24 June 2017

தமிழ் மருத்துவ முறைகள் : மணி. மாறன் மற்றும் பயிற்சி மாணவர்கள்

சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப்பண்டிதர் நண்பர் மணி. மாறன்  (அலைபேசி 9443476597) அவர்களைத் தலைமைப் பதிப்பாசிரியராகவும், பயிற்சி மாணவர்களைக் கொண்டும் வெளியிடப்பட்ட, தமிழ் மருத்துவ முறைகள் நூல் நான் அண்மையில் வாசித்த நூலாகும். 

சித்த மருத்துவம் 
நூலின் முதற்பகுதியில் சித்த மருத்துவம் பற்றிய அறிமுகம் மிகவும் சிறப்பாகத் தரப்பட்டுள்ளது. மருந்து, சித்தர்கள், தமிழ் இலக்கியங்களில் சித்த மருத்துவம், சித்தர் காலம், கல்வெட்டுச் சான்றுகள், சல்லிய விருத்தி (அறுவை மருத்துவம்), ஆதுலர் சாலைகள் (மருத்துவ மனைகள்), சித்த மருத்துவமும் சீன மருத்துவமும், தாவரமும் மருந்தும், நாட்டு மருத்துவம், பழங்குடியினர் மருத்துவம் போன்ற பல தலைப்புகள் மூலமாக நல்லதொரு அறிமுகத்தைப் பெறமுடிகிறது. (பக்.i-xx) அவற்றில் சிலவற்றைக் காண்போம்:

உடலுக்கு வரும் துன்பத்தை உடல் நோய் என்றும் உள்ளத்திற்கு வரும் துன்பத்தை உள நோய் என்றும் குறிப்பிடுவது இன்றும் வழக்கத்தில் இருந்து வருகிறது. (ப.i)
சரித்திர ஆய்வுகளாலும், கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்தக்குடி என்று தமிழினத்தை அழைப்பதாலும் இந்திய மருத்துவத்திற்குள்ளும் முதன்மையாகத் தோன்றிய மருத்துவம் சித்த மருத்துவமே என்று நாம் பெருமை கொள்ளலாம். (ப.i)
இம்முறையை வகுத்தவர்கள் பதினெட்டு சித்தர்கள் என்றும், அவர்களில் முதன்மையானவர் அகத்தியர் என்ற செய்தியும் அறியலாகிறது. இதனால் சித்த மருத்துவ முறையை அகத்திய மருத்துவ முறை என்றும் கூறுவதுண்டு. (ப.ii)
தமிழக மருத்துவ மரபின் மிகச் சிறந்த தனித்தன்மை என்னவெனில் அது நாட்டு மருத்துவம் (நாட்டு வைத்தியம்), பழங்குடியினர் மருத்துவம், சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவம் என்ற மூன்று வேறு பட்ட நிலைகளில் திறம்படச் செயலாற்றி வருகிறது. (ப.xv)
நமது பாட்டன் சொத்தான வேம்புக்கும் மஞ்சளுக்குமான காப்புரிமையை அயல் நாட்டினர் கோருவதன் மர்மமே நமது மருந்துகளுக்கு உள்ள மகத்துவம்தான் என்பதை இனியாவது நாம் உணர வேண்டும். (ப.xx)

37 வகை மருந்துகள்
இந்நூலில் சௌபாக்ய லேகியம், சீனக்கிருத லேகியம், ஜன்னி மாத்திரை, சஞ்சீவிக்கிருதம், அகஸ்தியர் குழம்பு, சிவனார் வேம்பு தைலம், மனமோகன சிந்தாமணி உள்ளிட்ட 37 வகையான மருந்தின் பெயர்கள் தரப்பட்டுள்ளன. ஒவ்வொன்றையும் தயாரிப்பதற்கு தேவைப்படும் பொருள்கள், செய்முறை, பிரமாணம் (அளவு), அனுமானம் (மருந்துக்குத் துணையானது), உபயோகம், பத்தியம் போன்ற அனைத்து விவரங்களும் தரப்பட்டுள்ளன.  (பக்.1-103). 


 


நூலில் உள்ள நவ மூல சஞ்சீவி தொடர்பான பக்கங்கள் (பக்.70,71)
 வைத்திய திருப்புகழ் அகராதி
146 சொற்களைக் கொண்ட தமிழ் மருத்துவ முறைகள் (வைத்திய திருப்புகழ்) அகராதி இந்நூலில் இடம் பெற்றுள்ளது.   (பக்.104-108) அதிமது-அதிமதுரம், அரசவிதி-அரச மர விதை, எருகிலை-எருக்கிலை, கடு-கடுக்காய்-கடுகு-விஷம்-நாபி, கணி-காணி, பொன்னாங்கன்னி, கற்றளை-சோற்றுக்கற்றாழை, கனினாரி-தேன், குறுவேர்-வெட்டி வேர், சவுரி-முதியாள் கூந்தல், சிற்றாதனத்த நங்கை-குன்றிமணி-சிறியாநங்கை என்பன போன்ற 146 சொற்களைக் கொண்டு இவ்வகராதி அமைந்துள்ளது. 

