13 February 2016

மகாமகம் 2016 : சைவக்கோயில்களில் கொடியேற்றம்

மகாமகத்தை முன்னிட்டு இன்று (13.2.2016) சைவக்கோயில்களில் கொடியேற்றம் நடைபெற்ற நிலையில் குடும்பத்துடன் கும்பகோணம் சென்றோம். கிட்டத்தட்ட கொடியேற்ற நேரம் ஒரே காலத்தில் அமைந்தபடியால் கொடியேற்ற நேரத்தில் அனைத்து கோயில்களிலும் பார்க்க முடியவில்லை. சில கோயில்களில் முடிவுற்ற நிலையிலும், சில கோயில்களில் கொடியேற்றம் ஆரம்பிக்காத நிலையிலும் அமைந்தாலும் பெரும்பாலான கோயில்களுக்குச் செல்லும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.  காசி விஸ்வநாதர் கோயிலில் கொடியேற்ற நிகழ்வினை முழுமையாகக் கண்டோம். வாருங்கள், உங்களை அழைக்கிறோம். 

கொடியேற்ற நிகழ்வினைக் காண முதலில் கும்பேஸ்வரர் கோயில் சென்றோம். இன்றைய கொடியேற்றத்திற்காக முதல் நாள் கொடியேற்ற ஏற்பாடுகள் செய்த நிலையில் கொடி மரத்தைக் கண்டோம். காலை 6.00 மணி வாக்கில் நாங்கள் சென்ற நிலையில் கொடியேற்றம் ஆக நேரம் ஆகும் என்று கூறினர். இறைவனை தரிசித்துவிட்டு அங்கிருந்து திரும்பினோம். கிளம்பும் முன்பாக அண்மையில் கும்பகோணம் சப்தஸ்தானத்திற்காக உருப்பெற்ற பல்லக்கினைக் கண்டோம். பின்னர் அங்கிருந்து வெளியே வந்து தேரோட்டத்திற்காக தேர்கள் தயாராகி வருவதைக் கண்டோம்.





அங்கிருந்து சோமேஸ்வரன் கோயிலுக்குச் சென்றோம். செல்லும் வழியில் பொற்றாமரைக்குளத்தைப் பார்த்தோம். மகாமகத்தை எதிர்கொள்ள தயாராகிக் கொண்டிருந்தது அக்குளம். 
சோமேஸ்வரன் கோயிலில் கொடியேற்றத்திற்கான ஏற்பாடுகள் தயாராகிக் கொண்டிருந்தன. கொடி மரத்தைப் பார்த்துவிட்டு அங்கிருந்து நாகேஸ்வரன் கோயிலுக்குச் சென்றோம். 
நாகேஸ்வரன் கோயிலில் கொடியேற்றம் நிறைவுற்ற நிலையில் கோயிலைச் சுற்றிவந்து கொடி மரத்தைப்பார்த்தோம்.
மகாமகக்குளத்திற்குச் செல்லும் முன்பாக நேற்று குடமுழுக்கு கண்ட வீரபத்திரர் கோயிலுக்குச் சென்றோம்.

வீரபத்திரர் கோயிலிலிருந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்றோம். அக்கோயிலில் கொடியேற்றத்திற்காக ஏற்பாடுகள் தயாராகிக் கொண்டிருந்த நிலையில் முழுமையாக கொடியேற்றத்தைக் காண அங்கே சிறிது நேரம் தங்கினோம். உள்ளே உற்சவமூர்த்திகளைப் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது கொடியேற்றத்திற்கான பூசைகள் ஆரம்பித்து பிரகாரத்தைச் சுற்றி வந்தனர். யாகசாலையில் நடைபெற்ற பூசைக்குப் பிறகு நேராக மூலவர் சன்னதியில் சென்று பூசை செய்தனர். சிறிது நேரத்தில் உற்சவமூர்த்தியான இறைவனையும், இறைவியையும் கொடி மரத்தருகே கொண்டுவந்தனர். பின்னர் கொடி மரத்திற்கு பூசைகள் செய்யப்பட்டு, கொடி ஏற்றப்பட்டது. முதன்முதலாக கொடியேற்றும் நிகழ்வினை முழுமையாகப் பார்த்த நிறைவோடு மகாமகக்குளத்திற்குச் சென்றோம். 



