28 October 2022

ஓவியர் தங்கம்

புன்னகையுடன்கூடிய முகம், அனைவரையும் வசீகரிக்கும் பேச்சு, எப்போதும் நேர்மறைச்சிந்தனை, அனைவரிடமும் பழகும் பாங்கு, ஓர் முன்னுதாரண அரிய மனிதர் என்ற வகையில் எங்கள் அனைவரையும் ஈர்த்தவர். ஓவியத்துறையில் சாதனைகள் புரிந்தவர். இவரைப் போல ஓர் அரிய மனிதரைக் காணல் அரிது. அனைவரிடமும் நட்பு பாராட்டுபவர். எங்கள் குடும்ப நண்பர் திரு தங்கம் அண்ணன் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

கையால் அவர் ஓவியமாக வரைந்த கல்கியின் பொன்னியின் செல்வன் 10 தொகுதிகளும் அவருடைய பெயரை என்றும் சொல்லிக்கொண்டிருக்கும்.

பிறந்த ஊர், வளர்ந்த ஊர், சுற்றம், நட்பு, பணியாற்றிய இடங்கள் என்று ஒவ்வொன்றைப் பற்றியும் பேச ஆரம்பித்தால் நாம் நம்மை மறந்துவிடுவோம். அந்தந்த காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச்சென்றுவிடுவார். என் தந்தைக்கும் மிக நெருக்கமானவர். நாங்கள் உறவினர் என்று கூறுவார். என் தந்தை இறந்தபின்னர் பல வருடங்கள் கழித்து உறவினர் திருமணத்தில் நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டபோது "உன் அப்பாவைப் பார்ப்பதுபோலவே இருக்கிறது. நானும் உன் அப்பாவும் கும்பகோணத்தில் ஆங்கிலத் திரைப்படங்கள் பார்க்கச் செல்வோம்." என்று நினைவுகூர்ந்தார்.

சந்திக்கச் செல்லும்போதெல்லாம் குடும்பத்தினரைப் பற்றியும், நண்பர்களைப் பற்றியும் அதிகம் பேசுவார். கும்பகோணம் தெற்கு வீதியில் அவர் குடியிருந்த இல்லத்தில் தொடங்கி பல இடங்களில் நடந்த நிகழ்வுகளை அப்படியே கண்முன் கொண்டு வந்துவிடுவார். பணியாற்றிய நிறுவனங்களை நன்றியோடு நினைவுகூர்வார்.

இத்தகு மாமனிதர் நம் அனைவரின் உள்ளங்களிலும் என்றும் வாழ்வார். அவருடைய சாதனைகள் என்றும் நிலைத்து நிற்கும்.

............

கண்ணீர் அஞ்சலி
திருமதி. R. சந்திரோதயம் தங்கம், ஓவிய ஆசிரியை (ஓய்வு) GCHS, அவர்களின் கணவரும், திருமதி. பொன்னியின் செல்வி, உதவி பேராசிரியர், குந்தவை நாச்சியார் கல்லூரி மற்றும் Dr. T. ராஜேந்திரன், USA., அவர்களின் தந்தையுமாகிய.
திரு. ப. தங்கம், ஆர்டிஸ்ட் & போட்டோகிராபர், நோய் குறியியல் துறை (ஓய்வு), தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அவர்கள் 27.10.2022 வியாழக்கிழமை இரவு 11:00 மணி அளவில் இயற்கை எய்தினார்கள்.
அன்னாரது இறுதி ஊர்வலம், 29.10.2022, சனிக்கிழமை மாலை 4:00 மணிக்கு எண்.14, 6 வது, மெயின் ரோடு, ஞானம் நகர், தஞ்சாவூர் அவர்களது இல்லத்தில் இருந்து புறப்படும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
மீளாத்துயறுடன்,
குடும்பத்தினர் & உறவினர்கள்

ஒளிப்படம் : திரு கரந்தை ஜெயக்குமார்

விக்கிப்பீடியாவில் அவரைப் பற்றி நான் ஆரம்பித்த பக்கம்

............
ஓவியர் தங்கம் அவர்களின் மனைவி திருமதி சந்திரோதயம் நேற்று (11 அக்டோபர் 2023) மதியம் இயற்கை எய்தினார். அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். (அவருடைய குடும்பத்தார் அனுப்பிய செய்தி). 


12 அக்டோபர் 2023இல் மேம்படுத்தப்பட்டது.