மூலிகை விளக்கம்
மூலிகை விளக்கம் என்ற தலைப்பில் 52 மூலிகைகளைப் பற்றிய விளக்கங்கள் அதனதன் தாவரப்பெயருடன் தரப்பட்டுள்ளன. (பக்.109-136). கசாகசாவைப் பற்றி பின்வருமாறு தரப்பட்டுள்ளது.
தாவரவியல் பெயர் :  Papaver Somniferum L; Papaveraceae
சிறு செடி இனமான இது விதைக்கவும் பாலுக்காகவும் பயிரிடப்பெறுகிறது. இதன் காயிலிருந்து வடியும் பாலே அபின் எனப்படும். இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்துதல், உடலுக்கு உரமூட்டுதல், திசுக்களை இறுகச் செய்தல் போன்ற மருத்துவ குணங்களை உடையது. தேங்காய்த் துவையலில் கசகசாவை சேர்த்தரைத்து உணவுடன் நெய் சேர்த்து உண்டு வந்தால் மலம் கட்டுப்படும். தாது பலம் மிகும். (ப.117)

பாராட்டத்தக்கப்பட வேண்டிய முயற்சி
8.7.2016 முதல் 28.7.2016 வரை சரசுவதி மகால் நூலகத்தில் நடைபெற்ற தமிழ்ச் சுவடியியியல் பயிலரங்கில் பயிற்சி பெற்ற மாணவர்களைக் கொண்டு பதிப்பிக்கும் முயற்சியாக ஒவ்வொரு மாணாக்கருக்கும் ஒவ்வொரு ஏடுகள் வழங்கப்பட்டு அதிலுள்ள மருத்துவக் குறிப்புகளை எழுதச் செய்து அவற்றைத் தொகுத்து, அவர்கள் எழுதியதைச் சரிபார்த்து முழு நூலாக வெளியிட்டுள்ள சரசுவதி மகால் நூலகத்தையும், இவ்வாறான ஒரு பணியை துணிவோடு மேற்கொள்ள துணைநின்ற தலைமைப்பதிப்பாசிரியர் உள்ளிட்ட அனைவரையும் பாராட்டுவோம். 

ஏட்டினை அடிப்படையாக வைத்து நூலைப் படைத்தல் என்ற நிலையில் முன்மாதிரியாக அமைந்துள்ள,  தமிழ் மருத்துவ முறைகளின் பெருமையை உணர்த்துகின்ற நூலைப் பற்றி அறிவோம், முறைகளைச் செயல்படுத்த முயற்சிப்போம், வாருங்கள். 
---------------------------------------------------------------------------------------------------
நூல் : தமிழ் மருத்துவ முறைகள்
பதிப்பாசிரியர் : தலைமைப்பதிப்பாசிரியர் திரு மணி.மாறன் மற்றும் தமிழ்ச்சுவடியியல் பயிற்சி மாணவர்கள் 
பதிப்பகம் : தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம், தஞ்சாவூர்
ஆண்டு : 2017
விலை : ரூ.100
---------------------------------------------------------------------------------------------------

20 June 2017

பறந்த விமானத்தில் பிறந்த குழந்தை

அன்புள்ள அப்பா,
தந்தையர் தினத்தன்று இதைவிட மிகச் சிறந்த பரிசை நீங்கள் கேட்டிருக்க மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஜெட் எர்வேய்ஸ் விமானத்தில் நான் பிறந்ததைப் பற்றி உலகமே வியப்போடு பேசுகிறது. உண்மையில் நான் அதிக மகிழ்ச்சியோடு இருந்தேன் (Oncloud9 என்றால் மகிழ்ச்சியில் இருந்ததாகப் பொருள். இங்கு ஆகாயத்தில் பிறந்ததையும் குறிக்கிறது). அவ்வாறே நான் பிறந்த ஜெட் எர்வேய்ஸ் விமான நிறுவனத்தினர் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர். மன உறுதியாக இருந்த அம்மாவிற்கும், நான் இந்த உலகிற்கு வர உதவி செய்த விமானப் பணியாளர்களுக்கும் என்  நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். என் வாழ்நாள் முழுவதும் இலவசமாகப் பறக்க (பயணிக்க) அனுமதித்துள்ள ஜெட் எர்வேய்ஸ் நிறுவனத்திற்கு என் நன்றி. இதன்மூலமாக உங்களுடனும், அம்மாவுடனும் மகிழ்ச்சியோடு நான் அதிகமாகப் பயணிக்கப் போகிறேன் என்பதும், இவ்வுலகைப் பற்றி அறியப்போகிறேன் என்பதும் தெரிகிறது.........
அன்புடன், 
ஆகாய விமானத்தில் பிறந்த குழந்தை.
நன்றி : ஜெட் எர்வேய்ஸ் ட்விட்டர் பக்கம்
நல்வரவு என்ற குறிப்புடன் ஜெட் எர்வேய்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறான பதிவினை விட்டுள்ளது. இதற்குக் காரணமான குழந்தை பிறந்த பின் புலத்தை அறிவோமா? 

18 சூன் 2017இல் விமானத்தில் பிறந்த குழந்தை
நம் நாட்டில் நடந்த செய்திதான். வெளிநாட்டு இதழ்களிலும் இக்குழந்தை பிறந்த செய்தி வெளியாகியுள்ளது. பறந்துகொண்டிருக்கும் விமானத்தில் பிறக்கும் குழந்தைக்கு அந்த விமானத்தில் அதன் வாழ்நாள் முழுவதும் இலவசமாகப் பயணிக்கும் வாய்ப்பு உண்டு என்று கேள்விப்பட்டுள்ளேன். தற்போது அதனைச் செய்தியாக அறியும் வாய்ப்பு கிடைத்தது. 

