14 January 2017

நன்னாளில் நூல் அன்பளிப்பு

இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள் (14 சனவரி 2017)
இரண்டாவது வலைப்பூவில் 151ஆவது பதிவு
வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்திக்கொள்வதும், வீட்டில் நூலகத்தைப் பேணுவதும் ஒவ்வொருவரும் கடைபிடிக்கவேண்டிய நல்ல பழக்கங்களாகும். வாசிக்கும் பழக்கத்தைத் தொடரவேண்டும் என்ற நன்னோக்கில் நல்ல பல உத்திகளைப் பலர் மேற்கொண்டு வருகின்றனர். அவற்றில் ஒன்று விழாக்களின்போது நூல்களை அன்பளிப்பாக வழங்குவதாகும். கல்விச் செல்வத்தைப் பெருக்கிக்கொள்வது நம்மை மென்மேலும் மேம்படுத்திக் கொள்ள உதவும். எளிதில் பகிர்ந்துகொள்ள முடிகின்ற செல்வமும் இதுவே. இப்பழக்கத்தை நான் தொடர்ந்து பல ஆண்டுகளாகக் கடைபிடித்து வருகிறேன். என் நண்பர்கள் பலர் தம் இல்ல நிகழ்வுகளின்போது நூல்களை அன்பளிப்பாகத் தந்துள்ளனர். அவ்வாறான அன்பளிப்புகளைக் காணவும், அந்த பழக்கத்தை மேற்கொள்ளவும் அன்போடு அழைக்கிறேன்.  

சைவ சித்தாந்த வித்யாநிதி முனைவர் வீ.ஜெயபால் தன்னுடைய மகன்களின் திருமணத்தின்போது ஒவ்வொரு நூலை எழுதி அதற்கு அட்டையாக திருமண அழைப்பிதழை இணைத்து வடிவமைத்திருந்தார். அவ்வகையில் அவருடைய மகன்களின் திருமணத்திற்கு அவர் எழுதிய நூல்கள் (வெளியீடு : சைவ சித்தாந்த ஆய்வு மையம், 28 அம்மையப்பா இல்லம், கோவிந்தராஜ் நகர், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர், அலைபேசி 9443975920) பின்வருவனவாகும். மேலட்டை இரட்டை மடிப்பாகவும், பின்னட்டை ஒற்றை மடிப்பாகவும் திருமண அழைப்பிதழாக அமைந்திருந்தது. 

