது.  கொஞ்சம் கொஞ்சமா மிருகம் வர்றதைப் பாக்கிறோம்.  அப்புறம் ரொம்ப மிருகங்களைப் பத்தித் தெரிஞ்சுக்குறோம். அப்புறம் ஆம்பள, பொம்பள எல்லாம் வர ஆரம்பிச்சுடுராங்க.  அவங்கள்ளெல்லாம் இப்ப இருக்குற ஆம்பள, பொம்பள மாதிரி இல்லே.  மிருகங்கள்லேர்ந்து கொஞ்சம் வித்தியாசமாத் தெரிஞ்சாங்க. அவ்ளோதான். அனுபவம் வரவர அவங்க யோசிக்க ஆரம்பிச்சாங்க. கொஞ்சம் கொஞ்சமா மிருகங்கள்லேர்ந்து வேறுபட ஆரம்பிச்சாங்க…..நீ பாத்துருப்பே. பெரிய உருவமா இருக்குற யானை மேலே சின்னதா ஒரு மனுசன் உட்கார்ந்துருப்பான். அவன் சொல்றதை அந்த யானை கேட்கும். உனக்குத் தெரியும் யானை பெரிசா இருக்கும். பலமா இருக்கும். ஆனா அதுல உட்காந்திருப்பவனோ அவ்ளோ பலமானவனா இருக்கமாட்டான்.  அவனால யோசிக்க முடியும். யோசிக்க முடியும்கிறதால அவன் மாஸ்டர். யானை அவன்கிட்ட வேலைக்காரன் மாதிரி நடந்துக்கும். மனுஷன் வளர வளர புத்தியும் வளர ஆரம்பிச்சுச்சு.  நெருப்பை கண்டுபிடிச்சான், நிலத்தை உழ, தனக்கான உணவை அறுவடை செய்ய, கட்டிக்க ஆடை நெய்ய, வாழ்றதுக்கு வீடு கட்ட தெரிஞ்சுக்கிட்டான். முன்ன அலைஞ்சு திரிஞ்சுகிட்டிருந்த மனுஷன் சின்னதா கொட்டாய் போட்டு தங்க ஆரம்பிச்சான். அருகே இருக்கிற நிலத்துல முதல்ல எதை விதைக்கிறதுன்னு தெரியல. அரிசி கிடையாது, இப்ப ரொட்டி தயாரிக்கிறாங்களே அந்த கோதுமை அப்ப கிடையாது. காய்கறி கிடையாது. இப்ப நாம சாப்பிடுறதெல்லாம் அப்ப இல்ல. சில விதைகள், பழங்கள்தான். அப்புறம் அவங்க கொன்ன மிருகங்கல சாப்பிட ஆரம்பிச்சாங்க.  (ப.9)    

நகரங்கள் வளர வளர கொஞ்சம் கொஞ்சமா பல கலைகளை கத்துக்க ஆரம்பிச்சான். எழுத கத்துகிட்டான். ஆரம்பத்துல பேப்பர் கிடையாது. போஜ்பத்ரா மரத்தோட பட்டை, ஓலையில எழுத ஆரம்பிச்சான். இப்பகூட நீ சில லைப்ரரில அந்த காலத்துல ஓலைச்சுவடில எழுதுன முழு புத்தகத்தைப் பாக்கலாம். அப்புறம் பேப்பர் வந்துச்சு. எழுத ஈசியா இருந்துச்சு. அச்சடிக்க பிரஸ் இல்ல. அதனால புத்தகத்தை ஆயிரக்கணக்குல அச்சடிக்க முடியல. முதல்ல ஒரு தடவை எழுதுவாங்க. அப்புறம் அதை கையால் மறுபடி பாத்து எழுதி  காப்பி எடுப்பாங்க…..நகரங்கள்ளெல்லாம் வளர வளர நாடுகள் உருவாக ஆரம்பிச்சுச்சு. (ப.10)