சவுதி அரேபியாவிலிருந்து கொச்சிக்கு வந்துகொண்டிருந்த ஜெட் விமானத்தில் இருந்த பெண்மணிக்கு பிரசவ வலி எடுக்கவே, விமானம் மும்பை நோக்கி திருப்பிவிடப் படுகிறது. மும்பை நோக்கி விமானம் சென்று கொண்டிருந்தபோது அப்பெண்மணிக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கிறது. விமான ஊழியர்களின் உதவியும் தாயின் மன தைரியமும் நல்ல பலனைத் தந்துள்ளது. விமானம் மும்பையில் தரையிறங்கும் முன்பே குழந்தை பிறந்துவிட்டது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த ஒரு தனியார் விமானத்தில் இவ்வாறாக ஆகாயத்தில் குழந்தை பிறப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. அந்த விமான நிறுவனம் வாழ்நாள் முழுவதும் தம் விமானங்களில் அக்குழந்தை இலவசமாகப் பறக்கலாம் என்று கூறியுள்ளது. 
 • டம்மானிலிருந்து கொச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை (18 சூன் 2017) காலை 2.55க்கு விமானம் கிளம்பி பறந்துகொண்டிருந்தது.
 • விமானத்தில் 162 பயணிகள் இருந்தனர்.
 • விமானத்தில் இருந்த கேரளப்பெண்மணிக்கு பிரசவ வலி ஏற்படுகிறது.
 • விமானம் மும்பைக்குத் திருப்பிவிடப்படுகிறது.
 • திரும்பிச் செல்லும்போது அரேபியக் கடலின் மீது, 35,000 அடி உயரத்தில் (10,688 மீட்டர்) விமானம் பறந்து கொண்டிருக்கிறது. 
 • விமானப் பணியாளர்களும், கேரளாவிற்குப் பயணிக்கின்ற செவிலியரும் உதவுகின்றனர்.
 • சுகமாக ஓர் ஆண் குழந்தை பிறக்கிறது.
 • ஜெட் எர்வேய்ஸ் (9W 569) விமானத்தில் பிறக்கும் முதல் குழந்தை இதுவே. 
 • விமானம் மும்பை வந்து சேருகிறது. தாயும் சேயும் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றார்கள். இருவரும் நலம்.
 • 90 நிமிட தாமதத்திற்கு பிறகு விமானம் கொச்சி சென்று சேர்கிறது. 
ஜெட் எர்வேய்ஸ் மும்பையில் இறங்கியது, தாயும் சேயும் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.  புகைப்படம் : என்டிடிவி (சூன் 2017)
இவ்வாறாக பல குழந்தைகள் பறந்து கொண்டிருக்கின்ற விமானத்தில் பிறந்துள்ளன. அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.
 • கடந்த ஆண்டு இதுபோன்று ஐந்து குழந்தைகள் பிறந்த போதிலும் அவ்வாறான வாழ்நாள் முழுவதுமான இலவச விமானப் பயண அனுமதி தரப்படவில்லை.  
 • இதற்கு முன்னர் 2009இல் ஏர் ஏசியா விமானத்தில் பிறந்த ஒரு குழந்தைக்கு அவ்வாறான சலுகை தரப்பட்டது. அந்தப் பயணி பெனாங்கிலிருந்து இரண்டு மணி நேர விமானப் பயணத்தின்போது அக்குழந்தை பிறந்தது. 
 • விர்ஜின் அட்லாண்டிக், ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்தபோது தன் விமானத்தில் பிறந்த ஒரு குழந்தைக்கு 21 வயது வரை இலவசமாகப் தன் விமானத்தில் பறக்கலாம் என்ற சலுகையை வழங்கியது.
 • கடந்த ஆண்டு செபு பசிபிக் எர் விமானத்தில் துபாயிலிருந்து விமானத்தில் பறந்தபோது பிறந்த குழந்தைக்கு ஒட்டு மொத்த இலவசப் பயணம் என்பதற்கு மாறாக ஒரு மில்லியன் மைல் பறப்பதற்கான சலுகை வழங்கப்பட்டது. 
 • 1990இல் கானாவிலிருந்து லண்டனுக்கு பிரிட்டிஷ் எர்வேய்ஸ் விமானத்தில் பிறந்த ஷோனா ஓவன் என்ற குழந்தைக்கு அதனுடைய 18ஆவது பிறந்த நாளின்போது முதல் வகுப்பு பயணச்சீட்டில் இலவசமாகச் செல்ல சலுகையளிக்கப்பட்டது.
 • 2016இன் ஆரம்பத்தில் சிங்கப்பூரிலிருந்து ரங்கூனுக்கு ஜெட்ஸ்டார் ஏசியா விமானத்தில் பிறந்த குழந்தைக்கு அந்த விமான நிறுவனத்தால் குழந்தைகளுக்குரிய 1100 டாலர் மதிப்புள்ள பொருள்கள் வெகுமதியாகத் தரப்பட்டது.
ஏப்ரல் 2017இல் விமானத்தில் பிறந்த குழந்தை

ஏப்ரல் 2017இல் கினியாவிலிருந்து பர்கினா பாசோவிற்கு டர்கிஷ் எர்லைன்சில் பறந்தபோது 28 வாரங்களுக்கு முன்பாகவே பிறந்த பெண் குழந்தைக்கு எவ்வித பரிசும் அறிவிக்கப்படவில்லை. விமான நிறுவனத்தினர் தாயை குழந்தைப் பேற்றிற்காக மருத்துவ மனைக்கு அனுப்ப மட்டுமே செய்தனர். புகைப்படம் : நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் (ஏப்ரல் 2017இல் பிறந்த குழந்தை)