மகாமகக்குளத்தில் கூட்டம் கட்டுப்பாட்டுக்குள் இருந்ததைக் காணமுடிந்தது. உள்ளே அனைத்துக் கிணற்றிலும் குளித்துவருவதற்கு வசதியாக கயிறு கட்டி வைத்திருந்தனர். பல இடங்களில் படிகளில் இறங்கி பலர் நீரை தலையில் தெளித்துக்கொண்டனர். நாங்கள் சிறிது நேரம் படியில் அமர்ந்து குளத்தினை அழகை ரசித்தோம். 




மகாமகக் குளத்தினைைப் பார்த்தபின் அருகிலிருந்த அபிமுகேஸ்வரர் கோயிலுக்குச் சென்றோம். கொடியேற்றம் நடந்து நிறைவுற்றிருந்த நிலையில் கொடி மரத்தினைக் கண்டோம். மகாமகக்குளத்தில் குளித்துவிட்டு பலர் நேரடியாக அக்கோயிலுக்கும் காசி விஸ்வநாதர் கோயிலுக்கும் வருவதைக் கண்டோம். அவ்விரு கோயில்களும் பக்தர்கள் ஈரமாக நடந்த நிலையில் எங்கு பார்த்தாலும் தண்ணீராக இருந்தது. அபிமுகேஸ்வரர் கோயிலைப் பார்த்தபின் மறுபடியும் மகாமகக்குளக் கரைக்கு வந்து சிறிதுநேரம் பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.  
 
மகாமகத்திற்கு ஆயத்தமாக முதல் நாளன்று ஏற்பாடுகள் என்ற நிலையில் கொடியேற்றத்தை பார்த்த மன நிறைவோடு தஞ்சாவூர் திரும்பினோம்.

எங்களுக்கு எவ்வித தொல்லையும் தராமல் வந்த எங்கள் வீட்டு அழகன், நாகேஸ்வரன் கோயிலில்.

13 comments:

  1. உடனுக்குடன் ரிபோர்ட் அருமை. படங்களும் அருமை.

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி சார்

    ReplyDelete
  3. படங்களும் விளக்கவுரைகளும் அருமையாக தந்த முனைவருக்கு நன்றி
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  4. அருமையான படங்கள். நிகழ்வுகளை உடனடியாகப் பதிவு செய்து எங்களையும் அழைத்துச் சென்றதற்கு நன்றி.

    ReplyDelete
  5. அழகிய படங்களுடன் இனிய தரிசனம்..

    ReplyDelete
  6. அழகான படங்கள்
    அருமையான தகவல்
    மகாமகம் சிறப்பு
    பயனுள்ள பகிர்வு

    ReplyDelete
  7. நான் நேரில்வந்து பார்க்க முடியாத வருத்தம் ,தங்களின் பதிவால் மகிழ்ந்தது

    ReplyDelete
  8. மகாமகக் குளத்தில் நீராடும் இடத்தில் நீரின் ஆழம் அதிகமா?மகாமகக் குளக் கிண்றுகளில் வாளி எதற்கு ?குளத்ட்க்ஹு நீரை விட கிணற்று நீர் புனிதம் வாய்ந்ததா?

    ReplyDelete
    Replies
    1. ஆழம் இல்லை. அனைத்து நீரும் ஒன்றுதான் ஐயா. அவரவர்களின் திருப்திக்காக இவ்வாறு செய்கிறார்கள்.

      Delete
  9. மகாமக நிகழ்வுகளை உடனுக்குடன் கொடுத்து எங்களையும் உடன் அழைத்துச் செல்கிறீர்கள். விரிவான பதிவுக்கு நன்றி
    த ம 4

    ReplyDelete
  10. கொடியேற்ற நிகழ்வுகள் பற்றி அறிந்தோம் நன்றி ஐயா . படங்கள் அருமை

    ReplyDelete
  11. நன்றி கலந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. கொஞ்சம் தாமதமாகிவிட்டது. உங்கள் படங்கள் மூலமும், பகிர்வின் மூலமும் கொடியேறிய தகவல்கள் அறிந்தோம். மிக்க நன்றி ஐயா...

    ReplyDelete