உனக்குத் தெரியும் பூமி சூரியனை சுத்தி வருது. சந்திரன் பூமியை சுத்தி வருது. பூமியைப் போலவே இன்னம் பல கோள்கள் சூரியனை சுத்தி வருது. ..ராத்திரில ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள நீ ஆகாயத்துல பாக்குற. கிரகங்களையும் நட்சத்திரங்களையும் உன்னால வேறுபடுத்திப் பார்க்கமுடியுமா? சில நட்சத்திரங்கள்தான் கிரகங்களா இருக்கு. அதையெல்லாம் நட்சத்திரங்கள்னு சொல்லமுடியாது. நட்சத்திரத்தோடு ஒத்துப் பாத்தோம்னா கிரகங்கள் துளியோண்டா இருக்கும். குட்டிப்பாப்பா மாதிரி இருக்குற சந்திரன் பார்க்க ஏன் பெரிசா தெரியுது? அது நமக்கு ரொம்ப நெருக்கமா இருப்பதால்தான். நட்சத்திரங்கள்ளெல்லாம் சிமிட்டும். கிரகங்கள் சிமிட்டாது. ஏன்னா கிரகங்களுக்கு நம்ம சூரியன்கிட்டேயிருந்து ஒளி கிடைக்குது…..(14)

ஆரம்பத்துல மக்கள் பெரிய ஆறுங்களுக்குப் பக்கத்துல குடி போக ஆரம்பிச்சாங்க. ஏன்னா ஆத்துக்குப் பக்கத்துல இருக்குற நிலம் செழிப்பா இருக்கும். அதுல விவசாயம் பண்ணலாம் இல்லயா?.....இந்தியால முதல்ல குடி புகுந்த மக்கள் சிந்து கங்கை நதிங்களுக்குப் பக்கத்துல குடியிருக்க ஆரம்பிச்சாங்க. மெசபெடோமியாவில தைகிரிஸ், யூபிரைடைஸ் நதிக்கரைங்கள்ல. எகிப்துல நைல் நதிகிட்ட. அதே மாதிரி சீனால. (53)

இந்தியால முதல்ல வந்த இனம் திராவிட இனம்தான். அப்புறம் ஆரியர்கள் வந்தாங்க. கிழக்கே மங்கோலியர்கள் வந்தாங்க. இப்பகூட தென்னிந்தியாவில இருக்கிறதுல பெரும்பாலானவங்க திராவிடர்களின் வழித்தோன்றல்கள்தான்.  அவங்க வட இந்தியர்களைவிட கொஞ்சம் கருப்பா இருப்பாங்க. ஏன்னா திராவிடர்கள்தான் ரொம்ப நாளுக்கு முன்னாலேயிருந்து இந்தியால இருக்காங்க.  திராவிடர்கள் பல துறையில முன்னாடி இருக்காங்க. அவுங்களுக்குன்னு சொந்த மொழிகள் இருக்கு.   (54)

ஆயிரம் வருஷத்துக்கப்புறம் பல மொழிகள்ல ஒரே மாதிரியான வார்த்தைகள் இருந்திருக்கு. எப்படின்னா அப்ப இந்த எல்லா மொழியும் ஒண்ணா இருந்துச்சு. பிரெஞ்சுலயும் இங்கிலீஷ்லயும் பொதுவான வார்த்தைங்க ரொம்ப இருக்கு. (59)

எல்லா நாட்டு மக்களும் தாந்தான் சிறந்தவங்கன்னும் புத்திசாலிங்கன்னும் நெனச்சுக்கிட்டிருக்காங்க. வெள்ளைக்காரன் தானும், தன்னோட நாடும் சிறந்ததுன்னு நினைக்கிறான். பிரெஞ்சுக்காரனும் அப்படியே நினைக்கிறான். அதே மாதிரிதான் ஜெர்மனியானும் இத்தாலியனும் நினைக்கிறாங்க. பெரும்பாலான இந்தியர்கள்கூட பல வழிகள்ல இந்தியாதான் பெரிய நாடுன்னு நினைக்கிறாங்க. இதெல்லாம் தற்பெருமைன்னுகூட சொல்லலாம். எல்லாம் தான்தான் பெரியவன், தன்னோட நாடுதான் பெரிசுன்னு நெனைக்கிறாங்க. தனி நபர்ன்னாலும், நாடுன்னாலும் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும். எங்கெல்லாம் நல்லது இருக்கோ அதை எடுத்துக்குவோம். எங்கெல்லாம் கெட்டது இருக்கோ அதை நீக்க முயற்சிப்போம். (ப.61)