ஆகாயத்தில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் எந்த ஒரு நாடும் தனக்கான பகுதியாகக் கோராத நிலையில் உள்ள இடங்களில் பிறக்கின்ற குழந்தைக்கு அதன் பிறந்த இடமாக "ஆகாயம்" (In the Air)  என்று குறிப்பர். அந்தந்த நாட்டுக் கடல் எல்லையில் குழந்தைகள் பிறந்தால் உரிய நாட்டின் பெயரைக் குறிப்பிடுகின்றனர். அவ்வாறின்றி அக்குழந்தை அவ்வாறு உரிமை கோரப்படாத கடல் பகுதியில் (international waters) பிறந்தால் அதன் பிறந்த இடமாக  "கடல்" (In the Sea) என்று குறிப்பர். (அமெரிக்க மாநிலத்துறை வழிகாட்டி) அந்த வகையில் பார்க்கும்போது இக்குழந்தை அரபிக்கடலின் மீது விமானம் பறக்கும்போது பிறந்துள்ளதால் இந்தியா என்று குறிப்பார்களா அல்லது கடலில் பிறந்த குழந்தை என்று குறிப்பார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி
நடுவானத்தில் பிறந்த ஆண் குழந்தை, தினமணி, 19 சூன் 2017
Baby on Jet Airways flight gifted free air tickets for life, Independent, 19 June 2017 
India's Jet Airways gifts free lifetime flights to baby born mid-air, BBC News19 June 2017  
Premature baby delivered by cabin crew during flight, Independent9 April 2017  
Baby born on flight to get free lifetime air travel, says Jet Airways, NDTV19 June 2017  
Woman gives birth to baby girl mid-flight on Turkish Airlines; see adorable pics here, Indian Express, 10th April 2017

17 June 2017

திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயில்

தேவார மூவரால் பாடப்பெற்ற திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயில், காவிரியின் வடகரையில் உள்ள 46ஆவதுதலமாகும். இக்கோயில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் அமைந்துள்ளது. அண்மைப்பதிவில் திருவீழிமிழலையில் புகழ் பெற்ற வௌவால்நத்தி மண்டபம் கண்ட நாம், தற்போது சிற்பங்களுக்குப் புகழ்பெற்ற இக்கோயிலுக்குச் செல்வோம், வாருங்கள்.
கொடி மரம், பலி பீடம், நந்தியைக் கடந்து செல்லும்போது இடப்புறம் குஹாம்பிகை சன்னதியும், கடும்படு சொல்லியம்மை சன்னதியும் உள்ளன.  பிற சன்னதிகள் மற்ற கோயில்களில் அமைந்துள்ளவாறே காணப்படுகின்றன. சிறப்பான அமைப்பாக  சட்டநாதர் சன்னதியை இங்கு காணமுடியும்.
கருவறையைச் சுற்றி வரும்போது தஞ்சாவூர் கரந்தை கருணாசாமி கோயிலை நினைவுபடுத்துகின்ற வகையில் நின்ற நிலையிலான அழகான சிற்பங்களைக் காணமுடியும். 

மிக அழகாக காணப்படுகின்ற அச்சிற்பங்களில் ஒன்றாக சிவபெருமான் தன் தேவியுடன் நிற்கின்ற சிற்பத்தைக் காணலாம். 
தொடர்ந்து சுற்றி வரும்போது கருவறையின் கோஷ்டத்தில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில், புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில் போன்ற கோயில்களில் உள்ளவாறு நுணுக்கமான அளவிலான சிற்பங்களைக் காணமுடியும். மந்திர மலையை மத்தாக நட்டு தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் ஒரு புறமும் கடையும் காட்சி உள்ளிட்ட பல சிற்பங்கள் அவற்றில் உள்ளன.


வாய்ப்பு கிடைக்கும்போது நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச் சென்ற கலைப்பொக்கிஷமான திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயிலுக்குப் போவோம், வாருங்கள்.

கும்பகோணம்-சுவாமிமலை சாலையில் உள்ள புளியஞ்சேரியை அடைந்து அங்கிருந்து பிரிந்து செல்லும் சாலையில் மூன்று கிமீ தொலைவிலுள்ள இன்னம்பூரை அடுத்து அதே சாலையில் சுமார் மூன்று கிமீ சென்றால் இத்தலத்தை அடையலாம். கும்பகோணத்திலிருந்து 11 கிமீ தொலைவில் இவ்வூர் உள்ளது.

10 June 2017

அயலக வாசிப்பு : மே 2017

என் வாசிப்பில் கார்டியன், நியூயார்க் டைம்ஸ், டான் உள்ளிட்ட அயலக இதழ்கள் முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. அவ்வாறு படிக்கும்போது நான் ரசித்ததை அவ்வப்போது முகநூலில் பகிர்கிறேன். அவ்வகையில் மே 2017இல் நான் பகிர்ந்ததை இங்கு தொகுத்துத் தந்துள்ளேன். இந்தியாவில் தாய் சேய் இறப்பு விகிதம் அதிகரிக்க உள்ள அபாயம் குறித்து கார்டியன் இதழில் வெளியான செய்தியும் அடங்கும். செய்திகளின் முக்கியத்துவம், சொற்களின் பயன்பாடு என்ற நிலையில் நான் ரசித்தவற்றை காண்போம், வாருங்கள். (அந்தந்த இதழ்களில் செய்தியை வாசிக்க நன்றி என்ற இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இதழின் பெயரைச் சொடுக்க வேண்டுகிறேன்.) 