 • திருமுறைத்திருமணம் (செயல்முறை-விளக்கம்), (48 பக்கங்கள்) 
 • சைவ நால்வரால் பாடல் பெற்ற திருத்தலங்கள் (96 பக்கங்கள்) 
 • திருவிசைப்பா திருப்பல்லாண்டு சிவத்தலங்கள், அருணகிரிநாத சுவாமிகள் அருளிச்செய்த திருப்புகழ் பாடல் பெற்ற முருகன் திருத்தலங்கள், 108 வைணவ திவ்யதேசங்கள் (48 பக்கங்கள்)
வீ.ஜெ.நவகோடி நாராயணன்-து.ரேவதி திருமணம் 15.9.2011
வீ.ஜெ.மதுசூதனன்-கு.திவ்யா திருமணம் 2.3.2015
வீ.ஜெ.வேதராமன்-து.பிரீத்தி திருமணம் 11.5.2016
திரு அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி அவர்கள் தன் மூத்த மகன் திருமணத்தின்போது, திருமண அன்பளிப்பு என்ற குறிப்பு முதல் பக்கத்தில் இணைக்கப்பட்ட நிலையில் திருக்குறள் எளிய உரை (உரை : நல்லாசிரியர் புலவர் செக.வீராசாமி, திருவருள் பதிப்பகம், 12/91, முதல் தெரு, முதல் பிரிவு, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600 008) என்ற நூலை வழங்கினார். இளைய மகன் திருமணத்தின்போது அவராலும் அவருடைய மகனாலும் தொகுக்கப்பட்ட நூலை (தொகுப்பு : அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி, சென்னை தே.கி.மலையமான், இராசகுனா பதிப்பகம், 28 முதல் தளம், 36ஆவது தெரு, பாலாஜி நகர் விரிவு, சின்னம்மாள் நகர், புழுதிவாக்கம், சென்னை 600 091) அன்பளிப்பாக வழங்கினார். முதல் பக்கத்தில் திருமண அன்பளிப்பு என்ற நிலையிலான நூலட்டையைக்கொண்டும், இரண்டாவது பக்கம் திருமண அழைப்பாகவும் இருந்தது.  
தே.கி.மலையமான்-பெ.சுகன்யா திருமணம் 29.1.2012 
தே.கி.பூங்குன்றன்-நெடு.கார்த்திகா திருமணம் 26.2.2016
திரு மா.பாலகிருட்டினன் தன் மகன் திருமணத்திற்கு அளித்த அழைப்பிதழ் தமிழ் கற்போம் என்ற தலைப்பிலான 32 பக்கங்களைக் கொண்ட பாதுகாத்து வைக்கப்படவேண்டிய தொகுப்பாக அமைந்திருந்தது. அந்த அழைப்பிதழ் நூலில் ஔவையாரின் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, சிவப்பிரகாசரின் நன்னெறி, உலக நாதரின் உலக நீதி ஆகியவை உரையுடன் இடம் பெற்றிருந்தன. மேலும் தமிழ் எண்கள், ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், 16 பேறுகள், 18 சித்தர்கள், 12 ஆழ்வார்கள், திரிகடுகம், ஐம்புலன்கள், அறுசுவை, கடையெழு வள்ளல்கள், நவமணிகள், நவரசம், ஐவகை இசைக் கருவிகள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களின் தலைப்புகள், நிகண்டுகள் ஆகியவை பெட்டிச் செய்திகளாகத் தரப்பட்டிருந்தன. மற்றும் ஓரெழுத்தொரு மொழிகள், பதினென்கீழ்க்கணக்கு நூல்கள், சிற்றிலக்கியங்கள், 63 நாயன்மார்கள், முக்கிய இலக்கண நூல்கள், இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மொழிகள் பட்டியலிடப்பட்டிருந்தன. அழைப்பிதழின் மேலட்டையின் மணமக்கள் மற்றும் மணமகனின் பெற்றோர் புகைப்படமும், மேலட்டையின் உட்புறம் திருமண அழைப்பிதழும், பின் அட்டையின் உட்புறம் சுற்றமும் நட்பும் விடுக்கும் அழைப்பும், வெளிப்புறம் மணமகனின் பெற்றோர், சித்தப்பா சித்தி புகைப்படங்கள் இருந்தன.
பா.பாலு ஆனந்த்-ப.சத்யபாமா திருமணம் 22.3.2015
திரு கஜேந்திரன் தன் மகள் திருமணத்தின்போது, ஸ்வாமி சிவானந்தா எழுதிய மன அமைதி பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கை பாதை என்ற நூலை (நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, தி.நகர், பாண்டி பஜார், தியாகராய நகர், சென்னை 600 017)அன்பளிப்பாக வழங்கினார். திருமண விழா என்ற நிலையிலான குறிப்பு முதல் பக்கத்தில் மணமக்களின் புகைப்படங்களுடன் இணைக்கப்பட்டிருந்தது. 
கவி.கயல்விழி-ஆதி.பரணி விஜயகுமார் திருமணம் 11.5.2016
முனைவர் ந.அதியமான் தன் மகள் திருமணத்தின்போது, வ.உ.சிதம்பரம்பிள்ளை எழுதிய ஜேம்ஸ் ஆலனின் மனம்போல வாழ்வு அகமே புறம் என்ற, 108 பக்கங்களைக் கொண்ட இரு நூல்களை ஒரே தொகுப்பாக (பதிப்பாசிரியர் நடராசன் அதியமான், காமினி பதிப்பகம், 43/2, பெரியப்பண்ணை சந்து, சிறுகனூர், மண்ணச்சநல்லூர் வட்டம், திருச்சி மாவட்டம் 621 123) அன்பளிப்பாக வழங்கினார். நூலின் முதற்பக்கத்தில் மணமக்களின் புகைப்படமும், திருமண அழைப்பிதழும் அச்சிடப்பட்டிருந்தன. நூலின் பின்னட்டையில் வ.உ.சிதம்பரம்பிள்ளையின் புகைப்படமும், மணமக்கள் பெயரும், மண நாளும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அ.காயத்ரி-க.நிரஞ்சன் திருமணம் 4.9.2016
பதிப்பாசிரியராக, தொகுப்பாசிரியராக, நூலாசிரியராக அன்பளிப்பாக நூலினை வழங்குதல் என்பதோடு பிறர் எழுதிய நூல்களை அன்பளிப்பாக வழங்குவதும் பாராட்டத்தக்கதாகும். திருமணத்தின்போது மேற்கொள்ளப்படும் செலவுகளில் பயனுள்ள செலவாக இதனைக் கொள்ளலாம்.