முதல்ல பூமில மனுஷன் மிருகம் மாதிரி இருந்தான்னு முன்னாடி எழுதுன கடிதத்துல சொல்லியிருக்கேன். வருஷம் ஆக ஆக அவன் வளர ஆரம்பிச்சான். முதல்ல வேட்டையாட ஆரம்பிச்சான். அப்புறம் பாதுகாப்புக்காக கூட்டம் கூட்டமாக ஒரு இடத்திலேர்ந்து இன்னோரு இடத்திற்குப் போக ஆரம்பிச்சான். மத்த மிருகங்கக்கிட்டேயிருந்தும், மத்த மனுசங்கட்டேயிருந்தும் தன்னைக் காப்பாத்திக்க இதுமாதிரி இருக்க ஆரம்பிச்சான். மிருகங்ககூட கூட்டமாத்தான் போகும். ஆடு, மான், ஏன் யானைங்ககூட கூட்டமாத்தான் திரியுமாம். சில மிருகங்க தூங்கிக்கிட்டிருக்கும்போது மத்தது அதுங்களை கவனிச்சுக்குமாம். (ப.68)

ஒரு காலத்துல மனுசனுக்கு விவசாயம்னா என்னான்னே தெரியாது. அதை அவன் புரிஞ்சுக்க ரொம்ப வருஷமாயிருக்கு. அப்புறம்தான் விதையை விதைக்கக் கத்துக்கிட்டான். விவசாயத்தைப் பத்தித் தெரிஞ்சுக்கிட்டப்புறம் அவனுக்கு ஆகாரம் சுலபமாக கிடைச்சுது. அப்புறம் வேட்டையாடுறது குறைஞ்சுடுச்சி. விவசாயத்துல ஈடுபடறதுக்கு முன்னாடி எல்லா ஆம்பளைங்களும் வேட்டைக்காரங்களா இருந்தாங்க. ஆம்பளைங்களால அதை மட்டுமே செய்ய முடிஞ்சுது.  பொம்பளைங்க புள்ளைங்களப் பாத்துக்கிட்டாங்க, பழங்களை சேகரிக்க ஆரம்பிச்சாங்க. விவசாயத்தைப் பத்தித் தெரிஞ்சுக்கிட்டோன்ன அவங்களோட வாழ்க்கைல முன்னேற்றம் வந்துச்சு. பொம்பளைங்க கால்நடைங்கள கவனிக்க ஆரம்பிச்சாங்க. பால் கறக்க ஆரம்பிச்சாங்க. சில ஆம்பளைங்க ஒரு வகையான வேலையையும் மற்ற ஆம்பளைங்க இன்னொரு வகையான வேலையையும் செய்ய ஆரம்பிச்சாங்க. (ப.75)

நான் எழுதுற கடிதம்லாம் உனக்கு ரொம்ப குழப்பத்தை உண்டாக்குமோன்னு நான் நினைக்கிறேன். நாம வாழ்ற வாழ்க்கையே குழப்பமானது. அந்தக் காலத்துல வாழ்க்கை எளிமையா இருந்துச்சு. இப்பெல்லாம் குழப்பம் வந்ததுக்கப்புறம் நாம நேரத்தைப் பத்திப் பேச ஆரம்பிச்சுடுறோம். பொறுமையா நாம யோசிச்சுப் பாத்தாலோ, வாழ்க்கைலேயும் சமுதாயத்திலேயும் நடக்கிற மாற்றத்தை நாம புரிஞ்சுக்க ஆரம்பிச்சாலோ எல்லாம் எளிதாயிடும். இத நாம முயற்சி பண்ணாட்டி நம்மள சுத்தி என்ன நடக்குதுன்னு புரிஞ்சுக்கவேமுடியாது. காட்டில காணாமல்போன குழந்தையைப் போல நம்ம நிலை ஆயிடும். அதுக்காகத்தான் நான் அந்த காட்டுப்பகுதியிலிருந்து வெளியே கொண்டு வர முயற்சி பண்றேன். அப்ப நாம புதுசா வழி கண்டுபிடிச்சிடலாம். (ப.82)

கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிச்சதா சொல்றாங்க. அது உனக்குத் தெரியும். அதுனால கொலம்பஸ் கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடி அமெரிக்கா இல்லைன்னு சொல்லமுடியாது. கொலம்பஸ் கண்டுபிடிச்சு சொல்ற வரைக்கும் ஐரோப்பியர்களுக்கு அதைப் பத்தித் தெரியலை. கொலம்பஸ் அங்கே போறதுக்கு ரொம்ப நாளுக்கு முன்னாடியே மக்கள் அங்க இருந்திருக்காங்க. அவங்களுக்குன்னு ஒரு நாகரிகம் இருந்துச்சு. (ப.96) 

இந்தியாவுல பெரும்பாலான நகரங்கள் சிந்து, கங்கா, யமுனா போன்ற பெரிய ஆத்துக்கிட்ட இருந்துச்சு. தண்ணீர் தேவையா இருந்ததால மக்கள் நதியையே நம்பி இருந்தாங்க. நதி மக்களுக்கு உணவையும் தந்துச்சு. அதுனால அதையெல்லாம் புனிதமா நெனச்சாங்க. எகிப்துல நைல் நதியை நைல் அப்பான்னு சொல்வாங்க. இந்தியாவில கங்கையை கங்காம்மான்னு சொல்றோம்.  (ப.100)

நான் உனக்கு ரொம்ப கடிதம் எழுதிட்டேன். இது 24ஆவது கடிதம். இவ்ளோத்லயும் நாம நமக்கு தெரியாத பழங்காலத்தைப் பத்தியே பேசிக்கிட்டிருந்தோம். இதை வரலாறுன்னு சொல்லமுடியாது. இதை வரலாற்றோட ஆரம்பம்னோ உதயம்னோ சொல்லலாம். போகப்போக நாம நமக்கு அதிகமாத் தெரிஞ்ச வரலாற்றுக் காலம்னு சொல்லப்படுற பிற்காலத்தைப் பத்தி யோசிப்போம். (ப.129)

இக்கடிதங்களைப் படிக்கும்போது மாணவராக உணர்வோம். ஆசிரியர் தன் மாணவனுக்குச் சொல்வதைப் போல அவை அமைந்துள்ளன. பாட்டி கதை சொல்லும்போது கேட்கின்ற ஆர்வம், இதனைப் படிக்கும்போது நமக்கு வந்துவிடும். இளம் வயதில் இவ்வாறாக அவர் படிக்க ஆரம்பித்ததே பிற்காலத்தில் ஒரு மிகச் சிறந்த தலைவியாக உருவாகக் காரணமாக அமைந்தது எனலாம்.  

நன்றி:
Letters from a Father to His Daughter, Jawaharlal Nehru, Puffin Books, Penguin Books India 2004

இந்திரா காந்தியைப் பற்றி பிற இதழ்களில் எழுதிய கடிதங்கள்
இந்திரா காந்தியைப் பற்றி புபுல் ஜயாகர் எழுதிய நூலின் மதிப்புரை இந்தியா டுடே இதழில் வெளிவந்தபோது அதைப் பற்றி கடிதம். அப்போது குமார் என்ற பெயரிலும் வாசகர் கடிதங்கள் எழுதினேன். (அக் 21-நவ 5, 1992, இந்தியா டுடே)