7 மே 2017 
உலகில் தற்போது போலியோவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் நைஜீரியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான். நைஜீரியாவைச் சேர்ந்த அமினு குழந்தையாக இருக்கும்போது போலியோவால் பாதிக்கப்பட்டவர். பள்ளி செல்ல இயலா நிலைக்கு ஆளான அவர், போலியோவை எதிர்கொள்ளத் துணிந்தார். எச்சூழலிலும் பிச்சையெடுக்கக்கூடாது என்று முடிவெடுத்து, தன்தேவைக்குத் தகுந்தபடி ஒரு வாகனத்தைத் (bike) தயாரித்தார். உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் கண்டார். தன்னைப் போல போலியோவால் பாதிக்கப்பட்டவர்களைப் பணியமர்த்தி அவர்களுடைய வாழ்வில் மலர்ச்சி ஏற்பட உதவுகிறார். அவ்வகையில் பல வாகனங்களை வடிவமைத்துள்ளார். போலியோவை எதிர்கொண்டோர் குழு ஒன்றினை அமைத்து வெற்றிகரமாகச் செயல்படுத்துவதோடு போலியோவை எதிர்கொள்ளலாம் என்று நம்பிக்கையோடு பல திட்டங்களை செயல்படுத்திவருகிறார். (நன்றி : கார்டியன்)
12 மே 2017
11½ வாரக் குழந்தையான அலியா ஜாய் கேட்ஸ் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது எப்படி ? அவளுக்குப் பசியெடுக்கவே அழ ஆரரம்பித்தாள். மகளின் பசியை உணர்ந்த அவளுடைய தாயும் ஆஸ்திரேலியாவின் பாராளுமன்ற உறுப்பிருமான லாரிசா வாட்டர்ஸ் மகளுக்குத் தாய்ப்பால் ஊட்டினார்.குழந்தையின் அழுகை நின்றது. ஆனால் அதே சமயம் பாராளுமன்ற வளாகத்தில் தாய்ப்பால் ஊட்டப்பட்ட முதல் குழந்தை என்ற பெருமை பெற்றது. (நன்றி: நியூயார்க் டைம்ஸ்)
13 மே 2017
அறிவியல் தொழில்நுட்பத்தின் மறுபக்கம், கற்பனை செய்து பார்க்க முடியா எதிர் விளைவுகளை உலகம் எதிர்கொள்ள வேண்டிய சூழலில் உள்ளது. (நன்றி: கார்டியன்)
15 மே 2017
சீன அதிபருடன் இரு தரப்புப் பேச்சுக்காகக் காத்திருந்த நேரத்தில் பியானோ வாசிக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின். அவ்விசை மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பற்றிய சோவியத் காலத் தொடர்புடையவை. இதற்கு முன்னர் 2010இலும் ஒரு நிகழ்ச்சியின்போது இவ்வாறாக புடின் பியானோ வாசித்துள்ளார். (நன்றி : கார்டியன்இவர் சைபீரியாவில் சட்டையின்றி குதிரையை ஓட்டிவர், பறவைகளுடன் (hand glider) பறந்தவர், டால்பின்களுடன் நீந்தியவர், ஜுடோ சண்டையிட்டவர், பைக்கால் ஏரி மற்றும் கருங்கடலில் ஆழத்தில் நீந்தியவர் ஆவார். (நன்றி : நியூயார்க் டைம்ஸ்)