எங்களது பேரன் தமிழழகன் பெயர் சூட்டு விழாவின்போது, முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் எழுதிய தஞ்சைப்பெரிய கோயில் என்ற நூலை வந்திருந்த உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுத்து மகிழ்ந்தோம். அந்நூலின் முதற்பக்கத்தில் என் மகனும், மருமகளும் கையொப்பமிட்டு இருந்தனர். 

விழா நிகழ்வுகளில் நூல்களை அன்பளிப்பாகக் கொடுக்கும் பழக்கத்தைக் கடைபிடிப்போம். ஒவ்வொருவரும் இல்லத்தில் நூல் நிலையம் பேணுவோம். வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவோம். 

20 comments:

 1. சிறப்பான பழக்கம் ஐயா...

  இனிய தமிழர் தின நல்வாழ்த்துகள்...

  ReplyDelete
 2. தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. அன்பிற்கினிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 4. திருமணம் போன்ற விழாக்களில் கூட மணமக்களுக்கு புத்தகங்களை அன்பளிப்பாக அளிப்பது என் நெடு நாளைய வழக்கம். 'பெரிசாக என்ன தந்து விடப்போறான்? ஒரு புஸ்தகத்தை நீட்டுவான்.." என்று என் காதுபட விமரிசனக்னளைக் கேட்டும் என் பழக்கம் மாறாதிருந்தது.

  சமீபகாலமாக அந்தப் பழக்கத்தில் லேசான ஒரு மாற்றம். என் மனைவியும் என்னுடன் வரும் விழாக்களில், மனைவி சார்பாக ஒரு உறையிட்டு பணமும் என் சார்பாக வழக்கம் போல் புத்தகமும் என்று மாறியிருக்கிறது.

  பொங்கல் விழா அன்பளிப்பாகத் தருவதற்கு ஏற்ற ஒரு புத்தகம் இந்த சென்னை புத்தகச்சந்தையில் என்னைக் கவர்ந்தது. பொங்கல் திருநாளைப் பற்றிய நிறைய விவரங்களை அந்த நூலில் பார்த்தேன்.

  வட நாடுகளில் பொங்கல் 'சங்கராந்தி' என்ற பெயரில் கொண்டாடப்படுகிறதாம். அன்று சூரிய நாராயணன் தெயவ வழிபாடு செய்து பொங்கலிட்டு வழிபடுகிறார்களாம். கர்நாடகாவிலும் சங்கராந்தி தான்.

  ReplyDelete
  Replies
  1. ஜீவி சார், ஆம் தமிழகத்தைத் தவிர ஆந்திரா, கர்நாடகா தொடங்கி வட மாநிலங்களிலும் சங்கராந்தி என்றே கொண்டாடுகிறார்கள். மகர சங்கராந்தி அதாவது சூரியன் தன் பயணத்தை மகர ராசிக்கு மாறும் தினமாகக் கொண்டாடுகிறார்கள்.நம் கலாச்சாரம் பரவியிருக்கும் இலங்கை (தமிழர்தானே) இந்தோனேசியா, மையன்மார், நேபால், தாய்லாந்திலும் கூடக் கொண்டாடுகிறார்கள் ஆனால் வேறு பெயரில். மேற்கத்திய நாடுகளிலும் அறுவடை விழா கொண்டாடுகிறார்கள் அவர்களது அறுவடை காலம் மாறுவதால் வேறு மாதங்களில் வருகிறது. பல நாடுகளில் அறுவடை விழா ஒவ்வொரு விதத்தில் ஒவ்வொரு பெயரில் கொண்டாடுகிறார்கள். உங்களுக்கும் தெரிந்திருக்கும்.

   கீதா

   Delete
  2. தொடர்பான தகவல்களுக்கு சகோதரி கீதாவுக்கு நன்றி.

   ஆக, அடிப்படையில் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு திருவிழா இது. இல்லையா?

   நான் சிறுவனாக இருந்த பொழுது (65 வருடங்களுக்கு முன்) திராவிடர் திருநாளாக சொல்லப்பட்டது.

   வாலிபனாக இருந்த பொழுது உழவர் திருநாளாக கொண்டாடப்பட்டது.

   இப்பொழுது தமிழர் திருநாள்.