1999இல் தி வீக், இந்திரா காந்தி சிறப்பிதழ் வெளியிட்டபோது அதைப் பற்றி எழுதியது.  The multifarious qualities of Indira have been fully brought out by many writers in the 40-odd pages of the special issue. The issue is a collector's item. Indira certainly left an indelible impression in the minds and hearts of millions of Indians. As the managing editor rightly said, "Like India, this was a woman who could not be captured in a single frame." P.C.Alexander and R.K.Dhawan took the readers to the very spot where Indira was, through their articles. I still possess the November 11-17 1984 issue of THE WEEK. 'Assassination and after'. History will have to wait many more generations to have another Indira. - B.Jambulingam, Thanjavur, Tamil Nadu (The Week, November 22, 1999)
இந்திரா காந்தியைப் பற்றி காத்தரின் ப்ராங்க் எழுதிய நூலின் மதிப்புரை அவுட்லுக் இதழில் 2001இல் வெளிவந்தபோது அதைப் பற்றி எழுதிய கடிதம். (On the review of the book "Indira: The Life of Indira Nehru Gandhi" by Katherine Frank, entitled 'Mrs G's string of Beaus', Spare her soul, Outlook, March 26, 2001)

 
இந்திரா காந்தி மறைந்த 25ஆம் ஆண்டில் The Hindu நாளிதழில் சிறப்புக்கட்டுரைகள் வெளிவந்தபோது அதைப் பற்றி எழுதிய கடிதம்.  (Remembering Indira, The Hindu, November 3, 2009)
----------------------------------------------------------------------------------
இந்திரா காந்தி தொடர்பான பிற பதிவுகள்
----------------------------------------------------------------------------------

18 comments:

  1. படிக்கப் படிக்க வியப்புதான் மிஞ்சுகிறது ஐயா
    நன்றி

    ReplyDelete
  2. நல்ல தொகுப்பு. சுவாரஸ்யமான விஷயங்கள்.

    ReplyDelete
  3. நண்பர் கூட இதைப் பற்றி எழுதியுள்ளார். உங்களுடன் பேச வேண்டும். அழைக்கின்றேன்.

    ReplyDelete
  4. முனைவர் அவர்களுக்கு இது ஒரு தந்தை தனது மகளுக்கு எழுதியதாக நினைக்க இயலவில்லை.

    ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு சரித்திரத்தை நினைவூட்டுவது போலுள்ளது. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  5. ஸ்வாரஸ்யம். ஆங்கிலத்தில் அவர் மகளுக்கு எழுதிய கடிதங்கள் சிலவற்றை படித்ததுண்டு.

    ReplyDelete
  6. அந்நாளைய நிகழ்வுகளோடு பின்னிப் பிணைத்த தங்களின் இந்தப் பதிவு அற்புதம். மகளுக்குத் தந்தை எழுதிய கடிதங்கள் ஆயினும் வருங்கால இளந்தலைமுறையினரின் அறிவு வேட்கைக்கான தேடலாகத் தான் பண்டித நேருவின் கடிதங்கள் அமைதிருக்கின்றன. 'அலெக்ஸாண்டரை நான் ஒரு மாவீரன் என்று ஒப்புக்கொள்ளவே மாட்டேன்' என்று பண்டித நேருவின் கடிதம் ஒன்று ஆரம்பிக்கும். இன்றும் நினைவில் நிற்கிறது.

    ஓ.வி. அழகேசன் அவர்களின் இந்நூலுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு ஒன்று உண்டு. நேருவின் சிந்தனைகளை அழகாக அவரும் தமிழில் கொண்டு வந்திருப்பார்.

    அழகேசனாரை நினைத்தவுடன் அரியலூர் ரயில் விபத்து நினைவுக்கு வருகிறது. 'அரியலூர் அழகேசரே! ஆண்டது போதாதா?.. மக்கள் மாண்டது போதாதா?" என்று ரயில்வே துணை அமைச்சராய் இருந்த அழகேசனாரை நோக்கி திமுக கேள்வி எழுப்பி தேர்தல் கோஷமாக போஸ்டர் போட்டதும் நினைவுக்கு வருகிறது.