20 மே 2017
43 வயதான ஓர் இந்தியப் பெண்மணி, கருப்பை இன்றி பிறந்த தன்னுடைய 21 வயது மகளுக்கு தானாக முன்வந்து தன் கருப்பையைக் கொடையாகத் தந்துள்ளார். இந்தியாவில் முதன்முதலாக இப்பொழுதுதான் இவ்வாறான கருப்பை மாற்றம் நடைபெற்றுள்ளது. இதற்கு முன்பாக ஸ்வீடனில் ஐந்து முறை ஒரே குழுவினரால் இவ்வாறான கருப்பை மாற்று சிகிச்சை நடைபெற்றுள்ளது. (நன்றி :  இன்டிபென்டன்ட்)
23 மே 2017
பல வெளிநாட்டு இதழ்கள் மறுநாள் வெளிவருகின்ற முகப்புப்பக்கத்தையும், அந்தந்த நாளின் முகப்புப்பக்கத்தையும் வெளியிடுவதைக் காண முடியும். அவ்வகையில் இன்று (23.5.2017) கார்டியன் இதழ் முகப்புப்பக்கம் என்ற நிலையில் இரு பக்கங்களை அடுத்தடுத்து (The Guardian front page, Tuesday 23.05.17 – May’s manifesto meltdown: U-turn on ‘dementia tax’ leaves PM on back foot மற்றும் The Guardian front page, Tuesday 23.05.17 – Murder in Manchester: at least 19 die in arena attack என்ற தலைப்பிலும்) வெளியிட்டுள்ளதைக் காணமுடிந்தது. தாக்குதலுக்குப் பின் முகப்புப்பக்கம் மாற்றப்பட்டிருக்கலாம் என்பதை இதன்மூலம் அறியமுடிகிறது. கடந்த ஆண்டு அமெரிக்க தேர்தலின்போது நியூயார்க் டைம்ஸ் இணைய இதழின் முகப்புப்பக்கத்தை 13 முறை மாற்றியது நினைவிருக்கலாம்.  
23 மே 2017
“நடிப்பின் ஆரம்ப காலத்தில் வெற்றி பெறுவதற்கு ஆளுமை, திறமை, அதிர்ஷ்டம் ஆகியவை ஒரே அளவில் இருக்க வேண்டும் என்று பலர் கூறுவதைக் கேட்டுள்ளேன். இதில் எனக்கு உடன்பாடில்லை. என்னைப் பொறுத்தவரை 99% அதிர்ஷ்டம்தான். சரியான நேரத்தில் சரியான இடத்தில் இல்லாமல் இருந்தால் அங்கே திறமைக்கு என்ன வேலை“ என்று ஆரம்ப காலகட்டத்தில் நடிப்பைப் பற்றிக் கூறிய ரோஜர் மூர் இன்று இயற்கையெய்தினார். (நன்றி: கார்டியன்இவருடைய படங்களில் The Moon with golden gun (1974), The spy who loved me (1977), Moonraker (1979), For your eyes only (1981) உள்ளிட்ட பல படங்களைப் பார்த்துள்ளேன். கல்லூரிக்காலங்களில் நாங்கள் ரசித்த 007 ஜேம்ஸ்பாண்ட் இவரே. 
30 மே 2017
Alone and naked - தனிமையாதல் அல்லது தனிமைப்படுத்தப்படல். இது தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ந்யே பேவான் 1957இல் பயன்படுத்திய, பிரபல்யமான சொற்றொடர் ஆகும். கோர்பியின் அணுஆயுத எதிர்ப்பு நிலைப்பாட்டிற்காக இச்சொற்றொடரில் உள்ள naked என்ற சொல் பிரிக்சிட் விவாதத்தை முன்வைத்து தெரசாவால் பயன்படுத்தப்படுகிறது. (நன்றி : கார்டியன்)
31 மே 2017
"covfefe" என்ற ஒரு சொல் டிரம்பால் ட்விட்டரில் பயன்படுத்தப்பட்டு, அதிக நேரமாகியும் பதிவிலிருந்து நீக்கப்படாத நிலையில் பலரைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் பயன்படுத்திய சொற்றொடர் “despite the constant negative press covfefe” என்பதாகும். இந்த சொற்றொடரில் ‘covfefe’ என்பது எவ்வித தொடர்புமின்றி அந்தரத்தில் நிற்கிறது. விக்ரம் நடித்த சேது திரைப்படத்தில் சீயான் என்ற சொல்லுக்கு பொருள் தேடுவார்களே, அதைப் போல இச்சொல் குறித்து தற்போது விவாதம் நடைபெற்று வருகிறது. (நன்றி  : கார்டியன்)
31 மே 2017
பேறுக்காலச் சலுகைகள் முதலில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே இனி பொருந்தும் என்ற இந்திய அரசின் புதிய திட்டத்தால் தாய் சேய்களின் வாழ்க்கைத் தரம் அதிக பாதிப்புக்குள்ளாவதோடு குழந்தை மற்றும் தாயாருடைய இறப்பு விகிதம் அதிகரிக்கும். (நன்றி  : கார்டியன்)


03 June 2017

தமிழறிஞர் திரு வெள்ளையாம்பட்டு சுந்தரம்

தமிழறிஞர், பதிப்பாளர், பழகுவதற்கு இனியவர், பண்பாளர், பலரை எழுத்தாளராக ஆக்கியவர், என்றும் மாறாப் புன்னகையோடு இருப்பவர், என் பௌத்த ஆய்வு நூலாக வெளிவரவேண்டும் என்று தன் அவாவினை பார்க்கும்போதெல்லாம் வெளிப்படுத்திய பெருமகனார் திரு வெள்ளையாம்பட்டு சுந்தரம் அவர்கள் 31 மே 2017 அன்று இயற்கையெய்திய செய்தி எங்களை துக்கத்தில் ஆழ்த்தியது.  

கல்வெட்டறிஞர் திரு அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி அவர்கள் மூலமாக அறிமுகமானவர் திரு வெள்ளையாம்பட்டு சுந்தரம் ஐயா. 2001இல் என் முதல் நூலான வாழ்வில் வெற்றி (சிறுகதைத்தொகுப்பு) வெளிவர உந்துசக்தியாக அவர், அந்த நூல் அச்சேறிக் கொண்டிருக்கும் போது என் எழுத்துகளைப் பாராட்டினார். முதன்முதலில் தொலைபேசியில்தான் அறிமுகமானேன். அப்போது பேசும்போது என் பௌத்த ஆய்வினைக் கேள்விப்பட்டு அதிசயித்து களப்பணியின் முக்கியத்துவத்தைப்பற்றிப் பேசினார். "களப்பணி அடிப்படையில் தற்போது நூல்கள் எவையுமே வருவதில்லை. குறிப்பாக பௌத்தம் சார்ந்த நிலையில் நூல்களே இல்லை. அந்த நிலையில் உங்களின் ஆய்வேட்டினை நூலாக்கம் செய்யுங்கள். என் உதவி எப்பொழுதும் உங்களுக்கு உண்டு. யோசிக்க வேண்டாம். எப்பொழுது வேண்டுமானாலும் என்னுடன் பேசலாம்." என்று அவர் பேசியது இன்னும் என் நினைவில் உள்ளது. அதற்குப் பிறகு அவரைப் பலமுறை சந்தித்துவிட்டேன். ஒவ்வொரு முறையும் என்னைப் பார்த்தபோது அவர் கேட்ட முதல் கேள்வி என் ஆய்வு அல்லது என்னுடைய புதிய கண்டுபிடிப்பு தொடர்பானதாகவே இருக்கும்.  