   உயிர் வாழ்வ்தற்கு அடிப்படையான உணவுக்கு ஆதாரமாக இருக்கும் இயற்கையின் கொடைக்கு நன்றி சொல்லும் விதமாகக் கொண்டாடப்படும் ஒரு திருநாளுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு பெயர்கள் சூட்டப்படுவதை என் வாழ்க்கையிலேயே பார்த்து விட்டேன்.

   Delete
 5. 50 களில் திருமணத்தின் போது மணக்களுக்கு நூல்கள் பரிசளிக்கும் வழக்கம் இருந்தது.அப்போதெல்லாம் மு.வ அவர்களின் நூல்கள் பரிசளிப்பார்கள்.இடையில் ஏனோ அந்த பழக்கம் மறைந்து மேசை விளக்குகளும்,சுவர்க் கடிகாரங்களும் தரப்பட்டன.நல்லவேளை நூல்கள் ப
  ரிசளிக்கும் வழக்கம் திரும்பவும் ஆரம்பமாகிவிட்டது என அறிந்து மிக்க மகிழ்ச்சி.தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி.தங்களுக்கு எனது பொங்கல் நல் வாழ்த்துகள்!

  ReplyDelete
 6. நன்றி சொல்லும் நன்னாளில்
  நனிமிகு பொங்கல் நல்வாழ்த்துகள் ஐயா.

  ReplyDelete
 7. பொங்கல் நல்வாழ்த்துகள்..

  ReplyDelete
 8. மிக நல்ல பழக்கம் ஐயா! எங்கள் வீட்டிலும் நாங்கள் இப்படித்தான் பரிசு வழங்குகிறோம். அதற்கு விமரிசனங்கள் வருவதுண்டு ஆனால் நாங்கள் அதைக் கண்டு கொள்வதில்லை...மிக்க நன்றி ஐயா அருமையான கருத்திற்கு

  கீதா

  ReplyDelete
 9. நல்லதொரு பழக்கம் ஐயா. இதை கடைபிடித்தால் நல்லது.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 10. அருமையானதொரு கருத்தினைக் கூறும் இக்கட்டுரையில், எங்கள் திருமண அழைப்பிதழ்களும் எடுத்துக்காட்டாய் இருந்ததைக் கண்டு உவப்படைகிறேன்..! நன்றி ஐயா :)

  ReplyDelete

 11. நான்கு கால் செல்வங்களுக்கு
  நம்மாளுங்க நன்றிக்கடன் செலுத்தும்
  பட்டிப் (மாட்டுப்) பொங்கல்
  பகலவனுக்கு (சூரியனுக்கு) நன்றிக்கடன் செலுத்தும்
  தைப்பொங்கல் வாழ்த்துகள்!


  தங்கள் பணி தொடர வாழ்த்துகள்

  ReplyDelete
 12. விரும்பிப் படிக்காதவர்களிடம் திணிக்கலாமா முன்பெல்லா ம்நான் மண மக்களுக்கு ஆங்கிலத்தில் மாரேஜ் மானுவல் மற்றும் யூ அழர் ஓக்கே ஐ அம் ஓக்கே போன்ற புத்தகங்களை பரிசளித்து வந்தேன் இப்போது நின்று விட்டது

  ReplyDelete
 13. நல்ல பழக்கம்தான்! ஆனால் நமக்குப் பத்து ரூபாய் விலையுள்ள திருக்குறளை திருமணப் பரிசாகக் கொடுத்துவிட்டு, அவர்கள் வீட்டுத் திருமணத்தில் நம்மிடம் ரொக்கமாக எதிர்பார்ப்பவர்கள் இருக்கிறார்களே, அவர்களை என்ன செய்வது? - இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து

  ReplyDelete
 14. 151வது பதிவுக்கும் ,அதில் சொல்லியிருக்கும் நல்ல யோசனைக்கும் வாழ்த்துக்கள் :)

  ReplyDelete
 15. நூல்கள் பரிசளிப்பது நல்ல வழக்கமே .
  திருமணப் பத்திரிகையும் புதுமையாக இருந்தது .

  ReplyDelete
 16. தாமதமான வருகைக்கு மன்னிக்க. புத்தகங்களைப் பரிசளிப்பது மிகவும் நல்ல விஷயம். திருமணப்பத்திரிக்கை அட்டையில் அச்சடிப்பது பற்றி இப்போது தான் தெரிந்து கொண்டேன். நன்றி முனைவர் ஐயா!

  ReplyDelete