18 October 2022

ஆத்தாவின் பாசம்

1970களின் ஆரம்பத்தில், நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது எங்கள் வீட்டில் தீபாவளிக்காக எங்கள் ஆத்தா (அப்பாவின் அம்மா) பலகாரம் செய்த நாட்களை என்றும் மறக்கமுடியாது. அருகில் நாங்கள் அவரைச் சுற்றி உட்கார்ந்திருப்போம். ஏதாவது கதையைச் சொல்லிக்கொண்டோ, புத்திமதிகள் கூறிக்கொண்டோ வேலையைப் பார்ப்பார்கள். "பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்கணும், நல்லா படிக்கணும்,  உங்களுக்குள்ள அடிச்சுக்கக்கூடாது, நல்ல பழக்கவழக்கம் கத்துக்கணும்" என்ற வகையில் பேசிக்கொண்டே இருப்பார்கள். அவர்களின் பேச்சிற்கு நாங்கள் மறுப்பேதும் கூறமாட்டோம்.  "உம்" போட்டுக்கொண்டே சாதா முறுக்கு, முள் முறுக்கு, அதிரசம், ரவா உருண்டை, பச்சைப்பயறு உருண்டை, கெட்டி உருண்டை (பொருள்விளங்கா உருண்டை) போன்றவற்றை அவர்கள் செய்வதைப் பார்ப்போம். எங்களையும் அறியாமல் அவர்கள் கூறிய புத்திமதிகள் மனதைப் பக்குவப்படுத்தவும், பண்படுத்தவும் பெரிதும் உதவியதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். 

முறுக்கினை பெரிய பித்தளைக்குவளையிலும், பித்தளைப் பானையிலும் அழகாக அடுக்கிவைப்பார்கள். பிற பலகாரங்களையும் அவ்வாறே வைப்பார்கள். சிலவற்றை சாமி படத்தின்முன்பாக வைப்பார்கள். தீபாவளிக்கு முன்பாகவே, அதனை நாங்கள் ருசிக்க ஆரம்பித்துவிடுவோம். எண்ணெய், மாவு, நெய் என்பதையெல்லாம் கடந்து மனதால் வெளிப்படுத்த முடியாத ஒரு ருசி அதில் இருக்கும். ஆத்தாவின் பாசத்தைக் கொண்டு செய்யப்பட்டதல்லவா? தீபாவளியின்போது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் கொண்டுபோய் கொடுப்போம். 

ஆத்தாவிற்குப் பிறகு அவரது மருமகள் (எங்கள் அம்மா) ஆத்தா செய்ததைப் போலவே அதே பேச்சு, உரையாடல்களுடன் தீபாவளி பலகாரம் செய்தார்கள்.  எங்களுக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கும். சற்று வளர்ந்துவிட்ட நிலையில் பேச்சுகளில் எங்களுக்குள் நிதானம் இருப்பதை உணரமுடிந்தது. ஆத்தா கூறிய அளவிற்கு புத்திமதி இல்லாவிட்டாலும், பரஸ்பர உரையாடல் இருக்கும். முறுக்கு மற்றும் உருண்டையை அடுக்கும்போது வெளி சுற்றிலிருந்து உள்ளே வரும்படியாக, எடுக்கும்போது உடையாமல் இருக்கும் வகையில் அடுக்குவார்கள். ஆத்தா செய்தபோது பலகாரத்தில் இருந்த அதே ருசியை அதனைக் கண்டேன்.  அக்கம்பக்கத்தில் உள்ளோருக்கும், நண்பர்களுக்கும் பலகாரத்தைத் தருவோம்.

திருமணத்திற்குப் பின் என் மனைவி, தன் மாமியார் செய்ததைப் போலவே தீபாவளி பலகாரம் செய்ய ஆரம்பித்தார். உருண்டை செய்வதை மாமியாரிடம் கற்றுக்கொண்டதாகப் பெருமையோடு கூறுவார்.  

இந்தத் தீபாவளிக்காக பலகாரங்களைத் தயாரிக்க ஆரம்பித்தபோது சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் ஆத்தாவிற்கு நாங்கள் உதவியது, ஆத்தா சொன்ன புத்திமதி, பாத்திரங்களில் அடுக்கியது அனைத்தும் நினைவிற்கு வந்தன. முதலில் சாதா முருக்கையும், முள் முருக்கையும்,  காசிப்பானையிலும், பயத்தம்பருப்பு உருண்டையை மற்றொரு பாத்திரத்திலும் அடுக்கினேன். சில முறுக்குகளையும், உருண்டைகளையும் சாமி படத்தின்முன் வைத்துவிட்டு, ஒவ்வொன்றையும் ருசி பார்க்க ஆரம்பித்தேன். அதில் எங்கள் ஆத்தா வைத்தபோது இருந்த ருசியையே உணர்ந்தேன். அதனை என் மனைவியிடம் பகிர்ந்தபோது என் கண்ணில் லேசாக கண்ணீர்த்துளி. என் ஆத்தாவின் அருகில் இருப்பதைப் போல இருந்தது. ஆத்தாவின் பாசமும், வாசமும் அருகில் இருப்பதைக் கண்டேன். நம் முன்னோர்கள் நமக்கு இட்டுச்சென்றது  இந்த நல்ல பழக்கங்களும், பாசமும், பண்பாடும்தான். அந்நாள்கள் சில நொடியில் வந்தன. சிறிது நேரம் வானத்தில் பறப்பதுபோல இருந்தது. சுய நினைவிற்கு வர சற்றே நேரமானது. 

15 ஜூன் 2023இல் மேம்படுத்தப்பட்டது.