கருத்தரங்கு நடைபெறும் இடம், அறிஞர்கள் சந்திக்கின்ற இடம், நூற்கண்காட்சி நடைபெறுமிடம் என்ற பல இடங்களில் அவரைக் காணலாம். தமிழ் இலக்கியத்தின்மீதும், வரலாற்றின்மீதும் அவர் கொண்டிருந்த ஆர்வமும், அறிவும் ஈடு இணையற்றது. அவருடன் நெருக்கமாகப் பழகும்போது அதனை உணரலாம். வயது வித்தியாசமின்றி மிக எளிமையாக அனைவருடன் இயல்பாகப் பேசுவார். தம் பேச்சின்மூலம் நம்மை ஈர்க்க வைத்துவிடுவார். 
நன்றி : அருந்தமிழ் ஆய்வுகள்
தொல்லியல் ஆய்வுகளையும், வரலாற்று நூல்களையும் மிகுதியும் வெளியிட்டு அளப்பரிய பணிகள் செய்து வந்த அவரைச் சிறப்பிக்கும் வகையில் 19 ஜனவரி 2003 மற்றும் 8 நவம்பர் 2003 ஆகிய நாள்களில் நடைபெற்ற விழாக்களின் நினைவாக வரலாற்றில் ஒரு வரலாறு, அருந்தமிழ் ஆய்வுகள், வரலாற்றுச் சுடர்கள் ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன. அதைத்தொடர்ந்து வரலாற்று வாயில்கள் என்னும் நூல் வெளியானது. (வரலாற்று வாயில்கள், பதிப்.கவிமாமணி கல்லாடன், குழலி பதிப்பகம், பாண்டிச்சேரி, டிசம்பர் 2003) 

2010களின் ஆரம்பத்தில் தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு ஒரு கருத்தரங்கிற்காக வந்தவர் நான் பணியாற்றிய பிரிவிற்கு வந்து என் இருக்கைக்கு வந்தார். அலுவலகச் சூழலையும், அதிகமான பணியையும், அவருடன் பேசக்கூட முடியாத இருந்த நிலையையும் பார்த்த அவர் வியப்போடு "இவ்வளவு அலுவலக வேலைகளுக்கிடையில் நீங்கள் எப்பொழுது களப்பணி செல்கின்றீர்கள்? எப்பொழுது படிக்கின்றீர்கள்?" என்று வாஞ்சையோடு கேட்டார். சிறிது நேர உரையாடலுக்குப் பின் விடை பெறும்போது "கல்விப்புலம் சாராத நிலையில் உள்ள உங்களைப் போன்றோர்தான் அமைதியாக அதிகமாக சாதித்துக் கொண்டிருக்கின்றீர்கள். பெருமையாக இருக்கிறது. இன்னும் காலம் தாழ்த்தாதீர்கள். நூலை அவசியம் வெளியிட்டு விடுவோம், சரியா" என்றார். 

சோழ நாட்டில் நான் கண்டுபிடித்த புத்தர் கற்சிலைகளைப் பற்றி நாளிதழ்களில் வந்த செய்திகளைக் காண்பித்தபோது மிகவும் வியந்து பாராட்டினார். நாகப்பட்டினத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டு, வெளிநாடுகளிலும், இந்தியாவிலும், பிற மாநிலங்களிலும் உள்ள அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட்ட நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகளின் புகைப்படங்களை என் ஆய்வேட்டில் பார்த்தபோது கற்சிலைகளுக்கும், செப்புத்திருமேனிகளுக்கும் இடையே காணப்பட்ட ஒற்றுமை வேற்றுமைகளைப் பற்றி விவாதித்தார். இலக்கியம், வரலாறு, தொல்லியல், செப்பேடு, கல்வெட்டு போன்றவை உள்ளிட்ட பல துறைகளில் ஆர்வம் கொண்டிருந்த அவர்,  புத்தர் சிற்பம் தொடர்பாகக் காட்டிய ஆர்வத்தை அப்போது அறிந்தேன்.     

3.12.2011 அன்று சென்னையில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தாரின் வைர விழா நடைபெற்றபோது நூல் ஆசிரியர் என்ற நிலையில் என்னைப் பெருமைப்படுத்தும் விதமாக பொன்னாடை அணிவித்து, சான்றிதழ் வழங்கினர். அவ்விழாவிற்கு வந்திருந்து என்னைப் பாராட்டினார். விடுதலை வேள்வியில் வங்காள வீரர்கள், புதிய காற்று ஒப்பிலக்கியப் பார்வைகள் உள்ளிட்ட சில நூல்களை அன்பளிப்பாகத் தந்து, தொடர்ந்து எழுதுங்கள் என்று வாழ்த்திவிட்டுச் சென்றார். ஒரு பெரியவர் சிரமம் பாராது விழா நடக்கும் இடத்திற்கு வந்து பாராட்டுகின்றாரே என நினைத்து சிலிர்த்துப் போனேன்.     