    ரயில்வே கேபினட் அமைச்சராய் இருந்த லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் தார்மீகப் பொறுப்பு ஏற்று தன் பதவியைத் துறந்ததும் அவரது பதவி விலகல் கடிதத்தை அன்றைய பிரதமர் நேரு ஏற்றுக் கொண்டதும் வரலாறு.



    ReplyDelete
  7. மிக அருமையான கடிதங்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் ஸ்வாரஸ்யமான கடிதங்கள். ஆங்கிலத்தில் வாசித்ததுண்டு. பல விஷயங்கள், நாம் அறியாதத பலவற்றை அதில் அறியலாம். அதே போன்று நேரு அவர்களின் சிந்தனைகளையும் அறிய முடியும். மிகச் சிறந்த பகிர்வு.

      கீதா

      Delete
  8. என் தந்தையார் மறைந்த போது எனக்குப் பின்னே என்சிற்றன்னையின் நானு பிள்ளைகள் நான் பயிற்சியில் இருக்கும்போது இம்மாதிரி கடிதங்கள் என் தம்பிகளுக்கு எழுதி வந்தது நினைவில்

    ReplyDelete
  9. நேரு அவர் மகனுக்கு எழுதிய கடிதங்களில் சிலவற்றை ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன். மிக அழகான ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் அந்த கடிதங்களை படிக்கும் பொழுது ஒரு குழந்தைக்கு இவையெல்லாம் புரியுமா என்று தோன்றும். நீங்களோ ஒரு குழந்தைக்கு புரியும்படி மிக எளிமையாகவும், அழகாகவும் எழுதியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  10. மணற்கேணி (மின்னஞ்சல்வழி manarkeni@gmail.com)
    பேச்சு மொழியில் மொழிபெயர்ப்பதைத் தவிர்க்கலாம். ஒரு படைப்பு dialectல் இருந்தால் அதை மொழி பெயர்க்கும்போது அதே அணுகுமுறை தேவைப் படலாம்.இல்லாவிடில் அது தேவையில்லை.

    ReplyDelete
  11. Mr SAMBATHKUMAR S A
    (மின்னஞ்சல்வழி saskumar59@gmail.com>
    வணக்கம்.நேரு தன் குழந்தை இந்திராவுக்கு எழதிய கடிதம் இந்திய. குழந்தைகளுக்கு எழதிய கடிதமாக கொள்ளலாம்.குழந்தைகள் தினத்தில் நல்ல பதிவு நன்றி. Sas

    ReplyDelete
  12. மிக அருமையான தொகுப்பு ஐயா...

    ReplyDelete
  13. நன்றி சார் பகிர்ந்தமைக்கு சில விஷயங்கள் வாழும் காலத்தை விட பின்பு மிகவும் மதிப்பும் மரியாதையும் கொடுக்கும் அந்தமாதிரியானவை இருக்கிறது இந்த கடிதங்கள்

    ReplyDelete
  14. அருமையாக தொகுத்து வழங்கிய உங்களுக்கு நன்றி சார்.
    அருமையான பதிவு.

    ReplyDelete
  15. விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள், இதுபோன்ற தந்தையர்களால் விளைவிக்கப்பட்டவர்கள் எத்தகு ஆளுமையை கொண்டவர்களாக திகழ்வார்கள் என்பதை இந்த தந்தை மக்களுக்கிடையில் நிகழ்ந்த கடித பொக்கிஷம் தெளிவு படுத்துகின்றது.

    இன்றைய அரசியல் தலைவர்கள் இப்படி செய்கிறார்களா?

    அருமையான விஷயத்தை தெளிவுடன் மொழிபெயர்த்தமைக்கு மிக்க நன்றிகள்.

    இந்த பதிவுகள் பள்ளி பாடமானால் முளைவிடும் பருவத்திலேயே களை இல்லாமல் இளைய சமூதாயம் செழித்தோங்க வகை செய்யும்.

    கோ

    ReplyDelete