26.2.2016 அன்று வேலூரில் நடைபெற்ற அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி ஐயாவின் இளைய மகன் திரு தே.கி.பூங்குன்றன் திருமணத்திற்காக, மண நாளின் முதல் நாள் வேலூர் சென்று சேர்ந்தேன். திருமண அரங்கிற்கு வந்தவுடன் என்னைப் பற்றி விசாரித்தாக நண்பர்கள் கூறவே, அவரைக் காணச் சென்றேன். வழக்கமான புன்சிரிப்பினை அவருடைய முகத்தில் கண்டேன். "நீங்கள் வரவுள்ளதாக கிருட்டினமூர்த்தி கூறினார், உங்களைக் கண்டதில் மகிழ்ச்சி" என்றார். இரவு அதிக நேரம் அவருடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது அவர் மேற்கொண்டிருந்த பணிகள் குறித்தும், அவ்வப்போது உடல் நலம் சரியில்லாமல் போவது குறித்தும், முன்போல பணிகளை விரைந்து முடியாத நிலை குறித்தும் நெடு நேரம் பேசிக்கொண்டிருந்தார். அவருடைய உழைப்பைப் பற்றிப் பேசிவிட்டு உடல் நலனுக்கு சிறிது முக்கியத்துவம் கொடுக்கும்படி அவரிடம் கேட்டுக்கொண்டேன். அதற்கும் ஒரு புன்னகைதான் மறுமொழி. முடிந்தவரை செயலாற்றிக் கொண்டே இருப்போம் என்றார். சிறிது நேரம் அவருடன் பேசினால்கூட எதையாவது எழுத வேண்டும், வாசிக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இயல்பாக வந்துவிடும். நான் சோழநாட்டில் பௌத்தம் என்ற தலைப்பில் வலைப்பூ ஆரம்பித்து அதில் என் ஆய்வு தொடர்பாக நான் எழுதிவருவதைக் கேள்விப்பட்ட அவர் இவ்வாறான பதிவுகள் வந்துகொண்டேயிருக்கவேண்டும் என்று கூறி பாராட்டினார்.

1100 நூல்கள் பதிப்பிக்கக் காரணமாக இருந்தவர், பல்துறை வித்தகர், அறிஞர்களோடு தொடர்பு கொண்டிருந்தவர் என்ற நிலையில் நாளிதழ்கள் அவருக்குச் சூட்டியுள்ள புகழாரங்களைப் பார்த்தபோது அவற்றுக்கெல்லாம் அவர் தகுதியானவரே என்பதை அறிந்தேன். 

அன்னாருக்கு நாம் செலுத்தவேண்டிய மரியாதையாக நான் கருதுவது தொடர்ந்து வாசித்துக்கொண்டே இருக்கவேண்டும், எழுதவேண்டும், அதனை நூலாக்க வேண்டும், தமிழக வரலாற்றுக்கு நம்மால் ஆன பங்களிப்பினைச் செய்துகொண்டே இருக்கவேண்டும் என்பதேயாகும். அளப்பரிய சாதனைகளைப் படைத்த அவருடைய புகழ் என்றென்றும் வரலாற்றில் நிலைத்திருக்கும்.

என் எழுத்தை அச்சில் கொணர விரும்பியவர்களில் ஒருவரான அவரைப் பற்றி தமிழ் விக்கிபீடியாவில் வெள்ளையாம்பட்டு சுந்தரம் என்ற தலைப்பில் புதிய பக்கத்தை ஆரம்பித்துள்ளேன். அன்னாருக்கு நான் செலுத்தும் அஞ்சலியாக இதனைக் கருதுகிறேன். தொடர்ந்து அவரைப் பற்றிய இந்த பதிவினை மேம்படுத்துவேன். நண்பர்களை இப்பதிவினை மேம்படுத்த உதவ வேண்டுகிறேன். கீழ்க்கண்ட இணைப்பினைச் சொடுக்கினால் அவரது பக்கத்தினைப் பார்க்கலாம்.


24 ஜுன் 2017 அன்று அன்னாரின் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அப்பொழுது விழுமிய நெஞ்சர் வெள்ளையாம்பட்டு சுந்தரம் என்ற நூல் வெளியிடப்பட்டது. இதில் அன்னாருடன் பழகிய நண்பர்கள், அறிஞர்கள், வரலாற்று ஆர்வலர்கள் உள்ளிட்டோர் எழுதியுள்ள 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ளன. "எழுத்தாளர்களை உருவாக்கிய அறிஞர் திரு வெள்ளையாம்பட்டு சுந்தரம்" என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை இந்நூலில் வெளியாகியுள்ளது. என் கட்டுரை இந்நூலில் வெளியாக உதவியதோடு, நூலை அனுப்பியும் வைத்த திரு அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி அவர்களுக்கு என் நன்றி.நூல் : விழுமிய நெஞ்சர் வெள்ளையாம்பட்டு சுந்தரம்
தொகுப்பு : புலவர் ம.அய்யாசாமி
பதிப்பகம் : சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்.நகர், சென்னை 600 078
மின்னஞ்சல் : sekarpathippakam@gmail.com
விலை : ரூ.150

16 டிசம்பர் 2017இல் மேம்படுத்தப்பட்டது.